உடனடியாக அவளை பிரசவ அறைக்கு அழைத்து செல்ல சூர்யாவும் அவளுடன் வர அவள் அனுமதிக்க கூடாதென்றுவிட்டாள். டாக்டர் கூட ஒப்புதல் தர பாலா சம்மதிக்கவில்லை. சூர்யாவும் அப்படியே இருந்துகொண்டான்.
உள்ளே செல்லும் முன்னர் வேகமாய் வந்த கோபாலசுவாமி அவளின் நெற்றியில் விபூதியை பூசியவர்,
“நல்லபடியா சுகமா பிள்ளையை பெத்து வாம்மா…” என்று அவளின் தலையை வருடியவர் அங்கியே அமர்ந்துகொண்டார்.
இதோ அவர் எதிர்பார்த்த நாள். ஒரு ஜனனத்தின் உதயத்தில் இன்னொரு மரணத்தின் கண்டம் விலகும் என்று இவர் கணித்திருக்க கண்ணை மூடி பிராத்தனையில் இருந்தார்.
பாலா உண்டான நேரத்தில் இருந்தே சரியாக உண்ணாமல், உறங்காமல் முழு பூஜையில் மட்டுமே கவனத்தில் இருந்தாள். தனது தொழிலை மொத்தமாய் கைவிட்டிருந்தார்.
பிறக்கும் சிசுவின் காலரேகையின் ஆதிக்கம் தந்தையின் கிரகவீச்சிலிருந்து தாயிற்கும் ஆயுள்பலத்தையும் தந்தைக்கு பூரணாயுசையும் தரவல்லது என அவரின் ஆருடம் சொன்னது.
இதோ அவரின் கணிப்பை உண்மையாக்குவதை போல ஜனனம் சுகமாய் நிகழ்ந்துவிட்டது. மரணம் தவறவேண்டும். அத்தனை பேரின் பிராத்தனைகள், வேண்டுதல்கள் எல்லாமே கை கூடி ஒட்டுமொத்த தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைத்ததை போலவே தேவதை பிறந்துவிட்டாள்.
அத்தனை சோதனைகளையும், கண்ணீரையும் சந்தோஷ பூக்களாக மாற்ற தேவதை அவதரித்தாள். இதோ பாலா இன்னும் கண்விழிக்கவில்லை.
குழந்தையோடு வெளியே வந்த நர்ஸ் நேராக சூர்யாவிடம் வந்து நீட்ட அவனின் பார்வை அதையும் தாண்டிய எதிர்பார்ப்போடு கதவை பார்த்தது.
“பெண் குழந்தை…” என்று அவனிடம் தர குழந்தையை எப்படி தூக்குவதென்றே இன்னும் தெரியாதவன் பரிதாபமாக,
“ம்மா…” என்றான் அர்ச்சனாவை பார்த்து.
“கையை நீட்டு சூர்யா. அப்படியே பிடிச்சுக்கோ…” என்று சொல்லி அவனின் கையில் குழந்தையை வைக்க அப்படியே பலாவை கொண்டு பிறந்திருந்தது குழந்தை.
‘பிள்ளையை கூட அவளை மாதிரியே பெத்து குடுத்துட்டா. பாலா. பாலா’ என மனமோ மகளை பார்த்து பார்த்து பொங்கினாலும் மனைவியை தான் தேடியது. டாக்டர் வெளியே வர,
“டாக்டர் பாலா…” என்று வேகமாய் அவரிடம் அவன் கேட்டதும் புன்னகைத்தவர்,
“மயக்கத்துல இருக்காங்க. ரூம்க்கு ஷிப்ட் பண்ணினதும் பார்க்கலாம்…” என்று சொல்லி வாழ்த்தையும் சொல்லி செல்ல அப்போதுதான் அவனிதயத்திற்கு துடிப்பே வந்ததை போல இருந்தது.
அதன் பின்னர் ஆளுக்கொருமுறை என மாற்றி மாற்றி குழந்தையை பார்க்க கோபாலசுவாமி அமர்ந்த இடத்திலேயே இருந்து பேத்தியை கண்களால் பார்த்தபடி இருந்தார்.
‘என்னோட வம்சத்தை காக்க என்னோட குலசாமியே எனக்கு பேத்தியா வந்துட்டா. இது போதும்’ என மனதார உருகி வேண்டிக்கொண்டார்.
