4.3- ஆறுதலாய்..
கயல் அன்று செய்த அத்தனையும் அங்கிருந்த ஒவ்வொருத்தரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கனவு போல் படபடவென ஐந்தே நிமிடத்தில் அரங்கேறிய காட்சிகளில் இருந்து யாருமே நீண்ட நேரம் மீளவில்லை. கயல் கண்களை விட்டு மறையும் வரை அத்தனை பேரும் வியப்புடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இரத்தப்போக்கினை நிறுத்த கயல் கையாண்ட முறை அங்கிருந்த யாரும் கேள்விகூடப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் அனைவரும் வாயைப் பிளந்தனர்.
செலீனாவை ஒரு செவிலி செக் செய்தாள். BP எகிறியிருந்தது. உடனே அவரை ஒரு படுக்கையில் கிடத்தி ஊசி போட்டார் அந்த செவிலி.
“போகுறபோக்குல கண்ணால பாத்தே BP அதிகரிக்கறதை எப்படிச் சொல்ல முடியும்?”
“கயலால முடியுதே!” என்று ஊசி போடும்போது செவிலிகள் பேசிக் கொண்டனர்.
கயலைப் பற்றி எவாஞ்சலின் அன்று அந்த திருமண நிகழ்வில் சொன்னதை நினைத்துப் பார்த்தார் செலீனா. அங்கே ஓரமாக நின்றிருந்த எவாஞ்சலினைக் கவனித்தார். வெறுப்புப் பார்வை வீசினார். கயலின் ஆளுமை, திறமை, சமயோஜித புத்தி இவை அனைத்தும் செலீனா கூப்பரை மிகவும் பாதித்தது. அதே நேரம் இத்தனை நாட்கள் அவர் வாழ்ந்துவரும் வாழ்க்கை பற்றிய பல சந்தேகங்களும் அவர்கள் மனதில் எழுந்தன. தன் கணவரின் நிலை கண்டு அவர் ஆடித்தான் போய்விட்டார்.
மறுபக்கம், கயலின் திறமை பற்றி ஓரளவு அறிந்த கால்டன், தற்போது அதை நேரில் பார்த்து வியந்து போனார். பிறகு சுதாரித்து, கயல் சென்ற தன் தந்தையின் ட்ராலியுடன் ஓடிப்போய்ச் சேர்ந்துகொண்டார். அறுவைசிகிச்சை யூனிட் வாயிலில் காத்திருந்த Prof.Dr.செலிம், கயல் வரும் தோரணையை வியந்து பார்த்தார்.
சுற்றி பலர் புடை சூழ, உயரமான டிராலியில், கெல்லி கூப்பர் என்ற பெரிய மனிதரின் உயிரை விரல் நுனியில் பிடித்துக்கொண்டு, அவர் மேல் அமர்ந்துகொண்டு தேவதைகளின் இராணி போல் கயல் வந்துகொண்டிருந்தாள்.
ஒரு வழியாக அறுவை சிகிச்சை அரங்கத்துக்குள் ட்ராலி உருண்டது. கால்டனை உள்ளே அனுமதிக்கவில்லை. சில நொடிகளில் கயலே வெளியில் வேக நடையில் மூச்சு வாங்க ஓடி வந்தாள்.
“Prof., காட்ரிஜ் போடச் சொல்லிருக்கேன்.”
“ஓகே கயல். இனி என் பொறுப்பு. நீ செஞ்சிருக்கறது ரொம்ப பெரிய காரியம்.”
“ஆனா ஒருத்தரோட உயிரை விரல் முனையில பிடிச்சு வச்சுருந்தது ரொம்ப திகிலா இருந்தது.”
“உண்மை தான். சரி நான் உள்ள போறேன்.”
“வேண்டுதல்கள்.”
கால்டனைப் பார்த்தாள். கயலைக் கட்டியணைக்க வந்தார். அவள் மேலெல்லாம் இரத்தக்கறையாக இருந்ததினால் கட்டியணைக்க வந்தவரை நிறுத்தினாள். கையுறைகளையும் பச்சைக் கவுனையும் கழட்டிவிட்டுக் கைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய மறுநொடி கால்டனின் அணைப்புக்குள் இருந்தாள்.
நீண்ட நேர டென்ஷனையும் பீதியையும் கயலைக் கட்டியணைத்துச் சற்றே இறக்கிவைத்தார் கால்டன். அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பதை நன்றாக உணர்ந்தாள் கயல். அவரின் பரந்த முதுகினை ஆறுதலாய்த் தடவிக்கொடுத்தாள். இதுவரை அனுபவித்திராத அமைதியும் நிம்மதியும் கயலைக் கட்டியணைத்திருந்த அந்த ஒரு நிமிடம் கால்டனின் இதயத்தில் குடிகொண்டது. கயல் அதை முடிக்கும் விதமாய் விலகத் துவங்கியதும் கால்டனும் மனமில்லாமல் அவளை விடுவித்தார்.
