கார்த்தி முடிவைத் தேடிக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் சென்று விட, காளிதாஸனுக்கு சட்டென்று ஒரு பதட்டம் ஒட்டிக்கொள்ள
“கார்த்தி! நில்லுங்க” என்று குரல் கொடுத்தபடியே பின்னால் செல்ல, அவளோ நேற்றிரவு இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவன் சத்தம் கேட்டு, சிவகாமி, நித்தி, கவின், வாலி எல்லாம் ஓடிவந்தனர்.
“கண்ணா, என்னாச்சு?” என்று சிவகாமி கேட்க
“ம்மா, பேசிட்டு இருந்தோம். நான் முடியாதுன்னு சொல்லவும் இவங்க..முடிவு தேடிக்கிறேன்.. அப்படி” என்று டென்ஷனாகப் பேசியவன்
“கார்த்தி கதவைத் திறங்க, முட்டாள்த்தனமா எதுவும் செய்யாதீங்க” என்று கத்தினான்.
அவன் சொன்னதில் எல்லாரும் பதறிப்போய் கதவைத் தட்டினர்.
காளிதாசன்”கார்த்தி, இப்ப திறக்க போறீங்களா இல்லையா?” என்று குரல் கொடுக்க, கார்த்தி கதவைத்திறக்கவும், காளிதாஸனின் கண்கள் ஃபேனைப் பார்க்க, அதில் கடுப்பாகிவிட்டாள் பெண்.
“என்னை முட்டாள்னே முடிவு பண்ணிட்டீங்களா நீங்க?” என்று அவனிடம் கத்தினாள்.
அதற்குள் சிவகாமி
“என்னமா நீ? ஏன் இப்படி?” என்று அவரும் பேச பொறுமையிழந்தவள்
“மா, நீங்களும் ஏன்?” என்று அவரிடம் கேட்டவள், காளிதாஸனைப் பார்த்து
“என்ன முட்டாள்த்தனமான முடிவு? செத்துடுவேன் நினைச்சீங்களா? எஸ், நினைச்சிருக்கேன். இப்போ இல்லை, உங்களை முதல் முறை பார்த்துட்டு போன பின்னாடி, ஆனா இப்போ ஏன் நான் சாகப்போறேன்?” என்று அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து கேட்க காளிதாஸன்
“நீங்கதானே அழுதுட்டு ஏதோ முடிவு எடுக்கப் போறேன்னு சொன்னீங்க?” என்றான்.
“சொன்னா? சொன்னா என்ன?” என்றாள் எரிச்சலுடன்.
இவர்கள் பேசட்டும் என்று நித்திலா எல்லாரையும் இழுத்துக் கொண்டு ஹாலுக்குப் போய்விட, அறைக்குள் நின்றபடி கதவருகே கார்த்தியும், வெளியே காளிதாசனும் பேசினர்.
காளிதாசன் கார்த்தியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை ஆராயும் பார்வைப் பார்க்க,
“என்ன பதில் இல்லை? உங்களைப் பிடிச்சிருக்குன்னு ஊர் முன்னாடி சொல்லி நான் செத்துப்போய்ட்டா உங்களை அது பாதிக்கும்ன்ற அறிவு கூட இல்லாதவளா நான்? ஓகே! எனக்கும் அறிவு இருக்குன்னு உங்களுக்குப் ப்ரூவ் பண்ற சான்ஸ் எனக்குக் கிடைச்சதில்லை. நீங்க என் வீட்ல இருந்தவங்களைப் பத்தி சொன்னப்போ நான் நம்பல, அது குடும்பத்து மேல நம்ம வைக்கிற நம்பிக்கை.”
