“டேய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தூக்குவ, எங்க இருக்கா அவ சொல்லு?” என்று சட்டையைப் பிடிக்க காளிதாஸன் அசையாமல் அழுத்தமாக நின்றான். அந்த பார்வை அவனின் அப்பா அழகிரியை நினைவூட்டியது ராஜரத்னத்திற்கு.
அழகிரி, மகாதேவன், ராஜரத்னம் எல்லாம் நண்பர்கள். அப்படித்தான் மற்ற இருவரும் நினைத்தார்கள். மூவரும் கட்சியில் தொண்டர்களாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறினார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை மகாதேவன் பயன்படுத்த, அழகிரியின் நோக்கம் அரசியல் அன்று! அதனால் விளையும் மக்கள் சேவை! ஆனால் ராஜரத்னம் இவர்களைப் போல் அல்ல, புதிதாய் வாய்ப்புகளை உருவாக்கினார். அதுவும் தவறான வழியென்றாலும் கூட! அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மாவட்ட செயலாளர் அளவிற்கு ராஜரத்னம் உயர்ந்துவிட, மகாதேவனையும் அழகிரியையும் ஒரங்கட்ட நினைத்தார். அழகிரிக்கு மக்களிடம் நல்லபெயர். அவரோட சேர்ந்த மகாதேவனுக்கும் அது கிடைத்தது.
எவ்வளவு உழைத்தாலும் மகாதேவனாலும் அழகிரியாலும் நேர்வழியில் முன்னேற முடியாமல் போக, அவர்கள் வழியை மாற்றவில்லை. இடத்தை மாற்றினார்கள். கட்சியில் ஊழல் ஊடுருவியிருக்க, ஓரளவிற்காவது மக்களுக்கு என்று செய்யும் வேறு கட்சியில் இணைந்துவிட, அங்கே அவர்களுக்கு நல்ல செல்வாக்கு. விலகிச் சென்று பார்க்கையில்தான் ராஜரத்னம் தாங்கள் நினைத்த அளவு நல்லவன் இல்லை என்பதே மகாதேவனுக்கும் அழகிரிக்கும் புரிந்தது. பணம், பதவிக்காக எதையும் செய்யும் அரக்கன் என்று கண்டுகொண்டனர்.
மகாதேவன் தன் கட்சியின் முன்னேற்றத்தைப் பார்க்க, அழகிரி இன்னும் மக்கள் பணி, போராட்டம் என்று இருந்தார். ராஜரத்னத்தின் மீதும் கூட புகார் கூறி, சில பல வழக்குகள் அவர்மேல் அழகிரியால் தொடரப்பட, ஏதோவொரு போராட்டத்தில், சிறைக்குச் செல்ல நேர்ந்த அழகிரியை அடித்தே கொள்ள வைத்தார்.
அங்கே அரசியலினால் அறம் பிழையானது!
அழகிரி இப்படித்தான் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு, நேர்ப்பார்வைப் பார்ப்பார். இன்று அதே பார்வையை அவர் மகனிடம் கண்டவருக்கு பழையப் பகையில் தன் மகளைப் பகடையாய்ப் பயன்படுத்திவிடுவானோ என்று அஞ்சினார்.
ஆம், அச்சம்தான்! கொலையே செய்தாலும் அஞ்சாத மனிதருக்கு, மகள் என்றாள் உயிர். அவளுக்காக உயிரைக் கூட தருவார். அதனால் இன்று எத்தனை அதிகாரம் இருந்தாலும் கூட, மகளுக்கு சின்ன களங்கும் கூட வரக்கூடாதென நேரே காளிதாஸனைக் காண வந்துவிட்டார். சொல்லப்போனால் அவரின் பலவீனம் ‘கார்த்தியாயினி’.
அண்ணன் வந்தவுடனே காளிதாஸனை அடிக்கப்போக, ‘எனக்குத் தெரியாத அவங்கள?’ என்ற பாசம் மேலோங்கியது மங்கைக்கு. என்னைக் கடத்திட்டு வந்தா சும்மா விடுவாங்களா என்று ஒரு கர்வப்புன்னகை!
காளிதாஸனின் அழுத்தம் ராஜரத்னத்தை நிதானிக்க வைக்க,
“செல்வா! என்ன செய்ற? என் பொண்ணு இவன் கிட்ட இருக்கா. பொறுமையா இரு” என்று சத்தம் போடவும் செல்வா காளிதாஸனை முறைத்தபடியே விலகினான்.
