நிலா – 2
இரவு சாப்பிட்டு முடித்து அப்பொழுதே சூர்யா கிளம்புகிறேன் என்று நிற்க மோகனாவின் குடும்பத்தினருக்கு அதில் சற்றும் விருப்பமில்லை.
“இத்தனை ராத்திரில ஏன் கிளம்பற நீ? இருந்துட்டு வெற்றி கூட போயேன் சூர்யா…” என்று கூட சொல்லி பார்த்துவிட்டனர் மோகனாவும், சந்திரனும்.
எதற்கும் மசியவில்லை அவன். இதற்கு மேல் பேசினால் கோபப்படுவானோ என நினைத்த வெற்றி,
“நானும் கிளம்பறேன்க்கா. இவனை தனியா அனுப்பவும் பயமா இருக்கு…” என சொல்லவுமே சூர்யா நண்பனை உஷ்ணப்பார்வை பார்க்க,
“என்னடா முறைக்கிற? நீ றெக்கை இல்லாம பறப்ப. எனக்கு நிம்மதியா இருக்காது. நானும் வரேன்…” என்று சொல்ல அப்படியாவது தங்குகிறேன் என்று சொல்வான் என பார்க்க,
“ஓகே, உன் இஷ்டம்…” என்றுவிட்டான் அவன்.
பாலா முறைப்புடன் சூர்யாவை பார்த்தாள். தன் மாமன் அவனால் தான் இங்கிருந்து கிளம்புகிறான் என்றளவிற்கு புரிந்தது அவளுக்கு.
அதில் கையில் இருந்த ரப்பர் பாலை மேலும் கீழுமாய் போட்டபடி அவனை முறைப்புடன் பார்த்திருந்தவள் வேண்டுமென்றே அவன்மீது தூக்கியடித்தாள்.
“பாலா…” என மோகனா அதட்ட அசையாமல் நின்றவள்,
“மாமாவை இருக்க சொல்லும்மா…” என்றாள் தாயிடம் கட்டளையாக.
“பாலா, அப்படி பேச கூடாது. என்ன இது விளையாட்டுத்தனம்? சாரி கேளு…” என சந்திரன் சொல்ல,
“நோ…” என்றாள் இரு கைகளையும் கட்டிக்கொண்டு முகத்தை திருப்பி.
சூர்யாவிற்கு மிகுந்த அவமதிப்பாக போய்விட்டது. தன் வீட்டினரும் சரி, வெளியிலும் சரி எதிரே நின்று பேசவே யோசிப்பவர்கள் மத்தியில் இவள் என்ன இப்படி செய்துவிட்டாள் என்று பார்த்து நின்றான்.
அவனின் முகத்தை சாதாரணமாக வைக்கவே படாதபாடு பட்டான். ஆனாலும் கோபத்தில் கண்கள் சிவந்துவிட வெற்றிக்கு அவனின் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.
“பாலா…” என வெற்றி அழுத்தமாய் அழைக்க அவனின் குரலை மறுக்கமாட்டாமல் நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ பண்ணினது சரியா? தப்பா?…” என அவன் கேட்கவும் அவனும் என்ன சொல்ல போகிறான் என புரிந்துகொண்ட பெண்,
“இனிமே இப்படி பண்ண மாட்டேன்…” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“டேய் சூர்யா…” என நண்பனை பார்க்க,
“விடுடா, இந்த ரப்பர் பால் அடிச்சு என்ன ஆக போகுது? சும்மா ஆளாளுக்கு அவளை போட்டு திட்டிட்டு இருக்கீங்க…” என பெருந்தன்மை போல வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் கூறினான்.
அதுவும் மோகனா, சந்திரன் இருவரின் முகத்தில் தென்பட்ட பதட்டத்திலும், சங்கடத்திலும் தான். அந்தளவிற்கு மட்டுமே அவனால் இறங்கிவர முடிந்தது.
அவர்களை முதல் முறை பார்க்கிறான் என்றாலும் பலமுறை பேசியிருக்கிறான் வெற்றியோடு. அதனை கொண்ட மதிப்பும், மரியாதையும் எந்த சூழ்நிலையிலும் குறையாது.