“குடும்பம்ன்றது நாம தேடிக்கிறது உறவில்லை, தானா அமையறது. பொறந்ததிலருந்து அவங்களைப் பார்க்குறோம். அந்த பாதுகாப்புல வளரும்போது அவங்களை எப்படி சந்தேகப்பட முடியும்? வெளியாட்கள் கிட்டதான் அந்த எச்சரிக்கை எல்லாம் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி ஏமாத்தினா அவங்கதானே தப்பு? நம்பின நான் முட்டாளா?” என்று உணர்ச்சிவசத்தில் கத்த
“கார்த்தி! ரிலாக்ஸ்” என்று காளிதாஸன் சொல்ல, அவள் கேட்கவில்லை.
அறைக்குள் அவளை இழுத்துப்போனவன் அங்கிருந்த கட்டிலில் உட்காரவைத்து, தண்ணீரை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் குடித்தாள்.
“உங்களைப் பிடிச்சிருக்கு சொல்லி ஒரு மணி நேரத்துல சாகற அளவுக்கு என்னோட காதல் ஒன்னும் முட்டாள்த்தனமானது கிடையாது காளிதாஸ், நானும் கோழை இல்லை. அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” என்றாள் அழுத்தமாக.
ஏனோ கார்த்தி சொன்ன காதல் விட, இந்த அறிவும் தெளிவும் அவனுக்குப் பிடித்திருந்தன. மீண்டும் அவளாகவே நீரை எடுத்துக் குடித்துவிட்டு
“ஓகே! எனக்குப் புரியுது பிடிச்சிருக்குன்னு சொல்லி உங்களைக் கம்பல் செய்றது தப்பு. நானும் ஒருத்தரை இப்படி வேண்டாம்னு சொல்லிட்டேன், அந்த நவீன் நிறைய சாபம் கொடுத்துட்டான் போல” என்று தன் போக்கில் சொன்னவள் அவனின் பார்வை தன் மீதே இருப்பது உணர்ந்து
“என்ன?” என்று பார்த்தாள்.
“தப்பா ஜட்ஜ் பண்ணிட்டேன், ஸாரி. ஆனா அழுதுட்டே முடிவு தேடிக்கிறேன் சொன்னா என்ன நினைக்குறது?” என்று கேட்டவன் அவளுக்கு முன்னே ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டு உட்கார்ந்தான்.
“அழுதா? ஒரு டென்ஷன்ல அழுதேன். நீங்க என்னை கன்சீடர் செய்யாம வேண்டாம்னு சொல்றதுலயே இருக்கீங்க, அது கொடுத்த வருத்தம். அழுதேன்” என்ற கார்த்தி
“முடிவு தேடிக்கிறேன்…அது.. சாகறதான் முடிவா?” என்று அவனைப் பார்க்க
“என்ன முடிவு நீங்களே சொல்லுங்க?” என்றான் அவனும் அவள் கொடுத்த டென்ஷன் எல்லாம் குறைந்தவனாக. முகத்தில் பழைய புன்னகை மீண்டிருந்தது.
“அது நான் சொன்னதை ப்ரஸ்ல மாத்தி சொல்லிடலாம் நினைச்சேன்”
“என்ன மாத்தி சொல்லுவீங்க?”
“ம்ம், நான்தான் இவரை லவ் பண்றேன். இவர் பண்ணலன்னு க்ளாரிஃபை பண்ண நினைச்சேன்” என்றதும் இன்னும் அவனிடம் விரிந்த புன்னகை.
“தென்?” என்று கேட்க
“நானும் அவசரப்பட்டுட்டேன், நான் ஃபீல் பண்ணீனா நீங்களும் ஃபீல் செய்யனும் அவசியமில்லை. உங்களுக்கு டைம் கொடுக்காம நான் ரொம்ப பேசிட்டேன். நீங்க டைம் எடுத்து உங்க முடிவு சொல்லுங்க” என்று கார்த்தியும் நிதானமாய்ப் பேசினாள்.
