நிலா – 9
வெகுநேரம் சூர்யா உள்ளேயே இருக்க பாலாவிற்கு வாஷ்ரூம் செல்ல முடியாமல் அவனுக்காக காத்திருந்தவள் பின் எழுந்து சென்று கதவை தட்டிவிட்டாள்.
“என்ன?…” என்றான் உள்ளிருந்தே.
“கை கழுவனும். அப்பறம் நானும். நான் உள்ள வரனும்…” என சொல்ல,
“இரு வரேன்…” என்றவன் எழுந்து தண்ணீரை நிறுத்திவிட்டு வேறு உடையை மாற்றி தலையை துவட்டியபடி வெளியே வந்தான்.
“சாப்ட்டியா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்பதோடு சென்றுவிட்டாள் அவனை தாண்டிக்கொண்டு.
“ப்ச், இவக்கிட்ட போய் கேட்டேன் பாரு…” என நொந்துகொண்டவன் சென்று தனக்கு எடுத்து வைத்து சாப்பிட்டான்.
பசி இருந்தும் உண்ணமுடியவில்லை. தொண்டையில் குத்திய முள்ளாக தன் செய்கை உறுத்தியது. சாப்பிடும் பொழுது விரல்கள் அவனிதழ்களில் உரச அவன் நினைவுகள் இங்கேயே இல்லை.
“மோசமான ஆளாகிட்டடா சூர்யா. புத்தி சரியில்லை உனக்கு” என்று சாப்பிட்ட கையாலேயே அவனின் வாயிலேயே அடித்துக்கொள்ள கதவை திறந்துகொண்டு வந்த பாலா பார்த்தது இதைத்தான்.
அந்த சத்தத்தில் சூர்யா அவளை திரும்பி பார்க்க வாயோடு சேர்த்து அவனின் மீசையெல்லாம் சாம்பாரும், தேங்காய் சட்னியும் ஒட்டியிருக்க,
“பேரு பெத்த பேரு. மெக் கெத்துன்னு ஓவர் ஸீன். ஒழுங்கா சாப்பிட கூட தெரியலை…” என்று வாய் கிடக்காமல் பாலா வம்பிழுத்தாள். அதில் சுள்ளென முறைத்தவன்,
“ஒய், என்னடி வாய் நீளுது? அவ்வளவு பயம் விட்டு போச்சு இல்ல…” என்று முறைத்தான்.
“எனக்கெதுக்கு உங்க மேல பயம்? நான் என்னைக்கு பயந்தேன்? என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சீங்களா? ரப்பர் பந்த கிழிச்சு விட்டு காத்தை பிடுங்கிவிட நான் என்ன மெக்கா?…” என்று பாலா சீண்டி பேச,
“அப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பயந்தது யாராம்? இப்போ சொல்லு? வாங்கினது பத்தாது போல?…” என்று சொல்ல கப்பென்று வாயை மூடியவள் அவனை முறைத்தாள்.
சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு வந்த ட்ரேயில் மொத்தமாய் வைத்தவன் அதனை எடுத்து அறைக்கு வெளியே வைத்துவிட்டு கீழே கிட்சனுக்கு இன்டர்காமில் அழைத்து எடுத்து போகும்படி சொல்லியவன் தன் மொபைலுடன் அமர்ந்துகொண்டான்.
ஆனால் அதனை பார்க்காமல் வெறுமனே கையில் வைத்து சுற்றிக்கொண்டு இருந்தவனுக்கு உறக்கம் தான் வரும் வழியை காணவில்லை.
எதிரே அமர்ந்திருந்தவள் அந்த அறையை மெதுவாய் சுற்றி பார்த்தபடி பார்வையை ஓட்ட, அவளின் செய்கையை கண்டும் காணாமல் கவனித்திருந்தவன் பின் மெலிய குரலில் கேட்டான்.
“உனக்கு தான் என்னை பிடிக்காதே? அப்பறம் என்ன? எப்படி? எப்படி சரின்னு சொன்ன?…” என்றான் சூர்யா.
