அவளோ “ப்ச்… அது இல்லை சார். இந்த காஞ்சமாடு டாப்பிக் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று திணறலுடன் கேட்டவளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நேற்று சந்தித்தது ஒருவேளை இவனாக இருக்குமோ? என்று.
அவளின் பதற்றத்தை வெகுவாக ரசித்தாலும், சிறிது பாவமாக தோன்ற நாற்காலியிலிருந்து எழுந்து தன் கோட் பட்டனை போட்டபடி “நீ யார் கிட்ட இந்த வார்த்தை சொன்னீயோ அவன் தான் சொன்னான். என்னுள் பாதி அவன்” என்று கூறியதை புரியாமல் பார்த்தாள் பனிமலர்.
‘ஒருவேளை இந்த காஞ்சமாடோட ப்ரெண்ட்டா இருப்பானோ அவன். அதான் சரியா சொல்லி இருக்கான். ஆனால் நான் இவனை பத்தி தான் சொன்னேன்னு அவனுக்கு எப்படி தெரியும்?’ என்று நேற்று பார்த்தவனை மனதில் கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டாள் பனிமலர்.
பனிமலரின் முகபாவனையை வைத்தே சரியாக யூகித்த பிறைசூடன் “அவன் என் கிட்ட நேரடியா சொல்லல மிஸ் பனிமலர். சும்மா கேஷுவலா பேசிட்டு இருந்தப்ப நேத்து நடந்ததை சொன்னான். அப்போ தான் இப்படி ஒரு பொண்ணை பார்த்தேன். எவனோ காஞ்சமாடாம். அவன் வேலை கொடுக்கலனு திட்டிட்டு இருந்தாள். வேலை கொடுக்காதவனை திட்டிட்டு இருந்தவள் திடீர்னு அந்த காஞ்சமாட்டையே சைட் அடிச்சதா சொல்றா… இப்படி தான் பேச்சு வாக்குல சொன்னான். பட் அந்த காஞ்சமாடு நான்னு அவனுக்கு தெரியாது. ஏன்னா அவனை போல நான் லூசு மாதிரி எல்லாமே உளறிட்டு இருக்க மாட்டேன்” என்று தன்னை தானே திட்டிக் கொண்டவனை பார்த்து அவன் மனசாட்சியே காரி துப்பிக் கொண்டது.
அதை கேட்ட பனிமலர் பேச்சற்று அப்படியே நின்று இருந்தவள் இப்பொழுது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.
‘அப்போ எனக்கு ஈவினீங்க்கு மேல கண்ணு தெரியாததையும் சொல்லிட்டானா? சைட் அடிச்சேன்னு சொன்னதையே சொல்லி இருக்கான். அப்போ கண்ணு தெரியாததையும் சொல்லி இருப்பான் தானே?’ என்று அவஸ்த்தையாக நின்றாள்.
மீண்டும் அவளின் மன ஓட்டத்தை புரிந்தவனாக பிறைசூடன் நேரடியாகவே “நீங்க ஒரு வேலைக்கு போகும் போது உங்களுடைய குறைபாடு என்னனு அதுல மென்ஷன் பண்ணிருக்கணும்ல பனிமலர். ஆனால் நீங்க அதை பண்ணாம மறைச்சு இருக்கீங்க. என் ஆபிஸ் இல்ல நீங்க எந்த கம்பெனிக்கு போகணும்னாலும் உங்களுடைய ஹெல்த் இஷ்யூ பத்தி டீடெயில் கேட்டிருப்பாங்க அதுல நீங்க உங்களுக்கு இருக்கிற ஹெல்த் இஷ்யூ பத்தி எழுதி இருக்கணும்.
மத்தவங்களுக்கு தெரிய கூடாதுனு நீங்க அசிங்கமா நினைச்சு இருந்தா நீங்க வேலையே தேட கூடாதே? வீட்ல சும்மா உட்கார்ந்துட்டு இருக்க வேண்டியது தானே? எதுக்கு சாதிக்கணும்னு வெளியே வரீங்க? உங்களை விட எத்தனையோ ஹெல்த் இஷ்யூ எல்லாம் வச்சிட்டு சாதிக்கணும்னு வெறியோட இருக்கிறவங்க எல்லாம் அசிங்கப்பட்டு தன்னை தானே வெளிப்படுத்தாம இருந்து இருந்தாங்கனா அது போல குறைபாடு இருக்கிறவங்க நிறைய பேர் சாதிச்சே இருந்து இருக்க மாட்டாங்க” என்று பட்டிமன்றத்தில் பேசுவது போல் அவன் பேசியதை கேட்ட பனிமலர்,
“உங்க பட்டிமன்றம் முடிஞ்சுதா சார்?” என்று கேட்டாள்.
