கார்த்தியும் காளிதாஸனும் காலை உணவு முடிக்க, கார்த்தி அவனிடம்
“பூஜை ரூம் இங்க இல்லையா?” என்று வீட்டின் கீழ்த்தளத்தைச் சுற்றிப்பார்த்தபடி கேட்டாள்.
“அவசியப்படல அதனால வைக்கல, நான் தெரிஞ்சவங்களை வர சொல்றேன். எங்க உனக்கு பூஜை ரூம் வேணுமோ வைச்சிக்கோ, ஆனா அந்த டோர் தாண்டக் கூடாது, தட்ஸ் அஃபிஷியல்” என்றான்.
“ஒரு சாமி போட்டோ கூட இல்லையா?” என்று கார்த்தி மீண்டும் கேட்க
“ஹே! கடவுள் தூண், துரும்பு எல்லாத்திலேயும் இருக்கார்” என்று அவன் கிண்டலாய் சொன்னதை அவள் உண்மை என்றே நினைத்தாள்.
“எனக்கு ஆபிஸ் ரூம் வேணும், அதே நேரம் வீடு கூடவே இருந்தா நல்லா இருக்கும் தோணிச்சு, என்னோட ரூம், ஐ மீன் நம்ம ரூம் மட்டும்தான் என் சாய்ஸ்படி செட் அப் பண்ணினது, மத்தபடி வீட்ல இந்த ஹால் தவிர எல்லா இடமும் சும்மா இருக்கு. உனக்குப் பிடிச்சபடி நம்மை வீட்டை ரெடி பண்ணிக்கோ கண்ணா” என்றான்.
தம்பதிகளாக இருவரும் சென்று கடவுளை வணங்க, அவனின் தொகுதிக்கு உட்பட்ட கோவில் அது. ஆனாலும் அங்கு சென்றதே இல்லை அவன். கோவிலுக்கு என்று சொல்லி ஏதேனும் உதவிகள் கேட்டால் வேறு வழியின்றி செய்து கொடுப்பான். அவனை வரும்படி அழைத்தால் அன்று வேலை இருக்கிறது என சொல்லி மறுத்துவிட்டு வேறு ஆட்களை அனுப்பிவைப்பான்.
வாலி கோவில் அலுவலகத்தில் சென்று இவன் வந்திருப்பதை சொல்ல, எம்.எல்.ஏ என்றதும் அமோக கவனிப்புதான். காளிதாசனுக்கும் கார்த்திக்கும் மாலை எல்லாம் கொடுத்து, ஸ்பெஷல் தரிசனம். கார்த்தி ஒவ்வொரு ப்ரகாரமாய் சுற்றிவர, இவனும் கூட நடந்தான். சாமி தரிசனம் முடியவும்
“கவி வீட்டுக்குப் போ வாலி” என்று காளிதாஸன் சொல்ல, கார்த்தி அவனிடம்
“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.
“எப்படி கண்டுபிடிச்ச?” என்று இவன் சிரிப்புடன் கேட்க
“கடவுள் மேல நம்பிக்கை இல்லாம இல்லை, கடவுள்னு ஒருத்தர் இருக்கார்ன்ற நம்பிக்கையே எனக்கில்லை” என்ற கணவனை வித்தியாசமாகத்தான் பார்த்தாள் கார்த்தியாயினி. அவள் வீட்டில் எல்லாருக்குமே கடவுள் பக்தி உண்டு. அவளுக்குத் தெரிந்து யாரும் இவனைப்போல் நாத்திகவாதி இல்லை.
“ஏன் இப்படி சொல்றீங்க? கடவுள்தானே நம்மை படைச்சார்?” என்று கார்த்தி தாங்காமல் கேள்வி கேட்க
“அவர் வந்து சொன்னாரா நான் படைச்சேனு?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
“சும்மா விதாண்டாவாதம் செய்யாதீங்க, ஏன் சாமி கும்பிட மாட்டேங்கிறீங்க?”
“அதான் சொன்னேனே எனக்கு நம்பிக்கை இல்லை”
“அப்போ ஏன் கோவிலுக்கு வரமாட்டேன் சொல்லல நீங்க?”