கார்த்தி,
‘கண்டிப்பா, அண்ணா மேல தப்பு இருக்காது, ஆனா அந்த பொண்ணை யார் அப்படி செஞ்சிருந்தாலும் அப்பா கிட்ட சொல்லி பனிஷ் பண்ணனும்’ என்று உறுதி எடுத்தாள்.
காளிதாஸன் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர, எதிரே இருந்த சோஃபாவில் இவர்கள் உட்கார்ந்தனர். ராஜரத்னம் அதற்குமேல் பொறுக்கவில்லை.
“இங்க பாரு தாஸ், என் பொண்ணை முதல்ல எங்கிட்ட காட்டு. அதுக்கு அப்புறம் என்ன வேணும் நம்ம பேசிக்கலாம். அவளுக்கு அடுத்த வாரம் நிச்சயம் இருக்கு, இந்த சமயத்துல நீ இப்படி செஞ்சது நல்லதுக்கில்ல, ஏதோ அழகிரி பையன்னு விட்டுவைச்சிருக்கேன் உன்னை” என்றதும் சத்தம்போட்டே சிரித்தான் காளிதாஸன்.
“வாட் எ காமெடி! நீங்க என்னை விட்டு வைச்சிருக்கீங்களா? எங்கப்பாவை என்ன செஞ்சிங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்றான் ரௌத்திரமானப் பார்வையுடன்.
“என்ன செஞ்சாங்க? அவன் ஜெயிலுக்குப் போனான். ஜெயில்ல தகராறுல செத்தா நான் என்ன செய்றது? அதுக்காக என் பொண்ணைத் தூக்குவியா?” என்று ராஜரத்னமும் கத்த
“ஷ்! எனக்கு நாய்ஸ்னா அலர்ஜி, சத்தம் போடாதீங்க” என்று அதட்டினான்.
“ஏன் உங்க பொண்ணு எங்கிட்ட இருந்தா பயப்படுறீங்க ரத்னம்? பொண்ணுங்க ஆண்கள்கிட்ட இருந்தா பாதுகாப்பில்லையா? உங்க பையன் மாதிரி நானும் இருப்பேன் நினைச்சீங்களா? அப்படி இருந்திருந்தா…” என்று நக்கலாய் அவன் செல்வாவைப் பார்க்க,
“ஏய்ய்ய்!” என்று செல்வா எழுந்து நின்று கர்ஜித்தான்.
“செல்வா, பொறுமையா இரு. கனிதான் முக்கியம் இப்போ, நீ பேசாத” என்று மகனை அதட்டியவர்
“இங்க பாரு, உனக்கு என்னவேணுமோ நான் தரேன். பதவி, பணம் எதுனாலும் ஆனா என் பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது, அவ பெயர் கெட்டுப்போகக்கூடாதுன்னுதான் உங்கிட்ட இவ்வளவு பொறுமையாப் பேசுறேன். இல்லைன்னா கமிஷனர் கிட்ட கால் பண்ணினா போதும், உன்னோட எல்லா ஆட்டமும் முடிஞ்சிடும்” என்று ராஜரத்னம் காளிதாஸை மிரட்டிப் பார்க்க
“ஓ, ஐ சீ! எங்க உங்க கமிஷனருக்குக் கால் பண்ணுங்களேன் பார்ப்போம்” என்றான் நக்கலாக. அவனுக்குத் தெரியும் நிச்சயம் அவர்கள் வீட்டு பெண் என்பதால் மிகவும் கவனமாகவே அடியெடுத்து வைப்பார்கள் என்று. இல்லையென்றால் இத்தனை ரிஸ்க் அவனும் எடுத்திருக்க மாட்டான். அதனையும் விட நேர்மையானவர்கள்தான் நேர்வழி செல்வார்கள், இவர்களிடம் தவறு இருக்கப்போய்தானே தழைந்து வந்திருகிறார்கள் என்று நினைத்தான்.
அதே எண்ணம்தான் கார்த்திக்கும். என்னைக் காணவில்லையென்றால் இவர்கள் போலிஸில் அல்லவா சொல்லியிருக்க வேண்டும், இதில் ஆதாரங்கள் கூட எளிதாய் இருக்குமே, ஏன் இவ்வளவு நேரம்? இந்த காளிதாஸன் என்ன சொல்லி மிரட்டியிருப்பான் என்று பலவிதமாய் யோசித்த பாவை சட்டென யோசனையை நிறுத்தினாள்.
