4.18- இழப்பு
மெதுவாய்க் கண்விழித்தாள் கயல். இமைகள் கனமாய் இருந்தன. தலையினைக் கோதியபடி பக்கத்தில் கால்டன் அமர்ந்திருந்தார்.
அன்பாய்ப் புன்னகைத்த கயலிடம் கஷ்டப்பட்டு பதிலுக்குப் புன்னகைத்தார் கால்டன்.
சுற்றிலும் நோட்டம்விட்ட கயல், தான் மருத்துவமனையில் இருப்பதைப் புரிந்து கொண்டாள். நடந்த விபரீதங்களெல்லாம் நினைவுக்கு வந்தன.
“உங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல?!” என்று கால்டனிடம் பதட்டமாய்க் கேட்டாள், அவர் மேல் கண்களை ஓட்டிக்கொண்டே!
“எனக்கு ஒன்னும் இல்லை கயல்” என்று கால்டன் சொன்னதும் நிம்மதியடைந்தாள்.
பிறகு பலத்த சிந்தனையில் ஆழ்ந்தாள்.
மாலில் நடந்த விபரீதங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன.
கால்டன் கையினை விட்டுப் பிரிந்ததும், அந்த மனநலம் பாதிப்படைந்தவனிடம் நேருக்கு நேராய் சிக்கியது, அவன் மருத்துவமனையிலிருந்து தன்னைப் பின்தொடர்து மாலுக்கு வந்திருக்கிறான் என்று அறிந்துகொண்டது, துப்பாக்கி முனையில் மிரட்டி மேல் தளத்துக்கு அழைத்துப்போனது, அங்கே பெரும்பாடு பட்டு அவனைச் சமாதானம் செய்தது எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். “நிச்சியமா இப்பவே உனக்கு சர்ஜரி பண்ணி சரி பண்ணிடறேன்” ஒன்றே வாக்கு கொடுத்து அவன் நம்பிக்கை பெற்று துப்பாக்கியை அவன் ஒப்படைக்கப் போன நேரத்தில் போலீஸ் காலடி சத்தம் அவனை மீண்டும் திசை திருப்பிவிட்டதையும், கால்டனை அவன் சுட எத்தனித்ததையும், பதறிப்போய் வேறு வழியின்றி அவனைத் தாக்கியதையும் பதிலுக்கு அவன் விட்ட உதையும் நினைவுக்கு வந்தது.
தன் அடி வயிற்றில் வருடினாள் தனக்குள் இருந்த அந்தச் சின்னஞ்சிறு உயிர் இல்லை என்பதனை உணர்ந்துவிட்டாள்.
கால்டனுக்கு பக் பக்கென்று இருந்தது. அவள் கருவறை காலியாகிவிட்டதைத் தான் உணர்கிறாளென்று நன்றாகவே தெரிந்தது கால்டனுக்கு. எப்படி இதை அவளிடம் சொல்லப்போகிறோமென்று தான் அவரும் மணிக்கணக்காய்த் தவித்துக்கொண்டிருந்தார். தன் வாயால் சொல்வதற்குக் கயல் வாய்பளிக்கப்போவதில்லை என்பதை அவள் முக மாற்றத்திலும் கண்கள் திரட்டிய கண்ணீரிலும் புரிந்துகொண்டார் கால்டன்.
கண்ணீர் முட்டி நின்ற கண்களோடு அதிர்ச்சியும் கேள்வியும் ஏமாற்றமும் தொக்கி நின்ற பார்வையொன்றைக் கால்டன் மீது கயல் வீச, அந்தப் பார்வையின் அர்த்தத்தை விளங்கிக்கொண்ட கால்டன் வாய்திறந்து “குழந்தையினை நாம் இழந்துவிட்டோம்” என்று சொல்லத் திராணி இல்லாமல் தலையினை மட்டும் ஆட்டினார். கண்ணீர் சிந்தினார்.
தேக்கி வைத்திருந்த கண்ணீர் கயலின் விழிகளில் இருந்து வழியத் துவங்கியது. மருத்துவ அறிக்கைகளைப் பார்க்க வேண்டுமென்று கேட்டாள். கால்டன் எடுத்துக் கொடுத்தார்.
“பையோ ஃபிஸிக்கல் ப்ரொஃபைல்’ (Bio physical profile) எனப்படும் விஸேஷ வகை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில், அடிவயிற்றில் விழுந்த பலமான அடியும் அதைத் தொடர்ந்து படிக்கட்டுக்களில் உருண்டதனால் ஏற்பட்ட தொடர் அதிர்வுகளாலும் placentral abruption எனப்படும் நிலை ஏற்பட்டு கருப்பை சுவற்றிலிருந்து பனிக்குடம் பிரிந்து காயப்பட்டு குழந்தையின் இதயம் அதிர்ச்சியில் துடிப்பை நிறுத்தியிருந்தது. அதனால் D&C முறைப்படி கருப்பை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது” என்று ரிப்போர்ட்டில் இருந்தது. அதிர்ச்சியானாள்.
