தன்னை தைரியமாக, திடமாக காட்டி கொண்டாலும், மனம் மத்தாளம் கொட்டியது. நடுநிசி நேரம், எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். இதில் இடியும், மின்னலும் வெட்ட கத்தி கூப்பாடு போட்டாலும் யாரும் வர போவது இல்லை. கதவின் தாழ்ப்பாள் உடைந்த நிமிடம் உள்ளே வந்தான் சுகுமார்.
நல்ல போதை, கைலி ஒழுங்காக கூட கட்ட வில்லை. அரை கண் தான் தெரிந்தது. சரண்யா முகமே அவள் பயத்தை காட்டி கொடுத்தது. கையில் அரிவாள் மனை இருந்தும், அதில் திடமான பிடிப்பு இல்லை. பயத்தில் உடல் வெடவெடான்ன நடுங்கியது. நடுராத்திரி தனியாக இரு குழந்தைகளை வைத்து இருக்கும் பெண், நல்ல போதையில் ஒரு குடிகாரன்… என்ன சொன்னாலும் மனம் பயந்து கதறியது.
“கொண்ணு போட்டாலும் கேட்க ஆள் இல்லாத பொட்டாச்சி, என் கையை கடிச்சு வைக்கிரையா… உன் உடம்பை புண்ணாக்காம போக மாட்டேன். புருசன் விட்டுட்டு போய் நாலு வருசம் ஆச்சு… ஒருத்தனை கூடவா நீ பார்த்திருக்க மாட்ட… நீ ஒத்து போய்ட்டா ரெண்டு பேருக்கும் வசதி தான். அப்பப்ப என்னை அணுசரிச்சு போ… உம் பிள்ளைகளை நான் பார்த்துக்கிறேன். உனக்கு பாதுகாப்பாகவும் நான் இருப்பேன்…” என்று பேசிய படியே அவளை நெருங்க,
பயந்து பின் வந்தவள் வாசல் திறந்து தான் இருந்தது. ஓடி விடுவோமா… கீழ போய் யார் வீட்டிலும் கதவை தட்டலாம், யாரும் திறக்கா விட்டால்,ஒரு நொடி உறங்கும் பிள்ளைகளை பார்த்தாள். இவனிடம் விட்டு செல்வதா… அண்ணா என்ற தன்னையே அசிங்கமாக பார்த்தவன், இது இளம் குருத்து, ஏதேனும் செய்து விடுவானா… என் மானம் காக்க, என் பிள்ளைகளை இழக்க வேண்டுமா… என் பிள்ளைகளை இவனிடம் விட்டு செல்ல மாட்டேன். எதுவாயினும் பார்த்து கொள்ளலாம்.
சுகுமார் கொஞ்சமும் அசர வில்லை. அவனை அடிக்க வந்த சரண்யா கையை. நொடியில் மடக்கி விட்டான். அவன் பிடி இரும்பாக இருந்தது. அவனை எதிர்க்க முடியவில்லை. தன்னை தற்காத்து கொள்ள போராட துவங்கி விட்டாள்.
சத்தத்தில் பிள்ளைகளுக்கு முழிப்பு வந்தது. அஜி தாயை தேட, இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அழுக ஆரம்பித்து விட்டாள். தன் தாய் தன் மானத்தை காக்க போராடுவதை அறியாமல், அழுததும் தன்னை தூக்கி சமாதானம் செய்யாத தாயின் மேல் கோபம் கொண்டு அழுகையை அதிகப்படுத்தியது. அஜி தொட்டு விஜியும் எழுந்து கொள்ள, தாயை காணாமல் பிள்ளைகள் இருவரும் கத்த தொடங்கி விட்டார்கள். மழை ஓய்ந்து தூறல் விட, பிள்ளைகள் சத்தம் பெரும் குரலாக கேட்க தொடங்கியது.
சுகுமாருக்கு பதட்டம். பிள்ளைகள் சத்தம் யாரையும் எழுப்பி விடும் அல்லவா… கரண்ட் வந்து விட்டது. பிள்ளைகள் இருவரும் பாயில் அமர்ந்து அழுக, ஒரு மூலையில் அவனோடு போராடி கொண்டு இருந்தாள். தன் தாய் பலவந்த படுத்த படுகிறாள் என்றெல்லாம் தெரிய வில்லை. தாயை கண்டதும் எழுந்து அவளிடம் ஓடி வந்தார்கள்.
