“நைட்டே சொல்லி இருக்கலாமே பனிமலர்?” என்று அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவனுக்கு ஏனோ அவளிடம் கோபத்தை கூட அவனால் காட்ட முடியவில்லை.
பனிமலர் கூறியதை கேட்டு அவனுக்கு கடுங்கடங்காத கோபம் தோன்றியது என்னவோ உண்மை தான். ஆனால் அதை அவன் முன் நிற்பவளிடம் மட்டும் அவனால் காட்ட முடியவில்லை.
அவனின் அன்புக்குரியவர்களிடம் அவன் எப்பொழுதுமே கோபத்தை வெளிப்படுத்தியதே இல்லை. அப்படி இருக்க, அவளை மனதார காதலிப்பவன் அவன், தவறு செய்து விட்டாள் என்று தெரிந்து இருந்தும் பிறைசூடனால் தான் தன் சினத்தை மென்மையானவளிடம் கொட்ட முடியாமல் தன் கரத்தை மடித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.
ஆனால் அருகில் இருந்த சண்முகத்திற்கோ அவனின் சிவந்த விழிகளை பார்த்து பதற்றம் தான்.
அதிலும் பிறைசூடனின் கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டு கிளம்பி இருப்பதை பார்த்ததுமே அவருக்கு நெஞ்சில் நீர் வற்றிய உணர்வு.
பனிமலர் பிறைசூடனின் முக மாற்றத்தை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டாலும் எங்கே ஏதாவது கேட்டு திட்டி விடுவானோ என்கின்ற தவிப்புடன் அவன் முன் நின்று இருந்தாள்.
பிறைசூடன் அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தான். புருவம் முடிச்சுகள் இட, “ஆமா ஊருக்கு ஒதுக்கு புறமா ஏன் வந்து நின்னுட்டு இருக்கீங்க. உன் வீட்டுக்கு போற வழி இது இல்லையே?” என்று கேட்டான்.
பனிமலரோ திணறலுடன் “அ… அஸ்வி… அஸ்வினை தேடிட்டே இந்த பக்கம் வந்துட்டோம்” என்றாள்.
“சரி நைட் எந்த ரூட் வழியா போனீங்க? என சண்முகத்திடம் அவன் கேள்வி திரும்ப,
அவரோ பதற்றத்தில் “தம்பி எப்போவும் பாப்பா வீட்டுக்கு போற ரூட் தான்ப்பா” என்று சொல்லி முடிப்பதற்கே அவருக்கு மூச்சு முட்டியது.
“ஒகே” என்று கூறிய பிறைசூடன் அஸ்வின் நம்பருக்கு டையல் செய்தான்.
அதுவோ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று பதில் அளிக்க, பிறைசூடனுக்கு மெல்ல தலைவலி எட்டி பார்த்தது.
பின் பனிமலரை தன் காரில் ஏற்றிக் கொண்டவன் சண்முகத்திடம் கிளம்புமாறு கூறிவிட்டு காரை எடுக்க, சண்முகமோ “தம்பி மன்னிச்சுடுங்க. பனிமலர் பாப்பா மேல எந்த தப்பும் இல்லை. அந்த பையன் அஸ்வின் தான்” என்று ஆரம்பித்தவரை இடை நிறுத்தி,
“எனக்கு தெரியும் அண்ணா. கவலைப்படாதீங்க நான் உங்க பாப்பாவை எதுவும் பண்ணிட மாட்டேன்” என்றவன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
கார் போகும் திசையை பார்த்து விட்டு சண்முகம் எதிர் திசையில் சென்று விட, காரினுள் பனிமலரோ சற்று பயத்துடன் அமர்ந்து இருந்தவள்,
“என்னைய போலீஸ்ல பிடிச்சு கொடுக்க போறீங்களா?” என்று கேட்டாள்.
சட்டென அவளை திரும்பி பார்த்த பிறைசூடன் மீண்டும் சாலையை பார்த்தபடி “உன் மேல தப்பு இல்லாதப்ப நான் ஏன் போலீஸ்ல பிடிச்சு கொடுக்க போறேன்?” என்றான்.
இச்சமயத்திலும் காளையவனின் நிதானமான வார்த்தைகளை கேட்டு பனிமலரின் முகம் வியப்பில் விரிந்தது.