பிறைசூடனோ “எதே பட்டிமன்றமா?” என்று கேட்டவன் மனம் ‘மூச்சு பிடிக்க ஒரு கருத்தை சொன்னா இந்த பன்னிக்குட்டி எமோஷனல் ஆகி பொங்கவே இல்ல?’ என்று நினைத்தவன் “நான் ஒன்னும்” என்று மீண்டும் ஆரம்பித்தவனை இடைமறித்து அவன் முன்னால் பேசியது போல்,
“நான் ஒன்னும் உங்க பட்டிமன்றத்தை கேட்க இங்கு வரல சார்” என்றவளை ஏற இறங்க பார்த்த பிறைசூடன்,
“சரிதான்” என நக்கலாக கூறிவிட்டு “ஓகே பனிமலர் உங்க கையில அப்பாயின்மென்ட் ஆஃபர் இருக்கு. சோ முடிவு பண்ணிட்டு என்னோட தனிப்பட்ட கேபினில் வந்து மீட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறி அவன் கேபினை நோக்கி நடந்தான் பிறைசூடன்.
பனிமலரோ சற்று வியப்புடன் “அப்போ இது அவருடைய கேபின் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டவளுக்கு உண்மையாகவே அடுத்து என்ன முடிவு செய்வது என்றே தெரியவில்லை.
நிச்சயமாக அவளுக்கு அவளுடைய கண்குறைபாடை வெளியே சொல்ல எல்லாம் தயக்கமோ அசிங்கமோ இல்லை. ஆனால் அதை வைத்து அவளிடம் யாராவது தவறாக நடந்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.
முழுமையாக கண் தெரியாதவர்களுக்கே எத்தனையோ பிரச்சனைகள் சில தீய எண்ணம் கொண்ட மனிதர்களால் வருகிறது. அப்படி இருக்க இப்படி இருப்பவளுக்கு எந்த சமயத்தில் எந்த ரூபத்தில் பிரச்சனைகள் வரும் என்று அவள் பயந்துக் கொண்டே வாழ்க்கையை நடத்த முடியாது அல்லவா!
குழப்பமான மனதுடன் சண்முகத்திற்கு அழைத்து வீடு வந்து சேர்ந்தவள் சோர்வுடன் சோபாவில் சரிந்தாள் பனிமலர்.
மகளின் சோர்ந்து போன முகத்தை பார்த்த அன்புகுமார், அவள் அருகில் அமர்ந்து தலையை வருடிக் கொடுத்து “ஏன்டா ஏதோ போல இருக்க?” என்று கேட்டவரிடம் அனைத்தையும் கூறி முடித்தாள் பனிமலர்.
அப்பொழுது அங்கே வந்த கவிதாவோ “இதுக்கு தான் சொன்னேன். வேலை எல்லாம் வேணாம். ஒழுங்கா வீட்டுல இருந்து கல்யாணம் பண்ணிட்டு போற வழியை பாருனு. கேட்டியாடி நீ?”
“அம்மா எப்போ பாரு கல்யாணம் தானா? ஏன் என்னை மாதிரி ஒரு பொண்ணு படிச்சி முடிச்சி வேலைக்கு எல்லாம் போக நினைக்க கூடாதா?”
“அப்படி நினைக்கிறவ எதுக்குடி இப்படி வந்து சோகமா புலம்பிட்டு இருக்கணும். தைரியமா முடிவு எடுக்க வேண்டியது தானே? எவன் என்ன சொன்னா என்ன? உன்னால முடியும்னு உனக்கு நம்பிக்கை இருந்தா எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு துணிச்சலா முடிவு பண்ணி இருக்கணும். அது தான் இந்த கவிதாவோட பொண்ணுக்கு அழகு” என்று கடுமையாக பேசினாலும் மகளின் புத்தியில் உரைப்பது போல் பேசிவிட்டு மீண்டும் சமையலறைக்குச் சென்றார்.
