அந்த கணம் வேகமாக உள்ளே வந்த பிறைசூடன் “அம்மாக்கு என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே தாயின் அருகில் சென்றான்.
மகனை பார்த்ததுமே அன்னையின் முகத்தில் அத்தனை நேரம் இருந்த கவலை, வேதனை என்று அனைத்தும் காணாமல் போய் மகிழ்ச்சி குடிக் கொள்ள, முகத்தில் ஆர்வத்தை தேக்கி வைத்துக் கொண்டு அவன் பின்னால் இருந்த வாசலை பார்த்தார்.
ஆனால் அவனுடன் யாரும் வரவில்லை என்று உணர்ந்தவர் முகம் மீண்டும் சுருங்கி போனது.
இத்தனை வருடங்களில் தாயின் முகத்தில் இதுவரை இப்படி ஒரு சந்தோஷத்தையும் ஆர்வத்தையும் அவன் பார்த்ததில்லை. அவர் தன்னை விட வேறு யாரை தேடுகிறார் என்று புரிந்தவன்,
“அஸ்வின் பத்திரமா இருக்கான்ம்மா. நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க. உங்களுக்கு அடிப்பட்டு இருக்கு. சோ அமைதியா படுத்து ரெஸ்ட் எடுங்க” என்று பொய் தான் கூறுகிறான் ஆனால் பொறுமையாக கூறினான்.
விசாலாட்சி மகனை கண்கள் கலங்க பார்த்தவர், “நான் அஸ்வினை எதிர்ப்பார்க்கலை. அவன் பத்திரமா தான் இருப்பான் எனக்கு தெரியும். நீ நம்பி அனுப்பி வச்சு இருக்குறவ அவனை உள்ளங்கையில் வச்சு தாங்குவாள்” என்று பேசிக் கொண்டு இருக்கும் விசாலாட்சியை குழப்பத்துடன் பார்த்தனர் அனைவருமே.
பிறைசூடனோ “அதை எப்படி நீங்க சொல்றீங்கம்மா?” என்று சந்தேகமாக கேட்ட மகனை இதழ் முழுவதும் புன்னகையோடு பார்த்து,
“நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்ததே அவளுக்காக தானே” என்று மேலும் குழப்பியவரை புரியாமல் பார்த்தான் பிறைசூடன்.
தாயின் வார்த்தையில் என்ன உள் அர்த்தம் இருக்கிறது என்று அவனுக்கு விளங்கவே இல்லை. எதையோ மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
விசாலாட்சி மீண்டும் “என்னை விடுங்க. என் மகனே வந்துட்டான். நான் அவன் கூட போறேன்” என்று தட்டு தடுமாறி எழுந்துக் கொள்ள முயன்றவரை பிடித்து சரியாக அமர வைத்த பிறைசூடன் “அம்மா நீங்க என்ன சொல்றீங்கனு புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்று அழுத்தமாக கேட்ட மகனை விழி நீரோடு ஏறிட்டு பார்த்தவர்,
“இந்த பதினைந்து வருஷமா நான் இத்தனை கொடுமைகளையும் வலிகளையும் தாங்கிட்டு இருந்தது பனிமலருக்காக தான்” என்று சொல்ல தொடங்கியவரை அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் அனைவரும்.
அதே சமயம் கையில் இருந்த மது பாட்டிலை கல்லின் மீது தூக்கி எறிந்து கோபத்துடன் “ச்சைக் அந்த அழுத்தக்காரி இப்போவும் உண்மையை சொல்லல குணா” என்று சொன்னார் பாஸ்கரன்.
குணா பாஸ்கரின் சிறு வயது முதல் இப்பொழுது வரை நெருங்கிய சிநேகிதன். அதனாலே குணாவிற்கு பாஸ்கரனை பற்றி அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த பதினைந்து வருடமாக பாஸ்கரனுக்கு அடைக்கலம் கொடுத்து வச்சு இருந்ததே இந்த குணா தான்.
