வேறு சாதிப் பையனுடன் ஓடி போன கவிதாவை தேட ஆரம்பித்தவர்களுக்கு,
ஐந்து வருடங்கள் கழித்து ஒன்பது மாத கருவை சுமந்துக் கொண்டு அவ்வூரில் உள்ள அவர்கள் குல தெய்வ கோவிலுக்கு வந்து இறங்கினர் கவிதாவும் அன்புவும்.
அந்த செய்தியை கேள்விப்பட்ட குணா சாதி வெறியில் பாஸ்கரனை ஏற்றி விட்டான்.
“இங்க பாரு பாஸ்கரா ஆயிரம் தான் உன் பொண்ணா இருந்தாலும் அவ நம்ம சாதிக்காரி. ஆனா அவளை இழுத்துட்டு ஓடினான் பாரு அவன் நமக்கு கீழே உள்ள ஆளுங்க. நம்ம சாதிக்காரி பொண்ணு கீழ் சாதிக்காரனை கட்டிக்கிட்டு இப்போ வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நிக்குறா. இது நம்ம சாதிக்கு செய்ற களங்கம். அப்படி களங்கம் செய்தவளை எப்படியோ வாழ்ந்துட்டு போனு விட சொல்றீயா?” என்று பேசி பேசியே நண்பன் என்று பெயரை வைத்துக் கொண்டு நயவஞ்சகத்தை ஏற்றிக் கொண்டு இருந்தான் குணா.
குணாவின் மகுடியில் மயங்கி போன பாஸ்கரனும் அருவாளை எடுத்துக் கொண்டு ஆத்திரத்துடன் மகளை தேடி கோவிலுக்குச் சென்றவர் பாதம் அப்படியே நின்றது.
அங்கே இவருக்கு முன் தன் அக்கா வந்த விஷயம் கேள்விப்பட்ட பன்னிரெண்டு வயதான பிறைசூடன் தன் அக்காவையும் மாமாவையும் வலுக்கட்டாயமாக அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
கீழ் சாதிப் பையனை கல்யாணம் செய்துக் கொண்டு ஊருக்குள் வந்ததையே பொறுத்துக் கொள்ள முடியாத பாஸ்கரனால் அவர் வீட்டிற்கே மகன் அழைத்துக் கொண்டு போவதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியுமா என்ன? அதுவும் நண்பன் என்ற பெயரில் ஏற்றி விடும் விஷம் ஊசி அருகில் இருக்கும் போது.
தம்பி வளர்ந்து இருப்பதை பார்த்த கவிதாவிற்கு வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் தான் வழிந்தது.
“இந்த அக்கா மேல கோபமா பிறை?” என்று கேட்ட அக்காவிடம் ஆம் என்று தலையை ஆட்டியவன்,
“ஒரு வார்த்தை அம்மா கிட்ட சொல்லி இருக்கலாம்ல அக்கா. பாவம் அம்மா டெயிலி உன்னை நினைச்சி அழாத நாளில்லை” என்று வீட்டில் நடந்ததை சொல்லிக் கொண்டே இருவரையும் அழைத்துக் கொண்டு முதலில் உள்ளேச் சென்ற பிறைசூடனை தொடர்ந்து வீட்டு வாசலில் கவிதாவும் அன்பும் கால் வைத்த அந்த கணம், அன்புவின் அலறல் சத்தமும் கவிதாவின் முகத்தில் தெறித்த குருதியும் தான் அவர்களை வரவேற்றறது அவ்வீடு.
அதிர்ச்சியில் நடுங்கியபடி திரும்பி பார்த்த கவிதாவிற்கு மேலும் பயத்தை ஏற்படுத்தும் விதமாக அங்கே பாஸ்கரன் முகம் எல்லாம் அன்புவின் குருதி வழிய கையில் அருவாளோடு மிருகமாக நின்று இருந்த தந்தையை பார்த்ததுமே அவள் கரம் தன்னிச்சையாக வயிற்றில் வளரும் கருவை தான் பாதுகாக்கச் சென்றது.
பிறைசூடனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. தன்னுடன் சிரித்து பேசிக் கொண்டு வந்த இருவரில் ஒருவர் இப்பொழுது உயிரற்று கிடப்பதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பயம் ஏற்பட்டாலும் அவன் எதிரே இன்னும் ஆத்திரத்துடன் நின்று இருந்த தந்தையை கண்டவனுக்கு கோபம் பல மடங்கு அதிகமானது.
கவிதாவிற்கோ அழுகை,கோபம், ஆத்திரம், இயலாமை என்று மொத்தமாக உடைந்து போனவள் உயிரின்றி கிடந்த கணவன் அருகில் அமர்ந்து கதறி துடித்தாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த விசாலாட்சியிற்கு ஒரு கணம் இதயமே நின்று போனது.
ஆசை மகளை மீண்டும் இக்கோலத்தில் கண்டதை எண்ணி துடித்து போனவர் வயித்து பிள்ளையுடன் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த மகளிடம் ஓடிப் போனவர் அவளை இழுத்து தன் பின்னால் நிற்க வைத்துக் கொண்டார்.
பாஸ்கரனோ “அவளை விடுடி. கீழ் சாதிக்காரனோடு ஓடி போயி வயித்து சுமையை வாங்கிட்டு வந்து இருக்கா. அவளை கூறு கூறா வெட்டி போட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்” என்று சொல்லியபடி விசாலாட்சியின் முன்னே வர, தாயையும் தமக்கையையும் காப்பது போல் அவர்களுக்கு முன் அரணாக வந்து நின்றான் பிறைசூடன்.
மகனை கண்டதுமே பாஸ்கரன் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தவர் “பிறைசூடா ஒழுங்கா அப்பா பின்னாடி வந்திடு. உன் அக்காகாரி அசிங்கம் பண்ணிட்டு வந்து நிக்குறா. இவளால நம்ம சாதிக்கே அவமானம். அந்த அவமானத்தை போக்கணும்னா இவளை வெட்டி போட்டா தான் போவும்” என்று பற்களை கடித்தபடி பேசியவரை அருவெறுப்பாக பார்த்தான் பிறைசூடன்.
மனதில் பயம் இருந்தாலும் தான் தான் அம்மாவையும் அக்காவையும் பாதுகாக்க வேண்டும் என்று உறுதியாக நின்றவன் “என்னால தான் இவங்க இரண்டு பேரும் இங்கே வந்தாங்க. இப்போ மாமா உயிரோடு இல்லாம போனதுக்கு காரணம் நான் தான். அதே போல என் அக்காவை என்னால் இழக்க முடியாது” என்று சொன்னவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார் பாஸ்கரன்.
“யாரு யாருக்குடா மாமா. இந்த நாய் உனக்கு மாமாவா?” என்று ஆத்திரமாக கேட்டவரை பயம் கலந்த கோபத்துடன் முறைத்தான்.
அந்நேரம் கவிதாவிற்கு பயத்தில் பிரசவ வலி ஏற்பட, விசாலாட்சியோ கணவனை அழுத்தமாக பார்த்து விட்டு கண்ணீரோடு மகளை அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்றார்.
இவை அனைத்தையும் பயத்துடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த கீதாவிற்கு ஜீரமே வந்து விட்டது.
தணிகைவேலுவும் சோலையரசியும் விருந்தினர் விஷேசத்திற்குச் சென்று இருந்ததால் வலியில் துடித்துக் கொண்டு இருந்த மகளை வீட்டினுள் அழைத்து போக எந்த தடையும் இல்லாமல் போனது விசாலாட்சிக்கு.