மனைவி பேசியதை கேட்ட அன்புவோ “நீ கவிதாவோட பொண்ணு மட்டும் இல்லடா. இந்த அன்போட பொண்ணும் கூட. அதனால தைரியமா இருடா. உனக்கு அந்த வேலைக்கு போகணும்னு தோணுச்சுனா போ. அது தான் டெயிலி கூப்பிட்டு வர நம்ம சண்முகம் இருக்கானே. இல்லையா சொல்லு இந்த அப்பாவே டெயிலி வந்து உன்னை அழைச்சு வரேன். நீ பள்ளிக்கூடம் போகும் போது கூட அப்பா தானே உன்னை கொண்டு போய் விட்டு அழைச்சு வருவேன்” என்று தன்மையாக சொன்னார்.
தாய்,தந்தை இருவரின் கூற்றுகளையும் கேட்ட பனிமலர் எண்ணங்களோ ‘இரண்டு பேருமே ஒரே விஷயத்தை தான் சொல்றாங்க. ஆனால் என்ன இரண்டு பேரும் வேற வேற குரல் தொனியில் சொல்றாங்க. அவ்வளவு தான் வித்தியாசம்’ என்று உள்ளுக்குள் நினைத்தவள் சிறிது புன்னகையுடன்,
“ஏன் இதே போல உங்க பொண்டாட்டிக்கு அன்பா சொல்ல வராதோ?” என்று கேட்டவளிடம் அடுப்படியிலிருந்து,
“அன்பா சொல்ல தான் உன் அப்பா அன்பு இருக்காரேடி” என்றார்.
அதை கேட்ட பனிமலர் “அப்பா உங்க பொண்டாட்டிக்கு காது ரொம்ப ஷார்ப் தான்”
“பின்ன என் மனைவியாச்சே. சரிடா நீ போய் ப்ரெஷாகிட்டு வா. நானும் போய் உங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று எழுந்து போனவரை மென்புன்னகையோடு பார்த்த பனிமலர் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.
குழப்பமான மனநிலை இப்பொழுது அவளிடம் இல்லை. அவள் அன்னை கூறியது போல் ‘எவன் என்ன நினைத்தால் என்ன? என்னால நிச்சயம் இந்த வேலையை செய்ய முடியும்’ என்று தெளிவான முகத்தோடு அவள் அறைக்குச் சென்றவள் மாற்று உடையை அணிந்துக் கொண்டு முகம் கைகால் எல்லாம் சுத்தம் செய்து விட்டு தாய் தந்தைக்கு உதவி செய்ய சமையலறைக்குச் சென்றாள்.
பின் மூவரும் சேர்ந்து பேசி சிரித்தபடி சமைத்து முடித்து மதிய உணவை உண்டு முடித்தனர்.
பனிமலரோ தாயையும் தந்தையையும் ஓய்வு எடுக்க கூறிவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்துக் கொண்டு இருந்த சமயம் அவளின் கைப்பேசி ஒலித்தது.
அவசரமாக கையை துடைத்தபடி கைப்பேசியை எடுத்து யாரென்று பார்த்தாள்.
புது எண்ணிலிருந்து அழைப்பு வரவே யோசனையுடன் அழைப்பை ஏற்று “ஹலோ யாரு?” என்றாள்.
எதிர்முனையில் “என்ன முடிவு எடுத்து இருக்கீங்க பனிமலர். நேரா என் கேபினுக்கு வருவீங்கனு பார்த்தேன். ஆனால் வெளியே போயிட்டதா சொன்னாங்க. சோ உங்களால இங்கே வேலை செய்ய முடியாதுனு முடிவு எடுத்துட்டு போயிட்டீங்க ரைட்” வேண்டுமென்றே தான் அவளை சீண்டி பார்க்க பேசினான் பிறைசூடன்.
அவனின் ஏளனமான குரலை கேட்ட பனிமலர் “என்னால முடியாதுனு நான் சொல்லவேயில்லையே சார். நாளையிலிருந்து ஜாயின் பண்ணிக்கிறேன். பட் அதுக்கு முன்னாடி எனக்கு சில கண்டிஷன் இருக்கு” என சொன்னதை கேட்ட பிறைசூடன்,
“இங்கே நான் பாஸா? இல்லை நீயா?” என்று கேட்டான்.
