அழகான மலைக்கிராமம். கிராமம் என்றதும் நிறைய தெருக்கள், வீடுகள், அதிக மக்கள் இருப்பார்கள் என எண்ணிவிட வேண்டாம்.. இந்த கிராமம் விசித்திரமும், மிகுந்த மர்மமும் நிறைந்தது. இன்றளவும் இங்கிருக்கும் மக்கள் நாகரீகத்தை விரும்பா காட்டிடை நகரவாசிகளாகவே வாழ்கின்றனர்.. ஆங்கோர், ஈங்கோர் வீடெனவே அமைப்புடையது.
மூங்கில் தட்டிகளின் மேல் சுடுமண் பூச்சிடப்பட்டச் சுவர்கள் கொண்டவை. தாழ் உயரக் கூரை பனை, தென்னங்கீற்றுக் கலவையால் வேயப்பட்டவை. தற்போது இவற்றை எங்கிலும் காணவியலா.. ஆனால், இன்னும் இந்த கிராமத்தில் அவர்களின் வாழ்வியல் நெறி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடு இதுவெனவே வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டினை சுற்றிலும் சிறு சருகு கூட இல்லாத அளவிற்குத் தூய்மையாக வைத்திருந்தனர். ஒவ்வொரு வீட்டின் அருகிலும் ஒரு கிணறு. நமக்கெல்லாம் தெரிந்த கிணறு, தற்போது நம் சந்ததிகளுக்கோ படத்திலும், பாடத்திலும் மட்டுமே காணவியன்ற ஒன்று. ஆனால், இங்கிருப்பவையோ நாம் கூட பார்த்தறியா, கேட்டறியாக் கிணறு.. நிலத்தைத் தோண்டி, ஆழமாக்கப்பட்டவை தான். ஆனால், அதனின் ஆழம் வெளி நின்று அறியவியலா…
என்ன குழப்பமாக்குகிறதோ?.. ஆமாம், அதன் வடிவமும் அப்படித்தான்.. அந்தக் கிணறுகளும், மற்ற கிணறுகளைப் போல அதன் அடிப்படையில் ஒன்று தான்… வட்டக் கிணறு, படிகள் அற்றவை. ஆனால், மேற்புறம் அரை வட்ட வடிவ மூடி போன்ற அமைப்பு, சுடுமண் கொண்டு மூடப்பட்டது. அதன் மேல்புறம் புகைப்போக்கியின் வடிவத்தை ஒத்ததாகக் கொண்டிருந்தது. அந்த புகைப்போக்கி போன்ற வடிவத்தில் ஒரு திறப்பு இருக்கும். அதில் ஒரு கப்பியும், நீர் இறைக்கும் கயிறும் இருக்கும். அவற்றைக் கொண்டே நீர் இறைக்கவியலும்.
ஆனால், எதற்கு இவ்வாறான ஒரு அமைப்பு???… இயற்கையைத் தாயாக வழிபடும் சமூகத்தினர்கள் அவர்கள். இயற்கையை அல்லால் வேறொன்றி(ம்)ல்லை என்று நம்புவோர்கள். காடுகளில் வழி தவறி வரும் மிருகங்கள், தண்ணீர் தேடி கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு…
இந்த கிராமத்திற்கு மேலும் ஒரு சிறப்புண்டு. அது அதன் பெயர்க்காரணம் தான். முத்தங்கா… மூவிடச் சந்திப்பு.. ஆதலாலே இப்பெயர் பெற்றது. ஆம், நம் பைந்தமிழ்நாடு, எழில் கொஞ்சும் கேரளம், நயமிகு கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சேரும் இடம்.. இங்கிருக்கும் மக்கள் மும்மொழிகளிலும் தேர்ந்தோரே..
அவர்களது தெய்வமாய், காட்டின் ராணியாய் திகழும் பொம்மட்டித் தாயைக் காண கிராம மக்கள் அனைவரும் பொம்மிக்காட்டிற்கு வந்தனர். அது அந்த கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்தது.
இனத்தின் மூத்தக் கிழவி ஒருத்தி பொம்மட்டித்தாய்க்கு தன் வழிபாட்டைக் காணிக்கையாக்குகிறாள்…
“எங்க மலை வாழவேணும்..