கவிதாவிற்கோ தன் மீது அத்தனை அன்பு வைத்து இருந்த கணவன் தன்னை விட்டு போய் விட்டாரே என்ற துயரம் நெஞ்சை அடைக்க, அதன் விளைவு பிரசவ வலியை கொடுத்து விட, வேறு வழியின்றி உயிரற்று இருந்த கணவனை விழி முழுவதும் நிரப்பிக் கொண்டு உள்ளே தாயுடன் சென்றவள் பிரசவ வலியிலும்,
“அம்மா என்னை மன்னிச்சிடும்மா… உனக்கு துரோகம் பண்ணிட்டு போனதால தான் எனக்கு இப்போ இந்த நிலைமை” என்று வலியில் பற்களை கடித்துக் கொண்டு சொல்லும் மகளின் தலையை ஆதரவாக வருடிய விசாலாட்சி,
“உனக்கு பிடிச்சவன் கூட தானே போன. ஆரம்பத்தில் பயமா தான் இருந்துச்சுடா. எங்கே என்னை போல உன் வாழ்க்கை மாறிடுமோனு. ஆனால் ஏதோ ஒன்னு நீ நல்லா இருக்கனு என் உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சு. அப்படியே கண்ணுக்கு மறைவா இருந்திட வேண்டியது தானேம்மா. ஏன்ம்மா திரும்ப இந்த காட்டுமிராண்டிங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்ட?” என்று மகளிடம் கேட்டுக் கொண்டே அவளுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.
ஏற்கனவே மூன்று பிள்ளைகளை பெற்றதாலோ என்னவோ அந்த அனுபவத்தில் மகளுக்கு தாயே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.
வெளியே பிறைசூடனோ தன் தகப்பனை வீட்டினுள் விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தான். வீட்டு வாசல் முழுவதும் அன்புவின் ரத்தம் ஆறாக ஓடியது.
உள்ளே வலியில் கவிதா “என்னோட பொண்ணுக்காக தான்ம்மா வந்தேன்” என்று சொன்ன மகளை ஒரு கணம் திகைத்து பார்த்தார்.
“பொண்ணா?”
“ஆமாம்மா எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவ பேர் பனிமலர்” என்று அவள் சொல்லி முடித்த கணம் வீல்லென்று அழுகையுடன் கவிதாவின் இரண்டாம் குழந்தை இப்புவியை காண வந்தது.
கையில் ஏந்திய பேரனை பார்த்த விசாலாட்சிக்கு கண்ணீர்.
“பையன்ம்மா” என்று குரல் தழுதழுக்க சொன்ன விசாலாட்சியின் செவியில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.
அதில் உணர்வுக்கு வந்தவர் கடகடவென தாயிற்கும் பிள்ளைக்கான தொடர்புள்ள தொப்புள் கொடியை அறுத்தவர் பிள்ளையை ஒரு துணியில் சுற்றி தன் மார்போடு அணைத்துக் கொண்டு மகளை எழுப்ப வந்தார்.
கவிதாவிற்கு மனதிலும் உடலிலும் சுத்தமாக தெம்பு இல்லாமல் போக, குழந்தையை கவிதா அருகில் வைத்து விட்டு மெதுவாக அவளை எழுப்ப உதவி செய்த அன்னையிடம்,
தன் வாழ்க்கையின் இறுதி நொடி இது தான் என்று உணர்ந்தவளாக தன் இருக்கரம் கூப்பி “என் குழந்தைகளை எப்படியாவது காப்பாத்தும்மா” என மன்றாடிய அந்த கணம் கதவை உடைத்துக் கொண்டு பாஸ்கரன் ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தார்.
மகள் படுத்த நிலையில் கையெடுத்து வேண்டியபடி மனைவிடம் ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பதையும் அவள் அருகில் பிறந்த குழந்தை இருப்பதும் பார்த்த பாஸ்கரன் கோபத்துடன்,
“என்னடி சொல்றா அவ?” என்று கேட்டுக் கொண்டே அவர்களை நெருங்கினார்.
பிறைசூடனோ தன்னால் முடிந்தவரை தந்தையை தடுத்தவனை பின்னால் கமுக்கமாக இருந்த குணா பிடித்துக் கொள்ள, வெறியோடு உள்ளேச் சென்றார்.