“நான் கோவிலுக்கு வந்தது கடவுளுக்காக இல்லை கார்த்திக்காக, முதல்தடவ எங்கிட்ட கேட்கிற, எப்படி முடியாதுன்னு சொல்ல சொல்ற?” என்று காளிதாஸன் அவளைப் புன்னகையுடன் பார்க்க
இவளோ குழப்பமாய்ப் பார்த்து “அப்போ இனிமே வரமாட்டீங்க அப்படித்தானே?” என்று கேட்டாள்.
“உனக்கு நான் வரது சந்தோஷம்னா முடியும்போதெல்லாம் உனக்காக வருவேன். என்னோட நம்பிக்கை எனக்கு, உன்னோட நம்பிக்கையில நான் தலையிட மாட்டேன்” என்றான்.
“கடவுள் காத்து மாதிரி நம்மை சுத்தி இருப்பார், கடவுளைக் கண்ணாலப் பார்த்துதான் நம்புவேன்னு விவாதம் செஞ்சா, காத்தைப் பார்க்க முடியுமா? அப்படித்தான்” என்று கார்த்தி தன் கணவனுக்குக் கடவுள் பக்தி இல்லையே என்ற ஆற்றாமையில் பேச
“அப்போ வீட்லயே கும்பிட வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு தூரம் வரனும்?” என்றான் கொஞ்சம் நக்கலுடன்.
அவனின் நக்கலில் கடுப்பானவள் “அப்புறம் ஏன் நம்ம வீட்டு வெளியே குட்டி கோவில் மாதிரி வைச்சிருக்கீங்களாம்?” என்றாள் முறைப்புடன்.
“அது மகாதேவன் மாமா பண்ணின வேலை. அந்த இடம் அவர் எனக்காகக் கொடுத்தது, அவரோட நம்பிக்கை அங்க சாமி சிலை இருந்தா நல்லா இருப்பேன்னு. அவருக்காக ஒத்துக்கிட்டேன்” என்றதும்
“பாருங்க, கடவுள் உங்களை எவ்வளவு நல்ல நிலைமையில வைச்சிருக்கார், அதுக்காகவாச்சும் நன்றியோட இருக்க வேண்டாமா?” என்று கார்த்தி கேட்டுவிட, கை நீட்டி அவள் பேச்சை நிறுத்தியவன்
“போதும் கார்த்தி! இவ்வளவு ஆர்கியுமெண்ட்ஸ் ஏன்? உன்னோட நம்பிக்கையை நான் குறை சொல்லல, அது போல என்னை விட்டுடு. எனக்கு நல்லது செஞ்சிட்டு மத்தவங்களுக்குக் கெடுதல் செய்ற கடவுள் எனக்கு வேண்டவே வேண்டாம்.”
“இதெல்லாம் முன்னாடியே பேசி உன் மூட் ஸ்பாயில் பண்ண வேண்டாம்னுதான் அமைதியா வந்தேன். நீயே என்னைப் பேச வைக்கிற” என்றான் சோர்வாக.
“அது அவங்க அவங்க செஞ்ச கர்மா, அதான்” என்று கார்த்தி மெல்ல சொல்ல
அவளை இப்போது நேராய் முறைத்தவன்
“என்ன கர்மா? குருமான்னுட்டு? பிஞ்சு குழந்தையில இருந்து கஷ்டம் தரார் உன்னோட கடவுள், அது என்ன பாவம் பண்ணிச்சு? அக்கிரமம் செய்ற ராஸ்கல் எல்லாம் நல்லா வாழறானுங்க, கற்பனைக்கே எட்டாத அளவு அநியாயம் நடக்குறதைக் கூட தடுக்க மாட்டேங்கிறார் அவர். இதுல பாதி சண்டை அவராலதான், கடவுளோட இடத்துக்காக எல்லா நாட்லயும் சண்டை, மதக்கலவரம் நடக்குது அதைத் தடுக்கிறாரா உன்னோட கடவுள். நம்மை மட்டும் நல்லா வைச்சா கடவுள் நல்லவரா கார்த்தி?” என்று கொஞ்சம் கோபமாய்ப் பேசியவன்
“என் கருத்தை முடிஞ்சா ஏத்துக்கோ இல்லைன்னா விடு, மாத்த முயற்சி செய்யாத. இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்” என்றான் அழுத்தமாக.
