குளிர் 10
சூர்யதேவ் மீண்டும் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டான்.. அதில் அனைவருக்கும் கவலை முக்கியமாக வசந்தாவிற்கு.. ஆனால் கவலை பட வேண்டியவளோ அதற்கு மாறாய் நிம்மதியாக இருந்தாள்..
நேற்றிரவு நடந்த கூடல் அவளுக்கு ஏதாவது ஓர் உணர்வை உணர்த்தியதா என்று கேட்டால்.. அவளின் பதில் வலி மட்டுமே.. அதைத் தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை.. ஏன் அக்கூடலை அவள் நினைக்கவே விரும்பவில்லை..
வீட்டில் உள்ளவர்களோ.. அவளின் அமைதியை கண்டு.. கணவனைப் பிரிந்த வேதனை என தவறாக புரிந்துக்கொண்டு.. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சித்தனர்.. மனிஷா பொட்டிக் கூட்டிச்செல்வார்.. நிஷாவும் தேவ்வின் இளைய சகோதரி ஆஷாவும் அவளை ஷாப்பிங் கூட்டிச்சென்றனர்..
லோஷினியும் சிறிது சகஜமனநிலைக்கு வந்தாள்.. ஆனால் அடுத்த மாதம்.. ஓர் நாள் கூடலின் விளைவால் அவள் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன்.. என்ன உணர்வை வெளிப்படுத்துவது என அவளுக்கு தெரியவில்லை..
ஆனால் குடும்பத்தார் அனைவரும் அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினர்.. வசந்தா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..
சூர்யதேவ்விற்கு இவ்விஷயம் தெரிவிக்கப் பட்டது.. முதலில் ஒன்றுமே அவனுக்கு புரியவில்லை.. ஏனென்றால் திருமணம் நடந்த விஷயத்தையே அவன் மறந்திருந்தான்.. ஆனால் சில நிமிடம் கழித்து அவன் முகத்தில் ஓர் மெல்லிய புன்னகை..
முதல் முறையாக லோஷினிக்கு போன் செய்து பேசினான்.. அதுவும் காதலால் கசிந்து உருகவில்லை.. வாழ்த்து கூறி அவளுக்கு பிங்க்நிற டைமெண்ட் நெக்லஸ் அனுப்பினான்.. அவளுக்கு வேறு எதுவும் வேண்டுமா எனக் கேட்டான்… அவ்வளவே..
லோஷினிக்கு தன் வாழ்க்கை எதன் நோக்கி செல்கிறது.. என புரியவில்லை.. சந்தோஷமாக இருக்கிறாளா என்றால் தெரியவில்லை.. சரி துக்கமாக வருத்தமாக இருக்கிறாளா என்றால் அதுவும் இல்லை..
சூர்யதேவ்வின் ஏழு மாத குழந்தையை சுமந்துக்கொண்டிருக்கிறாள்.. நாளை மும்பை மாநகரமே அசந்து போகும் அளவிற்கு வளைகாப்பு நடக்க உள்ளது.. இந்த ஏழுமாதத்தில் சூர்யா இருமுறை வந்து அவளை பார்த்தான்.. நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கும் வரவிருக்கிறான்.. இருந்தும் லோஷினியால் முழுமையாக மகிழ்ச்சிக் கொள்ளமுடியவில்லை.. அது ஏனென்றும் அவளுக்கு புரியவில்லை..
அனைத்திற்கும் மேலாக குழந்தையின் மேல் அவளுக்கு அவ்வளவாக பிடிப்பு ஏற்படவில்லை..
*************************************
ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பாடிக்கார்ட்ஸின் பாதுகாப்பு வளையத்தின் மத்தியில் கன்னத்தில் கை வைத்து பாவம் போல் அமர்ந்திருந்தாள் தேஜஸ்வினி..
