மறு நாள் காலையில் காளிதாஸ் தேறிக்கொண்டான், காய்ச்சல் உறங்கிய பின் குறைந்து இருந்தது. கார்த்தி எழுந்து காஃபி கலக்கி வர, போனில் பேசிக்கொண்டிருந்த கணவனை முறைத்துக்கொண்டே வந்தாள்.
காளிதாஸ் போனை வைத்துவிட்டு,
“ஹேய் கவிகிட்ட பேசினேன் நான், ஏன் முறைக்கிற?” என்றவன் அவள் கையில் இருந்த காஃபியை வாங்கிக் கொண்டான்.
காளிதாஸ் காலை உணவை முடித்துவிட்டு ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்தான். வாலி அலுவலக கோப்புகளுடன் வந்தான்.
“அண்ணா, இதுல அண்ணி சைன் வேணும். இரண்டு நாளா அவங்க ஆபிஸ் வரவே இல்லை. செந்தில் என்னை சைன் வாங்க சொல்லிட்டான்” என்று வாலி சொல்ல
“கண்ணா, வாலி வந்திருக்கான். அவனுக்கும் சாப்பிட எடுத்துட்டு வா” என்று கார்த்தியிடம் சொல்ல,
“இதை அங்கிருந்தே சொல்ல வேண்டியதுதானே? நான் எடுத்துட்டு வரேங்க” என்றாள் கார்த்தி.
“அங்க இருந்து சொன்னா ஆர்டர் போடுற மாதிரி இருக்கும். என்னை அப்படி யாரும் சொன்னா பிடிக்காது, அதான்” என்ற கணவன் மீது கார்த்திக்கு நித்தமும் ஒவ்வொரு நிமிடமும் காதல் கூடத்தான் செய்தது.
“நேத்து கேட்டீங்களே ஏன் பைத்தியமாயிருக்கன்னு, நான் உங்க மேல பைத்தியமாகலன்னாதான் ஆச்சர்யம்” என்றவள் சட்டென அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் வைத்தாள்.
“இன்னிக்குத்தான் அண்ணி இந்த வீட்ல வாசனைன்னு ஒன்னு வருது, இப்படி வரவேற்பு எல்லாம் எனக்கு நடக்குது” என்றான்.
“நம்ம வீட்ல உன்னை வரவேற்க ஆள் வேணுமா? நான் உனக்குப் பால் எல்லாம் காய்ச்சிக் கொடுத்ததில்லை” என்று காளிதாஸன் கேட்க
“ரொம்ப பெரிய விஷயம் போங்கண்ணா, இதுக்குத்தான் முன்னாடியே கல்யாணம் பண்ணுங்கன்னு சொன்னேன். பாருங்க கரெக்ட் டைமுக்கு அண்ணி எப்படி உங்களைக் கவனிக்கிறாங்க, ஃபீவர்னதும் எப்படி பார்த்துக்கிறாங்க” பொறுமியபடி கேட்டான் வாலி.
“டேய்! கல்யாணம் பண்றது companionshipகாகடா, சமைக்கிறதுக்கும், நர்ஸா இருக்கவுமில்லை. இதெல்லாம் அன்பால செய்றது, நாமும் திரும்பி செய்யனும். சமைச்சுப் போட ஆள் வேணும்னா நல்ல சமைக்கிறவங்களா வேலைக்கு வை, அதுக்கு ஏன் மேன் கல்யாணம்?” என்று வாலியைத் திட்டினான் காளிதாஸன்.
“அண்ணி என்னை கவனிக்கிற மாதிரி நானும் அவங்களைக் கவனிக்கனும், புரியுதா? கல்யாணம் எதுக்கு செய்யனும்னு யோசிச்சு செய்டா” என்று சொல்ல வாலி தலையை ஆட்டினான்.
“கார்த்திகிட்ட சைன் வாங்கனும் சொன்னியே, அவங்ககிட்ட அதைக் காட்டு” என்றிட, வாலியும் கோப்புகளை நீட்டினான். கார்த்தி படித்துப் பார்த்து கையெழுத்துப் போட்டுக்கொடுத்தாள். வாலி சென்றதும் கார்த்தி கணவன் அருகே உட்கார்ந்தவள்
“அது என்ன என்னை வாங்க, போங்கன்னு வாலிண்ணாகிட்ட சொல்றீங்க? நான் அவரை விட சின்னப்பொண்ணுதானே?” என்று நீண்ட நாளாக மனதில் ஓடிய சந்தேகம் கேட்டாள் கார்த்தி.