“சரி கிளம்புவோம்…” என்ற வெற்றி,
“இரு நான் போய் சொல்லிட்டு வரேன். இல்லைன்னா சாப்பிட மாட்டேன்னு அடம் பண்ணுவா…” என சொல்லி வெற்றி உள்ளே செல்ல சூர்யாவின் கையில் இருந்த ரப்பர் பாலை லேசாய் கிள்ளிவிட்டு கீழே விட்டெறிந்தான்.
அதில் உள்ள காற்று குறைய குறைய பார்த்து இருந்தவன் சந்திரனிடம் பேசிக்கொண்டே வெற்றிக்காக காத்திருந்தான்.
உள்ளே சென்ற வெற்றி சில நொடிகளில் பாலாவுடன் ஹாலுக்கு வந்தான். வரும் பொழுது அவளிடம் எதுவோ பேசிக்கொண்டே வர பாலாவின் சிரிப்பு சத்தம் அந்த ஹாலை நிறைத்தது.
யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் எண்ணாமல் குழந்தை வாய்விட்டு சிரிக்க அதில் அவளின் பெற்றோருக்கு பெரும் நிம்மதி. பின்னே இதே கோபத்துடன் இருந்தால் வெற்றி கிளம்பிய பின் அவளை சமாளிக்க முடியாதே.
“ஓகே, நெக்ஸ்ட் வீக் மாமா சீக்கிரமே கிளம்பி வரேன்…” என அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு விடைபெற்று வாசலுக்கு வந்தான். அவன் அவளுடன் வரும் பொழுதே மெல்ல நழுவி சூர்யாவும் வாசலுக்கு சென்றிருந்தான்.
வெற்றி வெளியே வரவும் அவனுடன் பேசியபடி மோகனாவும், சந்திரனுமே வந்துவிட்டனர்.
“டேய் கீயை மறந்துட்டேன். இரு….” என சொல்லிவிட்டு சூர்யா உள்ளே வர அங்கே மூங்கில் சோபாவில் அமர்ந்து தனது ரப்பர் பந்தை சுற்றி காற்று இறங்குவதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பாலதிரிபுரசுந்தரி.
“பேரை பாரு பாலதிரிபுரசுந்தரி. ட்ரம்மு ட்ரம்மு…” என முணுமுணுக்க அவன் சொல்லியவை காதில் விழுந்தாலும் அவனிருந்த பக்கம் திரும்பவில்லை.
சூர்யாவின் மீது அப்படி ஒரு கோபம். மறுநாள் வெற்றியை வைத்து எத்தனை திட்டங்கள் வைத்திருந்தாள். அத்தனையும் பாழ்.
தனது கீயை எடுத்து திரும்பியவன் மீண்டும் அவளின் தலையில் ஓங்கி குட்ட போய், பின் என்ன நினைத்தானோ கையை இறக்கிவிட்டு வெளியேறி வந்தான்.
‘என்னை போய் சின்னப்புள்ளைத்தனமா செய்ய வச்சுட்டாளே. என்னன்னு தான் இவளை சமாளிக்கிறாங்களோ?’ என நினைத்தபடி வண்டியை செலுத்தினான் மோகனாவின் அறிவுரையின் பெயரில். ஆனாலும் மனம் நினைத்ததை வாய் வெற்றியிடம் கேட்டேவிட்டது.
“என்னன்னுடா அந்த பொண்ணை வீட்டுல வச்சு சமாளிக்கறீங்க?…” என கேட்க,
“டேய் யாரை சொல்ற?…” வெற்றி அடிக்கும் காற்றில் சரியாக காதில் விழாமல் கேட்க,
“ஹ்ம்ம், அதான் கொஞ்சிட்டு வந்தியே. அந்த பொண்ணை தான்…”
“ஓஹ், பாலாவா? ஏன் அவளுக்கென்ன?…” என்றான் வெற்றி.