அவன் சொல்வதை ஒரு மனம் ஏற்றாலும், இன்னொரு மனமோ
“அய்யோ கடவுளே ! இவர் தெரியாம பேசிட்டார், அவரை தண்டிச்சிடாத” என்று கடவுளிடம் அவசர வேண்டுதலையும் வைத்தது. அவளின் கையை இழுத்து தன் கைக்குள் பொத்தி வைத்தான் காளிதாஸன்.
தன் மேல் கோபம் கொண்டு பேசியவன் இப்படி கையைப் பிடித்திருக்க, மலர்ந்த முகத்துடன் கணவன் பக்கம் பார்த்தாள்.
அவளுக்குமே தோன்றியது, சில விஷயங்கள் தனிமனிதன் சார்ந்தவை. அதில் கணவன் மனைவியாகினும் தலையிட கூடாது! அவள் அப்பா, அண்ணன் எல்லாம் இருவேளை கடவுளை வணங்கி என்ன பயன்? இழிசெயல் செய்து இறைவனை வணங்கினால் ஆகிற்றா? என்று நினைத்துக்கொண்டாள்.
சில எல்லைகள் அழகானவை! அர்த்தமுள்ளவை! என்று அவன் பேச்சில் தெளிந்தாள் பெண்.
கவினின் வீட்டிற்குச் செல்ல, நித்தியும் கவியும் ஆர்ப்பாட்டமாய் வரவேற்றனர். சிவகாமி கூட வந்திருந்தார்.
“என்னடா பட்டையெல்லாம் போட்டிருக்க?” என்று கவி சிரிப்புடன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
“கோவில் போனோம் டா, அங்க பூசிவிட்டாங்க” என்றவன்
“மது பேபி எங்க?” என்று கேட்டு அவர்கள் வாங்கி வந்த பையை கொடுத்தான்.
“அவ அக்கா வீட்டுக்குப் போயிருக்கா, இங்க நம்ம பெரியவங்க பேசவோம், அதான்” என்று சொல்ல காளிதாசன் தந்த பையைப் பார்த்த நித்தி
“டேய்! என்ன உன் ப்ரண்ட்க்கு பிடிச்ச மைசூர் பா மட்டும் இருக்கு, எனக்கு எங்க லட்டு?” என்று முறைத்தாள்.
“கடையில உனக்குப் பிடிச்ச லட்டு இல்லை நித்திமா, நான் நாளைக்கு வாங்கி அனுப்புறேன்” என்று அவளை சமாதானம் செய்ய, கார்த்தி மாமியாரிடம் நலம் விசாரித்தவள் இவர்களின் பேச்சை அமைதியாகப் பார்த்திருந்தாள்.
“என்ன கார்த்தி? டாக்டரம்மா பஞ்சத்துல அடிப்பட்ட பன்னிக்குட்டி மாதிரி ஸ்வீட் கேக்குறா பார்க்குறியாம்மா?” என்று கவி கிண்டல் செய்ய
“தாஸ், உன்னாலதான். இவருக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்துட்டன்னு என்னை எப்படி சொல்றார் பாரு” என்று நித்தி அவளின் தாஸேட்டாவிடம் புகார் வாசித்தாள்.
“டேய்! பன்னிக்குட்டி லட்டு சாப்பிடுமா?” என்று காளிதாஸன் நண்பனிடம் சந்தேகம் கேட்கிறேன் என்று அவனும் நித்தியை சீண்டினான். இவர்களை முறைத்த நித்தி
“மதிய சமையல் நான்தான்டா, இரண்டு பேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்” என்றவள் கார்த்தியைப் பார்த்து அசடு வழிந்தாள்.
உடனே சிவகாமி இவர்களைப் பார்த்தவர் “அது நித்திக்கு தாஸ் வாங்கிக்கொடுத்தா ஒரு சந்தோஷம்” என்றார்.