“கணவன் மனைவினா சரிபாதிதானே? நீ என்னை மத்தவங்க கிட்ட அப்படி சொல்லும்போது நானும் அப்படித்தான் சொல்லணும் கண்ணா, வீட்ல நமக்குள்ள எப்படி வேணும்னாலும் பேசிக்கலாம். ஆனா மத்தவங்க முன்னாடி உனக்கான மரியாதை நான் கொடுக்கனும். வயசுக்கும் மரியாதைக்கும் சம்மந்தமில்லை” என்று எழுந்தவன்
“எனக்கு ஆபிஸ் ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வரேன் கார்த்தி” என்று சொல்ல,
“ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா நீங்க?” என்றாள் கடுப்பாக.
“நைட் நல்லா ரெஸ்ட் எடுத்தேன், சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லி போக, கார்த்தியும் மதியத்திற்கு சமைத்தாள்.
“பார்ப்போம்” என்றவள் “எனக்கு டயர்டா இருக்கு, தூங்கப் போறேன். வரீங்களா?” என்று கேட்க
“நீ போ, நான் எல்லாம் எடுத்து வைச்சிட்டு வரேன்” என்றதும் கார்த்தி அறைக்குள் சென்று உறங்கினாள். காளிதாஸன் போனபோது கார்த்தி போர்வையை நன்றாக இழுத்துப்போர்த்தி இருந்தாள். ஏசியைக் குறைத்து வைத்தவன் அவளுடன் உறங்கிப்போக, அவன் விழித்தபோது மணி ஐந்து. கார்த்தியை எழுப்ப அவள் எழவில்லை, தொட்டுப்பார்த்தால் அவளுக்குக் காய்ச்சல் இருந்தது.
“சொல்றதையே கேட்கறதில்ல” என்று பல்லைக் கடித்தவன்
“கண்ணா! எழுந்திரு, என்ன செய்யுது உனக்கு?” என்று அவளை எழுப்பிவிட, கார்த்திக்கு மிகவும் சோர்வாக இருக்க எழமுடியவில்லை.
“தூக்கமா வருதுங்க” என்று சொல்ல, “ஃபீவரா இருக்கு, நேத்தே சொன்னேன், கேட்டியா என் பேச்சை” என்று திட்டினான்.
“உங்களுக்கும்தான் ஃபீவர் வந்துச்சு, நான் திட்டினேனா?” என்று எரிச்சலாக சொல்ல
“நைட்டும் இப்படிதான் பேசின, கொஞ்சமாச்சும் சொல்றதைக் கேட்கனும்” என்று திட்ட
“உங்க ஃபீவர் எப்படியோ சரியாகிடுச்சுல, போங்க சும்மா திட்டுட்டு. மாத்திரைப் போட்டா போயிடும்” என்றதும் அவன் அறையை விட்டு வெளியே போக,
“பாஸ்! என்ன வெளியே போறீங்க? நான் எப்படி உங்களைக் கவனிச்சேன், அப்படி நீங்களும் என்னை கவனிக்கனும். சும்மா வாலிண்ணாகிட்ட டயலாக் அடிச்சா போதாது” என்று கத்தினாள்.
கார்த்தியின் பேச்சில் சிரித்துவிட்ட காளிதாஸன்
“ஹே கண்ணா! நான் நித்திக்குக் கால் பண்றேன். அவ வந்து பார்க்கட்டும்” என்று சொல்ல தலையசைத்தவள் உறங்கினாள் மீண்டும். நித்தி வந்ததும் கார்த்தியை எழுப்ப,
“படுத்துக்கோ கார்த்தி” என்றவள் காளிதாசனிடம் திரும்பி
“டேய்! நேத்து உனக்கு ஃபீவர்னு கவி சொன்னாரு, உனக்கா இல்லை கார்த்திக்கா?” என்று சந்தேகமாய்க் கேட்டாள் நித்திலா.
“நேத்து எனக்கு, இன்னிக்கு கார்த்திக்கு” காளிதாசன் பதில் சொல்ல
“என்னைப் பார்த்ததால இவளுக்கு வந்துடுச்சு” என்று காளிதாஸ் சொல்லவும்
“ரொம்ப ஓவரா பார்த்துட்டா போல இருக்கே” என்றபடி டெம்ப்ரேச்சர் செக் செய்தாள் நித்தி.
“ஹை ஃபீவரா இருக்குடா, இஞ்செக்ஷன் போடனும்” என்று சொல்லி கார்த்தியைக் கவனித்தாள்.