பாஸ்கரனின் அத்தனை தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தவன். உயிர் நண்பன் தவறு செய்யும் போது தட்டி கேட்டு திருத்தாமல், தட்டி கொடுத்து சூப்பர் மச்சி என்று ஏற்றி விடுபவன் தான் இந்த குணா.
பாஸ்கரின் குடும்பம் அழிந்ததுக்கு இந்த குணாவும் ஒரு காரணம் தான்.
சும்மாவா சொன்னார்கள், ஒரு நல்ல புத்தகம் கிடைப்பது எத்தனை கஷ்டமோ அதே போல் ஒரு நல்ல நண்பன் கிடைப்பதும் கடினம் என்று.
குணாவோ “இன்னுமாடா அந்த விசாலாட்சி ரகசியத்தை பொத்தி வச்சிட்டு இருக்கா?”
“ஆமா குணா. அடிச்சு பார்த்துட்டேன். உதைச்சு பார்த்துட்டேன். ஏன் இப்போ கடைசியா மண்டையை கூட உடைச்சிட்டேன். ஆனால் வாயே திறக்க மாட்டிங்கிறா. அவ மூடி மறைக்க மறைக்க தான் எனக்கு இன்னும் கொலைவெறி அதிகமாகிட்டே போகுது” என்று மீண்டும் ஒரு மதுபாட்டிலை காலி செய்து ஆத்திரத்துடன் தூக்கி எறிந்தவர் நினைவு முழுவதும் பழைய வெறி தான்.
கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் அது.
அந்த காலத்து வீடாக இருந்தாலும் பார்த்து பார்த்து கட்டிய வீடாக இருந்ததால் நன்றாக பராமரித்துக் கொண்டு இருந்தனர்.
தலைமுறை தாண்டிய இல்லம் என்பதால் வளரும் எந்த தலைமுறைக்கும் அவ்வீட்டை விற்கவோ விட்டு வேறு இடத்திற்குச் செல்லவோ தோன்றவில்லை.
பழைய காலத்திலிருந்தே ஜாதி, மாதம், கௌரவம், என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.
தணிகைவேலுவின் முப்பாட்டனார் கடைப்பிடித்த வழிமுறைகளை இன்றும் அவர் பின்தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார். அதை தொடர்ந்து அவர் மகனும் சாதியில் ஊறிப் போய் இருந்தார்.
இதில் விதி விலக்கு அவரின் பேரன் பிறைசூடனும் பேத்திகளும் தான்.
அந்த காலத்து பழைய நடைமுறையை பிடிக்காமல் தங்கள் போக்கில் சுதந்திரமாக இருக்க ஆசைப்பட்டவர்கள் இவர்கள்.
அதனாலே அவர்கள் வீட்டில் தினமும் ஒரு சச்சரவு ஏற்படும். அதிலும் பிறைசூடன் வீம்புக்கென்றே அனைத்தையும் செய்பவன்.
தணிகைவேலுக்கு எது எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் முதல் ஆளாக அவரை எதிர்த்து செயல்படுபவன்.
தணிகைவேல் சோலையரசிக்கு ஒரே மகன் தான் பாஸ்கரன். உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. அதனாலே பாசம் என்ற சொல்லுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாமல் போனது.
மற்றவர்களை மதித்து வாழ வேண்டும் என்று தாய் தந்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லை.
பெரிய ஜமீன் வீட்டு பெண் என்பதாலே தணிகைவேலுவின் தந்தை சோலையரசியை மகனுக்கு மணமுடித்து வைத்தார். வரும் போதே பணத்தை அள்ளி எடுத்து வந்த காரணத்தினாலோ என்னவோ அவ்வீட்டின் தணிகைவேலுக்கு பிறகு குரலை உயர்த்தி அதிகாரம் செய்யும் பொறுப்பு சோலையரசிக்கு தானாக அமைந்து போனது.
