3.3- ரொம்ப அழகா இருக்கிங்க
கயல் கால்டனை மிகுந்த அக்கறையுடன் கவனித்தாள். அதிகமாகப் பேசவில்லையே தவிர அடிக்கடி வந்து பரிசோதித்துக்கொண்டே இருந்தாள். மருந்துகள் அளித்தாள். உணவு அவள் சொன்னபடி தயாரிக்கப்பட்டு வந்தது. இப்படி வழக்கமாக அவளின் பேஷண்டுகளை அவள் எப்படி பொறுப்புடன் கவனிப்பாளோ அதே போல் கால்டனையும் கவனித்தாள்.
கயல் தன் வேலையில் எத்தனை ஃப்ரொஃபெஷனலாக நேர்த்தியாக இருக்கிறாள் என்பதை இரசித்தார் கால்டன். ஆனால் அவரின் உடல்நிலை சோர்வாகத்தான் இருந்தது.
மாலை நேரம்..
கயல் ஏனோ கால்டனின் அறையில் இருந்த ஒரு குஷன் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்தாள். தன் அறைக்குச் செல்லவில்லை.
கால்டன் மிகவும் சோர்வாக தளர்வாக இருந்தார். அதே நேரம் கயலைப் பார்ப்பதில் குறைவைக்கவில்லை. அவள் கால்டனின் தலைக்குப் பின்னால் மாட்டியிருந்த சிறு மானிடரையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் டென்ஷனாக இருந்தது.
“என்னாச்சு? ஏன் டென்ஷனா இருக்கிங்க?”
“ம்.. ஒன்னுமில்ல..” என்று சொல்லிவிட்டு அலைபேசியை எடுத்தாள். தெரெக்குக்கு ரிங் செய்தாள். ஏதோ ஒரு மருந்து சொல்லி உடனடியாக வாங்கி அனுப்பும்படி சொன்னாள். 40 நிமிடங்களில் அந்த மருந்தை வாங்கி எடுத்துக்கொண்டு தெரெக்கே ஓடி வந்தார். உடனடியாக அதைக் கால்டனுக்கு ஐவி வழியில் செலுத்தினாள். தெரெக் கால்டனிடம் விடைபெற்று கயலுடன் வெளியே போனார். அறை வாயிலில் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். பிறகு கிளம்பினார் தெரெக். கயல் உள்ளே வந்தாள்.
“என்ன நடக்குது?”
“இதயத்துடிப்பு அதிகமா இருக்கு. இரத்த அழுத்தம் குறையுது. ஜுரம் அதிகமாகுது.”
“ஏன் இப்படி ஆகுது?”
“சால்மொனெல்லாவைப் பாத்து உங்க உடம்பு ஷாக் ஆகுது”
“ஹோ..”
“இப்போ பரவாயில்ல. 2 நாள் ல சரியாகிடும்.”
“ஆகல்லைன்னாலும் ஆக்கிடுவிங்க..”
“உங்களுக்கு இப்ப ஐ.சி.யூ சிகிச்சை நடக்குது. ஹாஸ்பிடல்-னா ஈசியா இருக்கும். வீட்டுல மேனேஜ் பண்றது தான் கொஞ்சம் சிரமமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல.”
“ஹாஸ்பிடலுக்கு மாத்துறதுன்னா செய்யுங்க!”
“உங்க குடும்பத்துல என்ன நோயினாலும் ஹாஸ்பிடல் போக மாட்டாங்க. வீட்டுலையே சிகிச்சை செய்வாங்கன்னு எல்க் சொன்னாங்க”
“எங்க வீட்லேருந்து யாராவது வந்து பாத்தாங்களா?”
“இல்ல..”
“அப்பறம் அந்த வீட்டுப் பழக்கங்கள் மட்டும் எதுக்கு?”
“…”
“பாருங்க. நான் அந்த குடும்பத்தை மனதளவுல பிரிஞ்சு வந்து 2 வருஷம் ஆகுது. அங்க பணத்தையும் ஆடம்பரத்தையும் தாண்டி ஒன்னுமில்ல. நத்திங்.. இப்ப எனக்கு இருக்கறது என் கம்பெனி, தெரெக், இந்த வீடு, எல்க், இப்ப நீங்க, குழந்தை. அவளோ தான். ஸோ உங்க வசதிக்கு ஹாஸ்பிடலுக்கு மாத்திக்கோங்க..”
கயலுக்கு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு, “இல்ல இனிமே தேவையில்ல. 2 நாள் தான்.. சரியாகிடும். இங்கையே பாத்துக்கலாம்” என்றாள்.
“உங்களுக்குத் தெரியும்.. ஓக்கே..”
