தன் பிள்ளைகளுக்காக தான் வாழ்க்கை என்று உறுதியாக முடிவெடுத்த போதும், இந்த சமூகம் அவளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பை கொடுக்க வில்லை. உண்மையில் நிஜ உலகம் அவளை மிரட்டியது. திடீரென்று வேலையோ, சுய தொழிலோ யார் தருவது. தனியாக ஒரு வருமானத்தை தேடும் திறனும் இல்லை. அவள் வீட்டிடமும் இதை பற்றி கலந்தாலோசிக்கவே இல்லை. நிச்சயம் அவர்கள் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.
சரண்யா வேலைக்கு சென்று விட்டல், வீட்டு வேலைகளை பிரித்து கொடுக்க தான் வேண்டும். இந்த கவலை அண்ணிக்கு இருக்கும். அத்தோடு அவளை வேறொரு திருமணத்திற்கு தான் வரன் பார்க்கிறார்கள். ஒரு ஆண் பிள்ளையோடு திருமணம் செய்து கொள்வான். ஒரு பெண், பிள்ளையோடு மறுமணம் என்பது அந்தளவிற்கு சாத்தியமில்லை. இதுவரை வீட்டை எதிர்த்து எதுவும் செய்ய துணியாதவள், தற்போது துணிந்து நிற்பது அவள் பிள்ளைகளுக்காக தான். மீண்டும் யாருக்கும் தெரியாமல் வேலை தேடும் முயற்சியில் இறங்கினாள்.
ஒரு வாரமாக முயற்சி செய்தும் பலன் என்னவோ பூஜியம் தான். ஒரு வேலையும் கையில் சிக்க வில்லை. பசிக்கு வேலை தேடவில்லை, பிள்ளைகள் படிப்புக்கும் சேர்த்து தான் வேலை தேடுகிறாள். அவளுக்கு இசைவாக வேலைக்கும் சென்று, பிள்ளைகளையும் கவனிக்கும் வண்ணம் வேலை அமையவில்லை. இன்னும் இரண்டு நாளில் அக்கா வீடு ஊருக்கு செல்கிறார்கள். அதற்குள் தன் முடிவை சொல்ல வேண்டும். அதில் உறுதியாக நிக்க ஒரு வேலை வேண்டும், இல்லையென்றால் இவள் பேச்சு எடுபடாது. ரொம்ப எளிதாக இவளை கடந்து விடுவார்கள்.
கோவிலில் தலை சாய்த்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தாள். பிள்ளைகளை தற்போது தனியாக விடுவது இல்லை. எங்கு சென்றாலும் அவள் உடன் தான். நல்ல தூக்கத்தில் தாய் மடியில் அஜி இருக்க, பக்கத்தில் இருக்கும் படியில் சறுக்கி விளையாடி கொண்டிருந்தது நம்ம விஜி தான். சின்ன குட்டிக்கு மட்டும் அவ்வளவு லேசில் தூக்கம் அண்டாது.
“ அடியே சரண்!… நீதான இது?… நல்லா இருக்கியா?… இது உம் பிள்ளைகளா?…” என்ற சத்தத்தில் நிமிர்ந்த சரண்யா. தன் அருகில் அமர்ந்த அகிலாவை பார்த்தாள்.
“ ஏய் அகி. நல்லா இருக்கியா?… உன்னை நினைக்கவே இல்லடி…” என்று மகிழ்ச்சியாகவே சொன்னாள் சரண்யா. அகிலா அவள் பள்ளி தோழி.
“ம்ம்.. ஒரே ஊர் தான். ஆனா, அடிக்கடி பார்க்க முடியலை…” என்று சொன்ன அகிலா. அப்போது தான் எழுந்த அஜியை பார்த்து, “ வா வா… அத்தைகிட்ட வா. நான் உங்க அத்தை தான்” என்று தூக்க முயல. புது முகத்தை பார்த்த அஜி தாயை விட்டு நகரவில்லை.
“இவ உனக்கு தோது இல்லை. அந்த சின்ன மேடத்தை பிடி… யார் தூக்குனாலும் கைய விரிச்சுட்டு போகும்…” என்று பெற்றவள் பெருமை பேசினாள்.
