வார்டன் சித்ரா வீட்டில் கடந்த பத்து தினங்களாக ஏதோ அமானுஷ்யம் போல, முதல் நாள் பால் பாக்கெட் எடுக்க சென்றவள் கையில் பாம்பு தட்டுப்பட மூர்ச்சையாகி கீழே விழுந்தாள்.
இரண்டாம் நாள் வீட்டின் ஜன்னல் கம்பியில் சுற்றிக்கிடந்தது பாம்பு, மூன்றாம் நாள் வேலைக்கு சென்ற கணவன் காரை யாரோ திருடி விட்டதாக வந்து நின்றான்.
நான்காம் நாள் கொடியில் கிடந்த துணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாக கிடந்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள் தொடர்ந்து பிரச்சனைகள்.
இறுதினங்கள் அமைதியாக கழிய ஏழாம் நாள் காலை எந்த குழாயிலும் தண்ணீர் வர வில்லை, மேல டேங்கில் ஏறி பார்க்க சென்ற கணவன் குடல் வெளியில் வந்துவிடும் அளவு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
என்னவோ என்று பதரி வந்தவர்கள் கண்டது மொட்டைமாடி முழுதும் ஓடிக்கொண்டிருக்கும் தவளைகளை, டேங்கில் முழுதுமாக தவளைகள் சிறிதும் பெரிதுமாக.
“கொஞ்சம் கஷ்டம் மேடம், டேங்க்ல இருந்து தண்ணி போற பைப் கொஞ்சம் பெருசு, ஆனா வீட்ல மத்த எடத்துல தண்ணி வர பைப் சின்னது, உள்ள எவ்ளோ தவளைங்க போய் அடச்சுருக்குனு தெரில, வெளில எடுக்கணும்னா பைப்பை சுவத்துல இருந்து தோண்டி எடுத்து பாக்கணும், வேற மாத்தணும் வீடு புல்லா, வேல அதிகம் மேம் டைம் எடுக்கும்”.
“என்னமோ பண்ணுங்க” என்று அவர்களிடம் கொடுத்துவிட்டனர், சித்ராவிற்கு மனதே சரியில்லை, சஸ்பென்ஷனனுக்கு பிறகு அனைத்தும் தவறாக நடக்கிறது, குடும்ப ஜோசியரை போய் பார்த்தால் என்ன? என்ற கணவன் மனைவி கலந்துரையாடல் அப்படியே வளவனிடம் சென்று சேர்ந்தது.
வீட்டில் வேலைக்கு வந்த ஒருவனை விலைபேசி வாங்கிவிட்டனர்.
அதற்க்கு அடுத்த நாட்களில் எலுமிச்சையும் கோழிதலைகளும் வீட்டை சுற்றி பல இடங்களிலும் கிடைத்தது, மொட்டைமாடியில் இரவில் யாரோ நடக்கும் ஓசையும், வேண்டாத சத்தங்களும் என்று பயம் மெல்ல மெல்ல அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தது.
முடிவாக சித்ராவின் அன்னையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களின் குடும்ப ஜோசியரை பார்க்க சென்றனர் தம்பதிகள், அவர் அங்கு மிக தீவிரமாக வளவன் எழுதி அனுப்பிய காகிதத்தில் இருந்ததை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார், சற்றுமுன் வரை அவரின் கழுத்தில் இருந்த கத்தி இப்பொழுது ஆப்பிளை நறுக்கிக்கொண்டிருந்தது.
வந்தவர்கள் தங்களின் பிரச்சனைகளை கூறிமுடிக்க அவர்கள் பேசியது எதுவும் அவர் மனதில் ஏறவில்லை, தான் கூறவேண்டிய டயலாகை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தவர் அணைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, “இங்க பாருங்கம்மா செஞ்ச பாவம் தான் இப்படி தொரத்துது, செய்வினை ரொம்ப உக்கிரமா இருக்கு, நீங்க உள்ள வந்தப்போவே எனக்கு அது தெரிஞ்சிடுச்சு, பழனிக்கு போய் குடும்பமா மொட்டை போட்டு சாமி கிட்ட மன்னிப்பு கேளுங்க, நூறு பேருக்கு அன்னதானம் போடுங்க, இந்த தகிட வீட்டோட ஈசானி மூலைல புதைச்சுவைங்க” என்று அனுப்பி வைத்தார்.
பயபக்தியாக அவர் கூறியதை செய்தவர்கள் பழனிநோக்கி புறப்பட்டனர், மொட்டைபோட்டு பழனியாண்டவரை தரிசித்து விட்டு நூறு பேருக்கு அன்னதானம் வழங்க பணம் கட்டிவிட்டு வர, உடைமைகளையும் உடனிருந்த மகனையும் காணவில்லை.