சரண்யா தன் நகத்தால் அவனை கீறி அடிக்க தொடங்கினாள். முடி கலைந்து, முகமெல்லாம் காயம் தான் அவளுக்கு, நிலைமை மிக அபாயகரம், போராடியே ஆக வேண்டும்.
ரொம்ப நேரம் அவனோடு போராட முடியாமல், உடல் சொரா தொடங்கியது. கண் இருட்டு கட்டி கொண்டு வந்தது. தன் சக்தி மீறி தான் அவனோடு மல்லு காட்டுகிறாள். ஓங்கி வளர்ந்த ஆண் மகன், பூஞ்சை உடம்பான சரண்யாவால் ரொம்ப நேரம் சமாளிக்க முடியவில்லை.
நிலை என்னவென்று புரியாமல் பிள்ளைகள் இருவரும் பயத்தில் சரண்யா நைட்டியை தொத்தி கொண்டு நின்றார்கள். சரண்யா அவனோடு இழுபட, பிள்ளைகள் அவளை விட்டு நகரவில்லை. தாயையே பிடித்து கொண்டு, அழுது நின்றார்கள்.
குடி போதையில் நிலை மறக்க, வெறி ஏறியது. சரண்யா கழுத்தில் கை வைத்து இறுக்கினான். இனி முடியும் என்று தோன்ற வில்லை. உடல் தளர, கண் மேலே சொருகியது. கை தளர்ந்து கீழ வந்து பிள்ளைகள் தலையை தொட்டது. மனம் கதறினாலும், உடலில் துளி தெம்பு இல்லை. அஜி தாயை காலை கட்டி கொள்ள, விஜி நகர்ந்து சுகுமார் காலை எட்டும் உயரத்துக்கு நின்று கடித்து வைத்தாள்.
வலியில் முகம் சுருக்கியவன் , கோபம் கொண்டு பிள்ளையை ஒற்றை கையால் அடிக்க வர, பிடித்து கொண்டான் வெற்றி வேல். யார் என்று சுகுமார் பார்க்க, ஒன்றும் தெரிய வில்லை. இதுவரை இவனை பார்த்ததும் இல்லை. யார் இவன் என்று யோசிக்கும் போதே, அவனை பிரித்து எடுத்து விட்டான்.
விடாது மழை பொழிய, வெற்றிக்கு பிள்ளைகள் நினைவு தான். அன்று பள்ளி விழாவில் பார்த்தது. மீண்டும் முகம் காண ஆசையாக இருந்தது. சரவணன் அவன் நண்பன் தான். சரண்யா எதுத்த வீட்டில் குடி இருக்கிறான். அவன் மூலம் விவரம் அறிந்து கொண்டான். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருக்கிறாள் என்று… பாப்பா, கடைக்குட்டி என்று செல்லம் கொஞ்சி கூத்தாடும் குடும்பம் எங்கே?… அவனுக்கு புரியவில்லை. ஏதோ ஒரு விவகாரம் என்று மட்டும் தான் நினைத்தான்.
பிள்ளைகள் விசயத்தில் நிலையான முடிவு எடுக்காமல், தந்தை என்று தன்னை அறிமுக படுத்த கூடாது என்று நினைத்தான். முன்பு தடுமாறிய மனம் தான், தட்டி கேட்டு போய் வாழ்க்கை முடிந்து போனது. தன்னுடைய நிலையில்லாத மனம் தான் தன்னோடு சேர்த்து சரண்யா, அபி என்ற இரு பெண்களின் வாழ்க்கையும் சூரையாடியது. இனி, பிள்ளைகள் விசயத்திலும் ஒரு நிலையில்லாமல் நிற்க கூடாது. ஒரு தெளிவு கண்ட பின் தான் திருச்சி சென்றான்.