“உனக்கு அர்ஜண்ட் வேலை இல்லைன்னா, கொஞ்ச நேரம் கார்த்தி கூட இருக்கியா நித்தி? நான் கட்சி ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்று கேட்க
“போய்ட்டு வா, நான் இருக்கேன்” என்றாள் நித்திலா.
“மது?”
“அவளை கவி பார்த்துப்பார்”
கார்த்தியின் அருகே சென்ற காளிதாஸ் “ஒன் அவர்ல வந்துடுவேன் கண்ணா, நித்தி உங்கூட இருப்பா. ரெஸ்ட் எடும்மா” என்று சொல்ல கார்த்தியும் சோர்வாகத் தலை அசைத்தாள்.
காளிதாஸ் சென்றதும் “இப்போதான் இந்த வீடே நல்லா இருக்கு. இத்தனை நாள் கட்சி ஆபிஸுகுள்ள நுழைஞ்ச மாதிரியே இருக்கும் கார்த்தி. எனக்கு வரவே பிடிக்காது. இப்போதான் கார்த்தி எனக்கு சந்தோஷமா இருக்கு” என்ற நித்தியின் பேச்சு அவளின் தாஸேட்டாவை சுற்றியே வந்தது.
“அம்மா மலையாளி இங்க செட்டில் ஆனவங்க, அப்பாவுக்கும் அவங்களுக்கும் லவ். அம்மா வீட்ல ஒத்துக்கல, கிரி மாமா தான் அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சாங்க. தாஸேட்டா எப்பவும் என்னோடதான் இருப்பான். அம்மா பதினைஞ்சு வயசுல உடம்பு முடியாம இறந்துட்டாங்க, அவனுக்குமே அப்படித்தானே. அந்த கஷ்டம் தெரிஞ்சவன்றதால என்னை அப்படி பார்த்துக்கிட்டாங்க, சிவகாமி அத்தை தாஸை விட என்னைதான் வளர்த்திருப்பாங்க. அப்பாவுக்கு என் மேல பாசம்னாலும் அரசியலை விட முடியல, அது அவரோட நேரத்தை நிறைய இழுத்துக்கிச்சு. ஃபுல் டைம் என்னை அம்மாவா, அப்பாவா பார்த்தது தாஸேட்டாதான்” என்று சொல்லும்போதே நித்தியின் குரலில் ஒரு நன்றியுணர்வும் நேசப்பெருக்கமும்.
“நான் அவன் இவன் சொல்றது உனக்குப் பிடிக்கலன்னு சொல்லிடு கார்த்தி, எனக்குப் பழகிடுச்சு. நீ சொல்லிட்டா நான் மாத்திப்பேன். எந்த விஷயத்துக்காகவும் எங்களால தாஸோட ரிலேஷன்ஷிப் விட முடியாது” என்றதும் அவளின் கையைப்பிடித்த கார்த்தி
“உங்க தாஸேட்டாவை நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஒன்னுமில்லை அண்ணி. எப்பவும் உங்களுக்கு இடையில நான் வரமாட்டேன்” என்றவள்
“இதுல கவி அண்ணா எங்க வந்தாங்க, உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க. எனக்குப் போர் அடிக்குது” என்று கார்த்தி சொல்ல, நித்தி சிரித்துவிட்டாள்.
“தாஸ் சின்ன வயசுல இருந்தே என்னைப் பார்த்துக்கிட்டான். ஸோ என்னோட ப்ரதர் அவன் அப்படினு ஒரு பொசஸீவ்நெஸ், அவனுக்குனு ஒரு ப்ரண்ட் இருக்கான்னதும் எனக்குப் பிடிக்கவே இல்லை. இது என் பெஸ்ட் ப்ரண்ட் கவின்னு எங்கிட்ட காட்டினான் பாரு அப்போ எனக்கு ஏழு வயசு, அன்னிக்கு முழுசும் அழுதுட்டே தாஸை கவி கூட விளையாடவே விடல” என்ற நித்திக்குத் தன் செய்கை நினைத்து இப்போதும் சிரிப்பு.