“என் மேல கோபம் வரலையா?” என்று அதே வியப்புடன் கேட்க, “வருது தான். ஆனால் என் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட நான் கோபத்தை இதுவரை காட்டியதே இல்லை” என்று ஒளிவுமறைவாக அவன் இதயத்தில் அவளுக்கான இடம் எது என்று கூறிவிட்டான் அந்த கெட்டிக்காரன்.
அதை கேட்டு பனிமலரின் முகம் சட்டென்று இறுகி விட்டது. ஆனால் நொடியில் உணர்வை மாற்றிக் கொண்டவள் “இப்போ எங்கே போறோம்?” என்று பேச்சை மாற்றினாள்.
“அஸ்வின் எங்கே இருந்து ஆட்டோவில் இறங்கி நடந்து போனானோ அங்கே தான். அந்த இடத்தில் பக்கத்துல ஏதாவது ஹோட்டல் இருக்கானு பார்க்கணும். அப்படி இருந்தால் அவன் அங்கே தான் இருப்பான்னு தோணுது” என்று சொல்லிக் கொண்டே விரைந்து அந்த இடத்திற்கு வண்டியை செலுத்தினான்.
இதே சமயம் மருத்துவமனையில் விசாலாட்சி மெல்ல கண்களை திறக்க, கவினோ அவரின் தற்போதைய நிலவரத்தை குறிப்பு அட்டையில் குறித்துக் கொண்டு இருந்தவன் விசாலாட்சியிடம் அசைவு தெரியவும் அவர் அருகில் சென்று,
“ஆன்ட்டி” என்று அவரை நிதானத்திற்கு கொண்டு வர உதவி செய்தான்.
விசாலாட்சியும் கவினின் குரலில் நினைவுலகிற்கு வந்தவர் “அ…ஸ்” என்று முதலில் தன் பேரனை பற்றி தான் கேட்க முனைந்தார்.
அஸ்வினை பற்றி கேட்கிறார் என்று உணர்ந்த கவின் “அவன் நல்லா இருக்கான் ஆன்ட்டி” என்று நம்பிக்கையளிக்கும் விதமாக அவன் வார்த்தையின் அழுத்தம் இருக்க, அதை உணர்ந்தவருக்கு அப்பொழுது தான் நிம்மதியே பிறந்தது.
பாவம் அந்த நிம்மதி தற்காலிகமானது என்று அப்பொழுது அவரும் சரி கவினும் சரி அறியவில்லை.
கவினுக்கு தான் அஸ்வின் காணாமல் போன விஷயம் தெரியாது அல்லவா. அதனாலே நேற்று இரவு அஸ்வினை அனுப்பி வைத்த பெண்ணுடன் பாதுகாப்பாக இருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டு இருந்தான்.
பின் கவின் அவரை முழுமையாக பரிசோதித்து விட்டு “இப்போ நீங்க ஒகே ஆன்ட்டி” என்று சொல்லிக் கொண்டே அவரின் முன் புன்னகையோடு நின்று இருந்தான்.
விசாலாட்சியோ அறையை கண்களால் சுழல விட்டு மகனை தேட, அதை உணர்ந்த கவின் “பிறைக்கு ஏதோ வேலை இருக்குனு இப்போ தான் போனான். நைட் முழுக்க இங்கே தான் இருந்தான். அண்ட் கீதா என் ரூம்ல தூங்கிட்டு இருக்கா எழுப்பி அனுப்பி விடுறேன் ஆன்ட்டி” என்று அவன் நகர முற்பட, விசாலாட்சியோ,
“இல்லப்பா வேணாம். அவ தூங்கட்டும்” என்று கூறியவருக்கு நேற்று நடந்ததை நினைத்து விழிகளில் கண்ணீர் திரண்டது.
கவினோ அதை பார்த்து விட்டு சற்று எரிச்சலுடன் “இப்போ எதுக்கு ஆன்ட்டி கண்கலங்குறீங்க? நேத்து நடந்த விஷயத்தை பிறை சொன்னான். அதை கேட்டு எனக்கு செம கோபம். ஏன் ஆன்ட்டி ஒருத்தன் உங்களை தாக்க வரான்னா நீங்க எதிர் தாக்குதல் செய்ய மாட்டீங்களா? அதுவும் அந்த ஆளை இன்னும் ஜெயில பிடிச்சு போடாம இருக்கீங்க” என்று பற்களை கடித்தபடி கேட்டான்.