“அவர்க்கிட்ட குடுங்க…” என மோகன அர்ச்சனாவிற்கு சொல்ல அப்போதுதான் ஞாபகமே வந்தது.
“பேத்திங்க…” என்று அர்ச்சனா குழந்தையை நீட்ட,
“அர்ச்சு…” என கண் கலங்கியபடி குழந்தையின் கன்னத்தை தொட்டே போனவருக்கு கைகள் நடுங்கியது. சட்டென உடல் சலசலவென வியர்க்க,
“பேத்தி, என்னோட பேத்தி…” என பார்த்து பார்த்து கண் கலங்கியவர் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க இன்னும் தொட முடியாமல் நடுக்கினார்.
“என்னாச்சுங்க?…” என அர்ச்சனா பதற,
“அர்ச்சு, பேத்தி. சூர்யா. பாலா…” என ஒவ்வொருவர் பெயரையும் சொல்லியவர் அப்படியே மயங்கி சரிந்தார்.
“சூர்யா…” என அர்ச்சனாவின் சத்தத்தில் தந்தையை நெருங்கியவன் ஆவாரை உடனடியாக அங்கேயே அனுமதிக்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
“என்ன இது ஒன்னு போனா இன்னொன்னு?…” என அர்ச்சனா அழ குழந்தையை மோகனாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தனர் உமாவும், அர்ச்சனாவும்.
பாலாவிற்கு இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்க அப்போது தான அறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அவளுடன் சிறிது நேரம் இருந்தவன் பின் தந்தைஇய பார்க்க வந்தான். டாக்டரும் வெளியே வர இவனை பார்த்ததும்,
“மிஸ்டர் சூர்யா, உங்கப்பா ரொம்ப நாளாவே ரொம்ப மன அழுத்தத்துல இருந்திருக்காரு. அவரோட நல்ல நேரம் சிவியர் ஸ்ட்ரோக்ல வச்சிருந்திருக்கும். நல்லபடியா இப்ப காப்பாத்தியாச்சு…” என்று சொல்லி செல்ல அர்ச்சனாவின் முகம் அப்போதுதான் கொஞ்சம் தெளிந்தது.
அவர் நம்பினார், இதுவும் காலங்களின் ஒரு வித கிரகபலன் தான் என்று. கண்டங்கள் விலகும் பொழுது இதுபோன்ற சில கஷ்டங்களை கொடுத்து தான் செல்லும் என்று அவர் நினைத்தார்.
“சூர்யா பாலா கண்ணு முழிச்சாச்சு. உன்னை தான் கேட்கறா…” என்று வெற்றி வந்து சொல்ல,
“சூர்யா, பாலாட்ட அப்பாவுக்கு இப்படின்னு எதுவும் சொல்ல வேண்டாம். கேட்டா ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ…” என்று அர்ச்சனா சொல்லியனுப்ப சூர்யா அவளறைக்குள் செல்லவுமே அனைவரும் வெளியேறிவிட்டனர்.
பாலாவின் அருகே அவளின் கைவளைவிற்குள் குழந்தையை படுக்க வைத்திருக்க அவளை பார்த்தபடி வந்தமர்ந்தவன் கைகளுக்குள் அவளின் கையை வைத்துக்கொண்டு மகளையும், மனைவியையும் மாறி மாறி பார்த்தான்.
“எத்தனை வித்தியாசம்? கண்டுபிடிச்சாச்சா?…” என பாலா சற்றே கேலி குரலில் கேட்க,
“ஹ்ம்ம், இன்னும் ஃபுல்லா கண்டு பிடிக்கலை…” என சிரித்தவன் கண்ணீர் போங்க சிரித்துக்கொண்டே இருந்தான். அப்படி ஒரு சிரிப்பு. அப்படி ஒரு மகிழ்ச்சி.
அவனின் தவிப்புகளுக்கு எல்லாம் பரிசாக இதோ ஒரு சிறகில்லா தேவதை கையை காலை ஆட்டிக்கொண்டு பொக்கைவாயில் எச்சில் மின்ன அவனை பார்த்து புன்னகைத்தது.
“அப்படியே உன்னை மாதிரியே இருக்கா இல்ல…” என சூர்யா சொல்ல,
“அப்படியா?…” என குழந்தையை பார்த்தாள் பாலா.