பாஸ்கரனின் ஜனனத்தில் தணிகைவேலுவின் தந்தை மரணித்து விட, அவ்வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவருமே பிறக்கும் போதே எமனாக தான் பிறந்து இருக்கிறான் என்று பாஸ்கரனுக்கு அப்பொழுதே எமன் என்ற பட்டபெயர் வைத்து விட்டனர்.
எமன் என்ற பெயருக்கு பொருத்தமாகவே பாஸ்கரன் அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டு இருந்தான்.
அதிகாரத்துடனே வளர்ந்த பாஸ்கரனுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி வளர விட்டு இருந்தனர் தணிகைவேல் மற்றும் சோலையரசி.
அந்த சுதந்திரம் பாஸ்கரன் தொழிலிலும் கிடைத்து விட, அவன் இருக்கும் இடத்தில் அனைத்துமே அவர்களின் இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பணிக்கு நியமித்து இருந்தான்.
அவ்வளவு ஏன் அவனுக்கு கை கால் பிடித்து விடும் நபர் கூட, அவனின் ஜாதியின் ஒருவரை தான் வைத்து இருந்தான்.
அவனின் எதிரே கீழ்சாதி காரர்கள் தெரியாமல் வந்து விட்டாலே பேயாட்டாம் ஆடிவிடுவான். ஏன் வெறியில் அவர்களின் கைகால்களை கூட வெட்ட தயங்கியதில்லை.
இத்தனை செல்வாக்குடன் வாழ்பவனுக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் உடன் வருவது வழக்கம் தானே.
அதிலும் நண்பன் என்று ஒரு கேடுக்கெட்டவன் உடன் இருந்தால் அங்கே நல்புத்திக்கும் சுயபுத்திக்கும் ஏது வேலை.
இல்லாத அத்தனை அட்டூழியங்களும் செய்தனர். அதுவும் மது என்று ஒன்று அவர்ளுக்குள் சென்று விட்டால் மாதுவும் கண்டிப்பாக தேவை.
அதிலும் பாஸ்கரனும் குணாவும் கை வைக்கும் பெண்கள் கூட அவர்களின் சாதி பெண்ணாக தான் தேர்ந்தெடுப்பர்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்கிறோமே என்ற குற்றவுணர்வுகள் கூட இருக்காது இருவருக்கும்.
அவர்களுக்கு தேவை அப்பொழுது உடல் தேவை தான். அதில் எங்கே இருந்து ஈவு இரக்கம் எல்லாம் பார்ப்பது.
இதெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஊர் மக்கள் காவல் அதிகாரியே தணிகைவேலுவின் சொந்தக்காரன் என்பதால் அங்கு சென்றும் பயனில்லை என்று அறிந்து நேரடியாக தணிகைவேலுவின் செவிகளுக்கு செய்தி கொண்டுச் செல்ல அவரோ,
“ஆம்பளைங்கனா அப்படி தான் இருப்பானுங்க. இந்த பொட்டை கழுதைகளை யாரு மினுக்கிட்டு அவன் முன்னாடி திரிய சொன்னா? அதான் புடிச்சதும் ஆசையை தீர்த்துக்குறான். எல்லாம் பொண்டாட்டி ஒருத்தி வர வரைக்கும் தான். அவனுக்கு ஒருத்தி வந்துட்டா பொண்டாட்டிக்கு அடங்கி போயிடுவான். அப்புறம் எதுக்கு அந்த சாக்கடைங்க எல்லாம். அதுவரைக்கும் உங்க புள்ளைங்களை என் மவன் முன்னாடி சிங்காரிச்சிட்டு அலைய வேணாம் அதட்டி சொல்லி வைங்க” என்று அப்பொழுதும் அடுத்தவர் பெண்கள் மீது தான் குற்றம் சாட்டினார்.
