முதல் மாத சம்பளம் முழுதாக பத்தாயிரம் அவள் கையில் நின்றது. அதை தொட்டு தடவி பார்த்து கொண்டாள். நம்பவே முடியவில்லை, இது தன் பணம், தன் உழைப்பில் உருவான பணம், இது முழுக்க தங்களுக்கானது… யாரிடமும் பதில் சொல்லி நிற்க வேண்டியதில்லை. கை கொள்ள பணம் கையில் இருந்தது.
ராத்திரி நேரம் என்பதால் பஸ்ஸில் தான் வருவாள். மனம் எல்லாம் ஒரே துள்ளல் தான். அப்பாவிடம், அண்ணனிடம் வீட்டு செலவுக்கு என்று பணம் வாங்கினாலும், மீதி காசை எண்ணி வைக்க வேண்டும். அப்போது தான் பணகணக்கு, வரவு செலவு சரியாக இருக்கும் என்று சொல்வார்கள். கையில் காசு வச்சு பிள்ளைகளுக்கு என்று ஆசையாக ஏதேனும் வாங்கி கொடுக்கவே முடியாது.
இவர்கள் கணக்கு எல்லாம் வீட்டு பட்ஜெட்டில் தான் வரும். தனியே பணம் வைத்து பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தது இல்லை. சாத்வீக்கு அப்படி இல்லை. அந்தந்த வயதில் என்ன தேவையோ அது எல்லாவற்றையும் முழுதாக அனுபவித்தான். பேபி வாக்கர் முதல் தானியங்கி கார் வரை எல்லாம் அவனதே… அஜீக்கும், விஜிக்கும் பரணில் கிடக்கும் பழைய பொருட்கள் தான். சரணின் மர வண்டியில் தான் இருவரும் நடை பழகியதே…
சரண்யா மட்டுமே அறிந்த வித்தியாசத்தை மூன்று வயது ஆகும் போது பிள்ளைகளும் உணர தொடங்கியது. குட்டி தம்பி வைத்திருக்கும் கலர் கலர் பொம்மைகள், கார், லைட் எறியும் பால் மீது அவ்வளவு ஆசை விஜிக்கு. குட்டி பையனும் விஜி ஒன்றை தொட்டு விட்டாள் ஊரையே கூட்டுவான். சிறு பையன் குறும்பு, யாருக்கும் தன் பொருளை கொடுக்க விரும்பவில்லை. பெரியவர்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், திவ்யாவின் நடவடிக்கை உங்களுக்கு தகுதி இல்லை என்பதாக தான் இருக்கும். அவளின் கெடுபிடி சரண்யாவின் பிள்ளைகள் மீது அதிகம்.
சரண்யா எத்தனைக்கு, எத்தனை பொத்தி வளர்த்தாளோ… அவ்வளவுக்கு பார்வையாலே பிள்ளைகளை அடக்கி விடுவாள் திவ்யா. அவளை தவிர்த்து வீட்டின் மற்றவர்களுக்கு தகப்பன் இல்லா பிள்ளைகள் என்ற அனுதாபம் இருக்கும். திவ்யாவிடம் அப்படி எதிர்பார்க்க முடியாது. ஒற்றை பார்வை தான் பிள்ளைகள் அரண்டு விடுவார்கள்.