சித்ரா தலைவலி காரணமாக அங்கிருந்த பெஞ்சில் படுத்திருக்க, மகள் மொபைலில் தலை கொடுத்திருந்தாள், அருகில் வந்த சித்ராவின் கணவன் “தம்பி எங்க” என்க “இங்கதான் இருந்தான்” என்றாள் சுற்றி பார்த்துக்கொண்டு.
“சித்ரா சித்ரா புள்ள எங்கடி” என்றவனின் கேள்விக்கு திரு திரு என்று விழித்தவள் அப்பொழுதான் உடமைகளும் மகனும் இல்லை என்பதை அறிந்தாள், முன்பே ஒரு விதமான மனஉளைச்சலில் இருந்த அவளின் கணவன், மகளின் பொறுப்பின்மையில் சூடாகி விட்ட அறையில் மொபைல் சிதறிவிழுந்து உயிர்விட்டது.
அதிர்ச்சியான மகள் “ஏன் இப்போ அடிசீங்க? மொட்டை போட மாட்டேன் சொன்னேன்ல, என் பேச்ச நீங்க கேட்டிங்களா? நீங்க சொல்றதை மட்டும் நா கேட்கணுமா, நா யாரையும் பார்த்துக்க மாட்டேன், நீங்க சொல்ற எதையும் கேட்கமாட்டேன்” என்று அலற தொடங்கினாள், ஏற்கனவே தலைவலியில் இருந்த சித்ராவுக்கு மண்டை வெடிப்பது போல இருந்தது.
“ஐயோ மகனை எங்கு போய் தேடுவது” அவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது, மகன் தாயின் மொபைலில் விளையாட கோபமாக இருந்த மகளுக்கு கணவனின் மொபைலை வாங்கி தந்திருந்தார் சித்ரா, அதுவே வினையாக முடிந்திருந்தது, யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை, யாருடைய தொலைபேசி எண்ணும் நினைவில் இல்லை, அலைபேசியும் இல்லை மகன் அலைபேசியோடு காணாமல் போயிருந்தான்.
சித்ராவின் அலைபேசி எண்ணிற்கு பூத்தில் இருந்து அழைத்துநோக்க, அது ஸ்விட்ச்ட் ஆப் என்று வந்தது, அங்கேயே போலீசில் கம்பளைண்ட் கொடுத்தனர், ஆனால் மகனின் புகைப்படம் எடுக்க முடியாமல் கையில் இருந்த அலைபேசி சுக்குநூறாக உடைந்திருந்தது, அடுத்து என்ன என்ற உணர்வின்றி அமர்ந்திருந்தவர்களின் அருகில் வந்து விழுந்தது ஒரு காகித உருண்டை .
பிரித்து பார்க்க “உங்கள் மகனை மீண்டும் காண ஒரே வாய்ப்பு, ஒருவாரம் அவகாசம், இருபத்தி ஐந்து லக்ஷம் தலா ஒரு லக்ஷம் வைத்து இருபத்தி ஐந்து அநாதை ஆசிரமங்களுக்கு கொடுக்க வேண்டும், நூறு பவன் இருபது பெண்களுக்கு, தலா ஐந்து பவன் வீதம் திருமணத்திற்கு கொடுக்க வேண்டும், இதை செய்து முடிக்கும் அடுத்த நாள்உங்கள் மகன் உங்களை வந்து சேருவான் எந்த சேதாரமும் இல்லாமல், தவறினால் மொத்தமாக மகனை மறந்துவிடவும்”.
அந்த நாள் முழுவதும் காத்திருந்தும் வேறு எந்த தகவலும் வரவில்லை.கடிதத்தை பார்த்த போலீஸ் “இத வெச்சு ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது, முதல் விஷயம் இது ஒரு ப்ரிண்டவுட், ரெண்டாவது குறிப்பிட்டு இவங்களுக்கு குடுங்கன்னு யாரையும் சொல்லல, அதனால நம்மால குறிப்பிட்டு ஒரு நபரை பாலோ பண்ண முடியாது, அவங்க மறுபடியும் தொடர்புகொள்ளுவாங்கனு நமக்கு எந்த நம்பிக்கையும் இல்ல, ஏன்னா பணம் அவங்களுக்கு தேவ இல்ல”.என்றனர்.
இறுதினங்கள் அங்கேயே வீணாக போனது, மகனை அங்கே தேடி அலைந்து கொண்டிருந்தனர், மூன்றாம் நாள் சித்ராவின் கணவன் இனி இங்கிருப்பதில் அர்த்தம் இல்லை “என் மகனை காப்பாற்ற என்ன வழியோ அதை செய்கிறேன்” என்க சென்னைக்கு புறப்பட்டுவிட்டனர்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி இன்னும் மிச்சம் இருந்தது, வீடு மொத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தது, ஒரு குண்டூசி கூட இல்லை அடுத்த வீட்டில் இருந்தவர்கள் “என்னங்க இனிமே இந்த வீட்டுக்கு வர மாட்டோம் இந்த வீட்ல செய்வினை இருக்கு, அதனால ஆளுங்க வண்டி எடுத்துட்டு வருவாங்க பொருள் எல்லாம் ஏத்திட்டாங்களானு பாருங்கன்னு சொன்னிங்க” என்க நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்டாள் சித்ரா.
