மறுநாள் காலையில் எது வேலை செய்கிறதோ இல்லையோ, ஆனால் பிறைசூடனின் கைப்பேசி அலறிக் கொண்டு இருந்தது.
கிட்டத்தட்ட விடியும் வரை கவினுடன் பேசியவன் சிறிது நேரத்திற்கு முன் தான் நாற்காலியில் அமர்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தான்.
கவினோ நோயாளிகளை பரிசோதிக்க சென்று இருக்க, கீதாவோ இன்னமும் கவினின் அறையில் தான் உறங்கிக் கொண்டு இருந்தாள்.
ஓயாமல் துடித்துக் கொண்டு இருந்த அலைப்பேசியின் சத்தத்தில் பிறைசூடன் அடித்து பிடித்து எழுந்து விட்டான்.
முகத்தை உள்ளங்கையில் தேய்த்தவன் “ம்ச் யாரு அது இவ்வளவு காலையில் போன் பண்றது?” என்ற எரிச்சலுடன் திரையில் மிளிர்ந்துக் கொண்டு இருந்த எண்களை பார்த்தவன் கீழ் அதரம் மெலிதாக விரிந்தது.
பனிமலரின் அழைப்பு தான் அது. எப்படியோ தெரியும் அழைப்பது பனிமலராக இருக்காது, அவனின் அக்கா மகன் அஸ்வினாக இருக்கும் என்று அறிந்து இருந்தாலும் பெண்ணவளின் எண்களை பார்த்ததுமே ஒரு வித இதமான உணர்வு.
ஆனால் அந்த இதமான உணர்வு மொத்தமாக குலைந்து போகும் அழைப்பு தான் அது என்று அறியாமல் இருந்து விட்டான்.
கைப்பேசி அடித்து ஓய்ந்து விட, பிறைசூடனோ “அதுக்குள்ள கட்டாகிடுச்சு. இந்த அஸ்வின் நைட் எல்லாம் தூங்கினானா இல்லையா? விடிஞ்சும் விடியாததுமா கால் பண்றான்” என்றபடியே தொடுதிரையில் காண்பித்த நேரத்தை பார்த்தான்.
அதுவோ காலை ஆறு மணி என்று காட்ட, பனிமலரின் எண்ணிற்கு அழைக்கலாம் என்று அவள் எண்களை தொட போன சமயம், குறுஞ்செய்தி ஒன்று பனிமலரின் நம்பரிலிருந்து வந்து இருந்தது.
அதை முகம் சுருக்கி பார்த்தவன், புருவம் அடுத்த கணம் பெரியதாக விரிந்துக் கொண்டது.
அதில் “அடேய் தாடிமாடு காஞ்சமாட்டு பையலே. ஒரு போன் எடுக்க இவ்வளவு நேரமா. அப்படி என்னடா தூக்கம் உனக்கு. எருமைமாடு. இத்தனை போன் பண்றாங்களே ஏதாவது அவசரமானு யோசிக்க மாட்டியா பன்னிமாடு. அம்மாவை ஹாஸ்பிடல சேர்த்து வச்சுட்டு நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க போல குரங்கு மாடு. இங்கே ஒருத்தன் உன்னோட அஸ்வினை தூக்கிட்டு போயிட்டான். சீக்கிரம் போன் பண்ணு காஞ்சமாடு” என்று கண்டமேனிக்கு பிறைசூடனை மாடு மாடு என்று ஆத்திரத்தில் டைப் செய்து அனுப்பி இருந்தாள் பனிமலர்.
அந்த நொடி அவள் திட்டி அனுப்பியது எல்லாம் அவன் கருத்திலே பதியவில்லை. அஸ்வினை யாரோ தூக்கிட்டு போய் இருக்கிறார்கள் என்று மட்டுமே பதிய, அடுத்த கணம் பனிமலருக்கு அழைத்து விட்டான்.