விசாலாட்சியோ வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு “பல வருஷம் கழிச்சு நேத்து தான்ப்பா அவரு வந்தாரு. அதுவும் அந்த மனுஷனுக்கு பெத்த அப்பா, அம்மா, கட்டின மனைவி, பெற்ற பிள்ளைகள் மீது எல்லாம் பாசம் வச்சு திரும்பி வராம, பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி பழிவெறியோட போனாரோ அப்படியே அதே வெறியோட தான் வந்து இருக்காரு. நேத்து அவரை பார்த்ததுமே சரி பழசை எல்லாம் மறந்துட்டாருனு நான் ஒரு நிமிஷம் நினைச்சு முடிக்கிறதுக்குள்ள அவரோட ஆக்ரோஷத்தை காட்டும் போது தான் என் கிட்ட இருந்த மீதி உயிரும் மரித்து போச்சு” என்று உடைந்த குரலில் அவர் கூற,
அதை கேட்ட கவினோ சற்று ஆதங்கமாக “ஏன் ஆன்ட்டி இன்னும் அந்த ஆளு மேல உங்களுக்கு பிடித்தம் இருக்கா என்ன?” என்று கேட்டு விட்டான்.
விசாலாட்சி அதற்கு எந்த பதிலும் கூறாமல் “கவின் எனக்கு ஒரு உதவி செய்றீயா?” என்று கேட்க, அவனோ “சொல்லுங்க ஆன்ட்டி” என்றான்.
அவரோ “எனக்கு அஸ்வினை பார்க்கணும் போல இருக்கு. அவனை வர சொல்றீயா?” என்று கேட்டார்.
கவினோ யோசனையான பாவனையுடன் “அவன் இப்போ இங்கே இல்லையே ஆன்ட்டி” என்று அவன் முடிப்பதற்குள்,
“அய்யோ என்னப்பா சொல்ற. பத்திரமா இருக்கான்னு சொன்னீயே?” என்றவரிடம் “ஆன்ட்டி ஆன்ட்டி பதற்றப்படாதீங்க. அஸ்வின் இங்கே இல்லைனு தான் சொன்னேன். பத்திரமா இல்லைனு சொல்லலையே. அவனை நேத்து நைட் பிறைசூடன் அவனுக்கு தெரிஞ்ச பொண்ணோட அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சு இருக்கான்” என்று அழுத்தமாக அவருக்கு உணரும் படி கூறினான் கவின்.
அதை கேட்டதும் தான் விசாலாட்சிக்கு சற்று மூச்சே வர, “பெண்ணுடனா? எந்த பொண்ணு கூட? பிறைசூடனுக்கு தான் பெண் தோழிகளே இல்லையே?” என்று மகனை பற்றி தெரிந்து அடுக்கு அடுக்கான கேள்விகளை கேட்டார்.
கவினின் மனமோ ‘ம்கூம் இவங்க பிள்ளையை இவங்க தான் மெச்சுக்கணும்’ என்று நினைத்துக் கொண்டவன், “அவனோட ஆபிஸ்ல வேலை செய்யுற பெண் போல ஆன்ட்டி” என்றான்.
“ஓ” என்று விசாலாட்சி கூற, ஏதோ யோசனை வந்தவராக “அந்த பொண்ணு பெயர் என்னப்பா?” என்று சற்று ஆவலுடனே கேட்டார்.
பெற்ற தாயிற்கு தெரியாதா? மகன் ஒருவரை நம்பி அஸ்வினையே அனுப்பி வைத்து இருக்கிறான் என்று கேட்டதுமே அவருக்கு புரிந்து விட்டது. அப்பெண்ணின் மீது மகனுக்கு இருக்கும் அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று. அதனாலே மகனுக்கு பிடித்த பெண்ணின் பெயரை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டார்.
கவினோ சற்று நொடிகள் யோசித்தவன் நேற்று இரவு பேச்சு வார்த்தையில் ஏதோ சில இடத்தில் அவளின் பெயரை சொன்னது போல் கவினுக்கு நினைவுக்கு வர பட்டென்று “ஹான் பனிமலர் ஆன்ட்டி” என்று கூறினான்.