என்னவோ உறுத்தியது, ‘உங்க பையன் மாதிரி நானும் இருப்பேன் நினைச்சீங்களா? அப்படி இருந்திருந்தா..’ என்று காளிதாஸன் சொன்னதிற்கு அண்ணனும் அப்பாவும் ஏன் பதறுகிறார்கள். அண்ணன் நல்லவன் என்றால், அவனைப் போல் காளிதாஸன் என்றால் பதட்டம் எதற்கு? என்று நினைத்தாள்.
“எனக்கு என்ன வேணும்னாலும் அதை அடுத்தவங்க தரனும்னு எதிர்ப்பார்க்க மாட்டேன் ராஜரத்னம், அதையும்விட நீங்க ஒன்னைக் கொடுத்து, அது எனக்கு வேண்டாம். இது வேற..” என்றவன் பூஜாவின் ஆடியோவை போட்டுக்காட்ட, மகனை முறைத்தார். செல்வாவோ ,’அவளை’ என்று பல்லைக் கடித்து
“இங்க பாரு தாஸ், உனக்கு என்ன இந்த பொண்ணை இனிமே இவன் தொந்தரவு செய்யமாட்டான். அதுக்கு நான் உத்தரவாதம் தரேன், நீ கனியை அனுப்பி வை” என்று பேசவும் பேச்சற்ற நொடி கார்த்திக்கு.
மறுத்துப் பேசாத அண்ணன்! தடுத்துப் பேசாத தந்தை!
உச்சக்கட்ட அதிர்ச்சியில் பார்த்தாள் கார்த்தி. அண்ணன் செய்திருப்பான் என்று நினைக்கிறாரா அப்பா, மறுக்காமல் காளிதாஸனை சமாளிக்க நினைக்கிறார் என்றால், நினைக்கவே நெஞ்சம் கசந்தது.
“பெரிய உத்தமர் சின்ன உத்தமருக்கு உத்தரவாதம் தரார், குட்!” என்று எள்ளல் பார்வையுடன் காளிதாஸ் சொல்லவும்
“ப்பா, என்ன பேச்சு இவன் கிட்ட? வாங்க சாயந்தரத்துக்குள்ள கனி நம்ம வீட்டுல இருப்பா. இவனா நானா பார்த்துடுறேன்” என்று செல்வா எழுந்து நின்று ஆக்ரோஷத்துட பேச
“அமைதியா இருடா!” என்று அவனை விடவும் சத்தமாய்ப் பேசிய ரத்னம்,
“எல்லாம் உன்னாலதான்! நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?” என்று மகனிடம் பாய்ந்தார்.
“சும்மா என்னைப் பேசாதீங்க, என்னமோ நீங்க ஒழுங்கு மாதிரி” என்று அலட்சியமாய்ப் பேசினான் அண்ணங்காரன். கேட்டிருந்த கார்த்தியின் கண்களில் இருந்து நீர் வழிய, சோஃபாவில் உட்கார்ந்தவள் அப்படியே கீழே சரிய அப்படியொரு அழுகை. என்னவோ நெஞ்சடைத்த உணர்வு.
எல்லாமே வேஷமா?! எப்படி எப்படி? என்ற கேள்வி அவளுள்! நம்பமுடியவில்லை. ஆனால் கண்முன்னே நடப்பதை எப்படி நம்பாமல் இருக்க, அதுவும் அவர்களே ஒப்புக்கொடுக்கையில்.
அண்ணன்,! சீ! அவனா அண்ணன் என்ற நினைக்கையில் ஒரு பெரிய கேவல் வெடித்தது. தலையே சுற்றும் உணர்வு, எப்படி அந்த பெண் படுக்கையில் ஒரு பரிதாபமான நிலையில் கிடந்தாள்? அப்படி வாழவே வேண்டாம் என்று நினைக்க வேண்டும் என்றால் எப்படியான சித்ரவதை இவன் செய்திருக்க வேண்டும். அண்ணன் கீழானவன் என்றால், அப்பாவும்…
இப்படியானவர்கள் கூடவா இத்தனை ஆண்டும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்க நினைக்க கதறல் கார்த்தியிடம்!
தாளவே முடியவில்லை. இந்த நிகழ்வு கொடுத்த தாக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை. அண்ணன் இப்படியிருந்தாலும் அப்பா அவனின் செயலைக் கண்டித்து, தண்டித்திருந்தால் கார்த்தி ஆறுதல்பட்டிருப்பாள்.