விஜியை தூக்கிய அகிலா, கடையை நோக்கி நகர.
“ஐயோ!… எதுவும் வேணாம் அகி, விடு … நீ வா, நாம பேசலாம். பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…” என்றாள் சரண்யா. அவளுக்கு தெரியும் அகிலா வீடு ரொம்பவும் கஷ்டப்படும் குடும்பம். சரண்யா படிப்பு வராமல் இடை நின்றாள், அகிலா வறுமையை கொண்டு பள்ளியை விட்டு நின்று விட்டாள். அதன் பொருட்டு சரண்யா தடுக்க…
“அடி போடி இவளே… வருசம் செண்டு பாக்குறேன். சும்மாவா தூக்க சொல்ற, என்னைக்கோ ஒரு நாள் ஐம்பது ரூபாய்க்கு வாங்கி கொடுத்தா என் சொத்து குறைஞ்சா போய்டும். பேசாம போ சரண்….” என்று ஆசையாக தூக்கி சென்றாள். கூடவே சரண்யாவும் வந்து விட்டாள் தாய்க்கு அடங்காத சின்ன சிட்டு கடையையே விலைக்கு கேட்கும் அல்லவா…
பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்து ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்கள்.
“ எப்படிலே இருக்க சரண்?”
ஒரு கேள்வி தான் கேட்டாள் அகிலா. கண்ணில் இருந்து சத்தமில்லாமல் நீர் நிற்காமல் வர தொடங்கியது. பதறிய அகிலா, “ஏட்டி சரண்” என்க.
நான் ஏன் அகி படிக்காம போய்ட்டேன். படிப்பு எம்புட்டு முக்கியம். எனக்கு ஏன் படிப்பே வரலை. என் அக்கா, அண்ணன் எல்லாம் படிக்கும் போதும் எனக்கு ஏன் படிப்பு ஆசையே வரலை. எவ்வளவு முட்டாளா இருந்துறுக்கேன். படிப்பு நமக்கு தேவைன்னு நான் யோசிக்கவே இல்லை பாரேன். அம்மா, அப்பா பார்த்தாங்க, அப்புறம் அண்ணன் பார்த்தாங்க. அதுக்கப்புறம் கல்யாணம் ஆகும் புருசன், குழந்தை … அப்படியே வாழ்க்கை போகுன்னு மட்டும் தாண்டி யோசிச்சேன். என்னையவே நான் தான் பார்த்துக்கணும்ன்னு ஒரு நிலைமை வரும்ன்னு நான் யோசிக்கவே இல்லை. எல்லாரையும் மாறி தான் என் வாழ்க்கையும் இருக்கும், நாமளும் அப்படித்தான் வாழ்வோம், இதை தான் நினைச்சேன். ரெண்டு பிள்ளையோட நடுரோட்டுல நிப்பேன்னு கனவுல கூட நினைக்கல…” என்று அழுக, பதறி போனாள் அகிலா.
“ம்ம் சரண்யாவோட அப்பா வசதியானவர் தான். ஆனா, அஜிக்கும், விஜிக்கும் அப்பவே இல்லையே. அவங்க கஷ்டப்பட தான செய்வாங்க. அம்மாவும் ஒரு முட்டாள். அவளுக்கு என்ன தெரியும். வசதி இல்லை, படிப்பும் இல்லை. அப்ப பிள்ளைக என்ன பண்ணும்…” என்று சரண்யா விசும்ப…
“ என்னன்னு தெளிவா சொல்லுவே. நீ பேசுனதுல ஒரு மண்ணும் புரியலை…” கடுப்பாக அகிலா சொல்ல.
தேம்பி கொண்டே நடந்தது அனைத்தையும் சொன்னாள் சரண்யா. அவள் சொல்லியதை எல்லாம் கேட்ட அகிலாக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களையும் குத்தம் சொல்ல முடியாது. அவரவர் பாடு அவரவருக்கு தான் தெரியும். எவ்வளவு பணம் வந்தாலும் யாருக்கு செலவு செய்கிறோம் என்ற கணக்கும் உள்ளது தானே…
யாரோ ஒரு வெற்றிவேலின் பிள்ளைகளுக்கு இவர்கள் ஏன் செலவு செய்ய வேண்டும். பெற்றவர்கள் தான் பிள்ளையை பார்க்கவேண்டும் என்பது மட்டுமல்ல பெற்றவர்கள் போல் பிள்ளையை யாரும் பார்க்க முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை.
