அடுத்து வந்த விசிட்டர்ஸ் நாளில் சமுத்திராவை காண வளவன் சென்றான், அனுமதி கடிதத்தை கொடுத்து விட்டு, இனி அவளுக்கு தானே கார்டியன் என்பதற்கான பத்திரங்களையும் சமர்பித்தான், அவனை யோசனையோடு பார்த்தாள் வார்டன்.
சமுத்திராவுக்கு தகவல் அனுப்பியவள் வளவனை வெளியில் இருக்கும் இடத்தில் அமர சொன்னாள், அவன் சென்றவுடன் கைபேசி எடுத்து தகவல் பரிமாறினாள்.
“என்ன சார் யாருமே வரமாட்டாங்கனு நினைச்சோம் இப்போ புதுசா இவன் வந்துருக்கான், ஏதும் பிரச்னை ஆகுமா?” என்ற போது, “நாம முடிவு பண்ணது நடக்கும் நடக்கணும்” என்றான் ராஜாராம்.
அந்த காப்பகத்தில் மனச்சாட்சியை விற்றுவிடாத ஒரே ஜீவன், அங்கு பணிபுரியும் ஒரு பெண் காவலர் , .“சமுத்திரா உன்ன பாக்க விசிட்டர் வந்துருக்காங்க” என்றவர் முகமே சந்தோஷத்தில் நிறைந்திருந்தது, இந்த பெண்ணிற்கு இனியாவது நன்மைகள் நடக்கட்டும் என்று அவர் மனம் வேண்டியது.
“என்ன பாக்கவா!!” என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்பவளை பார்க்க கனிவு தோன்றியது, அவள் தலை கோதியவர் “ஆமா உன்ன பாக்கத்தான் போ போய் பாரு” என்க.
உண்மையில் மூர்த்தியாக இருக்கும் என்று தான் அவள் எண்ணினாள், நூற்றில் ஒரு பங்கு கூட வளவனை அவள் எதிர்பார்க்கவில்லை.
இவர்களின் அறைகள் இருக்கும் இடத்தில் சிறிய மதில் சுவர் இரும்பு கதவோடு இருக்கும், அதை சுற்றி பெரிய தோட்டம் போன்ற இடம் அதை மொத்தமாக அடைத்துதான் பெரிய மதில்சுவர்,பிள்ளைகளை பார்க்க வருபவர்கள் அந்த கிரௌண்டில் தான் காத்திருப்பர்.
உள்ளில் இருந்து கிரௌண்டிற்கு வரும் மதில் சுவர் அருகில் வந்தவள், விழிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டது, அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் நின்றுவிட்டாள்.
“புதுசா ஆளுங்களாம் வராங்க போல பாக்குறதுக்கு??” என்று பின்னில் இருந்து கேட்ட குரலில் ஆணி அடித்தபோல் அங்கேயே நின்றுவிட்டாள், அவளுக்கு பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்ற ராஜாராம், “இன்னைக்கு வந்தவன் உயிரோட இருக்கணுமா, இல்ல திரும்ப வராமலே போகணுமா” என்ற கேள்வியில் பயத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் அப்பனா இருந்திருந்தா கூட கொஞ்சம் யோசிச்சிருப்பேன், இவன நீ பாக்க போறியா?!!” என்க விறு விறு என்று பின்னோக்கி நடந்தவள் தன் அறையில் சென்று முடங்கிக்கொண்டாள்.
இவள் சென்ற நிமிடம் முதல் இவளை பார்த்திருந்த செம்பருத்தி ராஜாராமின் பார்வையை கண்டுகொண்டாள், வந்தவர் யாரென்று தெரியவில்லை, இவன் அவளிடம் பேசியது என்ன என்றும் தெரியவில்லை, வந்தவரிடம் எப்படி இங்கு நடப்பதை தெரிவிப்பது.