அவனின் அழைப்புக்காகவே காத்திருந்தவள், ஒரே ரிங்கில் தொடர்பை ஏற்றி காதில் பொருத்தி குறுஞ்செய்தியாக அனுப்பிய அனைத்தையும் திட்டி தீர்த்து விட்டாள் பனிமலர்.
பிறைசூடனோ சற்று கோபத்துடன் “அஸ்வின் எங்கே?” என்று கேட்டான்.
அதுவரை அவனை திட்டுவதில் குறியாக இருந்த பனிமலருக்கு இப்பொழுது தான் நிதானம் வந்து அவனின் வார்த்தையின் சூட்டை உணர்ந்தவள்,
“அதான் காணும் சொன்னேனே?” என்றாள்.
பிறைசூடனோ “உன்னோட லைவ் லொகேஷன் எனக்கு அனுப்பு” என்று மட்டும் கூறியவன் பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டான்.
பின் ஆழ்ந்து மூச்சை எடுத்தவனுக்கு, நொடியில் வந்து போனது என்னவோ பாஸ்கரன் முகம் தான்.
பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் நாற்காலியிருந்து எழுந்து அவன் அன்னையின் அறைகதவு கண்ணாடியின் வாயிலாக விசாலாட்சியை பார்த்தான்.
அவரோ இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, கவினின் நம்பருக்கு அழைப்பை விடுத்து விஷயம் என்னவென்று கூறாமல் வெளியே போயிட்டு வருவதாக மட்டும் கூறிவிட்டு விறுவிறுவென பனிமலர் அனுப்பி இருந்த அவளின் இப்போதைய இருப்பிடத்தை நோக்கி விரைந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தின் முடிவில் அந்த ஊரின் ஒதுக்குப் புறமான இடத்தை வந்தடைந்தான் பிறைசூடன்.
இந்த ஒரு மணி நேரத்திற்குள் பிறைசூடனுக்கு பல எண்ணங்கள். அஸ்வினுக்கு ஏதாவது நேர்ந்து இருக்குமோ என்ற அச்சம் வேறு. அக்கா, மாமாவை தான் இழந்து விட்டான். மச்சானையும் இழக்க அவன் தயாராக இல்லை.
பனிமலரின் அருகில் விரைந்தவன் பதற்றத்தில் கலங்கி இருந்தவளின் இருப்பக்க தோள்களை பிடித்து “அஸ்வின் எங்கே பனிமலர்?” என்று கேட்டான்.
அவளோ இரு சொட்டு கண்ணீரை வடிய விட்டவள் “காணோம்…” என்று கூறினாள்.
உள்ளுக்குள் பயமாக இருந்தது. நம்பி கொடுத்த பிள்ளையை தொலைத்து விட்டோமே என்கின்ற அச்சம். அஸ்வின் எங்கே சென்றான் என்கிற தவிப்பு. பிறைசூடன் ஏதாவது சொல்லி விடுவானோ என்கிற பதற்றம் என்று அனைத்தும் அவள் வதனத்தில் மாறி மாறி பிரதிபலிக்க, அவளை ஆழமாக பார்த்த பிறைசூடன் தன் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு,
“என்ன நடந்துச்சு? எப்போதிலிருந்து காணோம்?” என்று கேட்டவனை அச்சத்தோடு பார்த்து,
“அ… அது… நேத்து… நைட்” என்று ஆரம்பித்தவள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
மருத்துவமனையிலிருந்து புறப்பட்டவர்கள் நேராக பனிமலரின் வீட்டை நோக்கிச் செல்ல, இடையில் அஸ்வினோ “எனக்கு ரொம்ப பசிக்குது” என்று கூறினான்.
அவன் மனமோ ‘இந்த லூசுக்கு தான் நம்ம முறைச்சு பார்க்கிறது கூட தெரியாதே. இந்த குருட்டு பொண்ணுக்கிட்ட என்னைய நல்லா மாட்டி விட்டாரு மாமா’ என்று ஏனோ பனிமலரை பிடிக்காமல் போனது அஸ்வினுக்கு.