முதல்முறை அவன் பார்த்த பாவை மீண்டிருந்தாள், சின்ன புன்னகை. நிதானம் நிறைந்த ஆளுமை. உணர்ச்சிகளை அழகாய் அடக்கி அறிவாய்ப் பேசிய அந்த கார்த்தியை மீண்டும் கண்டான்.
“எவ்வளவு டைம்? எத்தனை நாள்?” என்று குரலில் கிண்டலுடன் கேட்டான் காளிதாஸன்.
“எவ்வளவு நாள், எவ்வளவு வருஷம் ஆனாலும் சரி எனக்கு உங்க மேல இருக்க இந்த காதல், ஃபீல் போகாது. அப்படி உங்களுக்கு என்னை மாதிரி தோணலனாலும் அது தப்பில்லை. ஸோ காத்திருப்பேன்” என்றாள்.
“காத்திருப்பீங்களா? இதுக்கு மேல வெயிட் பண்ணினா மேல்மாடி வைட் வாஷ் பண்ணீன மாதிரி ஆகிடும் கார்த்தி. மொத்தமா நரைச்சிடும்” என்று சொல்லி அவன் தலையைக் கோதிக்கொண்டு சிரிக்க
“நரைக்கிறதுதான் உங்க கவலை. நான் நினைக்கிறதை யோசிக்க மாட்டீங்க இல்லையா?” என்று கார்த்தி அவனை கேட்க
“எனக்கு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, நேத்து அழுதுட்டே என்னை வந்து பிடிச்ச பொண்ணா இதுன்னு” என்று காளிதாஸன் கிண்டலாய் பார்க்க
“உங்களை மறுபடி கட்டிப்பிடிச்சுக் காட்டுறேன் அந்த பொண்ணு நானான்னு தெரிஞ்சிடும்” என்று முறைத்துகொண்டு சொல்ல, இப்போது வாய் விட்டு சத்தமாய் சிரித்தான்.
“கார்த்தி! யூ ஆர் அமேசிங்!” என்று அவளைப் பார்த்து பார்த்து அவள் பேசியதை நினைத்து நினைத்து சிரித்தான்.
அவன் சிரிப்பில் இவளின் இறுக்கங்களும் கூட மொத்தமாய்க் காணாமல் போய், காளிதாஸனின் மீதான காதல் அவளைக் காற்றில் மிதக்க வைக்க, அவனின் சிரிப்பை ரசித்தாள்.
அவனை ரசிக்கும் அவளைப் பார்த்து,
“கார்த்தி, எனக்கு இந்த மேரேஜ் ப்ரோபோஸல் எல்லாம் எதிர்ப்பார்க்காத ஒன்னு. ஐ வாஸ் நாட் ரெடி! என்னோட கவனம் முழுக்க அரசியல்தான். எனக்கு உங்க முடிவு சரியா தெரியல. ஆனா உங்க முடிவை சரியாக்கிக்கலாம்னு தோணுது” என்றான் தெளிவாக.
அதில் கார்த்தியும் அவனை புன்னகையுடன் பார்க்க
“நான் யோசிக்கனும், ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க” என்றவன் எழுந்து போய்விட்டான்.
வெளியே சென்றவன் நித்திலாவிடம்
“நித்தி, நீ கார்த்தியோட மாமா வீட்டுக்குப் போய்டுறியா? கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும்” என்றதும் நித்தி கேள்வி கேட்க
“அவங்க என்னைப் பிடிச்சிருக்கு சொல்லியிருக்காங்க, எப்படி ஒன்னா ஒரே வீட்ல இருக்க? அதைவிட நான் வீட்ல எப்பவும் இருக்க மாட்டேன். அங்கன்னா மாமாவோட செக்யூரிட்டி இருப்பாங்க. அதுதான் சேஃப்” என்றான்.
“கார்த்தி சொன்னதுக்கு உன்னோட பதில் என்ன?” என்று கவின் கேட்க
“யோசிக்கிறேன் டா. படுத்தாதீங்க எல்லாம்” என்றவன் அம்மாவைப் பார்த்து
“ம்மா, இப்போ நான் கட்சி ஆபிஸ் போகனும். நீங்க இங்கயே இருங்க, நாளைக்குப் போகலாம்” என்று சிவகாமியையும் தங்க சொன்னான்.