சமுத்திரையின் அருகில் சென்றவள் “சமு, சமு யாரு வந்தா” என்ற கேள்விக்கு “சொல்லமாட்டேன்” என்று தலை ஆட்டியவளை என்ன செய்வது என்று தெரியாமல் பல்லை கடித்தாள்.
மீண்டும் வந்த பெண்காவலர் “செம்பருத்தி உங்க அம்மா வந்துருக்காங்க” என்க சமுத்திராவை திரும்பி பார்த்தவள், அவரோடு நடக்க தொடங்கினாள்.
தன்னுடைய அரை வாயிலில் நின்ற வார்டன் சித்ரா “போனோமா அம்மாகிட்ட மட்டும் பேசினோமா வந்தோமான்னு இருக்கணும், வேற யார்கிட்டயாவது பேச முயற்சி பண்ண” என்று மிரட்டியவளை பார்த்து தலை அசைத்தவள் நடந்துவிட்டாள்.
அவளுடன் நடந்துகொண்டிருந்த பெண் காவலர் “அந்த கருப்பு டீ ஷர்ட்” என்று வளவனை கண் காண்பித்துவிட்டு, வளவனை நோக்கி நடந்துசென்றார்.
தாயின் அருகில் சென்று அமர்ந்த செம்பருத்திக்கு மனம் அடித்துக்கொண்டது, எப்படி சொல்ல எப்படி சொல்ல என்று பரிதவித்தவள், அருகில் இருந்த தங்கையை பார்த்து “ரோசா இங்க பாரேன் நிறைய செடி இருக்கு” என்க, “அத தான் நெறய தடவ பாத்திருக்கேனேகா” என்றாள் அவள் தங்கை.
“இன்னைக்கு ரெண்டு பெரும் நல்லா பாருங்க, அம்மா நீ அந்த கருப்பு சட்ட போட்டவர நல்லா பாத்துக்கோ, முகம் மாறாமல் செடிகளை பார்ப்பதை போலவே பேசிக்கொண்டிருந்தாள்.
பின்பு வேறு புறம் திரும்பி அந்த பக்க செடிகளை காட்டிக்கொண்டே “அவர் சமுத்திராவோட மாமா அவர்கிட்ட இங்க நடக்குறது சொல்லு, அந்த புள்ளைக்கு ஏதோ பெரிய ஆபத்து வருது எப்படியாவது காப்பாத்த சொல்லுமா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் வேளை.
வளவனிடம் வந்த அந்த பெண் காவலர் “சார் அவ பாக்க விரும்பலைன்னு சொல்லிட்டா, இனிமே பாக்க வராதீங்கனும் சொல்லிட்டா” என்றவர் “போய்டாதீங்க வெளில கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணுங்க” என்று மெல்லிய குரலில் கூறி “கிளம்புங்க சார் இங்கல்லாம் நிக்க கூடாது, அதான் பாக்க மாட்டேன்னு சொல்லிடுச்சுல்ல” என்றவர் அடுத்தவரை பார்க்க சென்றுவிட்டார்.
அவர் சொல்ல வந்த விஷயத்தை கிரகிக்க முடியாமல் நின்றவன், அந்த இரும்பு கதவை வெறித்திருந்துவிட்டு மெல்ல வெளியேறினான்.
“புள்ள அந்த தம்பி போய்டுச்சு” என்றார் செம்பாவின் தாயார், “நீ இப்போ உடனே போன அந்த பரதேசிக்கு சந்தேகம் வந்துடும், நீ இரு” என்றவள் தங்கையிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தாள்.
“நேரம் ஆச்சு கிளம்புங்க” என்று குரல் வரும் வரை காத்தவள் எப்பொழுதும் போல அவர்களுக்கு பொறுமையாக விடை கொடுத்தாள்.
அவர் சாதாரணமாக போவதை போல வெளியேறினார், அனால் உள்ளுக்குள் உதறல் எடுத்தது, சிறிதாக ஒரு சந்தேகம் வந்தாலும் தன் மகளுக்கும் ஆபத்தாக முடியும்.