சரண்யாவை சுமக்க தயாராக இருப்பவர்கள். வெற்றி வேல் சுமையை சுமக்க தான் தயாராக இல்லை. இது அவர்களுக்கு தேவையில்லாத சுமை தான். அவர்கள் சம்பாத்தியத்தில் யாரோ ஒருவனின் பிள்ளைகளை ஏன் வளர்க்க வேண்டும். ஒன்று பெற்ற தகப்பன் பார்க்க வேண்டும், இல்லையா பெற்ற தாய் பார்க்க வேண்டும். பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் தாத்தா, பாட்டி தான் பெரும்பாலும் பார்த்து கொள்வார்கள். உடன் பிறப்புகள் பார்ப்பது அல்லது எதிர்பார்ப்பதும் நியாயமில்லாத ஒன்று தான் தற்போதைய காலத்தில். பிள்ளைகள் படிப்பிற்காக சரண்யா உடன் பிறந்தோரை எதிர்பார்க்க… அவர்கள் அவளுக்கும் சேர்த்து ஒரு வழி காண்பித்து விட்டார்கள்.
“இப்போ நீ என்ன செய்ய போற சரண்?…”
“எம் பிள்ளைக பொறுப்பை நான் யார் தலையிலும் வைக்கலை, அது என் தலையிலே இருக்கட்டும்ன்னு நிமிர்ந்து நீன்னு சொல்லணும். அதுக்கு ஒரு வேலை வேணும். அதை தான் தேடுறேன்… கிடைக்கணுமே. என் ராசி நல்லதே நடக்க மாட்டாது…” என்றால் வருத்தமான குரலில்.
அகிலா அவளை ஒரு மார்க்கமாக பார்க்க, சின்ன சிரிப்பை சிந்திய சரண்யா.
“ காட்டு வேலை, கட்டட வேலை, ரோடு கூட்ட, குப்பை அள்ள, வீட்டு வேலை எல்லாம் கிடக்கும் தான். இதை வச்சு எம் பிள்ளைகளுக்கு சோறு தான் போட முடியும். ஆனா, நான் குடுக்க நினைக்கிறது படிப்பு. நல்ல தரமான படிப்பு… படிக்காத, ஒன்னுமே தெரியாத ஒரு முட்டாள் மாதிரி இருக்குற சரண்யாக்கு பொறந்த பிள்ளைக பட்டம் வாங்கணும். நாலு பேர் கை தட்டி பாராட்டுற மாதிரி படிக்கணும். எனக்கு இதெல்லாம் ரொம்ப பெரிய கௌரவம்…”
அவளை ஆச்சர்யமாக பார்த்து இருந்தாள் அகிலா. ஏனெனில் அவளும் பத்தாவதோடு நின்று விட்டாள்.
“நிச்சயமா அகி. வேலை தேடி போன இந்த ஒரு வாரத்தில படிப்போட அருமை முழுசா புரிஞ்சது. அன்னைக்கு எனக்கு தெரியவே இல்லை. சச்சின் டெண்டுல்கர் பத்தாவது தான்னு பெருமை பேசுனா ஆள் தான் நான்… ஆனா இன்னைக்கு எங்க வேலை தேடி போனாலும், “ நீங்க என்ன படிச்சு இருக்கீங்க” இதான் முதல் கேள்வியா வரும். சச்சின் சொல்லும் போது பெருமையா இருந்துச்சு, இதுவே என்னைய சொல்லும் போது அசிங்கமா இருந்துச்சு. யாராவது கேட்டா?… நான் பத்து தான் முடிச்சு இருக்கேன்னு சொன்னா, அவங்க மேலயும், கீழயும் பார்ப்பாங்க பாரு ஒரு பார்வை. நாமெல்லாம் வெத்து வேட்டு அகி… உனக்காவது உங்க வீட்டு கஷ்டம்… எங்கப்பா படிக்க வச்சும் பிடிக்காதது என் கொழுப்பு தான, அதான் அனுபவிக்கிறேன்…” என்று விரக்தியாக சொன்னவள்.
