அவளே டிசைன் செய்து, அவனுக்காக தைத்துக் கொடுத்திருந்த சட்டையில் இருந்தான்.
ஆகாய நீல வண்ணம் அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. ஒரு தேர்ந்த விளம்பர மாடலை போல நிமிர்ந்து நடந்து வந்தவனின் மேலிருந்து விழிகளை அகற்ற முடியாமல் தத்தளித்தாள் அவள்.
அவனை நிற்க வைத்து தைத்தது போல கச்சிதமாக இருந்த உடையும், நேர்த்தியாக வெட்டப் பட்டு, சீராக பின்னோக்கி வாரப் பட்டிருந்த தலை முடியும், அளவான மீசையும் அவனது முகத்தின் வசீகரத்தை கூட்டியிருக்க, விழிகளால் அவன் தலைக் கோதி, மீசையை இழுத்து, கன்னம் தாங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
நன்றாக இதழ் பிரித்து பற்கள் தெரிய புன்னகைத்து விசிலடித்தான் ராகவன்.
விசிலில் இருந்த இசையை, பாடலை கணித்தவளின் முகம் இன்னுமே மலர்ந்து, சிவந்துப் போனது.
“எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்துக் கிடந்தேன்” மீண்டும் மீண்டும் அதே வரிகளை விசிலடித்து படி அவளை நெருங்கி வந்தான்.
“என்ன பார்வை அது? மனுஷனுக்கு புல்லரிக்குது மது” அந்த ரகசிய குரலில் அவளுக்குத் தான் புல்லரித்தது.
பசும் மஞ்சள் நிற ஜார்ஜெட் சேலையில் அவன் விழிகளை நிறைத்தாள் அவள்.
ஒப்பனையற்ற தெளிவான முகம், புருவ மத்தியில் பளிச்சென்று மஞ்சள் நிற பொட்டு, வகிட்டில் குங்குமம், அத்தனைக்கும் மகுடம் வைத்தது போல பெரிய விழிகளில் அழகாக தீட்டப் பட்டிருந்த கண் மை, மையலாய் மனைவியைப் பார்த்தான் ராகவன்.
தலை முடியை மொத்தமாக அள்ளி, கிளிப்பில் அடக்கி இருந்தாள். ஒரு பக்க தோளில் அலை அலையாய் வழிந்துக் கொண்டிருந்தது கூந்தல்.
அப்படியே அவன் பார்வை கழுத்தில் பதிய, மின்னியது பொன் தாலி சரடு.
பெருமூச்சு விட்டுக் கொண்டான் ராகவன்.
மெல்ல அவளின் கைப் பிடித்தான். மொத்தமாய் அவனுள் அடங்கியது போல சிலிர்ப்பு ஓடி மறைந்தது அவளுள். அதை உணர்ந்து கொண்டவனின் புன்னகை மேலும் விரிந்தது.
“என்ன மது ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்க?” காரை திறந்தபடி அவன் கேட்க,
“உங்களை பார்க்கத் தான்…” என்றாள் அவள்.
“ஓ, சாரி மா. ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா? கால் பண்ணி இருக்கலாம் இல்ல? போர் அடிச்சதா?” மெய்யான கவலையுடன் அவன் கேட்க,
“போரா இல்லையே. கொஞ்சம் மெயில் அனுப்ப வேண்டிய வேலை இருந்தது. அதைப் பார்த்துட்டு இருந்தேன்” கேலியாக சொன்னாள் அவள்.
“பதிலை பாரு. இதுக்கு உங்களை பார்க்க வந்தேன் பெட்டரா இருந்தது.” முணுமுணுத்தான் ராகவன்.
“பதில் தெரிஞ்சுட்டே கேள்வி கேட்டா… அப்படித் தான்..” அவளும் பதிலுக்கு முணுமுணுக்க, இருவருக்குமே சிரிப்பு தான் வந்தது.
“நீங்க இருங்க. நான் ட்ரைவ் பண்றேன்.” ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினாள் மதுமிதா.
சென்னையின் கரடு முரடான சாலைகளில் வழுக்கிக் கொண்டு அவர்களது கார் விரைந்து கொண்டிருக்க, “என்னாச்சு ராகவ்?”
கண் மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தவனிடம் மென்மையாக விசாரித்தாள் மதுமிதா.