“இதுல என்ன சந்தேகம் சார். நிச்சயமா நீங்க தான்”
“அப்போ கண்டிஷன் நீ போடுற? ஆக்சுவலா கண்டிஷன் நான் தான் போடணும். இது போல ஹெல்த் இஷ்யூ இருக்கிற ஒரு ஆளை வேலைக்கு எடுக்குறதுக்கு” என்று சொன்னதை கேட்டு பனிமலர் தன் விழிகளை அழுத்தமாக மூடி திறந்தாள்.
பின் “நீங்க வேணும்னே என்னை இன்சல்ட் பண்றீங்கனு நல்லாவே தெரியுது சார். அதுக்காக உங்களை காஞ்சமாடுனு சொன்னதுக்காக மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன். பிகாஸ் நீங்க ஒரு காஞ்சமாடு தான். சோ என்னுடைய கண்டிஷன் என்னனு நான் நாளைக்கு வந்து சொல்றேன்” என்று வேகமாக அழைப்பை துண்டித்தாள்.
“அய்யோ பனி என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசி இருக்கியா? கோபத்துல அவன் கிட்டயே போய் காஞ்சமாடுனு சொல்லி வச்சி இருக்க. சும்மாவே உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறான். நாளைக்கு வச்சு செய்ய போறான்” என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டவள் கைபேசியில் “டிங்” என்று ஒரு ஒலி வர, வந்து இருந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.
அனுப்பியது வேறு யாருமில்லை அவளின் காஞ்சமாடே தான்.
“வெயிட்டிங் பார் டுமாரோ” என்று இருப்பதை பார்த்த பனிமலருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்த சமயம்,
“அடியே பாத்திரம் எல்லாம் அப்படியே போட்டு வச்சு இருக்க?” என்று கவிதாவின் குரலில் சமையலறையை நோக்கி ஓடினாள்.
அதே சமயம் தன் கேபினில் அமர்ந்து இருந்த பிறைசூடனோ “இவ திட்டினா மட்டும் கோபமே வர மாட்டிக்குதே ஏன்?” என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தான்.
அந்நேரம் அவன் இருந்த அறையை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் பிறைசூடனின் காரியதரிசி கீதா.
“எஸ் கீதா” என்று தன் கவனத்தை மடிக்கணினியில் செலுத்தினான்.
“சார் மீட்டிங் டைம் ஆச்சு. எல்லாரும் கான்பிரன்ஸ் ஹால்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று கூறியதை கேட்ட பிறைசூடன்,
“ஓகே. ஒரு பைவ் மினிட்ஸ்ல வரேன்” என்றவன் தன் மடிக்கணினியில் எதையோ தட்டச்சு செய்தான்.
கீதாவும் சரியென்பது போல் தலையை ஆட்டி விட்டு வெளியேறியவளின் பார்வை ஒரு கணம் அங்கே நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருந்த பிறைசூடன் மீது விழுந்தது. பின் அங்கே இருந்து வெளியேறியவளின் எண்ணங்கள் முழுவதும் நேற்றும் இன்றும் அந்த அலுவலகத்திற்குள் வந்துச் சென்ற பனிமலரை நினைத்து தான்.
“யார் அவள்?” என்ற கேள்வி கீதாவின் மூளையில் ஓடிக் கொண்டே இருக்க, அதை பற்றி பிறகு பிறைசூடனிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள் பனிமலர் எண்ணத்தை தள்ளி வைத்தாள்.
பின் பிறைசூடன் அந்த கலந்தாய்வு அறைக்குள் வந்தவனின் பார்வை தானாகவே காலையில் பனிமலர் அமர்ந்து இருந்த நாற்காலியில் விழுந்தது.
இப்பொழுது அதில் கீதா அமர்ந்து இருப்பதை பார்த்தவன் மனம் ஏனோ அதில் வேறு யாரும் அமர கூடாது என்று சிறுப்பிள்ளை போல் எடுத்து கூற, தன்னையும் அறியாமல் “மிஸ் கீதா நீங்க அடுத்த நாற்காலியில் உட்காருங்க” என்று கூறினான்.
அவன் கூறியதை புரியாமல் பார்த்தாலும் கீதா வேறு நாற்காலியில் அமர, அவளின் முகபாவனையை பார்த்த பிறைசூடன் எந்த பதிலும் கூறவில்லை. அமைதியாக அங்கே அமர்ந்து இருப்பவர்களுக்கு முன்னால் அமர்ந்து வேலை விஷயமாக பேச ஆரம்பித்தான்.
