3.7- தாயும் தங்கையும்
கயல் திருமணத்தில் அனைவரின் கண்களையும் ஈர்த்தாள். வித்தியாசமாக இருந்ததால் ஒருவர் கூட அவளைக் கவனிக்கத் தவறவில்லை. அனைவருமே அவள் அழகாக இருப்பதாய் நினைத்தார்கள். ஒருத்தியைத் தவிர..
படு கவர்ச்சியாக வந்திருந்தாள் எவாஞ்சலின். மிகவும் அழகாக ஆடம்பரமாக இருந்தாள். வைரக் கம்மலும் மோதிரங்களும் பிரேஸ்லட்டும் வாட்சும் லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹீல்ஸ் மற்றும் கைப்பையும் பிளாட்டினம் செயினில் தொங்கிய நீல ஒற்றை வைரக்கல்லும் பூனைக்கண்ணும் மேக்கப்பும் அவள் கவர்ச்சியை மேலும் பெரிதாக எடுத்துக்காட்டின. வெளிர் பீச் நிறத்தில் உடலோடு ஒட்டிய வகையில் பட்டு ஸாட்டினில் நூற்றுக்கணக்கான கிரிஸ்டல் வேலைப்பாடுகள் கொண்ட ஈவனிங் கவுண் ஒன்றை அணிந்திருந்தாள். அது ‘செலீனா பிரைடல்ஸ்’ பிராண்ட் கவுண். கால்டனின் தாயாரின் தயாரிப்பு தான். அவர்கள் வருவது தெரிந்து தான் இந்த கவுணை அணிந்து வந்தாள். இத்திருமண நிகழ்வில் தாந்தான் அழகாகத் தெரிய வேண்டுமென்று மினக்கெட்டுத் தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தாள்.
ஆனால் இவளின் அத்தனை ஆடம்பரங்களையும் ஒரு ஸிம்பிளான பட்டுப்புடவை தரைமட்டமாக்கிவிட்டது.
எவாஞ்சனினைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை கண்களும் கயல் உள்ளே நுழைந்ததும் அவள் பக்கம் சட்டென்று திரும்பிவிட்டன. எவாஞ்சலினின் படாடோப ஆடை அணிகலன்களைப் புகழ்ந்துகொண்டிருந்த வாய்கள் கயலைப் பார்த்ததும் ‘வாவ்’ என்று பிளந்தன.
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.. அவளுக்கு யாரும் நிகரில்லை” என்பது போலிருந்தாள் கயல்.
கயல் வந்ததும் நேராக அவளிடம் சென்று சேர்ந்துகொண்டார் அலி.
“ரொம்ப அழகா இருக்க..” என்று சொன்னார். கயலின் மீது மதிப்பு கொண்ட மருத்துவமனை சார்ந்த பலரும் கன்னியத்துடன் அவளது அழகினைப் பாராட்டினர். அவளும் பணிவுடன் நன்றி சொல்லி அந்த பாராட்டுக்களை ஏற்றாள்.
திருமண ஜோடியும் தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கயல் இந்திய உடையில் வந்தது பற்றித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
கயல் அத்தனை கவனத்தையும் ஈர்த்துவிட்டதும், மீண்டும் பொறாமைத் தீயில் வேக ஆரம்பித்தாள் எவாஞ்சலின். இவளிடம் அப்படி எதைப் பார்த்து அனைவரும் கவரப்படுகிறார்கள் என்று புரியவே இல்லை அவளுக்கு. எப்படி புரியும்!!??
அலி மற்றும் Prof.ஸ்மித்துடன் அமைதியாக ஒரு நாற்காலியில் செட்டில் ஆகிவிட்டாள் கயல். திருமண நிகழ்வு தாமதமானது. கால்டனின் தாயார் வருகைக்காக அனைவரும் காத்திருப்பதைத் தெரிந்துகொண்டாள் கயல்.
ஒரு மிகப்பெரிய ஷஃபரில் கெத்தாக வந்திறங்கினர் செலீனா கூப்பர் மற்றும் ஹன்னா கூப்பர்.
பணக்காரக் களை இருவர் முகங்களிலும் தாண்டவம் ஆடியதைக் கயல் உடனேயே கவனித்துவிட்டாள். கால்டனின் தாயார் 4 பிள்ளைகள் பெற்றவர் போல் தெரியவே இல்லை. படு ஃபிட்டாக எலிகண்டாக இருந்தார். முகம் அத்தனை அழகாக இருந்தது. (மேக்கப்பில் தான்)
கால்டன் இவர் ஜாடை தானென்று நினைத்தாள் கயல். ஒருபக்கம் ஆஃப் ஷோல்டராய் ஆங்காங்கே தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் குட்டிக்குட்டிப் பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு இடுப்புக்குக் கீழ் பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான கிரிஸ்டல் வேலைப்பாடுகளுடன் இருந்த மரூன் கலர் கவுண் அணிந்து வந்திருந்தார் செலீனா. தலை முதல் கால் வரை வைரங்களில் சிறு சிறு நகைகள் மின்னின.
அவரின் மகளும் கால்டனின் தங்கையுமான ஹன்னா கூப்பரும் அழகாகத் தான் இருந்தாள். தன் வயதுதான் இருக்கும் என்று கனித்தாள் கயல். அவள் முகம் கொஞ்சம் அப்பாவித்தனமாக அன்பு நிறைந்த முகமாகத் தோன்றியது கயலுக்கு.
கால்டனுக்கு ஹன்னாவை மிகவும் பிடிக்குமென்று எல்க் சொல்லியிருக்கிறாள். ஏனென்று பார்த்ததுமே புரிந்துகொண்டாள் கயல்.
ஆனால் அவர்கள் ஓரத்தில் அமர்ந்திருந்த கயலைக் கவனிக்கவில்லை. கால்டன் தாயார் உத்தரவளித்ததும் திருமணம் துவங்கியது. மதம் மற்றும் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிந்ததும் தம்பதிகள் முத்தமிட்டுக்கொண்டனர். அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கால்டனின் தாயார் முக்கியமாக சிலரிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தார். எவாஞ்சலின் அவர் வந்தது முதலே அட்டை போல் அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள். செலீனாவும் அவளிடம் நன்றாகவே பேசினார். இதையும் கவனித்தாள் கயல்.
உணவு விருந்து துவங்கியது. கயலுக்கு எதுவும் சரிவரவில்லை. காய்கறி சாலட் மட்டும் ஒரு கப் சாப்பிட்டாள். அதுவே பிரட்டிக்கொண்டு வந்தது. விசாரித்துக்கொண்டு டாய்லெட்டுக்கு ஓடினாள்.
ஒரு கழிவறையில் வாயிலெடுத்துவிட்டு வெளியே வர கதவைத் திறக்கும் போது அங்கே எவாஞ்சலினும் கால்டனின் தங்கை ஹன்னாவும் பேச ஆரம்பித்தது காதில் விழவே கொஞ்சம் பொறுத்தாள். அவர்கள் செல்லட்டும் பிறகு வெளியே போகலாமென்று நினைத்தாள். அவர்கள் பேசியது கேட்டு மனமுடைந்தாள்.
3.8- மனம் நொந்த கயல்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.