“எனக்கு ப்ரெட், ஜாம் எல்லாம் வேணாம். பை ஸ்டார் ஹோட்டல ஆட்டோவை நிறுத்துங்க. நான் அங்கே சாப்பிடுகிறேன்” என்றவனிடம் அதிர்ச்சி கலந்த குரலில்,
“அடப்பாவி! நீ ஒரு ஆளு சாப்பிட பைவ் ஸ்டார் ஹோட்டல் கேட்குதா? ஏன் துரை கையேந்தி பவன் எல்லாம் சாப்பிட மாட்டீங்களா?”
“அங்கே எல்லாம் சாப்பிட்டு எனக்கு பழக்கமில்லை”
“அதே மாதிரி எனக்கும் பழக்கமில்லை. சோ போற வழியில கையேந்தி பவன்ல வண்டியை நிறுத்த சொல்றேன். வேணும்கிறதை வாங்கி சாப்பிடு. ஆனால் அதுக்காக பணத்தை நாளைக்கு உன் மாமா கிட்ட இருந்து வாங்கி கொடுத்திடு” என்றவளை கேவலமாக பார்த்து விட்டு நெற்றியில் அடித்துக் கொண்டான்.
இதையெல்லாம் முன் கண்ணாடியூடு பார்த்துக் கொண்டு தானியை இயக்கியபடி இருந்த சண்முகம் பனிமலர் கூறியது போல் ஒரு கையேந்தி பவனின் முன் தானியை நிறுத்தினார்.
கடை மூடிய சமயம் அந்த கும்மிருட்டில் ஒரு ஆட்டோ வந்து நிற்பதை பார்த்த கடை ஊழியர்கள்,
“அண்ணா கடை சாத்தியாச்சுண்ணா. வேற கடையை பாருங்க” என்று கூறினார்.
சண்முகமோ அதை பனிமலரிடம் கூற “எனக்கும் கேட்டுச்சுண்ணா. ஒரு நாலு இட்லி இருக்கானு மட்டும் கேளுங்க. வாங்கிட்டு வீட்ல போய் கூட சாப்பிட்டுக்கலாம்” என்று கூறினாள்.
பனிமலர் கூறியது போல் சண்முகமும் அவரிடம் கேட்க, அவரோ இரு நொடி யோசனைக்கு பிறகு “சரி இருங்க கட்டி தரேன்” என்று அவருக்காக எடுத்து வைத்து இருந்த இட்லியிலிருந்து நாலு இட்லியை கட்டிக் கொடுத்தார்.
பசியென்று வந்து நிற்பவர்களை பசியோட அனுப்ப அந்த கடை ஊழியருக்கு விருப்பம் இல்லை.
அதை வாங்கிய சண்முகம் பணத்தை கொடுக்க, அதை மறுத்து விட்டார் கடைக்காரர். பின் கடைக்காரர் கிளம்பி விட,
சண்முகம் அந்த இட்லி பையை அஸ்வினிடம் நீட்ட, அதை முகம் சுழித்து பார்த்த அஸ்வின் “இப்படி ரோடு கடையில் விக்குற புட் எல்லாம் சுத்தமாவே இருக்காது. எனக்கு இந்த டின்னர் வேணாம். என்னை பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைச்சி போங்க. இல்லனா நானே இறங்கி நடந்து போறேன்” என்று அவர்களின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தானியிலிருந்து சட்டென்று இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.