“எனக்கு அப்படி பார்க்க தெரியலையே. அப்படியேவா இருக்குது. குழந்தை குழந்தை மாதிரியே இருக்குது…” என பாலா உத்து உத்து பார்க்க சூர்யாவிற்கு ஒரே சிரிப்பு பாலாவின் ஆராய்ச்சியில்.
பின் ஒவ்வொன்றாய் அவளுக்கு வரைபடம் போல சொல்லி சொல்லி காண்பித்தபடி இருந்தான்.
மேலும் இரண்டுநாட்கள் அங்கேயே இருந்துவிட்டு அன்று டிஸ்சார்ஜ் செய்ய அதற்கு முதல்நாள் மாலை தான் கோபாலசுவாமி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
பாலா கேட்டதற்கு அவர் கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்லிவிட அவளும் மேலும் கேட்கவில்லை. ஹாஸ்பிட்டலில் இருந்து நேராக பிளாட்டிற்கு தான் செல்ல இருக்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைத்திருக்க சூர்யா தங்களின் வீட்டிற்கு போகவேண்டும் என்று சொல்லிவிட்டான்.
தந்தைக்கும் உடல்நிலை சரியில்லை. திருமண வயதில் தங்கை வேறு. இனி தானும் தனியாக இருந்தால் நன்றாக இருக்காதென்று அவன் முடிவெடுத்திருக்க காரணமே கேட்காமல் பாலாவும் சம்மதிருத்திருந்தாள்.
“எங்கனாலும் எனக்கு ஓகே. நீ கூட இரு. அது போதும்…” என்ற லட்சணத்தில் இருந்த அவளின் சம்மதத்தில் சூர்யா முறைத்தான்.
“உன்னை விட்டு எங்க போவேன்னு இப்படியே சொல்லிட்டு இருக்க?…” என கேட்க,
“போனீங்க தான? அம்போன்னு விட்டுட்டு போனீங்க. அதுவும் அப்படி ஒரு நிலைமையில…” என அவனை சொல்லி சொல்லி காண்பிக்க,
“ஏன்டி வருஷமெல்லாம் இதை சொல்லுவியா? என்னவோ காதலிச்சு கைவிட்டவன் மாதிரி இப்படி பேசிட்டு இருக்க? எவனாச்சும் முன்னப்பின்ன தெரியாதவன் காதுல விழுந்தா என்ன நினைப்பான் என்னை?…” என்று பொறும,
“என்புருஷனே நான் என்ன நினைப்பேன்னு நினைக்கலை. எவன் என்ன நினைச்சா எனக்கென்ன?…” என்பவளிடம் அதற்கு மேலும் வாதாடமுடியாமல் தான் வாயை மூடுவான்.
இப்படியே நித்தம் ஒரு ரகளையும், சந்தோஷமும் கொஞ்சலுமாக அவர்களின் இனிமையாய் இல்லறம் நகர்ந்தது.
வீட்டிற்கு வந்த பின்பு தன கோபாலசுவாமிக்கு உடல்நிலை சரியில்லாததே பாலாவிற்கு தெரியவந்தது. மோகனாவும் அங்கேயே இருந்து மகளை பார்த்துக்கொண்டார்.
பாலாவிற்கு சூர்யாவின் மீது இப்படி ஒரு கோபமென்றால் சூர்யாவிற்கு மோகனாவின் மீது ஒரு நம்பிக்கையின்மை. அதனால் அங்கே அனுப்ப மறுத்துவிட்டான். யார் பேச்சும் அவனிடம் எடுபடாமல் போக பாலாவிடம் சென்றால்,
“அவர் சொல்றது தான் சரி…” என சூர்யாவின் பக்கமே அவளும் பேசினாள்.
குழந்தைக்கு பெயர்சூட்டுவிழாவும் சிறப்பாக செய்துமுட்டித்தனர் உறவுகள் மத்தியில். நாட்கள் செல்லவும் உறவுகள் எல்லாம் மீண்டும் தேடி வந்திருக்க விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தீக்ஷிர்த்தி (கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு) என்னும் பெயரிட்டு தீக்ஷா என்று அழைத்தனர்.
