4.24- அடங்கிய நிக் கூப்பர்
“கால்டனின் வருங்கால மனைவி” என்று கூப்பர் குடும்பத்தின் தலைவி, அந்த மிகப்பெரிய மேன்ஷனின் மகாராணி செலீனா அறிவித்தது அங்கே இரவு உணவுக்காகக் கூடியிருந்த அனைவருக்குமே பேரதிர்ச்சியாய் இருந்தது. ஒருவரைத் தவிர..
“கல்யாணம் பண்ணிக்கிட்டா கூடவே இருப்பேன்” என்று வானவில் சாட்சியாய்ச் சொல்லித் தன் வாழ்வை வண்ணமயமாக்கியவளுக்காகத் தாய்-தந்தையிடம் 2 நாட்களாகப் பேசி சம்மதிக்க வைத்து, தன்னவளுக்கான உரிய மரியாதையினைப் பெற்றுத் தந்து, தன் இல்லத்திற்கு அழைத்து பகிரங்கமாக அறிவிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு, தன் வீட்டில் தன் குடும்பத்தினருடன் ஆனந்தமும் அதிர்ச்சியும் கலந்த மனநிலையில் அமர்ந்திருந்த தன் காதலியை இரசித்துக்கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்த கால்டன் தான் அந்த ஒருவர் என்பது சொல்லித் தெரியவேண்டுமா!
கயல் மிகவும் மகிழ்ந்தாள். வானத்தில் பறப்பது போன்ற உணர்வு கொண்டாள். கண்கள் ஆனந்தக் கண்ணீர் திரை போட்டுக்கொள்ள, அந்த திரைக்குப் பின்னால் தெரிந்த தன் கண்ணாளனைக் காதலோடு பார்த்தாள்.
ஹன்னாவும் அவள் கணவரும் கயலுக்கும் கால்டனுக்கும் மனமார உடனே வாழ்த்து தெரிவித்தனர். ஹன்னாவுக்கு ரொம்பவே சந்தோஷம். கால்டனின் குணம், எதிர்பார்ப்பு பற்றி ஓரளவு அறிந்தவள் அங்கே அவள் மட்டும் தான். அவரே கயலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் கருத்து இல்லை. ஹன்னாவின் கணவர் கால்டனின் நண்பர் என்பதால் அவருக்கும் கால்டன் பற்றித் தெரியும். அவருக்கும் மகிழ்ச்சி கொள்ள மட்டுமே முடிந்தது.
நிக்கின் மனைவிக்குப் பெரிதாக மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை. சம்பிரதாய வாழ்த்து தெரிவித்தாள்.
நிக்… அவர் இந்த அறிவிப்பினைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனதில் இருந்த வெறுப்பு அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. ஆனால் சபை நாகரிகம் கருதி அவரும் போலி வாழ்த்துச் சொன்னார். அனைவரும் டின்னரை முடித்தனர்.
செலீனா தன் அறைக்குக் கயலை அழைத்துப் போனார்.
“கயல்.. கால்டன் ரொம்ப தெளிவா முடிவெடுத்துட்டான். நீ வேண்டாம்னு சொல்ல என்கிட்ட 2 காரணம் இருந்துது. உன் குடும்ப பொருளாதார நிலை. உன் குடியுரிமை. ஆனா கால்டனுக்கு உன் மேல இருக்குற அன்புக்கும் நீ செஞ்ச உதவிகளுக்கும் முன்னால அந்த 2 காரணமும் காணாம போச்சு.”
“உயிரைக் காப்பாத்துறது என் கடமை. திரும்ப திரும்ப அத உதவின்னு சொல்லாதிங்க. நான் என் வேலையைத் தான் செஞ்சேன்.”
“நான் அதைச் சொல்லல்ல. என் மன இறுக்கங்களை நீ தான் தளர்த்தி விட்ட. உன்னால தான் எனக்கும் கெல்லிக்கும் இடையில இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பிணைப்பே வந்துருக்கு. உன்னால தான் இப்ப என் வாழ்க்கையில என் மனசுல என் சிந்தனைகள் ல நல்ல பல மாற்றங்கள் வந்திருக்கு. நிம்மதியா இருக்கேன். அதை தான் சொல்றேன்.”