“சொல்றேன்னு கோவிச்சுக்காத. நீ தப்பா எடுத்தாலும் பரவாயில்லை. சின்ன பொண்ணு. இவ்வளவு அடமென்ட்டா இருக்க கூடாதுடா…” என்றான் வெற்றியிடத்தில்.
“டேய் அவ ரொம்ப ஸ்வீட் கேர்ள்டா. நான் லாஸ்ட் வீக்கும் வரலை. இன்னைக்கு இப்படி கிளம்பிட்டேன். அந்த கோபம் தான். வேற ஒண்ணுமில்லை. அதுவும் நீ இன்னைக்கு தங்கி இருந்தா உன்னோட நல்லா ப்ரென்ட் ஆகிருப்பா…”
“ஒன்னும் ஆக தேவையில்லை. எங்க வீட்டுலயும் மூணு பேர் இருக்காங்க. யாருமே இப்படி இருந்ததில்லை. நான் நாளைப்பின்ன அவளோட எதிர்காலத்தை மனசுல வச்சு தான் சொல்றேன்…” என்றான் சூர்யா அந்த பேச்சை விடமுடியாமல்.
எப்படியாவது தன் கூற்றை நண்பனை ஒப்புக்கொள்ள செய்யவேண்டுமென்னும் அவா அவனின் பேச்சில் தொனித்தது.
“அதெல்லாம் இல்லைடா. பாலா ரொம்ப அன்டர்ஸ்டேன்டிங் தெரியுமா? நான் தான் சொன்னேனே எங்க வீட்டோட பெரியமனுஷின்னு…” என்று ஆரம்பித்த வெற்றி எங்க பாலா அப்படி, இப்படி என அக்கா மகளின் பெருமையை அவிழ்த்துவிட ஏன்தான் கேட்டோமோ என்றாகிவிட்டது.
சென்னை வந்து சேரும் வரை வெற்றியின் வாய் ஓயவில்லை. சூர்யாவினால் ஓரளவுக்கு மேல் அவனின் பேச்சை தடுக்கமுடியவில்லை.
சூர்யா அவனின் மனதில் இருந்த கோபத்தை வெற்றியிடம் கடத்த முற்பட வெற்றியோ நீ நினைத்தது தவறு, உன் எண்ணத்தை மாற்றுகிறேன் என்பதை போல பேசி பேசியே கேட்ட சூர்யாவை ஓயவைத்துவிட்டான்.
“யப்பா சாமி நீ எதுவும் சொல்ல வேண்டாம். நிறுத்துடாப்பா உன் பாலா புராணத்தை. கேட்க முடியலை. பத்து நாள் சாப்பிடாம இருந்தா கூட இவ்வளவு டயர்ட் ஆகமாட்டேன்…” என பைக்கை விட்டு இறங்கி கையை கூப்பிவிட,
“டேய் என்னடா இதெல்லாம்?…” என அவனின் கையை பிடித்து சிரித்தவன் அப்போது தான் சுற்றிலும் பார்த்தான். பேச்சில் செல்லும் வழியை கூட மறந்துவிட்டவன் அந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“இங்க எங்கடா கூட்டிட்டு வந்திருக்க? ஹாஸ்டல் போகனும்…” என வெற்றி சொல்ல,
“அடச்சீ உள்ள வா…” என பைக்கை பார் செய்துவிட்டு லிப்ட்டில் நுழைந்தான் வெற்றியுடன்.
“இந்த அப்பார்ட்மென்ட்க்கு எதுக்குடா?…”
“இந்நேரம் ஹாஸ்டல் போக முடியாது. அன்டைம் ஆகிடுச்சு. வீட்டுக்கு போனா கூட்டம் குறைஞ்சிருக்காது. இன்னும் சொந்தக்காரங்க இருப்பாங்க. அதான் ப்ளாட்க்கு வந்துட்டேன்…”
“யார் பிளாட் இது?…” பத்தாம் தளத்தில் லிப்ட் நிற்க,
“அப்பாவோடது தான்…”
“அப்பாவுக்கு பிளாட் எதுக்குடா? அதான் உங்களுக்கு வீடு இருக்கே…” என்றான் வெற்றி.
