4.12- மீண்டுமொரு கலவரம்
முத்தமளித்த காரணமாகக் கயல் செலீனாவைக் கை காட்டுவாளென்று கால்டன் சற்றும் எதிர்பார்த்தாரில்லை! ஆச்சரியமாய்க் கேட்டவர், கயல் விளக்கியதும் நம்ப முடியா மனநிலைக்குப் போனார்.
“ஆமா! உங்க அம்மா தான் காரணம்!”
“சுத்தமா புரியல்ல!”
“எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறதுக்கு நீங்க சொன்ன காரணத்தைச் சொன்னாங்க! அதைக் கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்”
“என்ன சொன்னாங்க?”
“நீங்க சொல்லுங்க என்ன சொன்னிங்கன்னு!”
“ஐ ஃபவுண்ட் த உமன் ஆஃப் மை லைஃப்-னு சொன்னேன்!”
“அவ்வளவு தானா!!??”
“கொஞ்சம் விளக்கமா சொன்னேன். பட் விஷயம் இது தான்.”
“அவங்க விளக்கமா சொன்னாங்க!”
“ம்.. புரியுது! ஆனா அம்மா இதை ஏன் உன்கிட்ட சொன்னாங்க? நான் உன்னைப் பத்தி இன்னும் ஒன்னும் சொல்லல்லையே! ஆல்ஸோ அவங்க இப்படி யார்கிட்டையும் பேசுற ஆள் இல்லையே! நம்பவே முடியல்ல என்னால”
“அவங்களும் இதைச் சொன்னாங்க. இப்படி யார் கிட்டையும் பேசினது இல்லைன்னு.”
“கயலோட திறமை! மனசைத் திறந்து விட்டுர்றது. இல்லையா!!”
“அழுத்தத்தைக் குறைச்சாகனுமே!!”
“நான் சொன்ன எல்லாத்தையும் சொன்னாங்களா!!??”
“ம்.. சொன்னாங்க. சரி போகலாமா?”
“போகலாம்.. திருப்பி உணர்ச்சிவசப் படுவியான்னு வெயிட் பண்றேன்.ம்..!” என்று கன்னங்களைக் காட்டி நின்றார்.
செல்ல அடி கொடுத்துவிட்டு முன்னே நடந்தாள் கயல். ஏமாற்றத்தோடு வேறு வழியுமின்றி அவளைப் பின்தொடர்ந்தார் கால்டன். இருவரும் செலீனாவின் அறைக்குப் போயினர்.
அங்கே பெரும் கூட்டமே குழுமியிருந்தது. நிக், அவர் மனைவி, மகன், ஹன்னா, அவளின் கணவர், மகள், கால்டனின் தம்பி பிராட் கூப்பர் என அனைவரும் ஆஜர் ஆகியிருந்தனர். அனைவரின் முன்பும் ரிப்போர்ட்டை உடைக்க வேண்டாமென்று கயல் அமைதிகாத்தாள். செலீனாவும் நிக்கும் கூட ரிப்போர்ட் பற்றி எதுவும் கேட்கவில்லை.
அனைவருக்குள்ளும் அன்பிருந்தாலும் அனைவரும் இறுக்கமாக உறைந்த மனநிலையில் இருப்பதைக் கயல் எளிதில் புரிந்துகொண்டாள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ளக் கூடத் தயக்கப்பட்டனர்.
பிராட் மூக்கொழுகிக் கொண்டிருந்தார். கால்டனே பேச்சைத் துவங்கி ஐஸை உருக்கப்பார்த்தார்.
“என்ன பிராட்! ஜலதோஷமா?!”
“ஆமா!”
“உன்னைப் பார்த்து எவளோ நாள் ஆச்சு?! எப்படி போகுது உன் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எல்லாம்?”
“நல்லா போகுது. 2 நாளைக்கு முன்ன விழுந்துட்டேன். அதுனால 1 வாரம் ரெஸ்ட். கண்டிப்பா இந்த வருஷம் ஒலிம்பிக் ல விளையாட செலெக்ட் ஆகிடுவேன்.”
“குட்..”
இடை புகுந்த கயல், “எப்படி விழுந்திங்க? ஹெட் இஞ்சுரி யா?” என்று கேட்டாள். நிக்கின் முகமும் ஹன்னாவின் முகமும் மாறியது.
குடும்பமாய்க் கூடி இருக்கையில் அவள் அங்கு நின்றதே இருவருக்கும் பிடிக்கவில்லை. ஹன்னாவின் கணவர் கயலை யாரென்று கேட்டார்.
“கயல்! கெல்லியோட உயிரைக் காப்பாத்தின ஏஞ்சலிக் டாக்டர்” என்று செலீனா அறிமுகம் செய்ததும் அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை. நிக் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை! ஹன்னாவும் தான்.
“பிராட்! கயல் கேட்டதுக்கு பதில் சொல்லு!” என்று செலீனா உத்தரவிட்டார்.
“ஆமா. தலை குப்புற விழுந்தேன். தலையில தான் அடி பட்டுது.”
“டாக்டரைப் பாத்திங்களா?”
