சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 13
தொடங்கும் முன், அவளையும் எழுப்பி, “பக்கத்துல உட்கார்ந்து கேளு” என்றான். அவளோ, “படுத்துக்கிட்டே கேக்குறேன், அத்தான்”, விடாது அவன், “எதுக்கு நான் சுவர்கிட்ட பேச, நீ தூங்கவா, உன்ன பத்தி தெரியாதா, என்ட்ட வேலைக்கு ஆகாது, உட்கார்ந்து கேட்கலனா நான் சொல்ல மாட்டேன்” எனவும் வழியின்றி உட்கார்ந்து அவன் மீது சாய்ந்து கேட்கலானாள்.
ஏழு வருடங்களுக்கு முன்…
அந்த ஊரின் மத்தியில் இருந்த ஒரு ஷாப்பிங் மாலின் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்த தம்பதியரைக் கண்ட பீட்டரின் அப்பா ஆரோக்கியசாமி, “எவ்வளவு நாளைக்கு பிறகு அவள பாக்குறேன், பிள்ளைகள கூட்டிட்டு வந்திருக்காங்களானு தெரியலயே” சொல்லி அவர்களைச் சுற்றி கண்களைப் சுழற்றினார்.
அருகில் நின்ற அவரது மூத்தமகன், “அப்பா, யாரப் பத்தி பேசுறீங்க”.
அவனின் அப்பா, “என் சின்ன தங்கச்சிய பத்திதான்”.
அவனோ, “என்னப்பா சொல்றீங்க”.
அவர், “அங்க பாரு, அந்த இடத்துல இருக்கிறது என் சின்ன தங்கச்சியும் மாப்பிள்ளையும், அவங்க பிள்ளைங்க இருக்காங்களானு பாத்தேன், ஒரு பையன் ஒரு பொண்ணுனு கேள்விப்பட்டேன்”
அதற்குள் அவர் போன் அடிக்கவும், “பீட்டர் அந்த கிளைண்ட்தான் போன் பேசுறார், இங்க சத்தமா இருக்கும், நான் வெளிய போய் பேசிட்டு வரேன்” சொல்லி சென்றவரிடமிருந்து பார்வையை தன் அத்தை மாமாவிடம் திருப்பினான். ‘சரி, நம்மளதான் அவங்களுக்கு அடையாளம் தெரியாதே, அத்த குடும்பத்த பத்தி தெரிஞ்சுக்க பக்கத்துல போவோம்’ என்று நினைத்து அங்கு செல்ல, அப்போது ஒரு பையனும் பொண்ணும் அவன் அத்த மாமா அருகில் அமரவும், ‘ஓ அப்பா, சொன்ன பிள்ளைகள் இவங்க தான் போல’ என்று அடுத்த டேபிளில் அப்பெண் தெரியுமாறு அமர்ந்தான்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவன் எத்தனையோ பெண்களுடன் பழகியுள்ளான். ஏன் தன் அத்தை மகளை விட அழகிய பெண்கள் இவனுக்கு பிரபோஸ் செய்தும் உள்ளனர், அப்பொழுது எல்லாம் ஏற்படாத ஒரு உணர்வு அவளிடத்தில் அவனுக்கு உண்டாகவே அவ்வாறு அமர்ந்தான்.
இவன் இருந்த இடத்தில் அவர்கள் பேசுவது துல்லியமாக கேட்டது.
அத்தை மகள், “அண்ணா, பஞ்சு மிட்டாய கொடு, நீயே கையில பிடிச்சுகிட்டு இருக்க”.
அத்தை மகனோ, “அடிப்பாவி, இந்த சேரி தடுக்குது, நீ பிடிண்ணானு சொல்லிட்டு, இப்ப பேச்ச பாரு” என்று சொல்லி பஞ்சு மிட்டாயை அவளிடம் கொடுக்க, அவள் ருசித்து சாப்பிடலானாள்.
அவனின் மாமா, “சின்னப் பிள்ளைய போயி புடவைக் கட்டுன்னா, பாவம் என் பொண்ணு என்ன பண்ணுவா”.
அவனின் அத்தையோ, “பேர்வல்லுக்கு சேலைதான் கட்டனும் சொல்லி புதுசா எல்லாத்தையும் வாங்கி கட்டியிருக்கவ பாவமா, சுடிதார் போட வேண்டியதுதான”.
