டிராவல்ஸ் தொடங்கும் விழாவின் அழைப்பிதழ் வந்து விட்டது. அது முழுக்க முழுக்க வெற்றியின் கை வண்ணம் தான். அதன் நேம் ஃபோர்ட்டை தொட்டு பார்த்து சிலிர்த்து கொண்டான். மூணு கார், ரெண்டு லாரி என்ற குட்டி டிராவல்ஸ் பெயர் ஏ.வி டிராவல்ஸ் தான். தன் மகள்களின் பெயரில் தான் தொடங்கினான். யாருக்கும் தெரியாது, யாருக்கும் சொல்லவும் தோண வில்லை.
அழைப்பிதழை எடுத்து கொண்டு தன் வீடு தான் வந்தான். இரவில் தான் மதுரை செல்ல வேண்டும். முன் போல தொடர்ந்து அங்கே இருக்க முடிய வில்லை. நிறைய வேலை கழுத்தை பிடிக்க, நேரமில்லை. மகள்கள் கையில் கொடுத்த பின் தான், யாருக்கும் என்று பார்சலை திறக்காமல் வைத்து இருக்க, தனம் விடுவாரா…
என்னவாக இருக்கும் என்று பார்த்தவர், அழைப்பிதழை கண்டு சக்தியை அழைத்து கேட்டு விட்டார். அவனும் பார்த்து விட்டு, தாய்க்கு விளக்கி சொல்ல, யாருக்கும் புரிய வில்லை. இன்னும் இவர்கள் யாருக்கும் வெற்றி பிள்ளைகளின் பெயர் தெரியாதல்லவா… பிள்ளைகள் பற்றி கேட்டால் சொல்லி இருப்பான். இவர்கள் யாரும் கேட்கவும் இல்லை, அவன் சொல்லவும் இல்லை.
கிளம்பி வந்த மகனை பார்த்தவர், “பெரியவனே என்னாலே பேர் இது… எதுவும் ஜோசியம் பார்த்தியா!…”
“இதை ஏன் ம்மா எடுத்தீங்க. நானே தருவேன்லா, முதல்ல பிள்ளைக பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன்…”
தனத்திற்கு சுருக் என்று தைத்தது, “ஏன்லே வெற்றி, நான் பார்க்க கூடாதா… உன்னை பெத்தவ நான், என்னையே தட்டி பேசுற.”
“உங்களை யார் தடுத்தது, முதல்ல பிள்ளைக பிரிச்சு பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அதான்…”
“ஓ… நேத்து பொறந்த பொடிசுகளுக்கும் நான் குறைஞ்சு போய்ட்டேன். சரிதான் மகனே. இனி நான் ஒதுங்கி தான் நிக்கணும். ஆயிரம் இருந்தாலும் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு தான் போல…” என்று சொல்லும் போதே நீர் நிறைந்தது.
வெற்றிக்கு என்னடா இது என்றானது. தன் பிள்ளைகள் பெயரில் தொடங்கிய முதல் தொழில், அவர்களுக்கு முதலில் காட்ட ஆசைப்பட்டான். அதற்கு ஏன் இவ்வளவும் அழுகை…
“சரி, விடுங்கம்மா… உங்களுக்கு தான் முதல் உரிமை. நான் வேற ஏதோ ஒரு கோபம், நிதானமில்லாம பேசிட்டேன். மனசுல வைக்காதீங்க. பாருங்க, பத்திரிக்கை நல்லா இருக்கா…” என்று மகன் தன்மையாக கேட்க பின் தான் மனம் குளிர்ந்தது.
பெத்த மகனை அவன் பெத்த பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுக்க மனம் வரவில்லை.
“ரொம்ப நல்லா இருக்கு மகனே… தம்பி என்னவோ பேரு சொல்றான். யாரு பேர் இது…”
“எம் பிள்ளைக பேரு தான். அஜிதா, விஜிதா… அவங்க பேருல தான் டிராவல்ஸ் இருக்கு…” முகம் மகிழ்ச்சியில் மின்னியது.