கேட்கவேண்டுமென்று நினைக்கவில்லை என்றாலும் சற்றுமுன் நிகழ்ந்துவிட்ட அனர்த்தத்தின் சுவடுகள் மாற வேண்டுமே என பேச்சை துவங்கினான்.
“மாமா சொன்னாங்க. ஓகே சொன்னேன்…” என்று பாலா அலட்டிகொள்ளாமல் தோள் குலுக்க இப்போது மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் புகையை கக்கியது.
“என்னது? அவன் சொன்னான்னு கல்யாணம் செஞ்சியா? அவன் என்ன சொன்னாலும் செய்வியா நீ?…” என்றான் கோபமாய்.
“ஆமா, செய்வேன். எப்படினாலும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல, இல்லை என் படிப்பு முடியவுமே கூட எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்திருப்பாங்க. என்ன ஒண்ணு இது அன்எக்ஸ்பெக்ட்டடா நடந்தது….” என்று சொல்ல,
“இதுவுமே நீ நினைச்சிருந்தா மாத்திருந்திருக்கலாம்…” என்றான் குறையாத ஆதங்கத்தோடு.
“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை? கல்யாணத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆனா பிரிய கூட செய்யலாம்னு சொன்னீங்க. இப்பவும் இப்படி? ஓகே, வெல். என்னை வெற்றி மாமாவை வர சொல்லி அனுப்பிருங்க. போய்டறேன்…” என்றாள் கோபமாக.
“நான் அனுப்பறதா? என்ன விளையாடறியா? உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிவைக்க நினைக்கிற நீ?…” என பாலாவின் பேச்சில் கோபமாய் அவன் எழுந்து நிற்க கொஞ்சமும் பயமற்ற பார்வை பார்த்தாள் அவனை.
“உனக்கு தான் என்னை பிடிக்காதேன்ற எண்ணத்துல தான் சொன்னேன். உன்னால நான் இருக்கற இடத்துல இருக்கறதையே வேண்டா வெறுப்பா நினைப்ப நீ. உன் வீட்டுக்கு வந்தாலே அத்தனை கோபம் வரும். உன்னால என்னோட லைப் லாங் இந்த ரூம்ல இருக்க முடியுமா?…”
“உனக்காக தானே யோசிச்சேன். இவளுக்கு நம்மளை சுத்தமா பிடிக்காதே. பிடிக்காத என்னை கல்யாணம் செஞ்சுட்டு இவ ஏன் அவஸ்தை படனும்? என்னால மோகனாக்காவோட பொண்ணு வாழ்க்கை எந்த விதத்திலையும் பாதிக்கப்பட கூடாதுன்னு நினைச்சா ரொம்ப தான் பேசற…”
“எங்க சொல்லு, எப்போ நாம நல்லா பேசிருந்திருக்கோம்? நான் சைலண்டா இருந்தா நீ தலைக்கு மேல போவ. நீ அமைதியா இருந்தா எனக்கு பொறுக்காது. இப்படி சுத்தமா ஒட்டாத குணத்தோட என்னனு வாழறதாம்?…” என்றான் வெறுமையாய்.
ஏனென்றே தெரியாத ஒரு தவிப்பு மனதினுள். தான் பேசியது, கெஞ்சியது அத்தனையும் அவளுக்காக தான் என்று அவளுக்கு புரியாதா? புரிந்து கொள்ளமாட்டாளா? என்னும் பிரயாசை.
தனக்காக பேசியிருப்பான், தனக்காக பார்த்திருப்பான் என்று காலை பேசும் பொழுதே ஓரளவு பாலா யூகித்தது தான். ஆனாலும் அவன் சொல்ல கேட்க மனதிற்குள் ஈரம் பூத்ததென்னவோ உண்மை.
ஆனாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளத்தான் பிரியப்படவில்லை. அப்படி என்ன இவனுக்கு இத்தனை கோபம்? என தோன்றியது.