அன்றொருநாள் ஸ்கேனின் போது கால்டனோடு சேர்ந்து இரசித்துக் கேட்ட அந்த இதயத்துடிப்பு நின்றுபோனதா என நினைத்து தாளவொண்ணாத் துயருற்றாள். கண்ணீர் கொட்டியது.
கால்டனால் கயல் கஷ்டப்படுவதையும் அழுவதையும் பார்க்க முடியவில்லை. எழுந்து வெளியே சென்றுவிட்டார். வராண்டா என்று கூடப் பார்க்காமல் சுவற்றில் குப்புறச் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு பயங்கரமாய் அழுதார். சுவற்றில் சாய்ந்து அழுதவருக்கு நண்பன் தெரெக்கின் தோள் கிடைத்தது.
தெரெக்கும் செலீனாவும் அப்போது அங்கே தான் இருந்தார்கள்! கால்டன் அழுததைப் பார்த்து இருவரும் வேதனைப்பட்டார்கள். அப்படி அவர் அழுது அவர்கள் பார்த்ததே இல்லை. கயல் கால்டனின் கருவினைச் சுமந்துகொண்டு இருந்த விஷயத்தினைச் செலீனா அப்போது தான் அறிந்தார் என்பதால் அந்த அதிர்ச்சியில் இருந்தே அவர் மீளவில்லை. அந்தக் கரு இப்படிப்பட்ட சூழலில் கலைந்து போனதும், கால்டன் அதற்காய் அப்படி அழுவதும் அவரை இடியெனத் தாக்கியது.
கெல்லி கூப்பர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால் செலீனா ஆகிவிட்டார். வீட்டுக்கு, பணிக்கு, மருத்துவமனைக்கு என்று அலைந்து கொண்டிருந்தார். தன் கணவரையும் கடைசி மகனையும் காப்பாற்றிவிட்டுத் தன் இன்னொரு மகனுடன் போனவளைத் திரும்பவும் இந்த நிலையில் பார்ப்போம் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
தற்போதும் தன் மகனைக் காக்கப் போய்த்தான் அவள் தன் கருவைத் தொலைத்திருக்கிறாளென்று தெரிந்ததும் இன்னும் அவள் மேல் அவருக்குப் பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் அவள் கால்டனின் வாடகைத் தாய் என்பதை அவர் அறியவில்லை!
தெரெக் கால்டனைக் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். செலீனா கயலைக் காண உள்ளே சென்றார். 2 நொடிகளிலேயே திரும்ப வந்துவிட்டார். அவராலும் கயல் அழுவதைப் பார்க்க முடியவில்லை. ஒரு வழியாய் அலி வந்து கயலுடன் ஆறுதலாய் இருக்கும் பொறுப்பினை ஏற்றதும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர் அனைவரும்.
எத்தனை கோழைத்தனமாய் இருக்கிறோமென்று வாய் விட்டே சொன்னார் செலீனா! படு சுலபமாய் “அழனுமா?!” என்று தன்னிடம் கேட்டுப் பல வருட இறுக்கத்தை அவிழ்த்த கயலுக்கு ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல தனக்கு தைரியம் வரவில்லையே என்று நொந்து போனார் செலீனா!
கயல் பாதுகாப்பாய் இருப்பதே பெரிது, குழந்தையை நினைத்து அழவேண்டாம் என்று சமாதானம் சொன்ன தெரெக்கிடம் தான் அழுவது கயல் வேதனைப்படுவதை நினைத்துத்தான் என்று சொன்னார் கால்டன். இந்த அத்தனை பிரச்சினையும் தன்னால் தானென்று புலம்பினார்.
எல்க்கும் கயலுக்கு ஆதரவாய் அழுவதற்குத் தோள் தந்தாள். அழுது ஓய்ந்து அதிகாலையில் அனைவரும் உறங்கிப் போயினர். அத்தனை கலவரத்தில் கயல் லீலாவிடம் பேசவில்லை. மெசேஜ் மட்டும் தட்டி விட்டுவிட்டாள்.
மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அனைவரும் வீடு வந்தனர். தெரெக் அலுவலக வேலைகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார். கயல் 1 வாரம் விடுப்பெடுத்தாள்.
வீட்டுக்குள் வந்ததும் வெறுமையாய் இருந்தது. குழந்தை மேல் இருவருமே அளவுக்கு அதிகமாய் பற்றும் எதிர்பார்ப்பும் வைத்துவிட்டிருந்தனர். கனவுகள் வளர்த்திருந்தனர். ஒரு நொடியில் அவை தகர்ந்தது அவர்களை மனதளவில் அதீதமாய் பாதித்தது. அதற்குப் பிந்தைய 1 வாரமும் சோகமாகவே கழிந்தது. கால்டன் மட்டும் சில முறைகள் அலுவலகம் போய் வந்தார். கயல் தன் அறையும் தோட்டமுமே கதியென்றிருந்தாள். இருவராலும் பேசிக்கொள்ள முடியவில்லை.
கயலை இத்தனை கஷ்டங்களில் இழுத்துவிட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வில் கால்டனும், கை நீட்டிப் பணம் வாங்கிவிட்டு அந்த வேலையினை முடித்துக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் கயலும் நுழைந்துவிட்டதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ள இயலவில்லை.
