அஸ்வினை அழைத்துக் கொண்டு கீதா அவர்கள் வீட்டிற்குச் செல்ல, அஸ்வினோ தன் சித்தியை புரியாமல் பார்த்தான்.
கீதாவோ காரை நிறுத்தி விட்டு புன்னகைத்தபடி “என்னடா லட்டு பையா அப்படி பார்க்குற? இறங்கு உள்ளே போகலாம்” என்று சொல்லிக் கொண்டே காரிலிருந்து இறங்கினாள்.
“இல்ல சித்தி மாமா இங்கே போக வேணாம்னு சொல்லி இருக்காங்க. நீங்க என்னை மாமா வீட்ல விடுங்க” என்றவனை திகைப்புடன் பார்த்து,
“அண்ணா எப்போ சொன்னாங்க? அவர் தான் உன்னை அழைச்சி போக சொன்னாரு” என்றவளுக்கு தமையன் மீது சற்று கோபம் துளிர்த்தது.
“இன்னிக்கு மார்னீங் தான் சொன்னாங்க சித்தி” என்று அஸ்வின் பிடிவாதமாக காரிலே அமர்ந்து இருந்தான்.
அவனை பொறுத்தவரை அவனுக்கு எல்லாமும் அவனின் செல்ல மாமா தானே? அப்படி இருக்க பிறைசூடனின் வார்த்தையை மீறி விடுவானா என்ன? என்ன தான் விளையாட்டு தனம் எப்பொழுதும் கைப்பேசியில் விளையாடுவது சாப்பிடுவது என்று இருந்தாலும், மாமனுடன் வளர்ந்ததால் பிறைசூடனின் அழுத்தம் இவனுக்குள்ளும் இருந்தது.
உம்மென்று அமர்ந்து இருந்தவனை பார்த்த கீதாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனை அப்படியே கொண்டு போய் விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அஸ்வினை கண்டால் அன்னையின் முகத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று நினைத்தவளுக்கு தன் தமையனால் அது தடைப்படுவதை எண்ணி எள்ளாக வெடிப்பது போல் நின்றாள்.
‘இந்த அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு? ஏன் அஸ்வின் கிட்ட இப்படி சொல்லி வைக்கணும்?’ என்று யோசித்தவளுக்கு அப்பொழுது தான் நெற்றி பொட்டில் அடித்தது போல் விளங்கியது காலையில் தான் கூறிய நேற்றிய நிகழ்வின் தாக்கம் என்று.
தன்னை தானே திட்டிக் கொண்டவள், பெருமூச்சு ஒன்றை விட்டாள். பின் தன் அக்கா மகனை பார்த்து “டேய் அஸ்வின் நான் உன் மாமா கிட்ட சொல்லிக்கிறேன் நீ இப்போ உள்ள வாடா. உன்னை பார்த்தா பாட்டி ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உனக்காக சாப்பிட ஏதாவது செய்து தருவாங்க” அவனின் மனதை சாப்பாடு என்னும் மந்திரத்தை உபயோகப்படுத்தி கரைக்க முயன்றவளுக்கு தோல்வியில் தான் முடிந்தது.
அஸ்வின் விடாபிடியாக வர மறுத்து விட, கீதாவிற்கோ அதற்கு மேல் பொறுமை இல்லாமல் தன் அண்ணனுக்கு அழைக்கலாம் என்று கைப்பேசியை எடுத்தவள் கரம் வாசலில் நின்று இருந்த உருவத்தை கண்டு அப்படியே நழுவி கீழே விழுந்து சிதறியது.
கீதாவின் இதய துடிப்பு வேகமாக எகிற அவள் முகம் எல்லாம் வேர்வை துளிகள் படர ஆரம்பிக்க, தேகம் தானாக நடுங்க தொடங்கியது.
வாசலில் நின்று இருந்த மனிதனோ மெதுவாக படியிலிருந்து இறங்கி கீதாவின் அருகில் வந்தவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்து,
“எப்படிம்மா இருக்க? எதுக்கு உன் அப்பாவை பார்த்து பயப்புடுற?” என்று கேட்டார் பிறைசூடன் மற்றும் கீதாவின் தந்தையான பாஸ்கரன்.
தந்தையை பார்த்ததுமே அவளுக்கு நடுக்கம் எடுத்து விட, இதில் எங்கே இருந்து வார்த்தைகள் வரும்.