முழுதாய் ஒரு நிமிடத்திற்கு பின், “காலையில… ஆபரேஷன் நடந்திட்டு இருக்கும் போதே.. சின்ன பையன் மது.. பத்தொன்பது வயசு தான். காலேஜ் படிக்கற பையன்.. ஓவர் பிளட் லாஸ். என்ன பண்ணியும், பிளட் ஏத்தியும்.. காப்பாத்த முடியல. கண் முன்னாடியே இல்லாம போய்ட்டான்.
பொறுப்பே இல்லாத பசங்க. அப்படி என்ன பைக் ரேஸ் கேட்குது. எல்லாம் காஸ்ட்லி பைக். எப்படி கேட்டதும், யோசிக்காம வாங்கி தர்றாங்க பேரன்ட்ஸ். அவங்களை சொல்லணும்.
அப்படியே நின்று இரவு உணவையும் தயாரிக்க தொடங்கினாள் மதுமிதா.
“தங்கச்சியை பார்த்ததும் உலகத்தையே மறந்திடுவான் இந்த ராகவ். அதான், நானும் என் தங்கச்சியை கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ சொல்லும்மா, என்ன ஹெல்ப் வேணும் உனக்கு?” அவளை தங்கை என்று குறிப்பிட்டு உதய் கேட்க,
உறவு முறையாக இல்லாமல், முதல் முறையாக உளமாற உதயை அண்ணனாக பார்க்கத் தொடங்கினாள் மதுமிதா.
“எந்த ஹெல்ப்பும் வேணாம் ண்ணா. நான் பார்த்துக்கறேன்”
சொன்னாள் மதுமிதா.
இருவருமே சமையலைத் தான் சொன்னார்களா என்ற சந்தேகம் அவர்களுக்குமே இருக்கத் தான் செய்தது.
சுஹாசினி அவளது வீட்டிற்கு கிளம்பி விட, குழந்தைகளை கவனிக்க, மனைவிக்கு உதவ, அங்கிருந்து நகர்ந்து போனான் உதய்.
ஆயா விசாலாட்சி அன்று விரைவாக வந்து விட, அவருடன் இணைந்து சமையலை முடித்தாள் மதுமிதா.
முன்பை போல தயங்காமல், விலகாமல் அனைவருடனும் தன்னால் முடிந்த வரை கலகலப்பாக பேசி, அவர்கள் பேசுவதை கேட்டு என முழுதாக அக்குடும்பத்துடன் ஒன்றினாள் மதுமிதா.
முன் தினம் சரியாக உறங்காததால், அன்றைக்கு சீக்கிரமே ராகவன் தூங்கி விட, வெளியில் சென்று விட்டு வந்த சோர்வில் மதுமிதாவும் வழக்கமான நேரத்துக்கு முன்பே உறக்கத்தை தழுவி இருந்தாள்.
மறுநாள் மாலை காஃபி கோப்பையுடன் ஊஞ்சலில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்த மதுமிதா, அந்நேரம் நிச்சயமாய் கணவனை வீட்டில் எதிர்பார்க்கவில்லை.
“என்ன சீக்கிரம் வந்துட்டீங்க?” அவள் ஆச்சரியமாய் விழி விரித்து கேட்க, பதில் சொல்லாமல் அவள் கைகளில் இருந்த காஃபியை வாங்கி அருந்த தொடங்கினான் ராகவன்.
“அச்சோ, உங்களுக்கு புதுசு போட்டு எடுத்துட்டு வரேன் ராகவ்”
“இதுவே போதும்” கண் சிமிட்டினான். புன்னகையுடன் அவன் தோள் சாய்ந்தாள் அவள்.
அவனோடு இருக்கும் பொழுதுகள் மட்டும், ஏன் இப்படி இறக்கை முளைத்தது போல அதிவேகமாக பறந்து செல்கிறது என எரிச்சலுடன் பல்லை கடித்தாள் மதுமிதா.
நேரம் இரவு பத்து என்றது கடிகாரம்.
அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு, படுக்க சென்று விட, அடுப்படியை ஒதுக்கி, சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அவள்.
மீதமான உணவை குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்து விட்டு, அதன் கதவை மூடியவளின் இடுப்பை வளைத்தது வலிய கரம் ஒன்று.
அப்படியே அவன் மார்பில் சாய்ந்து ஒன்றினாள்.
“அதென்ன எப்ப பார்த்தாலும் சேலை? முந்தானையில் முடியறது இது தானா?” காதில் கிசுகிசுத்தான்.
அவன் கரங்களில் திரும்பி, அவன் முகம் பார்த்தாள்.