இந்த கேப்பல பீட்டர், “அட நம்ம முறைப்பொண்ணு காலேஜ் பைனல்ல இருக்கா போல” என நினைத்து, ‘என் அத்த பொண்ணு, எனக்கில்லா உரிமையானு’ நன்றாக அவளை சைட் அடித்தான். ஆனால் அவன் அத்தை மகன் அடுத்து இடியை அல்லவா இறக்கினான்.
அத்தை மகன், “ஸ்கூல்ல கடைசி நாள் ஜாலி இருக்கட்டுமே விடுங்க, சின்னக்குட்டி உனக்கு மார்ச் 3ல தான எக்ஸாம் தொடங்குது, நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பிட்டேனு முகத்த தூக்காம, எக்ஸாம்க்கு ஒழுங்கா படிச்சு, நல்லா எழுது, சரியா?”
பீட்டர் உள்ளுக்குள், “ஸ்கூலா, ஐயோ, என்ன விட ரொம்ப சின்ன புள்ள போலயே, புடவை கட்டியிருக்கவும் பெரிய பொண்ணுனுல நினைச்சேனே, எனக்கும் அவளுக்கும் எட்டு வயசு வித்தியாசம் வருது, இது சரிப்படாது, ஆசைய வளர்த்துகாத பீட்டரு’ என தனக்கு தானே சொல்லி கொண்டு, அங்கிருந்து அகன்று தன் தந்தையிடம் சென்றான்.
தற்போது இதைச் சொல்லவும் நிம்மி, “போங்கத்தான் நீங்க அப்பவே வந்து பேசியிருக்கலாம், எங்க அப்பாயியோட அண்ணனுக்கும் அவங்க மனைவிக்கும் பதினைஞ்சு வருஷம் வித்தியாசம்”.
அவளை முறைத்து, “ஆமா, நான் வந்து பேசுன உடனே படிக்கிற பிள்ளைய கட்டி கொடுத்துருப்பாங்க பாரு” எனவும் அசடு வழிய சிரித்தவள், “சரி சரி மேலே சொல்லுங்க”.
மேல என்னத்த சொல்ல, வேலைய பாக்க மூட்டைய கட்டிட்டு போயிட்டேன், அங்க போனதுக்கப்பறம் பெருசா உன்ன பத்தின ஞாபகம் எதுவும் வரல்ல, எங்க அம்மா பொண்ணு பார்க்குறேனு தொடங்குற வரை. இரண்டு வருஷத்துக்கு பிறகு, ‘நீ இப்ப எப்படி இருப்ப, உன்ன பார்க்கனும்னு தோண ஆரம்பிச்சது, சரி நமக்குதான் அடுத்த கம்பெனி ஜம்பிங்கு இடையில கேப் இருக்கேன்னு, இந்தியாவுக்கு வந்தேன்.
அன்னைக்கு ஷாப்பிங் மால்ல பார்த்தப்ப, உங்க ஊர் எது, என்னனு அப்பாட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டாலும் எப்படி, எங்க பாக்கனு ஒண்ணும் புரியல, சரி குத்து மதிப்பா அந்த ஊருக்கு போயிதான் பாப்போமே, பின்னாடி என்ன செய்யனு யோசிச்சுக்கலாம்’ அப்படினு கிளம்பி உங்க ஊர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்னுட்டேன்.
எதுக்கும் இன்னைக்கு இந்த பக்கம் வரீயானு பார்க்கலாம்னு காலையில ஆறரைக்கெல்லாம் வந்துட்டேன், ஒருவேளை காலேஜ் பஸ் சீக்கிரம் வந்து நான் மிஸ் பண்ணக் கூடாதுல, மணி எட்டு, இன்னும் நம்மளால ஒரு சின்ன தகவலைக் கூட கண்டுபிடிக்க முடியலயேனு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்ப ஒரு ஸ்கூட்டி என்ன தாண்டி போச்சு, திடீருனு அது நின்னு, ‘ஏங்க அந்த பஞ்சு மிட்டாய கூப்பிடுங்கனு’ ஒரு குரல் வரவும், இது அவ குரலாச்சேனு எகிறன மனச அடங்கி பார்த்தா, அதுக்குள்ள பஞ்சு மிட்டாய வாங்கிட்டு வந்து, வண்டி மேல உட்கார்ந்து, ஹெல்மெட்டை கழற்றின பாரு, எனக்கு ஜிவ்வுனு ஏறிருச்சுன்னா பார்த்துக்கோயேன்.