ஆரம்பத்தில் அறியாத சரண்யா பின் கண்டு கொண்டாள். கூடத்தில் ஒரு குட்டி மர ஊஞ்சல் இருக்கும். அது அஜிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அடிக்கடி அதில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். ஏதேனும் வெளி வேலை என்றால் விஜியை மட்டும் தான் கையில் பிடித்து கொண்டு செல்வாள். பார்க்க ஆள் இல்லையென்றால் வீட்டவே ரெண்டாக்கும் கெட்டிக்காரி நம்ம சின்ன வாண்டு. ஆனால், அஜிக்கு ஒரு கிண்ணத்தில் கடலையை போட்டு ஊஞ்சலில் உட்கார வைத்து டிவியை போட்டு விட்டால் போதும் எவ்வளவு நேரமானாலும் இடத்தை விட்டு அசையாது சமத்து குட்டி. மாலை வீடு வந்த திவ்யா, தன் மகனுக்கு என்று கணவன் வாங்கிய ஊஞ்சலில் அஜி அமர்ந்திருப்பதை பார்த்து சத்தமெல்லாம் போட வில்லை ஒரு பார்வை தான். சத்தமில்லாமல் பயமும், தயக்கமுமாய் பிள்ளை இறங்கி சுவற்றில் ஒன்றி விட்டது. அடுப்படியில் இருந்து பார்த்த சரண்யாக்கு பதறி போனது. தப்பு செய்யாமலே தப்பு செய்த முகபாவனை அஜிதாவிடம்.
விஜிக்கு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மிக பிடிக்கும். எவ்வளவு கொடுத்தாலும் உண்டு விடுவாள். விஜியை கட்டி போடும் ஒரு விசயம் இது மட்டும் தான். திவ்யா தன் மகனிடம் ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை நிரப்பி கொடுக்க, அவன் வந்து அமர்ந்தது விஜியிடம் … உணவு பண்டத்தை பார்த்து குழந்தை எப்படி சும்மா இருக்கும். சாத்வீக் ஒன்னு எடுத்தால் விஜி மூணு எடுப்பாள். கிண்ணம் காலியாக குட்டி தம்பி அழுக தொடங்கி விட்டான்.
விசயம் புரிந்த திவ்யா, “உன் மகளுக்கு என்ன பழக்கம் சரண். அடுத்தவங்க எது வச்சு இருந்தாலும் உடனே வாங்கிடனும்… இது நல்ல பழக்கம் இல்லை. சாது யார்கிட்டேயும் கை நீட்ட மாட்டான். உன் மக எப்பவும் யார் என்ன சாப்பிட்டாலும் கை நீட்டுவா… சின்ன பிள்ளை அது குணமன்னு விடாத கண்டிச்சு வை…”
உன் மக கை நீட்டுற என்ற சொல் சரண்யாவை பலமாக தாக்கியது. பொதுவாக பார்த்தால் பொருள் இல்லை. ஆழமாக பார்த்தால் மனதை அறுக்கும் சொல் தான். திவ்யா ரொம்ப எளிதாக, பொதுவாகவே சில வார்த்தைகளை சொல்லி விடுவாள். அவளுக்கு எரிச்சல் எத்தனை வாங்கி போட்டும் தன் பையன் கொஞ்சமும் சத்து பிடிக்கவில்லை. சாப்பிடவும் அவ்வளவு அடம் பண்ணுவான்.
சரண்யா பிள்ளைகள் அப்படி அல்ல. கீழ உட்கார வைத்து கதை சொல்லியே ஊட்டி விடுவாள். வெறும் சோற்றில் தாளித்து பிசைந்து ஊட்டி விட்டாலும், இனிக்க இனிக்க உண்டு விடுவார்கள்.
“இல்லாத வீட்டு பிள்ளைக கல்ல கொடுத்தாலும் திங்குதுக, உனக்கு இவ்வளவு வாங்கி போட்டும் என்ன அடம்…” என்று திவ்யா மகனை சாட,
இல்லாத வீட்டு பிள்ளைக யார்?… குமைந்து போவாள் சரண்யா. எத்தனை வாங்கி கொடுத்தும் சாப்பிட அடம் பண்ணும் சாத்வீக்கை தான் பார்த்தாள் சரண்யா. உண்ணுவதில் எல்லாம் வஞ்சனை இல்லை இவள் பிள்ளைகளுக்கு. ஆனால், வாங்கி கொடுக்க இவளிடம் தான் வக்கு இல்லை.