உருவம் பாலாவை உரித்து வைத்திருந்தால் குணங்கள், செயல்கள், நடை உடை, பாவனை எல்லாம் அப்படியே சூர்யாவை கொண்டு இருந்தது. அதில் அவனுக்கு தான் பெருமை பிடிபடவில்லை.
மகளை அப்பொழுதே தன்னை போலவே ஒரு மெக்கானிக் மேக்னேட்டாக தான் மாற்றுவேன் என்று சூர்யா சொல்ல பாலா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கிளம்புவாள்.
அடுத்து அஸ்வினிக்கும் வருணின் சொந்தத்திலேயே ஒரு மாப்பிள்ளை அமைய அவளின் திருமணமும் நல்லவிதமாய் நடந்தேறியது.
மொத்த குடும்பத்திற்கும் தீக்ஷா ஒருத்தியே செல்லமாக அவளின் செல்லம் வெற்றி. வெற்றி என்றாள் பாலாவை போலவே குழந்தைக்கும் அத்தனை பிரியம். அதனோடு வெற்றியின் மகன் அபிலாஷ் சிறந்த தோழன். சில மாதங்களே இடைவெளி என்றாலும் இரட்டையர் போல ஒரு பிணைப்பு.
கோபாலசுவாமியின் உடல்நிலை முன்பை போல இல்லாவிடிலும் சிறிது நலிந்தே இருக்க அவர் எந்தவித ஜாதக வேலைகளையும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்.
சூர்யபாலாவின் காலநேரங்கள் அடங்கிய அந்த புத்தகம் இப்பொழுது கோபாலசுவாமியிடமிருந்து மோகனாவின் கைக்கு இடம் மாறி இருந்தது.
“குழந்தை பிறந்த நேரம் பெத்தவங்க ஓஹோன்னு செழிம்பா இருப்பாங்க. எந்த பிணியும் அண்டாது. எல்லாமே திருஷ்டியா கழிஞ்சிருச்சு…” என்று சொல்ல கேட்டு நிம்மதியானார் மோகனா.
மோகனா இப்போது ட்ராவல்சை தெரிந்த ஒருவருக்கு கொடுத்துவிட்டு இங்கே சிறிதாய் மீண்டும் துவங்கி இருந்தனர். அதற்கு வெற்றியும், சூர்யாவும் உதவி புரிந்தனர்.
இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் அக்கா என்று சூர்யாவும் அழைக்கவில்லை. பாலாவும் அழைக்க விடவில்லை. அதற்கே இன்னும் பஞ்சாயத்து தான்.
அக்காவா மனைவியா என்று வரும் போது கொஞ்சமும் யோசிக்காமல் பாலா பக்கம் நின்றவன் அத்தை என்று மட்டும் அழைப்பதில் இன்னும் போக்கு காட்டியபடியே இருந்தான் பாலாவிற்கு.
அதற்கென்றே அவனை தனியாக வைத்து செய்வாள் பாலா. வழக்கம் போல அடஹியும் தூக்கி சுமந்தபடி புன்னகையுடன் தான் கடந்துவிடுவான். இன்னும் அவனுக்கே நம்பமுடியாதது அவனின் மாற்றம்.
ஏழு வருடங்கள் கடந்துவிட்டது…
எறும்பு கூட்டத்தில் நகர்வதை போல அந்த நெரிசலான சாலையில் மெல்ல மெல்ல கார் ஊர்ந்து செல்ல ஜன்னலில் கொட்டிக்கொண்டிருந்த பனியை கைகளில் பிடித்து பாலாவின் மேல் புன்னகையுடன் போட்டு அவளை சீண்டினான் சூர்யா.
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
என்றபடி பாலாவை நெருங்கி அமர அவனை தள்ளிவிட்டவள் இன்னும் ஜன்னலின் ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டு,
“சூடான இடம் தான? ஊருக்கு வாங்க சூடா தரேன்…” என்று மல்லுக்கு நின்றாள்.
மழையென பனி கொட்டும் அந்த குளிர் பிரதேசத்தில் அறைக்குள் நுழைந்ததுமே தன்னுடைய தெர்மெல் வியரை கழற்றியபடி சூர்யாவை முறைத்தாள் பாலா.