தந்தையை பார்த்ததுமே மறக்க வேண்டிய நிகழ்வுகள் எல்லாம் கண்முன்னே வந்து வந்து போக, அவர் கரத்தில் உதிரத்தின் நிறம் படர்ந்து இருக்க, அதை பார்த்து பயத்தில் அந்நொடியே கீதாவிற்கு ஜீரம் வந்து விட்டது.
இனி வாழ்வில் அவளின் தந்தையை காண போவதில்லை என்ற தைரியத்தில் சுற்றிக் கொண்டு இருந்தவள் முன், எந்த ஒரு முன் அறிவிப்புமுமின்றி பாஸ்கரன் நிற்பது எமனையே நேரில் பார்ப்பது போல் அஞ்சி நடுங்கினாள் கீதா.
பாஸ்கரனோ காரில் யார் இருக்கிறார் என்று குனிந்து பார்க்க, அந்த பயத்திலும் அவரை தடுப்பது போல் தந்தையின் முன் நின்றவள் நடுக்கத்துடனே,
“அஸ்வின் கால் மாமா” என்று கூறினாள்.
காரில் அமர்ந்து இருந்தாலும் அஸ்வினும் அவன் தாத்தாவை பார்த்து கீதாவின் உடல் நடுங்குவதை கண்டு சற்று பயந்து தான் உள்ளேயே அமர்ந்து இருந்தான்.
அஸ்வினுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாஸ்கரனை நேருக்கு நேர் பார்த்ததில்லை என்றாலும், புகைப்படத்தில் பார்த்து யாரென்று தெரிந்து வைத்து இருந்தான்.
ஆனால் என்ன தாத்தா என்று மட்டுமே கூறி இருந்தார் விசாலாட்சி. அதனாலே அவரை பத்தி அவன் அவ்வளவாக அலட்டிக் கொண்டதில்லை.
ஆனால் இன்று எதற்கும் பயப்படாத அவனின் சித்தியே ஒருவரை பார்த்து நடுங்குவதை கண்டு பயந்து விட்டான் சிறு பையன்.
அதனாலே கீதா கூறியதும் அஸ்வின் பிறைசூடனுக்கு அழைத்து விட, பாஸ்கரனோ “யாரும்மா என் பேரனா?” என்று வன்ம புன்னகையுடன் கேட்ட அடுத்த கணம்,
“அஸ்வின் கார்ல இருந்து இறங்கி ஓடுடா” என்று கத்தினாள் கீதா.
ஏற்கனவே பயத்தில் இருந்தவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவன் பாஸ்கரன் இருந்த புறம் அவசரத்தில் இறங்கி விட, சரியாக அவனின் கழுத்தை பிடித்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து இருந்தார் பாஸ்கரன்.
அதை அதிர்ச்சியுடன் பார்த்த கீதா, “அவனை விட்ருங்க ப்பா. பாவம் சின்ன பையன். அவனுக்கு எதுவுமே தெரியாது” என்று கண்ணீர் மல்க இருக்கரம் கூப்பி மன்றாடிய அந்த கணம் தான் பிறைசூடன் அங்கே தன் செவிகளில் விழுந்த வார்த்தையை கேட்டு ஆடி போனான்.
ஆம் தங்கையின் அப்பா என்ற ஒற்றை சொல்லே அங்கே என்ன விபரீதம் நடந்துக் கொண்டு இருக்கும் என்று கணித்து விட்டான் பிறைசூடன்.
அவசரமாக அங்கே நின்று இருந்த சண்முகத்திடம் “அண்ணா ரொம்ப அவசரம் ஆட்டோ எடுங்க” என்று அவரை துரிதப்படுத்தியவன் “நான் கிளம்புறேன் பனிமலர். ரொம்ப அவசரம்” என்று பதற்றமாக கூறிக் கொண்டே தானியில் ஏறினான்.
பனிமலரோ அவனின் குரலில் தெரிந்த பதற்றத்தை கண்டுக் கொண்டு “என்னாச்சி ஆதி சார்? ஏதாவது பிரச்சனையா?” என்றவளிடம்,
“ஆமா. என்னனு அப்புறம் சொல்றேன்” என கூறியவன் “அண்ணா ஆட்டோ எடுங்க” என்று கட்டளையாக கூற, சண்முகத்திற்கும் வேற வழி தெரியாமல் பிறைசூடன் சொன்ன முகவரியை நோக்கி புறப்பட்டார்.