ஒரு நாள் இரவு கால்டன் தன் பிறந்தநாளுக்குக் கயல் பரிசளித்த அந்த குட்டிக் கையுறைகளையும் குட்டிக் காலுறைகளையும் குழந்தையின் ஸ்கேன் புகைப்படத்தையும் எடுத்துவைத்துக்கொண்டு அழுததை வேறு அவள் பார்த்துவிட்டாள். இக்குழந்தையை அவர் எத்தனை முக்கியமாய் எதிர்பார்த்தார் என்பதை அவள் நன்கறிவாளாதலால் மிகவும் வேதனைப்பட்டாள்.
அன்று அந்த மாலுக்கு ஷாப்பிங் செய்யப் போகாமல் கால்டன் பேச்சைக் கேட்டு டாக்ஸியில் வீட்டுக்கு வந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே என்று நினைத்து மனதுக்குள் புலம்பினாள். தன் கவனக்குறைவினைக் கடிந்துகொண்டாள்.
காதலின் ஆரம்பப்புள்ளியான குழந்தையே இல்லாமால் போய்விட்டதே என்று அழுதாள். கால்டன் இக்குழந்தைக்காகச் செலவிட்ட தொகையையும் செய்த முயற்சிகளையும் வீணடித்துவிட்டோமே என்று தன்னைத் தானே குற்றம் சாட்டிக்கொண்டாள். அவரிடம் என்ன சொல்லி மன்னிப்பு கேட்பதென்று புரியவில்லை அவளுக்கு!
குழந்தையோடு போனதே, கயலுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் என்று நினைத்துப் பார்த்தாலே உடலெல்லாம் நடுங்கியது கால்டனுக்கு. டிஸ்சார்ஜ் ஆகித் தன் அறைக்கு வந்ததும் கயல் சத்தமில்லாமல் கதறி அழுத காட்சி கால்டனை மிகவும் பாதித்தது. “இந்தியப் பெண்” என்றால் என்னவென்று தெரியாமல் கயலைத் தன் வாடகைத்தாயாக்கியது எத்தனை பெரிய தவறென்று அவள் அப்படி அழுதபோது தான் புரிந்துகொண்டார். தாய்மை என்பதைத்தான் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் மொத்த வாழ்க்கையின் பயனாக மதித்து வாழ்வாள் என்ற நிதர்சனத்தினை அவர் அறிந்துகொண்டார். 2 ஆண்டுகளுக்குப் பின் குழந்தைக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தபோது அவள் எப்படித் துடித்திருப்பாள் என்பதை அவர் இப்போது நன்றாய் உணர்ந்தார். மொத்தத்தில் “கயலைக் கஷ்டப்படுத்தாதே” என்று செலீனா அன்று சொன்னதன் அர்த்தம் பளிச்சென்று விளங்கியது அவருக்கு. கயலின் அழுது ஓய்ந்த கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியத்தை அவரால் திரட்ட முடியவே இல்லை.
இருவருக்கிடையிலும் மிக நீ……ண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இருவருமே சிந்தித்து ஒரு தெளிவுக்கு வந்தனர்.
தோட்டத்தில் கயல் இருந்த போது அவளின் அலைபேசி அறையில் அடித்துக்கொண்டே இருந்தது கேட்டு கால்டன் வந்தார். தொடுதிரையில் லீலாவிடமிருந்து வீடியோ கால் வருவதைப் பார்த்து எடுத்துக்கொண்டு தோட்டம் நோக்கி அடியெடுக்கவும் கயல் வரவும் சரியாய் இருந்தது.
லீலா என்று சொல்லி அலைபேசியைக் கயலிடம் நீட்ட, கயல் பதட்டத்துடன் அட்டெண்ட் செய்தாள்.
“அம்மாடி… அப்பா பேசுறேன் மா…” என்று கயலின் தந்தை புகழேந்தி வாயசைப்பில் பேசினார்.
(குரல்வளையில் துளையிட்டு இரும்புக் குழாய் பொருத்தி வெண்டிலேட்டரில் இணைக்கப்பட்டிருந்தார் கயலின் தந்தை. அவரால் குரல் எழுப்ப முடியாது. Tracheostomy என்று பெயர் இதற்கு. நீண்ட நாள் செயற்கை சுவாசம் தரவேண்டிய நிலையில் உள்ளவர்களுக்குச் செய்யப்படும் ப்ரொசீஜர் இது. GBS நோய் கண்டவர்கள் பெரும்பாலும் கடைசிவரைக்கும் வெண்டிலேட்டர் சப்போர்ட் தேவைப்படும் நிலைக்குத் தான் போவார்கள். கூகுளில் மேலும் அறிக)
மோசமான இடைவெளிக்குப் பிறகு அவள் அப்பா முழு சுய நினைவில் தன்னுடன் வாயசைப்பிலாவது உரையாடுவது கண்டு கயலுக்குப் பேச்சே வரவில்லை. அழத்துவங்கினாள்.
4.19- பிரிவும் வலியும்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.