வெற்றி ஒருமுறை மட்டுமே அவர்களின் வீடு சென்றிருக்கிறான். அதுவும் வீட்டில் யாரும் இல்லாத பொழுது வெற்றியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான் சூர்யா.
“பிளாட் அப்பாவோடது இல்லை. இந்த அப்பார்ட்மேன்டே அப்பாவோடது தான்…” என அலட்டாமல் சாதாரணமாக பதில் சொல்ல வெற்றிக்கு தான் ஒருமாதிரியானது.
“இல்லை சூர்யா, நான் ஹாஸ்டல் போறேன். இங்க வேண்டாம்டா…” என்றான் தயங்கி தயங்கி.
அவனின் பேச்சை எப்பொழுதும் போல கண்டுகொள்ளாதவன் கதவை திறந்து அவனை உள்ளே இழுத்துக்கொண்டே போனான்.
“டேய் என்னை பார்க்கவே மாட்டியா? என் பேச்சை கேளுடா. எனக்கு ஒரு மாதிரியா இருக்குது…” என சொல்லியேவிட,
“அப்படியே அடிச்சேன்னா பார்த்துக்கோ. இன்னைக்கு இங்க தான். இந்த பிளாட் நான் எப்போவாச்சும் வீட்டுல சண்டை போட்டு கோச்சுட்டு வந்தா இருக்கறது. இங்க எல்லாமே என் திங்க்ஸ் மட்டும் தான்…”
“என்ன வீட்டுல சண்டை போட்டு வெளியே வருவியா? தப்பு தப்பு. ரொம்ப தப்பு….” என வெற்றி ஆரம்பிக்க,
“அய்யா சாமி, அதுவும் ஒரு ரெண்டு, மூணுமணிநேரம் தான். மத்தபடி தங்கல் எல்லாம் எப்போவாச்சும் முக்கியமான எக்ஸாம் அப்போ மட்டும் தான். பீஸ்ஃபுல்லா இருக்கனும்னு நினைச்சாலும் இங்க வந்திருவேன்…” என சொல்ல,
“என்னால உன்னை இப்பவும் புரிஞ்சுக்க முடியலை…”
“எனக்கே முடியலை. நீ குழம்பி போவ. அதை விடு. போய் ப்ரேஷ் ஆகிட்டு வா. எதாச்சும் சூடா குடிக்கலாம்…” என கிட்சனை நோக்கி சென்றான்.
வெற்றிக்கு அங்கே இருப்பது முள்மேல் இருப்பதை போலவே தோன்ற தயக்கத்துடனே இருந்தான்.
அவன் வரும் பொழுது ப்ளாக் காபி தயாராய் இருந்தது. இரவு குளிரில் பைக்கில் வந்ததற்கு அது அமிர்தமாய் இருக்க வாங்கி குடித்துக்கொண்டே அக்காவிற்கு அழைத்து பேசினான் வெற்றி.
அதே நேரம் சூர்யாவின் போனும் அடித்துக்கொண்டே இருந்தது. திரையில் அம்மா என்று பதிவாகி இருக்க,
“எடுத்து பேசேன்டா…” என்றான்.
“ப்ச், எங்க இருக்க என்னன்னு கேட்டுட்டு இருப்பாங்க. இந்நேரம் செக்யூரிட்டி நான் இங்க வந்ததை சொல்லிருப்பான். அதான் போன். உடனே கிளம்பி வான்னுவாங்க. நீ பேசாம இரு…” என ஒரு மெத்தையை கொண்டு வந்து ஹாலில் போட்டு இருவருக்கும் பில்லோவை போட்டவன்,
“படுக்கலாம்டா…” என்றான் சூர்யா உடம்பை வளைத்தபடி.
“நீ பேசலைன்னா நான் கிளம்பறேன்…” என வெற்றி சொல்ல அவனின் கோபத்தை கண்டு சிரித்தவன் மாட்டேன் என்பதை போல தலையசைக்க,
“அப்ப நான் போறேன்…” என எழுந்தான்.