கட்சித்தலைவரும் மகாதேவனும் இவனிடம் பேச, இரண்டு நாட்களில் எல்லாம் தெளிவாய் சொல்வதாக சொல்ல, மீடியா ஆட்கள் எல்லா இடத்திலும் பிடித்துக்கொள்ள, இவன் பதில் பேசாமல் இருக்க, இஷ்டத்துக்கு எல்லாம் பேசினார்கள்.
இரவு வீட்டிற்கு வந்தவன் அம்மாவைப் பார்க்க, சிவகாமி சோஃபாவில் உட்கார்ந்திருக்க, அவர் காலருகே உட்கார்ந்தவன் அவரின் கையைப் பிடித்துக்கொண்டான்.
“ஒன்னுமே சொல்லாம இருக்கீங்கம்மா?” என்று அவன் பார்க்க
“என்ன சொல்லணும்? எனக்கு வயசாகுது, சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோ, எனக்குப் பேரப்பசங்களைப் பெத்துக் கொடு அப்படி சொல்லனுமா கண்ணா” என்றதும் அம்மா மகன் இருவருக்குமே சிரிப்பு.
“அப்படி சொல்ற ஆள் இல்லை எங்கம்மா” என்று காளிதாஸன் பெருமையாய்ச் சொல்ல
“உன்னோட வாழ்க்கை கண்ணா இது, எங்க மூலமா உலகத்துக்கு வந்த அவ்வளவுதான். எங்க ஆசையை உன் மேல திணிக்கிறதை நானோ அப்பாவோ விரும்ப மாட்டோம். உண்மையை சொல்லணும்னா எனக்கு என் கண்ணாவை நினைச்சு பெருமைதான். உன் வயசுல எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தைங்க ஸ்கூல் போறாங்க. அதுக்காக நீயும் அதையே செய்யனும் சொல்லமாட்டேன். “
“கல்யாணம்ன்றது மட்டும் வாழ்க்கை இல்லை கண்ணா. அதுவும் பொதுவாழ்க்கையில இருக்கவங்க கல்யாணம் செஞ்சா, அது ஒரு கட்டத்துல சுயநலமா மாறிடும். உலகம் ரொம்ப பெருசு, என் வீடு, என் குடும்பம்ன்றது மட்டும் வாழ்க்கை இல்லை. எல்லாராலையும் அப்படி இருக்க முடியாது, அப்படி இந்த கல்யாணம், குடும்பம்னு சமூக அமைப்புகள் உள்ள வராதவங்க மேல தப்பு இல்லை. கல்யாணம் செய்யாம இருந்தா கூட என் மகனால நிறைய பேர் நல்லா இருப்பாங்க எனக்குத் தெரியும்.”
“இதுவரைக்கும் இது உன்னோட வாழ்க்கை உன் இஷ்டப்படி இருக்கு, கல்யாணம் செஞ்சுட்டா இன்னொருத்தருக்காகவும் யோசிக்கனும், இன்னொருத்தர் வாழ்க்கை கூட உன் வாழ்க்கையும் சேர்ந்து அது உங்க வாழ்க்கை ஆகிடும். எந்த கட்டாயமும் இல்லை, ஊர் உலகம் சொல்லுதுன்னு இல்லாம உன் மனசுக்குப் பிடிச்ச முடிவா எடு. என் பையன் தப்பு செய்யமாட்டான் எனக்குத் தெரியும்” என்றார் சிவகாமி பெருமையாக.
” உனக்கு ஒரு அன்பான, மரியாதையான வாழ்க்கைத்துணை வரனும்னு அம்மாவுக்கு ஆசை.” என்று மகனின் தலையை வருடிவிட்டார்.