முப்பது பவன் நகை, நான்கு லக்ஷம் ரொக்கம், வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் அனைத்துமே பார்த்து பார்த்து வாங்கிய பொருட்கள், இரண்டு இடங்களில் நிலம் வாங்கிய பத்ரம் கூட அதில் இருந்தது, தண்ணீர் குடிக்க ஒரு சிறிய டம்பளர் கூட இல்லை, வீட்டின் பத்திரம் மட்டும் அங்கு நடு ஹாலில் கிடந்தது ,அது எதற்கு என்பது விரைவிலேயே புரிந்தது.
பயித்தியம் பிடிக்காத குறை, இனியும் தாமதிக்க முடியாது இதுஏதோ பெரிய பிரச்சனை என்று முடிவு செய்த சித்ராவின் கணவன் அந்த முடிவை எடுத்தான்,.
“என்ன மாப்ள இப்படி பேசுறீங்க? எத்தனை லக்ஷம்? இவங்க சும்மா மிரட்டுறாங்க, ஒரு வாரம் போச்சுன்னா திரும்ப கூப்பிடுவாங்க, கொஞ்சம் இருங்க மாப்ள அவசரப்படாதீங்க” என்றார் சித்ராவின் தாய்.
“வெளில போங்க” என்ற அவனின் அலறலில் “மாப்ள” என்றும் “என்னங்க” என்றும் அழைப்புகள், “மூச், என்ன ஜென்மம் நீங்க, இந்த எல்லா பிரச்சனைக்கும் முழு காரணம் நீங்களும் உங்க பொண்ணும்தான், தலப்பாட அடிச்சுக்கிட்டேன், வேலைக்கு போனோமா வந்தோமான்னு இரு மத்தவங்க வாழ்க்கைய கெடுக்காதான்னு, அம்மாவும் பொன்னும் கேக்கல இப்போ அது எல்லாம் என் பையன் தலைல எறங்கிருக்கு” என்று இரைந்தவன்.
முதலில் பேங்கில் சென்று பேச, இவர்களின் எந்த ஆதாரமும் கையில் இல்லை, பணம் அவர்களுடையது என்றாலும் அதை இப்பொழுது கொடுக்க இயலாது.
பேங்கில் ஒரு மூன்று லக்ஷம் மட்டுமே இருந்தது, அதை வைத்து ஒன்றும் செய்ய இயலாது, வீட்டின் பத்திரம் நினைவு வர அதை விற்க ஏற்பாடு செய்தான், அவனுடைய அவசரம் புரிந்து வெறும் ஐம்பது மட்டுமே தர முன்வந்தனர்.
பணம் இரண்டு நிபந்தனைகளுக்கே சரியாக போய்விடும், அனைத்தையும் செய்து முடித்த அடுத்த நாள் பிள்ளை வந்து சேர்ந்தான், எந்த வசதிகளும் இல்லாத ஒரு நடுத்தர வீட்டிற்கு கூட்டிவந்தனர், சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு, அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டும், கணவன் மனைவி இடையில் பெரிய விரிசல் மனைவியை ஒதுக்கி வைத்தான், பிள்ளைகள் ஆடம்பர வாழ்வு இல்லாமல் பெற்றவர்களை மதிக்காமல் திரிய தொடங்கினர்.
மொத்தத்தில் வாழ்வு உண்மையில் சாபமாக மாறியது. வீட்டின் நிம்மதியின்மை குடும்ப தலைவனை குடிகாரனாக மாற்றியது, கொஞ்சம் செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, வேலைக்கு செல்ல ஒரு வண்டி கூட இல்லாத நிலை, மற்றவர்களின் ஏளனப்பார்வை, கண்முன்னே குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு இருப்பதை வேதனையோடும் இயலாமையோடும் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த சித்ராவின் முன் ஒரு தினம் வந்து நின்றான் வளவன்.
அவன் நின்ற தோரணையே சொன்னது அனைத்தும் அவனின் செயல் என்று, “உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கான்னு பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்”, என்றவன் இதழ்களில் ஏளனப்புன்னகை “வேற வேலைக்கு இப்போவே முயற்சி பண்ணிக்கோ, உன் வேலைய உனக்கு திரும்ப கிடைக்க விடமாட்டேன்” என்றவனின் விழிகளில் அவள் மீதான வன்மம் நிறைந்து நின்றது.