அத்தியாயம்- 4
“யாருடா அந்த பொண்ணு? நீ இப்படி எல்லாம் வேலை செய்றவங்க கிட்ட நடந்துக்க மாட்டியே? அதுவும் நம்ம வேணாம்னு ரிஜெக்ட் பண்ண பொண்ணை நீயே கூப்பிட்டு வேலை கொடுத்ததா சொல்றா பவித்ரா” என்று கேட்ட கீதாவை நிதானமாக பார்த்து,
“எனக்கும் தெரியல கீதா. இதுவரை எந்த பொண்ணுங்க கிட்டையும் உணராத ஒரு பீலிங்கை அந்த பொண்ணுகிட்ட உணர்ந்தேன். உனக்கே தெரியும் தானே நான் நம்ம வீட்டு ஆளுங்களை தவிர வெளியே அளவா தானே பேசுவேன். ஆனால் அந்த பன்னிக்குட்டி கூட மட்டும் ரொம்ப சாதாரணமா பேசுறேன். ஏதோ என்” என்று சொல்ல வந்தவனின் முதுகில் அடித்தாள் கீதா.
“என்னடா பொண்டாட்டினு சொல்ல போறீயா? பிச்சுடுவேன் ராஸ்கல். முன்ன பின்ன தெரியாதவங்களை எப்படி நம்புற நீ? என்ன பார்த்தவுடன் காதலோ?” என நக்கலாக கேட்டாள்.
பிறைசூடனோ அவள் அடித்தது எல்லாம் ஒரு அடி என்பது போல், காரை ஓட்ட ஆரம்பித்தவன் “அப்படி சொல்ல முடியாது. பட் ஒரு தனி பீல் இருக்கு” என்று கூறிய பிறைசூடனை வித்தியாசமாக பார்த்த கீதா,
“உன் போக்கே சரியில்லடா பிறை. நீ மீட்டிங் முடிச்சுட்டு போனதும் எல்லாரும் கிசுகிசுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நான் தான் ஏதோ பேசி சமாளிச்சேன்”
“நீ சமாளிச்சிப்பனு தெரியும். அதான் நான் எழுந்து வந்துட்டேன்” என்று கூறியவனை முறைத்து பார்த்தாள்.
பின் சற்று தயக்கத்துடன் கீதா “நாளைக்கு கோவிலுக்கு வருவீயாடா?” என்று கேட்க, சரியாக வீட்டின் முன் காரை நிறுத்திய பிறைசூடன் அவளின் கேள்வி எதை பற்றி என்று புரியவும் அவனுள் அடங்கி இருந்த கோபம் வெளியே வரவும் அப்பொழுது அந்த வீட்டிலிருந்து அஸ்வின் வரவும் சரியாக இருந்தது.
“இறங்கு வீடு வந்துடுச்சு” என்று இத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த புன்னகை எங்கோ காணாமல் போய் இறுக்கமாக மாறியது பிறைசூடனின் வதனம்.
அவளும் காரிலிருந்து இறங்கியவள் அங்கே நின்ற அஸ்வின் தலையை வருடிக் கொடுத்து “சாப்டியாடா?” என்று கேட்டாள்.
“ம் சாப்பிட்டேன் சித்தி. பாட்டி டிபன் கொடுத்தாங்க” என்று சொல்லி பிறைசூடனின் காரில் ஏறி அமர்ந்தான்.
பிறைசூடன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த கீதாவோ திரும்பி ஒரு முறை அவ்வீட்டின் மாடியை கண்டாள்.
அவள் நினைத்தது போல் அங்கே பெரும் ஏக்கத்துடன் பிறைசூடனின் அன்னை விசாலாட்சி நின்றுக் கொண்டு இருந்தார்.
அதை பார்த்த கீதாவோ சற்று குனிந்து “அண்ணா, அம்மா உன்னை தான்டா பார்த்துட்டு இருக்காங்க. ஒரு வாட்டியாவது அவங்க முகத்தை பாருண்ணா” என்று தன் அண்ணனிடம் கெஞ்சுதலாக கேட்டாள்.
ஆம் பிறைசூடனின் தங்கை தான் இந்த கீதா.
பிறைசூடனோ தன் தங்கையை அழுத்தமாக பார்த்து விட்டு விர்ரென்று அங்கே இருந்து புறப்பட்டான்.
அதில் பெண்ணவளின் கண்கள் வலியில் மூடி திறந்தது. பின் ஒரு ஆழமான மூச்சை எடுத்து விட்டவள் சிறிய புன்னகையுடன் உள்ளேச் சென்றாள்.