யாருமில்லா தனிமையில் இயற்க்கையின் மடியில் ஓய்வுப்பெற விரும்பியவளுக்கு.. மக்கள் கூட்டமும் இன்டெர்வியூவும் தான் வரிசைக் கட்டிக்கொண்டு நின்றது.. அதனால் ஓரிடத்தில் நான்கு நாட்களுக்கு மேல் இருக்க முடியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.. இவளின் விடுமுறை முடிந்துவிட ஆஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறாள்.. அடுத்து அவளுக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்குமோ..
அப்போது இவளுக்கான விமான அழைப்பு வர.. இவள் முன்னேறி செல்லும்பொழுது.. கருப்பு பாதுகாவலர்கள் படைசூல எதிரே வந்தான் சூர்யதேவ் சக்கரவர்த்தி..
அவனைக் கண்டதும் அவள் ஓர் நொடி நின்றுவிட.. சூர்யதேவ் அவளைக் கவனியாது வெளியேறினான்..
அவன் பின்னே செல்ல தூண்டிய விழியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள்.. யாரோ துரத்துவது போல் வேகவேகமாக முன்னேறினாள்..
தன் இடத்திற்கு வந்து அமர்ந்தபோதுதான் அவள் கால்களின் ஓட்டம் நின்றது.. ஆனால் அவள் மனதோ கடந்த காலத்தை நோக்கிச் செல்ல.. அதை தடுக்க வழியறியாது தவித்து போனாள் பெண்ணவள்..
சக்கரவர்த்தி குழுமத்தின் ஆபரண மாளிகைக்கு அவள் தான் மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள்.. தயாளன் சக்கரவர்த்தி தொழிலில் சொந்த விருப்பு வெறுப்புகளை கொண்டுவர மாட்டார்.. அதனால் தான் அவர் மகன் தேஜஸ்வினியை மாடலாக சொல்லும்பொழுது மறுப்பு தெரிவிக்கவில்லை..
அதோடு இவள் நடித்த விளம்பரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.. அதனால் ஒருவருடத்திற்கு அவளையே ஒப்பந்தமிட்டிருந்தனர்.. அப்பொழுதுதான் சூர்யதேவ் லோஷனி திருமணத்திற்கு தொழில் முறையில் அழைப்பு கொடுத்திருந்தனர்..
அவளும் அங்கு சென்றாள்.. எல்லாம் நன்றாக சென்றது.. அத்திருமணத்தின் ஆடம்பரத்தைக் கண்டு சிறு புன்னகையும் அவளுக்கு வந்தது.. எதற்கு இவ்வளவு ஆடம்பரம் என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.. அப்பொழுது அங்குள்ள பத்திரிக்கை காரர்கள் அவளை புகைப்படம் எடுப்பதற்கு அழைக்க.. அவளும் சென்றாள்..
லைட் ஸ்கை ப்ளூ நிறத்திலான புடவையில்.. நவநாகரீக மேலாடையில் முதுகுபக்கம் கண்ணாடியாய் மின்ன.. அதில் சில கற்கலும் சேர்ந்து மின்னிக்கொண்டிருந்தது.. போட்டோ ஷூட் முடிந்து உள்ளே சென்றவளின் விழிகள்.. உடலை இருக்கிப்பிடித்த கோட் சூட்டுடன்.. ட்ரிம் செய்த தாடியும் கத்தை மீசையுமாய்.. தன் போனைப் பார்த்தவாறு அரங்கத்தின் மற்றொரு லிப்ட்டை பயன்படுத்தி சென்றுகொண்டிருந்த ஒருவனைக் கண்டு.. அவனோடவே சென்றது..
அதுவும் கருகருவெனயிருந்த மீசைக்கும் தாடிக்கும் இடையேயிருந்த பீனட் நிற லிப்சை கண்டு அவள் இதழ் தானாய் கடித்துக்கொண்டது..