“அக்கா, அண்ணன் படிச்சு பட்டம் வாங்கும் போது நானும் சந்தோசமா சிரிச்சுருக்கேன். எனக்கு கொஞ்சம் கூட தெரியவே இல்லை. படிப்பு தான் உசத்தி போல… அக்கா படிச்சா வேலைக்கு போகலை தான். ஆனா, அவ படிச்சுருக்கான்னு சொல்லியே அவ போலவே படிச்ச வேலைக்கார மாப்பிளைக்கு கட்டி கொடுத்தாங்க. இப்பவும் அவ வேலைக்கு போகலை தான். ஆனா, அவ படிப்பை காட்டி வசதியான இடம் தான் பார்த்தாங்க. எங்க அண்ணனுக்கும், அவன் படிப்புக்கு தக்க தான் பொண்ணு பார்த்தாங்க. இன்னைக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க, நல்ல சம்பாத்தியம். எனக்கு அவசர கல்யாணம் கூட, நல்ல படிச்ச, வேலைக்கு போற பொண்ணை விட்டுடா கூடாதுன்னு தான். ஆனா, எனக்கு… நான் படிக்கலை, எனக்கும் படிக்காத மாப்பிள்ளை தான் பார்த்தாங்க. ஒரு அறிவும், தெளிவும் இல்லை. வாழ்க்கை கெட்டு போச்சு. நானும் படிச்சு இருந்தா, எனக்கும் படிச்ச, வேலைக்கார மாப்பிள்ளை தான் பார்த்து இருப்பாங்க. நான் படிச்சிருந்தா ஒரு நல்ல வேலைக்கு போயிருப்பேன். எம் பிள்ளைக ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பேன். சாப்பாட்டுக்கு கூட ஏங்க விட்டுறுக்க மாட்டேன்…” என்று சொல்லும் போதே கண்களில் நீர் கரகரவென வழிந்தது.
“சரண்” என்று தோல் தொட்டாள் அகி.
உண்மை அகி. எது ஒன்னுக்கும் அப்பா, அண்ணன் மூஞ்சி பார்த்து தான் நிக்கணும். ஆஸ்பத்திரி போறதுக்கும் அப்பாவா எதிர்பார்த்து காத்து கிடக்கனும். தீபாவளி, பொங்கலுக்கு கடைக்கு போன ஆசைப்பட்ட துணிய வாங்க முடியாது. அவங்க வாங்கி கொடுக்கிறது தான். சாத்விக் எடுக்குற பாதி கூட எம் பிள்ளைகளுக்கு எடுக்க மாட்டாங்க. அண்ணி இஷ்டத்துக்கு டிரஸ் வாங்குவாங்க. யாராவது ஒரு வார்த்தை சொல்ல முடியுமா… ம்கூம் சம்பாத்தியம் அவங்களோடது, அவங்க பேச்சுக்கும் மதிப்பு இருக்கும். அப்ப நானும் படிச்சு இருந்தா எம் பேச்சும் எடுபடும். அதனால் தான் எம் பிள்ளைக படிக்கணும்ன்னு ஆசை பட்டேன். எனக்கு நாள் சம்பளம் வேணாம் மாச சம்பளம் தான் வேனும். அப்பத்தான் மிச்ச பிடிச்சு, பிள்ளைகள் படிப்புக்கு சேர்த்து வைக்க முடியும்…” என்று தெளிவாக சரண்யா பேச.
