குளிர் 16
செல்லக்குட்டி எப்படி இருக்கீங்க.. என்னை அடையாளம் தெரியுதா. இவங்களுக்கு என தேஜு ஆலியா முகத்தில் முத்தம் கொஞ்ச.. அவள் கிளுக்கி சிரித்தாள்..
அதில் அவளும் புன்னகைத்து மேலும் மேலும் அவள் கழுத்தில் இதழ்வைத்து கிச்சுகிச்சு மூட்ட.. சின்னவள் புன்னகை பெரிதானது.. இதனை சிறு இதழ்வளைவுடன் சூர்யதேவ் பார்த்துக் கொண்டிருக்க.. வசந்தாவோ வன்மம் சூழ்ந்த விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தார்..
” கைகாரி.. உன் புருஷன மட்டுமில்ல உன் பிள்ளையையும் நல்லா கைக்குள்ள போட்டுருக்கா.. சினிமாகாரிக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்கணும்.. ” என லோஷினியிடம் பொரிந்து தள்ளியவர்… இவளுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டணும்.. என மனதினுள் வன்மமாக நினைத்துக் கொண்டார்..
தயாளன்.. சூர்யதேவ்வை நோக்கி கோபமாக சென்றார்.. ஆனால் இடையிலேயே வேறொருவர் பேச்சில் பிடித்துக்கொள்ள.. தயாளன் வேறு வழியில்லாமல் அவரிடம் பேசினார்..
” லோஷினி.. நீ ஏன் இங்கயே நிக்குற.. போ போயி உன் புருஷன் பிள்ளையோட நில்லு.. அப்போவாவது அந்த விலங்காதவ.. தள்ளிபோறாளான்னு பார்க்கலாம்.. ” என லோஷினியை வசந்தா முடுக்கி விட.. அவள் பயத்தில் விழித்தாள்..
” மம்மா பயமாயிருக்கு.. சூர்யா என்ன திட்டிட்டா.. ” என அப்பாவியாய் கேட்டாள்..
” கூறுகெட்ட கிறுக்கி.. நீதாண்டி அவன் உரிமையுள்ள பொண்டாட்டி.. ” என எரிந்து விழுந்தார்..
அப்பொழுது அங்கு மெல்லிய இசை ஒலிக்க ஆரம்பிக்க.. அனைவரும் ஜோடியாக நடனமாட ஆரம்பித்தனர்..
” சூர்யாவ டான்ஸாட கூப்பிடு போ.. இதையாவது செய்.. ” என வசந்தா கிட்டத்தட்ட லோஷனியை மிரட்டிக் கொண்டிருந்தார்..
லோஷினியும் பயத்தில்.. அந்த ஏசி ஹாலிலும் வியர்த்து வழிந்தவாரு.. மெல்ல அன்னநடையிட்டு சூர்யதேவ்விடம் செல்ல.. அவனோ அதற்குள் ஆலியாவை ஆஷாவிடம் கைமாற்றிவிட்டு தேஜஸ்வினியின் கரம் பிடித்து ஆட ஆரம்பித்துவிட்டான்..
லோஷினி பரிதாபமாயய் தன் தாயை பார்க்க.. அவளோ இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தன்னை தானே நொந்துகொண்டார்..
தேஜஸ்வினியின் இடையில் கரம் பதித்து தன்னோடு இருக்கியவன்.. அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளை சுழற்றி.. ஆடத்தொடங்கினான்.. தேஜுவும் தேவ்வின் விழி வழி நடந்து அதனுள் மூழ்கிக்கொண்டிருந்தாள்..
போக போக.. இவர்களின் ஆட்டத்தில் அனைவரும் ஆட மறந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.. பாடலின் இசைக்கு ஏற்ப அவளை தூக்கி.. இறுக்கி.. என தன் கரங்களால் அவளை சிறையிட்டுக் கொண்டிருந்தான்.. அவளவன். இறுதியில் பாடல் ஒலி நின்றாலும் இருவரும்.. சுற்றம் மறந்து சுயம் மறந்து.. தங்களுள் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளை.. அனைவரின் கைத்தட்டல் சத்தம் இருவரையும் நிகழ்வுக்கு கொண்டு வந்தது..