அடித்து கொட்டும் மழையில் பிள்ளைகள் முகம் தெரியா, சரண்யா வசிக்கும் வீட்டு பக்கம் செல்ல முடிவு செய்தான். நிச்சயம் தூங்கி கொண்டு தான் இருப்பார்கள். அவள் வீட்டை காண்கையில் ஏதோ ஒரு ஆறுதல்… ஊர் செல்லவும் நேரம் இருக்க, மெல்ல சரண்யா வீடு வரும் பஸ்ஸில் அமர்ந்தான். தூங்கா நகரத்தில் தூக்கம் இல்லாமல் வேலை நடந்து கொண்டிருந்தது. தென் தமிழகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி இங்கு தான் என்பதால் நடுராத்திரியில் வேலை ஜோராக நடந்து கொண்டு இருந்தது. அதை கடந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தான் வெற்றி. மழை ஓரளவு விட்டு இருக்க, மெல்ல வானம் பார்த்து நடந்தான். அவள் வீட்டை பார்க்கையில் ஒரு மகிழ்ச்சி, பார்த்து கொண்டே நிற்க, பிள்ளைகள் அழுவது போல சின்ன ஒரு சத்தம். பூனையோ என்று பார்த்தவன், மெல்ல அருகில் சென்றான். சத்தம் பலமாக வர, பதறி போய் தான் ஓடினான். ஆனால், உள்ளே அவன் பார்த்த காட்சி, நெஞ்சே வெடித்து விட்டது.
முரட்டு உருவத்தில் ஒருவன் சரண்யா கழுத்தை இறுக்கி கொண்டிருக்க, இரு பக்கமும் பிள்ளைகள் அழுத படியே நின்றது. சுகுமார் கை நீண்ட போதே தடுத்து நிறுத்தியவன். அடுத்து அவன் உயிரை மட்டும் தான் உடம்பில் வைத்தான். சரண்யா மயங்கி விழ, சுகுமாரை விட்டு மனைவி அருகில் சென்றான்.
சுகுமார் வாங்கிய அடியில் மெல்ல தவழ்ந்து வெளியேற, அவனை கவனிக்கும் நிலையில் வெற்றி இல்லை. பிள்ளைகள் அழுகை தொடர்ந்தாலும், ஓடி போய் தண்ணி எடுத்து வந்து சரண்யா முகத்தில் தெளித்தான். கண் திறந்தாலும் தெளிவு இல்லை. சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள், தன் நெஞ்சு, கழுத்தை நீவி விட்டு கொண்டாள். இன்னும் நிதானம் வரவில்லை, கண் மூடி தான் இருந்தாள். அந்த நிலையிலும் அழும் பிள்ளைகளை கை கொண்டு தூக்கி மடியில் அமர்த்தி நெஞ்சில் சாய்த்து தட்டி கொடுத்தாள். வலி போல உதட்டு ஓரம் கீறல் தெரிந்தது. ஒரு வார்த்தை பேசாமல் நெஞ்சில் போட்டு தட்டி கொடுக்க, அழுகை குறைந்து தேம்பல் மட்டுமே பிள்ளைகளிடம் இருந்தது.
அடுத்த ஒரு அரை மணி நேரம் அமைதி மட்டுமே. திரும்ப பிள்ளைகள் உறங்க துவங்க, பார்த்து நின்றான் வெற்றி. இதுவரை மனைவியை ஆழ்ந்து ஒரு நாளும் பார்த்தது இல்லை. இன்று தான் மனைவி என்ற ஒருத்தியை முகத்தில் இருக்கும் மச்சம் முதற்கொண்டு உரித்து பார்த்தான்.
நடந்த கலவரத்தில் அவள் நைட்டி கிழிந்து தொங்கியது. கை, கால், கழுத்து, முகம் என்று பல இடத்தில் சிறு காயம் தெரிந்தது. எதையும் பொருட் படுத்தவில்லை சரண்யா. பயத்தில் நடுங்கும் பிள்ளைகளே பிரதானம். நல்ல உறக்கத்தில் பிள்ளைகள் இருக்கவும், மெல்ல நகர்ந்து பாயில் படுக்க போட்டவள். அதன் பின் தான் வெளியே பாத்ரூம் சென்றாள். சுகுமார் வீட்டுக்கும் இவள் வீட்டுக்கும் ஒரு சுவர் தான். மாடியில் இருந்து குதித்தால் இவள் வீடு வந்து விடும். அக்கம்பக்கம் முதலில் உதவுவார்கள் என்று தான் சகஜமாக பழகியது. ஆனால், அது தான் வினையாகி போனது.