அவரின் வார்த்தைகளை கேட்ட ஜனங்களோ பெரிய இடத்தை பகைத்துக் கொண்டு அந்த ஊரில் வாழ முடியாது என்று வலிகளை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு பாஸ்கருக்கு மனைவியாக வர போகும் பெண்ணை எண்ணி கவலைக் கொள்ள ஆரம்பித்தனர்.
தணிகைவேல் குடும்பத்தை பகைத்துக் கொள்ள முடியாது என்று அன்றிலிருந்து பெற்றவர்கள் தங்கள் மகள்களை படிப்பதற்கு கூட வெளியே அனுப்புவதில்லை.
அந்த சமயம் தான் உள்ளூரில் பெண் பார்க்க முடியாது என்று உணர்ந்த தணிகைவேல் வெளியூரில் அவரின் சாதி பெண்ணான விசாலாட்சியை மகனுக்கு மணமுடித்து வைத்தார்.
பெரிய இடம், தொழிலில் பேர் புகழ் என்று மேலோட்டமாக மட்டும் விசாசித்து விசாலாட்சி பாஸ்காரனுக்கு கட்டி வைத்தனர் விசாலாட்சி பெற்றோர்கள்.
விசாலாட்சியும் தாய் தந்தையின் சொல்லுக்கு மிகவும் கட்டுப்பட்டவள் என்பதால் யார் எவரென்று கேட்காமல் கழுத்தை நீட்டி விட்டார்.
பாஸ்கரனோ விசாலாட்சியை விரும்பி எல்லாம் கட்டிக் கொள்வில்லை.
பெண் பார்க்கச் சென்றதுமே அழகு பதுமையாக இருந்தவளை ஒரு நாள் ருசி பார்ப்பதை விட வாழ்க்கை முழுவதும் அந்த ருசியை போதையாக அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டுமே அவளை திருமணம் செய்துக் கொண்டான்.
ஆனால் விசாலாட்சியின் பெற்றோர்களோ மகள் இரண்டாம் நாளே வாழ முடியாது என்று கண்ணீரோடு வந்து அவர்கள் வீட்டின் முன் நிற்பாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
உடல் எல்லாம் காயத்தோடு வந்து நின்ற மகளை பார்த்ததுமே துடித்து விட்டனர் இருவரும்.
“என்னாச்சிம்மா ஏன் இப்படி வந்து நிக்குற? மாப்பிள்ளை எங்கே?” என்று கேட்ட தந்தையை ஏறிட்டு குற்றம் சாட்டுவது போல் பார்த்தாள்.
‘நீங்கள் சொல்லி தானே அந்த மிருகத்தை என்னவர் என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவன் மிருகத்தை விட மோசமாக என்னை நடத்துக்கிறான்’ என்று கேட்க துடித்த நாவினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அன்னையின் மடியில் தலை சாய்த்து இமைகளை மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
மகளின் உடல் குலுங்குவதை வைத்தே அவள் அழுகிறாள் என்று புரிந்துக் கொண்டு விசாலாட்சியின் தந்தை கோபத்துடன் தணிகைவேலுவின் இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் சண்டைப்பிடிக்க,
தணிகைவேலுவோ “அட விடுப்பா பொண்டாட்டினு கொஞ்சம் உரிமையை அதிகமா எடுத்து இருப்பான். நமக்கு தெரியாததா? நம்மளும் அவன் வயசை கடந்து வந்தவங்க தானே? ஏதோ சின்ன சிறுசுகள் போக போக பழகிப்பாங்க” என்று நாசுக்காக மகன் செய்த தவறை மறைப்பதற்கு மகன் மற்றும் மருமகளின் தாம்பத்தியத்தை பற்றி மேலோட்டமாக கூறி விசாலாட்சியின் தந்தையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
தணிகைவேலுவின் வார்த்தைகளை கேட்ட அவரும் மகளால் தான் பொறுத்துப் போக முடியவில்லை என்று மனைவியிடம் கூறி மகளுக்கு புத்திமதி சொல்லி மீண்டும் அந்த மிருகத்தின் குகைக்குள்ளே அனுப்பி வைத்தனர்.