“இனிமே நானும் உங்களுக்குப் பிடிச்ச லட்டு வாங்கிட்டு வரேன் அண்ணி” என்று நித்தியைப் பார்த்து புன்னகையுடன் கார்த்தி சொல்ல
“கேட்டுக்கோ , இரண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட்டுவீங்களே, இப்போ எனக்கும் கார்த்தி இருக்கா. இனி அவளே எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கித் தருவா” என்றாள்.
“நான் வேற கார்த்தி வேற இல்லையே?” என்று கேட்ட காளிதாஸனைக் கண்டு கவினும் நித்தியும் ஒரு நொடி அதிர்ச்சியாகி பின் உற்சாகத்துடன் அவனைக் கிண்டல் செய்ய, கார்த்திக்கு அவன் பதிலில் காதல் கூட, சிவகாமி நிறைவாக உணர்ந்தார்.
கவின் எல்லாரும் உண்ணும்போது “சரி நேத்துதான் போட்டோ வேண்டாம்னு அடம் பிடிச்ச வீட்லயே எடுப்பாங்க, எப்போ வர சொல்ல?” என்று கேட்க
“என்ன போட்டோ?” என்று சிவகாமி விசாரித்தவர் பின் மகனிடம் கோபமாய்
“என்ன பழக்கம் இது கண்ணா? உனக்கு விருப்பமில்லைனா கார்த்தியை ஒருவார்த்தைக் கேட்க மாட்டியா? அவளுக்கும் ஆசை இருக்கும்தானே? இன்னும் நானே ராஜா, நானே மந்திரினு இருக்காத” என்று மகனைக் கடிந்துகொண்டார்.
“மா, அவர் எங்கிட்ட பேசிட்டார். இரண்டு பேருக்குமே வேண்டாம்னுதான் முடிவு பண்ணினோம். எனக்கும் அதுல இஷ்டமில்லை” என்று சொல்ல, மற்றவர்கள் நம்பாமல் பார்க்க உற்றவனின் கண்ணுக்கோ கவிதையாய்த் தெரிந்தாள் கார்த்தி.
“சரி அது போகட்டும், விடுங்க. உங்களுக்கு எங்க ஹனிமூன் போகனும் சொல்லுங்க, நான் டிக்கெட் போடுறேன்” என்று கவின் கேட்க
“எதுக்கு டா நீ அதெல்லாம் செய்ற?” என்று காளிதாஸன் நண்பனைப் பார்க்க
“ஹேய் நித்தி, என்ன பேசுறான் இவன். இவந்தானே நமக்கு எல்லாம் செஞ்சான். நான் செய்யக்கூடாதா?” என்று கவினும் கோபம் கொண்டான்.
“அப்படி சொல்லல பக்கி நான்” என்று காளிதாஸும் கோபம் கொள்ள, கார்த்தி கணவனின் முகம் பார்த்தவள்
வீட்டிற்குச் சென்றதும் அறைக்குள் புகுந்தவன் தன்னுடன் வந்த கார்த்தியை ஆவலாய் இழுத்து அணைத்துக்கொண்டான்.
உண்மையில் அவனுக்குள் இந்த திருமணம் சரிவருமா என ஆயிரம் சந்தேகங்கள். இல்லாவிட்டாலும் சரியாக்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் எங்கேயும் சரிந்து விடக்கூடாது என்ற கவலையும் இருக்க கார்த்தியின் புரிதலில் அவனுக்குள் புத்தம் புது மழை!
“தேங்க்ஸ் அண்ட் ஸாரி கண்ணா” என்றான் அவள் காதோரம்.
“ஏன் ஸாரி?” என்று அவன் அணைப்பில் மயங்கியபடி மங்கைக் கேட்க
“அம்மா சொன்னதும் என்னோட தப்பு புரிஞ்சது, அன்னிக்குக் கூட நீயும் டயர்டா இருந்த, ஓகே. பட் இப்பவும் உன்னை, உன் விருப்பம் கேட்காம நானே டிசைட் பண்ணிட்டேன்ல” என்றான்.
“விடுங்க, உங்களுக்குப் பிடிக்காததை ஏன் செய்யனும்?” என்றாள் கார்த்தி இயல்பாக.