“பெருசாக ஆக கவினைப் பார்க்கறப்ப எல்லாம் முறைப்பேன், இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா வேணும்னே பிரிச்சிவிடுவேன். தென் மெடிக்கல் காலேஜ் சேர்ந்தேன், தாஸ் ஆர்ட்ஸ் படிச்சான். கவியும் மெடிசின், என்னைப் பார்த்துக்கற பாடிகார்ட் வேலை அவனுக்கு. சீனியர்னால புக்ஸ், நோட்ஸ்னு நிறைய ஹெல்ப் பண்ணுவான், அவனுக்கே செய்ய இஷ்டமில்லன்னாலும் தாஸுக்காக செய்வான். அப்படியே கவிக்கு என் மேல இஷ்டம் போல, அங்கேயே பிஜி பண்ணினான். அப்போ எங்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டான்”
“தாஸ் கிட்ட போட்டுக்கொடுத்துட்டேன், அவங்ககுள்ள சண்டை. ஆனா எனக்கே கவியைப் பார்க்க பாவமா இருந்துச்சு, கொஞ்ச நாள் கழிச்சு ஒத்துக்கிட்டேன். உன் விட்டுக்காரன் அவ்வளவு ரூல்ஸ் போட்டான் எங்களுக்கு. காலேஜ்லயும் ரொம்ப பார்த்துக்க முடியாது, அப்புறம் அவர் பிஜி முடிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ண போய்ட்டார். மாசத்துல இரண்டு நாள் அவன் சொல்றப்போ மட்டுமே மீட் பண்ணனும். ஆனா அந்த வயசுல ஒரு ஆர்வம் இருக்கும்ல, அடிக்கடி பார்க்கனும் தோணும், நான் காலேஜ் கட் அடிச்சிட்டு கவி கூட சுத்த போய்ட்டேன். தாஸ் அப்பா கூட டெல்லி போக ப்ளான், இல்லைனா அவனை ஏமாத்த முடியாது”
“பார்த்தா அவன் டெல்லி போகல, காலேஜ் போயிருக்கான். நான் லீவ்னு தெரிஞ்சதும் என்னை ஒன்னும் கேட்கல, வீட்ல விட வந்த கவியை ஒரு அறை. அப்ப்பாஹ்! அப்படி ஒரு அடி, அதுல இருந்து பயந்துட்டு நான் கவியைத் திருட்டுத்தனமா பார்க்கிற ஆசையே விட்டுட்டேன்” என்ற நித்தி ஆச்சர்யமாகத் தெரிந்தாள் கார்த்திக்கு.
“விட்டீங்களா? இவர் மேல கோவமே வரலயா?”
“ஏன் கோவம்? தாஸேட்டா எனக்கு எப்பவும் நல்லதுதான் நினைப்பான் தெரியும். கவியை அடிச்சது கஷ்டமா இருந்தது, தாஸ் டாக்டருக்குப் படிக்கிற நீ க்ளாஸ் கட் அடிக்கலாமான்னு திட்டு, ஒழுங்கா நீயும் பிஜி படிச்சு முடிச்சாதான் உங்களுக்குக் கல்யாணம்னு சொல்லிட்டான். அந்த டைம் காதலுக்கும் நட்புக்கும் இடையில தடுமாற்றம்.”
“தாஸோட நிறைய சண்டை எனக்கு. கவியும் சண்டை போடுவார், ஆனா அவங்களுக்குள்ள எப்படினாலும் அடிச்சிப்பானுங்க. நான் தாஸைப் பேசினா கவிக்குப் பிடிக்காது, கல்யாணமாகிட்டு படிச்சா என்னனு எனக்குத் தோணும், ஆனா ரொம்ப கஷ்டம், அதுவும் மெடிசன். கல்யாணத்துக்கு முன்னாடியேன்றதால நிம்மதியா படிச்சு முடிச்சிட்டேன்”
“அப்புறம் அப்பாகிட்ட இவன் தான் உங்க மாப்பிள்ளைன்னு போய் கவியை நிக்க வைச்சுட்டான், அப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. எனக்கு என்ன வேணும், என்ன நல்லதுன்னு அவனுக்குத் தெரியும். அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் அவனுக்குப் பொண்ணா இருக்கணும். அவனை எப்பவும் சந்தோஷமா வைச்சிக்கோ கார்த்தி” என்றாள் நித்தி உருக்கமாக.
கேட்டிருந்த கார்த்திக்கு கணவன் மீதான பிரமிப்புக் கூடிக் கொண்டே போனது. காளிதாஸ் வந்தபோது நித்தியும் கார்த்தியும் பேசி சிரிக்கும் சத்தம் அறைக்கு வெளியே கேட்டது.
உள்ளே வந்தவன் “உன்னை கார்த்தியைப் பார்த்துக்க சொன்னா, பேசிட்டு தூங்க விடாம செய்றியா நீ?” என்று நித்தியைத் திட்டினான்.