“ம்மா, கார்த்தி ராஜரத்னம் பொண்ணு” என்றதும்
“அப்பா என்ன சொல்லியிருக்கார் கண்ணா? கிரி எப்பவும் மனுஷங்களை அவங்க செயலுக்காக, சொல்லுக்காக, மனசுக்காக, குணத்துக்காக மதிக்கனும் சொல்லுவார். இந்த குடும்பம், பதவின்னு அதெல்லாம் பார்க்கக் கூடாது சொல்லுவார். உனக்கு அந்த பொண்ணு மேல இஷ்டம்னா கல்யாணம் செஞ்சுக்கோ. வேற எதுவும் யோசிக்காத” என்றார் சிவகாமி.
“இஷ்டமெல்லாம் இல்லைம்மா. இதுவரைக்கும் கல்யாணம் என்னோட ஐடியாவே இல்லை, இப்போ அப்படி யோசிச்சா கார்த்திதான் மனசுல வராங்க” என்று சொன்னவன் கொஞ்சம் தயங்கி
“ஆனாலும் சின்னப்பொண்ணும்மா” என்றான்.
சிவகாமியோ சிரித்தவர் “இன்னொரு தடவ இப்படி சொல்லாத, அந்த பொண்ணை வற்புறுத்தியா கல்யாணம் செய்ற? அவளுக்கு விருப்பமிருக்கு. அந்த பொண்ணு ஸ்கூலோ காலேஜோ படிக்கல சின்னப்பொண்ணு சொல்ல. அவ்வளவு தெளிவா பேசுறா, இதுல நான் என் மகன்னு நினைச்சே பாசம் வைச்ச மாதிரி அந்தம்மாவுக்கு உன் மேல லவ்ஸாம்.. எங்கிட்டயே அவ்வளவு தைரியமா சொல்றா” என்று சொல்லி சிவகாமி சிரிக்க,
“சிவகாமி மருமகளாச்சே, அப்படித்தான் இருப்பாங்க” என்று காளிதாஸன் சொல்லவும்
மகனின் நெற்றியில் முத்தமிட்ட சிவகாமி “ரொம்ப சந்தோஷம் கண்ணா, என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி அந்த பொண்ணை உன்னை விரும்புறேனு சொல்லிடுச்சேன்னு அம்மாவுக்கு ஒரே யோசனை. உன் பொண்டாட்டியை சீக்கிரம் வீட்டுக்குக் கூப்பிட்டுக்கோ. நாளைக்கே அண்ணங்கிட்ட இதைப் பேசுறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார் சிவகாமி.
அம்மாவிடம் பேசிய பின் காளிதாஸன் தெளிந்த மனதுடன் உறங்கச்சென்றான். அடுத்த நாள் மாலையில் மகாதேவனின் இல்லத்துக்குச் சென்றவன் அவரிடம் விஷயத்தை சொல்ல, அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.
அவர் உடனே அவர்கள் கட்சித்தலைமைக்கு சொல்ல, அவர்களுக்கும் மகிழ்ச்சி. இருக்காதா? எவ்வளவு பெரிய அரசியல் ஆதாயம்? மகாதேவனிடம் விஷயத்தை சொன்னவுடன் அவர் மகளை அழைக்க, அவளுக்கோ ஆனந்தம் அகம் தாண்டி ஓடியது.
“தாஸேட்டா! நிஜமா உனக்குக் கல்யாணமா?” என்று கேட்டு கேட்டு பூரித்தவள் வேகமாக கார்த்தியிடம் இந்த செய்தியைப் பகிரப்போனாள்.
கார்த்தியை வேறொருவர் வீட்டில் இருக்கிறோம் என்று உணர்வே வர விடாமல் பார்த்துக்கொண்டாள் நித்திலா.