“ஓ… இதை கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு. அப்பறம்.. இந்த முடிவு உங்க கணவருக்கும் தெரியும் இல்லையா.!”
“ஆமா. எங்க 2 பேருக்கும் இதுல முழு சம்மதம். அவரு இந்த டின்னர் ல கலந்துக்க முடியல்ல. முடிஞ்சிருந்தா அவர் தான் அறிவிச்சிருப்பாரு.”
“உங்க 2 பேர் மனசும் இந்த மேன்ஷன் மாதிரியே பெருசு”
“உன்னை விட பெருசு இல்லை கயல். அப்பறம்.. உனக்கு ஏதாவது பரிசு வேணுமின்னா கேளு. என்கூட வா” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துப் போனார். ஒரு ஆள் உயர ஒல்லியான ஒற்றைக் கதவு கொண்ட அலமாரியினைத் திறந்து காட்டினார். முழுக்க முழுக்க வைர நகைகள் மின்னின.
“இதெல்லாம் என் பிறந்த வீட்டு பரம்பரை நகைகள். உனக்கு எது வேணுமோ 2 நகைகள் எடுத்துக்கோ” என்றார். கயல் ஏதோ நம்ப முடியாத காட்சி போல் அவற்றைப் பார்த்தாள். அத்தனை அழகாய் இருந்தன ஒவ்வொன்றும்.
“எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. ஆனா எனக்கு வேண்டாம்.”
“வேண்டாமா..!!!!!!!!!!!! ஏன்??????”
“இதெல்லாம் எனக்கு எந்த விதத்திலையும் பயன்படாதே! இதை போட்டுக்கிட்டு போக எனக்கு சந்தர்ப்பங்களும் இல்ல.உங்க கிட்டையே இருக்கட்டும். மதிப்பு தெரிஞ்ச இடத்துல தான் இதெல்லாம் இருக்கனும் இல்லையா!”
“ஆனா உனக்கு நிச்சயமா நான் ஒரு பரிசு கொடுக்கனுமின்னு நினைக்கிறேனே!”
“அப்படின்னா நான் ஒன்னு கேப்பேன். தருவிங்களா!”
“கேளு..”
செலீனா அஸ்ட்ரானமி படித்தவர். அதனால் அவர் அறையில் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் ஒன்று வானத்தைப் பார்க்கும் வகையில் இருந்தது. பக்கத்திலேயே டெலஸ்கோப் வழி வானில் பார்த்தவற்றைக் குறிப்பெடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் தேவையான பிற உபகரணங்களும் இருந்தன. இதைச் செலீனாவின் அறைக்குள் நுழைந்த போதே கவனித்துவிட்டாள் கயல். இரவு எந்நேரமாயினும் வானில் கோள்களையும் வின்கயல்களையும் பார்க்காமல் உறங்கச் செல்லவதில்லை என்பதை மருத்துவமனையில் இருவரும் ஒன்றாகக் கழித்த அந்த இரவினில் செலீனா குறிப்பிட்டிருந்தார்.
“அந்த டெலெஸ்கோப் வழியா வானத்துல நட்சத்திரங்களை எனக்கும் காட்டுவிங்களா! எனக்கு பாக்கனுமின்னு ஆசையா இருக்கு” என்று குழந்தை போல் கேட்ட கயலை விந்தையாகப் பார்த்தார் செலீனா!!
அத்தனை வைரங்களை விட்டுவிட்டு இந்தப் பெண் வின்மீன்களைப் பார்க்கவேண்டுமென்று கேட்கிறாளே என்று வியந்தார். கால்டனுக்குக் காதல் வந்ததில் தப்பே இல்லையென்று தோன்றியது. சிரித்துக்கொண்டே அவள் ஆசையை நிறைவேற்ற அழைத்துப் போனார்.