“ஆமா பிடிக்காது. சுத்தமா பிடிக்காது. இப்போ என்ன?…” என்றாள் பட்டென்று.
வேகமாய் அவளருகே வந்தவன் அவளின் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தில் பார்வையை பதித்தான்.
“அப்பறம் எதுக்கு கழுத்தை நீட்டி இதை வாங்கிட்ட?…” என்றான் குனிந்து அவளின் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை எடுத்து பிடித்து அவளுக்கு காண்பித்து.
முகத்தில் ஆயிரம் உணர்வின் ஜுவாலைகள். ஏன் எதெற்கென என்று தெரியாத கோபம். அவனை அவளுக்கு பிடிக்காதென்று தெரியும்.
ஆனாலும் இதோ இப்போது அவனின் மனைவியாய் அவனின் அறையில் அவனின் படுக்கையில் அமர்ந்துகொண்டு அவள் சொல்லியது அவனை குத்தியது.
“நீங்க சொன்னதை தானே நானும் சொன்னேன். இதுல எதுக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு?…” என்றவள் அவனின் கையையும் அவனையும் மாறி மாறி பார்க்க அப்படியே அவளருகே உட்கார்ந்தான் அவன் வேண்டுமென்றே.
அத்தனை வீம்பு. ‘இவள் பார்த்தால் நான் விட்டுவிட்டு செல்ல வேண்டுமோ?’ என்று அப்படியே மாங்கல்யத்தை பிடித்தபடி இருந்தவனின் பெருவிரல் அதை லேசாய் வருடியது.
“ஆமா, உங்களை, உங்களோட அந்த மெக் கெத்து, மத்தது வெத்துன்ற அகம்பாவம் புடிக்காது. அப்படி என்ன திமிர் உங்களுக்கு. இந்த உலகத்துல நீங்க மட்டும் தான் அதிமேதாவியா? என்ன ஒரு கர்வம் உங்களுக்கு? சும்மா யாரை பார்த்தாலும் அத்தனை அலட்சியம். அதான் புடிக்காது…” என்று சொல்ல அவனின் பார்வை அவளில் நிலைத்தது.
“எங்கப்பா வெறும் பத்தாங்க்ளாஸ் தான். பாஸ் கூட பண்ணலை. எந்த படிப்பும் இல்லாமலே அவரோட குடும்பத்தை கௌரவமா சந்தோஷமா வச்சிருந்தார். எந்த படிப்பு குடுத்துச்சு அவருக்கு இந்த தன்னம்பிக்கையை? படிச்ச படிப்புல இல்லை மதிப்பு. எப்படி வாழ்றோம்ன்றதுல தான் இருக்குது…”
“ஒத்துக்கறேன் பர்ஸ்ட் டைம் நீங்க வீட்டுக்கு வந்தப்போ உங்களை நான் இன்சல்ட் பண்ணிட்டேன். ஹர்ட் பண்ணிட்டேன்னே வச்சுக்கோங்க. அந்த வயசுல அது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியலை. ஆனா நீங்க பெரியவங்க தானே? உங்களுக்கு தெரியும் தானே?…”
“அப்போ அந்த வயசுல உங்களுக்கே அந்த மெச்சூரிட்டி இல்ல. என்கிட்டே மட்டும் எப்படி நீங்க எதிர்பார்த்தீங்க?…” என கேட்க சூர்யாவிடம் பதில் இல்லை.
‘இவ என்ன இத்தனை பேசறா? இனி இவ பேச, நான் கேட்க இதான் என்னோட தலையெழுத்தா?’ என அவளை பார்த்தபடி இருந்தான்.
அவளின் குற்றம் சாட்டுதலில் இருந்த உண்மை புலப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள மனம் சண்டித்தனம் செய்தது.
“எனக்கு என் மாமானா இஷ்டம். அவர் வர்ரதோ எப்போவோ தான். அதான் அப்படி செஞ்சுட்டேன். ஆனா பதிலுக்கு நீங்க பண்ணுனீங்க பாருங்க…” என சொல்ல சத்தியமாய் அவனுக்கு தன் முகத்தை எங்கே கொண்டு ஒளித்துவைப்பது என்றே தெரியவில்லை.
