விசாலாட்சியோ தன் தாயின் பெயர் கவிதா என்று மூத்த மகளுக்கு வைத்தாள்.
ஆம் பனிமலரின் அன்னையே தான் பிறைசூடனின் அக்கா. அக்கா மகள் என்றே தெரியாமல் விரும்ப ஆரம்பித்து இருந்தான் பிறைசூடன்.
அதன் பின் அவ்வீட்டில் விசாலாட்சியையும் கவிதாவையும் ஏன் என்று கூட அவளிடத்தில் மற்றவர்கள் எதையும் விசாரிக்கவில்லை. முதல் குழந்தை பிறந்த எட்டே மாதத்தில் பாஸ்கரனின் அடுத்த கொடுமைகள் அரங்கேற, அனைத்துமே பொறுத்துக் கொண்டு வாழ்க்கை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.
முதல் பிள்ளைக்கு பத்து வயது அடைந்தும் விசாலாட்சி அடுத்த கருவை சுமக்காமல் இருப்பதை எண்ணி ஆத்திரம் கொண்ட பாஸ்கரன் அன்று மனைவியை மிருகத்தை விட அதிக அளவில் துன்புறுத்தி தன் கோபத்தை தணித்துக் கொண்டான்.
பிள்ளையோ அன்னையின் கதறலை கேட்டு அழுதுக் கொண்டே தாத்தா பாட்டியிடம் கூற, அவர்களோ “என்னடி கொழுப்பா. பொம்பளை புள்ளைங்க அடக்க ஒடுக்கமா இருக்கணும். இந்த வயசுலே ஆத்தாகாரிக்கு வக்காலத்து வாங்கிட்டு வரீயா நீ? அடுத்த புள்ளையை பெத்துக்க வக்கில்லை என் மவனை தடுக்க நான் வரணுமா?” என்று சோலையரசி சிறு மனிதாபிமானம் இன்றி பேசியதை கேட்ட பிள்ளைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை அன்னையின் அறை கதவு இன்னும் மூடி இருப்பதை பார்த்து விட்டு நேராக பூஜை அறையின் முன் வந்து அமர்ந்து கண்ணீர் மல்க வேண்ட ஆரம்பித்து விட்டாள்.
“சாமி… சாமி என் அம்மா ரொம்ப பாவம். என் அப்பா எங்களுக்கு வேணாம். எப்படியாவது என் அப்பாவுக்கு தண்டனை கொடு” என்று பத்து வயதில் இருக்கரம் கூப்பி தேம்பலுடனே கடவுளிடம் மன்றாடினாள்.
பெரியவர்களின் கதறலில் செவி சாய்க்காத அந்த தெய்வம்!
சிறுபிள்ளையின் கோரிகை கடவுள் செவிகளில் விழுந்து இருக்கும் போல், விசாலாட்சி அடுத்த கருவை சுமந்த நேரம் பாஸ்கரனுக்கு விபத்து நேர்ந்து அதில் அவரின் ஆண்மை தன்மையை இழுந்து விட, அவமானத்தில் ஆறு மாசம் வீட்டை விட்டு கூட வெளியேச் செல்லவில்லை பாஸ்கரன்.
பாஸ்கரனின் விபத்தை பற்றி கேள்விப் பட்ட ஊர்மக்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். “என்ன ஆட்டம் ஆடி இருப்பான். அந்த கடவுள் இப்போ மொத்தமா எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டாரா?” என்று தணிகைவேலுவின் வாசலிலே பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வந்து சாபத்தை அள்ளி வீசிவிட்டுச் சென்றனர்.
தணிகைவேலுக்கோ அசிங்கமாகி போனது. அதன் விளைவு மகனை கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஸ்கரனோ அப்பொழுது தான் ஆத்திரத்தில் முதல்முறை தந்தையை அடிக்க கை ஓங்கி விட, அதில் உறைந்து போனார் தணிகைவேல்.
சோலையரசி தான் நிலைமை புரிந்து மகனை அடக்கி அனுப்பியவர் உடைந்து போய் நின்று இருந்த கணவனை வருத்தத்துடன் பார்த்து சமாதானப்படுத்தினார்.
