4.5- ஒரு சோஃபாவில் இரு தூக்கம்
“என்ன இருக்கு நமக்குள்ள?” என்று கேட்ட அழுத்தக்காரிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தார் கால்டன்.
“சரி. இந்த வாக்குவாதம் இப்ப வேண்டாம். சாப்பிடலாம் வாங்க.” என்று அழைத்தாள் கயல். கால்டன் கடுப்பில் அசையவே இல்லை. கிட்டே சென்று கையைப் பிடித்து, “வாங்க..” என்று இழுத்தாள். மறுகணம் அவளது அதே கையினைப் பிடித்திழுத்து அணைத்துக்கொண்டார் கால்டன். கயலுக்குப் படபடவென இதயம் அடித்துக்கொண்டது.
“உன்னைப் பார்த்த நிமிஷத்துலேருந்து மண்டைக்குள்ள நீ மட்டும் தான் இருக்க. உன்னையே சுத்தி சுத்தி வர்றேன். எப்பவும் உன் கூடவே இருக்கேன். நம்ம வீடு, நம்ம தோட்டம், நம்ம குழந்தைன்னு பேசுறேன். நீ தான் எல்லாத்தையும் விட முக்கியமாகிட்ட. உன்கிட்ட கெஞ்சறேன். மன்னிப்பு கேக்குறேன். உன்னை மிஸ் பண்றேன். கட்டிப்பிடிக்குறேன். முத்தம் குடுக்கறேன். நம்பறேன். இத்தனைக்கு அப்பறமும் நமக்குள்ள என்ன இருக்குன்னு உனக்கு புரியல்லைன்னா, அறிவுன்னு ஒன்னு உனக்கு இருக்கா இல்லையா?” என்று அணைத்துக்கொண்டபடியே கேட்டார் கால்டன். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது. கோபமும் இருந்தது. காதல் வெறியும் தெரிந்தது.
கயலுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் இந்த வெளிப்படுத்துதலுக்கு அது சரியான நேரமில்லை என்று சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது அவளுக்கு. பெற்றவர்கள் உடல்நலன் குன்றியுள்ள இந்நேரத்தில் காதலை வெளிப்படுத்திக்கொள்வது சரியல்லவென்று நினைத்தாள். கெண்டக்கியில் இருந்தாலும் தமிழ்ப்பெண் அல்லவா!
அதனால் அவர் அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டே, “எனக்கு அறிவிருக்கா இல்லையாங்கற ஆராய்ச்சி அப்பறம் செஞ்சிக்கலாம். இப்ப சாப்பிடலாம் வாங்க. அடுத்த வேலை இருக்கு. இன்னும் 3 மணி நேரத்துல சர்ஜரி முடிஞ்சிடும். போஸ்ட்-ஆப் ஐசியூவுக்கு வந்துருவாரு. அரை நாள் அங்க அப்ஸர்வேஷன் ல வச்சிருந்துட்டு வார்ட்டுக்கு மாத்திருவாங்க. அம்மாவோட இரத்த அழுத்தத்தைக் குறைக்கனும். எல்லாரும் வந்திடுவாங்க, அவங்களையெல்லாம் கவனிக்கனும். சோ அதிகபட்சம் 4 மணி நேரம் தான் இப்ப தூங்க டைம் இருக்கு. சாப்பிட்டு படுக்கனும். வாங்க வாங்க.” என்று அழைத்தாள்.
அவள் வழிக்குத்தான் நாம் போகவேண்டுமே தவிர நம் வழிக்கு அவள் வரமாட்டாள் என்று புரிந்துகொண்ட கால்டன் சாப்பிட அமர்ந்தார்.
சாப்பிட்டு முடித்ததும் சுத்தம் செய்துவிட்டு அந்த நீளமான சோஃபாவில் அப்பாடாவென்று நீட்டிப் படுத்தார் கால்டன்.
“இங்க தங்கப்போறீங்களா!!!”
“வீட்டுக்கு போகலாமா?”
“நான் வரல்ல. நாளைக்கு 7 மணி டூட்டி. அப்பறம் அப்பாவை ஐ.சி.யூவுக்கு மாத்தினதும் போய் பாக்கனும். ஸோ வீட்டுக்கு வந்து போக டைம் இல்ல. நீங்க போய்ட்டு காலையில வாங்க”
“நீ வந்தா தான் நான் போவேன். நீ இங்க இருக்கன்னா நானும் இங்கையே இருக்கேன்.”
“இல்ல.. நீங்க எப்படி இங்க தங்க முடியும்? வசதிப்படாது!”
“உனக்கு வசதியா இருக்குமா இல்லியா?”
“எனக்கு இங்க தங்கி ரொம்ப பழக்கம் கால்டன். உங்களுக்கு சரி வராது. நீங்க கிளம்புங்க. காலையில வாங்க”
“ஏன் எனக்கு சரி வராது?”
“எதுக்கு இந்த சின்ன ரூமில சோஃபாவுல தூங்கிகிட்டு? வீட்டுக்கு போய் வசதியா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. நீங்களும் ரொம்ப டயடா இருக்கிங்க!”
