“போக மாட்டேன்” என்று அறையின் மூலையில் ஒன்றியவளை என்ன செய்ய என்று தெரியாமல் நின்றார் புதிய வார்டன்.
“இங்க பாரு சமுத்திரா அந்த பையன் உன் கார்டியன் நீ அவங்க கூடத்தான் போகணும்”.
“மேம் பதினெட்டு வயசுக்கு அப்புறம் என் லைப் பத்தின முடிவுகளை நானே எடுக்கலாம்னு சொன்னிங்க? என்று எழுதி காட்டினாள்.
“ஆமா மா சொன்னேன், ஆனா யாரோட பாதுகாப்பும் இல்லாம உன்ன எப்படி அனுப்புறது?” என்றார்.
சிறிது நேரம் யோசித்தவள், “அப்படியானால் செம்பருத்தியுடன் போகிறேன்” என்று எழுதியிருந்தாள்.
அவருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, “அவளிடம் நீ போய் ஓய்வெடு, நான் செம்பருத்திக்கு தகவல் சொல்கிறேன்” என்றார், அவள் சென்றவுடன் வெளியில் வந்தவர் வளவனிடம் தகவல் சொன்னார்.
அதே நேரம் காம்பௌண்ட் உள்நின்று கேட்டின் வழியே அவனை பார்த்து விழிகளில் நிரப்பி கொண்டாள், அவனுடன் சென்றுவிட துடித்த மனதை தன்னையே நிந்தித்து அடக்கிக்கொண்டாள்.
“வேண்டாம் அவருக்கு நான் வேண்டாம்” வார்டனிடம் ஏதோ பேசிக்கொண்டே இருந்தவன், அவரிடம் தலையாட்டி விடைபெற்றான், அவனின் முகவாட்டத்தை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.
“என்ன மச்சான் இப்படி சொல்றாங்க?” என்றான் பார்த்தி. “வேற என்ன நெனச்ச? நா கூப்பிட்ட உடனே வந்துடுவான்னா? எனக்கு தெரியும் வரமாட்டா”.
“இப்போ என்ன அண்ணா பண்றது??” செம்பா.
“அதுக்கு தாம்மா உன்னையும் வர சொன்னேன்” என்றவன் “உன்கூட கூட்டிட்டு போ” என்றான், அவனுக்கு சமுத்திரை செம்பருத்தியிடம் சொன்ன வார்த்தைகள் செவியில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
செம்பருத்தியுடன் அவள் வீட்டிற்கு சென்றாள் சமுத்திரா, அவளின் தாயாரும் தங்கை ரோசாவும் சமுத்திரையை அத்தனை ஆசையாக வரவேற்றனர்.
இறுதினங்களுக்கு பிறகு செம்பா வேலைக்கு செல்ல, அவளின் தாயார் விடுமுறை எடுத்து சமுத்திரையை பார்த்துக்கொண்டார்.
அடுத்த இரு தினங்கள் கழிந்து ரோசா விடுமுறை எடுத்து பார்த்துக்கொண்டாள், முதலில் புரியாமல் இருந்த சமுத்திரை அன்று இரவு அனைவரும் இருக்கும்போது செம்பாவிடம் இதைப்பற்றி கேட்டாள் .
“ஏன் மாறி மாறி லீவு எடுத்துட்டு என் கூட இருக்கீங்க”.
“ உன்னை தனியே விட்டுட்டு எப்படி போவ” என்றாள் செம்பா.
“எனக்கு ஒரு வேலை வேணும் செம்பா”, என்று எழுதி காட்டியவள் “என்னால பேச முடியாதுனு வேல தர மாட்டேன்னு சொல்லிடுவாங்களா?”.
“ ஏய் தேவ இல்லாததை ஏன் பேசுற, இப்போ எதுக்கு உனக்கு வேல, படி சமு, நா தான் படிக்கவே இல்ல, நீ நல்லா படிச்சுட்டு இருந்த புள்ள, நீ படி அதுக்கப்புறோம் வேலைக்கு போலாம்” என்க இல்லை என்று தலையாட்டி மறுத்தவள் “எனக்கு படிக்க விருப்பம் இல்ல, என்னால படிக்க முடியாது என்றாள்”.
செம்பா எத்தனையோ வற்புறுத்தியும் படிக்க முடியாது, “வேலை எதாவது ஏற்பாடு செய், இல்லைனா நா எங்கயாவது போய்டுவேன், இப்போவே உனக்கு நா பாரமா இருக்கேன்னு என் மனச்சாட்சி உறுத்துது”.
“நீ அதிகமாலாம் கஷ்டப்படாத எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை செம்பா, படிப்பும் இல்ல, வாயும் பேச முடியாது, எனக்கு வேல கிடைக்குறதே குதிரை கொம்புதான், ஏதாவது ஒரு வேல வாங்கி குடு செம்பா” என்று எழுதியிருந்தாள்.