“அதுதான் அடுத்தடுத்து முட்டிக்க காரணமா கூட இருக்கலாம். ஆனா அதென்ன உங்களுக்கு தான்ற திமிர்? வேற யாருமே இந்த உலகத்துல புத்திசாலி இல்லை, நீங்க மட்டும் தான் ஜீனியஸ்ன்னு நினைப்போ?…” என்று அடுத்த தாக்குதலை ஆரம்பித்தாள்.
“என்ன?…” என்றான் கோபமாய். அவன் கையில் இருந்த திருமாங்கல்யத்தை அப்படியே விட்டவன்,
“என்ன விட்டா பேசிட்டே போற? என்ன பண்ணினேன்?…” என்றான் கடுப்புடன்.
“என்ன பண்ணலை? உங்களுக்கு உங்க படிப்பு உசத்தினா எனக்கு என்னோடது. நான் ஏன் உங்க பேச்சை கேட்கனும்? எனக்குன்னு ஆசை இருக்கும் தானே? நான் ஆசைப்பட்டதை படிக்கிறதுல என்ன தப்பு இருக்குது? எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா என்னை டெய்லர்ன்றதும், டிரம்முன்றதும்…”
பாலா சொல்லவும் உட்சபட்ச அதிர்ச்சியே அப்போது தான் அவனுக்கு. ‘இவளுக்கு எப்படி தெரியும்?’ என யோசித்தவனுக்கு அவளுக்கு சரிக்கு சரி அப்போது பதில் கொடுக்க முடியவில்லை.
“மத்தவங்களை பாடிஷேமிங் பன்றது தப்புன்னு தோணலையா? நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன?…” என்றாள் வெடுக்கென்று.
“ப்ச், இப்ப நீ சண்டை போடனும்னே இருக்கியோ?…” என்றான் பேச்சை மாற்றும் விதமாக.
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னால நீங்க என்ன பண்ணுனீங்க? கேட்டதுக்கு தான் பதில் சொல்றேன்…” என்றவள்,
“உங்களுக்கு உங்க படிப்பு மேல எவ்வளவு கர்வமும் இருக்கட்டும். அதே மாதிரி என்னோட படிப்பு மேல எனக்கு. என்னோட பாஷன் வேற. உங்க பாஷன் வேற. குட்டிகரணம் அடிச்சாலும் உங்க கார் கம்பெனி ஸ்டரியரிங் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அதே மாதிரி தலைகீழா நின்னாலும் நான் டிஸைன் பன்ற ட்ரெஸ்க்கு ஒரு ஹூக் தைக்க கூட உங்களால முடியாது…”
“எதே நான் ஹூக் தைக்கனுமா?…” என்றான் மற்றதெல்லாம் விட்டுவிட்டு.
“இதான், இந்த கோபம் தான் எனக்கு சுத்தமா ஆகறதில்லை. நான் என்ன சொன்னேன், எதுக்கு சொன்னேன்றதை மறந்துட்டு இதுக்கு குதிக்கறீங்க. உங்களுக்கு புரியவைக்க என்னால முடியாது. நான் டயர்ட்…” என்றவள் அப்படியே சரிந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டாள்.
“குட்டச்சி பேசறதெல்லாம் பேசிட்டு எனக்கு புரியலன்றா…” என பல்லை கடித்தான்.
“நான் ஹைட்டா இருந்தா என்ன பன்றதா இருக்கீங்க?…” என போர்வையை விலக்கி திரும்பி கேட்க,
“ஏய்…” என ஒற்றை விரலை நீட்டியவன் அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்துக்கொண்டு அறைக்குள் அங்குமிங்கும் நடந்தான்.
“நீங்க திவ்யாவை கல்யாணம் செஞ்சுக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்களோ?…” என கேட்க,
“ஏய் ச்சீ, என்ன பேசற?…” என்றான் முகத்தை சுளித்துக்கொண்டு.