“அது பாஸ்வேர்ட் ஆர் பிங்கர்ப்ரின்ட் குடுக்கனும் தம்பி. நான் சொல்லாம டோர் ஓபன் ஆகாதே…” என்று சிரிக்க,
“வில்லன்டா நீ…” என பில்லோவை அவன் மீது எறிந்தான்.
“என்ன அவசரத்துக்கு கூப்பிடறாங்களோ? கொஞ்சமும் பதட்டமில்லாம இருக்க…” என திட்ட சற்று நேரத்தில் அழைப்பு ஓய்ந்து மெசேஜ் வந்த சத்தம் கேட்டது.
“ஒரு அவசரமும் இருக்காது. இதுவே அப்பா இல்லைன்னா எத்தனை சொந்தக்காரங்க இருந்தாலும் நான் வீட்டுல தான் இருந்திருப்பேன். இப்போ அப்பா இருக்காங்க. சோ ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்றான் இலகுவாக.
“அட்லீஸ்ட் மெசெஜ்க்கு ரிப்ளே பண்ணுடா. எனக்கே ஒரு மாதிரி ஆகுது…” என வெற்றி சொல்ல விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தது வெற்றியின் முகம்.
“சரி சரி, கண்ணை துடை…” என அவனை கலாய்த்தவன் மெசேஜை எடுத்து காண்பித்தான்.
‘ஒழுங்கா சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கு’ என மெசேஜ் அவனின் தாயின் எண்ணிலிருந்து வந்திருந்தது. அதை வெற்றியிடம் காண்பித்தவன்,
“இதுக்கு இத்தனை அக்கப்போரு. போன் அட்டன் பண்ணிருந்தா எதாச்சும் பேசி வர சொல்லுவாங்க. அதான் பண்ணலை…”
“அப்போ மெசெஜ்க்கு ரிப்ளே பண்ணுடா…” என்றான் அடுத்ததாக.
“ரொம்ப கஷ்டம்டா உன்னோட…” என்றவன் ‘ஹ்ம்ம்’ என்று மட்டும் அனுப்பிவிட அர்ச்சனா வியக்கும் ஸ்மைலியை போட்டு ‘சூர்யா தானே?’ என கேட்டிருந்தார்.
“பாரு எங்கம்மாவே நம்பலை நான் ரிப்ளே பண்ணிருக்கேன்றதை. உன்னால என்னை கிண்டல் பன்றாங்க…” என வெற்றியை பார்த்து முறைக்க,
“நீ என்ன குறைஞ்சுட்ட அதுல?…” என்றான் அவன்.
அதன் பின்னர் ஹோம்தியேட்டரில் ஆங்கில படமொன்றை போட்டு அலறவிட்டான் சூர்யா.
“அக்கம்பக்கத்துல இருக்கறவங்க கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள போறாங்கடா. சத்தத்தை குறை. என் காதே போச்சு…” என வெற்றி விரல்களை கொண்டு காதை அடைக்க,
“நீ கூட தான் வண்டில வரும் போது ரம்பம் போட்ட. கேட்டேன் தானே?…” என்றவன்,
“என்னை பிடிச்சு தள்ள இங்க எவனுக்கும் துணிச்சல் இல்லை. அதோட இந்த வீடு முழுக்க சவுன்ட்ப்ரூப். சோ சத்தம் வெளியே கேட்காது…” என்றான் சூர்யா.
“அப்ப கல்யாணத்துக்கப்பறம் அப்பப்ப இங்க வரப்போ பொண்டாட்டிட்ட அடிவாங்கிட்டு சத்தமில்லாம இருந்துக்கலாம்னு சொல்லு. எதுவும் வெளில கேட்காது. மானம் தப்பிச்சுக்கும்…” என சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் வெற்றி சிரிக்க,
“என்னது பொண்டாட்டி என்னை அடிப்பாளா? அப்படி ஒருத்தி எனக்கு பொண்டாட்டியா வரவே மாட்டா. எங்கயுமே இந்த சூர்யா வச்சது தான் சட்டம்…” என்றவன்,
“அதுக்குத்தான் இப்ப இருந்தே அவளை அதட்டி வச்சிருக்கேன். சும்மா என்னை பார்த்தாலே நடுங்குவா. இதுல என்னை எதிர்த்து பேசறதே அதிசயம். அடிப்பாளாமா?…” என அவன் ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டதை போல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.