“எதே!… பொட்ட பிள்ளைக பேருல தொழில் தொடங்க வா… கூறு இருக்க உனக்கு, ஒழுங்கா மாத்து மகனே. நம்ம வீட்டுக்கு ஆம்பிளை பிள்ளை தான் ராசி. எனக்கு, உன் தம்பிக்கு, உன் தங்கச்சிக்கு எல்லோருக்கும் தலை பிள்ளை ஆம்பிளை பிள்ளை தான். ஆண் வாரிசு தான் நம்ம பேர் சொல்லும், அடுத்த வீட்டுக்கு பொறவங்களுக்கு தொழில் எதுக்கு… வீட்டுக்கு மத்தவங்க நான் இருக்கேன், உங்க அப்பா, நீ, உன் தம்பி, தம்பி மகன் இப்படி யார் பேருலயாவது வையென். பொம்பளை பிள்ளைக பேரு எதுக்கு… எனக்கு மனசு ஒப்பலை பெரியவனே…” என்றார் சடவாக.
வெற்றி வெகு நிதானமாக, “அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும். உங்க எல்லோருக்கும் ஆம்பிளை பிள்ளையை கொடுத்த கடவுள், எனக்கு ரெண்டும் பெண் பிள்ளையை தான் கொடுத்துருக்கு. அப்போ அவங்க பேருல தான் வைக்க முடியும்…”
“அப்போ, உன் தம்பி மகன் பேருல வை… வீட்டுக்கு சின்ன பையன். ஒத்த ஆண் வாரிசு, உன் மகள்களுக்கு தாய் மாமன் சீர் அவன் தான் செய்யணும்…”
வெற்றி பதில் சொல்லும் முன் சக்தி சொல்லி விட்டான்.
“அம்மா, அண்ணன் அவன் பிள்ளைக பேரு வைக்க ஆசைப்படுகிறான். அதுல என்ன தப்பு இருக்கு, அவன் முதல் போட்டு தொழில் தொடகுறான். அப்போ அவன் பிள்ளைக பேரு தான் வைப்பான்…”
“என்ன இருந்தாலும் ராசின்னு ஒன்னு இருக்குல… இந்த சின்ன குட்டி ரொம்ப ராசி, அதான் சொல்றேன். புரிஞ்சுக்க மாட்றான். காரணமில்லாமல் பெரியவங்க எதுவும் சொல்ல மாட்டோம்…” என்று தனம் சொல்லும் போதே…
அங்கு வந்த வேல் முருகன், “ஆமா வெற்றி, உங்க ஆத்தா பேச்சை கேளு, இவ தான் பெரிய கோயில் கோடாங்கி… இவ சொன்னா அப்படியே பழிக்கும். பச்சை மரத்தையும் பத்தி எறிய வச்சுடுவா, மூஞ்சிய பாரு… கூலி வேலை செய்யிற நம்ம குடும்பத்துல, நம்ம மகன் முதலாளியா உட்காருறான். அதை நினைச்சு பெருமை படாம, அபசகுணமா என்னத்தையாவது சொல்லாம, போ அங்குட்டு…”
“எனக்கு மட்டும் மகன் நல்லா வரணும்ன்னு ஆசை இல்லையா… நெசமா தான் சொல்றேன்” என்று ஆரம்பிக்கும் போதே…
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். அவன் தான் குடும்பத்தை விட்டு பாடுபட்டான். அவன் பிள்ளைக பிறந்தது, முகம் பார்த்து சிரிச்சது, நடந்தது, ஓடுனது எதுவும் கண்ணார பார்க்கலை. அப்படில்லாம் ஓடி ஓடி சம்பாதிக்கிறது அவன் பிள்ளைகளுக்கு தான்… உங்க சௌகரியம் பார்த்தாச்சு. இனி அவன், அவன் பொண்டாட்டி, பிள்ளைக மட்டும் தான். நாலு வருசம் சென்டு தான் பெத்த தகப்பன் முகத்தையே பிள்ளைக பாக்குது. அவங்க பேருல வைக்காம, உம் பேருல வைக்க சொல்றியா… பொம்பளை பிள்ளைன்னா என்ன?… நம்ம குல சாமிய பேச்சையம்மன் தான.” என்றவர்.