அதே நேரம் அங்கே அஸ்வினை தொலைத்த இடத்திலிருந்து அருகில் இருந்த பெரிய தங்கும் விடுதி அனைத்துக்கும் சென்று விசாரித்து விட்டனர் பனிமலரும் பிறைசூடனும் ஆனால் அங்கே எங்கேயும் அஸ்வின் வரவேயில்லை என்று கூறி விட, பிறைசூடனுக்கு தலைவலி அதிகமாக ஏற்பட, பனிமலருக்கோ திக் திக்கென்று ஆனது.
இப்படி தேடும் இடம் எல்லாம் தோல்வியில் முடிந்தால் பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அந்த இடத்தையே சுற்றி வந்தவர்கள் ஓய்ந்து போனார்கள்.
பிறைசூடனின் மனமோ ‘இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அஸ்வினுக்கு ஏதாவது நேர்ந்து விடும். சோ இனி நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்’ என்று முடிவெடுத்தவனாக காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.
போகும் வழியிலே அவனுக்கு நெருக்கமான காவல் அதிகாரிக்கு அழைப்பு விடுத்து மேலோட்டமாக விஷயத்தை கூற, அவரும் உடனே அந்த ஏரியாவில் இயங்கும் காவல் நிலைத்திற்கு போகுமாறு கூறியவர் தானும் வருவதாக சொல்லி வைத்து இருந்தார்.
பனிமலருக்கோ ‘அய்யோ போச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு போறாரு. கண்டிப்பா நம்மளை பிடிச்சு உள்ளே போடாம விட மாட்டாங்களே. கடவுளே என்னால அடியெல்லாம் தாங்க முடியாதுப்பா. எப்படியாவது என்னை காப்பாத்து. ஒழுங்கா நேத்து இந்த காஞ்சமாடு சொன்னப்பவே கிளம்பி வீட்டுக்கு போய் இருக்கணும். உதவி பண்றேன்னு நினைச்சு இப்படி பெரிய ஆப்பா நானே தேடிக்கிட்டேனே’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு அமர்ந்து இருந்தாலும், வெளியே பிறைசூடன் முன் கெத்தாக அமர்ந்து இருப்பது போல் நடித்தாள்.
அதாவது பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு என்றது போல் ஆனது பனிமலரின் இப்போதைய நிலவரம்.
இதற்கு இடையில் கவினும் நண்பனுக்கு அழைத்து விசாலாட்சி கண்முழித்ததை பற்றி தகவல் சொல்லி விட, பிறைசூடனுக்கு சிறிது பாரம் குறைந்தது போன்ற உணர்வு.
ஆனால் மொத்தமாக பாரம் இறங்க வேண்டும் என்றால் அவனின் உயிராக கருதும் அவன் அக்கா மகன் கிடைக்க வேண்டுமே!
அவர்கள் தேடிக் கொண்டு இருப்பவனோ பாழடைந்த ஒரு வீட்டின் இருட்டு அறையின் மூலையில் கை கால்கள் கட்டி வைத்து, வாயில் துணியை வைத்து கட்டி எங்கும் அவனை நகர விடாதபடி மயக்க நிலையில் இருந்தான் அஸ்வின்.
கண்களை மெல்ல திறக்க நினைத்தவனுக்கு அது சிரமமாக இருக்க, மனதில் அவனின் மாமாவை நினைத்துக் கொண்டு வலியை பொறுத்தபடி கண்களை திறந்தான்.
இமைகளை திறந்தும் அவனுக்கு அனைத்துமே இருட்டாக தான் இருந்தது. ஆனால் அந்த அறையின் மூலையில் சிறிய வெளிச்சம் படர அந்த இடத்தை நோக்கியவனின் விழிகள் பேரதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனது.
அதே சமயம் காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் புகார் கொடுத்துக் கொண்டு இருந்த சமயம், பிறைசூடன் அழைத்த காவல் அதிகாரியும் வந்து விட, விஷயம் என்னவென்று கூறியவன் சீக்கிரம் அஸ்வினை தேட சொன்னான்.
அவரோ முதலில் சந்தேகமாக பார்த்தது என்னவோ பனிமலரை தான்.