விஜியின் பிடிவாதம் பிடித்து கத்தும் போது, பொதுவாக சொல்லுவது போல், “ இந்த பிடிவாதத்தை உங்க அப்பன் வீட்டில போய் காட்டு… இங்க எங்க வீட்டில காட்டுற…”
விளையாடி விட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வைக்கும் அஜியை பார்த்து, “ விவரம் தான். யாருக்கும் ஒன்னு தராது போல… எந்த வயசிலேயே எம்புட்டு சூது, ஊரா வித்துடுவ…” கேலியாக திவ்யா சொன்னாலும் சரண்யாக்கு பிடிக்காது.
அன்று சாப்பிட அடம் பிடித்த மகனை “ ஓசி கஞ்சிய குடிச்சு கூட பிள்ளைக கிழங்கு மாதிரி இருக்குக… உனக்கு என்ன வாங்கி கொடுத்தாலும் தேறாத…” என்ற திவ்யாவின் வார்த்தை சரண்யாவை ரொம்ப பாதித்தது. அவள் செய்த வீட்டு வேலை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போகவும் தான், பிள்ளைகளோடு வெளியேறி கொண்டாள்.
பெத்தவள் நான் இருக்க என் பிள்ளைகள் ஏன் ஓசி கஞ்சி. என் பிள்ளையை நான் பார்த்து கொள்கிறேன், உன் வீட்டு வேலையை நீ பார்த்து கொள் என்று ஒதுங்கி கொண்டாள்.
பொதுவாக தகப்பன் இல்லா பிள்ளைகள் பொருளாதார நிலையில் மட்டும் தான் பெரிதாக அடிபடுவார்கள் என்று தோன்றும். ஆனால், எதார்த்த வாழ்வில் பல சங்கடங்களை, இன்னல்களை கடந்து தான் செல்ல நேரும். சின்ன உதாசினங்கள் கூட மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதை கொண்டு சண்டை இடவோ, சடவு சொல்லவோ முடியாது. எதார்த்த வார்த்தைகள் தானே என்று சொல்லி கொள்வார்கள்.
வார விடுமுறையில் ஒரு நாள் பிள்ளைகளை அழைத்து கொண்டு பேக்கரி சென்றாள். கையில் சம்பள பணம் இருக்க, பிடித்ததை வாங்கி கொடுக்க ஆசை வந்தது. பிள்ளைகளும் ஒவ்வொன்றையும் ஆவலாக பார்த்து நின்றார்கள். பெரிதாக ஏதுமில்லை ஒரு பாதாம் பால், ஐஸ் கிரீம் , பேப்ஸ் என்று பிள்ளைகள் உண்ண, சில தின்பண்டங்கள் மட்டும் வாங்கி கொண்டவள், தனக்கு டீ மட்டுமே எடுத்து கொண்டாள்.
வீடு செல்லும் போது ஒரு சிக்கன் ரைஸ் வாங்கி வந்தாள். மாதத்தில் ஒரு நாள் பிடித்த உணவை வாங்கி கொடுப்போம் என்று நினைத்தாள். அஜியும், விஜியும் மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பள்ளியில் சொல்லி கொடுத்த பாடலை பாடி கொண்டார்கள். சரண்யா முகத்திலும் புன்னகை தான். சின்ன பிள்ளைகளுக்கு பிடித்த உணவு தானே பெரிய சந்தோசம். சிக்கன் ரைஸ் வைத்து பிள்ளைகளுக்கு கொடுத்தவள், மதியம் மீந்ததை தனக்கு என்று எடுத்து கொண்டாள். முழுதாக பிள்ளைகள் இருவரும் உண்டு விட்டார்கள். அவர்கள் ஓரமாக ஒதுக்கி வைத்து இருந்த கோஸ், கேரட், வெங்காயத்தோடு கொஞ்சம் ரைஸ் இருக்க ஒரு ஆசைக்கு, சுவை உணர சாப்பிட்டு கொண்டாள். தனக்கும் சேர்த்து வாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை.குருவி கூடு தான் என்றாலும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிமையாக வாழ்வது அலாதி சுகம் தான். பாய் விரித்து இரு பிள்ளைகளையும் அனைத்து படித்தவள் மனதில் அவ்வளவு நிம்மதி.