அதில் தேஜுவின் முகம் சற்று குங்குமப்பூவாக மாற.. ஆடவன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான்..
தயாளன் நடக்கும் கூத்துகளையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.. அவரின் சிவந்த விழிகளும்.. இறுகிய தாடையுமே சொன்னது அவர் கோபத்தின் அளவை.. இருந்தும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக நின்றார்.. ஆனால் அவர் மனதிலோ.. இன்றே இந்த பிரச்சனையை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாகியது.. அதற்கான சந்தர்ப்பத்திற்கு தான் காத்துகொண்டிருக்கிறார்.. அதற்கான நேரமும் வந்தது..
மீண்டும் அங்கும் மிங்குமாய் கேலி கிண்டல் பொருமல் என பலவிதமான பேச்சுக்கள் ஓடி கொண்டிருந்தது.. அப்பொழுது சூர்யாவிற்கு அவனின் ஜப்பான் கம்பெனியின் எம்.டியும் அவனின் நண்பனுமான அக்கியோ போன் செய்யவும்.. சிறு புருவமுடிச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.. அப்போதும் விக்ரமிற்கு கண் காட்டிவிட்டு செல்ல.. அவன் தேஜஸ்வினியின் அருகே நின்றிருந்தான்..
தேஜஸ்வினி அவனை கேள்வியாக பார்க்கவும்.. ” பாஸ் வர வரைக்கும் இங்க இருக்க சொன்னாங்க மேம்.. ” என பவ்வியமாக கூறினான்..
ஓஹ்.. என்று மட்டும் கூறியவள்.. பார்ட்டியில் தன் கவனத்தை பதித்தாள்.. ஆனால் அங்கு ஆலியா இல்லாமல் போகவும்.. விக்ரமிடம் கேட்டாள்..
” ஆலியா பாப்பா ரொம்ப அழுததால ஆஷா மேம் அவங்கள கீழ தோட்டத்துக்கு தூக்கிட்டு போயிருக்காங்க மேம்.. ” என அவன் சொல்லவும்.. அவளும் செல்ல பார்க்க விக்ரம் தடுத்தான்.. ” மேம் பாஸ் உங்கள இங்கதான் இருக்க சொன்னாங்க ப்ளீஸ்.. ”
” நான் உங்க பாஸ்கிட்ட பேசிக்கிறேன் மிஸ்டர் விக்ரம்.. இப்போ என்ன ஆலியாகிட்ட கூட்டி போங்க ” என பிடிவாதமாக கூற.. அவனும் வேறு வழியில்லாமல்.. தேஜுவை தோட்டத்திற்கு அழைத்து சென்றான்..
தோட்டத்தில் ஆலியா அழுதுகொண்டிருக்க.. ஆஷா அவளை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.. விரைந்து அவர்களிடம் சென்ற தேஜு.. ஆஷாவிடமிருந்து குழந்தையை வாங்க.. சிறிது நேரத்தில் அவள் அழுகை மட்டுப்பட்டது..
” இவ்வளவு நேரம் என்ன படுத்தி எடுத்துட்டு.. உங்ககிட்ட வந்தவுடனே அழுகையை நிப்பாட்டிட்டாலே.. ” என ஆச்சரியமாக கேட்க.. தேஜுவின் முகத்தில் ஓர் புன்னகை மட்டுமே..
” என்னாச்சு நல்லா தான இருந்தா..”
” இன்னைக்கு ஸ்டார் ஆப் த குயின்.. மேடம் தான்.. அதான் எல்லாரும் மாறி மாறி வந்து கொஞ்சிட்டு போக.. அது இந்த மகாராணிக்கு பிடிக்காம அழுகைய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. ” என சிரித்தாள் ஆஷா..
” ஓஹ்.. நான் கொஞ்ச நேரம் குழந்தையோட இங்க நடந்துட்டு இருக்கவா.. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே.. ” என தேஜு கேட்க..