“ நீயெல்லாம் நியாயம் பேசுறையா… எம் மகன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுறையே. உம் தலை மகனுக்கு பிறந்த பிள்ளைகளை கண்ணார இன்னும் நீ போய் காணல… சின்ன பிள்ளைக கூட தோது போடுறயா… பார்த்துக்க மகனே, உங்காத்தாவுக்கு உம் மேல உள்ள பாசத்தை…” என்று சொல்ல.
“நீங்களே ஏத்தி விடுங்க அவனுக்கு, எம் மகனுக்கு என்னை நல்ல தெரியும்…” என்று தனம் சொல்லி கொண்டிருக்க, வெற்றி கிளம்பி விட்டான்.
அவன் மனதிலும் அந்த எண்ணம் இருக்கு தான் வெளியில் காட்டி கொள்ள வில்லை. பேத்திகள் என்று அவராக வராமல், தான் அழைக்க மனம் விரும்ப வில்லை. அப்படி யாரையும் கட்டாய படுத்த தேவை இல்லை. என் பிள்ளைகளுக்கு நான் பார்ப்பேன்…
இரவு பத்து மணிக்கு தான் மதுரை வந்தான் வெற்றி. அவன் வரும் போதே பிள்ளைகள் உறங்கி விட்டார்கள். கொஞ்சம் சுணக்கம் தான். ஆசையாக ஓடி வந்தான், வேலை விட வில்லை. மனைவி முழித்து கொண்டு தான் இருந்தாள்.
அவன் வந்ததும் உணவு எடுத்து வைத்தாள். சரண்யா அறிவாள், எத்தனை நேரமானாலும் வெற்றி வீடு வந்து விடுவான் என்று… இட்லி, மீன் குழம்பு இருக்க, ஆச்சர்யமாக பார்த்தான். இன்னைக்கு எனக்கு வார லீவு, அதான் மீன் எடுத்தேன்…
மீன் எடுத்தது ஆச்சர்யமில்லை. தனக்காக எடுத்து வைத்தது ஆச்சரியம், மகிழ்ச்சி தான். அத்தோடு அவனும் பத்திரிக்கை எடுத்து நீட்ட, இயல்பாக தான் வாங்கி பார்த்தாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம்.
அதில் இருக்கும் தன் பிள்ளைகள் பெயரை தொட்டு பார்த்து கொண்டாள். சொந்த வீடு இல்லாமல் அடுத்த வீட்டில் ஒண்டி கொண்டு இருந்தவர்களுக்கு, இன்று சிறியதே ஆனாலும் சொந்த தொழிலின் வாரிசுகள்… உறங்கும் பிள்ளைகளை பார்த்தவள், மனம் நிறைவாக இருந்தது.
“நீங்க காட்டி இருந்தாலும் அவங்களுக்கு புரியாது. அப்பா வாங்கி வார சாக்லெட் தான் அவங்களுக்கு சர்ப்ரைஸ்…” என்று சரண்யா சொல்ல, வெற்றி முகத்தில் ஒரு புன்னகை.
