கொஞ்ச நேரம் முன்பு வரை கொட்டித் தீர்த்த மழை, தற்போது சற்று மெல்லிய தூறலாக மாறிப் பூமியை இன்னும் சிலிர்க்கச் செய்துகொண்டிருந்தது.
சரி நான் கிளம்புறேன். நீங்க பாத்துக்கோங்க எனச் சொல்லி எழ, ஏன்டா இங்கயே நைட் தங்கிக்கோ. எதுவும் எமெர்ஜென்சி அப்படினா நீ இருந்தா கொஞ்சம் நல்ல இருக்கும் என்று நவீன் கூற, அதையே ஆமோதித்தான் அரவிந்த்.
மணியை பாரு, ஒன்பதரை ஆகப் போகுது. மழை வேற இப்போதான் கொஞ்சம் விற்றுக்கு ஒழுங்கா எங்கக்கூட ரூம்க்கு வா என்று அரவிந்த் சொல்ல, இல்லடா நான் கிளம்புறேன் என்று கூறி எழுந்து விட்டான்.
இதுக்கு அப்பறம் இவன் நாம சொல்றதையா கேக்கப் போறான். எதோ பண்ணட்டும் விடுடா என கடுப்பாக நவீன் மொழிய, அதான் தெரியுதுல்ல என்று கூறி இருவருக்கும் பொதுவாக தலையை அசைத்து விட்டு அவ்வறையிலிருந்து வெளியேறினான்.
நவீன், “இவன் அப்போ அப்போ அந்நியன் போல ஆகிடுறான்..”
அவன் நந்தகுமார். கோவை மருத்துவக் கல்லூரியில் எம் .எஸ் (M . S ortho) முடித்துவிட்டு அதே கல்லூரியின் மருத்துவமனையில் இப்பொழுது மருத்துவனாக பணிப்புரிகிறான்.
அரவிந்த் ” என்னடா! கிளம்பிட்டான் இவன்பாட்டுக்கு..இப்போ அந்த ஆளு வந்து கேட்டா என்னத்த சொல்றது.”
ஐந்து நிமிடம் சென்று ஒரு அட்டெண்டர், அறையில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்து, சார் உங்கள டீன் கூப்புடுறார் என்று சொல்லிவிட்டு தன் வேலை முடிந்தது என்பது போல வெளியேறினான்.
“இந்தா வந்துருச்சி பாரு ஆப்பு… வா போயிட்டு வாங்கிட்டு வருவோம்…” என அரவிந்த் நொந்துக் கொண்டே நவீனுடன், இவர்கள் துறையின் டீனைப் பார்க்கச் சென்றான்.
இவர்கள் கதவை தட்டிவிட்டு உள்ளேச் செல்ல, எங்க ஆபரேஷன் பண்ண டாக்டர் என்று கடுமையாக கேட்க,
“சார்ர்ர்ர்… அது.. அவன்…” என்று அரவிந்த் இழுக்க,
“என்ன… அவன் வீட்டுக்கு கிளம்பிட்டான் அதான?…”
“இவர் தெரிஞ்சிட்டே கேக்குறாரா, இல்ல உண்மையாவே கேக்குறாரா?…” என்று அரவிந்த், நவீனிடம் தன் சந்தேகத்தை கேட்க
நவீன் அவனை முறைக்க,
“என்ன அப்படியே நிக்குறீங்க, நீங்களும் தானே ஆபரேஷன் அப்போ உள்ளே இருந்திங்க…”
இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்க்க,
” இங்க யார் டீன்னே தெரியல வர வர… நான் ஆபரேஷன் பண்ணவேணாம்னு சொல்லியும், இவன் பண்ணிருக்கான்… டியூட்டி முடிச்சிட்டு என்கிட்ட நேர்ல ரிப்போர்ட் பண்ணாம, என் டேபிள் மேல ரிப்போர்ட்டை, நான் ரூம்ல இல்லாத நேரம் வச்சிட்டு போய்ட்டான்.”
” இப்போ யாரு? அந்த பேஷண்ட் ஓட பையன் கிட்ட பேசுறது?…”
” வேற யாரு நீங்க தான்…” என்று அரவிந்த் முணுமுணுக்க
” நாளைக்கு அவனை வந்து பார்க்கச் சொல்லுங்க.”
” ஓகே சார்.”
” ஹ்ம்ம்… கோ டு யுவர் ரூம்”
இருவரும் “தேங்க் யூ சார்…” என்று வெளியேறினார்கள்.