” அச்சோ அதெல்லாம் ஒன்னுமில்ல.. நீங்க தூக்கிட்டு போங்க.. ” என்றாள்
ஹோட்டலின் உள்ளே சற்று உள்ளடங்கிய தோட்ட பகுதியில்.. தேஜஸ்வினி ஆலியாவோடு நடந்துகொண்டிருக்க.. அப்பொழுது ஓர் வலியகரம் வேகமாக ஆலியாவை அவளிடமிருந்து பறித்தது..
திடுமென நடந்த செயலில் தேஜு அதிர்ந்து நிமிர.. அங்கு கோப முகத்தோடு வசந்தா நின்றிருந்தார்.. குழந்தையோ திடிரென பலம் கொண்டு பறித்ததால் வீறிட்டுக் கொண்டிருந்தது..
” ப்ச்.. அழுது தொலையாத.. அப்பன் தான் தராதரம் தெரியாம கண்ட சாக்கடை கூட சுத்துறான்னா.. நீயுமா.. ” என பச்சிளம் குழந்தையை மிரட்ட.. அவள் மேலும் அழுதாள்..
தன்னை பற்றி பேசியது வலித்தாலும்.. அதனை கண்டு கொள்ளாது.. ” ஆலியா ரொம்ப அழுறா.. ப்ளீஸ் பர்ஸ்ட் அவள சமாதானம் படுத்துங்க.. இல்லை என்கிட்ட கொடுங்க.. ” என்றாள்.
அதில் மேலும் கோபம் கொண்ட வசந்தா மேற்கொண்டு ஏதோ கூறவர.. தயாளன் வந்தார்.. ” ஆஷா ஆலியாவ கூட்டிட்டு இங்கிருந்து போ.. ” என அவர் கூறவும்.. அவள் தேஜுவை பார்த்தவாறு தயங்க..
தயாளன் கோபம் கொண்டு.. ” போன்னு சொல்றேன்ல என மெல்லிய குரலில் கர்ஜிக்க.. ” அதில் உடல் நடுங்க உடனே அங்கிருந்து சென்றாள்.. அவள் விழிகளோ ஓர் நொடி தேஜுவை பரிதாபமாக பார்த்து சென்றது..
தயாளனின் கர்ஜனையில் தேஜுவின் தேகமும் ஓர் நொடி நடுங்கிவிட்டது.. அவள் மூளை இங்கிருந்து செல்.. உன்னவனிடம் தஞ்சம் கொள் என கட்டளையிட.. மனமோ எத்தனை நாள் ஓடி ஒழிவாய்.. தேவ் குடும்பத்தை ஓர் நாள் சந்திக்க வேண்டிய நிலை வரும் என நீ அறியவில்லையா.. என்றைக்கேனும் வருவது இன்றைக்கு வந்துவிட்டது என நினைத்துக்கொள்.. இவர்களால்.. என்ன செய்துவிட முடியும் உன் காதலை.. உன்னை தூற்ற செய்வார்கள்.. தூற்றட்டும்.. இகழ்வாக பேசுவார்கள்.. இகழ்ந்துட்டு போகட்டும்.. இதனாலெல்லாம் உன் காதல் தோற்று விடுமா என்ன.. அவ்வளவு பலவீனமானதா தேவ் மீது நீ கொண்டுள்ள காதல்.. என மனம் அவளை கேள்வி கேட்க.. தேஜு சிறிது சமாதானம் அடைந்தாள்..
” ஹும்ம்.. தேஜஸ்வினி.. எப்படி இருக்காங்க எல்லாரும் உங்க வீட்டுல.. ” என உணர்வற்ற குரலில் கேட்டார்.. தயாளன்..
” தேஜு.. ம்ம்ம் ” என தலையசைத்தாலே தவிர பதில் கூறவில்லை..