அது கொடுத்த வலியில் சுயம் வந்தவள்.. தன்னை நினைத்தே வெட்கி போனாள்.. அய்யோ ச்சி ச்சி நான் என்ன பண்ணிட்ருக்கேன்.. அடியே தேஜு.. உனக்கு மீசை வச்ச ஆம்பளைங்கள பிடிக்கும் தான் அதுக்குன்னு இப்படி பச்சையாவா ஒருத்தன சைட் அடிப்ப.. யாராது பார்த்திருந்தா என்னாகியிருக்கும் என தன்னைத் தானே நொந்துக் கொண்டவளாய்.. செங்கொழுந்தான முகத்துடன் மேலே சென்றாள்..
இருந்தும் அவளின் கருவண்டு விழிகள் அரங்கத்தையே சுற்றிக்கொண்டிருந்தது.. மீண்டும் அவனைக் காண்பதற்கு..
” தேஜு.. இது தப்பு.. சுத்திப் பார்க்காத.. ” என்றது மனசாட்சி..
” இல்லை நான் பார்ப்பேன்.. எனக்கு அந்த பீனட் லிப்ஸ் வேனும்..” என்றாள்
மனசாட்சி ”அடியே மீசை வச்சிருந்தா போதுமே.. உடனே அவங்கள சைட் அடிக்க ஆரம்பிச்சுடுவியே.. அது என்ன மிட்டாயா நீ வேணும்னு சொன்னவுடன் தூக்கிக் கொடுக்கிறதுக்கு.. வெட்கமாயில்லை.. ”
” இல்லை ”
” அவனுக்கு கல்யாணமாகியிருந்தா.. ”
ஓர் நொடி தன் கண்களை மூடியவள் ” கண்டிப்பா அவனுக்கு ஆகிருக்காது.. என் மனசு சொல்லுது.. ”
” ஒருவேளை ஆகியிருந்தா என்ன பண்ணுவ.. நீ சீரியஸா போற.. அப்புறம் பின்னாடி பீல் பண்ணாத.. வழக்கம் போல சைட் அடிச்சோமா விட்டோமான்னு இரு.. ” என்ற மனசாட்சியை அலட்சியம் செய்தாள்..
” அந்த லிப்ஸ் மட்டுமில்ல ஆறடி உருவமே எனக்குத்தான்னு நான் முடிவெடுத்துட்டேன்.. நீ போ அங்குட்டு.. என மனசாட்சியை துரத்தியவள்.. ”
மீண்டும் தன் தேடுதல் வேட்டையை தொடங்கியிருந்தாள்.. தேஜு பார்த்த ஆண்கள்.. அவளைச்சுற்றியுள்ள ஆண்கள் என அனைவரும் மழுமழு கன்னத்துடன் குழந்தை போல் இருப்பார்கள்..
அதனால் அவளுக்கு முறுக்கிய மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் ஆண்கள் மீது ஒருவிதமான க்ரஷ்.. சோ அம்மாதிரியான ஆண்களைக் கண்டால் யாரும் அறியாதவாறு சைட் அடிப்பாள்.. ஆனால் அன்றே அவர்களை மறந்தும் விடுவாள்..
ஆனால் யாரையும் அவள் இப்படி தீவிரமாக தேடியதும்மில்லை.. வேறு எண்ணங்களில் பார்த்ததும்மில்லை.. இன்றோ பார்த்த நொடி தன்னை மறந்து செயல்படுத்த செய்தவன் தன்னவனோ தனக்குறியவனோ என்ற எண்ணத்துடன் சுற்றி சுற்றி அவனையே தேடிக்கொண்டிருந்தாள்.. இருப்பதியொரு வயது பாவை..
முகமோ அவனைத் தொலைத்துவிடுவோமோ என்ற எண்ணத்தில்.. வாடிய மலர் போல் ஆனது..
சுற்றிலும் தேடியவள் ஓர் முறை மணமேடையை பார்த்திருந்தாள்.. அவளின் தேடுதல் முற்றுபெற்றிருக்கும்..