விசாலாட்சிக்கோ மகனின் பாராமுகம் வலியை கொடுக்க அமைதியாக மாடியிலிருந்து கீழே இறங்கினார்.
உள்ளே வந்த கீதாவை பார்த்த அவ்வீட்டின் பெரியவர் தணிகைவேல் “என்னம்மா உங்க அண்ணன் வெளியேவே விட்டு போய்ட்டானா?” என்று திமிராக கேட்டார்.
கீதாவோ இதுவரை தன் அண்ணன் அருகில் இருந்த துள்ளலை அடக்கிக் கொண்டு அமைதியான குரலில் “ஆமா தாத்தா” என்றாள்.
அதற்கு மேல் அவரும் எதுவும் பேசாமல் அவரின் கைப்பேசியை ஆராய தொடங்கினார்.
அப்பொழுது அங்கே வந்த தணிகைவேலுவின் துணைவி சோலையரசி “நில்லுடி” என்று கம்பீரமான குரலுடன் அறையிலிருந்து வெளியே வந்தார்.
பாட்டியின் குரலில் கீதாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்து விட, சிறு படப்படப்புடன் தான் அங்கே நின்று இருந்தாள்.
அவள் அருகில் வந்த சோலையரசியோ “ஆமா உங்க நொண்ணன் என்ன அந்த குட்டி பிசாசு சோத்து மூட்டையை இங்கே அனுப்பி இருக்கான். என்ன ஏதாவது வேவு பார்க்க அனுப்பினானா?” என்று வாயில் இருந்த வெத்தலையை மென்றபடி கேட்டார்.
தணிகைவேலும் மனைவியின் கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து பேத்தியை பார்க்க, அவள் மனமோ ‘அய்யோ இரண்டு டைனோசரும் என்னை தானே பார்க்குது. அவன் எதுக்கு அஸ்வினை இங்கே வர சொன்னான்னு தெரியலையே. இப்போ என்ன பொய் சொல்லி தப்பிச்சு போறது’ என்று தெரியாமல் தவித்த கீதாவை காப்பாற்றுவது போல்,
“நா… நான் தான் அத்தை பேரனை பார்க்கணும்னு பிறை கிட்ட சொன்னேன்” என்று ஆபத்தில் இருக்கும் மகளை காப்பாற்றினார் விசாலாட்சி.
மருமகளை ஏற இறங்க பார்த்த சோலையரசி “உன் புள்ளை உன் கிட்ட பேசினானா? இதை நான் நம்பணுமா?” என்று சற்று குரலை உயர்த்த, கீதாவிற்கு மூச்சே அடைத்துக் கொண்டது போல் ஆனது.
விசாலாட்சி தான் சற்று தைரியத்துடன் “அவன் பேசலை அத்தை. நான் தான் போன்ல சொன்னேன். அவன் பதில் எதுவும் பேசாம அஸ்வினை மட்டும் அனுப்பி வச்சான்” என்று பேசிக் கொண்டு இருந்த போதே,
“அந்த குட்டி பிசாசை அன்னிக்கே தண்ணீல முக்கி இருந்தா இந்நேரம் என் பேரன், என் கூடவே இந்த வீட்ல இருந்து இருப்பான். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து அந்த குட்டி பிசாசை காப்பாத்தி அதை என் பேரன் கிட்ட கொடுத்து நடந்த எல்லாத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க. என் பேரனுக்கு மட்டும் எதுவும் தெரியாம இருந்து இருந்தால், இந்நேரம் அவனோட செல்ல பாட்டிக் கூட சந்தோஷமா இருந்து இந்த சொத்தை எல்லாம் ஆண்டு இருப்பான். இப்படி தனியா போய் கஷ்டப்பட்டு அந்த தடிமாடு சோத்து மூட்டை கூட வாழ்ந்துட்டு இருப்பானா?” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவர், கணவர் காலடியில் அமர்ந்து மூக்கை உறிஞ்சினார் சோலையரசி.