வெற்றி வெளிநாடு போகும் எண்ணத்தை கை விட்டான். முப்பத்தைந்து வயதில் அங்கு சென்று உழைக்க தயாராக இல்லை. அவனுக்கு தெரிந்தது டிரைவர் வேலை தான். அதையே தொழிலாக மாற்றி கொண்டான். தம்பி, தங்கைகளுக்க செய்தாச்சு, பின் தனக்கான வழி என்று கையில் வைத்திருந்த இருப்பு பணம் எல்லாம் போட்டு இரண்டு வண்டி எடுத்தான். ஒன்று பெரிதாகவும், ஒன்று சிறிதாகவும் இருந்தது. அடுத்து ஒரு காருக்கு பாதி பணம் மட்டும் கொடுத்து உள்ளான். குடும்பத்தில் அத்தனை பெருக்கும் மகிழ்ச்சி தான். அடுத்து அவன் கல்யாண பேச்சை தொடங்கலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.
அதற்கு முன் வீட்டின் பால் காய்ச்சும் விசேஷம் நடத்த முடிவு செய்தனர். அபிராமியின் பெற்றோரையும் முறையாக அழைத்து வந்தனர். அவர்களுக்கு பரம திருப்தி. அபியின் பெற்றோரான ராஜாமணி, சாந்தாக்கு முன்பு பெண் கொடுக்க விருப்பம் இல்லை தான். காதல், சொந்த அத்தை மகன் என்ற போதும் தீவிரமாக எதிர்த்தார்களே தவிர கொஞ்சமும் பிடி கொடுக்க வில்லை. சொந்தம் என்ற போதும் ஒற்றை பெண் அபியின் வாழ்க்கை தான் கண் முன் நின்றது.
அபி பேங்க் வேலைக்கு படித்து இருக்க, வெற்றி பள்ளி படிப்பை கூட முழுதாக முடிக்காமல், அந்த ஊர் மினி பஸ்ஸில் டிரைவர் வேலை பார்த்தான். சொத்து என்று பெரிதாக எதுவுமில்லை, வீட்டின் தலை மகனாக தம்பி, தங்கையை கரை சேர்க்கும் பொறுப்பு கொண்டவன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றாலும் குடும்ப பின்புலம் திருப்தியாக இல்லாததே, இவர்கள் காதல் கை கூட வில்லை.
ஆனால், அபியின் பிடிவாதம் எல்லாவற்றையும் உடைத்தது. வெற்றியையும் சேர்த்து தான். தற்போது வரை ஒரு நிலையான முடிவு எடுக்க முடியாமல் அவன் அல்லாடுவதும் இவள் பிடிவாதம் கண்டு தான். எத்தனையோ காதல்கள் தோன்றி, சூழ்நிலை காரணமாக தோற்று, மன வலியையும் தாங்கி ஒரு கட்டத்தில் கடந்து, அவரவர் வாழ்க்கை என்று சென்றும் விடுவார்கள். அந்த ரகத்தில் தான் வெற்றியும். ஆனால், அபியின் காதல் தான் அவனை தளர செய்தது. அவள் தன் காதலை எண்ணி தவம் கிடக்க, காதலிக்கு உண்மையாக இருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் சரண்யாவை தாவர விட்டான். அபியின் வலியை உணர்ந்தவனுக்கு கட்டிய மனைவியின் வலியை உணராமல் போக, எல்லாம் அலங்கோலமாக நின்று போனது. வெற்றி திருமண வாழ்வில் உறுதியாக நின்று சரண்யாவுடன் தன் வாழ்வை முன்னோக்கி இருந்தால், அபியின் மனமும் மாறுபாட்டு போய் இருக்கும். ஆனால், வெற்றியின் திருமண வாழ்க்கை நான்கு மாதத்தில் முடிவுக்கு வர, அபி தன் காதலில் திடம் பெற்றாள்.
