4.8- இன்னிக்கி இங்க தங்க முடியுமா?!
ஓ.பி.டியில் இருந்து ஒரு இடைவேளையில் செலீனாவைப் பார்க்க வந்தாள் கயல். ஹன்னா இல்லை. பதிலுக்கு நிக்கின் மனைவியும் மகனும் இருந்தனர்.
கயலைப் பார்த்ததும் செலீனா பாஸிட்டிவாக உணர்ந்தார். ஏனென்று அவருக்கே புரியவில்லை. புன்னகை அரசியாய் உள்ளே வந்த கயல், கோப்புகளை ஆராய்ந்தாள்.
கெல்லி கூப்பரின் நிலையை விளக்கினாள். நம்பிக்கையூட்டினாள். உற்சாகப்படுத்தினாள். அங்கிருந்த நிக் கூப்பரின் 10 வயது மகனுடன் பேசினாள். அவன் சிரித்த முகமாய் இருந்தான்.
“தாத்தா எப்படி இருக்காரு? அவருக்கு இப்படி ஆனது நினைச்சு நான் ரொம்ப வருத்தப்படறேன்” என்று சிரித்த முகத்தோடு சொன்னான்.
“உன்னப்போல இவனுக்கும் சிரிச்ச முகம்” என்று செலீனா சொன்னார். ஆனால் கயலின் முகம் சந்தேக ரேகையைப் படர விட்டது. மேற்கொண்டு அவள் பேச்சை வளர்க்கவில்லை. ஓய்வெடுங்களென்று சொல்லிவிட்டு வெளியே செல்ல நடந்தாள்.
“உனக்கு எப்ப டூட்டி முடியும்?”
“3.. ஏன்?”
“வீடு எங்க?”
“ஏன் கேக்குறீங்க!?”
“என்னோட இங்க தங்குறியா? இன்னிக்கி மட்டும்?” என்று குழந்தை போல் கேட்டார் செலீனா.
செலீனாவின் மருமகளுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்தாள். தன் மாமியாரா ஒரு சாதாரண பெண்ணிடம் கெஞ்சிக் கேட்கிறார் என்று வியப்படைந்தாள்.
“நானா?”
“ஆமா.. நீ தான். டூட்டி முடிஞ்சதும் வாயேன். நாளைக்கு காலையில இங்கிருந்து டூட்டி போயிக்கோ..”
ப்ளீஸ் என்று கண்கள் கெஞ்சின.
“சரி. 3.30 கு வர்றேன்.” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டு வெளியேறினாள் கயல்.
நிக்கின் மனைவியிடம் 3 மணிக்குக் கிளம்புமாறு உத்தரவிட்டார். மேற்கொண்டு எதுவும் சொல்லவோ கேட்கவோ முடியாது என்பதால் அவளும் ஆமோதித்தாள். ஆனால் தன் கணவருக்குக் குறுஞ்செய்தியில் விஷயத்தைத் தெரியப்படுத்தினாள்.
கயல் டூட்டி முடியும் நேரத்திற்குச் சற்று முன்னதாக கால்டனுக்குக் கால் செய்தாள்.
“நீங்க 3 மணிக்கு வரவேண்டாமின்னு சொல்லத்தான் கூப்பிடேன்”
“நான் ஏற்கனவே வந்து உன் ரூமில தான் காத்துட்டிருக்கேன்.”
“எதுக்கு அதுக்குள்ள வந்திங்க?”
“நீ ஏன் வர வேண்டாங்கற? அதைச் சொல்லு முதல்ல.”
“ரூமுக்கு வந்து சொல்றேன்” என்று அணைப்பைத் துண்டித்தாள்.
கயலின் அறையில் காத்திருந்த கால்டனிடம், “நான் இங்க தங்கறேன் இன்னிக்கி” என்றாள்.
“ஏன் இன்னிக்கி என்ன? அப்பாவுக்கு மயக்கம் தெளியல்லையா?”
“தெளிஞ்சிடுச்சு. அவருக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. ஐ.சி.யூல இருக்காரு.”
“அப்பறம் என்ன?”
“நான் உங்க அம்மாவோட இன்னிக்கி தங்கறேன்”
“எது? திருப்பி சொல்லு..”
“உங்க அம்மாவோட தங்கறேன்”
“கயல்.. அவங்க விரும்ப மாட்டாங்க”
“அவங்க தான் தங்க சொன்னாங்க”
“வாட்!!!”
“ஆமா. அதுனால தான் தங்கறேன்”
அதிர்ச்சியானார். நம்பவே முடியவில்லை அவரால்.
“வேண்டாம் கயல். நம்ம போகலாம் வா”
“ஏன் வேண்டாம்?”
“எனக்கு விருப்பம் இல்ல”
“உங்க அம்மா கூட தானே தங்க போறேன்!!”
“அதான் பயமா இருக்கு”
“பயமா இருக்கா!!!!!!!!”
“ஆமா. உன்னை அவங்களோட தங்க அனுமதிக்குற அளவு நான் அவங்களை நம்பல்ல”
“என்ன இப்படில்லாம் சொல்லுறீங்க!”
“நிஜமா தான் சொல்றேன். போகலாம் வா”
“இல்ல இல்ல. நான் தங்கறேன்னு வாக்கு கொடுத்துட்டேன். நான் இங்கையே இருக்கேன். அப்படி நீங்க பயப்படுற அளவு அவங்க என்ன தான் செய்யுறாங்கன்னு பாக்கறதுக்காகவாவது நான் இங்க தான் தங்குவேன்.” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள் கயல். கால்டனுக்குக் கோபம் வந்தது. கிளம்பிச் சென்றுவிட்டார்.
***
செலீனாவிடம் கயலுடன் தங்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு நிக் சொன்னார்.
“அந்த இண்டியன் டாக்டர் லேடி யாருன்னே தெரியாது. உங்க பாதுகாப்புக்கு இது ஆபத்து மா. அவளைக் காலையில பார்த்த அப்பவே சுத்தமா பிடிக்கல்ல எனக்கு. டீசென்ஸி இல்ல மரியாதை இல்ல. அவ கூட போய் தங்கறேன்னு சொல்றீங்க!!!”
“இன்னிக்கி கயல் தான் என்கூட இருக்கப் போறா. வேற ஏதாவது சொல்லனுமா?”
மறுவார்த்தை பேசாமல் பேச முடியாமல் வெளியேறினர் நிக் குடும்பத்தினர். 3.30க்குக் கயல் சொன்னாற்போல் செலீனாவின் அறைக்குத் தங்குவதற்கு ஏற்றவாறு வந்துவிட்டாள்.
கயலுக்குள் பெரியதொரு மனமாற்றத்தினை உண்டுபண்ணப் போகும் நேரம் ஆரம்பமானது.
4.9- தடுமாறிய கால்டன்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.