தொலைநோக்கியில் அவளை வாகாக நிற்கவைத்து, தெளிவாக இருந்த அந்த இரவு வானில் மின்னிக்கொண்டிருந்த ஓரியான் விண்மீன் கூட்டத்தினைத் தன் வருங்கால மருமகளுக்குக் காட்டினார் செலீனா. முன்தினம் இரவு அவர் டியூன் செய்து வைத்திருந்ததால் சட்டென்று அதைக் காட்ட முடிந்தது.
சற்று முன்னர் அலமாரி முழுக்க இருந்த வைரங்களைப் பார்த்து விரியாத அவள் கண்களும் பிளக்காத அவள் வாயும் தற்போது இந்த நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்து விரிந்தும் பிளந்தும் போயின.
இருள் வானில் மணல் கடிகார வடிவில் வில்லேந்திய வேட்டுவன் உருவம் வரையக்கூடிய விதத்தில் நட்சத்திரப் புள்ளிகள் வைத்திருக்கும் ஓரியான் விண்மீன் கூட்டத்தைப் பற்றிய சில குறிப்புக்களையும் விளக்கங்களையும் செலீனா சொல்ல ஆசையாசையாய் அதை இரசித்துப் பார்த்துத் தன் மூளைக்குள் படம்பிடித்துக்கொண்டாள் கயல்.
பார்த்து முடித்து அகன்றதும் அத்தனை சந்தோஷத்தோடு செலீனாவுக்கு நன்றி சொன்னாள்.
“நீ ரொம்ப ஒரிஜினல் கயல்! வைரங்கள விட நட்சத்திரங்களைப் பாத்து சந்தோஷப்படற!!!!”
“நட்சத்திரங்களும் வைரங்கள் போலத்தானே. ஒரு வைரம் உருவாக பூமி லட்ச லட்ச வருஷங்கள் காத்திருக்கற மாதிரி ஒரு நட்சத்திரம் உருவாக வானமும் லட்ச லட்ச வருஷங்கள் காத்திருக்குது இல்லையா!”
“உண்மை தான்!”
“இந்த காட்சி இன்னிக்கி எனக்கு கிடைக்குமின்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. உங்க 2 பரிசுகளாலையும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
“2 பரிசுகளா!!! இன்னொன்னு?”
“இன்னொன்னு.. உங்க அறிவிப்பு”
“ஓ.. அதை சொல்றியா.. சரி இப்ப கால்டன் அவன் பக்கத்தைத் தயார் பண்ணிட்டான். நீ அடுத்து என்ன பண்ணப்போற? அப்பா சம்மதம் வேணுமின்னு சொன்னியாமே! எப்படி? அவர் இப்போ நல்லா இருக்காறா? உன்னால அவரைச் சம்மதிக்க வைக்க முடியுமா? அதைப்பத்தி யோசி கயல்! உதவ நான் தயார்” என்று செலீனா சொன்னதும், பந்து இப்போது தன் கோர்ட்டில் விழுந்துவிட்டதைப் புரிந்து கொண்டாள் கயல். மண்டையை ஆட்டிவிட்டு செலீனாவை ஆரத் தழுவி விட்டு அவர் அறையிலிருந்து விடைபெற்று வெளியே வந்தாள்.
நிக்கிடம் சிக்கினாள்.
“உன்கிட்ட நான் தெளிவா சொல்லியும் நீ அடங்கல்லை-ல..”
“நீங்க தெளிவா சொன்ன அப்பறம் தான் கால்டனை இனி விட்டுக்கொடுக்கறதில்லைங்கற முடிவுக்கே வந்தேன். உடனே பாருங்க! கல்யாணப் பேச்சே முடிவாயிருச்சு! ரொம்ப நன்றி! நீங்க ஆரம்பிச்ச நேரம் என் வாழ்க்கையில நல்லது நடக்கத் துவங்கியிருக்கு!!”
“நக்கல் பண்றியா? பிராட் தலையில அனுமதி இல்லாம துளை போட்டு ஒலிம்பிக்-ல கலந்துக்குற அவனோட கனவை நீ கலைச்சதுக்கு அவன் இப்போ உன் மேல வழக்கு தொடுக்குறான்னு வை! நீயும் கால்டனும் கோர்ட்டுல கல்யாணம் பண்ணி ஜெயில்ல குடும்பம் நடத்துவிங்களா!! நீ வாடகைத் தாயா பணம் வாங்கிக்கிட்டு தான் கால்டன் வாழ்க்கைக்குள்ளையே வந்தன்னு அம்மாவுக்கு இன்னும் தெரியாது. தெரிஞ்சா உன்னை மருமகளாக்குவாங்கன்னு நினைக்கிறியா!”