” நல்லாயில்லாம எப்படி இருப்பாங்க அப்பா.. அதான் இந்த தயாளன் சக்கரவர்த்தியோட பேரன்.. சூர்யதேவ் சக்கரவர்த்திய வளைச்சு போட்டாச்சு.. இனி எல்லாம் அங்க இங்க காமிச்சு நடிக்க வேண்டிய அவசியம் இல்லாததால நல்லாத்தான் இருப்பாங்க.. அப்படியில்லைன்னா தான் அதிசியம்.. ” என நக்கலாக வசந்தா கூறவும்.. தேஜு விழி கலங்க.. அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்..
” இங்க பாருங்கம்மா பேச்சு உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான்.. இதுல என் குடும்பத்தை இழுக்காதீங்க ” என அவள் சொல்லி முடிப்பதற்குள்…
” அடி செருப்பால யாருக்கு யாரு அம்மா.. உன்னை மாதிரி கேடுகெட்டவ எல்லாம் என்ன அம்மான்னு சொல்றதா.. ஏண்டி உனக்கெல்லாம் உடம்பு கூசல.. எப்படிடி வெட்கமே இல்லாம இன்னொருத்தி புருஷன பார்க்க தோணுது… எத்தனை படத்துல உடம்ப காட்டி நடிச்சுருக்க.. அதுல உள்ள ஒருத்தன கூடவா உனக்கு புடிக்கதோணல.. இல்லை எல்லாரும் என் மருமகன் மாதிரி பணக்காரன் இல்லையா.. ஏண்டி உன் சுயநலத்துக்காக என் மக வாழ்கைய கெடுக்கிற.. ” என வசந்தா சவுக்காய் நாக்கை சுழட்டினார்..
அதில் தேஜுவின் மனம் குறுகி உடல் நடுக்கம் கொள்ள தொடங்கியது.. இதழ் கடித்து தன் நடுக்கத்தை குறைக்க முயன்றாள்..
” எல்லாம் பெத்தவங்க வளர்ப்பு வசந்தா.. இத சொல்லி என்ன பண்ண.. முகத்துல சுருக்கம் வர வரைக்கும் தான் இவளுங்க ஆட்டம்.. அப்புறம் ஒன்னும் இருக்காது இல்லையா.. அதான் நல்ல கொழுத்த பணக்காரனா மடக்க சொல்லி அந்த ரம்யமாலினி சொல்லிருப்பா.. இவளும் கல்யாணமாகியிருந்தா என்ன குழந்தை இருந்தா என்னன்னு.. சூர்யாவை வளைச்சு போட்டுட்டா.. பாட்டி பேத்தி என எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க ” என இகழ்வாக கூறினார்..
” போதும் நிறுத்துங்க.. இதுக்கும் மேல ஒருவார்த்தை பேசுனீங்க.. அப்புறம் வயசுக்கு கூட மரியாதை இருக்காது.. ” தன்னைப் பற்றி பேசும்போது.. தன் மேல் உள்ள தவறால் அவர்களின் உணர்வு புரிந்து பொறுமையாய் இருந்தவள்.. தன் குடும்பத்தினரை பேசியதும் பொங்கிவிட்டாள்..
” என்னை பேசுனீங்க.. என்னோட காதலுக்காக அதை பொறுத்துக்கிட்டேன்.. ஆனா என்னோட தாதியையோ அம்மாவையோ பேசுனா நான் பொறுத்துக்க மாட்டேன்.. என தயாளனிடம் கூறியவள்.. வசந்தாவை பார்த்து.. நான் ஒன்னும் உங்க பொண்ணோட புருஷன பார்த்து காதலிக்கல.. நான் காதலிச்சவரைதான் உங்க பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்கீங்க.. ” என அழுத்தமாக கூறினாள்..
என்ன சொன்னிங்க.. உங்க பொண்ணு வாழ்கைய நான் கெடுக்குறேன்னா.. இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. தேவ்வும் உங்க பொண்ணும் சேர்ந்து வாழுற சந்தோஷமான வாழ்கைய நான் என்னைக்கும் கெடுக்கல.. கெடுக்க நினைக்கவும் மாட்டேன்..
இன்னொருத்தி அழுகையில கிடைக்கிற காதல் எனக்கு தேவையில்லை.. அது நரகத்துக்கு சமானம்..