வேற உடை அணிந்து வந்தவள், வெற்றி உடன் எந்த பேச்சு வார்த்தையும் வைக்க வில்லை. ஒரு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள், நடுவில் உறங்கும் பிள்ளைகள் மீது தான் கண் போனது. பிள்ளைகள் அடுத்த பக்கம் வெற்றி அமர்ந்து இருந்தான். அவன் பார்வையும் பிள்ளைகள் மீது தான். உடல் வலி, அசதி என்று மெல்ல கண்ணயர்ந்தாள் சரண்யா. ஆனால், வெற்றிக்கு துளி தூக்கம் இல்லை.
மாறி போனது காலம் தான் உறவு இல்லை. தன் குடும்பம் என்ற உணர்வு வந்தது. சரண்யாவையும் தாண்டி பிள்ளைகள் தான் அவனை கட்டி இழுத்தது. என்ன வாழ்க்கை எங்களது… அவசரத்தில் அள்ளி தெளித்து விட்டேனோ… இன்றைய தன் பிள்ளைகளின் நிலை சாகும் வரை மறக்க முடியாது. அநாதரவாக தன் பிள்ளைகள் அழுது நின்ற காட்சி மனதில் குத்தியது. பெரும் பாவி நீ என்று தன் மனமே குத்தி காட்டியது. எவ்வளவு பெரிய இக்கட்டு, நான் வராமல் போனால்… யோசிக்கவே முடியவில்லை.
இமைக்காமல் கூட பிள்ளைகளையே பார்த்து இருந்தான். மனசாட்சி குத்தி குதறியது. நிமிர்ந்து அமர்ந்து மனைவியை பார்த்தான். அவள் தோற்றத்தில் மனைவி வாழும் வாழ்க்கை தெரிந்தது. தன்னையும் பார்த்து கொண்டான். ஒரு காலத்தில் வறுமை தான். இன்று இல்லை, நன்றாக இருக்கிறான். அவன் வாழ்வின் முன்னேற்றம் அவன் குடும்பத்தில் தெரிந்தது. தங்கை கழுத்தில் இரண்டு சங்கிலி இருக்க, மனைவி வெறும் மஞ்சள் கயிறு தான். அதுவும் தாலி இல்லை. அவன் தம்பி மகனுக்கு என்று ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மெத்தை வாங்கி கொடுத்தான். தன் பிள்ளைகள் பாயில் போர்வை விரித்து கிடக்கிறார்கள். தங்கை மகனுக்கு தங்கத்தில் காப்பு வாங்கி கொடுத்து, தாய் மாமன் முறை செய்தான். தன் பிள்ளைகள் கையில் பிளாஸ்டிக் வளையல். உடுப்பும் சாதாரண துணி தான். மனம் கனத்து.
மனதின் ஒரு மூலையில் அபிராமி நியாபாகம். தனக்காக, தான் கை விட மாட்டேன் என்ற எண்ணத்தில் எட்டு வருடமாக காத்து கொண்டு இருக்கிறாள். அவளால் ஏமாற்றத்தை ஏற்க முடியுமா… ஒரு தெளிவு இல்லாத ஆண் வாழ்க்கை நிலையில்லாமல் போகும் போல… தான் சிறந்த உதாரணம். என் கையாலாகாத தனம் தான் என் பிள்ளைகள் நிலை. இனியும் உன் சுயநலம் தான் பெரிதா… பெற்ற பிள்ளைகள் உடன் ஒரு வாழ்வா?… இல்லை பெற்ற பிள்ளைகளை விட்டு உனக்கென ஒரு வாழ்வா?…
பயத்தில் பிள்ளைகள் துணியை ஈரம் செய்து இருந்தார்கள். சரண்யா உட்கார்ந்த படியே கண்ணயர்ந்தாள், தூக்கமா, சோர்வா தெரியவில்லை. வெற்றி எழுந்து சென்று பிள்ளைகள் துணியை மாத்தி விட்டான். அவன் பார்வை வீட்டை சுற்றியே வந்தது. பெரிதான வசதிகள் எதுவுமில்லை. சில பாத்திரம், மூன்று குடம், ரெண்டு பெட்டி மட்டும் தான் இருந்தது. அவர்கள் நிலையை சொல்லாமல் சொல்லியது.