எங்க போய் தேடுறதுனு மலைச்சு நின்னா, அவளே வந்தது மட்டுமில்லாம பஞ்சுமிட்டாய வேற சாப்பிட்டு தரிசனம் தந்தா, ஐயோ, அது செம பீல் தெரியுமா? அப்ப தான் ஒண்ணு தோணிச்சு, பஞ்சு மிட்டாய் சாப்பிடுற அந்த பஞ்சு மிட்டாய நாம சாப்பிட்டா எப்படி இருக்கும்னு’ கதையை கூறிக் கொண்டிருந்தவன் சட்டென்று நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் முகம் நிமிர்த்தி, அன்று நினைத்ததை, இன்று முடித்தான். இந்த இதழ் ஒற்றல் வெகுநேரம் நீடித்தது.
நிம்மி, “அதுனால தான் என்ன பஞ்சு மிட்டாய்னு கூப்பிடுறீங்களா?”
பீட்டர், “எப்பெல்லாம் சாப்பிட தோணுதோ அப்பெல்லாம் அப்படிதான் கூப்பிட தோணுது, குட்டிம்மா” எனவும் “ச்சு, மீதிய சொல்லுங்க” என்றாள்.
அதுக்கப்பறம் என்ன, உன்ன ஃபாலோ செஞ்சு உன்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப நீ காலேஜ் பைனல் இயர்ல இருந்த, இரண்டு வருஷத்துக்கு முன்னாடியாது நீ சேலையில பெரிய பொண்ணா தெரிந்த, இப்ப சுடிதார்ல ரொம்ப சின்ன பொண்ணா தெரிஞ்சுயா, நான் உனக்கு பொருத்தமில்லனு உன்ன தேடி வருவதையே விட்டுட்டேன், ஒரு வாரம் வந்திருப்பேன், ஆனாலும் என்னால தாக்கு பிடிக்க முடியல, இங்க இருந்தாதான உன்ன பாக்க தோணும்னு திரும்ப வெளிநாட்டுக்கு போயிட்டேன்.
இதுக்கு இடையில, அம்மா சில பொண்ணுங்க போட்டோஸ் காட்டினாங்க, நீ எனக்கு இல்லனு புரிஞ்சாலும் அந்த போட்டோஸ் பார்க்க கூட பிடிக்கல. அம்மா, என்ன மாதிரி தான் பொண்ணு வேணும்னு சொல்லு, நாங்க அப்படி பாக்குறோம் சொன்னாங்க, என்ன சொன்னாலும் நீயா இருக்க முடியாதுல்ல.
இந்த நேரத்துல என் ஆபிஸ்ல கூட வேலை செய்ற பொண்ணு என்கிட்ட பிரப்போஸ் பண்ணா, என்னால நம்பவே முடியல, ஏன் அவ பின்னாடி அத்தன பேர் ஜொள்ளு விடுவான்ங்க. அவ சொன்னா, நான் அவள பார்த்து ஜொள்ளு விடலனுதான் பிரபோஸ் செய்தேன்றா. எனக்கோ, நானே ஒரு டைப்பா சுத்திட்டு இருக்கேன், இல்லன்னா கூட பரவாயில்லனு நினைச்சுக்கிட்டேன்.
இதை கேட்டதும் நிம்மி, “இல்லன்னா சொல்றீங்க, அவ பின்னாடி போயிருப்பீங்களோ, கொன்னுருவேன்”
பீட்டர், “ஏய், என்ன நீ, அப்ப என் மனநிலைய சொன்னேன், சினிமால எத்தன நடிகைகள ரசிக்கிறோம், அதுக்காக அவங்க பின்னாடி போயிருவோமா, அப்படிதான் அவளும்”.
நிம்மி, “செம பிகரோ”, பீட்டர், “ம்ம்ம்…ஆமா, ஆனா உலக அழகியாவே இருந்தாலும் பொண்டாட்டினு வந்துட்டா மத்தவங்க எல்லாம் டம்மிபீஸ் தான் புரியுதா, நீ என் ஆச பொண்டாட்டிடி வேற”
அவள், “அப்பப்ப ரீல் சுத்த வேண்டியது, கன்டினிவிடி மிஸ்ஸாகும், பிரேக் விடாம சொல்லுங்க” என்றதும் அவன், “அடிப்பாவி நானா பிரேக் விட்டேன், நடுவுல கேள்வி கேட்டது யாரு” என்றுரைத்து தன் கதையை தொடர்ந்தான்.