ஆனால் இத்தனை பதற்றத்திலும் பிறைசூடன் அழைப்பை மட்டும் வைக்கவில்லை. அதனாலே அங்கே என்ன நடக்கிறது என்று அவர்கள் பேசும் சொற்கள் மூலமே யூகித்துக் கொண்டு இருந்தான்.
“ஒன்னும் தெரியாத சின்ன பையனா? என்னோட மொத்த வாழ்க்கையையும் திருப்பி போட்ட எமன் இவன். என்னோட பதினைந்து வருஷ வாழ்க்கையையே தலைமறைவா பதுங்கி இருந்து வாழ வச்சவனை சும்மா விட சொல்றீயா?” என்று கர்ஜனையாக கத்தியவரை கண்டு குலைநடுங்கியது அஸ்வினுக்கு.
அவரின் கரத்தினுள் தத்தளித்தவனுக்கு பயம் இருந்தாலும், எப்படி அவரிடமிருந்து தப்பித்து ஓட வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்தான் அஸ்வின்.
“நீங்க பண்ண தப்புக்கு எதுக்கு அவனை குற்றம் சாட்டுறீங்க? உங்களோட கொடூர புத்தியால் தானே நீங்க இப்படி மறைஞ்சு வாழ வேண்டிய நிலை” என்று அஸ்வினின் கழுத்தை பிடித்து நெறித்துக் கொண்டு இருப்பதை பார்த்து கோபத்தில் கத்தி விட்டாள் கீதா.
ஆனால் அதை கேட்டு அமைதியாக இருக்க, பாஸ்கரன் ஒன்னும் அன்பான தந்தை இல்லையே. மிருகத்தின் மறு உருவம்.
கீதா பேசி முடித்த அடுத்த கணம், அஸ்வினை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு ஓங்கி மகளின் கன்னத்தில் அறைந்து இருந்தார் பாஸ்கரன்.
“கொன்றுவேன், யார் முன்னாடி நின்னு யாரை எதிர்த்து பேசுற. மவளே பொட்ட புள்ளனா அடக்க ஒடுக்கமா வீட்டில ஒடுங்கி இருக்கணும். இப்படி அப்பனையே எதிர்த்து நின்னு கேள்வி கேட்க கூடாது. உன் அக்கா மகனுக்காக இந்த துடி துடிக்கிறீயே, உள்ள உங்க அம்மா குற்றுயிருமா குலையுயிருமா சாக கிடக்குறாள் அதை நினைச்சு துடிச்சியா நீ? த்தூ நீயெல்லாம் ஒரு பொண்ணு” என்று பெற்ற மகள் என்றும் கருத்தில் கொள்ளாமல் மகளை காரி உமிழ்ந்தார்.
பாஸ்கரனின் வார்த்தைகளை கேட்டு உறைந்து போன கீதாவோ அடுத்த நொடி உள்ளேச் செல்ல போக எத்தனித்தவளின் செவியில்,
“ஏய் குட்டி சாத்தான்” என்று பற்களை கடித்தபடி பாஸ்கரனின் குரல் வலியில் வர, திரும்பி பார்த்தாள்.
அங்கே அவரை அஸ்வின் கடித்த கரத்தை உதறிக் கொண்டு அவன் ஓடும் திசையை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அத்திசையை கீதாவும் பார்க்க, இப்பொழுது எத்திசையில் தான் செல்வது என்று திக்கு தெரியாமல் தவித்தவளின் விழிகளுக்கு காப்பான் போல் அவளின் அண்ணன் பிறைசூடனின் உருவம் தெரிய, தந்தையை பார்த்தவள் ஏளனமாக புன்னகைத்து விட்டு தாயை காண உள்ளே ஓடினாள்.
தங்கை அவசரமாக உள்ளேச் செல்வதை குறித்துக் கொண்ட பிறைசூடன், அஸ்வினை தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு வந்து அவன் தந்தையின் முன் பெரும் சினத்தோடு வந்து நின்றான் பிறைசூடன்.
பாஸ்கரனும் மகனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். மகனை பார்க்க பார்க்க அவரின் கொலைவெறி அதிகமாகிக் கொண்டே போனது.
பல வருடங்கள் கழித்து பார்க்கும் தந்தை மகன் போல் அங்கே பாசத்திற்கு இடமே இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் பழி தீர்க்கும் வெறியோடு எதிரிகளாக நின்று இருந்தனர் தந்தையும் மகனும்.