நேற்று மாலை ஒரு பெரியவர் வீட்டில் கால் தவறி விழுந்து விட்டதாக கூறி, அவரின் மனைவி இம்மருத்துவமனையில் அவசரப் பிரிவில் (casualty ward) சேர்த்தார்.
அவரை அப்பொழுது டியூட்டியில் இருந்த நந்தா, ஆய்வுச் செய்ய கணுக்காலில் இரண்டு இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி இரண்டு அல்லது மூன்று நாளில் அறுவைச் சிகிச்சை செய்யணும் என்று அவரின் மனைவியிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்.
அவரின் மனைவி தன் மகனுக்கு அழைத்து விவரத்தைக் கூற, அவரின் மகன், தான் நாளை வந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்துக் கொள்ளலாம். அதுவரை அங்கு வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று தாயுடன் உரையாடிவிட்டு போனை அணைத்துவிட்டான்.
இதை அவர் மருத்துவரிடம் கூற, நந்தா பொறுமையாக அவருக்கு தனியார் மருத்துவமனை போனும் அவசியமில்லை அம்மா. இங்கவே அதற்க்கு தகுந்த வசதி எல்லாம் இருக்கு. இங்கயேப் பண்ணிக்கலாம்.
இங்க இல்லனாக் கூட நான் சொல்லிருப்பேன் உங்ககிட்ட, தனியார் மருத்துவமனைல பாக்க சொல்லி. இப்படி உங்க கணவன் வலியோட ஒருநாள் இருந்து கஷ்டப்பட்டு, அப்பறம் திரும்ப தனியார் மருத்துமனைல சேர்த்து அவங்க சொல்ற தேதிக்கு தான் அறுவை சிகிச்சை செய்யணும் என்று விளக்க,
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க.’
” நாளைக்கு நான் அவருக்கு நல்லப்படியா சிகிச்சை பண்றேன். நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். உங்க பையன் கிட்ட எங்க டீன் பேசுவார்” என்று கூறி விட்டுச் சென்றான்.
இவன் அன்றைய டியூட்டி முடிந்த பின்பு, தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க, டீன் அறைக்கு சென்று அதை கூறிவிட்டு, அடுத்து அவருக்கு இன்றைய உரையாடலை சொல்ல, அவர் முடிவாக மறுத்துவிட்டார்.
ஆனாலும் இவன் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து, அவர் மயக்கம் தெளிந்தவுடன் அவரின் நலனை விசாரித்து விட்டு, பின்பு அவரின் மனைவியிடம் நலமாக இருப்பதாக தகவல் கூறிவிட்டு சென்றான்.
இது தான் நடந்தது..
வண்டியை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டே, மழையின் தாக்கத்தால் வீசிய குளிர்ந்தக் காற்றை உள்ளிழுப்படியே அவன் தங்கியிருக்கும் அந்த ஐந்தடுக்குமாடிக் குடியிருப்புக்குள் உள்ளே சென்று வண்டியை அதன் இடத்தில் விட்டுவிட்டு, லிப்ட்டில் தன் வீடு இருக்கும் நான்காவது தளத்தை அடைந்தவன், அவனுடைய இரண்டு அறைக் கொண்ட வீட்டினுள் நுழைந்தான்.
பொறுமையாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, சைலன்ட் மோடில் இருந்த போனை எடுத்துப் பார்க்க அன்னை சற்று நேரத்திற்கு முன்பு அழைத்து இருந்ததை பார்க்க, மாலை அவர் அழைத்தப் பொழுது, அதைக் கட் செய்தது நினைவு வந்தது. போனை பார்த்துக்கொண்டே இருக்க தவறாமல் அன்னை மறுபடியும் அழைத்தார்.
இம்முறை காலை எடுத்து, என்னவோ தனக்கு பிடிக்காததை சொல்லப்போறாங்க என்று நினைத்துக்கொண்டே “சொல்லுங்கம்மா” என்று பேச,
“அது வந்து நந்தா போன் போட்டேன் நீ எடுக்கல…”
“ஆமாம் ம்மா… டியூட்டில இருந்தா எடுக்க மட்டேன்தானே…”
“ஆமா.. ஆனால் நான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னக்கூட உனக்கு போட்டேனே?…”
“ம்மா…ஆ, என்ன சொல்லணும் இப்போ உங்களுக்கு?…” என்று சற்று அழுத்தமாக கேட்க,
அவரிடம் சிறிது மௌனம்,
“அதற்குள் இங்கு நந்தா தன் பேச்சை சற்று நிதானித்து, ம்மா..பேசுங்க, என்ன சொல்ல வரீங்க. சொன்னாதான், நான் பதில் பேச முடியும்..”