பிறைசூடனோ சட்டென குணாவின் கையை கடித்து விட்டு, கீழே தள்ளி தப்பித்து பாஸ்கரனுக்கு முன்னால் சென்று நின்றான்.
பிறைசூடன் சற்று பலமாக தள்ளியதில் போதையிலிருந்த குணா கீழே இருந்த கல்லில் விழுந்து பின்னந்தலையில் சிறிதாக அடிப்பட, போதையின் வீழ்ச்சியில் அப்படியே மயங்கி போனான்.
உள்ளே பிறைசூடனோ “வேணாம்ப்பா அக்கா ரொம்ப பாவம்” என்று பயத்துடனே கூறியவனை பார்த்த கவிதா வலியை பொறுத்துக் கொண்டு தம்பியை தன் அருகில் அழைத்தாள்.
பிறைசூடனும் உடனே கவிதா அருகில் செல்ல, அவர்களை நெருங்க நினைத்த பாஸ்கரனை தடுப்பது போல் முன் வந்து நின்றார் விசாலாட்சி.
கவிதா சட்டென்று தன் அருகில் இருந்த குழந்தையை எடுத்து கண்ணீரோடு பிள்ளையின் முகத்தை ஆசை தீர பார்த்துக் கொண்டவள் “இந்த அம்மாவை மன்னிச்சுடுடா. நான் திரும்ப இங்கே வந்து இருக்க கூடாது. இனிமேல் மாமா தான் உனக்கு எல்லாம்” என்று சொல்லி நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தவளின் வலி ஒரு தாயாக விசாலாட்சிக்கு புரிந்தது. அவர் கண்ணிலும் கண்ணீர். கணவன் மீது ஆத்திரம் தன் கையாலாகாத தனத்தை எண்ணி தன்னை தானே வெறுத்து போனார்.
கவிதா உதிரங்களால் நிறைந்து இருந்த குழந்தையை தம்பியின் கரத்தில் பத்திரமாக ஒப்படைத்தவள் “என் மகனை எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று மரணத்தின் விளிம்பிலும் கேட்டவரை பார்க்க பார்க்க பிறைசூடனுக்கே அழுகை.
அந்த நொடி அவன் கண்முன்னே உடன் பிறந்தவளை தகப்பனே வெட்டும் காட்சி தான் நிகழ்ந்தது.
விசாலாட்சிக்கோ நெஞ்சில் நீர் வற்றிப்போன உணர்வு. பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இருந்த மகனை தன் பின்னால் இழுத்து நிறுத்தியவர், மகளை காப்பாற்ற போராட முன்னே வந்தவரை ஒரே தள்ளாக கீழே தள்ளி விட்டு பச்ச உடம்புக்காரியை அப்படியே நாலு துண்டாக வெட்டி இருந்தார் பாஸ்கர்.
பிறைசூடனுக்கு அதுவரை இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியம் கூட எங்கோ பறந்து போனது.
மொத்த உடலும் நடுங்க ஆரம்பித்து விட, குழந்தையை அணைத்தபடி அவன் முன் கீழே விழுந்து இருந்த தாயின் அருகில் ஓடிச் சென்றான்.
மகனின் கையிலிருந்த குழந்தை கீழே விழுந்து விடும் நிலையில் இருப்பதை கவனித்த விசாலாட்சி தன் வலியை பொறுத்துக் கொண்டு பிள்ளையை தன் அணைப்பில் வாங்கிக் கொண்டார்.
பாஸ்கரனோ அதே ஆத்திரத்துடன் மனைவியின் புறம் திரும்பியவர் “அந்த சனியனை என் கிட்ட கொடுடி” என்று கையை நீட்டியவரை மரணப் பயத்தோடு பார்த்தார் விசாலாட்சி.