மனைவியின் நெற்றியில் கைவைத்துப் பார்க்க ஜூரம் குறைந்திருக்க, நித்தியும் டெம்ப்ரெச்சர் செக் செய்தாள்.
“உன்னைப் பத்தி பேசினதும் உன் பொண்டாட்டி அப்படியே துள்ளிக் குதிச்சு உட்கார்ந்துட்டா” நித்தி கிண்டலாய்க் காளிதாஸைப் பார்க்க,
“அப்போ நீ வேஸ்ட்! என்னைப் பத்திப் பேசினதால கார்த்திக்கு சரியாகிடுச்சு” காளிதாஸனும் வம்பிழுத்தான்.
“சொல்லுவடா சொல்லுவ. இரண்டு பேரும் ஜோடியா ஜூரம் வரவவைச்சிருக்கீங்க, நாங்க ஜோடியா டிரீட்மெண்ட் பண்ணினா எங்களையே ஓட்டுறியா? இதுக்குதான் ஓசில டிரிட்மெண்ட் பார்க்கக் கூடாது. எடு என் ஃபீஸை” என்று நித்தி மிரட்ட
“உன் புருஷனுக்கும் உனக்கும் நான் காலேஜ் கேண்டீனுக்குப் பண்ணின செலவுல ஒரு தொகுதியில எலெக்ஷன் நடத்தி முடிச்சிடலாம். அதைக் கொடுங்க முதல்ல”
“டேய் ஒரு சமோசாவுக்கா இந்த பேச்சு” நித்தி முறைத்தாள்.
“இஸீட்? என் நித்திப்பொண்ணு வளர்ந்துட்டாளா?” என்று காளிதாஸ் சொல்லும்போதே கவின் அறைவாசலில் வந்து நின்றான்.
“என்னடா? நேத்து உனக்கு ஜீரம், இன்னிக்கு கார்த்திக்கா?” என்று கவின் கிண்டலாய்ப் பார்க்க,
“அதான் ஜோடியா வைத்தியம் பார்க்க நீங்க இருக்கீங்களே” என்று காளிதாஸ் சொல்ல, அப்படியே அவர்களுடன் பேச்சும் சிரிப்புமாக அன்றைய நாள் முடிந்தது. இரவில் கார்த்திக்கு உறக்கம் வரவில்லை. காளிதாஸனைப் பற்றி நித்தி புகழ்ந்துப் பேசியிருக்க, என் கணவன் என்று காதலும் கர்வமும் கொண்டது மனது.
அவ்வளவு பிடித்தது அவனை! அணுஅணுவாய்ப் பிடித்தது! அவனின் அத்தனையும் பிடித்தது!
“என்ன கண்ணா, தூக்கம் வரலையா?” காளிதாஸ் கேட்க
“நித்தி அண்ணி உங்களைப் பத்தி எவ்வளவு பெருமையா சொன்னாங்க தெரியுமா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் கார்த்தி.
“ஆமா, உங்களை எனக்குத் தெரியாது பாருங்க. அவங்க சொன்னதெல்லாம் நிஜம், எனக்கு இப்போ அப்படியே உங்களை இறுக்கக் கட்டிக்கனும் போல இருக்கு” என்றாள்.
“கட்டிக்கோ”
“உங்களுக்கு ஃபீவர் வந்துடும்” கார்த்தி அவனை விட்டு தள்ளி இருந்தாள்.
“எனக்கு வந்தப்போ மட்டும் உரசிட்டே இருந்த, அதான் ஓசில இரண்டு டாக்டர்ஸ் இருக்காங்களே” என்று கிண்டல் செய்தவன் கார்த்தியை அவனாகவே கட்டிக்கொண்டான்.
“இது போதுமா கண்ணா?” என்று மென்மையாய் அணைத்து காளிதாஸ் கேட்க
“போதவே இல்லை” என்றவள் அவனை இன்னும் இறுகயணைத்தாள்.
அடுத்த நாள் காலையில் கார்த்திக்கு லேசாய் ஜீரம் இருக்க, காளிதாஸ் எங்கும் போகவில்லை. மனைவியை அருகே இருந்து பார்த்துக்கொண்டான். சிவகாமி அம்மாவும் மருமகளுக்கு முடியவில்லை என்பதால் வந்துவிட்டார்.
அன்று முழுவதும் சிவகாமி உடனிருந்தார். கார்த்திக்கு கணவன், மாமியார் இருவரும் இருக்க, இத்தனை நாள் வாட்டிய தனிமை நீங்கியிருந்தது. உடல்சோர்வாய் இருந்தாலும் மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள்.