“இன்னும் எதுக்குடி முகத்தை தூக்கிவச்சுட்டு சுத்தற? அதான் வந்துட்டோம்ல…”
“வந்துடோம்ன்னா? இங்க எனக்கு சாப்பாடு எதுவுமே பிடிக்கலை. சுத்தமா நல்லா இல்லை. அதோட இந்த குளிர். எனக்கு தானகவே முடியலை. வந்து ரெண்டு நாளாச்சு. கிளம்புவோம். ப்ளீஸ். தீக்ஷாவை பார்க்கனும்…”
“அவங்க தான் ஆன்மீக சுற்றுலால இருக்காளே. இப்ப போனாலும் நாம அங்க தனியா தான் இருப்போம்…”
“என்ன தனியா? பொட்டிக் வேற அம்போன்னு விட்டு வந்துட்டேன். ஆரம்பிச்சும் குடுத்துட்டு அதை ஒழுங்கா நடத்த விடறீங்களா?…” என சண்டை பிடிக்க,
“முதல்ல என்னை பாரு. அப்பறமா பொட்டிக் பார்க்கலாம்…”
“என்ன பார்க்கலை? எல்லாம் பார்த்தாச்சு. பார்த்தவரைக்கும் போதும். எனக்கு என் பொண்ணை பார்க்கனும்…” என சிணுங்கியபடி அவனின் மார்பில் குத்தியவளை சாய்த்துக்கொண்டவன்,
“எனக்கு என் பொண்ணு மேல பாசமே இல்லாத மாதிரி ரியாக்ட் பண்ணாதடி. உன்னை விட என் பொண்ணு என்னை தான மிஸ் பண்ணுவா…” என்று பெருமையாக சொல்ல,
“ஆமாமா, அப்படியே உங்களை மாதிரி வளர்த்து வச்சிட்டு தேடாம என்ன செய்வா…” என முணுமுணுக்க அட்டகாசமாய் சிரித்தான் அவன்.
ஆம், தீக்ஷா பிறந்ததில் இருந்து அப்பா பிள்ளை. அப்படியே அவனின் ரசனைகள் எல்லாம் அவனிடத்தில் இருந்து மகளிடம் இடம் மாறி இருந்தது.
இந்த வயதிலேயே அப்பாவை போல மெக்கானிக் சம்பந்தமான ஈடுபாடுகள் மகளிடம் அதிகம் இருக்க அதை இன்னும் மேருகேற்றினான். அவளின் ஆர்வத்தை இன்னும் ஊக்குவித்தான்.
“மெக் மகளும் மெக்…” என்று சொல்ல,
“மெக் தான்ப்பா கெத்து…” என்பாள் மகளும்.
இருவரும் சேர்ந்து பாலாவை திணற திணற வெறுப்பேற்றுவார்கள். பாலாவுக்கும் அதில் உவகை தான் என்றாலும் காட்டிக்கொள்ளாததை போல இருந்துகொள்வாள்.
இதோ தாத்தா பாட்டிகளுடன் சேர்ந்து சுற்றுலாவிற்கு கிளம்பிவிட, அவர்களுடன் ஜெயஸ்ரீ தன் மகனுடன் சேர்ந்துகொள்ள, பேக்டரியை வெற்றி தலையில் கட்டிவிட்டு பாலாவுடன் மணாலிக்கு கிளம்பி வந்துவிட்டான் சூர்யா.
“ஏன் பாலா உனக்கு இங்க பிடிக்கலையா?…” என கேட்டுக்கொண்டே பால்கனி கதவை திறந்து வெளியே வர அவர்கள் மேல் பனிமழை பொழிந்தது.
“அய்யோ குளிருது சூர்யா, உள்ள போகலாம்…” என பாலா அவனை தள்ள தனக்குள் இறுக்கமாய் அணைத்துக்கொண்டவன் அப்படியே ஒரு செல்பியை எடுக்க,
“நேரங்காலமே இல்லையா? நான் போய் ஜெர்க்கின் போட்டுட்டாச்சும் வரேன்…” என்றவளை விடாமல் இன்னும் நான்கைந்து செல்பி எடுத்த பின்பே பிடியை தளர்த்த,
“உள்ள வா, மொத்தறேன்…” என்றுவிட்டு உள்ளே சென்று ஹீட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டாள்.
எடுத்த போட்டோவை வெற்றிக்கு அனுப்பி வைத்தவன் அதன் பின்னரே உள்ளே வந்தான்.