விசாலாட்சியோ மனம் பொறுக்காமல் “அஸ்வினும் உங்க பேரன் தானே அத்தை. அதுவும் கொள்ளு பேரன்” என்று பேசியதை கேட்டு சோலையரசிக்கு முன் கோபம் கொண்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்த தணிகைவேல் “மருமகள்னு கூட பார்க்க மாட்டேன். வெட்டி போட்டுடுவேன் பார்த்துக்கோ. கண்டவனுக்கு பொறந்தது எல்லாம் இந்த வீட்டோட வாரிசா ஆக முடியுமா? காலம் காலமா கட்டி காத்த கௌரவத்தை குழி தோண்டி புதைச்சிட்டு வந்த சனியன் அது” என்று மேலும் ஆத்திரமாக பேச போனவரை,
எதிர்த்து எதுவும் பேச முடியாமல் கண்ணீரோடு இருக்கரம் கூப்பி இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் பார்வையாலே கெஞ்சினார் விசாலாட்சி.
கீதாவிற்கோ கோபம் எழுந்தாலும், கேள்வி கேட்க வேண்டிய அன்னையே அமைதியாக நின்று இருப்பதை பார்த்து பற்களை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
மருமகளின் கண்ணீரை பார்த்த தணிகைவேலுவிற்கு சற்று கோபம் குறைந்தாலும் ஆத்திரம் குறையவில்லை. விசாலாட்சியை முறைத்து பார்த்து விட்டு “வர வர இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தைரியம் அதிகமாகிடுச்சு. முதல அதை அடக்கணும்” என்று அழுத்தமாக கூறிவிட்டு அவர் வெளியேச் சென்று விட்டார்.
சோலையரசியோ தன் மருமகளை தீயாய் முறைத்து பார்த்து “என்னடிம்மா வாயெல்லாம் பேசுற? பயம் விட்டு போச்சா?” என்றவரை பயத்துடன் பார்த்து,
“அய்யோ அப்படி இல்ல அத்தை. பாவம் சின்ன பையன் அவனை” என்று மேலே பேச வந்தவரை தடுத்த சோலையரசி,
“அந்த பிசாசு எப்போ எல்லாம் இந்த வீட்டுக்கு வருதோ அப்போ எல்லாம் நம்ம வீட்டை சனி பிடிச்சு ஆட்டுது. முதல வேலைக்காரி கிட்ட சொல்லி வீட்டை சுத்தம் செய்ய சொல்லி கோமியத்தை தெளிக்க சொல்லணும். இல்லனா அந்த பிசாசோட துரதிஷ்டம் நம்ம வீட்டை பிடிச்சி ஆட்டும்” என்று வேண்டுமென்றே மருமகளின் மனதை காயப்படுத்த கூறிவிட்டு அங்கே இருந்து கொல்லை புறம் சென்று விட்டார்.
விசாலாட்சியோ மனதில் எழுந்த வலியோடு அவர் அறைக்குச் செல்ல,
தாயின் பின்னாலே போன கீதாவோ “ஏன்ம்மா இன்னுமும் இப்படி இருக்க? இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவங்களுக்கு பயந்துட்டு இருக்க போற? இதுல என்னையும் அடக்கி அடக்கி வச்சிட்டு இருக்க. இங்கே நடக்கிறதை அண்ணன் கிட்டையும் சொல்ல கூடாதுனு சத்தியம் வாங்குற? அண்ணன் எத்தனை வாட்டி கூப்பிட்டான். என் கூட வந்திடுங்கனு. முடியாதுனு சொல்லி இங்கேயே பிடிவாதமா கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்க?” என்று ஆதங்கமாக பேசிய மகளை அமைதியாக பார்த்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்தார் விசாலாட்சி.
தாயிடமிருந்து பதில் வராது என்று தெரிந்த கீதா கடுப்புடன் கதவை திறந்து அடித்து சாத்திவிட்டு அவள் அறைக்குள் நுழைந்துக் கொள்ள, இங்கே விசாலாட்சியோ இமைகளை மூடிக் கொண்டவர் கண்முன் நிழல் போல் நடந்து முடிந்த கொடூரங்கள் வந்துச் சென்றது.
‘எல்லாவற்றிற்குமே ஒரு காரணம் இருக்கு கீதா. இத்தனை சம்பவம் நடந்து முடிஞ்சும் நான் இங்கே இருக்க ஒரே காரணம் என்னனு வெளியேச் சொல்ல முடியாது. அப்படி சொன்னா என்ன நடக்கும்னு தெரியாது. ஏற்கனவே பதினைந்து வருஷத்துக்கு முன்ன நடந்து முடிஞ்சது எல்லாம் போதும். இனிமேல் இந்த வீட்ல அப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாதுனு தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இங்கேயே இருக்கேன்’ என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டவர் பார்வை அங்கே மாட்டி இருந்த அவர் கணவரின் புகைப்படத்தில் அழுத்தமாக படிந்தது.