திங்கள் கிழமை காலை பரபரப்பு சரண்யாவிற்கு. சிறு பிள்ளைகள் என்பதால் எல்லாவற்றையும் அவள் ஒருத்தியே பார்க்க வேண்டும். இது வரை தாயின் முந்திக்குள் சுருண்டு கிடந்தவர்கள், தகப்பன் வாசம் அறிய நினைத்தார்கள் போல… தந்தையை கேட்க தொடங்கி விட்டார்கள். வெளிநாட்டில் வேலை செய்வதாக சொல்லி வைத்திருந்தாள், அதில் பொய் இல்லையே என்ற ஒரு எண்ணமும் தான்.
பிள்ளைகள் ஏக்கம் வேற ஒன்றை தேடியது. நான்கு தெரு நடந்து அலைந்து செல்லும் பிள்ளைகளுக்கு, அப்பாவின் வண்டியில் சொகுசாக வந்து இறங்கும் நண்பர்களை பார்த்து ஏக்கம் வந்து விட்டது. பிள்ளைகள் ஏக்கத்தை போக்க என்ன செய்வது?… கணவனை அழைக்கவா முடியும்!… முதலில் அவன், அவள் கணவன் தானா?… முகமே மறந்து விட்டது என்ற நினைப்பு தான் சரன்யாவிற்கு. வண்டி ஓட்டவும் தெரியாது, அதை வாங்கும் அளவிற்கு தங்களிடம் வசதியும் இல்லை.
என்ன செய்வது என்று யோசித்தவள், பிள்ளைகளை சுமந்து செல்ல ஆரம்பித்தாள். வேற வழி இல்லை. வறுமையை புரிந்து கொள்ளும் வயது பிள்ளைகளுக்கு கிடையாதே… நான்கு தெரு தள்ளி தான் பள்ளி என்பதால், முதல் தெருவில் நடக்கும் போது அஜி இடுப்பிலும், விஜி கையிலும். இரண்டாவது தெருவில் விஜி இடுப்பில், அஜி கையில். ரொம்ப பாடு தான் சரன்யாவிற்க்கு. இரு பிள்ளைகளின் பள்ளி பையோடு, சாப்பாட்டு பை, இவளின் தனி பைகள் என்று அதிக கணம். சிறு பிள்ளைகளை சுமக்க விட மனம் வரவில்லை. அத்தோடு மற்ற பெற்றோர்களும் பையை சுமந்து தான் வந்தார்கள்.
இதில் ஒன்றை இடுப்பில் வைத்து, ஒன்றை கையில் கொண்டு, பைகளையும் சேர்த்து பள்ளி கொண்டு வருவதற்குள் சோர்ந்து போய் விடுவாள். அதிலும் அந்த சின்ன வாண்டு கல்லை கண்டாலும் நின்று பார்க்கும் ரகும், கடை வீதியை கண்டாள் ஒரு இஞ்ச் கூட நகராது. கொஞ்சி, கெஞ்சி தான் அழைத்து வர வேண்டும். பின்னே, காலை நேர அவசரத்தில் பைக்கும், காரும் கண்மண் தெரியாமல் செல்ல விஜியை பாதுகாப்பதே அவளுக்கு பெரிய பாடு. இதில் அஜி கொழு கொழு உடல் வாகு, அவளை தூக்கி சுமக்கம் போது ஒல்லி உடல்வாகு கொண்ட சரண்யாக்கு மூச்சு வாங்கும். பிள்ளை மட்டும் என்றால் தெரியாது கையில் பையும் இருக்க வேக நடை முடியாது. இந்த அஜி குட்டி தான் கணம் என்று எண்ணிய அடுத்த நிமிடமே பெத்தவ கண்ணு தான் கொல்லி கண் சரண்யா என்று மனதில் ஒரு அரட்டல் போடுவாள்.
ஒரே ஓட்டமாக கடை வந்து சேர்ந்தவள், சேலை பிரிவிற்கு செல்ல தடுத்து விட்டாள் அகிலா. சரண்யாவின் காலை நேர பரபரப்பு தெரியும் என்பதால் அவளை ப்ளவுஸ் பிரிவில் நிற்க விட, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள் சரண்யா. நன்றியை சிரிப்பில் காட்டி ப்ளவுஸ் பக்கம் நின்று கொண்டாள். அங்கு தான் கூட்டமும் குறைவு, வேலையும் கம்மி. நிச்சயம் ஒரு அசுவாசம் அவளுக்கு தேவை பட, மெதுவாக அமர்ந்து காலை பிடித்து கொண்டாள்.