ஆனால் இத்தனை கலவரத்திலும் விசாலாட்சியும் சரி அவள் பெண்ணும் சரி ஏன் என்று அவர்களை பார்க்கவில்லை. அமைதியாக தங்கள் வேலைகளை செய்துக் கொண்டு இருந்தனர்.
அதை பார்த்த சோலையரசிக்கு தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“எல்லாம் அவ வயித்துல வளர இரண்டு சனியனுகளால வந்தது. பிள்ளையை சுமக்க சொன்னா குட்டி சூனியக்காரிகளை சுமந்துட்டு இருக்கா. அன்னிக்கே அந்த மருத்துவச்சி கிட்ட சொன்னேன். இரட்டை கரு எல்லாம் எங்க வம்சத்துக்கு ஆகாது அழிச்சிடுனு. கேட்டாளா அந்த மருத்துவச்சி. சிசு வளர ஆரம்பிச்சிடுச்சுனு கதை விட்டு போயிட்டா. ஆனால் இப்போ தப்பு தப்பா நடக்குறதுக்கு காரணமே இவளோட வயித்துல வளர பிசாசுங்களால தான்” என்று கருவில் வளரும் இரட்டை பிள்ளைகளை குற்றம் சாட்ட ஆரம்பித்தார் சோலையரசி.
அதுவரை அனைத்தையும் தாங்கிப் போன விசாலாட்சி, தன் குழந்தைகளை பற்றி பேசியதும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அனல் வீசும் ஒரே பார்வை தான் தன் மாமியாரை நோக்கி செலுத்தினாள்.
அவள் வார்த்தைகளால் சண்டை போடவில்லை. கோபத்தால் எதையும் போட்டு உடைக்கவில்லை. ஒரு பார்வை ஒரே பார்வை தான் வீசினாள் அனல் தெறிக்க. அதிலே தன் வாயை கப்பென்று மூடிக் கொண்டார் சோலையரசி.
அதன் பின் விசாலாட்சியின் பிரசவ நாள் வர, முன்பு பிரசவம் பார்த்த அதே மருத்துவச்சி வந்து வைத்தியம் பார்த்தவருக்கே அத்தனை மகிழ்ச்சி.
முதலில் ஜனித்தது ஆண் பிள்ளை தான்.
“ஆத்தா உனக்கு விடிவுகாலம் வந்துடுச்சும்மா” என்று சொல்லிக் கொண்டே அடுத்த பிள்ளையை கையில் ஏந்தியவரின் முகம் சுருங்கி போனது.
ஆம் அது பெண் பிள்ளையே தான். மருத்துவச்சியின் முகம் சுருங்கி இருப்பதை வைத்தே இரண்டாவது பிள்ளை பெண் பிள்ளை என்று உணர்ந்த விசாலாட்சி, வலியை பொறுத்துக் கொண்டு முதலில் வாங்கியது என்னவோ அந்த பெண் குழந்தையை தான்.
அவள் நெற்றியில் மென்மையாக முத்திரை பதித்தவள் “என்னோட தங்கம் இவ” என்று மருத்துவச்சியை பார்த்து கூறிவிட்டு ஆண்பிள்ளையை இன்னொரு கரத்தில் பெற்றுக் கொண்டவள் அதே போல் மென்மையாக முத்திரை பதித்து “அக்காவையும் தங்கச்சியையும் பாதுகாக்க வந்த ராஜா இவன்” என்று சொல்லி புன்னகைத்துக் கொண்டாள்.
விஷயம் அனைவரின் செவிகளிலும் சென்றடைய, ஆர்வத்தோடு உள்ளே வந்த மூவருமே ஆண் பிள்ளையை தான் தூக்கி கொஞ்சினர். அவனுடன் பிறந்த பெண் பிள்ளையை ஏன் என்றும் சீண்டவில்லை.
விசாலாட்சியும் இதை எதிர்பார்த்தது போல் ஆழ்ந்தமூச்சு எடுத்துக் கொண்டவள், இருப்பிள்ளைகளையும் தன் கண்ணிமை போல் பத்திரமாக பார்த்துக் கொண்டாள்.