அவளை பிரமிப்பாக பார்த்தாள் அகிலா. “ அடி சரண், இம்புட்டு யோசிப்பையா நீ… நம்பவே முடியலை போ…”
வேலைக்கு ஆட்கள் தேவை, தகுதி பத்தாவது, பட்டபடிப்பு அவசியமில்லை… இப்படி இருக்குற போர்ட் பார்த்து வேலைக்கு போனாலும், “இங்கிலீஷ் வாசிக்க தெரியுமா, கம்ப்யூட்டர் தெரியுமா, டைப் அடிக்க தெரியுமா, கஸ்டமர்கிட்ட இங்கிலீஷ் பேசணும்” இப்படி ஆயிரம் சொல்லி படிச்ச ஆள் தான் தேவைன்னு மறைமுகமாக சொல்றாங்க. ஆயிரம் சொல்லு படிச்சவங்க, படிச்சவங்க தான். அந்த தைரியம், திமிர், கெத்து, நடை, உடை எல்லாம் நமக்கு சுட்டு போட்டாலும் வராது. யாரோ தெரியாத ஆளுக கிட்ட நமக்கு பேச கூட தயக்கம் இருக்கும். அப்ப நினைச்சேன் நான் படிக்காத படிப்பை, அறியாத சுதந்திரத்தை, தெரியாத உலக அறிவை, புரியாத மனுசங்களை எம் பிள்ளைக அறியனும். இந்த உலகத்தை என்கிட்ட இருந்து அவங்க பார்க்க கூடாது. அவங்க படிப்பறிவு வச்சு தான் பார்க்கணும். வாழ்க்கையில நான் தோத்து போய்ட்டேன். ஆனா, எம் பிள்ளைக ஜெயிக்கணும். என்னால என்ன கொடுக்க முடியும், வீடு, நகை, கார்… இதையெல்லாம் அவங்களே தேடுற படிப்பை கொடுக்கணும். துணிஞ்சு தான் நிக்குறேன். யாரும் ஒரு வாய்ப்பு தரலை…” என்று சோகமாக சொல்ல.
“ அப்ப என் கூட வாரையா சரண்?…” என்று அகிலா சொல்ல
“எங்க?…”
“ வேலைக்கு தான், துணிக்கடையில. பத்தாயிரம் கொடுப்பாங்க, வார லீவும் உண்டு, வார காசு முன்னூரு தருவாங்க. ஆனா, காலையில இருந்து ராத்திரி வரை வேலை. அதாவது, வேலையை விட நிக்கனும், மரம் மாதிரி… சின்ன பிள்ளைக இருக்க உனக்கு தோது படுமா…” என்று அகிலா ஒரு வழி காட்ட.
அவ்வளவு சந்தோசம் சரண்யாக்கு. வேற என்ன வேண்டும். படிப்பு இல்லை ஆனா, நல்ல சம்பளம். அது போதும் மத்ததை அப்புறம் பார்க்கலாம். மனதில் ஒரு புது வெளிச்சம் வந்தது.
அவள் வேலைக்கு போவதை பற்றி வீட்டில் சொல்லவில்லை. தற்போதைய மனது யாரையும் நம்ப வில்லை. மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், பிள்ளைகளை மட்டும் அழைத்து கொண்டு அகிலா சொன்ன கடைக்கு சென்றாள்.
“சரண்!… வா வா. உன்னை பத்தி சொல்லிட்டேன். உன்கிட்ட சில கேள்வி மட்டும் கேட்பாங்க, உண்மையா மட்டும் சொல்லு, சரியா… இந்த கடை பெண்களுக்கு மட்டும் தான். அவங்களுக்கு உரிய ஆடைகள் தான் எல்லாம், இதை விட பெரிய கடை இருக்கு. அது வேற ஏரியா, அங்க நிறைய பேர் இருப்பாங்க. இது புது கடை நாலு பேர் தான் இருப்போம். தேவி அக்கா தான் பார்த்துகிறாங்க. அங்க இருக்க பெரிய கடைய விசாலாட்சி அக்கா பார்த்துபாங்க. நல்ல சலுகை கிடைக்கும். ஆனா, சரியா நடந்துகணும்…” என்று பலவாறு எடுத்து சொல்லி தான் அகிலா அழைத்து சென்றாள்.
மெதுவாக சரண்யா உள்ளே சென்றாள். அங்கு கம்பீரமாக இருந்த இரு பெண்களையும் பார்த்து வணக்கம் வைத்தாள். உள்ளங்கை வேர்த்து சில்லென்று இருந்தது.
“அகிலா, உன்னை பத்தி சொன்னா… இங்க வேலைக்கு வர உனக்கு சம்மதமா…”
பலமாக தலையாட்டினாள். இருவரும் சிரித்து கொண்டார்கள்.