அந்தத் தியேட்டருக்கு மிக அருகிலேயே இருந்த சர்ஜன்ஸ் அறைக்கு அவரை அழைத்து வந்தாள். அவளும் தண்ணீர் அருந்திவிட்டுக் கால்டனுக்கும் தண்ணீர் கொடுத்தாள். பிறகு விசாரித்தாள்.
“என்ன ஆச்சு? எப்படி இது?”
“அப்பா 8 மணிக்கு ஒரு கட்டுமான சைட்டுக்கு வரசொல்லியிருந்தாரு. போனேன்! அங்க அம்மாவும் இருந்தாங்க. ஒரு சின்ன வாக்குவாதம் ஆச்சு. முதல் மாடியில தான் பேசிக்கிட்டு இருந்தோம். அப்பா ஓரமா நின்னுக்கிட்டு பேசிட்டிருந்தாரு. அப்ப பேலன்ஸ் தவறி கீழ விழுந்துட்டாரு. கீழ நடப்படிருந்த அந்த கம்பி துளைச்சிருச்சு. உடனே ஆம்புலன்ஸ் வரச் சொல்லி கம்பியை உருவாம கான்கிரீட் தளத்தைப் பேத்து அப்படியே கொண்டுவந்துட்டோம். அதுக்குத்தான் இவளோ லேட் ஆகிடுச்சு.”
“ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்கிங்க. கம்பியை மட்டும் உருவியிருந்தா கொண்டு வர்றதுக்குள்ளேயே போயிருப்பாரு.”
“நன்றி கயல். இப்ப நீ இல்லைன்னாலும் போயிருப்பாரு”
“நான் என் வேலையைத்தான் செஞ்சேன்.”
“ரொம்ப பயமா இருக்கு.”
“இனி பயம் இல்ல. நல்லா ஆய்டுவாரு. எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமில்ல?”
“உன்னைக் கலவரப்படுத்த வேண்டாமின்னு நினைச்சேன்.”
“என்ன பேசுறீங்க?”
“ஆக்சுவலி டென்ஷன் ல எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல்ல.”
“புரியுது.”
“நீ டாக்ஸியில போயிருப்பன்னு நினைச்சேன்.”
“போகல்ல..”
“எனக்காக காத்திருந்தியா?”
“ஆமா.. சரி உங்க அண்ணன் தங்கச்சி தம்பிக்கெல்லாம் சொன்னிங்களா!”
“இன்னும் இல்ல..”
“சொல்லுங்க.. அப்பறம் அம்மாவைப் போய் பாருங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க.”
“சரி..”
“சாப்பிடிங்களா?”
“இல்லை.”
“அம்மாவைப் பாத்துட்டு வாங்க. சாப்பிடலாம். 2ஆவது மாடியில என் அறை இருக்கு. அங்க வந்துருங்க. நான் டின்னர் ரெடி பண்ணி வைக்கறேன்.”
“அம்மா கிட்ட போய் என்ன பேசுறது?!”
“இது என்ன கேள்வி! சர்ஜரி ஆரம்பிச்சிருக்கு நல்லா ஆகிடுவாருன்னு தைரியம் சொல்லுங்க”
தயங்கினார். கயல் போகச்சொல்லி உந்தினாள். அம்மாவின் BP அளவினை விசாரித்துக்கொண்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரச் சொன்னாள்.
கால்டனுக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை. அவர் குடும்பத்துக்கே கிடையாது. அனைவரும் தனித்தனியாக தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் தானே தவிர ஒருவருக்கொருவர் கேர் செய்வது எப்படி என்று அவர்களுக்குத் தெரியவே தெரியாது. கால்டன் குடும்பத்தில் அனைவருமே அப்படித்தான். கால்டனும் அவர் வாழ்வில் முதன்முறையாகக் கயலைத்தான் இப்படி கவனித்துக்கொள்கிறார். மற்றபடி அவரும் இதில் பழக்கப்பட்டவர் எல்லாம் இல்லை. ஆனாலும் கயல் சொல்வது போல் செய்ய முனைந்து கிளம்பினார்.
4 அடிகள் சென்றுவிட்டுத் திரும்பி வந்து மீண்டும் அவளைக் கட்டியணைத்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்ட ஆறுதல் தேறுதல் எல்லாம் கயலிடம் தான் கிடைத்தது. “சரி ஆகிடும்.” என்று கயல் சொல்ல, அவள் கன்னத்தில் முத்தமிட்டு வருத்தத்தைப் பார்வையில் காட்டிவிட்டு ஓடிப்போனார். கால்டன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் கயல்.
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.