“இங்க பாரு, நே இங்கயும் போ. எப்படியும் சுத்து பாரு. மனுஷன் இருக்கற நிலைமை புரியாம போட்டோ அனுப்பிட்டு இருந்த பார்த்துக்கோ. மனுஷனாடா நீ?…” என வாட்ஸாப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு கடுப்பாகும் ஸ்மைலிகளையும் வரிசையாக அனுப்பியவன்,
“நீ வர வரைக்கும் உன் நம்பர் ப்ளாக் டா. அப்ஷியலா எது சொல்றதா இருந்தாலும் பாலா போன்ல சொல்லிக்கறேன். பொண்டாட்டியும், புள்ளையும் கோவிலுக்கு அனுப்பிட்டு இங்க இருத்தன் ஒத்தையில இருக்கேன்ற இரக்கம் இல்லாம. போடா டேய்…” என்றவன் ஆஃப்லைனிற்கு சென்றுவிட,
“இப்ப வெற்றி மாமாவ எதுக்கு வெறுப்பேத்தறீங்க?…” என்று எழுந்து வந்தவள் பால்கனி கதவை மூடிவிட்டு அவனுக்கருகே வந்து கேட்க,
“இதுக்கு தான். சும்மா சும்மா என்ன மாமா?…” என்று அவளிடம் வம்பிழுக்க,
“நானும் அப்படித்தான். மாமா சொன்னதால உங்களை கல்யாணம் பண்ணேன். ஞாபகம் இருக்கட்டும்….”
“எந்த ஒரு காரணம் தான் நானும் அவனை சும்மா இத்தோட விட்டேன் அதுவும் ஞாபகம் இருக்கட்டும்…” என அவர்கள் இதழ்கள் தான் மாற்றி மாற்றி மாற்றி சண்டையிட்டுக்கொண்டு இருக்க ஒருவரின் அணைப்பிற்குள் ஒருவர் கட்டுண்டு போயிருந்தனர்.
“பாலா…” என்ற அவனின் இதழ்கள் அவளின் நாமத்தை உச்சரிக்க,
“பாப்பாவை கூட்டிட்டு வந்திருந்தா அவளும் என்ஜாய் பண்ணிருப்பா தானே?…” என மீண்டும் அவள் கேட்க,
“அவளை கூட்டிட்டு வந்து உன்னை பார்ப்பேனா? இல்லை அவளை பார்ப்பேனா? அவ வளரட்டும். கூட்டிட்டு போகலாம்…” என்று சொல்ல,
“இது போங்கு. பிராட். பிராட். இன்னும் உங்களுக்கு பயம். எனக்கு தெரியாதா என்ன?…” என்று புன்னகையுடன் அவனின் கைகளுக்குள் கரைய ஆரம்பிக்க அவளை மேலும் பேசவிடாமல் அவள் அதரங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தான் வேகமாய்.
கணிக்கப்பட்ட கட்டங்களின் கட்டுக்குள் நிற்காத இந்த கொள்ளைநிலாவை கொள்ளையடிக்க ஜாதகங்கள் எத்தனை முயற்சி செய்தாலும் அதனை தனது அன்பு என்னும் வேலியிட்டு தனது வாழ்க்கை என்னும் வானத்தில் உலா வரும் நிலவை காத்துக்கொண்டே தான் இருப்பான் அந்த சூரியன்.
இருவரின் மோனநிலையை கலைக்கவென்று சூர்யாவின் எண்ணிற்கு வீடியோ காலில் வந்தாள் மகள் தீக்ஷா.
“பொண்ணு டிஸ்டர்ப் பண்ணா மட்டும் முகம் எல்லாம லைட் போட்ட மாதிரி ஆகிடும் மெக்குக்கு…” என சிரித்தபடி போனை எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தவள் மகளிடம் பேச ஆரம்பிக்க,
“ஹாய் ப்பா, ம்மா…” என்றவள் அன்று வெளியே சென்றுவிட்டு வந்த கதைகளை கோவிலில் பார்த்தவற்றை அன்றைய நிகழ்வுகளை எல்லாம் அப்படியே இங்கே ஒளிபரப்பிக்கொண்டிருக்க சுவாரஸியம் மிகுந்த முகத்துடன் மகளின் பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்தனர் அந்த ஆதர்ஷ தம்பதிகள்.
நிறைவுற்றது