“குழந்தைகளை வச்சுகிட்டு வேலைக்கு வராது கஷ்டம் தான், ராத்திரி வரை வேலை இருக்கும். விசேஷ நாள்ள சொல்லவே முடியாது. உனக்கு ஒத்து வருமா?…”
“அதெல்லாம் பார்த்துப்பேன் மேடம்…”
. மெதுவாக பேச்சு கொடுத்தே அகிலா சொன்னதின் உண்மை தன்மையை அறிந்தார்கள். அவர்களின் கேள்விக்கு பெரிதாக யோசிக்கவில்லை. நிலவரம் என்னவோ அதை மட்டும் தான் சொன்னாள். கணவனிடம் இருந்து பிரிந்தாச்சு, இரு பெண் பிள்ளைகள்… அவர்களின் படிப்பு வேண்டி தான் வேலை என்ற சரண்யாவின் பதில் விசாலாட்சிக்கு பிடித்து போனது. பிள்ளைகளின் கல்வி எனும் போது யோசிக்க எதுவுமில்லை. வேலை உறுதியானது.
அப்படி ஒரு நிம்மதி சரண்யாவிற்க்கு. தன்னால் ஒரு வேலைக்கு தகுதியாக முடிகிறதே. மனதில் ஒரு புது தெம்பு வந்தது. இவள் முடிவை பக்குவமாக வீட்டிலும் சொல்லி விட்டாள். அவள் எதிர்பார்த்தது போல எதிர்ப்பு நாள பக்கமும் வந்தது. திவ்யா முதற்கொண்டு அவளை விமர்சனம் செய்தாள்.
சரண்யா வாய் திறக்கவில்லை. தன் குடும்பத்தை நிக்க வைத்து கேள்வி சரமாரியாக கேள்வி கேட்க தான் மனம் உந்தியது. ஆனால், அனுபவம் அவள் வாயை கட்டி போட்டது. அவள் ஒன்னும் புரட்சி பெண் கிடையாதே… சாதாரண குடும்பத்து பெண் தான். அவளுக்கு குடும்பம் என்ற பாதுகாப்பு வளையம் வேண்டும். அவளோடு சேர்த்து மூன்றும் பெண்கள், அவளுக்கு ஆண் பாதுகாப்பு அவசியமா என்பதை விட. வெளியில் இருந்து பார்க்கும் யாவருக்கும் அப்பா, அண்ணன் துணையில் தான் இருக்கிறாள் என்ற பெயர் நிச்சயம் அவசியம். தனியாக இரு பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டுமே, விட்டு கொடுத்து தான் போக வேண்டி இருந்தது. அம்மா, அப்பா, அக்கா, அவள் கணவன், அண்ணன்,அவன் மனைவி என்று அனைவரின் பேச்சுக்கும் ஒரு அழுத்தமான அமைதி மட்டும் தான்.
அவளின் அமைதி அவர்களை பேச தூண்டியது போல,
“உனக்கு எதுவும் தெரியாது நாங்க சொல்றத மட்டும் கேள். எங்க முடிவு தான்…” என்று அண்ணன் அழுத்தம், திருத்தமாக பேச
“உங்க முடிவா… உங்க முடிவ முழுசா நம்பி என் வாழ்க்கையே கொடுத்தேன். உங்க மேல அஜியோட அப்பா கை வச்சாங்கன்னு தான் தாலிய கலட்டி எரிஞ்சேன். என் குடும்பம் கடைசி வரை என்னை காக்கும்ன்னு நம்பி தான் வயித்து பிள்ளையோட உங்க கை பிடிச்சு வந்தேன். கடைசி வரை நீங்க எல்லாம் துணை நிப்பங்கீனு தான் அன்னைக்கு வந்தேன். ஆனா, இன்னைக்கு?… உங்க பேச்சை நான் கேக்குறேன், எம் பிள்ளைக பொறுப்பை நீங்க ஏத்துபீங்களா?…” நச்சென்று தான் கேட்டாள்.