மீண்டும் அமைதி குடிகொண்டது. இருவரும் ஒரே அறையில் தத்தம் அலைபேசியில் மூழ்கினர். அப்போது கால்டன் 2 தினங்களுக்கு முன் கயலின் மருத்துவமனையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பினைப் பார்த்தார். அதிர்ச்சியாகிக் கயலிடம் கேட்டார்.
“இது நீங்க செஞ்ச அந்த 14 மணி நேர சர்ஜரி தானே..”
“ஆமாம்..”
“இந்த ப்ரெஸ் மீட்-ல நீங்க பேசாம ஏன் எவாஞ்சலின் பேசியிருக்கா?”
“நான் தான் லீவ்-ல இருக்கேனே!”
“என்ன பேசுறீங்க நீங்க? உங்க உழைப்பு. ப்ரெஸ் மீட்டுக்கு போயிருக்கலாமில்ல.. எதுக்கு விட்டுக் கொடுத்துட்டிங்க..”
“நோ இஷ்யூஸ்.. எனக்கு இதுல எல்லாம் ஆர்வம் இல்ல..”
“விட்டுக்கொடுத்திங்களா? அவ தட்டிப் பறிச்சாளா?”
“இல்ல இல்ல.. நானாத்தான் அவங்களையே ப்ரெஸெண்ட் பண்ணச் சொன்னேன்.”
“ஏன்?!!!!!….”
“அன்னைக்கு எல்லாம் நீங்க ரொம்ப ஸிக்கா இருந்திங்க. அந்த நேரத்துல இந்த ப்ரெஸ் மீட் முக்கியமா படல்லை எனக்கு.”
“அப்ப என்னாலையா?”
“ச்ச ச்ச.. உங்களால இல்ல.”
கால்டன் முகம் வாடியது.
“இது ஒரு விஷயமே இல்ல. விடுங்க.” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் செல்லத்துவங்கினாள். கதவருகே சென்றவள் கால்டன் குரல் கேட்டுத் திரும்பினாள்.
“எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துட்டிங்களா?” என்று கால்டன் கேட்டதும் கயல் விழிகள் அவரின் விழிகளோடு கலந்து நிலைபெற்றன. “யெஸ்” என்று ஆமோதித்தாள். தன் அறை நோக்கி நடந்தாள்.
இன்மையை உணரும் போதுதான் இருப்பதன் அருமை தெரியுமல்லவா. கயல் நிஜமாகவே பயந்துதான் போய்விட்டாள். கால்டன் அந்த அளவு நோய்வாய்ப் பட்டிருந்தார். சால்மோனெல்லா ஷாக் சின்றோம் ஆகி அவர் உயிருக்கே உலைவைக்கப் பார்த்துவிட்டது. கால்டனின் அறைக்குள்ளேயே 4 நாட்களாக ஒரு மருத்துவ யுத்தத்தைத் தன்னந்தனியாக நடத்தித் தன்னவரை மீட்டெடுத்துவிட்டாள் கயல்.
கயல் சொல்லிச்சென்ற “யெஸ்” கால்டனை மிகவும் ஆனந்தப்படுத்தியது. அன்பு அங்கீகாரம் பெறும்போது ஆனந்தம் அடையத்தானே செய்யும் மனது!
சிறிது நேரத்தில் கயல் ஒரு அகண்ட பாத்திரத்தில் பச்சைத்தண்ணீருடன் வந்தாள். ஒரு வெள்ளைத் துணியை அந்த நீரில் நனைத்து நெற்றி முகம் கழுத்தில் போட்டுப்போட்டு ஒத்தடம் கொடுத்தாள்.
“காய்ச்சல் அதிகமா இருக்கு. அதான். இப்போ காய்ச்சலுக்கு மருந்து வேண்டாம். வேற மருந்து போயிட்டிருக்கு ஐ.வி-ல. சோ இப்படியே மேனேஜ் பண்ணிட்டு நைட் ஜுரத்துக்கு மருந்து போட்டுக்கலாம்.” என்று விளக்கினாள்.
தலையாட்டினார் கால்டன். உண்மையில் அவள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை அவருக்கு. கனவுலகில் இருப்பது போலிருந்தார். கயலை அத்தனை அருகில் பார்த்து, அவளின் வாசத்தை முகர்ந்து கிரங்கிப் போனார். ஜுரத்தால் சிவந்து கலங்கிப் போன அவரின் கண்கள் அவளையே பார்த்தன. அதைக் கவனித்த கயல் என்னவென்று கேட்டாள்.
“ரொம்ப அழகா இருக்கிங்க..” என்று சொன்னார் காதலில் மயங்கிய கால்டன்.
இருவரின் மூச்சுக்காற்றின் இரைச்சலும் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது.
3.4- கல்லுக்குள் ஈரம்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.