‘அய்யோ?!’ என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். செத்துவிடலாம் என்று நினைத்தாள், ஆனால் நினைத்த கணம் மரணம் வருமா என்ன?
அப்பா என்றால் எல்லா பெண்களையும் ஒன்றாய்த்தானே நினைக்க வேண்டும். இவர்கள் வீட்டுப்பெண் என்பதால்தான் இந்த பாசம், பாதுகாப்பு எல்லாம் இல்லையேல் என்று அறிவு யோசித்த நொடி ப்ரளயம் பெண் மனதில். அது தந்த பாரம் தாங்காது அப்படியே மயங்கினாள் மங்கை.
அங்கு கார்த்தி மயங்கியிருக்க, இன்னும் அவளின் பெற்றவனும் உடன்பிறந்தவனும் காளிதாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“ஷ்! சத்தம் கூடாது சொன்னேன் நான்” என்று கடுப்பாய் சொன்னவன்
“உங்க பொண்ணு வரனும்னா முதல்ல பூஜா வீட்டு டாக்குமெண்ட்ஸ் வேணும் எனக்கு, இனிமே அந்த பொண்ணை எந்த வகையிலும் இவன் டார்ச்சர் செய்யக் கூடாது, மீறி செஞ்சா கடத்தல்ல இறங்க தெரிஞ்ச எனக்கு கொலை செய்ய நேரமாகாது. உங்களுக்குத்தான் கூலிப்படை எல்லாம் தெரியுமா?” என்று காளிதாஸன் பேச, செல்வா துள்ளினான்.
“டேய்! என்ன பெரிய இவன் மாதிரி பேசுற? நான் நினைச்சா லாரி ஏத்தி உன்னை ஒரே செகண்ட்ல காலி பண்ணிடுவேன் டா. சும்மா மிரட்டிட்டு இருக்காத” என்றான் செல்வா.
“அதே லாரி நானும் ஏத்துவேன்” என்று பல்லைக்கடித்த காளிதாஸ், ராஜரத்னத்தைப் பார்த்து,
“இவன் இப்படி பேசினா செத்தாலும் உங்க பொண்ணு இருக்க இடம் சொல்லமாட்டேன்” என்றான். குரலில் ஒரு தீவிரம்! முன்பு எப்படியோ அழகிரியின் மகன் நேர்வழி மட்டுமே செல்வான் என்று நம்பியிருந்த ரத்னம் இப்போது பயந்தார்.
எதிரி மாறும்போது எதிர்க்கும் வழிகளையும் எதிர்க்கொள்ளும் வழிகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் வெற்றி கிட்டாது! என்பதை அறிந்தவன் காளிதாஸன். அது போலவே அவன் பெண்ணைக் கடத்துவது வரை இறங்கியிருக்க, செத்தாலும் இவன் சொல்லமாட்டான் என்றே தோன்றியது. அரசியல்வாதி காணாமல் போய் அப்பாவாய் யோசித்தார் ராஜரத்னம்.
“செல்வா, வாயை மூடு. இல்லை வெளியே போடா” என்றார் மகனிடம்.
“நீ சொன்னதெல்லாம் செய்றேன். அந்த பொண்ணு இனி பணம் கூட கட்ட வேண்டாம், வீட்டு பத்திரம் கொடுத்திடு செல்வா” என்று மகனிடம் சொல்ல செல்வா இன்னும் கோபத்தில் இருந்தான்.
பூஜாவை எப்படியும் மிரட்டித் தன் வழிக்குக் கொண்டுவந்திடலாம் என்று நினைத்திருந்தான்.
சிலருக்குப் பணம்.! சிலருக்குப் பயம்!! பயம் காட்டும் பெண்களின் பின்புலம் எல்லாம் ஆராய்ந்துவிடுவான். எங்கேயும் சிக்கியதில்லை, ஆனால் காலம் ஒன்று இருக்கிறதல்லவா? அது காளிதாசன் வடிவில் சிக்க வைத்தது. இப்போதும் ‘எப்படி இந்த பய இதுல வந்தான்?’ என்ற யோசனையே.
காளிதாஸன் தனது வலக்கையில் இருந்த வாட்ச் பார்த்துவிட்டு , “ஓகே, மணி இப்போ மூணு, ஆறு மணிக்கு எனக்கு டாக்குமெண்ட்ஸ் இருக்கணும். எல்லாமே இருக்கணும், எந்த பொண்ணையும் இனி இவன் இப்படி செய்யக்கூடாது ராஜரத்னம்” என்றான் மிரட்டலாக.