“இன்னைக்கு உனக்கு என்ன குறை?… மூணு நேரம் நீயும், உம் பிள்ளைகளும் வக்கணையா கொட்டிகிரீங்க தான. வேற என்ன எதிர்பார்க்கிற?… எம் பிள்ளைய மாதிரி உம் பிள்ளைகளை பார்க்க நீ என்ன கொடுத்தா வச்சு இருக்க. உம் புருசன் வீட்டுல இருந்து வயித்து பிள்ளையை மட்டும் தான் வாங்கிட்டு வந்த, நீ செய்யிற சமையல் வேலைக்கு ரெண்டு பிள்ளைகளை நாங்க தத்து எடுக்கணுமா?… நல்லா இருக்கே உன் நியாயம். என்னமோ என் புருசனால மட்டும் தான் நீயி வாழ மாட்டேன்னு வந்தையா… அதுக்கு முன்ன வயித்து பிள்ளையோட உன்னை அடிச்சு விராட்டினாங்க. உம் பவுசு அப்படி, பிள்ளைகளுக்காக கூட உன்னை அந்த வீட்டில ஏத்துக்கல, கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுனாங்க. அன்னைக்கு அடைக்கலம் கொடுத்தது நாங்க தான். நன்றி மறந்து நீ பேசுற. சமையல் ஒன்னும் பெரிய வித்தை கிடையாது என்னால அதை பார்த்துக்க முடியும். இனி உம் பிள்ளைகளை பார்த்துக்க முடியாது. நீ தான் இந்த வீட்டில பொறந்த, உம் பிள்ளைக…” என்று இரு கை விரித்த திவ்யா,
“யாருக்கு பிறந்ததோ அங்க போய் கேளு உன் நியாயம். அங்க இருந்து பைசா வாங்கி வரலை, பொறந்த வீட்டு சொத்தை தான் சுரண்டுறீங்க…” என்று திவ்யா கத்தி விட்டாள். அவளுக்கு அவள் நியாயம். பெற்றவர்கள் பார்க்க வேண்டிய பொறுப்பை தங்கள் தலையில் கட்ட பார்க்கிறாள் என்று…
சரண்யா எதுவோ பேச ஆரம்பித்து எங்கோ வந்து நின்றது பேச்சு. திவ்யா அவளின் ரணத்தை தூண்டி விட்டாள். அவள் சொல்வது உண்மை தான். சரண்யா நான்கு மாத கர்பத்தின் தொடக்கம், நைட்டி மட்டுமே அணிந்து இருந்தாள். அமாவாசை நாள், கொட்டும் மழையில் அடித்து துரத்தி விட்டான் அவள் கணவன், சுற்றம் சூழ சொந்தமும் வாய் மூடி தான் நின்றது. அங்கிருந்த ஊர் மக்கள் பாவம் பார்த்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். என்றாவது மறக்க முடியுமா… அதற்கு நியாயம் கேட்டு சுரேந்தர் செல்ல ஒரே கைகலப்பு ஆகி விட்டது. யார் மேல் தப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு அடிதடி வந்து உறவு மொத்தமாக முறிந்து போனது.
அன்று துணை நின்றது இவள் குடும்பம் தான். அண்ணன் ஆறுதல் சொல்ல, உடனே ஓடி வந்தாள் அக்கா. அத்தான் தட்டி கொடுத்து நாங்க இருக்கோம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். அந்த வார்த்தையை முழுதாக நம்பினாள். காலம் மாறும் போது காட்சி மாறி போனது. மனிதர்கள் ஒன்றி தான். ஆனால், அன்றைய நிலைப்பாடு வேற, இன்றைய நிலைப்பாடு வேற… இரு பெண் பிள்ளைகள் எனும் போது, அது பெரிய பாரமாக தான் தோன்றியது. விசயம் எங்கெங்கோ போக ஒருவாறு தெளிந்து விட்டாள் சரண்யா.
பொதுவில் பேசாமல் தனித்தனியே அக்கா, அண்ணன், அம்மா, அப்பா என்று பேசி தன்னை புரிய வைத்து கொண்டாள். யாரையும் பகைத்து கொள்ள முடியாதே… அவர்களின் பணம் தேவையில்லை, துணை தேவை. அஜிதா, விஜிதா மற்றவர்களின் பார்வையில் வெற்றியின் மகள்கள் தான். அவ்வாறு சரண்யாவும் நினைக்க முடியாதே… தன் இரத்தத்தில் உருவாகி, தன் மூச்சை சுவாசித்து தன்னில் இருந்து வெளி வந்தவர்களை யாரோ ஒருவரின் பிள்ளைகளாக பார்க்க முடியாதே. பிள்ளைகள் மீதான அவர்களின் எண்ணம் தெரிந்த பின் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.