விசாலாட்சிக்கோ தாய் தந்தையை எதிர்த்து பேசி பழக்கம் இல்லாமல் போனதால் புகுந்த வீட்டில் தந்தை பேசி விட்டு வந்ததால் இனி தன்னிடம் நன்றாக நடந்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில் அவளுக்கு என்ன நடந்தது என்று தாயிடம் கூட வெளிப்படையாக கூறாமல் மீண்டும் கணவன் இல்லத்திற்குச் சென்றாள்.
விசாலாட்சிகள் போன்ற பெண்களால் தான் பல மிருகங்கள் இங்கே சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.
அந்த காலம் மட்டும் இல்லை. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் பல பெண்கள் இன்னும் ஊமையாகவே இருக்கின்றனர்.
காலம் காலமாக பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயந்து வாழும் பெண்கள் இருக்கும் வரை பாஸ்கரன் போன்ற மிருகங்கள் சந்தோஷமாக தான் வாழ்வார்கள்.
பாஸ்கரனுக்கோ ஆத்திரம் மேலெழும்ப, மனைவி வந்ததுமே, அவளை இழுத்துக் கொண்டுச் சென்று அறையில் அடைத்தவன் எப்படி எல்லாம் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்ய கூடாதோ அதற்கு மேல் துன்புறுத்தி தன் கீழ்புத்தியை திருப்திப்படுத்திக் கொண்டான் அந்த நயவஞ்சகன்.
அதன் விளைவு காரணமாக விசாலாட்சியால் ஒரு வாரத்திற்கு படுக்கையை விட்டு ஒரு அடி கூட நகர முடியவில்லை.
உடலில் உள்ள ரத்தம் எல்லாம் வெளியேற மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டாள்.
உடலும் மனமும் மிகவும் துயரத்தை சுமந்துக் கிடக்க, அதன் வெறுப்பு எல்லாம் கணவன் மீது ஒரு புறம் என்றால் இந்த மிருகத்தை பற்றி விசாரிக்காமல் கட்டி கொடுத்த பெற்றோர் மீது மற்றொரு புறம் கோபம்.
ஒருவாரம் படுத்தே கிடந்தவளை சோலையரசியின் குத்தல் பேச்சு காயப்பட்டு இருந்த இதயத்தில் மேலும் காயத்தை உண்டு செய்ய, குமுறிக் கொண்டு இருந்த உள்ளத்தை அடக்கி விட்டு திருமணம் முடிந்த பத்தே நாளில் வாழ்க்கை முடிந்தது என்று மரத்து போன இதயத்துடன் அந்த வீட்டில் நடமாட ஆரம்பித்தாள் விசாலாட்சி.
அதன் பிறகு முதல் கருவை சுமந்தவளுக்கு மரத்து போன நெஞ்சத்தில் ஏதோ ஒன்று துளிர்விட்டு வளர்வது போன்ற நம்பிக்கை.
அவர்கள் வீட்டின் அடுத்த தலைமுறை வாரிசை சுமக்கும் விசாலாட்சியை கையில் தாங்கவில்லை என்றாலும் எதுவும் சொல்லிகாட்டியோ வீட்டு வேலைகளை வாங்கவோ அவளை கொடுமைப்படுத்தவில்லை தணிகைவேலும் சோலையரசியும்.
அவ்வளவு ஏன் பாஸ்கரன் கூட, குழந்தையை சுமக்கும் விசாலாட்சியை எந்த வித தொல்லையும் செய்யாமல் தள்ளி நின்று தன் பிள்ளை வர போகும் நாளுக்காக காத்திருந்தான்.
ஆனால் ருசி கண்ட பூனை அமைதியாக இருந்து விடுமா என்ன? சொந்த வீட்டில் படையல் இல்லை என்றால் என்ன அடுத்த வீட்டின் சுவரை ஏறி குதித்து படையலை உண்ண தானே நினைக்கும். அதே தான் பாஸ்கரனும் செய்துக் கொண்டு இருந்தான்.