“அப்படி சொல்லாத கார்த்தி கண்ணா, உனக்கு அப்போ இஷ்டம், எனக்காக வேண்டாம்னு சொன்ன, அப்படித்தானே?” என்று காளிதாசன் கார்த்தியின் முகத்தை நிமிர்த்தி கண்கள் பார்த்து கேட்க
அவள் நெற்றியில் முட்டியவன் “இத்தனை நாள் அப்படித்தானே சொன்ன, மிஸ்டர்.காளிதாஸன்னு…இப்ப என்னவாம்?” என்று கேட்க
“இத்தனை நாள் நான் மிஸஸ். காளிதாஸன் இல்லையே” என்று கார்த்தி ராகமாய் சொல்ல
“ஒரு மனுஷனோட பெயர்தான் அவனுக்கு ரொம்ப பிடிச்ச இனிமையான ஒலியாம் இந்த உலகத்திலே, அப்படின்னு dale carnegie சொல்லியிருக்கார், அண்ட் ஐ லைக் மை நேம். அண்ட் லவ் இட் அதை நீ சொல்லும்போது” என்றதே அவ்வளவு இனிமையாய் இருந்தது.
“ஓகே காளிதாஸன்!” அவளும் ரசித்து சொன்னாள்.
“வேற டாபிக் போயிட்டோம், சொல்லு ஹனிமூனுக்குக் கூட ஏன் அப்படி சொன்ன? நம்ம அதையெல்லாம் பேசவே இல்லையே?” என்று காளிதாஸன் விடாது கேட்க
“நீங்க அண்ணா கேட்கும்போது நான் ஹனிமூனுக்கு ஓகே சொல்லிடுவேன்னோன்னு டென்ஷனா பார்த்தீங்க, ஸோ உங்களுக்கு விருப்பமில்லை தெரிஞ்சது” என்றாள்.
தன்னை அவள் கவனித்திருக்கிறாள் என்ற உவகையும் தன்னால் அவள் மனதின் விருப்பங்களுக்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற உறுத்தலும் சேர அவளை இறுக்கி அணைத்தவன்
“கண்ணா! நிஜமா ஸாரி. என்னோட விருப்பங்களை நீ மதிக்கிற, நான் கேட்காம அதுபடி நடக்குற. ஃபோட்டோதான் எனக்கு இன்னொருத்தங்க முன்னாடி நிக்க விருப்பமில்லை. அதை விட அது இயற்கையா வர ஃபீல்லா இருக்கணும். இதோ இப்படி..” என்று சொல்லி அவள் கன்னத்துடன் தன் கன்னம் உரசினான்.
“இப்போ ஒருத்தர் நமக்குப் பக்கமா வந்தா எவ்வளவு கடுப்பா இருக்கும், அதனால எனக்கு இஷ்டமில்லை. ஹனிமூன்? அது போகனும், பட் இப்போ எனக்கு நேரமில்லை கார்த்தி, EC டேட் சொல்லிடுவாங்க நெக்ஸ்ட் வீக், அதுக்கு வொர்க் பண்ணனும். இந்த டைம்ல என்னால உங்கூட பீஸ்புல்லா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது”
“எனக்கும் லைட்டா தோணுச்சு, எலெக்ஷன் வரப்ப உங்களுக்கு வேலை இருக்கும். அதான் நீங்க தயங்குறீங்க, இரண்டு பேரும் சந்தோஷமா போகனும், வொர்க் டென்ஷனோட வேண்டாம்” என்ற கார்த்தியை ரொம்பவே பிடித்தது காளிதாஸனுக்கு.
“மிஸ்டர்.காளிதாஸ் இந்த எலெக்ஷன் எல்லாம் முடிஞ்சதும் என்னை ஹனிமூன் அழைச்சிட்டுப் போறீங்க, சும்மா எல்லாத்துக்கும் நான் பொறுமையாய் இருக்க மாட்டேன்” என்று கார்த்தி செல்லமாய் மிரட்ட,
“நான் அழைச்சிட்டுப் போகலன்னா, நீ என்னை அழைச்சிட்டுப் போ கண்ணா” என்றவன் அவள் மெய்தீண்டி மெய் மறந்து நின்றான். கன்னங்கள் தாண்டி அவன் தீண்டல் கழுத்தில் வந்து இறங்கியது. அவனுக்கே அவனின் இந்த அவதாரம் புதிதாய் இருந்தது.