படுத்திருந்தவர் அலுத்துக்கொண்டு பெருமூச்செறிந்து எழுந்தார். இடதுகையால் அவளை அணைத்தவண்ணம் வலது உள்ளங்கையினால் அவளின் இடது பக்க முகத்தைத் தாங்கினார். கட்டைவிரலால் அவளின் குழிவிழும் அந்த இடது கன்னத்தில் வரைந்தார். கயலுக்கு உள்ளுறுப்புகள் எல்லாம் உருகிப்போய்விட்டது.
“உன் கூட தங்கறதுன்னா நான் எங்க வேணுமின்னாலும் தங்குவேன். எத்தனை வருஷம் வேணுமின்னாலும் தங்குவேன்” என்று மெல்லிய குரலில் காதல் வழிந்தோடும் விதமாய்ச் சொன்னார்.
கயலின் கண்கள் கால்டனின் முகத்தில் வட்டமடித்தன. அழுத்தமானதொரு முத்தமும் அவள் கன்னத்தில் பதிந்தது.
முத்தமிட்டதும் அறைந்துவிடுவாளோ என்று பயம் வரவே நைஸாகப் பின்வாங்கி மீண்டும் சோஃபாவில் படுத்துக்கொண்டார் கால்டன்.
ஆனால் கயல் அறையும் மனநிலையிலா இருந்தாள்??!! அவள் உருகி, பொங்கி, வழிந்தோடிக்கொண்டல்லவா இருந்தாள்.
ஆனால் உண்மை உணர்ச்சிகளை மறைப்பதில் பெண்களுக்கு நிகரானவரும் உளரோ..??!!
கால்டன் படுத்த அந்த சோஃபா முனையில் அமர்ந்துகொண்டு டீபாயினை இழுத்துப்போட்டு கால் நீட்டிக்கொண்டாள்.
“படுக்கல்ல..??”
“நீங்க தான் படுத்துட்டீங்க. நான் எங்க படுக்கறது.??!!”
“இதோ.. இவளோ இடம் இருக்கே! இது போதாதா உனக்கு??!!” என்று தன் பக்கத்தில் இருந்த இடத்தினைக் காட்டினார் கால்டன்.
முறைத்தாள் கயல். அது கவுச் டைப் சோஃபா. நல்ல அகலமானது தான். இடித்துப்பிடித்து இருவர் படுக்கலாம். ஆனால் கயல் செய்வாளா??!! “குட் நைட்” என்று சொன்னாள். கால்டனும் புன்னகைத்துக்கொண்டே அறை விழவில்லை என்ற நிம்மதியோடு கண்களை மூடினார். மறுகணமே உறங்கிப் போனார்.
கயலும் உறங்கும் கால்டனைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். எவாஞ்சலினைத் திருமணம் செய்ய அவர் சம்மதிக்கமாட்டார் என்று ஊகித்தித்தான் வைத்திருந்தாள் கயல். அவர் வாயிலிருந்தே அது வெளிப்பட்டும் விட்டது. அதை நினைத்து ஆனந்தம் கொண்டாள். ஏதேனும் காரணம் சொல்லி திருமணத்தை மறுத்திருப்பார் என்று நினைத்தாள். சற்றுமுன் நிகழ்ந்த குட்டிச்சண்டையும் க்யூட்டாகத் தான் தெரிந்தது அவளுக்கு.
கட்டியணைத்துக்கொண்டு கிட்டத்தட்ட காதலை வெளிப்படுத்துவது போன்று அவர் சொன்ன வார்த்தைகளை மீண்டும் மனதுக்குள் ஓட்டிப்பார்த்து மயங்கினாள். இப்போது கிடைத்த முத்தத்தையும் நினைத்துப் பார்த்து உருகினாள். அப்படியே உறங்கியும் போனாள்.
மணி அதிகாலை 3. சர்ஜரி வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய ஐசியூவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் Prof.Dr.செலிம் கால் செய்து அறிவித்தார். காலை 8 மணிக்குக் கயலையும் முதற்கட்ட பரிசோதனை செய்ய வரச்சொன்னார்.
கயலும் சரியென்றி அழைப்பினைத் துண்டித்தாள். இந்த முழு உரையாடலுமே கால்டனுக்குத் தெரியாது. அவர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
கயலுக்கு எழுப்ப மனமில்லை. காலையில் சொல்லிக்கொள்ளலாமென்று நினைத்தாள்.
அத்தனை நேரம் அமர்ந்த நிலையில் உறங்கியதால் இடுப்பு முதுகெல்லாம் வலித்தது அவளுக்கு. அதனால் வேறு வழியின்றி கால்டன் பக்கத்தில் இருந்த இடத்தில் அவர் மேல் படாதபடி படுத்தாள். கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.
உறக்கத்தில் இருவரும் ஒருவர் அணைப்புக்குள் ஒருவர் சென்றுவிட்டனர்.
4.6- பொறாமைப்படுகிறேன்!
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.