இந்த செய்தி அரசல் புரசலாக விசாலாட்சி காதுக்குள் விழ, இதுவரை எத்தனையோ கொடுமைகளை தாங்கிக் கொண்டு வாழ்ந்தவளுக்கு கணவன் இன்னொருத்தியை தேடி போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் பெற்றோர் வீட்டை தேடிச் சென்றவளுக்கு பெரும் இடியாக அவர்களின் மரண செய்தி வந்து விழுந்தது.
மார்க்கெட்டிற்குச் சென்று வரும் பொழுது லாரிக்காரன் சரியாக கவனிக்காமல் இருவர் மீதும் ஏற, அந்த இடத்திலே இருவரின் உயிரும் பிரிந்து போனது என்று அவளின் தாய் தந்தையின் சடலத்தை அவர்கள் வீட்டின் முன் வைத்து விட்டுச் சென்றனர்.
விஷயம் கேள்விப்பட்டு தணிகைவேல், சோலையரசி, பாஸ்கரன் என்று அனைரும் வந்து துக்கத்தில் கலந்துக் கொண்டனர்.
விசாலாட்சி தான் நிறைமாத கருவை சுமந்துக் கொண்டு இடிந்து போய் அமர்ந்து இருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஒரு துளி கூட வரவில்லை.
மொத்தமாக மரத்து போய் விட்டாள் போல். இனி வாழ்க்கை இது தான் என்று அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு பாஸ்கரனுடனே மீண்டும் அவர்கள் இல்லத்திற்குச் சென்றவளுக்கு மீண்டும் நரகத்தில் வந்து விட்டோமே என்ற எண்ணம் தான்.
என்ன தான் மொத்தமாக உடைந்து போய் இருந்தாலும் கருவில் வளரும் பிள்ளையை நினைத்து அவ்வப்போது தன்னை தானே தேற்றிக் கொள்வாள்.
பிரசவ நாளும் வர, பெற்றோரின் இறப்பில் கூட கண்ணீர் சிந்தாதவளின் உறைந்து போன விழி நீர் அன்று தான் அதீத வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரசவத்தின் போது மீண்டும் கண்ணீர் சுரக்க, அப்பொழுது தான் உணர்ந்தாள், இன்னும் தன் விழி நீர் வற்றிப் போகவில்லை என்று.
வீட்டில் இருந்த மூவருமே ஆண்பிள்ளை தான் என்று கொண்டாடிக் கொண்டு இருக்க, பிறந்ததோ பெண் பிள்ளை என்று அவர்களின் சந்தோஷத்திற்கு முற்று புள்ளி வைத்தார் வைத்தியர்.
சும்மாவே தாம்தூம் என்று குதிக்கும் சோலையரசிக்கு மருமகளை மேலும் குத்தி காட்டி பேசுவதற்காகவே பெண் குழந்தை பிறந்து இருக்க, இனி சொல்லவும் வேண்டுமா என்ன? பேச்சுக்கு என்று ஓரிரண்டு முறை குழந்தையை பார்த்து விட்டு வந்ததோடு சரி மூவரும் அதன் பிறகு பேச்சுக்கு கூட ஏன் விசாலாட்சியையும் பேத்தியையும் பெரியவர்கள் இருவரும் கண்டுக் கொள்ளவில்லை.
பாஸ்கரனோ பெண்பிள்ளையை பெற்றதற்கு மனைவியை குறை கூறிவிட்டுச் செல்ல, இதையெல்லாம் எதிர்பார்த்தது போல் சிலையாகவே பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
பிள்ளை பெற்றவள் என்ற சிறு கரிசனம் கூட மற்றவர்களுக்கு தோன்றவில்லை. அவ்வீட்டில் பணிபுரியும் பெண்கள் தான் தாயையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டனர்.