சீசன் – 4
4.1- அவசர சிகிச்சையில்..
கயல் நன்றாக சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை கேட்டதும் டக்கென்று விழித்தாள். நல்ல தூக்கத்திலிருந்து பட்டென்று வழித்ததும் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. மிகவும் மங்கலான வெளிச்சத்தில் அவள் தன் பக்கத்தில் கால்டனைப் பார்த்தாள். அவரும் உறங்கிக்கொண்டிருந்தார். சட்டையில்லாமல் பனியனோடு..
சுற்றிலும் பார்த்தாள். அது மருத்துவமனையில் அவளின் அறையில் உள்ள நீளமான சோஃபா. அந்த சோஃபாவில் கால்டனும் அவளும் ஒருவர் அணைப்புக்குள் ஒருவர் உறங்கிக்கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு. அவரின் திடமான தோளில் தலைவைத்துக்கொண்டு அவர் கழுத்துக்குள் தான் படுத்திருப்பதைப் பார்த்தாள். அவரின் மூச்சுக்காற்று அவள் கூந்தலுக்குள் சென்று விளையாடிக்கொண்டிருந்தது. இவள் கை அவரின் மேலும் அவர் கை இவளின் முதுகிலும் அணைத்தபடி இருந்தது.
அதிர்ச்சியானாள். ஆனால் ஆழமாக உறங்கும் கால்டனை எழுப்பி தன்னை விடுவித்துக்கொள்ள மனமில்லை அவளுக்கு. என்ன நடந்தது என்று அவரின் அணைப்புக்குள் இருந்தபடியே யோசித்துப்பார்த்தாள். அன்றிரவு நடந்த பயங்கர நிகழ்வுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.
***
மணி இரவு 9.30..
கால்டனுக்காக வழக்கமான இடத்தில் காத்துக்கொண்டிருந்த கயல் குழப்பமடைந்தாள். எப்போதும் 9 மணிக்குச் சரியாக வந்துவிடும் கால்டன், அன்று வரவில்லை. தாமதம் ஆகும் என்பது பற்றி அறிவிக்கவும் இல்லை. காத்திரு என்று சொல்லவும் இல்லை. என்ன ஆனதென்று புரியாமல் மீண்டும் மருத்துவமனைக்குள்ளேயே சோர்ந்து வாடிய முகத்தோடு சென்றாள்.
மருத்துவமனையின் லாபியில் கயலைச் சந்தித்த அலி, “இன்னும் கிளம்பல்லையா? நான் ட்ராப் பண்ணட்டுமா?” என்று கேட்டார்.
“இல்ல வேண்டாம் அலி! நன்றி! ஒரு நண்பர் வருவாரு. நீங்க போங்க”
“அந்த நண்பர்.. கால்டனா?”
“யெஸ்!”
“கேக்கலாமா தெரியல்ல.. ஆர் யூ இன் லவ்?!”
“அப்படி தெரியுதா!?”
“நல்லா தெரியுது.”
“மே பி! அப்படித்தான் நினைக்கிறேன்!”
“இன்னும் வெளிப்படுத்திகல்லையோ!?”
“ஆமா!”
“முடிவானதும் சொல்லு. நான், எய்லுல் 2 பேருமே ரொம்ப சந்தோஷப்படுவோம்!”
“நிச்சியமா”
அலி விடைபெற்றார்.
கயலுக்குக் கவலையாக இருந்தது. முத்தங்களிட்டு மதியம் இறக்கிவிட்டுச் சென்றவர், அதன் பின் சத்தமே இல்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தாள். ஏதோ சங்கடமாக இருந்தது அவளுக்கு!
“நீ எதிர்பாக்குற ப்ரெண்ட் இனிமே வருவாரான்னு டவுட் தான்” என்று கயலுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது.
திரும்பிய கயல் எவாஞ்சலினின் பொறாமைப் பார்வை வீசும் பூனைக்கண்களைச் சந்தித்தாள்.
“கால்டன் அவரோட அப்பா-அம்மாவைச் சந்திக்கப் போயிருக்காரு. இந்நேரம் எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்கப்போகற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்கும். அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்லிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடிட்டு அடுத்து என்னைப் பாக்க வரலாம். ஸோ.. நீ வேஸ்டா வெயிட் பண்ணாம ஒரு டாக்ஸி புடிச்சு போயிடு ப்ரவுன் லேடி” என்று நக்கலடித்துவிட்டு அலட்டிக்கொண்டு நடந்து அவசர சிகிச்சை பிரிவுக்குப் போனாள். லாபியில் இருந்து வலது பக்கம் தான் எமர்ஜன்ஸி பிரிவு இருந்தது. அன்று அங்குதான் இரவு டூட்டி அவளுக்கு.
அவள் சொல்லிச்சென்றது கயலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கால்டனையும் தன்னையும் அவள் பார்த்திருக்கலாம் என்று ஊகித்தாள். கோபம் சீறிக்கொண்டு வந்தது. ஆனால் அவசரப்படக்கூடாது என்று தன்னை நிதானித்துக்கொண்டாள். எதுவாயினும் கால்டனிடமிருந்து தெரியவரும் வரை அமைதி காப்பதென முடிவெடுத்துத் தன் அறைக்கே திரும்பிப் போய்விட்டாள்.
இரவு 10.45 ஆனது.
கால்டனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. வாடிப்போனாள். சரி டாக்ஸியில் வீடு செல்லலாமென்று நடந்து மருத்துவமனையின் லாபிக்கு மீண்டும் வந்தாள்.
லாபி வழக்கத்துக்கு மாறாக மிகவும் பரபரப்பாய் இருந்தது. பலர் பதட்டத்துடன் எமர்ஜன்ஸி நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். இதைக் கவனித்த கயல், எமர்ஜன்ஸி சிகிச்சை பிரிவு நோக்கி நடக்கத்துவங்கினாள்.