“ஹே! கார்த்தி! உனக்கு டும் டும்! தாஸேட்டா கல்யாணத்துக்கு ஒத்துட்டார்..” என்று அவளைப் பிடித்து சுற்ற
“ஆமா, அறிவில்லைதான். இந்தம்மாவுக்கு அண்டா அண்டாவா இருக்குது, அதான் என் ப்ரண்ட் வைச்சுக் குப்பைக் கொட்டுறான். நான் சொல்றதுக்குள்ள நீ ஏன் லூசே அவசரமா வந்து உளறின?” என்று நித்தியின் தலையில் காளிதாசன் குட்ட எல்லாவற்றையும் ரசித்திருந்தாள் கார்த்தி.
“கார்த்தி உன்னை பயங்கரமா சைட் அடிக்கிறாடா, நீ பேசு. நான் கொறச்சு டீசண்ட் கேர்ள். உன்னை மாதிரி இல்லை” என்று அவனை வம்பு செய்து நித்தி போக காளிதாஸ் கார்த்தியின் பார்வைக் கண்டு என்ன என்று சைகையில் கேட்க
“இந்த காளிதாஸை நான் பார்த்ததே இல்லை” என்றாள் புன்னகையுடன்.
“அது இவங்களோட மட்டும்தான், நமக்குப் பிடிச்சவங்ககிட்ட அப்படித்தானே இருப்போம்” என்று அவன் கேட்க
“எனக்கும் இந்த காளிதாஸ் வேணும்” என்றாள் அவனைப் பார்த்து.
“அடடே! கார்த்திக்கு இந்த காளிதாஸ் போதுமா? ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப்?” என்று அவன் குறும்பாய்க் கேட்க
“இல்லை, இல்லை” என்று அவசரமாய் மறுத்த கார்த்தியைப் பார்த்து சிரித்தவன்
“காளிதாஸ் மொத்தமாவே தன்னை இந்த பொண்ணுக்குக் கொடுக்கலாம்னு டிசைட் பண்ணிட்டான்” என்றான்.
ஒரு உணர்ச்சிபெருக்கான நிலை உள்ளத்தில் அவளுக்கு. கார்த்தியின் கண்கள் கலங்கிவிட
“என்னாச்சு கார்த்தி?” என்றான் புரியாது.
“அது… தெரியல…! இரண்டு நாளாதான் இந்த ஃபீல் எல்லாம். ஆனா உங்களை அவ்வளவு பிடிக்குது எனக்கு. சொல்லவே முடியல, அதான்” என்று கண்ணீரைத் துடைக்க
“எங்கிட்ட சொல்லத்தானே கஷ்டம், ப்ரஸ் பீப்பீள் வந்தா கார்த்திக்குத் தைரியம் வந்துடும். கூப்பிடுவா?” என்று அவன் கேட்ட விதத்தில் கார்த்திக்கு வெட்கம் மலர்ந்தது.
“கார்த்தி! லாஸ்ட் ஒரு தடவ சொல்றேன். நமக்குள்ள நிறைய வேற்றுமை இருக்கு. உன்னோட எக்ஸ்பெக்டெஷன் எல்லாம் என்னால தீர்க்க முடியுமா தெரியல, இன்னும் கூட யோசிச்சிகோ” என்றதும்
“என்னோட எதிர்ப்பார்ப்பு உங்க அன்புதான், வேறொன்னுமில்லை. சும்மா இப்படி என்னை யோசிக்க சொல்லாதீங்க, உங்களுக்கு நான் டைம் கொடுத்தது உங்க முடிவை யோசிக்க, என் முடிவை மாத்த இல்ல” என்றாள் அழுத்தமாக.