“சும்மா தோணுச்சு கட்டினேன். பெருசா காரணம் எதுவும் இல்ல. சேலை கட்டவும், அதை கேரி பண்ணவும் ஈசியா தான் இருக்கு. இன்பேக்ட் கம்போர்ட்டபிளா கூட இருக்கு ராகவ்” அவள் சொல்லிக் கொண்டேப் போக, அந்த சேலையின் வழவழப்பையும், அவளது இடையின் வழவழப்பையும் சோதித்து, ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது அவன் கரங்கள். முடிவில் இடுப்பில் நிலைத்தது.
“நீங்க இந்த நேரம் எங்க கிளம்பிட்டீங்க?” அவன் மார்பில் கன்னம் பதித்து கேட்டாள்.
அப்போது தான், அவன் வேட்டியில் இருப்பதையே கவனித்தாள்.
“ஒரு லாங் ட்ரைவ் போகலாமா மது?” அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.
“நாளைக்கு உங்களுக்கு வேலை ..”
“வேலை, அது தினமும் தான் இருக்கு. அதுக்காக.. பார்த்தா முடியுமா? வா, போகலாம்” அவளை மேலே மறுத்து பேச விடாமல், இழுத்து கொண்டு போனான்.
“யாராவது ட்ரைவ் போக வேட்டியில் வருவாங்களா?” உதடு சுளித்து அவள் கேட்க,
“போதைக்கு மயக்கம் கொடுக்க.. சேலைக்கு பொருத்தமா வேட்டி” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னவன், முடிவில் கண் சிமிட்ட,
“மயக்க டாக்டர்” முணுமுணுத்தாள்.
சத்தமாக சிரித்து காரை நகர்த்தினான் ராகவன்.
மெலிதான தூறல் ஊரை நனைத்துக் கொண்டிருந்தது. பாதி இறக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே மழைக்கு கைக் கொடுத்து கொண்டிருந்தாள் மதுமிதா.
சென்னையின் புறநகர் பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அவர்களது கார். நிமிடங்களில் திருப்பதி நெடுஞ்சாலையில் பயணிக்க தொடங்கி இருந்தனர்.
கனரக வாகனங்களால் நிறைந்திருந்த சாலையில், அமைதியான நீண்டதொரு பயணம். அவள் எதிர்பார்த்திராதது.
வெளியில் கண்ணுக்கு எட்டிய வரை இருளும், மழையும் மட்டுமே இருக்க, உள்ளே ஏ. ஆர். ரஹ்மான் இசைக்க, ஹரிஹரன் உருகிக் கொண்டிருந்தார்.
அந்த ஏகாந்த இரவில், அதுவரை அவர்களுக்கு நடுவில் இருந்த சிறிய மனஸ்தாபம், இடைவெளி காணாமல் போய் இருந்தது.
வீடு திரும்பும் போது மதுமிதா காரை ஓட்ட, ராகவன் முகத்தை வருடிய காற்றுக்கு உறக்கத்தை தந்திருந்தான்.
இருக்கையை நன்றாக பின்னுக்கு சாய்த்து, காலை நீட்டிப் படுத்து, ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான்.
வீட்டை அடைந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்ப மனமில்லாமல் அவனையேப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுமிதா.
இப்படியே படுத்திருந்தால் அவனுக்கு உடல் வலியும், சோர்வும் சேர்ந்துக் கொள்ளும் என்று உணர்ந்து, கீழிறங்கி சென்று, அவன் பக்க கதவைத் திறந்தாள் மதுமிதா.
“ராகவ், ராகவ்..” குனிந்து, தோளை தொட்டு மென்மையாக எழுப்பியவளை, அனிச்சை செயலாக இழுத்து தன் மேல் போட்டான் ராகவன்.
“டையர்ட்டா இருக்கு. தூங்க விடு சோம்பேறி. எப்பவும் சொகுசா படுத்து இருக்கறது. ஒரு நாள் வேலை பாரு. தெரியும்.” தூக்கத்தில் புலம்பினான் அவன்.
“ஆ.. பேச்சைப் பாரு. கார்ல இருக்கோம் ராகவ். வீடு வந்தாச்சு, எழுந்திருங்க”
“ஏன் வீடு வந்துச்சு? அப்படியே போய்ட்டே இருக்கலாம் இல்ல?” தூக்க மயக்கத்துடன் கரகரத்து ஒலித்தது அவன் குரல்.
அவளுக்கும் அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும் போலிருந்தது.
“ம்ப்ச், எழுந்திருங்க” பொய்யாக சலித்து கொண்டாள். கால்கள் வேறு காரில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டிருக்க அசௌகரியமாக இருந்தது அவளுக்கு.