தனக்கு தம்பியும் தங்கச்சியும் பிறந்து இருப்பதை கேள்விப்பட்ட மூத்த பெண்ணோ முதலில் பார்த்தது தங்கையை தான்.
தாயை போல் பிள்ளைனு சும்மாவா சொன்னார்கள்.
“அம்மா இவளை பாருங்களேன் எவ்வளவு குட்டியா இருக்கா” என்று தாயிடம் பரவசப்பட்டவள் அடுத்து தம்பியை காண அதே மகிழ்ச்சி தான் அவனிடமும்.
அதன் பிறகு ஆண்பிள்ளைக்கு தணிகைவேல் தான் பெயர் சூட்டுவேன் என்று ஒரே பிடிவாதத்தில் நிற்க, அதுவரை மௌனமாக இருந்த விசாலாட்சி பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் அவள் தந்தை பெயர் பிறைசூடன் என்று பதிவுசெய்தாள். மூன்றாவது பிள்ளைக்கு கீதா என்று வைத்தாள்.
எப்பொழுதுமே தன் எதிர்ப்பை மௌனமாக இருந்து செயலிலே காட்டி விடுவாள் விசாலாட்சி.
இதயமே இல்லாத அவர்களிடம் சண்டை போட்டு தன் உடலை வருத்திக் கொள்வதை விட, மௌனமாக தன் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது போல் விசாலாட்சி பிள்ளைகளுக்கு தேவையானதை அமைதியாகவே செய்ய ஆரம்பித்தாள்.
தணிகைவேலுக்கு தான் அவமானமாகி போனது. தான் சூட்ட வேண்டும் என்று ஒரு பெயரை சொல்லியும் தன்னை மதிக்காமல் அவமதித்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதன் விளைவு பச்ச உடம்புக்காரி என்றும் பார்க்காமல் பாஸ்கரன் மனைவியை அடித்து காயத்தை கொடுத்தது தான்.
இவை அனைத்துமே எதிர்ப்பாத்து இருந்ததாலோ என்னவோ அழுத்தக்காரி போல் இருந்து விட்டார் விசாலாட்சி.
அதன் பின் பிள்ளைகள் வளர ஆரம்பிக்க, விசாலாட்சி நினைத்தது போலவே பிறைசூடன் தன் அக்கா தங்கையின் மீது அத்தனை அன்பும் தங்கையை பாதுகாப்பவன் போலவும் வர ஆரம்பித்தான்.
என்ன தான் கவிதா இவர்களை விட பத்து வயது மூத்தவளாக இருந்தாலும், தம்பி தங்கையுடன் இருக்கும் போது சிறுப்பிள்ளை போல் மாறினாலும், தாயை போலவே இருவரையும் பார்த்துக் கொண்டாள்.
தணிகைவேலும் சரி சோலையரசியும் சரி ஏன் பாஸ்கரன் கூட ஆண் பிள்ளைக்கு செய்யும் சலுகையை பெண் பிள்ளைகளுக்கு ஒரு துளி கூட செய்யவில்லை.
இதனாலே விசாலாட்சிக்கு சிறு பயம் ஏற்பட ஆரம்பித்தது. எங்கே மகனை அவர்கள் புறம் இழுத்து விடுவார்களோ? இல்லை பிறைசூடனை அவன் தந்தை போல் வளர்த்து விடுவார்களோ என்ற அச்சம் அவரின் நெஞ்சில் இருக்க, அதை உடைக்கும் விதமாக விவரம் தெரிந்த பின் பிறைசூடன் தன் தாத்தா, பாட்டி,அப்பாவை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான்.
தனக்காக செய்யும் அனைத்தையும் அக்கா தங்கைக்கும் பிடிவாதமாக செய்ய வைத்தான்.