“இல்ல.. பெருசா ஒன்னும் வலிக்கல்ல”
பிராடின் கிட்டே வந்து மூக்கில் ஒழுகும் சளியை முகர்ந்து பார்த்தாள். பிறகு வெளியே அவசரமாய்ச் சென்றுவிட்டாள். கயலின் நடவடிக்கை புதிராய் இருந்தது அனைவருக்குமே! வெளியே சென்றவள் ஸ்வாப் டெஸ்ட் கிட்டோடு (கொரொனா டெஸ்ட் எடுக்க மூக்கில் நீண்ட குச்சியொன்று விடுகிறார்களே, அது) வந்து, பிராடின் அனுமதி பெற்று, அவர் மூக்கில் ஒழுகும் சளியினைச் சேகரித்துச் செவிலியிடம் கொடுத்தனுப்பினாள். பிறகு அவரைத் தலையில் ஒரு ஸ்கேன் எடுக்கவேண்டியிருப்பதை விளக்கி மற்றொரு செவிலியோடு அனுப்பி வைத்தாள்.
10 நிமிடத்தில் ஸ்கேன் முடிந்து பிராட் திரும்பி வந்துவிட்டார். அனைவரையும் அப்படி ஒரே இடத்தில் செலீனா அன்று தான் பார்த்தார். ஆனந்தமடைந்தார். தன் மேல் தன் பிள்ளைகளுக்கு அன்பிருக்கிறதென்று நினைத்து மகிழ்ந்தார். அனைவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை ஆனாலும் அனைவரும் அப்படி வந்திருந்ததே பெரிய விஷயம் தான்.
“எல்லாரும் இருக்கிங்க! அப்பாவைப் போய் பாக்குறீங்களா? ஏற்பாடு பண்ணவா?” என்று கேட்டாள் கயல்.
அனைவரும் ஆமோதித்தனர். உடனே ஏற்பாடு செய்து ஐ.சி.யூ வில் இருந்த கெல்லி கூப்பரைப் பார்க்க அழைத்துப் போனாள் கயல்.
கெல்லி கூப்பர் முழுச் சுயநினைவில் இருந்தார். அனைவரையும் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அவரும் தன் மொத்த குடும்பத்தையும் அப்போது தான் மொத்தமாய்ப் பார்த்தார். உணர்வு மிகுதி ஏற்பட்டது அவருக்கு.
அனைவரிடமும் தான் நலமாய் இருப்பதாய்ச் சொன்னார். ஆனால் அன்று முதன் முறையாய் செலீனா அவர் கண்களுக்கு வேறாய்த் தெரிந்தார். செலீனா மட்டும் வாய் திறக்கவே இல்லை. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. அப்போது கயலைக் கவனித்தார் கூப்பர்.
“நீ தானே என் மேல உக்கார்ந்திருந்த??!!’ என்று சட்டென்று அவளைச் சுட்டிக் கேட்டார்.
“பாத்திங்களா என்னை? நியாபகம் இருக்கா?”
“கடைசியா நான் உன்னைத்தான் பாத்தேன். என் உயிர் போகுது என்னைக் காப்பாத்துன்னு உன்கிட்ட தான் கேட்டேன். எப்படி உன்னை மறக்க முடியும்?”
“கேட்டீங்களா?! என் காதில விழவே இல்லையே!! ஆனாலும் உங்களைக் காப்பாத்தியாச்சு!” என்று புன்னகைத்தாள் கயல்.
“சரி! அவர் ரெஸ்ட் எடுக்கட்டும். நாமெல்லாம் போகலாம்.” என்று அனைவரையும் வெளியே அழைத்தாள் கயல்.
அனைவரும் செல்கையில் கடைசியாய் நகர்ந்த செலீனாவை மெல்லிய குரலில் அழைத்தார் கூப்பர். கிட்டே வந்த செலீனாவை ஜாடையால் குனியச் சொன்னார். ஏதோ பிஸினஸ் விஷயமாய்ச் சொல்லப்போகிறாரென்று நினைத்து முகத்தருகே காதைக் காட்டிக் குனிந்த செலீனாவின் கன்னத்தில் காதல் கொண்டு முத்தமிட்டார் கெல்லி கூப்பர். அதிர்ந்து போன செலீனா அவரை ஏறெடுத்துப் பார்த்தார். இருவரின் கண்களும் நீர் சிந்தின. செலீனாவும் கெல்லியின் கன்னத்தில் இதழ் பதித்தார்.
“இங்கையே இரு. எனக்கு பயமா இருக்கு!”
“எப்படிப் போவேன்?!”
வழிந்த கண்ணீரை இருவரும் ஒருவருக்கொருவர் துடைத்துவிட்டுக்கொண்டனர். காதலுக்கு வயதாவதே இல்லையே!!
மனமே இன்றி செலீனா வெளியே சென்றார். அவர் மறையும் வரை கெல்லி கூப்பர் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். இருவருமே மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தனர்.
பிராடின் ஸ்வாப் டெஸ்ட் அறிக்கையும் ஸ்கேன் அறிக்கையும் வந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள் கயல். மீண்டும் ஒரு கலவரம் அடுத்த 10 நிமிடங்களில் அரங்கேறியது. கால்டன் குடும்பமே கயலை பிரும்மாண்டமாய்ப் பார்த்தது.
4.13- வராண்டாவில் முதலுதவி
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.