“கார்த்தி! நீ என்னையே எனக்குப் புதுசா காட்டுற” என்றான் ரகசியக்குரலில் ரசனையுடன்.
அவனின் முத்தங்களில் அவளுமே தன்னை புதிதாய் உணர, இண்டர்காம் ஒலித்தது.
“ஒன் மினிட்!” என்று சொல்லி விலகி போனை எடுக்க, வாலி பேசினான்.
கார்த்தி இன்னும் அவன் தீண்டலில் திகைத்து திளைத்து இருக்க, இந்த இடைவெளி கூட பிடிக்கவில்லை. காளிதாசனைப் புன்னகையுடன் பார்த்திருக்க,
“ஓகேடா! நான் வரேன்” என்று சொன்னவன் கார்த்தியின் கன்னம் தட்டி,
“உனக்கு மட்டும் சொந்தமான காளிதாஸை இன்னிக்கு நைட் பார்க்கலாம்” என்று கண்சிமிட்டியவன்
அவர்களிடம் கார்த்தி ஐடியாக்கள் கேட்டவள் இரு நாட்களில் சொல்வதாக சொன்னாள். கார்த்தியிடம் புத்தம் புதிய போனை நீட்டியவன்
“உங்கிட்ட போன் இல்லையே கார்த்தி, அதுக்காக என்னோட கிஃப்ட் வைச்சிக்கோ. முன்னாடி உங்கிட்ட இருந்த மாடலோட நெக்ஸ்ட் மாடல் இது. பிடிக்கும் நினைக்கிறேன், இல்லைனா மாத்திடலாம். சிம் போட்டாச்சு, யூஸ் பண்ணிக்கோ. எனக்கு இப்போ நேஷனல் லீடர்ஸோட வீடியோ கால் இருக்கு, எட்டு மணி வரை என்னை டிஸ்டர்ப் செய்யாத கண்ணா” என்று வரிசையாய் சொல்ல கார்த்தியும் தலையாட்டினாள்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும், கார்த்தி தன் அலைப்பேசி மூலம் இன்ஸ்டாகிராம் செல்ல, தோழிகளிடம் இருந்து நிறைய செய்திகள். அதனைப் படிக்க படிக்க நிறைய வருத்தம் அவளுக்கு. அதில் ஒரு செய்தியில் பதறியவள் கணவனின் பேச்சையும் மீறி அவனின் அலுவலக அறையைத் திறந்து அழுகையுடன் உள்ளே போனாள்.
“கார்த்தி!” என்று அதிருப்தியுடன் மனைவியைப் பார்த்தவன் வீடியோ காலில் மன்னிப்புக் கேட்டு அவளுடன் வெளியே வந்தான்.
“சொல்லிட்டுத்தானேமா வந்தேன்” என்று அவன் சொல்ல, கார்த்தியோ அழுகையுடன்
“அம்மாவுக்கு முடியலங்க, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம். என் ப்ரண்ட் சொன்னா” என்றதும்
அவளுக்கு அம்மா முக்கியமென உணர்ந்தவள் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான். விசிட்டர் நேரமெல்லாம் முடிந்திருக்க, ராஜீவ்ரத்னம் மட்டுமே அம்மாவுடன் இருந்தான்.
எல்லா முக்கிய பிரமுகர்களும் காளிதாசன் கார்த்தியாயினி வரவேற்புக்கு வந்திருக்க, அது முக்கிய செய்தியாக்கப்பட்டு தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாவற்றிலும் வர, மகளைக் கண்டு விசாலாட்சி உள்ளம் நொந்தது. அதிலும் பெரிய மகன் காளிதாசனைப் பற்றி மோசமாய்ப் பேசியிருக்க, சிறப்பாய் பார்த்த மாப்பிள்ளை எல்லாம் விட்டு மகள் அத்தனை பேரின் முன்னிலையிலும் நாற்பது வயதில் ஒருவனை திருமணம் செய்திருக்க, பார்க்க பார்க்க நொந்து போனார்.