அவர்களை நோக்கி பாஸ்கரன் நெருங்கி வர, பயத்துடன் இருந்த விசாலாட்சியின் மூளையோ எப்படியாவது பிள்ளையை காப்பாற்றி விடு என்று மகளின் கடைசி கண்ணீர் உருவம் வந்துச் செல்ல, சட்டென்று அணைத்து இருந்த குழந்தையை மீண்டும் பிறைசூடனின் கரத்தில் ஒப்படைத்தவர் “இங்கே இருந்து போ பிறைசூடன். அம்மாவோட வீட்டுக்கு போ” என்று மெல்ல முணுமுணுத்தார்.
பிறைசூடனுக்கோ ஒரு பிஞ்சு குழந்தையை மீண்டும் கையில் ஏந்தியதும் உடல் குப்பென்று வியர்த்து போக, உடல் நடுக்கத்துடன் உதிரங்கள் படர்ந்து தன் கரங்களில் தவழ்ந்துக் கொண்டு இருந்த குழந்தையை கண்டான்.
பாஸ்கரனோ மகனை மிரட்ட ஆரம்பிக்க, அதை மகன் செவியில் விழ கூடாது என்று எண்ணிய விசாலாட்சி சத்தமாக “போடா…” என்று கத்தினார்.
அந்த கத்தலில் பிறைசூடன் தன் அன்னையை நிமிர்ந்து பார்த்து “நீங்களும் கீதாவும் என் கூட வந்துடுங்கம்மா” என்று கண்ணீரோடு சொன்னான்.
அவரோ “போடானு சொல்றேன்ல” என்று மீண்டும் அதட்டியவர் தரையிலிருந்து எழுந்து கணவனை பிடித்து பின்னால் தள்ளிவிட்டு மகனையும் பேரனையும் அழைத்துக் கொண்டு மகள் இருந்த அறைக்கு வந்தவர் கீதாவையும் பிறைசூடன் உடன் வெளியே அழைத்து வந்து அங்கே இருந்த ஓட்டுநரிடம் கையெடுத்து கும்பிட்டு மூவரையும் அழைத்துக் கொண்டு போகுமாறு மண்டியிட்டு அழுதார்.
அவரும் ஒரு ஓரமாக ஒளிந்துக் கொண்டு நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு எப்படி தப்பித்து போவது என்ற யோசனை தான்.
விசாலாட்சியை பற்றி அறிந்து இருந்தவருக்கு ஏனோ உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை.
சரியென்று மூன்று பேரையும் அங்கு நின்று இருந்த காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட போனவர் “நீங்களும் வாங்கம்மா. இங்கே இருந்தீங்கனா உங்களையும் கொன்றுவாங்க” என்று அழைத்தார்.
விசாலாட்சி இல்லை என்று அழுத்தமாக தலையை ஆட்டியவர் இருப்பிள்ளைகளை நம்பி ஒரு பச்சிளம் குழந்தையை ஒப்படைத்து அங்கே இருந்து அனுப்பி வைத்து இருந்தார்.
ஆத்திரத்துடன் வெளியே வந்த பாஸ்கரனோ “அதுங்களை தப்பிக்க விட்டுட்டா நான் விட்டுடுவேன் நினைச்சியாடி” என்று கத்தியவரை அனல் தெறிக்க பார்த்த விசாலாட்சியிற்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை.
அங்கே ஓரமாக இருந்த வாசல் பெருக்கும் விளக்குமாறை எடுத்து ஆக்ரோஷமாக பாஸ்கரனை கண்டமேனிக்கு தாக்க ஆரம்பித்தார்.
“சாவுடா சாவு… என் பொண்ணை என் கண்ணு முன்னாடியே வெட்டி போட்டுட்டியேடா படுபாவி. நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாதுடா. உன்னையெல்லாம் கருவிலே உங்க அம்மாக்காரி உன்னை கருவறுத்து போட்டு இருக்கணும். என் வயித்துல முதல் முதலா பூத்த பூவை மொத்தமா அழிச்சிட்டியேடா நாயே. அப்படி என்னடா சாதி வெறி உனக்கு த்தூ. உன்னோட சாதி வெறியில ஒரு குடும்பத்தையே உரு தெரியாம செஞ்சிட்டியேடா. நீயெல்லாம் இதுக்கு அப்புறம் உயிரோடவே இருக்க கூடாது” என்று சொல்லி சொல்லி வெறியோடு அடிக்க ஆரபித்தார் விசாலாட்சி.