“பாவம்டா அந்த பொண்ணு…” என வெற்றி சொல்ல இன்னுமின்னும் சிரித்தான் சூர்யா.
அதன் பின் விடியும் வரை மாறி மாறி படங்களாக பார்த்து ஓய்ந்தவர்கள் விடியற்காலையில் தான் உறங்கவே செய்தார்கள்.
அதன் பின்னர் வெற்றியை அடிக்கடி தங்களுடைய பிளாட்டிற்கு அழைத்து வந்துவிடுவான் சூர்யா. க்ரூப் ஸ்டடி என்னும் பெயரில் அவனுடன் வந்துவிட்டாலும் வெற்றிக்கு சூர்யா படிப்பை முடித்து செய்யவிருக்கும் தொழில் பற்றிய பேச்சுக்கள் அத்தனை பிடிக்கும்.
அதுவும் அதை சூர்யா சொல்லும் போது அதில் லயித்து போவான் வெற்றி. எத்தனை தான் தான் என்னும் திமிரும், அகம்பாவமும் இருந்தாலும் தொழில் பற்றிய கனவுகள் பற்றி பேசும் நேரம் முற்றிலும் மாறுபட்ட சூர்யாவை தான் பார்ப்பான் வெற்றி.
அத்தனை பேச்சில் முதிர்ச்சி, திட்டமிடலில் அவ்வளவு தெளிவு, செயல்படுத்தும் விதத்தை விவரிப்பதில் அத்தனை நேர்த்தி. பார்த்து வியந்துதான் போவான் வெற்றி.
வெற்றிக்கு தொழில் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் அவனின் எல்லை படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல வேலை. பேர் சொல்லும்படியான உத்தியோகம். குடும்பத்திற்கு கையை கையை கடிக்காதளவிற்கு சம்பளம். அவ்வளவே.
மற்றபடி வெற்றியும் முயன்றால் சாதிக்ககூடியவன் தான். திறமையானவனும். இப்படி வெற்றி இருக்க சூர்யா பேசி பேசியே மோகனா, சந்திரனிடம் பேசி எம்.ஈ படிக்கவும் அனுமதி வாங்கிவிட்டான்.
வாழ்க்கையின் மாற்றங்கள் எத்தனையோ இருந்தாலும் சூர்யா, வெற்றி நட்பு மட்டும் இறுகிக்கொண்டே தான் சென்றது.
இருவரிடத்திலும் குணங்கள், செயல்கள், அணுகுமுறைகள் என அத்தனை முரண்பாடுகள். ஆனாலும் நட்பு ஒன்று மட்டுமே அவர்களை பிணைத்து வைத்திருந்தது.
இதோ படிப்பையும் முடித்து வெற்றிகரமாக கம்பெனி ஒன்றையும் துவங்கி அதையும் திறன்பட நடத்திவருகிறான் சூர்யா. அதில் வெற்றியும் ஒரு பங்குதாரர்.
பிரபல கார்களுக்கு, ஸ்டரியரிங், மற்றும் இஞ்ஜினுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
உலக அளவில் அவர்களின் கம்பெனி பேசப்பட வேண்டும் என்பதே சூர்யாவின் ஒரே குறிக்கோள். கோபாலசுவாமியின் மகன் என்பதால் அவனுக்கு மெனக்கெடாமலே அந்த பெயர் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் தந்தை பெயர் ஒரு அடையாளம் தான்.
இருந்தாலும் தொழில் சுத்தம் அவனை மேலே மேலே உயர்த்தியது. முக்கிய கம்பெனிகளின் வரிசையில் பெயர்பெற்றது.
கம்பெனி வைக்க உதவியது கோபாலசுவாமி. அவருக்கு தெரியும் மகனின் முடிவு இதுதான். அவனின் வாழ்க்கை எதை நோக்கி செல்லும் என்று. அவரின் கணிப்பு அப்படி. அதன்படியே நகர தொழில் செய்வேன் என்று வந்து நிற்க நிச்சயம் அதில் முத்திரை பதிப்பான் என்ற முழு நம்பிக்கையுடன் அதற்கும் முன்வந்தார்.