அந்த பொண்ணு பிரபோஸ் பண்ணவும், பிரபோஸ் பண்ணாத நம்ம ஆளு எப்படி இருக்கானு தெரியலயே, அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைதான் நாம அவள பாக்க முடியும், அதுக்கப்பறம் சான்ஸே இல்ல, தோணும் போதே போயி பார்த்தறனும் என மனசாட்சி சொல்லவும் பத்து நாட்கள் லீவ் எடுத்து கொண்டு, வீட்டிற்கு சொல்லாம இந்தியா வந்தவன், ஹோட்டலில் தங்கினான்.
அடுத்த நாளே, நான்கு வருடங்களுக்கு முன் அவளைப் பார்த்த அதே பஸ் ஸ்டாண்டுக்கு காலையிலே வந்து காத்திருக்க தொடங்கினான், அப்பவே ஸ்கூட்டில காலேஜ் போனா, அதனால ஒரு ஸ்கூட்டிய விடாம வாட்ச் பண்ணனும், நினைத்து போலவே லேடீஸ் ஹெல்மெட் போட்டு கொண்டு அவனைத் தாண்டி சென்றவளை அடையாளம் கண்டு பின் தொடர்ந்தான். அவள் ஒரு காலேஜ் வாசலில் நிற்கவும், இன்னுமா படிக்கிறா என்று நிமிர்ந்து பார்த்தால் அது பி.எட். காலேஜ். படிக்குறாளா, சொல்லித்தராளானு தெரியலேயேனு உன்ன பார்த்தா, நீ உள்ள போயிட்ட. அதுக்கு பிறகு ஒரு வாரம் உன் பின்னாடியே ஃபாலோ பண்ணினேன்.
அடுத்த நாளும் பஸ் ஸ்டாண்டுல வந்து நின்னா, நீ உங்கப்பா பின்னாடி உட்கார்ந்து வர. அப்ப திடீருனு அந்த பக்கமா வண்டில வந்தவருகிட்ட உங்கப்பா பேசவும், நம்ம சைட் அடிக்க வசதியா இவரு இங்க நிறுத்தியிருக்கானு நெனச்சு மாமாவ பார்த்தா, கூட நின்னவரு என்னோட மேனேஜ்மெண்ட் படிச்ச காலேஜ்மேட்டோட அப்பா. அப்பதான் முடிவு செய்தேன். இப்படி உன்ன ஃபாலோ பண்ணறது சரி வராது, நடக்கிறது நடக்கட்டும், கேட்காமலே இருப்பத விட, கேட்டாதான் என்னனு ஒரு எண்ணம் மனசுல வந்துருச்சு. கூடவே ஒருவேளை கேட்டு இருந்தா கிடைச்சுருக்குமோனு பின்னாடி வருத்தப்படுறத விட எதுக்கும் கேட்டுப் பாப்போம்னு.
உன் பின்னாடி வராம அவர ஃபாலோ செஞ்சு, அப்பவே நம்ம குடும்பத்த பத்தி எல்லாம் சொல்லி, உன்ன பொண்ணு கேக்க அனுப்பினேன். ஏன்னா நம்ம குடும்பத்துக்குள்ள பேச்சு வார்த்த இல்ல, சப்போஸ் ஓக்கேன்னா வீட்ல சொல்லலாம், இல்லன்னா இப்படியே விட்டுருவோம்னு யோசிச்சிருந்தேன். அன்னைக்கு சாயங்காலமே அவரு எனக்கு போன் செஞ்சு, வயசு வித்தியாசம் அதிகமாயிருக்கு வேணாம்னு சொல்றாங்கன்னாரு, எனக்கு ஒரே வருத்தமா போயிருச்சு. இருந்த ஒரே நம்பிக்கையும் போயிருச்சு, லீவ் முடியலன்னாலும் நான் அன்னைக்கே கிளம்பிட்டேன்.
இந்த விஷயத்துக்கு பிறகு, இப்படியே இருந்து என்னாக போகுது, நான் சொல்லாத காதலுக்காக காத்துட்டு இருக்கறத விட, விதிபடி வாழ்ந்துகலாம்னு முடிவெடுத்தேன். அந்த சமயத்துல தான் அம்மா, ஜென்சிய பேசி முடிச்சுட்டோம்னு சொன்னாங்க.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.