அவருக்கு எங்கே இருந்து அவ்வளவு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. மனதில் இருந்த அத்தனை வலியையும் சேர்த்து விளக்குமாறு குச்சிகள் உடைந்து போய் விழும் அளவுக்கு அடித்துக் கொண்டு இருந்தார்.
மனைவியின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பாஸ்கரனோ சற்று தடுமாறி கீழே விழுந்து விட, அவர் கரத்திலிருந்த அருவாள் தள்ளி விட்டது.
விசாலாட்சியோ விளக்குமாறு குச்சி எல்லாம் சிதறி விழுந்ததும் தன் காலால் ஆத்திரத்துடன் எட்டி உதைக்க ஆரம்பித்தார்.
ஒரு தாயின் வலி அது. ஒரு தாயின் அழுத்தம் அது. ஒரு தாயின் கோபம் அது. ஒரு தாயின் கண்ணீர் அது. ஒரு தாயின் பிரிவின் காயம் அது. ஒரு தாயின் பாசம் அது. ஒரு தாயின் அன்பு அது. ஒரு தாயின் கடைசி காதல் அது.
ஆம் அவள் முதல் முதலாக ஆசையாக சுமந்து பெற்ற பிள்ளையை ஒரு தாயின் கண்முன் துடிதுடிக்க வெட்டி கொன்ற மரணவலி அது.
எப்பொழுதுமே ஒரு தாயிற்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் மூத்த பிள்ளையின் மீது தீராத அன்பு அதாவது காதல் எப்பொழுதுமே இருக்கும்.
அதை மொத்தமாக சிதைத்து விட்டால் ஒரு தாயின் கோபம் எத்தனை வீரியத்தை கொடுக்கும் என்பதை கண் கூட பார்க்க ஆரம்பித்தார் பாஸ்கரன்.
பாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து எட்டி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
ரத்த வெள்ளத்தில் ஒருவன் வீட்டு வாசலில் மரணித்து கிடப்பதும். ஆக்ரோஷமாக விசாலாட்சி பாஸ்கரனை போட்டு மிதிப்பதையும் பார்த்தவர்கள் யாருமே விசாலாட்சியை தடுக்க முன் வரவில்லை.
இது பாஸ்கரனுக்கு தேவை தான் என்று அமைதியாக இருந்து விட்டனர்.
அப்பொழுது விசாலாட்சி கண்ணில் அங்கே விழுந்து இருந்த அருவாள் பட, பத்ரகாளி போல் சிகை எல்லாம் விரிந்து இருந்து, கண்கள் சிவக்க கோபத்தின் உச்சியில் இருந்தவர் எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென்று குனிந்து அந்த அருவாளை கையில் எடுத்தவர் காளியாகவே மாறி இருந்தார்.
அதை பார்த்த பாஸ்கரனுக்கோ உயிர் பயம் நொடியில் வந்து ஒட்டிக் கொண்டது.
கணவனுக்கே உயிர் பயத்தை காட்டி விட்டார் அல்லவா அவர்.
அந்த நொடி ஊருக்கு போய் விட்டு திரும்பி வந்த தணிகைவேலும் சோலையரசியும் வீட்டின் முன் கும்பலாக இருப்பதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு உள்ளே வந்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது.
தாய் தந்தையை பார்த்ததுமே பாஸ்கரன் தட்டு தடுமாறி பெற்றோர்களுக்கு பின்னால் உயிர் பயத்தில் ஒளிந்துக் கொண்டார்.