இன்னும் இரண்டு மாதத்தில் செம்பருத்தியின் தண்டனை காலம் முடிகிறது, மகள் பத்திரமாக வந்து சேர்ந்தால் போதும் என்பதே அவரின் வேண்டுதல்.
வெளியில் வந்தவர் பார்த்த வரை அவனை எங்கும் காணவில்லை, எந்த பக்கம் போய் பார்க்க முடியும், பத்தடி தூரத்தில் இருந்த பஸ் ஸ்டாப் செல்ல அதன் மூலையில் கையில் முகம் புதைத்து அமர்ந்திருந்தான் வளவன்.
அவன் அருகில் இருந்த இடத்தில் மகளை அமர்த்தியவர் பார்வை சுற்றிலும் பார்த்துக்கொண்டே “எங்ககூட பஸ்ல ஏறுங்க தம்பி” என்றார்.
சட்டென்று கேட்ட குரலில் அவன் நிமிர்ந்து பார்க்க மீண்டும் “வர்ற பஸ்ல ஏறுங்க” என்றவர் முன்னாள் ஏறிக்கொண்டார், இவன் பின்னால் ஏறிக்கொள்ள “மூன்று கோயம்பேடு” என்று டிக்கெட் வாங்கியவர் மகளுடன் அமைதியாக நின்று கொண்டார்.
அவர் இறங்கும் இடம் பார்த்து இவன் நின்றிருக்க கோயம்பேட்டில் இறங்கியவர், பேரூந்துநிலையத்தின் உள்ளே நிழல் தேடி அமர்ந்து கொண்டார்.
இவன் அருகில் சென்றவுடன் “நா செம்பருத்தியோட அம்மா, உங்க சமுத்திராவோட என் பொண்ணுதான் இருக்கா, அவ சொல்லித்தான் உங்ககிட்ட பேசுறேன்” என்றவர் தனக்கு தெரிந்தவரை அங்கு அவளுக்கு நடந்ததை கூறினார்.
இப்பொழுதும் ராஜாராமின் மிரட்டிலில் தான் அவள் இவனை காண மறுத்தாள் என்பதையும் கூறினார், பார்த்திபனிடம் பகிரப்பட்ட தகவலின்படி இவர்கள் வரும் நேரம் அவனும் பைக்கில் கோயம்பேடு வந்து சேர்ந்திருந்தான்.
“என்ன மச்சான் இது, என்னடா நடக்குது அங்க” என்று அவன் பொறுமை, இவனுக்கு மண்டை காய்ந்தது, இது மிகப்பெரிய இடியாப்ப சிக்கலாக இருந்தது, யாரை முதலில் சரிக்கட்ட.
எழுந்தவன் அங்கேயும் இங்கேயும் நடக்க தொடங்கினான், ஐந்து நிமிடத்திற்கு பிறகு செம்பாவின் தாயிடம் அவரை பற்றிய தகவல் அனைத்தும் பெற்றவன், கொஞ்சம் பணத்தை அவர் கையில் வைத்து.
“எங்க மேல நம்பிக்கை இருந்தா ஊருக்கு போய் உங்களுக்கு வேண்டிய சாமானை எடுத்துக்கிட்டு வண்டிபிடிச்சு வாங்க, இதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய நாங்க உதவி பன்றோம்” என்றவன் தங்கள் போன் நம்பரையும் அவரிடம் பகிர்ந்து, அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்தவன் முதல் வேலையாக சமுத்திரையின் கேஸ் எடுத்து நடத்திய வழக்கறிஞரை தொடர்புகொண்டு “என்ன செய்ய இயலும்” என்று கலந்தாலோசித்தான்.