முதலில் தணிகைவேல் “பொம்பளை பிள்ளைங்களுக்கு அத்தனை சலுகை செய்ய கூடாது ராசா” என்ற சொன்னவரிடம்,
“அப்போ பாட்டியும் ஒரு பொண்ணு தானே தாத்தா. அப்ப அவங்களையும் அம்மா,அக்கா,தங்கச்சி மாதிரி பழைய ட்ரெஸ், பழைய சாப்பாடு வெறும் தரையில ஓரமா இருக்கிற ரூம்ல படுக்க சொல்லுங்க. அவங்க ஏன் டெயிலி உங்க கூட மெத்தையில் படுக்குறாங்க. என் அம்மா எப்போவும் அப்பா கூட படுக்க மாட்டாங்க. எங்க மூணு பேர் கூட தான் தூங்குவாங்க. அது போல பாட்டியை அவங்களோட பையன் கூட தூங்க சொல்லுங்க” என்று எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தவனை பேச்சின்றி பார்க்க ஆரம்பித்தனர் மூவரும்.
அதன் பிறகு தான் அவனுக்கு செய்யும் அனைத்தையுமே அக்கா தங்கைக்கும் செய்ய வைத்தான்.
தாயிடம் இருந்த அழுத்தம் அவனிடமும் இருந்தது.
கவிதா, பிறைசூடன், கீதா மூவரின் ஒற்றுமையை கண்டு தாயின் உள்ளம் குளிர்ந்து போகும்.
அவர்கள் தந்தை போல் மூவரும் இல்லை என்ற பெரும் நிம்மதி விசாலாட்சியிடம்.
இப்படியே காலங்கள் கடந்து போக, எத்தனை துன்பங்கள் இருந்தாலும் பிள்ளைகளால் நிம்மதியாக இருந்த விசாலாட்சிக்கு பதினெட்டு வயதான கவிதா திடீரென்று வேறு சாதி பையனுடன் ஊரை விட்டு ஓடி போய்விட்டாள் என்ற செய்தி விசாலாட்சியை மொத்தமாக உடைந்து போக வைத்தது.
இதன் விளைவு மீண்டும் பாஸ்கரன் விசாலாட்சியை அடித்து துவைத்தது தான் மிச்சம். என்ன இம்முறை தணிகைவேல் மற்றும் சோலையரசியும் உடன் சேர்ந்து விசாலாட்சியை ஒன்றாக சேர்ந்து வார்த்தையாலும் கையாலும் வலுவாக தாக்கினர்.
அனைத்துமே தாங்கிக் கொண்டு இருந்த விசாலாட்சியின் மனமோ யாரை நம்பி போய் கஷ்டப்படுறாளோ என்று அந்த நிலையிலும் மகளின் வாழ்க்கையை எண்ணி தான் பயந்து போனார்.
எட்டு வயது பிறைசூடனிடம் ‘தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே நான் பேசி புரிய வைத்து இருப்பேனே’ என்ற மனமுடைந்து புலம்பினார்.
அந்த வயதில் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. அந்த மூன்று மிருகங்களிடமிருந்து தாயையும் தங்கையையும் காப்பாற்றி அவர்களுக்கு அரணாக இருக்க ஆரம்பித்தான் பிறைசூடன்.
தான் நேசிப்பவர்களை மற்றவர்கள் காயப்படுத்துவதை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அவனின் நேசத்திற்கு உரியவர்களை யாரையும் காயப்படுத்த விட மாட்டான் அவனும் காயப்படுத்த மாட்டான்.
யாராவது தாயிடம் வந்தாலே அவருக்கு முன் நின்று முறைத்து பார்ப்பான். அவ்வீட்டில் ஆண் பிள்ளைக்கு உரிமையும் பலமும் அதிகம் என்பதால் அமைதியாக இருந்து விடுவார்காள்.
பின் சென்றவர்கள் வேறு சாதி பையனை எப்படி தங்கள் சாதி பெண் இழுத்துக் கொண்டு போகலாம் என்று வெறிக் கொண்டு தேட ஆரம்பித்தனர்.
எப்படி தங்கள் சாதி பெண் தான். அவர்கள் வீட்டுப் பெண் என்று அந்நொடி கூட யார் மனதிலும் பதியவில்லை.