“ஆறு மணிக்கு வாங்க, உங்க பொண்ணு பத்திரமா இருப்பா. நான் அழகிரியோட மகன் அதை ஞாபகத்துல வைங்க. ஆனா வேற எதாவது செய்யனும்னு நினைச்சா நானும் அதுக்கேத்த மாதிரி மாறிடுவேன்” என்றான் அழுத்தமாய்.
வாலியை அனுப்பி கார்த்தியைப் பார்க்க சொல்ல, அவள் மயங்கிய நிலைக் கண்டு பயந்த வாலி கத்த, மாடியறைக்கு ஓடினான் காளிதாசன்.
காளிதாஸ் கார்த்தியை நெருங்கி, அவளின் முகத்தை மடியில் வைத்து,
“கார்த்தி! எழுந்திருங்க, ஒன்னுமில்ல. எழுந்திருங்க” என்று கன்னத்தை மெல்ல தட்ட அவளிடம் அசைவே இல்லை. தண்ணீரைத் தெளித்துக் கன்னத்தில் தட்ட, அவள் விழிக்கவே இல்லை.
“அண்ணா? ஏன் இப்படி?” என்று வாலி டென்ஷனாகப் பார்க்க, அவளை மெல்லத் தூக்கி அந்த சோஃபாவில் படுக்க வைத்தவன்
“நித்தி! உடனே நீ உங்க பண்ணை விட்டுக்கு வா” என்று அவனின் தோழியை அழைத்தான். மினிஸ்டர் மகாதேவனின் மகள் நித்திலா.
“ஹே! பன்னியப்பயலே! பேஷண்ட் பார்த்திட்டு இருக்கேன் டா. என்னை எங்க வர சொல்ற, பண்ணை வீட்டுக்கு?” என்று கடுப்பானாள் நித்திலா.
“நித்தி! இங்க பேஷண்ட் பார்க்கத்தான் கூப்பிடுறேன், பீ சீரியஸ். யார்கிட்டவும் தண்டோரா போடாம வந்து சேரும்மா, ப்ளீஸ்” என்றவன் பின் குரலைத் தணித்து,
“ஒருத்தவங்க மயங்கிட்டா, அதிர்ச்சின்னு நினைக்கிறேன். அதுக்கு என்ன செய்யனுமோ பார்த்து ப்ரீபேர்டா வா” என்றான்.
“யார் அவங்க, என்ன ஏஜ்? சுகர், பிபி எதாவது?” என்று நித்திலாவும் டாக்டராய்ப் பேச
“உனக்கு எவன் அந்த வயசுல ப்ரண்ட்?” என்று நித்திலா யோசிக்க
“ஜாதகம் கொடுத்தாதான் வருவியா நீ?” என்று கடுப்பாய்ப் பேசினான் காளிதாஸன். என்னவோ கார்த்தியின் இந்த நிலை ஒரு பதட்டம் கொடுத்தது. தன்னால்தானோ என்ற உணர்வு.
“டேய் லபக்கு தாஸ், பேஷண்ட் ஆணா பெண்ணா? ஏஜ்லாம் தெரியாம என்னன்னு நான் ப்ரீபேர்டா வர?” என்று நித்திலா கத்த
“பொண்ணுதான்” என்றவன் அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி சீக்கிரம் வர சொன்னான்.
இவன் அங்கிருக்கும் திவானில் உட்கார்ந்துகொள்ள, வாலி அவனிடம்
“ண்ணா, இப்படி செஞ்சிருக்க கூடாதோ தோணுது” என்றிட,
“நம்ம என்ன செய்றது வாலி? அவங்க வீட்டுப் பொண்ணுனாலும் நம்ம சக மனுஷியா நினைக்கிறோம். ஆனா அவனுங்க? பூஜா மாதிரி தற்கொலை முயற்சி செஞ்சு யாராவது இறந்திருந்தா கூட நமக்குத் தெரியாதே? வேற யாரை அவங்க வீட்ல தூக்க சொல்ற? அந்த செல்வா பொறுக்கியவா?இல்லை அவன் மகன் அந்த ஸ்கூல் படிக்கிற பையனா? ராஜரத்னம் பொண்ணுன்றதால போலீஸ் போகல, இல்லைனா நம்ம இப்போ இப்படி இங்க இருக்க மாட்டோம். இது நமக்கு பாதுகாப்பும் கூட!” என்றான் அவனின் குற்றவுணர்ச்சி மறைந்து.