தற்போது தான் கட்டி இருக்கும் புது வீட்டை நினைத்து பார்த்தான். நான்கு பக்கமும் காற்றோட்டம், நல்ல இடம் விட்டு தாராளமாக கட்டி இருந்தான். யாருக்காக?… பிள்ளைகள் அருகில் சென்று அமர்ந்தான். மெல்ல குனிந்து பிள்ளைகள் வாசம் பிடித்தான். மனதில் ஏதோ ஒரு உணர்வு. பிறக்கும் போது எப்படி இருந்திருப்பார்கள். சரண்யா ஒல்லி உடம்பு எப்படி ரெட்டை பிள்ளை சுமர்ந்து பெற்றாள். தன் கை கொண்டு பிள்ளைகள் முடியை தொட்டான். ரொம்ப மென்மையாக இருந்தது. பிள்ளைகள் வரிவடிவை ரசிக்க தொடங்கினான். இரட்டை பிள்ளைகள் தான். ஆனால், இருவரும் ஒன்று போல் இல்லை.
அஜி அப்படியே வெற்றி ஜெராக்ஸ் தான். தன் காலை பார்த்து கொண்டான். அவனுக்கு நல்ல நீளமான கால்கள். அதே போல தான் அஜிக்கும். கை விரல் எல்லாம் தந்தை போல நீளமாக இருந்தது. முடி கூட கலந்து அவனை போலவே நின்றது. சின்ன புன்னகை அவன் முகத்தில், திரும்பி விஜியை பார்த்தான். ஒல்லி உடம்பாக, கை, கால் குச்சியாக இருந்தது. விஜி மேல் கவனம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சென்றது. அவள் தாயின் உடல் வாகை கொண்டவள் என்ற எண்ணம் ஏனோ வெற்றிக்கு தோன்ற வில்லை.
எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் உறங்கியவன், விழிக்கும் போது சரண்யா யாரோட போனில் பேசி கொண்டு இருந்தாள்.
“இல்லை அகி, லீவ் வேண்டாம். என் நிலைக்கு இந்த ஒத்த வேலையும் போனால், என் பாடு திண்டாட்டம் தான். தேவி அக்காகிட்ட எப்பதான் பேசினேன். என்னன்னு சொல்லல, ஒரு பிரச்சனை பிள்ளைகளை கூட வச்சுக்கனும்ன்னு மட்டும் தான் சொன்னேன். சரின்னு சொல்லிட்டாங்க… இன்னைக்கு பிள்ளைகளை ஸ்கூல் அனுப்ப முடியாது. ரொம்ப பயந்து போய் இருக்காங்க… குடோன் வேலையை நான் பாக்குறேன். அப்ப தான் இவங்களை கூட வச்சுக்க முடியும்… அம்மா வீடு எனக்கு ஒத்து வராது. யார்டையும் எம் பிள்ளைகளை விட முடியாது அகி… நான் வாரேன், அங்கு வந்து பேசுறேன்…” என்று போனை வைத்தவள். பிள்ளைகளை கிளப்ப ஆரம்பித்தாள்.
வெற்றி பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தான். ஒரே மாதிரி வேற கலரில் உடை அணிந்து பால், பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் பிள்ளைகள். சரண்யா அடுப்படி வேலையில் இருந்தாள். அவன் பிள்ளைகளையே பார்த்து கொண்டு இருக்க, இருவரும் நிமிர்ந்து தந்தையை பார்த்தார்கள்.
அஜியை பார்த்து கை நீட்ட, எழுந்து அம்மா அருகில் ஓடி விட்டாள். சின்ன சிரிப்பு வெற்றி முகத்தில். அதே போல் விஜியை பார்த்து கை நீட்டி தன் அருகில் அழைக்க, சின்ன குட்டிக்கு பயம் ஒன்றும் இல்லை போல அவன் கையையே பார்த்தது. தன் வாயில் இருந்த பிஸ்கட்டை அவன் கையில் வைத்தது. அதற்கு தான் கை நீட்டுகிறான் என்று விஜியின் குட்டி மூளை யோசித்தது போல…
பிள்ளை வாயில் வைத்து கொடுத்த எச்சில் பிஸ்கட், பார்த்தவன் ஆசையாக உண்டான். அவன் உண்ணுவதை பார்த்த விஜி, இன்னும் ஒன்றை அவன் புறம் கொடுக்க, கண் கலங்கியது வெற்றிக்கு. இந்த சொர்க்கத்தையா இழக்க துணிந்தோம். கருவை அழிக்கும் முடிவை எடுக்கும் போது கை கட்டி பார்த்து நின்றான். அப்படி பட்ட அப்பனுக்கு உணவு கொடுக்கும் மகளை பார்த்து கண் கலங்கியது. இனியும் என் பொறுப்பை தட்டி கழிப்பேனா…
சரண்யா எதையும் கண்டு கொள்ள வில்லை. பிள்ளைகளுக்கு தோசை வைத்து கொடுத்தாள். மதிய உணவை டப்பாவில் அடைத்தாள். வெற்றி முகம் கழுவி வர, அவனுக்கும் தோசை, சட்னி உடன் ஒரு டியும் இருந்தது.