ஆனால் விதியின் சதி… பார்த்த நொடி அவள் மனதிற்க்குள் குடியேறியவனை.. மற்றொரு பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்கும் போதுதான்.. மீண்டும் தேஜுவின் விழிகளுக்கு அவனைக் காட்டியது..
அனைவரும் அந்நிகழ்ச்சியைக் கண்டு அர்ச்சதை தூவ.. தேஜுவின் விழிகளோ இரு கண்ணீர்த் துளியை கொட்டியது.. ஆனால் மறுநிமிடமே தன்னை நிலைப்படுத்தியவள்.. தன் மேனேஜரிடம் மணமக்களுக்கு பரிசுப்பொருளை கொடுக்க சொல்லிவிட்டு சென்றாள்..
நடிகைக்கு நடிக்கவா சொல்லித்தர வேண்டும்.. அவள் கண்ணீர் விட்டதே தெரியாதவாறு சிரித்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்..
மும்பை மாநகரமே பிரசித்திபெற்றவன் சூர்யதேவ் சக்கரவர்த்தி.. அவனைப் பற்றி தெரிந்தாலும் தேஜஸ்வினி தேவ்வைப் பார்த்ததில்லை.. அவர்களின் ஆபரண மாளிகைக்கு சென்றாலும் ஆஷா, ரோஷன், சிபிச்சக்கரவர்த்தி இவர்களை மட்டுமே கண்டிருக்கிறாள்.. திரைத்துறை விழாக்களில் தயாளன் சக்கரவர்த்தியை பார்த்திருக்கிறாள்.. ஆனால் சூர்யதேவ்வைக் கண்டதில்லை.. அதனால் அவனை முதன் முதலாக பார்க்கும் பொழுது அவன் சூர்யதேவ் சக்கரவர்த்தியாக இருப்பான் என அவள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை..
***********************************
இப்போ என்ன நடந்துச்சு.. ஜஸ்ட் பார்த்தேன்.. சைட் அடிச்சேன்.. தென் அவங்க எனக்குன்னு தோனுச்சு.. அவ்வளவு தான்.. இப்போ தான் அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சுள்ள.. அப்புறமென்ன வெறும் சைட்டோட விட்டுடுவோம்.. வொய் எமோஷன்.. என தன்னைத்தானே அவள் சமாதானம் செய்துகொண்டாலும்.. விழிகள் நீரைப் பொழிந்துக்கொண்டிருந்தது.. ஓஹ் காட்.. தேஜு வாட்ஸ் ராங் வித் யூ.. அவன ஒன்னவர் முன்னாடிதான் பார்த்திருக்க.. இட்ஸ் நாட் அ பிக் டீல்.. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு பாஸிங் க்ளவுட் தான்.. இவரவிட ஹேண்ட்ஸம்மா இன்னொருத்தர பார்த்தா.. இவன் நியாபகம் கூட வருமோ என்னவோ.. சோ பீ கூல்.. என ஒருவழியாய் பொங்கும் விழியையும் குமுறும் இதயத்தையும் சமன்படுத்தினாள்..
தேவ்வை மறப்பது அவ்வளவு எளிதல்ல என்பது போக போகத்தான் அவளுக்கு புரிந்தது.. சிறு விஷயங்களும் அவனை நியாபகப்படுத்தியது.. சூட்டிங்கில் அவளால் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை.. ஒரு காதல் பாடலுக்கான படப்பிடிப்பு.. ஆனால் அவளால் அந்த ஹீரோவின் முகத்தை காதல் பார்வை பார்க்கமுடியவில்லை.. அதில் சூர்யதேவ்வின் முகம் தான் அவளுக்கு தெரிகிறது..
மீண்டும் மீண்டும் ரீடேக் வாங்கியவள்.. இறுதியில் ஹீரோவிற்க்கு பதில் தன்னவன் முகத்தை நினைத்தவாறு காதல் பார்வை பார்த்து நடனமாட.. அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக வந்தது..
தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகவாவது சூர்யதேவ் முகம் அவள் போனில் வந்துவிடும்.. அவன் பற்றிய செய்திகளை தேடி தேடி படிக்க ஆரம்பிக்க.. இதற்கெல்லாம் என்ன பெயர் என்று கேட்ட மனசாட்சிக்கு அவளிடம் பதில் இல்லை..
இந்த காலத்துல டிவோர்ஸ் பண்றது எல்லாம் சகஜம்.. நூத்துல ஒரு வாய்ப்பா அவங்க ரெண்டு பெரும் டிவோர்ஸ் பண்ணா.. மறுபடியும் அவர் எனக்கு கிடைக்க சான்ஸ் இருக்குள்ள.. என தன்னை மீறி ஓர் நாள் இப்படி நினைத்தவள்.. மறுநிமிடமே நோ நோ.. காளிமாதா அப்படியெல்லாம் நடக்க கூடாது.. அவர் வாழ்க்கை நல்லா இருக்கனும்.. நான் ஏன் இப்படி கெட்ட பொண்ணா மாறிட்டேன்.. என தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாள்..
அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.. பெண்ணவள்..
நான் ஏன் அவன மறக்கனும்.. அவன் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடிதான் நான் பார்த்தேன்.. ஆசைப்பட்டேன்.. என் மனசையும் பறிக்கொடுத்தேன்.. அதில் என் தப்பு எதுவுமில்ல.. என தனக்குத் தானே கூறிக்கொண்டவள்.. அவனைக் கண்ட அந்த ஒரு நிமிடத்தை மட்டும் பொக்கிஷமாக கொண்டு வலம் வந்தாள்..
ஆபரண மாளிகையில சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது.. சூட்டிங் முடிந்து கிளம்பும் தருவாயில் பணியாள் ஒருவர் அங்குள்ளோருக்கு ஸ்வீட் கொடுத்தார்..
இல்லை எனக்கு வேண்டாம் நான் இனிப்பு சாப்பிடமாட்டேன்..
சும்மா கொஞ்சம் எடுத்துக்கோங்க மேடம்.. எங்க சூர்யா அய்யாவுக்கு குழந்தை பிறக்க போகுது.. அதான் எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கிறோம் என்றவுடன்..
ஓஹ்.. என்று மட்டும் கூறியவள் மொத்த இனிப்பையும் எடுத்து உண்டாள்.. தன்னவனுக்கு குழந்தை பிறக்க போவது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்.. சிறு வேதனை அவளை வாட்டத்தான் செய்தது..
தன்னறையின் விட்டதை வெறித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவாறு வந்தான்.. அம்ரிஷ்.. தேஜுவின் தம்பி..
தீதி..
ஹேய் வாடா.. என அழைத்தவள் அவசர அவசரமாக அழுத விழிகளைத் துடைத்தாள்..
ரொம்ப கஷ்டப்படாத தீதி.. நீ அழுதது எனக்கு தெரியும்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிருக்க.. நாலைஞ்சு மாசமா நீ ஆளே சரியில்ல.. உனக்கு என்ன பிரச்சனை.. என உடன்பிறந்தவன் கனிவாய்க் கேட்க.. அதில் மொத்தமாய் உடைந்தாள் பெண்ணவள்..
அவன் மடியில் படுத்தவாறு நடந்த அனைத்தையும் கூறி.. தன் மனதின் போக்கையும் கூறினாள்..
நீ சொல்லுடா.. உன் அக்கா ரொம்ப கெட்டவ தான.. என சிறுபிள்ளைப் போல் ஏங்கி ஏங்கி அழுதவாறு கேட்க.. அதில் தன் வருத்தத்தை மறைத்தவன்..
யார் சொன்னா.. என் தீதி ரொம்ப ரொம்ப நல்லவ.. அவளால யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது.. இப்போ உனக்கு தேவை சின்ன கவுன்சிலிங் மட்டும்தான்.. என்றான்..
அதோடு தன் நண்பனின் சகோதரியிடமே ரகசியமாய் தேஜுவின் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்தான்..