“மிஸ்டர் வளவன், அங்க பாதுகாப்பு குறைபாடுன்னு நம்மால ப்ரூவ் பண்ண முடியாது, அதுக்கு சரியான ஆதாரம் வேணும், சரியான ஆதாரம் கைல இல்லாம நாம கேஸ் போட்டா அது சமுத்திரையை இன்னும் பாதிக்கும்”.
“ஒன்னு வேனா பண்ணலாம், மறுபடியும் வழக்க எடுத்து நடத்த மனு கொடுக்கலாம், தர்ஷினியோட வாக்குமூலம் தான் சமுத்திரைக்கு எதிரான முக்கியமான ஆதாரம், அத அந்த பொண்ணு தங்கச்சி மேல இருந்த கோவத்துல பொய் சொல்லிட்டேன் இத அவ பண்ணலன்னு சொன்னா நமக்கு கொஞ்சம் வாய்ப்பிருக்கு” என்றவர்.
“நீங்க தர்ஷினிகிட்ட பேசிப்பாருங்க, என்னால முடிஞ்ச எந்த உதவியும் நா செய்றேன்” என்க அவருக்கு நன்றி உரைத்து அன்று இரவே தர்ஷினியை தேடி சென்றான்.
“முடியாது முடியாது, நா சாட்சி சொல்ல மாட்டேன், மிஞ்சி மிஞ்சி போனா நீ என்ன பண்ணுவ? என்ன அடிப்ப அதுக்கும் மேலா கொலை பண்ணுவ, ஆனா அந்த ஆளு ஒரு பொன்னால நெனச்சு பாக்க முடியாத அளவு டார்ச்சர் பண்ணி கொள்ளுவான், எப்படியும் சாவு நிச்சயம், அந்த ஆளு கையாள சகராதவிட நீங்களே கொன்னுக்கோங்க, ஆனா அவளுக்கு ஆதரவா சாட்சி சொல்லமாட்டேன்”, வெறி பிடித்தவள் போல் அலறிக்கொண்டிருந்தாள் தர்ஷினி.
“ஏய், உன் கைய கால கெட்டி தூக்கிட்டு போய் சொல்லவைப்பேன்” என்ற பார்த்திபனை தடுத்த வளவன், “இன்னைக்கு அவ அனுபவிக்கற எல்லா வேதனைக்கும் காரணம் நீ மட்டும் தான், இதுக்கான பலன் சீக்கிரமே உன்ன வந்து சேரும்” என்றவன் வெளியில் இறங்கிவிட.
பின்னே வந்த பார்தி “என்ன மச்சான், எதுக்கு இவளை சும்மா விடுற?”.
“தெரிலடா, எனக்கு தெரியல, எனக்கு ஒண்ணுமே தெரியல” என்றவன் தலையை பிடித்துக்கொண்டான்.
சிதம்பரம் நோக்கி பயணம் தொடங்கினான் வளவன், கல்லூரி நண்பன் ஒருவன் வழி சந்தோஷின் தாய் தந்தையை பற்றி அறிந்துகொண்டான்.
மகனின் இறப்பிற்கு பிறகு படுக்கையில் முடங்கிய சந்தோஷின் தாய் இன்றோ நாளையோ என்று கிடக்க, மகனை வாரிக்கொடுத்துவிட்டு மனைவியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருப்பதை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தார் சிவநேசன்.
தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயவளையை பற்றி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் உழன்றுகொண்டிருந்தார், அக்காவின் உடல்நிலையையும் மாமாவின் நிலையையும் கருதி அவர்கள் வீட்டோடு வந்துவிட்டான் அண்ணாமலை அவனின் குடும்பத்தோடு, அப்படி தான் வெளியில் சொல்லிக்கொண்டார்கள் அவன் அபிமானிகள்.
வீட்டில் பல வருடங்களாக வேலை செய்துகொண்டிருந்த அனைவரையும் மாற்றி அவனுடைய ஆட்களை வைத்துக்கொண்டான், சமையல் வேலை செய்துவந்தவர் மட்டுமே அங்கு நீடித்தார்.