விசாலாட்சியோ “நகர்ந்து போங்க இல்லனா உங்களையும் கொல்ல நான் தயங்க மாட்டேன்” என்று பித்து பிடித்தவர் போல் பேசியவரை பார்த்ததுமே பாஸ்கரன் அங்கே இருந்து தலைதெறிக்க ஓடி மறைந்து விட்டார்.
அன்று போனவர் தான் மீண்டும் பதினைந்து வருடங்கள் கழித்து தான் அந்த வீட்டின் வாசலில் காலை வைத்தார் பாஸ்கரன்.
அதன் பின் விசாலாட்சி தளர்ந்து போனவர் அப்படியே மயங்கி போக, தணிகைவேல் அங்கே மயக்கம் தெளிந்து எழுந்த குணாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துக் கொண்டவர் தன் பலத்தின் மூலமும் அவரின் ஜாதிக்காரனான காவல் அதிகாரியை வைத்து நடந்த சம்பவத்தை அப்படியே மூடி மறைத்து விட்டார்.
குணாவை வைத்தே கவிதா மற்றும் அன்புவின் உடலை மண்ணில் புதைத்து விட்டு மகனை தேடி அழைத்து வரும்படி கூறி குணாவை அனுப்பி வைத்தார்.
குணாவும் அன்று தேடி போனவன் தான் மீண்டும் பதினைந்து வருடங்கள் கழித்து தான் நண்பனுடன் ஊருக்கு திரும்பினான்.
அனைத்தையும் வலியோடு சொல்லி முடித்த விசாலாட்சி,
“அன்னிக்கு உங்க அக்கா சொன்ன பனிமலர் பெயரை தவிர எனக்கு வேற எதுவுமே என் பேத்தியை பத்தி தெரியாது. எங்கே என் பொண்ணுக்கு ஒரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சா அவளை தேடி அழிச்சிடுவாங்களோனு பயத்துல இந்த ரகசியத்தை எனக்குள்ளே மறைச்சி வச்சிக்கிட்டேன். ஆனால் பனிமலரை தேடாத இடமில்லை. என் உள் மனசு பனிமலர் எப்படியோ என் கிட்ட வருவானு சொல்லிட்டே இருந்துச்சு. இத்தனை வருஷத்துல இன்னிக்கு தான் பனிமலர் என்ற பெயரை இரண்டாவது தடவை கேட்கிறேன். அதான் உடனே அவளை பார்க்கணும்னு துடிச்சட்டு இருக்கேன் பிறைசூடன்” என்று கூறியவரை கண்கலங்க பார்த்தான்.
அவன் ஆழ்மனமும் பனிமலரை காணும் போது எல்லாம் ஏதோ ஒன்று அவளிடம் இழுத்துக் கொண்டு இருப்பது போல் உணர்வு தோன்றிக் கொண்டு தானே இருந்தது.
அதற்கான காரணம் ஒருவேளை அவள் தன் சொந்த அக்கா பெண்ணான அவன் முறைப்பெண் என்பதால் என்று யூகித்தவன் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு,
“நீங்க இங்கேயே இருங்கம்மா. நான் போய் பனிமலரை அழைச்சிட்டு வரேன்” என்று அழுத்தமாக கூறியவன் கவினிடமும் கீதாவிடமும் அன்னையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பனிமலரின் வீட்டை நோக்கிச் சென்றான்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்களில் அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் முகம் ஒரு வித ஆர்வத்தோடும் மனத்துள்ளலோடும் உரிமையான பாத சுவடுகள் எடுத்து வைத்து வீட்டினுள் சென்றவன் விழிகள் பேரதிர்ச்சியில் விரிந்து போக, பாதமோ தான் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து போக, சட்டென்று தேகத்தில் மின்னல் பாய்ந்தது போல்,
“பனிமலர் அவன் உன் தம்பிடி” என்று கத்தியதில் பனிமலரின் கரத்தில் இருந்த கத்தி அப்படியே அந்தரத்தில் நின்றது.