“நீங்க இவ்வளவு கோபப்படறீங்களேன்னு தான் கேட்டேன்…” என பாலா சொல்ல,
“உன் புத்தில இப்படிதான் ஏடாகூடமா ஓடுமா? கல்யாணம் செஞ்சிக்க இருந்தா உடனே அப்படித்தான் இருக்கனுமா? அப்படி யார் மேலையும் எந்த தாட்டும் எனக்கு இல்லை…” என்றான் இறுக்கமாக.
“இருந்தா தப்பில்லையே. அது என்ன அவ்வளவு பெரிய தப்பா?…” என விடாமல் பாலாவும் வழக்காட,
“போதும், நீயும் உன் பேச்சும். சகிக்கலை…” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.
“இனி இப்படி லூசுத்தனமா பேசி என் கோபத்தை கிளறாம இருக்கறதை பாரு. தனக்கு பிடிச்ச படிப்பை படிச்சா மட்டும் எல்லாம் தெரிஞ்சிரும்னு இல்லை. புரியுதா?…” என எச்சரிக்கும் விதமாய் அவன் சொல்ல,
“எனக்கு டயர்டா இருக்கறதால இதுக்கு நாளைக்கு பதில் சொல்றேன்…” என்றவள் அவனை ஒரு நொடிக்கு மேல் பார்த்திருந்த பாலா பார்வையை திருப்பி கண்களை மூடிக்கொண்டாள்.
உள்ளமோ தடதடவென இரயிலை விட வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. உள்ளங்கை வியர்த்து அவளின் அடிமனதில் பயத்தை அப்பட்டமாய் காண்பித்தது.
வேகமாய் பேசிவிட்டாள் தான். ஆனாலும் அப்படி பேசியிறாமல் பயத்தை அவனிடத்தில் காண்பித்துவிடாமல் இருக்க அவள் பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டியதாக இருந்தது.
அவன் முத்தமிட்டதே பேரதிர்ச்சி என்றால் இன்றே வாழலாம் என்பதை போன்ற பேச்சு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. சூர்யாவை கணவனாக நினைக்க நினைத்தாலும் எத் ஒரு விலகலும் ஒருவித கசப்பும் மனதில் மண்டத்தான் செய்தது.
ஆனாலும் அவனின் திமிர் பேச்சு இவனை இப்படியே விடுவதா என்னும் தன் இயல்பை தூண்டிவிட தன்னுடைய இலகுவான மனநிலையை வலிய கொண்டுவந்தவள் தைரியமாய் பேசி சமாளித்துவிட்டாள்.
இதற்கு மேல் தன்னை நெருங்க அவன் யோசிக்கத்தான் செய்வான் என்று கொஞ்சம் நிம்மதியுடன் இருந்தவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவனின் முரட்டுத்தனத்தில்.
ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள். மூச்சடைத்தது. வாழ்க்கை முழுவதும் இப்படியே போய்விடுமோ என்னும் பயம் கவ்வி பிடித்தாலும் ‘இதையும் தாண்டி சமாளிப்ப பாலா’ என மனதிற்குள் தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.
அதற்கு பாலாவின் மீதான சூர்யாவின் அக்கறை மிகுந்த பேச்சும் காரணமென்றால் மிகையில்லை. திமிர்பிடித்தவன் தானே ஒழிய கேட்டவன் அல்லவே. அவனுக்கான சாதகங்களை தேடி தேடி பட்டியலிட்டது அவளின் மனது.
வெற்றி சொல்லியதால் மட்டுமே இந்த திருமணம் என்றாலும் இதை வெற்றிகரமாய் வாழ்க்கை முழுமைக்கும் நகர்த்தி செல்ல தங்கல் இருவரின் ஒத்துழைப்பும் அவசியம் என உணர்ந்தவள் அன்றைக்கு அதிகமாகவே யோசித்து யோசித்து மனதளவில் களைத்து போனாள்.