பணம் ஒரு பிரச்சனை இல்லவே இல்லை. அதிலும் புகழ் வாய்ந்தவர். இதனை செயல்படுத்துவதில் எந்த வித தடையும் இல்லை. வெற்றிக்கு தான் உறுத்தலாக இருந்தது.
“உங்கப்பா என்னடா நினைப்பார்? அவரோட பணத்துல போய்….” என சங்கோஜப்பட,
“அப்பான்னாலே மகனுக்கு ஒரு ஏணி மாதிரி. அது அவங்க கடமை. இதுல நாம சாதிச்சா ரொம்பவே பெருமை. நீ வொர்ரி பண்ணாத. சைன் பண்ணு…” என பிடிவாதமாய் அவனிடம் கையெழுத்து வாங்கி தன்னோடு இணைத்துக்கொண்டான்.
என்னதான் பங்குதாரனாக இருந்தாலும் வெற்றி ஓரளவுக்கு மேல் அங்கே உரிமை எடுத்துக்கொள்ள மாட்டான். அதே நேரம் தீயாய் உழைத்தான்.
இதோ முப்பது வயதை நெருங்கும் சூர்யாவின் தங்கைகளுக்கு திருமண வயது நெருங்க, தனக்காக காத்திருப்பவளுக்கு திருமணவயது வந்தும் இருக்க சூர்யா அவனின் பாதையில் சென்றுகொண்டே தான் இருந்தான்.
உமா தான் அர்ச்சனாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். திவ்யாவிற்கு இருபத்தி நான்கு வயதாகிவிட்டது. இன்னும் திருமணத்தை பற்றி பேச்செடுக்கவில்லையே என்று.
ஆனாலும் கோபாலசுவாமியிடம் அப்படி கேட்டுவிடமுடியாதே. அதையும் பேச்சுவாக்கில் உத்தமன் ஒருநாள் கேட்டுவிட,
“அதுக்குன்னு காலநேரம் வேண்டாமா? முதல்ல ஹரிணி கல்யாணம் முடியட்டும். சூர்யாவுக்கு இன்னும் கல்யாண நேரம் கூடி வரலை…” என்றுவிட்டார் கோபாலசுவாமி.
‘இருவருக்கும் ஒரே வயது தானே?’ என முணுமுணுத்தாலும் அது கோபாலசுவாமியின் காதுகளுக்கு செல்லவில்லை. அவரை பகைத்துக்கொள்ள முடியாதே.
“இங்க பாரு உமா. உன் அண்ணனை பத்தி உனக்கு தெரியாதா? எல்லாத்துக்கும் நேரம் பார்ப்பாரு. பிள்ளைகள் என்ன படிக்கனும்ன்ற வரைக்கும் அவர் தான் முடிவு பன்றாரு. கேட்காமலே சொல்றாரு. இதை தள்ளி போட்டா ஒரு காரணம் இருக்கும்…” என அர்ச்சனா தான் வெகுவாய் சமாதானம் செய்வார் அவர்களை.
திவ்யாவிற்கு இதை பற்றிய எந்த கவலையும் இல்லை. சொல்ல போன்ல திருமணம் என்னும் கனவுகள் கூட அவளிடத்தில் இல்லை.
இவன் தான் உன்னை திருமணம் செய்துகொள்ள போகிறான் என்று சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டிருந்தாலும் சூர்யாவின் மீது ஆசை கொள்ளவே முடியவில்லை.
‘உனக்கு இவனுடன் தான் விரைவில் திருமணம்’ என்றாள் ‘ஓஹ், அப்படியா?’ என்ற பார்வை தான். மற்றபடி எந்த எதிர்பார்ப்புகளோ எதுவுமோ இல்லவே இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லை என்றாலும் எதிர்பாராததை தானே எதிர்பார்க்கமுடியும் வாழ்கையை வழிநடத்தும் விதியின் பொம்மலாட்டத்தில்.