வெற்றிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. சிரித்த முகமாகவே எடுத்து உண்டான். மெல்ல சரண்யா முகம் பார்த்தான், என்ன பேசுவது என்று தெரியாமல். அவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஒரு கையில் பையும், இன்னொரு கையில் பிள்ளைகளை பிடித்து கொண்டு வெளி வந்தவள். பூட்டு சாவி எடுத்து கொண்டு வெற்றியை ஒரு பார்வை பார்த்தாள். வெளியேறு என்று பார்வையாலே சொல்ல, தயங்கியபடி வெளி வந்தான் வெற்றி. வீட்டை பூட்டியவள், பிள்ளைகள் உடன் நடையை கட்டி விட்டாள். நேற்று இரவு அப்படி அழுதவள், இன்று தெளிவாக இருந்தாள். இது தான் தங்கள் வாழ்க்கை, இப்படித்தான் பலதும் வரும், முடங்கி போகாமல் மீண்டு வர தான் வேண்டும். தூக்கி விடவோ, தட்டி கொடுக்கவோ, உடன் வரவோ யாரும் இல்லை. மனம் ஆறும் வரை அழுது விட்டு, அடுத்த வேலையை பார்க்க நில்லாமல் ஓட வேண்டும். தான் கொஞ்சம் பயந்தாலும், தயங்கி நின்றாலும் பின் வாங்கி போவது தன் பிள்ளைகள் தான் என்ற தெளிவு வந்தது. தான் ஒரு அடி பின் வைத்தால், தன் பிள்ளைகள் பல அடி பின் போவார்கள் என்பதால் துணிந்து விட்டாள். முட்டி மோதித்தான் பார்ப்போம். எனக்காக இல்லை என்னில் இருந்து, என்னை நம்பி வந்தவர்களுக்காக…
“பாவம் பார்த்து சோறு போட்டு விரட்டி விட்டாள் பாவி…” என்ற புலம்ப தான் முடிந்தது வெற்றியால். சரண்யா உடன் சேர்ந்து தான் இறங்கினான். ஓனர் அம்மா பார்த்தாலும் கேட்க வில்லை.
தற்போது நின்று பதில் சொல்ல தனக்கு நேரமில்லை என்று உணர்ந்தவள். தன் பின்னே வருபவனை வீடு தாண்டியதும் திரும்பியும் பார்க்காமல் விஜியை இடுப்பிலும், அஜியை கையிலும் பிடித்து கொண்டு நடந்து விட்டாள். பின் வருகிறானா என்று கூட பார்க்க வில்லை.
சரண்யாவின் தெளிவு வெற்றிக்கு பயம் கொடுத்தது. கோபம், வெறுப்பு, பயம், பிடித்தமின்மை என்று எதுவுமில்லை அவளிடம்… நீ யார் எங்களுக்கு என்ற ஒரு பார்வை தான் எப்போதும்…
கணவன், மனைவியாக சேர்ந்து தாய், தந்தையாக மாறிய பின்… தன் பொறுப்பை, கடமையை ஒதுக்கி ஓடி போனவன் உரிமையற்றவனாகவும், தனியாக தன் பொறுப்பை சுமந்தவள் உரிமை உள்ளவள் என்று ஆனாள். என் பிள்ளைகள் என்று உரிமையாக சொல்லவும் முடியாமல் மருகி நின்றான். உண்மையில் மனைவி முகம் பார்த்து சொல்லும் தைரியம் தான் அவனுக்கு இல்லை…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.