அந்த அழைப்பிதழ் கீழ் உரிமை சரண்யா வெற்றி வேல், அதற்கு பின் தான் வெற்றி வேல் என்று எழுதி இருந்தது. அதை அவள் கவனித்தாள், ஆனால் கேட்டு கொள்ள வில்லை. என்னை உன் வட்டத்தில் இழுக்காதே என்றாலும் வெற்றி விட வில்லை. அவளை முன் வைத்து தான் இவன் பின் நிற்கிறான். தன் வட்டத்தில் மனைவியை இழுக்க வில்லை. அவர்கள் கூட்டில் இவன் தான் நுழைகிறான். இன்று அவன் குடும்பம் என்ற ஒன்றை, இந்தா வைத்து கொள் என்று அவன் கையில் தந்தது மனைவி மட்டும் தான். அதை அவன் நன்கறிவான்.
சரண்யா பார்வை பத்திரிக்கையை மேய்ந்தது. உரிமை என்றதில் சரண்யா பெயர் இருப்பதை தனம் பார்க்க வில்லை. அவர் தான் பெயர் பார்த்தே மல்லுக்கு நின்றாரே… அதுவரை நிம்மதி தான் வெற்றிக்கு. இல்லையென்றால் இதற்கும் ஒரு கூத்து எடுப்பார்…
சரண்யா மெல்ல விசயத்தை சொன்னாள். அவள் தந்தை நான்கு லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்ததாக… “நகைய அண்ணன் திருப்பி தாரானாம்…”
சாப்பாட்டில் கவனமாக இருந்தவன், “ என்ன செய்ய போற?…”
“ பிள்ளைக பேருல பேங்க்ல போட்டு வைக்கலாம். அவங்க படிப்பு, கல்யாணத்துக்கு உதவியா இருக்கும். அங்க இருந்த வரை அவங்க ஆதரவு ரொம்ப முக்கியம். நான் தனியா வந்தாலும் என் குடும்பம் அப்படின்னு இருக்கணும். அது தான் எனக்கு ஒரு பாதுகாப்பு. அதுனால அவங்களை எதிர்த்து நிக்கலை. இன்னைக்கு என் நகை எனக்கு முக்கியம். அவங்க கிட்ட இல்லாம இருந்தா பரவாயில்லை, எல்லாம் நிறைவா இருக்கு, அப்படி இருந்தும் என் பொருளை தான் கை மத்துனாங்க… அவங்க கிட்ட இருக்க போய் தான் உடனே கொண்டு வந்து கொடுத்தாங்க. என் நகை நான் போடாம போனாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளுக்கு இருக்கணும் தான… இந்த நகை என் பேரன், பேத்தி வரை இருக்கணும்…” என்று சரண்யா சொல்ல. அவளை ஆச்சர்யமாக பார்த்தவன்,
“ என்ன சரண். சின்ன பிள்ளைக, அவங்களை போய் கல்யாணம் வரை பேசுற…”
“ பேசுனா என்னங்க தப்பு… நாம பொம்பளை பிள்ளைக வச்சிருக்கோம். குறையா சொல்லலை, ஆனா பொண்ணுக கண்ணை மூடி திறக்ககுள்ள பெரிய பொண்ணா வந்துடுவாங்க. அவங்களை உங்க கூடவே வச்சுக்க முடியுமா, கல்யாணம், வாரிசு எல்லாம் வரும் தானா…”
“இப்படி சொல்லாத சரண்யா, எனக்கு பயமா இருக்கு…” என்றவன் பார்வை உறங்கும் பிள்ளைகளை பார்த்தது.
“ பொம்பளை பிள்ளை வச்சிருக்கிற எல்லாரும் யோசிக்கிறது தான். இப்ப இருந்தே நகை, பணம் சேமிக்க தொடங்குவாங்க…” என்று சரண் ஆரம்பிக்கும் போதே,
“இப்ப தான் இப்படி பேசாதன்னு சொன்னேன். எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா, கண் கலங்குது. குட்டி கை, கால் வச்சு எப்படி தூங்குறாங்க. கல்யாணம் வரை எல்லாம் என்னால யோசிக்க முடியாது. எனக்கு எப்பவும் அவங்க குழந்தைக தான்…”
“ அப்பா புத்தி, வேற எப்படி யோசிக்கும். பேரன், பேத்தி ஆசை இல்லையா… தனியா தூக்கம் வராம இருக்கும் போது இதை தான் யோசிப்பேன். என்னோட அடுத்த தலைமுறை எப்படி இருக்கும்ன்னு”…என்று சரண்யா சொல்ல.