“ஆனாலும் இவங்க?” என்று வாலி இழுக்க
“இதுதான் நம்ம… வாலி. எதிரிவீட்டுப்பொண்ணா இருந்தாலும் இரக்கப்படுறோம், ஆனா ஒன்னு தெரிஞ்சிக்கோ வாலி வாழ்க்கையில வழிமுறையை விட நெறிமுறை முக்கியம். நம்ம செய்ற செயல் நல்லதுன்னா நன்மை தரும்னா இது மாதிரி போறது தப்பில்லை. கூடவே அவங்களுக்கு எல்லாம் சொன்னோம் தானே?” என்றான் தெளிவாக.
“ஒரு வாரமா ட்ரை பண்ணினோம். எவ்வளவு அலட்சியப்படுத்தினான்? இன்னிக்கு இவங்கனதும் எப்படி அப்பனும் மகனும் அலறிட்டு வரானுங்க பார்த்தியா?” என்றவன் மயங்கி இருந்த கார்த்தியைப் பார்த்தபடி
“இவங்க ரொம்ப நம்பினாங்க,ஸோ அந்த அதிர்ச்சியா இருக்கும். இவங்க மேல தப்பில்லை. இவனுங்க நடிப்பு அப்படி, இவங்களுக்குக் கஷ்டமா இருக்கும் தெரியும், மயக்கம் வர அளவு நானே நினைக்கல” என்ற காளிதாஸுக்கு மகாதேவனிடம் இருந்து அழைப்பு.
“சொல்லுங்க மாமா” என்று இவன் உற்சாகமாய்ப் பேச
“மாப்ள! எங்க இருக்க நீ?” என்றார் ஆராயும் வகையில்.
“பண்ணை வீட்ல” என்றதும்
“யார் அந்த பொண்ணு?” என்று கேட்க, ‘நித்தி’ என்று பல்லைக் கடித்தான்.
“அவளைப் பேசாத, நீ பிரச்சனையை இழுத்து விட்டுக்க கூடாதுன்னு சொன்னா அவ. என்ன விஷயம்?” என்று கேட்க, மறைக்காமல் எல்லாவற்றையும் சுருக்கமாய் சொல்ல
“நான் எதாவது பண்ணியிருப்பேன்ல” என்றதற்கு
“நீங்க என்ன செஞ்சாலும் அவங்க பொண்ணைத் தூக்கினா வர பயம் இருக்காது. இங்க இருக்க போலிஸ் உங்க பேச்சுக் கேட்பாங்களா?” என்றவன்
“உங்க பண்ணை வீட்ல நடக்கறதால உங்க பதவிக்குப் பிரச்சனை வராது மாமா” என்று சொல்ல
“டேய்! டேய்! உனக்காக யோசிச்சுப் பேசினா என்னை சொல்லுவியா? பதவியை விட நீ முக்கியம்டா” என்றார் மகாதேவன். அவர் அறிவுரை சொல்லி வைக்க, நித்திலா அங்கு வர
“முதல்ல, அவங்களைப் பாரு” என்றவன்
“டாக்டர் வேலையை மட்டும் செய் நித்தி” என்றான் அதட்டலாக.
“அவ செய்றது இருக்கட்டும், நீ என்ன செய்ற?” என்று கேட்டபடி பின்னால் வந்த சிவகாமியைப் பார்த்து வாலி காளிதாஸன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
“அத்தை என்னோட ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. உனக்கு சர்ப்ரைஸ் பண்றேன் சொல்லி என்னோடவே வந்துட்டாங்க. நான் என்ன செய்ய?” என்றாள் நித்தி. பேசினாலும் கார்த்தியைக் கவனிக்க மறக்கவில்லை.
“ஏன் கண்ணா! யார் இந்த பொண்ணு?” என்றதற்கு மீண்டும் காளிதாசன் விளக்கம் சொல்ல, அவனைப் பளாரென்று கன்னத்தில் அறைவிட்டார் அவனின் அன்னை சிவகாமி.
“நீ இப்படி செஞ்சிருக்க கூடாது கண்ணா” என்று மகனைப் பார்த்துக் கடுமையான கோபத்துடன் சொல்ல, காளிதாஸன் அழுத்தமாய் நின்றான்.