வெளியில் இருந்து யாரும் வீட்டிற்குள் வர அனுமதி இல்லை, வரும் ஒன்றிரண்டு சொந்தங்களையும் சிவநேசனை பார்க்க விடாமல் இவனின் ஆட்களே பேசி அனுப்பிவைத்தனர்.
வீட்டிலேயே வைத்து சந்தோஷின் அன்னைக்கு மருத்துவம் நடந்து கொண்டிருந்தது, அதற்காக ஒரு பெண் நர்ஸ் மட்டும் அங்கேயே தங்கியிருக்கிறாள், அதோடு குடும்ப மருத்துவர் மட்டும் வந்து செல்கிறார்.
“சிவநேசனை அணுகுவது முடியாத காரியம்” என்ற நண்பனுக்கு அவன் எந்த பதிலையும் உரைக்கவில்லை, அவனால் அப்படி விடமுடியாதே இது அவனின் வாழ்வல்லவா
அவன் திரும்பி வந்த ஒரு வாரத்தில் செம்பருத்தி விடுதலை ஆகி வந்துவிட்டாள்.
“என்ன பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என்ன மாதிரி ஒருத்திய சுமக்க வேண்டிய அவசியம் அவர்க்கு இல்ல செம்பா, அவங்க குடும்பம் ரொம்ப செல்வாக்கானது என்னமாதிரி ஒருத்திய அந்த குடும்பதோட வாசலை கூட மிதிக்க விட மாட்டாங்க, அவங்கள நா எந்த தப்பும் சொல்ல மாட்டேன், அவர் வாழ்க்கையோட பெரிய அவமானமா தான நா இருப்பேன்”.
“அவரை நீ இப்போ பாத்தல்ல செம்பா, எவ்ளோ கம்பீரமா அவ்ளோ அழகா ஆனா நா?” என்றபோதே அவள் விழிகள் அருவியை பொழிய “எனக்கு தான் குடும்பம் இல்லாம போய்டுச்சு, எனக்காக பார்த்து அவரோட குடும்பம் அவர்க்கு இல்லாம போயிடக்கூடாது” முடிக்கவிடாமல் குரல் இடறி வார்த்தை சிக்கிக்கொண்டது.
செம்பருத்தியின் வாய்மொழியாக சமுத்திரை அவளிடம் பகிர்ந்த அனைத்தையும் கேட்டவன், நிறையும் விழிகளை மறைத்து தொண்டைக்குழியை அடைக்கும் வேதனையை உள்ளில் அடக்கி, தன் அறையில் நுழைந்து கதவடைத்தான்.
செம்பருத்தியின் தாய்க்கு இவர்கள் வேலை செய்யும் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங்கில் வேலை வாங்கி கொடுத்திருந்தனர், ஒற்றை படுக்கை அறைகொண்ட சிறிய வீடு ஒன்றையும் வாடைக்கு பிடித்துக்கொடுத்து, செம்பருத்தியின் தங்கை ரோசாவை அருகில் இருந்த பள்ளியிலும் சேர்த்திருந்தான்.
செம்பருத்திக்கு தெரிந்த வேறு இடத்தில் வேலை வாங்கி கொடுத்தான், சிவநேசனை பார்த்து பேசும் வாய்ப்பிற்காக அணைத்து வழிகளையும் முயன்று கொண்டிருந்தான்.
அதோடு வரதனை எப்படியாவது பிடிக்க வேண்டும் அவன் சாட்சி சொன்னால் மட்டுமே சமுத்திரையை விடுவிக்க முடியும், ஆனால் தர்ஷினியே சொல்ல மறுக்கும் ஒரு விஷயத்தை வரதன் கூற வழியுண்டா? அவனை பேசவைக்க என்ன வழி என்றும் மண்டையை உடைத்துக்கொண்டிருந்தான்.
இதற்கிடையில் தன் தலையில் இத்தனை பெரிய இடி இறங்கும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை