தரங்கெட்ட தகப்பனுக்கு தருதலையான மகன், போதுமே!! சமூகத்தை அழிக்க, தாய்க்கு சக்கரக்கட்டி தந்தைக்கு வெல்லக்கட்டி, அனைத்தும் செய்ய சுதந்திரம், பத்தாம் வகுப்பிலே விரும்பிய பெண்ணை மிரட்டி தனக்கு அடிமையாக வைத்திருந்தான், நண்பர்களுடன் சிறிய அளவில் போதை பழக்கமும், அதை கெட்டியாக பிடித்துக்கொண்டனர் இவர்கள்.
விளக்கமாறுக்கு பட்டுக்குஞ்சம் வாய்த்த போல, இந்த தங்கக்கட்டிக்கு பேரு சக்ரவர்த்தி, இவனை போல உருப்படாத சில ஜென்மங்களுடன் அவனின் வீட்டில், அவன் அறையில் குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஆடிக்கொண்டிருக்க, அவனின் உயிர் தோழன் அவனை பால்கனிக்கு தள்ளிக்கொண்டு போனான்.
“என்னடா” என்று இவன் கடுப்படிக்க, “கொஞ்சம் நேரம் அமைதியா நா சொல்றத கேளு, பிளஸ் டூ படிக்குற அந்த ஷ்யாம் இருக்கான்ல”.
“ஆமா அவனுக்கு என்ன, அவன் அப்பன் பெரிய பிசினெஸ் மேன்னு அலம்பல் பண்ணுனான், எங்க அப்பாகிட்ட சொல்லி அவனை தட்டி வெச்சாச்சே” என்று பெருமை பேசினான், உண்மையில் சும்மா இருந்த அவனை இவனும் இவன் நண்பர்களும் வம்பிழுக்க, கோவத்தில் அவன் இவனை அடிக்க ராஜாராம் அவனையும் அவன் தந்தையையும் அழைத்து மகனை கஞ்சா கேசில் உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டி கணிசமான தொகையை அவரிடம் இருந்து கறந்து விட்டான்.
“அவன் இப்போல்லாம் ரொம்ப சூப்பரா படிக்குறான், எல்லார்கிட்டயும் ரொம்ப நல்ல பேரு வேற” என்க “அதுக்கு என்னடா நமக்கு தான் அதல்லாம் வராதே”.
“அவனுக்கு மட்டும் வந்தா செய்றான்”.
“என்னடா சொல்ற?”, “மச்சான் மார்க்கெட்ல புதுசா ப்ளூ ஹெவன்னு ஒன்னு இறங்கியிருக்காம், இது போதைக்கு இல்ல நம்ம மூளை செல் எல்லாத்தையும் ரொம்ப ஆக்ட்டிவா வெச்சுக்குமாம், படிச்சதெல்லாம் சிட்டி ரோபோ மாதிரி படமா தெரியுமாம்”.
“யாருடா சொன்ன?”.
“ஷ்யாம் தான் மச்சான், நேத்து அவன் ஸ்பெஷல் கிளாஸ் போறதுக்கு முன்னாடி பாத்ரூம்ல ஏதோ ஒரு மாத்திரை மாதிரி சாப்பிட்டான், அதான் புடிச்சு விசாரிச்சேன் உண்மையா சொல்லிட்டான், அது ரொம்ப விலை அதிகமாம், அவங்க அப்பன் காச எப்படில்லாம் செலவழிக்கிறான் பாரு” என்க.
“இது உண்மையா?”.
“உண்மை மச்சான், நா கூட ஹாலிவுட் படத்துல பாத்திருக்கேன்”.
“நாம எதுக்குடா செலவு பண்ணனும், அவனே நமக்கும் வாங்கி தருவான்” என்று திமிராக கூறி சிரிக்க நண்பனும் அவன் சிரிப்பில் இனைந்து கொண்டான்.
அடுத்த நாள் நண்பர்கள் இருவரும் அவனை தனியாக பள்ளியின் பின்புறம் அழைத்துச்சென்று “ஏய் ப்ளூ ஹெவென் டேப்லெட் போடுறல” என்க, “அப்படினா!!” என்றான் அவன் “ஒய் என்ன லந்தா, மொகராய பேத்துடுவேன், நீ அத போடுற எனக்கு தெரியும், எங்களுக்கும் நாளைல இருந்து அது வேணும்”.
“என்ன வெளயாடுறியா அது ஒரு டேப்லெட் எவ்ளோ தெரியுமா, அதெல்லாம் முடியாது”.
“உன்கிட்ட முடியுமா முடியாத கேக்குல, தர அவ்ளோ தான் இல்ல நீயும் உன் அப்பனும் சேந்து இந்த பிசினெஸ் பண்றீங்கன்னு என் அப்பாவை வெச்சு உள்ள தள்ளிடுவேன்” என்றவன் துள்ளலுடன் நடந்து செல்ல ஷ்யாமின் முகத்தில் புன்னகை.
மாடல் எக்ஸாம் தொடங்கியிருந்தது, எதிர்பார்த்த நாட்கள் வந்துவிட்டது, முதல் இரண்டு பரீட்சைக்கு அவனிடம் மாத்திரையை கொடுத்தான் ஷ்யாம், மூன்றாம் நாள் மாலை மாத்திரையை கொடுத்துவிட்டு அவனின் பையை சரிசெய்யும் போது ஒரு சிறிய கவர் வெளியில் விழுந்தது, ஷ்யாம் பதறி எடுப்பதற்குள் அதை சக்கரவர்த்தி எடுத்து விட்டான்.
“ஏய் அத குடு, உனக்கு அது தேவையில்ல” என்க, அதை திறந்து பார்க்க கொஞ்சம் போதை மருந்து நான்கு சிறிய பாக்கெட்டாக இருந்தது, அதை தன்னுடைய பாகில் வைத்துக்கொண்ட சக்கரவர்த்தி “போடா போடா” என்று ஷ்யாமை ஏளனம் செய்து சென்றான்.
அடுத்த நாள் பரீட்சை நடந்து கொண்டு இருந்த நேரம், ஒரு ஜீப் நிறைய நார்க்கோடிக்ஸ் (போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்) பள்ளியின் உள் வந்து ப்ரின்சிபாலின் அனுமதியுடன் சக்ரவர்த்தியை வகுப்பில் இருந்து அழைத்து வந்து பரிசோதித்தனர்.
அவனின் ரத்தத்தை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர், அவனின் உடமைகளை சோதனை செய்ய, பாகில் சில டேப்லேட்ஸ் கிடைத்தது.
அவனை அவர்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர், கிடைத்த தகவல் தந்தைக்கும் பங்கிருப்பதாக கூறியிருக்க வீட்டை பரிசோதனை செய்து அங்கிருந்து சில பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பத்திரிக்கை துறைக்கும் சேர்த்தே வளவன் தகவல் அனுப்பியிருக்க சரியான ஹாட் நியூஸிற்காக அவர்களும் ஆஜரானார்கள், அனைத்திலும் ராஜாராம் பற்றியும் மகனை பற்றியும் நேரலை விவாதங்கள்.
தந்தை மகன் இருவரும் போலீஸ் பிடியில், விசாரணை தொடங்கப்பட தோண்ட தோண்ட ராஜாராமின் லீலைகள் வெளிவர தொடங்கியது, கணக்கில் வராத பணம், சொத்துக்களின் கணக்குகள் வேறு தனியாக.
மகன் போதை பழக்கத்திற்கு அடிமை என்று ரத்த பரிசோதனை காட்டிக்கொடுக்க, போதை மருந்து வைத்திருந்தது, உபயோகித்து, அதை மாணவர்களுக்கு விற்றது என்று வழக்குகள் பதியப்பட்டது.
ஆதாரமாக ஷ்யாம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரம், அன்று அவனை மிரட்டி ப்ளூ ஹெவென் கேட்ட நாளில் இவனின் நடவடிக்கையை ஷ்யாமிடம் பொருத்தப்பட்ட பட்டன் கேமரா மூலம் அவன் பேசிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.
அதில் தங்களுக்கு வேண்டியதை மட்டும் வெட்டி வெட்டி சேர்த்து அவன் மாணவர்களை மிரட்டி ட்ரக்ஸ் விற்றதாக மாற்றிவிட்டார்கள்.
சக்ரவர்த்தியை சிக்க வைக்க வழி தேடியவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தான் அவனால் பாதிக்கப்பட்ட ஷ்யாம், அவனிடமும் அவன் தந்தையிடமும் நேரில் சென்று பேசி அவர்களின் உதவியை கோரினான் வளவன்.
எதை சொல்லி தன்னையும் தன் மகனையும் மிரட்டினார்களோ, அதே வழக்கில் அவர்கள் கைதாவ ஷ்யாமின் தந்தை உதவ முன்வந்தார், அதன்படி அந்த போதை மருந்தை எடுத்ததால் தன்னால் நன்றாக படிக்கமுடிவதாக உளறியது போல நடித்தான்.
எப்படியும் அதற்காக ஷ்யாமை மிரட்ட வருவான் என்பது நிச்சயம், அதை காத்திருந்து படம் பிடித்துக்கொண்டனர்.
அவன் மேல் சுமத்தப்பட்ட மற்றொரு குற்றம், உடன் படித்த மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டியது, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பேசினான் வளவன்.
அது வரையுலுமே அவர்களுக்கு தங்கள் மகள் இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரியவில்லை, கேட்டபோது “அவன் வீட்டில் கூறினால் ஆசிட் வீசுவேன்” என்று மிரட்டியதாகவும் “என் தந்தை என்னை காப்பாற்றுவார்” என்று கூறியதாகவும் அழுதாள்.
பல மாதங்களாக மகளிடம் காணப்படும் ஒதுக்கம் ஏன் என்று புரியாத பெற்றோருக்கு இப்பொழுது புரிந்தது,
இருவரும் வேலைக்கு செல்ல, மகளை பெரிதாக கவனிக்க வில்லை.“ஒரு ஆணை விட பெண்ணிற்கு தைரியம் அதிகம் இருக்க வேண்டும், அடுத்த முறை உன்னை உன் அனுமதி இன்றி நெருங்கும் எவனையும் அடித்து வீழ்த்தும் கலையை முதலில் கற்றுக்கொள்” என்ற வளவன்.
“பெண்ணை எளிதில் வெல்ல இந்த சமூகம் பயன்படுத்தும் மிக கொடிய ஆயுதம் அவளின் பயம், உங்களின் தன்னம்பிக்கையை உடைப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது”.
“உன்ன அவன் மிரட்டினதும், அடுத்தது என்னனு நீ யோசிக்கறதயே மறந்துட்ட, உன்னோட பயத்தை கொஞ்சம் தள்ளிவெச்சு நீ யோசிச்சிருந்தா உன் முன்னாடி பல வழிகளும் திறந்திருக்கும்” என்றவன்.
அவள் தலை கோதி “உன் குடும்பம் உன்னோட இருக்கு, அப்படியும் நீ உனக்காக போராடலை”.
“தாங்க வேண்டிய குடும்பம் இல்லாம, காவல் காக்கவேண்டியவங்க கைக்கெட்டி வேடிக்கை பார்க்க, அத்தனை வேதனைகளையும் தாங்கி, தனக்காக தானே போராடி மீண்டவ என் பொம்மி” என்றவன்.
அவளின் போராட்டங்களை கூறி “அவளோட நிம்மதிக்கு என்னால செய்ய முடியற ஒரு சின்ன விஷயம் இப்போ இதுதான், அதுக்கு உன் உதவிய கேட்டு வந்திருக்கேன், இதை உன்னோட விடுதலையா கூட நீ எடுத்துக்கலாம், உன் பயத்தில் இருந்தும், அந்த மிருகத்துக்கிட்ட இருந்தும்” என்க அவள் பெற்றோர் கொஞ்சம் தயங்கினர்.
“இங்க பாருமா, நடந்தா கீழ விழுந்துடுவேன்னு சொல்லி நடை பழகாம இருக்கிறவன் கடைசி வரைக்கும் முடமாத்தான் இருக்கணும், நடந்து விழுந்து வலிகளை தாங்கி மீண்டும் எழுபவன் மட்டுமே இலக்கை அடைவான்”.
“உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யாம வேற யாரவது வந்து வரம் தருவாங்கன்னு இருந்தா கடைசி வரைக்கும் அடிமையா இருக்க வேண்டியது தான்” என்க அவனையே பார்த்திருந்தவள்.
“நா என்ன செய்யணும் அண்ணா” என்றாள்.
அதன் படி அடுத்த முறை அவளிடம் வந்து அவளை மிரட்டி முத்தம் பெற்றதை, தன் உடையில் வைத்திருந்த கேமரா மூலம் பதிவு செய்து கொடுத்திருந்தாள்.
அதுவும் அவனுக்கு எதிரான ஆதாரமாக கொடுக்கப்பட்டது, எந்த இடத்தில் பல குழந்தைகளின் வாழ்வை நரகமாக்கினானோ அதே இடத்தில், பல பேரின் அடியையும் உதையையும் வாங்கி மரணத்தை வேண்டிக்கொண்டிருந்தான் ராஜாராமின் செல்வப்புதல்வன்.
அன்பு மகன் சீர்திருத்த பள்ளியில், கணவன் ஜெயிலில், சொத்துக்கள் முடக்கம், வேலை பறிபோனது, உறவுகளின் கேலி, சமூகத்தின் ஒதுக்கம், என்று மனநிலை பாதித்த ராஜாராமின் மனைவியை மனநல காப்பகத்தில் சேர்த்திருந்தனர்.
தன்னை காண வந்திருந்த வளவனை அதிர்ச்சியோடு பார்த்திருந்தான் ராஜாராம், “பரவால்ல நா சரியாதான் திட்டம் போட்டிருக்கேன், உன்னை இங்க பாக்குறத விட உன் மகனை அங்க பாத்தப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்றான் .
“ஏய்ய் இது எல்லாம் நீ பண்ணதா??” என்று அலறியவனை.
“ஆமா, ஆனா கொஞ்சம் தாமதமா பண்ணிட்டேன், அது ஒன்னு மட்டும் எனக்கு வருத்தம்” என்றவன்.
“ஹ்ம்ம், ஒன்னு சொல்ல மறந்துட்டேன், உன் மகனுக்கு ஒரு பக்க பார்வை போய்டுச்சு, வெளில பேசுன வீர வசனத்தை உள்ள பேசிட்டான், பாவம் பழக்க தோஷம்!” என்றவன்.
“ராஜாராம் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்று திரும்பி நடந்தான்.