மதியத்திற்கு மேல் சரண்யா சேலை பிரிவிற்கு வர, தேவி அக்கா ஏதோ வேலையாக வெளியில் சென்று விட்டார். சாந்தி அங்கு வேலை செய்யும் பெண். இவர்கள் எல்லோருக்கும் மூத்தவர், சீனியர். அந்த மரியாதை இவர்களுக்கு உண்டு. அவர்கள் சொந்தத்தில் ஒருவர் முகூர்த்த புடவை எடுக்க வர, ரகம் பிரித்தாள் சரண்யா.
“ சரண்யா… நீ கீழ குடோன் போய் புதுசா வந்ததை பிரித்து அடுக்கு. அகிலா, நீ வந்து இவங்களுக்கு சேலையை விரித்து காட்டு…” என்று உத்தரவு வர, மறு சொல் சொல்லாமல் தலையாட்டி சென்றாள்.
கீழ சென்று பண்டலை பிரிக்கும் போதே முனுக்கென்று ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. இப்படி ஆயிரம் சாஸ்திரம் பார்த்து தான் அவள் திருமணமும் நடந்து. ஆனால், விதி… வேற என்னத்த சொல்ல, இருந்தும் இந்த செயல் அவளை காயப்படுத்தியது. அழுவதற்கு இது இடமுமில்லை, நேரமும்மில்லை. துணிந்து வெளியே வந்தாச்சு, இது மாதிரி சங்கடங்களை நிறைய கடக்க தான் நேரும்.
முகம் சுருங்க அமர்ந்திருந்த சரண்யாவை பார்த்த அகி, “ அவங்க அப்படித்தான் நெறைய சாஸ்திரம் பார்ப்பாங்க… நீ எதையும் கண்டிக்காத சரண்…”
“அவங்க செய்றது சரி தான் அகி. எங்கம்மாவே அப்படித்தான், வேற யார சொல்ல முடியும். நாளைக்கே உன் கல்யாணத்துக்கே என் கையால புடவை வாங்குவியா என்ன?…”
“ ஏன் ?… வாங்க மாட்டேனா. ஆனா, அப்படி ஒரு கல்யாணம் நடந்தா பார்ப்போம். இன்னைக்கு உன்னை குடோன் அனுப்புன மாதிரி கொஞ்ச வருசம் செண்டு என்னை குடோன் அனுப்புவாங்க…”
“ஏய், வாய கழுவுடி…” என்று சரண்யா அரட்ட
“ நெசம் தான் பிள்ளை, உன் வயசு தான் எனக்கு, நீ ரெண்டு பிள்ளைக்கு அம்மா. ஆனா, நான்?… எனக்கு மேல ரெண்டு பேரு இருக்காங்க. அவளை கட்டி கொடுக்க தான் ,நாங்க எல்லாம் வேலைக்கு போறோம். நான் கடைசி எனக்கு யார் செய்வா, இப்படி யோசிக்கும் போது நீ பரவாயில்லை. வயதான பெத்தவங்க, அவங்களை விட்டு என்னை யாரும் கட்டி கொடுக்க மாட்டாங்க. நீயாவது கல்யாணம், புருசன்னு ஒரு சந்தோசத்தை பார்த்துட்டா… எனக்குலாம் அந்த குடுப்பனை இல்லை…”
“ஆமா, போன மாதிரியே வந்துட்டேன், பெரிய குடுப்பானை தான்…” நொடித்து கொண்டாள் சரண்யா.
“ போன மாதிரியா வந்த, உன்னை கட்டி கொடுக்கும் போது மாசமா இல்லையே…” என்று அகி கண்ணடிக்க,
“அந்த கருமத்தை நினைவு படுத்தாத அகி…” கடுப்பாக சரண் சொல்ல.