“ஹலோ கைய்ஸ் நம்மளுடைய நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் மிஸ் பியூட்டி ப்ராடக்ட் மாடல் காஸ்டியூம் தான். என்ன தான் அந்த கம்பெனி நடத்த போறது பியூட்டி ப்ராடக்ட்டா இருந்தாலும் அதில் முக்கியமா தேவைப்படுறது மாடல் போடுற கலர்ஃபுல்லான காஸ்ட்யூம் தான். இந்த டைமும் நம்ம கம்பெனி டிசைன் தான் அவங்க கம்பெனி தேர்ந்தெடுத்து இருக்காங்க. சோ அதுக்கான காஸ்ட்யூம் டிசைனோட பொறுப்பை யார் எடுத்துக்க போறீங்கனு நான் நாளைக்கு சொல்றேன். நாளைக்கு நம்ம ஆபிசுக்கு நியூ எம்ப்ளாயி வர போறாங்க. அவங்களோட வொர்க் ரொம்ப அழகா இருந்துச்சு. சோ நாளைக்கு அவங்க வந்ததும் நான் சொல்ற நாலு பேரோட நாளைக்கு வர போற அந்த எம்ப்ளாயியோட சேர்த்து யார் எனக்கு பிடிச்ச மாதிரி காஸ்ட்யூம் டிசைன் ரெடி பண்ணி தரீங்களோ அவங்க தான் மிஸ் பியூட்டி ப்ராடக்ட்டோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்டுக்கு என் கூட சேர்ந்து வேலை செய்ய போறது. சோ நம்ம நாளைக்கு திரும்ப மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு அங்கே இருந்து சென்று விட்டான் பிறைசூடன்.
ஆனால் அங்கே அமர்ந்து இருந்த இருபது எம்ப்ளாயிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
“என்ன இது புதுசா வர பொண்ணு நம்ம கூட சேர்ந்து போட்டி போட போகுதா? நமக்கு எல்லாம் ட்ராயிங் வச்சி தானே அடுத்த அடுத்த வேலையே கொடுத்தாங்க. இப்போ வர போற பொண்ணை மட்டும் நேரடியா பாஸ் தேர்ந்தெடுத்து இருக்காரு?” என்று அவர்களுக்குள் கிசுகிசு பேச ஆரம்பிக்க, அங்கேயே யோசனையுடன் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த கீதாவோ,
“என்ன எல்லாருக்கும் தைரியம் வந்துடுச்சா என்ன? சாரை பத்தி அவர் போனதும் பின்னாடி பேசுறீங்க. அப்படி ஒருத்தர் பேசினதுனால தானே அந்த நமிதா வேலையை விட்டு போனா. இப்போ அவளோட இடத்துக்கு இன்னொரு புது ஆளு வராங்க. அவங்க வரும் போதே நமக்கான நியூ ப்ராஜெக்ட் வருது. சோ வர பொண்ணோட திறமை என்னனு சோதிக்க வேணாமா? அதுக்கு தான் பாஸ் இந்த முடிவு எடுத்து இருக்காரு. ஏன் யார்னு தெரியாத பொண்ணை பார்த்து பயப்படுறீங்களா?” என்று கேட்டு அவர்களின் வாயை அடைத்தாள் கீதா.
அங்கே அமர்ந்து இருந்தவர்களோ “நாங்க ஏன் அந்த புது பொண்ணை பார்த்து பயப்படணும்? அதெல்லாம் இல்லையே. யார் வந்தா என்ன எங்க திறமையை நாங்க காட்ட போறோம்” என்று சிலர் கும்பலில் கூறிவிட்டு எழுந்துச் செல்ல, அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் எழுந்துச் செல்ல ஆரம்பித்தனர்.
அதன் பின் அன்றைய பணியை முடித்து விட்டு அவர் அவர்கள் இல்லம் நோக்கி புறப்பட, கீதாவோ நேராக சென்று பிறைசூடன் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
பிறைசூடனும் அவன் காரில் கீதா அமர்ந்து இருப்பதை பார்த்து நேராக காரினுள் ஏறி அமர்ந்தவன் நேரத்தை பார்த்தான்.
அதுவோ சாய்ங்காலம் ஆறுமணி என காட்ட, “உப்…” என்று பெருமூச்சு விட்டவன் “என்னடி ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டவனை முறைத்து பார்த்தாள் கீதா.