அங்கே கால்டனைப் பார்த்தாள். சட்டையெல்லாம் இரத்தக்கறைகளுடன் அழுதுகொண்டு டென்ஷனாகக் கால்டன் நிற்பதைப் பார்த்த கயல், பதறிப்போய் “கால்டன்..” என்று சத்தமாக அழைத்து அவரிடம் ஓடினாள். கயலின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த கால்டனும் “கயல்..” என்று பதட்டத்துடன் அழைத்துக்கொண்டே கயலிடம் ஓடிவந்தார்.
“இது உங்க இரத்தம் இல்லை-ல!”
“இல்ல. என் இரத்தம் இல்ல. என் அப்பாவோட இரத்தம். 15 அடி உயரத்துலேருந்து விழுந்துட்டாரு. ஒரு கம்பி வயித்துக்குள்ள குத்தியிருக்கு. வா..” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.
அங்கே கால்டனின் தந்தையார் கெல்லி கூப்பர் இருந்த நிலையினைக் கண்டதும் கயல் நிலைத்துப் போனாள். கால்டனின் அம்மாவும் அங்கே இருந்தார். அன்றிரவு அங்கே டூட்டியில் இருந்த ஒவ்வொரு செவிலியரும் மருத்துவரும், கெல்லி கூப்பர் இருந்த நிலை கண்டு ஸ்தம்பித்தனர். அனைவரும் அதிர்ச்சியில் நிலைத்துப் போயினர். என்ன செய்வது என்று ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அன்று அவசர சிகிச்சையின் டூட்டி சர்ஜன் எவாஞ்சலின். அவளும் அதிர்ச்சியானாள் கால்டனின் தந்தையைப் பார்த்து.
ஆனால் கால்டனையும் அவரின் தாயாரையும் மொத்தமாக முழுவதுமாக இம்பிரெஸ் செய்ய கச்சிதமாகச் சிக்கியிருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விடக்கூடாது என முடிவுகட்டிக் களத்தில் குதித்தாள் எவாஞ்சலின். கால்டனிடமும் அவரின் அம்மா செலீனா கூப்பரிடமும் தான் பார்த்துக்கொள்வதாய் தைரியம் சொல்லிவிட்டு, ப்ரொஃபஸர் Dr.செலிம் என்பவருக்குக் கால் செய்தாள்.
Dr.செலிம் என்பவர்தான் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மருத்துவத்தின் (Emergency Medicine) தலைமை மருத்துவர். அவர் மற்றொரு இதய அறுவை சிகிச்சையில் இருந்தார். அவருக்குக் கால் செய்து, “Mr.கெல்லி கூப்பரைக் கொண்டுவந்துருக்காங்க. முதல் மாடியிலேருந்து தவறி விழுந்துட்டாரு. ஒரு நீளமான கம்பி முதுகுல குத்தி துளைச்சு வயிற்று பக்கமா வெளியில வந்துருக்கு. கம்பியோட கீழ் முனையில ஒரு பெரிய கான்கிரீட் துண்டு இணைஞ்சிருக்கு. அதை ஒருத்தர் கையில தாங்கிகிட்டு இருக்காரு. கான்ஸியஸ் ல இல்ல. ஆனா ஸ்டேபிள். இப்ப நான் என்ன பண்ணனும்?” என்று கேட்டாள்.
“இரத்தப்போக்கு இருக்கா?”
“இல்ல.”
“ஓகே! குட்.. கம்பியை வெளியே எடுத்துறாத. X ray பண்ணி கம்பியோட பொஸிஷன் பாரு. 10 நிமிஷத்துல இந்த சர்ஜரி முடிச்சிட்டு நான் வந்துருவேன். அது வரைக்கும் கம்பியை அதே நிலையில வை. அலுங்காம, தியேட்டர் 5 கொண்டுவா”
“சரி” என்று துண்டித்துவிட்டு, அவரை மானிட்டருடன் இணைத்து முதற்கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினாள்.
“கயல், எனக்கு இவ மேல நம்பிக்கை இல்ல. நீ பாரு” என்று கால்டன் கயலிடம் சொன்னார்.
“இன்னைக்கு அவ தான் இங்க டூட்டி கால்டன். நான் தலையிடக் கூடாது. கொஞ்சம் பொறுங்க. பாக்கலாம்” என்று கயல் சொன்னாள். செலீனா ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லை. நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.
X ray கருவியைக் கொண்டுவரும்படிக் கத்தினாள் எவாஞ்சலின். X ray கருவி இயந்திரம் தள்ளிக்கொண்டு வரப்பட்டதும், அதைக் கம்பி துளைத்திருக்கும் இடத்தைப் படமெடுக்கும் வகையில் வாட்டமாக வைப்பதற்காக வேகமாக இப்படியும் அப்படியும் இழுத்தாள். அப்போது கம்பியின் முனையில் இருந்த பெரிய கான்கிரீட் துண்டினைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு தரையில் குந்தி அமர்ந்திருந்த நபரைக் கவனக்குறைவாக இடித்துத் தள்ளிவிட்டுவிட்டாள்.
அந்த நபர் உருண்டு விழுந்துவிட, அவர் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த கான்கிரீட் துண்டும் கனம் தாளாமல் கீழே விழத் துவங்கியது. கான்கிரீட் கீழிறங்க இறங்க அதனோடு பொருந்தியிருந்த கம்பியும் கெல்லி கூப்பரின் உடலில் இருந்து உருவிக்கொண்டு கீழிறங்க ஆரம்பித்தது.
-வித்யாகுரு