தேவ் கண்ணுல உங்க பொண்ணுக்கான எந்த பீலிங்ஸுசும் இல்லை.. அதேமாதிரி தான் உங்க பொண்ணுகிட்டயும்.. ரெண்டு பேர் சேர்ந்து ஏனோ தானோன்னு வாழ்றதுக்கு.. அவங்க பிரிஞ்சு இருக்கிறதே மேல்தான்..
ஆனா நீங்க என் வளர்ப்ப பத்தி ரொம்ப பேசுனதுனால.. இப்போவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன்.. அது என்னை நீங்க பேசுனதால பயந்துகிட்டு இல்லை.. உங்களோட மக பாசத்துக்காக.. உங்க கண்ணுல எனக்கான துவேஷம் இருந்தாலும்.. லோஷினி வாழ்கைய நினைச்சு நீங்க கலங்குறதால மட்டும் கொடுக்கிறேன்..
இன்னும் ஆறு மாசத்துக்கு உங்க மருமகன் கண்ணுல நான் பட மாட்டேன்.. அவரோட பேச முயற்சிக்கவும் மாட்டேன்.. அந்த ஆறுமாத காலம் என்ன நடக்குதோ நடக்கட்டும்.. என் காதல் மேல உள்ள நம்பிக்கையில உங்ககிட்ட நான் சவால் விடுறேன்.. முடிஞ்சா தேவ்வ என்கிட்டயிருந்து பிரிச்சு பாருங்க.. என அவர்களிடம் தைரியமாக கூறினாள்..
வசந்தா வாயடைத்து அவளைப் பார்க்க.. தயாளன் ” உன்னை எப்படி நம்புறது.. தேவ்கிட்ட இந்த சேலஞ்ச சொல்லிட்டினா.. ” என அவளை நம்பாது கேட்டார்..
” இல்லை.. என் தேவ் மீது ஆணையா.. நான் சொல்ல மாட்டேன்.. இதுக்கு மேல நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்..”
” இப்போ இருந்தே நம்ம சவால் ஆரம்பிக்குது.. ” என்றார். அதில் இப்போது தேவ்வை அவள் சந்திக்க கூடாது என்ற பொருளை உணர்ந்த தேஜு சரியென தலையசைத்து சென்றாள்..
காதல் உள்ளம் ஒருமுறை அவனை கண்டுவிடு என்று சொல்ல.. மூளையோ மறுத்துக் கொண்டிருந்தது.. அப்பொழுது அவள் போன் ஒலிக்க.. யாரென பார்த்தாள்.. அம்ரிஷ் தான் அழைத்து கொண்டிருந்தான்..
ஹலோ அம்ரி..
என்னாச்சு ஏதாச்சும் பிரச்சனையா.. என தேஜுவின் குரலை வைத்து கேட்டான்..
இல்லடா.. நான்.. இங்க தேவ் ஹோட்டல்ல இருக்கேன்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்க.. என்று மட்டும் கூறி வைத்துவிட்டாள்.. அம்ரிஷ்.. சிறிதும் தாமதிக்காது அங்கு சென்றான்.. தேஜுவின் குரலிலே ஏதோ பிரச்சனை என புரிந்தது..
தொண்டையும் நாவும் உலர்ந்து விட்டது அவளுக்கு.. ஏதேனும் குடித்தாக வேண்டிய கட்டாயம்.. அதனால் மெல்ல பின்புறம் வழியாக பார்ட்டி ஹாலுக்கு சென்றவள்.. அங்கு கண்ட காட்சியில் மொத்தமாய் நொறுங்கி போனாள்..
தேவ்வின் ஒரு தோளில் ஆலியாவும்.. மற்றொரு தோளில் லோஷனியும் சாய்ந்திருக்க.. அவன் அவர்களை அணைத்தவாறு இருந்தான்.. கூடவே முகத்தில் சிறு புன்னகை.. அதனை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த தேஜு.. அங்கிருந்த மதுபானத்தை கோபமும் வேகமுமாக குடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.. அவள் நடையில் வேகம் இருந்தாலும்.. தளர்வு அதற்கு குறையாமல் இருந்தது..