அம்மா, அப்பா என்று யாரின் பேச்சையும் கேட்கவில்லை. தன் கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் சங்கிலியை வித்து, அகிலா மூலம் ஒரு வீடு பார்த்து கொண்டாள். எவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாதவர்களிடம் வாக்குவாதம் செய்து சலித்து போனாள். பிள்ளைகள் இன்றி அவள் இல்லை, அது மட்டும் உறுதி. அவர்களை விட்டு தனக்கென்று ஒரு வாழ்க்கை வாழ தயாராகவும் இல்லை.
அங்கிருந்த ஒரு கிறிஸ்தவ பள்ளியில் கட்டண சலுகை உண்டு. வறுமை கோட்டிற்கு கீழ், தனியே நிற்கும் தாய் அல்லது தந்தையின் பிள்ளைகளுக்கு சலுகை உண்டு. அதை தெரிந்து கொண்டு விசாலாட்சி அக்கா உதவி மூலம் அங்கு சென்று தங்கள் நிலையை விளக்கி இரு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்து விட்டாள். இவர்களுக்கு பாதி பணம் தான் வசூலிக்க படும். அந்த அளவிற்கு சரண்யாக்கு நிம்மதி தான். யார் பேச்சையும் கேட்கவில்லை. பிள்ளைகளை ஆசிரமத்தில் விட பேச்சுப் வார்த்தை நடந்த போதே தீர்மானம் செய்து விட்டாள். தற்போது சொந்த காலில் நிற்க அதை செயல் படுத்தி விட்டாள்.
தன் சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தான் வெற்றி வேல். அவனின் நாலு வருட கான்ராக்ட் முடிந்து துபாயிலிருந்து சொந்த ஊர் செல்கிறான். மனம் முழுக்க ஒரே யோசனை தான். எப்படி அபிராமியை எதிர்கொள்ள போகிறோம். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக தன்னை நினைத்தே காத்திருக்கும் பெண். அவளுக்கு என்ன மருமொழி கூற… அன்று எதிர்த்து நின்ற சொந்தங்கள் எல்லாம் இன்று இவர்களின் காதலுக்கு ஆதரவு தருகிறார்கள். அதன் முக்கிய காரணமும் அபியின் பிடிவாதம் தான். அவளுக்கு வெற்றியை தவிர வேற ஒருத்தனை நினைத்தும் பார்க்கவே முடியவில்லை. அவளின் உறுதி மட்டும் தான் மற்றவர்களை அவர்கள் பக்கம் திருப்பியது. அதற்கு இணையாக வாழ வந்த மகராசி நான்கு மாதத்தில் திரும்பி சென்று இருக்க, இவனும் நாட்டை விற்று சென்று விட்டான். ஆக, எல்லோரின் கவனமும் இவர்கள் காதலில் வந்து விழுந்தது. வெற்றி நாட்டை விட்டு சென்றதும், அபியின் தவ வாழ்க்கையும் பெற்றவர்கள் பிடிவாதத்தை தளர செய்தது.
இவர்கள் யாரின் யோசனையிலும் சரண்யா என்ற ஒருத்தி நினைவே இல்லை. அவள் அத்தியாயம் நாலு ஆண்டுகள் முன்பே முடிந்து விட்டது. ஆனால், வெற்றிக்கு நெருஞ்சி முள் போல ஓரத்தில் உறுத்தி கொண்டு தான் இருந்தாள். தனக்காக காத்து நிக்கும் அபியை தாண்டவும் முடியவில்லை. அவனுக்கு சரண்யாவின் தவ வாழ்க்கை பற்றி எல்லாம் யோசனையே இல்லை. அவளிடம் ஏதோ ஒரு உறுத்தல் மட்டுமே… இனியும் ஓடி ஒளிய முடியாது. ஏதேனும் ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். மனதில் ஒரு தெளிவு கண்ட பின் தான் ஊர் செல்ல தயாரானான். சரண்யாவும் ஒரு புது வாழ்வுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டாள். ஆனால், அதில் வெற்றி என்ற ஒருவன் இல்லவே இல்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.