வெற்றி கண்களிலும் கனவு வந்தது. தன் பிள்ளைகள், அவர்கள் திருமணம், தங்களின் அடுத்த வாரிசு என்று சுக கனவு தான். கற்பனையே நிறைவாக இருந்தது. அந்த நாள் என்று வரும் என்று சிறு ஏக்கமும் வந்தது தான்…
சரண்யா பிள்ளைகளுக்கு அந்த பக்கம் படுத்து கொள்ள, வெற்றி இந்தப்பக்கம் படுத்து கொண்டான். ஒரு பெருமூச்சு வந்தது. பிள்ளைகள் குறித்த பேச்சுக்கு மட்டுமே அவளிடம் பதில் வரும். அப்போது மட்டும் சகஜமாக பேசுவாள். அதை தாண்டி தள்ளி நின்று கொள்வாள். எவ்வாறு எல்லாவற்றையும் சரி செய்ய…
மறுநாள் சரண்யா அவள். வீடு சென்றாள். திவ்யா முகத்தை தூக்கி வைத்து தான் அமர்ந்து இருந்தாள். இவள் கண்டு கொள்ளவே இல்லை. பின் பக்கம் கிடக்கும் பொருட்களில் தன் பொருள் ஏதாவது ஒன்னு, ரெண்டு மிச்சம் இருக்கா என்று பார்க்க வந்தாள்.
“ ஊர்ல இல்லாத புருசன் வந்த மாதிரி, என்னா ஆட்டம்…” திவ்யா பார்த்து இருந்தாள்.
ஒரு காது வைத்த அண்டா மட்டும் தான் இருந்தது. அவள் அப்பத்தா கொடுத்த மைசூர் பானை, ஆணைகால் சட்டி, பொங்கல் பானை என்று பலதும் காணம். அவள் அம்மாச்சி கொடுத்த இரட்டை குத்து விளக்கு முகப்பில் மயில் வைத்து இருக்கும். கல்யாணத்துக்கு பின் ஒரு நாள் கர்ப்பம் என்று கண்ட பின் இரண்டையும் சேர்த்து வைத்து விளக்கு போட்டாள். அன்றே இந்த மயில் வைத்த குத்து விளக்கு தன் பிள்ளைக்கு இன்று கனவு காண, என்று இருந்த அடையாளம் கூட இல்லை. பொறுக்க முடியாமல் தாயிடம் கேட்டும் விட்டாள்.
சங்கடமாக பார்த்தார் சுகந்தி. மூத்த மகள், மருமகள் இருவரும் பிரித்து கொண்டார்கள். வெறுத்து போனது சரண்யாக்கு. பித்தளை பாத்திரங்கள் தான். ஆனால், தன் பிள்ளைக்கு என்று கனவு கண்டவை… தற்போது காசு கொடுத்து பொருள் வாங்கினாலும் தன் பொருள் என்று பிள்ளைகளுக்கு ஒன்றும் போக வில்லையே….
சரண் கிளம்பும் போது, அவள் அக்கா ஊருக்கு வருவதாக தாய் சொன்னார். அவளுக்கு தெரியும், திவ்யாவும், பிரியாவும் ரொம்ப நெருக்கம். இனி ஒரு பஞ்சாயத்தா… தன் தாயிடம்,
“நான் வரலை. நீங்களாச்சு, உங்க பிள்ளைகள் ஆச்சு. எனக்கு என் நகை வேணும். இல்லையா, வேற எதுக்கும் எனக்கு நீங்க நிக்க வேணாம்…” சொல்லி கிளம்பி விட்டாள்.