“அதை என் மேல இருந்து எழுந்திருச்சுட்டு.. அப்புறமா சொல்லு போதை.. சட்டமா மேல படுத்துட்டு.. எழுந்திருன்னு மிரட்டினா எப்படி?”
அவன் குரலும், பேச்சும் மீனாய் நழுவி அவள் பாதத்தை குறுகுறுக்க வைத்தது.
“மயக்க டாக்டர்” அவள் மெல்ல முணுமுணுக்க,
“பொண்டாட்டியை மட்டும் முழுசா மயக்க முடியாத டாக்டர்”
இருவரும் பேசிக் கொண்டே காரில் இருந்து இறங்கி, வீட்டிற்குள் சென்றனர்.
இரவு இருவருக்கும் இன்னும் இனிமை சேர்த்தது.
மறுநாளில் இருந்து மீண்டும் தன் ஓட்டத்தை தொடங்கி இருந்தான் ராகவன். அதிகாலை இரண்டு மணிக்கு வந்த அலைபேசி அழைப்புக்கு, பதறி அடித்துக் கொண்டு ஓடினான் அவன்.
“டெலிவரி மது. டிவின்ஸ். நான் உடனேப் போகனும்” அதே தந்தி குரல், உறக்கம் சுமந்த விழிகளுடன் விடை கொடுத்தாள் அவள்.
அன்றிரவு அவன் வீடு வரும் போது பத்து அடித்து ஓய்ந்தது கடிகாரம்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்த மல்லிகைப் பந்தலில் இருந்த பூக்களை பறித்து அவளது கூந்தலில் பொதித்து வைத்து, வாசம் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.
“ராகவ், இந்த ஹாலை ராகவி குட்டீஸ் ரூம் போல ஆக்கிட்டாங்க இல்ல?”
திரைச்சீலைகள் போடப்பட்டு, சோஃபா ஒரு ஓரமாக நகர்த்தப்பட்டு இருக்க, நடுவே குழந்தைகள் விழுந்தாலும் அடிபட்டு விட முடியாதபடி அடர்த்தியான கார்பெட் தரையை பாதுகாத்திருந்தது.
சுவர் முழுவதையும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் அலங்கரித்திருந்தனர்.
“இந்த செட் அப், நம்ம குழந்தைகளுக்கும் கண்டிப்பா பிடிக்கும்” கண்ணில் மின்னலுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள். அலைபேசியில் மூழ்கி இருந்தவன் அதை கவனிக்கவில்லை, காதில் வாங்கவும் இல்லை.
“ராகவ்…” ராகம் இழுத்தாள்.
“ம்ம் மது”
“ராகவி, அவங்களோட புது வீடு பால் காய்ச்சிட்டாங்க தானே? அவங்க இங்கேயே இருக்கப் போறாங்களா? இல்ல, அந்த வீட்டுக்கு போகிற ஐடியா எதுவும் அவங்களுக்கு இருக்கா?”
மிக முக்கியமாக அவள் கருதியது அவன் காதில் விழவில்லை. ஆனால், எதார்த்தமாக அவள் கேட்ட கேள்வி, வில்லங்கமாக, விளக்கமாக அவன் காதில் விழுந்திருந்தது.
“என்ன கேட்ட? இப்போ என்ன கேட்டா நீ? திரும்ப சொல்லு?” அதிர்ந்து கத்தினான்.
மதுமிதாவின் பார்வை அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ராகவி, உதயின் மேல் பதிந்தது. இருவருமே முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.
பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் மதுமிதா. அவர்களும் தவறாக புரிந்துக் கொண்டார்களோ, என்ற எண்ணமே அவளுக்கு ஒருவித பயத்தை கொடுத்தது.
“ஹாய் மா” என்று மதுமிதாவைப் பார்த்து சொன்ன உதய்,
“என்னடா சவுண்ட் பலமா இருக்கு” என்று இயல்பாக பேசத் தொடங்கி இருந்தான்.
ஆனால், அடுத்து வந்த நாட்களில் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் முடிவை அறிவிக்க, அவளது பேச்சை தவறாக புரிந்துக் கொண்டார்கள் என்பது அவளுக்கு தெளிவாக விளங்கியது.
ராகவன் தனது கோபத்தை பேசாமல் இருந்து காண்பித்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல், தன்னை தானே நொந்து கொண்டு நடப்பதை மௌனமாய் பார்த்திருந்தாள் மதுமிதா.