அதுவும் இருட்டான அந்த வீதியில் அவன் கோபத்துடன் வேகமாக நடக்க, சண்முகமோ “பாப்பா அந்த தம்பி கீழே இறங்கி போறான்ம்மா. நீங்க ஆட்டோவிலே இருங்க. நான் போய் அழைச்சி வரேன்” என்று இட்லி பையை தானியில் வைத்து விட்டு சண்முகம் அஸ்வின் பின்னால் போக, பனிமலரோ அஸ்வினுக்கு மனதில் திட்டிக் கொண்டு தானியில் அமர்ந்து இருந்தாள்.
ஏனோ அஸ்வினுக்கு பனிமலருடன் செல்லவே விருப்பம் இல்லை. அதுவும் அவளை கண்டாலே அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படி இருக்க அவளுடன் சென்று ஒரு நாள் அவளின் வீட்டில் தங்குவதா என்று யோசனையோடே இருந்தவன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தானியிலிருந்து இறங்கி வேகமாக நடக்க தொடங்கியவன் கையிலிருந்த கைப்பேசியின் உதவியோடு அங்கே அருகில் இருக்கும் பெரிய தங்கும் விடுதியை தேட ஆரம்பித்தான்.
அஸ்வினின் வேகத்திற்கு சண்முகத்தால் ஓடி கூட வர முடியவில்லை. வயதான காலத்தில் இப்படி ஓட விடுகிறானே என்று அவனை திட்டிக் கொண்டே பின் சென்றவருக்கு ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க, நின்று சுற்றி கண்களை சூழல விட்டார்.
அந்த இருட்டில் அஸ்வின் எங்கே போனான் என்று தெரியவில்லை அவருக்கு. சுற்றும் முற்றும் தேடியவருக்கு அவனின் உருவம் கூட அவர் கண்களுக்கு புலபடவில்லை.
பதற்றத்துடன் மீண்டும் தானியை நிறுத்திய இடத்திற்கு ஓடியவர் பனிமலரிடம் விஷயத்தை கூறினார்.
அவளுக்கு திக்கென்று ஆனது. இந்த இரவில் அதுவும் அவளால் எப்படி தேட முடியும் என்று நொந்து போனவளுக்கு அஸ்வின் மீது ஆத்திரம் உண்டாகியது.
உடனே பிறைசூடனுக்கு அழைத்து விஷயத்தை கூறலாம் என்று யோசித்தவள் ஏதோ தோன்ற “அண்ணா பக்கத்துல ஏதாவது பெரிய ஹோட்டல் இருக்கா பார்த்து வண்டியை விடுங்க. எனக்கு தெரிந்து அவன் அங்கே எங்கேயாவது தான் போய் இருக்கணும்” என்று அவரை துரிதப்படுத்தினாள்.
சண்முகமோ தானியில் ஏறிக் கொண்டே “பாப்பா நம்ம ஏன் அந்த புள்ளையோட மாமா கிட்டையே சொல்லிட கூடாது?” என்று கேட்க,
“இல்லண்ணா அழைச்சு வந்து முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகல. உடனே போன் பண்ணி இப்படி பையனை தொலைச்சுட்டோம்னு சொன்னோம்னா. நம்பி அனுப்பினோமேனு கேட்டுட்டா என்ன பண்றது? முதல நம்ம தேடுவோம். கிடைச்சிட்டான்னா நாலு கொட்டு தலையில் வச்சு கூப்பிட்டு போகலாம். ஒருவேளை விடியறதுக்குள்ள கிடைக்கலனா அந்த காஞ்சமாடு கிட்ட சொல்லிடுவோம்” என்று அஸ்வினை தேட ஆரம்பித்தவர்களுக்கு விடியும் வரை அவன் கிடைக்கவேயில்லை.
அதற்கு மேலும் நேரத்தை வீணாக்கினால் வேறு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று அஞ்சி பிறைசூடனுக்கு விஷயத்தை கூறி விட்டாள்.
நடந்ததை கேட்ட பிறைசூடனின் விழிகள் கோபத்தில் சிவந்து போக, தன் முன் பயத்தில் நின்றுக் கொண்டு இருப்பவளை பார்த்தான்.