“வாடா மகனே, அப்படியே என்னை பார்க்கிறது போல இருக்கு. என்ன இந்த அப்பனோட ஒரு குணம் கூட உன்கிட்ட இல்லை. பாசத்துக்கு அடிமையான நாய் போல நிக்கிற” என்று கீழே எச்சிலை துப்பியவர் விழிகள் அங்கே பயத்தில் பிறைசூடனின் பின்னால் நின்று எட்டி பார்த்த அஸ்வின் மீது விழுந்தது.
அஸ்வினோ சட்டென பிறைசூடன் பின்னால் ஒளிந்துக் கொள்ள, தந்தையை வெறுப்பாக பார்த்த பிறைசூடன், “இந்த அன்புக்கு அடிமையா இருந்ததுனால தான், இந்த நாய்… நன்றியுள்ள நாய் உங்களை வெளியே தலைமறைவா இருக்க விட்டு இருக்கேன். இல்லைனு வைங்க இந்நேரம் உங்களை புதைச்ச இடத்தில மரமே வளர்ந்து இருக்கும்” என்று சிங்கம் போல் கர்ஜனையாக நின்று இருந்தவனை கொலை தீர்க்கும் எண்ணத்தோடு பார்த்தார் பாஸ்கரன்.
“இப்போ கூட போலீஸ்க்கு போன் பண்ணிட்டு தான் வந்து இருக்கேன். அவங்க வந்து உங்களை பிடிச்சாங்கனு வைங்க, நாளைக்கு நியூஸ் உங்களை பத்தி தான் சுட சுட வெளியே வரும். பல வருடம் தலை மறைவாக இருந்த பாஸ்கரன். தன் சொந்த குடும்பத்தையே பழி தீர்க்கும் நபர். சிறிது கூட இதயத்தில் ஈவு இரக்கம் இல்லாத மனிதன்” என்று செய்தி வாசிப்பது போல் பிறைசூடன் நக்கலாக வாசித்து சொல்ல,
அதை கேட்க கேட்க பாஸ்கரனுக்கு மேலும் ஆத்திரம் தான் எழுந்தது.
“ஊர் உலகத்துல அப்பனுக்கே பெத்த மகன் எதிரியா வந்து நிற்பது நீயா தான்டா இருப்ப” என கேட்டவரை ஏளனமாக பார்த்த பிறைசூடன்,
“ஆமா… தன்னோட சொந்த குடும்பத்தையே அழிக்க நினைக்கும் அப்பனும் நீயா தான்ய்யா இருப்ப” என்று எதிர்த்து நின்று கேள்வி கேட்டவனின் செவியில் தங்கையின் குரல் கேட்டது.
வீட்டினுள் நுழைந்த கீதா தன் தாயை தேடியவளுக்கு, ஒரு அறையிலிருந்து அவளின் தாத்தா பாட்டியின் சத்தம் கேட்க, அவர்களை அடைத்து வைத்து இருந்த அறை கதவை திறந்து விட்டவள் “தாத்தா அம்மா எங்கே?” என்று கண்ணீரோடு கேட்டாள்.
தணிகைவேல் எதிர்திசையின் அறையை நடுக்கத்துடன் காட்ட, கீதா அவசரமாக அங்கே ஓடினாள்.
சோலையரசியோ “என்னங்க இவன் திரும்ப வந்ததும் இப்படி அட்டூழியம் பண்ணிட்டு போய் இருக்கான். அவளாவது புருஷன் கேட்ட கேள்விக்கு வாய் திறந்து பதில் உரைத்து இருக்கலாம்ல” என்று கொலையே செய்து இருந்தாலும் மகனுக்காக பேசினார் அந்த தாய்.
தாயை தேடிச் சென்ற கீதாவின் உயிரே உறைந்து போய் விட்டது. அங்கே தலையில் குருதி வழிய கன்னத்தில் வாங்கிய அடியின் சுவடு சிவந்து வீங்கி இருக்க, பாதி உயிராக மயங்கி கிடந்த விசாலாட்சியை பார்த்த கீதாவிற்கு நெஞ்சில் பயம் தான்.
“அண்ணா சீக்கிரம் வா” என்று கீதாவின் குரலில் பிறைசூடனின் மனம் பதற, கொடூரமாக சிரித்தபடி அந்த இருட்டில் பின்னால் சென்றுக் கொண்டு இருந்த தந்தையை கொலைவெறியுடன் பார்த்தான் பிறைசூடன்.