சைகையில் சில விஷயங்களை தெரிவித்து விடுவாள், ஆனால் இதுபோல் நீளமாக பேசும்போது அவள் சொல்ல வருவது மற்றவர்களுக்கு புரிவதில்லை, அதனால் எழுதியே காண்பிக்கிறாள்.
சமுத்திரையின் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்ட செம்பருத்தி “நா பாத்துக்கிறேன்” என்று கூறி அவளை உறங்க அழைத்து சென்றாள்.
அடுத்த நாள் காலை வேலைக்கு சீக்கிரம் போகவேண்டும் என்று கூறியவள் ஒருமணி நேரம் முன்பே இறங்கிவிட்டாள், நேரே வளவனின் அப்பார்ட்மெண்ட் செல்ல, இவளை எதிர்பார்த்து அவர்கள் மூவரும் காத்திருந்தனர்.
“வா செம்பா, சாப்பிடு” என்க முதலில் உணவருந்தினர் பிறகு “அண்ணா நீங்க சொன்னமாதிரியே செஞ்சோம், நாங்க லீவு போட்டுட்டு மாத்தி மாத்தி கூட இருக்க அவ இப்போ வேலைக்கு போகணும் அப்படின்னு சொல்றா”.
” நானும் எவ்ளவோ படிக்க சொல்லி கேட்டுட்டேன், ஆனா ரொம்ப பிடிவாதமா இருக்கா படிக்கமாட்டேன்னு, எப்படின்னா நீங்க சரியா சொன்னீங்க அவ வேலை தான் கேப்பான்னு” என்க.
அன்று வேலைக்கு சென்று விட்டு வந்தவள், “சமு ரெண்டு மூணு எடத்துல சொல்லிருக்கேன் பாக்கலாம், நீ பிரீயா இரு” என்றாள்.
ஒரு வாரம் கடந்து செல்ல “சமு தெரிஞ்ச ஒரு வீட்ல வேல இருக்கு, அந்த வீட்ல கொஞ்சம் வயசான அம்மா மட்டும், அவங்க பையன் வெளிநாட்ல இருக்காங்க, இவங்களுக்கு பி பி சுகர் இருக்கு, ரெண்டு தடவ மயங்கி விழுந்து அடி பட்டிருச்சு, அதனால அவங்க கூடவே தங்கி இருந்து பாத்துக்குற நம்பிக்கையான ஒரு ஆளு வேணும்னு சொன்னாங்க, போய் பாக்கலாமா” என்க “சரி” என்றாள்.
அவளுக்கு பெரிதாக யோசிக்க ஒன்றும் இல்லை, அங்கேயே தங்குவது மட்டும் கொஞ்சம் யோசனையாக இருந்தது.
மறுநாள் அவரை சென்று சந்தித்தனர், “வாங்க மா” என்று உள்ளே அழைத்து சென்றார், “இந்த பொண்ணு தானா ?” என்க, ஆமா என்று தலை ஆட்டினாள் செம்பா.
“பேரு என்னமா” என்க.
“சமுத்திரா, சமுன்னு கூப்பிடுவோம்” என்க.
“சரி சரி, அம்மாடி என் பேரு பார்வதி, இங்க நா தனியா தான் இருக்கேன், நீ எனக்கு தொணைக்கு இருந்துக்கோ பேசமுடியாதேன்னு கவலைப்படாத, நா எப்போவும் புக் படிப்பேன், சீரியல் பார்ப்பேன், சாயந்திரம் ஆச்சுன்னா கீழ பார்க் போய் பிரெண்ட்ஸ் கூட கதை அடிப்பேன்”.
“இடைல கோவிலுக்கு கடைக்குனு வெளில போவேன், நீ என்கூட சுத்தணும் அவ்ளோ தான் உன் வேலை, இங்கயே சாப்டுக்கலாம் சமையல் நானே பண்ணிடுவேன், கொஞ்சம் உதவி மாட்டு பண்ணு, அப்புறம் வீட்டு வேலைக்கு ஆளு இருக்கு, அத பத்தி நீ கவலை பட வேண்டாம்” என்றார்.
அவள் சம்மதமாக தலை ஆட்டினாள், யோசித்து பார்த்த பொது, தான் இங்கேயே தங்கி விட்டால் செம்பாவின் வீட்டில் அவர்கள் இருக்கும் சிறிய இடத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
இரவு நேரம் கழித்து செல்லும் பயம் இல்லை, காலை அரக்க பறக்க ஓடி வர வேண்டாம், சாப்பாடும் இங்கேயே அதனால் அவர்களுக்கும் செலவு கொஞ்சம் மிச்சம் பலவற்றயும் யோசித்தவள் சந்தோஷமாகவே சம்மதம் தெரிவித்தாள்.