சேலை அட்டையை தூக்கி அவள் மேல் எறிந்தவள் , “போடி அரை லூசு “ என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.
வெற்றியின் புது வீட்டிற்கு பால் காய்ச்சும் விசேஷம் நடந்து கொண்டிருந்தது. குடும்பத்தார் அனைவரும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, எல்லாவற்றையும் அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. ரொம்ப கஷ்டப்பட்டு கட்டிய சொந்த மனை, முழுதாக சந்தோச பட முடியவில்லை. இந்த இடம் வாங்கும் போது உரிமையாக உடன் நின்ற ஒருத்தி, இன்று உடன் இல்லை. சொந்த இடம் என்று அவ்வளவு கனவு அவளுக்கு, வீட்டின் அமைப்பை கூட வெற்றியிடம் சொல்லி இருக்கிறாள். அந்த நேரத்தில் மாசமாக இருந்ததால், பிள்ளைக்கும் சேர்த்து வீட்டை எப்படி கட்ட வேண்டும் கணவனிடம் கனவுகளோடு சொல்லி வைத்தாள்.
அவளின் கனவை இன்று கணவன் நினைவாக்கி இருந்தான். அதை பார்த்து மகிழ தான் அவள் அருகில் இல்லை. ஆம், சரண்யா ஆசைப்பட்ட படி தான் வீட்டை கட்டி இருந்தான். வீட்டு வேலை தொடங்கும் போதே, அவன் எதிர்பார்ப்பு இது தான் என்று தெளிவாக சொல்லி தான் வேலையை ஆரம்பித்தான்.
சரண்யாவின் நினைவு இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்லுவான். அவளோடு திரும்ப தன் வாழ்வை தொடங்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனை விடாமல் துரத்துகிறது. தன் காதல் நிறைவேற போகிறது என்று அபியை போல் அவன் மனதில் மகிழ்ச்சி எல்லாம் இல்லை. என்றோ ஒரு காலத்தில் இந்த காதல் வாழ்க்கைக்கு தவம் கிடந்தவன் தான். இன்று கை சேர்ந்தும் மனம் மகிழ வில்லை.
அபியின் மனதில் கள்ளம் இல்லை. ஆனால், இவன் மனதில் ஆயிரம் கள்ளம் இருந்ததே. கட்டிய மனைவிக்கு துணை நிக்க தவறி, சரண்யாவின் முழு செயலுக்கும் பொறுப்பு வெற்றி தான். ஆனால், வெளியில் சரண்யாவை கெட்டவள் என்று ஆக்கி ஒதுக்கி விட்டாயிற்று…
கிராமத்தில் ஒரு சொல்வாடை உண்டு. கிறுக்கு குத்திவிட்டார்கள் என்று, அதன் படி சரண்யாவை முழுதாக கிறுக்காக்கி விட்டது இவன் தான். பழி சொல் ஏற்று வெளியேறியது பெண். அன்று வெற்றி நிதானமாக இருந்திருந்தால், இன்று வீட்டின் உரிமைக்காரி சரண்யா தான். அவன் பிள்ளை கூட நடந்து ஓடி கொண்டிருக்கும் என்று நினைப்பு தோன்ற எழுந்து கொண்டான்.
கையால் நெஞ்சை தடவி கொண்டாலும் வேதனை போக வில்லை. அன்று அபியின் இடத்தை சரண்யா எடுத்து கொண்டாள் என்று வெறுத்தவன். இன்று உரிமையாக அபி புது வீட்டில் கால் வைக்க உள்ளே குத்தியது. இன்று வரை அபியிடம் ஒரு வார்த்தை அவன் பேச வில்லை. வீட்டில் நடக்கும் பேச்சு வார்த்தையையும் ஆதரிக்க வில்லை. ஆனாலும், அவனை மீறி தான் எல்லாம் நடக்கிறது. சரண்யா என்ற ஒருத்தி இங்கு வந்ததையே மறந்தார் போல தான் இருந்தார்கள்.