இதில் செல்வரத்னம் வேறு டீவியைப் பார்த்தபடி தங்கையைத் திட்டிக்கொண்டிருக்க, விசாலாட்சிக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராஜீவ் மட்டும் அம்மாவுக்குத் துணையாக அங்கே இருக்க, மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.
அது ஒரு அரசியல் பிரமுகரின் மருத்துவமனை என்பதால் இவனுக்கு அந்த நேரமும் அனுமதி கிடைக்க, டாக்டரிடம் பேசிவிட்டு ஐசியு பக்கம் வர, கணவனுக்கு முன்பே கார்த்தி அங்கே போய்விட இவளை எதிர்ப்பார்க்காத ராஜீவ் கொதித்துவிட்டான்.
“நீ ஏன் வந்த? அம்மா செத்துட்டாங்களா பார்க்கவா?” என்று கத்தினான்.
“ராஜா, ப்ளீஸ் பேசாத. அம்மா எப்படி இருக்காங்க, நான் பார்க்கனும்” என்று கார்த்தி கண்ணீருடன் கேட்க, அவன் இரங்கவில்லை. அவ்வளவு வேதனை அவனுக்கு. அம்மா டீவியைப் பார்த்து கண்ணீர் விட்டபடி சரிந்து விழுந்தது கண்முன் இன்னும் நிற்க, சரமாரியாக வந்தது அவனின் வார்த்தைகள்.
“அப்படி அம்மா மேல அக்கறை இருந்தா, உன்னிஷ்டபடி நடப்பியா? நாங்க எப்படியோ போகட்டும்னு தானே உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிகிட்டு அந்தாளோட ஜோடி போட்டு நின்ன?” என்றான்.
தம்பியின் வார்த்தைகள் வலிக்க “என் நிலைமைத் தெரியாம பேசாத ராஜீவ்” என்றாள் கார்த்தி.
“என்ன நிலைமை? எவ்வளவு திமிரா இந்தாளை லவ் பண்றேன்னு ப்ரஸ் முன்னாடி சொன்ன நீ? இப்ப என்ன அம்மா மேல அக்கறை” என்றபோதுதான் தன் பின்னால் வந்து நின்ற காளிதாஸனைப் பார்த்தாள் கார்த்தி. கணவன் இந்த பேச்சை எப்படி எடுப்பானோ என்று பாவை பரிதவிக்க,
“யோவ்! நீ பேசாத, உன் வயசுக்கு வேற பொண்ணு கிடைக்கல, நீயெல்லாம் ஒரு ஆளு, ச்சீ” என்றான் முகச்சுழிப்புடன்.
“உன்னோட அரசியல் ஆட்டத்துக்கு இவளை யூஸ் பண்ணிக்கிட்ட, அது தெரியல இவளுக்கு, ஏய் போடி முதல்ல ” என்று மரியாதையின்றி வார்த்தை விட, அதுவரை அமைதியாய் நின்றிருந்த காளிதாஸனின் பொறுமைப் பறக்க, ராஜீவின் கன்னம் சிவக்க அறைந்திருந்தான்.
“தாஸ்!!” என்று அவள் அதிர்வில் அழைக்க
“பேசாத கார்த்தி” என்று அதட்டினான்.
கணவனின் இந்த அவதாரத்தில் கார்த்தி கண்கலங்க நின்றிருந்தாள், அவளின் கையை அழுத்தமாய்ப் பற்றிய காளிதாஸன்,
“இவன் உன்னைப் பேசற வரைக்கும் அமைதியா இருப்பியா?” என்று திட்டி, நர்ஸீன் உதவியுடன் பாதுகாப்பாக ஐசியுவில் இருந்த அம்மாவைப் பார்க்க மனைவியை அனுப்பி வைத்தான். உள்ளே சென்று வந்த கார்த்தியை ஒரு நொடி கூட தாமதிக்கவிடாது வேகமாய் இழுத்துப்போனான் காளிதாஸன்.