“நீ சொல்றத கேட்டு பிராட் கேஸ் கொடுப்பானான்னு முதல்ல கேட்டியா!” என்று கால்டன் பதில் கேள்வி கேட்டுக்கொண்டு இவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தார்.
கால்டன் கார் பக்கம் சென்றதைப் பார்த்துவிட்டுத்தான் கயலைத் தேடி நிக் வந்தார் என்பதால் அவருக்கு அதிர்ச்சியானது.
“பிராட் கேஸ் கொடுக்க மாட்டான்.” என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கால்டன்.
“எப்படி சொல்ற?”
“நீ என்னையும் கயலையும் பத்தி விசாரிச்சது எனக்கு தெரிய வந்தது. உஷாரானேன். பிராட் கிட்ட கயல் வேணுமின்னே அவனை காயப்படுத்தியதா நீ சொன்னதும் தெரிய வந்துது. அவனுக்கு நடந்த உண்மை என்னன்னு இப்பத்தான் நம்ம குடும்ப டாக்டர் உதவியோட புரிய வச்சேன். சோ இனி அவன் கேஸ் கொடுக்க மாட்டான். அம்மாவுக்கு கயல் என் வாடகைத் தாயா இருந்த விஷயம் தெரியும். அப்பாவுக்கும் தெரியும். தெரிஞ்சு தான் சம்மதிச்சிருக்காங்க. சோ நீ சொன்ன 2 வழியும் இனி வர்க் அவுட் ஆகாது. வேற ஏதாவது ட்ரை பண்ணு”
“இந்தியாவிலேருந்து படிக்க வந்த இவளுக்காக நம்ம குடும்பத்தை விட்டு போக முடிவெடுத்துட்டியா?!”
“நான் நம்ம குடும்பத்தை விட்டுப்போய் 2 வருஷம் ஆச்சு நிக்! எனக்கு உங்க யார் சம்மதமும் சப்போர்ட்டும் தேவையே இல்ல. ஆனா கயல் குடும்ப சம்மதத்தோட தான் எங்க குடும்பம் தொடங்கனுமின்னு ஆசைப்பட்ட ஒரு காரணத்துக்காகத்தான் இவளோ மினக்கெட்டேன். நீயும் சம்மதிச்சா நல்லது. சம்மதம் இல்லன்னாலும் பிரச்சினை இல்ல. ஆனா இன்னொரு முறை கயல் கிட்ட மிரட்டல் தொணியில நீ பேசினன்னு தெரிஞ்சிது.. என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்.” என்று அமைதியான குரலில் பலமாக எச்சரித்துவிட்டுத் தன்னவளைக் கரம்பற்றி அழைத்துப் போனார் கால்டன்.
தான் 2 நாட்களாக ஊதி வைத்திருந்த பலூன் புஸ் என்று போய்விட்டதைக் கண்டு அடங்கிப்போனார் நிக் கூப்பர். கால்டன் தன் காதலில் தீவிரமாக இருப்பதை நன்றாகப் புரிந்து கொண்டார். தேவையில்லாமல் மோத வேண்டாம் என்று முடிவெடுத்தார், கொஞ்சம் புத்திசாலியான நிக்!
“I know you were trouble when you walked in…” என்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் பாடல் ஒலிக்க, கால்டனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி கயல் காருக்குள் அமர்ந்திருந்தாள்.
கயலின் பார்வை ஏதோ செய்ய, “அப்படி பாக்காத.. அப்பறம் ஏதாவது நடந்தா நான் பொறுப்பில்ல..” என்று கால்டன் சொன்னார்.
அசட்டுப் புன்னகை இருவர் முகங்களிலும் படர காருக்குள் காதல் மணம் வீசியது.
4.25 இந்தியா போகனும்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.