சமுத்திரை எவ்வளவோ மறுத்தும் செம்பா அவளுக்கு புதிய உடைகளை வாங்கி குவித்திருந்தாள், ஆனால் உண்மையில் அனைத்தும் வளவன் அவனே பார்த்து பார்த்து தேர்வு செய்தது, அவளுடைய உடைமைகளுடன் புதிய வீட்டிற்கு வந்துவிட்டாள் சமுத்திரை.
தினமும் அவள் முகம் பார்த்து அவளின் நலனை அறிந்துகொள்ள நல்ல அலைபேசியும் அவளிடம் கொடுக்கப்பட்டது, இதுக்கு நிறைய செலவு ஆயிருக்கும் எவ்ளோ என்று செம்பாவை இவள் நச்சரிக்க, “தெரிஞ்சா சொல்ல மாட்டேனா, அண்ணா இவளுக்கு இப்போ நா என்ன பதில் சொல்ல” என்று திரு திருத்தாள் செம்பா.
அப்பொழுது அங்கு வந்த பார்வதி “அடடே ஒரிஜினல் மாதிரியே இருக்கு, எங்கம்மா பாண்டி பஜார்ல வாங்கினியா ” என்க.
அவள் தப்பித்தோம் என்று “ஆமாம் மா செகண்ட் ஹாண்ட் வெறும் ரெண்டாயிரம் தான்” என்க “தனக்கு இதை பற்றி ஏதும் தெரியவில்லை” என்று எண்ணிக்கொண்டாள் சமுத்திரை.
அந்த வீட்டில் தன்னை பொருத்திக்கொள்ள தொடங்கினாள், அவர் சீரியல் பார்க்கும் நேரம், புத்தகம் படிக்கும் நேரம், பார்க்கில் அமர்ந்திருக்கும் நேரம், அனைத்திலும் அவள் சிந்தனை வளவனை சுற்றியே இருக்கும், பார்வதி அருமையாக சமைத்து வைத்து அவளை சாப்பிட வைத்து மூச்சுமுட்ட வைத்தார்.
தினமும் எங்கேயாவது வெளியில் அழைத்து சென்றார், கோவிலுக்கு கடைக்கு என்று நேர்த்தியாக உடை உடுத்தி பின்னலிலிட்டு அவளுக்கு அழகு பார்த்தார், மகனிடம் தினமும் இருவேளையும் பேசுவார் ,அப்பொழுது அறைக்குள் சென்று பேசிவிட்டு வருவார்.
இப்படியே பத்து தினங்கள் கடந்து செல்ல அவருடன் கோவிலுக்கு சென்றபோது ,பார்த்திபனுடன் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் வளவன் ,மீண்டும் மீண்டும் உத்து பார்த்தாள், அவனே தான் ” போ போய்விடு அவனிடம்” என்று உள்ளே அலறிக்கொண்டிருந்தது உள்ளம், விழிநீரில் காட்சிகள் மறைந்துவிட்டது, உடனே துடைத்துக்கொண்டு மீண்டும் பார்க்க இருவரும் வெளியேறிக்கொண்டிருந்தனர்,.
“என்ன சமு என்னாச்சு” என்ற பார்வதியிடம் “ஒன்றும் இல்லை” என்று சைகை செய்தவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே உள் சென்றாள்.
அதன் பிறகு மூன்று நான்கு முறை அவனை பார்த்தாள், மனம் நிலை கொள்ளாமல் தவிக்க தொடங்கியது, “என்னை ஏன் பார்க்காமல் போகிறார், மறந்துவிட்டாரா”, என்றவள் மனச்சாட்சி “எத்தனை தடவ பாக்க வந்தார் நீ பேசுனியா” என்க.
“அவருக்கு நா எப்படி சரியா வருவேன் அதுனால தான்” “அப்போ இப்போ மட்டும் சரியாயிட்டியா? எதுக்கு அவர் உன்ன பாக்கணும்” என்று மனமும் மூளையும் அவளை சித்ரவதை செய்து கொண்டிருந்தது.
அடுத்தநாள் மாலை அவளை அழைத்த பார்வதி “சமு என்னோட பீரோல மஞ்சள் பட்டு புடவை இருக்கும் அத எடுத்துட்டு வா” என்க, அவர் அறைக்கு சென்று அதை எடுத்துவிட்டு திரும்பியவள் அறை வாசலில் நின்றுந்தவனை பார்த்து புடவையை நழுவவிட்டாள்.
துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்; அன்பினைக் கைக் கொள் என்பான்; – துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான; இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும் இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.