புது பானையில் பால் நிரப்ப, அருகில் நின்று இருந்தார்கள் அபிராமியும், சக்தியின் மனைவி ஜெயந்தியும். சரண்யா எங்கு இருப்பாள். உரிமையாக நிற்கும் இவர்களை பார்த்து உள்ளம் குத்த தொடங்கியது. குடும்பமாக சேர்ந்து நிக்க சொல்லி தனம் சொல்ல, எல்லோரும் ஜோடியாக சேர்ந்து நின்றார்கள். மெதுவாக, அபி வெற்றியின் அருகில் வர, மனம் அதிர தொடங்கியது வெற்றிக்கு.
எல்லோர் மனதிலும் புன்னகை தான். இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தாச்சு, புது வீடு, புது தொழில் என்று வாழ்வில் ஏற்றம் தான். இது எல்லாம் எவ்வாறு?… ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வை அழித்து, பெத்த பிள்ளையை ஒதுக்கி வைத்து உன் சுயநல குணத்தின் வெளிப்பாடு என்று உள்ளம் எடுத்து கூற, அபி அருகில் வரும் முன்னே ஒதுங்கி கொண்டான். அபியால் தாள முடியவில்லை, முகம் கறுக்க முனுக்கென்று நீர் வந்து விட்டது.
சூழலை சமாளிக்க தனம் தான் , “ அபிம்மா, பானையை தூக்கு… ஜெயந்தி நீ ஒரு பானையை தூக்கி வை…” என்று சொல்லி முடிக்க கூட இல்லை.
“அம்மா, என் வீட்டுக்கு பால் நீங்க தான் காய்ச்சனும்… நீங்களே செய்ங்க…” என்று அழுத்தமான குரலில் வெற்றி சொல்ல.
எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள். என்ன சொல்ல வருகிறான். அபியை வேண்டாம் என்ற சொல்கிறான். இவனை மனதில் கொண்டு தானே இவ்வளவும்…
வெற்றி மறைமுகமாக தன் எதிர்ப்பை சொல்ல, அடுத்து எவ்வாறு கல்யாண பேச்சை ஆரம்பிக்க என்று புரியாமல் பார்த்தார்கள். இன்று விசேஷம் முடியவும் திருமண பேச்சை தொடங்க எண்ணி இருந்தார்கள்.
“ எம் மகன் மனசு எனக்கு தெரியாதா… ஏதோ ஒரு விசனம் அம்புட்டு தான். பரிசம் போட தேதிய பாருங்க. அபி, நாளைக்கு தம்பி மதுரை போறான். அவன் கூட போய் உனக்கு புடிச்ச மாதிரி பரிச சேலை எடுத்துக்க…” என்று சொல்ல, வெளிநடப்பு செய்து விட்டான் வெற்றி.
அபியும் அவனோடு பேச தீர்மானம் செய்ததால், அவனோடு வெளியில் செல்ல காத்திருந்தாள்.
மாயா தனக்கு தெரிந்த நல்ல பொட்டிக் பெரியாரில் இருப்பதாக சொல்லி, அங்கே செல்ல சொன்னாள். ஆனால், அங்கு தான் சரண்யா வேலை பார்ப்பதை இவர்கள் யாரும் அறிய வில்லை. ஆவணி கடைசியில் கல்யாண தேதி முடிவு செய்ய பட்டது.
வெற்றி, சரண்யாவை பார்க்க திட்டமிட்டான். அவளின் தற்போதைய நிலை அறியாமல், தன் வாழ்வின் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பது திண்ணம். சரண்யா நன்றாக இருக்க வேண்டும் என்று அவசர வேண்டுதல் வேறு கடவுளிடம் வைத்தான்.
மறுநாள் மாலை போல் அபியை அழைத்து கொண்டு பெரியார் கடை வீதிக்கு சென்றான் வெற்றி. அவனுக்கு எதிரே வெயில் தன்னை தாக்காமல் இருக்க முக்காடு போட்டு கொண்டு, பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர எதிரே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.