“ஓகே கார்த்தி, எனக்கு வேலை இருக்கு, கிளம்புறேன்” என்று சொல்ல கார்த்தி அவனிடம்
“ஒரு நிமிஷம்! நான் உங்களை ஃபோர்ஸ் செய்யலதானே?” என்று தயக்கமாய்க் கேட்க, அவள் முகம் பார்த்தவன்
“என்னை ஃபோர்ஸ் செய்யலாம் முடியாது கார்த்தி. கல்யாணத்துக்காக கார்த்தின்றதை விட கார்த்திக்காக இந்த கல்யாணம். அதுதான் நிஜம்! உன்னோட அளவு எனக்கு லவ் இருக்கா தெரியல, நிச்சயம் ஒருவகையில உன்னைப் பிடிச்சிருக்கு. குழப்பிக்காத கார்த்தி கண்ணா” என்று கன்னம் தட்டிவிட்டு அவன் போக, இங்கே காரிகைக்குள் கார்கால மழை!
இன்னும் இரண்டு நாளில் திருமணம். கார்த்தி நித்திலாவின் வீட்டில் இருக்க, என்னவோ கார்த்திக்கு முழுதாய் ஒரு மகிழ்ச்சி இல்லை. காளிதாஸனின் மனைவியாகப்போகிறாள், அது நிச்சயம் சந்தோஷமே! முதல்முறை அவனைக் காணும்போது காளிதாஸன் என்பவன் அவள் வாழ்வாகிடுவான் என்று நினைக்கவில்லை. காளிதாஸனின் மீதான பிடித்தம் அதில் மாற்றமில்லை.
ஆனால் வீட்டை நினைக்க மனதில் பாரம். அப்பாவும் அண்ணனும் சரியானவர்களாக இருந்திருக்கக் கூடாதா என்று தவித்தது மனது. எப்படியெல்லாம் நடக்க வேண்டிய நிகழ்வு என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. காளிதாசனிடம் பேசக் கூட நேரமில்லை, அவனுக்கு அவ்வளவு வேலைகள். விருப்பம் சொல்லிப்போனவன் தான், பார்க்கக் கூட இல்லை.
எல்லாம் யோசித்து தனிமையில் கார்த்தி இருக்க, நித்தி காளிதாசனுக்குப் போன் செய்து,
“அவ ஒரு மாதிரி டல்லா இருக்கா, நீ உன்னோட வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துட்டுப்போ, கேட்டைக் கூட திறந்தே வைச்சிருக்கேன்” என்று அவனுக்கு அடிக்கடி போன் செய்து நினைவூட்டி வரவைத்தாள்.
வந்தவன் கார்த்தி இருந்த அறைக்கு வெளியே நின்று அவளை அழைக்க, அவனை எதிர்ப்பார்க்காத சந்தோஷத்தில் மனம் நிறைய, அதுவரை அழுதிருந்த கண்களைத்தான் அவன் கண்டான்.
“என்ன கார்த்தி? ஏன் அழுகை?” என்று காளிதாஸ் கவலையாய்க் கேட்க
“ஒன்னுமில்ல, வீட்டு ஞாபகம்” என்று சொல்லும்போதே மீண்டும் நீர் சேர
அவ்வளவுதான் காளிதாஸன் பொங்கிவிட்டான்.
“இங்க பாரு கார்த்தி! அரசியல் நாகரீகத்துகாக எனக்குப் பிடிக்காதவங்களா இருந்தாலும் பேசுவேன், அதுக்காக அவங்களைக் குடும்பமா நினைக்கிறதோ அவங்களோட உறவு வைச்சுக்கறதோ என்னால நிச்சயம் முடியாது. உனக்குப் புரியும் நினைக்கிறேன், இந்த கல்யாணம் கார்த்தியாயினின்ற பொண்ணை எனக்குப் பிடிச்சதால. ஆனா ராஜரத்னம் மகளா நீ இருக்கணும்னு நினைச்சா இந்த கல்யாணம் நிச்சயம் நமக்குள்ள சரிவராது. உன் முடிவை யோசிச்சிக்கோ” என்றான் கோபத்துடன்.
சொல்லிவிட்டு அவன் நிற்காது சென்றுவிட கார்த்தி அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.