“இல்ல நந்தா… அப்பா, உனக்கு டாக்டர் பொண்ணு…” என கூற வர,
“பட்டென்று அப்போ அவரையே கட்டிக்க சொல்லுங்க…” என்று முடித்துவிட்டான்.
“நந்தா..” என்று அவர் அதட்ட
“பின்ன என்னம்மா.. எனக்குத் தானே கல்யாணம் பண்ண போறீங்க. அப்போ நான் சொல்றது தான்.”
“நான் என்னப்பா பண்றது… அப்பா…”
“பச்… போங்கம்மா… சும்மா எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லி கடுப்பாகுது…”
“நான் சொல்றத…”
“ம்மாஆ… போதும். உங்க புருஷன் பேச்சை மட்டும் நல்லா கேட்டுட்டு, என் வாழ்க்கையை இப்படி ஜோசியம், கட்டம், ஜாதகம்னு படுத்தி எடுக்குறீங்க..”
“நந்தா..ஆஆ, என்ன பேச்சு இது…” என கண்டிக்க,
“என்கிட்டே மட்டும் நல்லா அதட்டிப் பேசுங்க… உங்க புருஷன்கிட்ட, இப்படி நீங்க ஒரு வார்த்தை கேளுங்க பாக்குறேன்.. அப்படியே அவருக்கு ஆமாசாமி போடுவீங்க. இதைச் சொல்லத்தான் இவ்வளோ நேரம் தூங்காம இருந்திங்களா?…”
“இல்லடா… நீ போன் எடுக்கலைல, அதுதான்…”
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…”
“வேற என்னடா, நான் பண்ண…”
“நீங்க ஒன்னும் பண்ண வேணாம்… நானே பாத்துக்குறேன்…”
“நான் சொல்ல வரர்த கொஞ்சம் கேளேன்…” என்று இறைஞ்சுதலாக கேட்க ,
“ம்ம்… சரி, அப்படி என்ன சொல்லவரிங்க நீங்க… எங்க சொல்லுங்க கேப்போம்?… “
“என்னடா நந்தா… இப்போ நான் சொல்லவா?, வேண்டாமா?.”
“கேட்டுட்டுதான் இருக்கேன்…”
“இல்லடா… நீ டாக்டர் தானே… அதனால…”
“ம்மா… நான் ஒரு டாக்டர்னே, இன்னும் உங்களுக்கு சந்தேகமா இருக்காம்மா?… வேணும்னா, உங்க புருஷன் கை இல்ல காலை ஒடச்சிவிட்டுட்டு டிரீட்மெண்ட் பாக்கவா, அப்போ ஒத்துப்பீங்களா?...”
“இம்மாதிரியான ஒரு பேச்சு மகன் வாயிலிருந்து வந்தது, தாயாக அவர் விரும்பவில்லை . நந்தா முதல்ல என்ன பேச விடு… இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காதா… நீ கோவத்துல பேசுறேன்னு எனக்கு புரியுது, இருந்தாலும் இப்படி பேசாத, நல்லா இல்லை…”
அவன் பெருமூச்சொன்றை வெளியேற்றி அமைதியாக இருக்க,
“என்னடா இருக்கியா?… பேசு…”
“என்ன பேச சொல்லறீங்க… அதான், என்ன பேச விடுன்னு சொல்லிட்டு, இப்போ என்னைய பேச சொல்லறீங்க?…”
“என்னதான் உனக்கு பிரச்சனை இப்போ?…”
“ம்மா… ப்ளீஸ்… போதும். நாளைக்கு பேசிக்கலாம்… போயிட்டு தூங்குங்க. குட் நைட்”
“உங்க அப்பா வேற ரூம்குள்ள வாக்கிங் போயிட்டு இருக்காரு… உள்ள போனதும் கேப்பாரேடா, நான் என்ன சொல்றது இப்போ…”
“உங்களுக்கு எப்படி பேசணும்னே தெரியாது அப்பாகிட்ட.. என்னைய நம்ப சொல்லறீங்க…”
“சரி சரி விடு விடு..கண்டிப்பா நாளைக்கு சாயிந்தரம் என்கிட்டே என்னனு சொல்ற.. சொல்லிட்டேன் அவ்ளோதான்..”
“ம்ம்..பாக்கலாம் பாக்கலாம்.”
“போன வைக்கிறேன்..போய்த் தூங்குற வழியைப்பாரு..” என்று சொல்லி வைத்துவிட்டார்.
இவன் அவனுடைய படுக்கையில் படுத்துக் கண்ணை மூட அவனின் நினைவடுக்கில் ஒரு முகம் மின்னி மறைந்தது.