எங்க மண்ணு செழிக்கவேணும்
ஓடி வா எங்க பொம்மட்டித்தாயே…
காடு காணி மழை பேஞ்சி…
உயிர்களெல்லாம் வாழவேணும்…
பாரெல்லாம் செழிப்புற,
நீ அருள் கொட்டவேணும்…
கொட்டடி உம்மருளை
எங்க பொம்மட்டித்தாயே…”
பறை முழக்கத்தோடு பாட்டிடை வணங்கினர். சரியாக அந்த நேரத்தில் அவளும் அங்கு வந்து சேர்ந்தாள்.
அவளைக் கண்ட பேச்சி என்கிற மூதாட்டி அவள் அருகில் வந்து,
‘தாயி… வந்துட்டியா?… உன்னைக் காணாம தவிச்சு போயிருச்சும்மா… இந்த பாவி உசுரு.. உங்கிட்ட ஒப்படைக்கத்தான் நான் இந்த உசிர வச்சி நிக்கேன்…’ என்றார் கண்ணீர் தாரைத் ததும்ப.
‘அம்மா… கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகுற நாள் வரப்போகுது. எப்போன்னுதான் சொல்லத் தெரியல… நான் கடைசி வரைக்கும் போராடுவேன். விட்டுற மாட்டேன். நீங்க கவலைப்படாதீங்க…’ கண்ணீரை மறைத்துக் கொண்டே பதில் விளம்பினாள்.
‘அம்மா…’ ஒரு சிறு குழந்தையின் வீரென்ற அழைப்பு… அந்த பிஞ்சின் அழைப்பில் தான் மறைத்து வைத்திருந்த கண்ணீர் ஆறெனவே ஓடி வரத் திரும்பி அத்திசை நோக்கினாள்.
‘பொம்மி?…’
பொம்மி ஓடி வர, அவள் முன் மண்டியிட்டு, அருவியெனக் கொட்டும் கண்ணீர் பொம்மியை மறைக்க, கண்களை துடைத்துக் கொண்டாள். ஓடி வந்த அவளை அள்ளி அணைத்துக் கொண்டாள். தன் முழுமையை உணர்ந்தவளாய் அள்ளி, அள்ளி அணைத்து.. அவளைத் சற்றே தன்னிடம் இருந்து பிரித்தும், பிரிக்கவியலாதவளாய்… அவளது முகம் முழுதிலும் தன் முத்தங்களால் நிரப்பியே தணித்தாள் தன் பிரிவின் வலிகளை…
‘பொம்மி.. பொம்மி..’ எனப் பித்தனைப் போல் பிதற்றலானாள்.
அவளது கண்களைத் தன் கைகளால் துடைத்துவிட்டு, அவளது கைகளை எடுத்து உள்ளங்கையில் தன் முகம் புதைத்து முத்தமிட்டு, புன்னகையோடு, எழுந்து அவளை தூக்கிக் கொண்டாள்..
‘பொம்மி.. உன் அம்மை இங்கத்தானே இருக்கப் போறா.. அப்புறம் எல்லாம் கேட்டுக்கோ.. இப்பத்தானே வந்திருக்கு.. கொஞ்சம் ஓய்வு தேவையில்லையா?.. அம்மை பாவமில்ல?..’
‘சரிப்பாட்டி..’ என்றவள் அவளின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு தலையோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு ‘அம்மா..’ என்று அழுத்தமாகத் தன் மழலையில் அழைத்தாள்.
அவள் பொம்மியை அழைத்துச் சென்று, அவளை நீராட வைத்துத் தன் கைகளாலேயே அவளது தலையைத் துவட்டிவிட்டு, பொட்டிட்டு, பூ வைத்து, முகப்பூச்சடித்து, திருஷ்டியைக் கழிக்க கரு மையையும் வலது காதின் பின்புறம் லாவகமாக வைத்தாள்.
தான் புதிதாக வாங்கி வந்தச் சிகப்பு நிற பட்டுப் பாவாடை, சட்டையை அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள். பின் தானும் குளித்துவிட்டு வந்து, இருவரும் சேர்ந்து தங்களைத் தாங்களே படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இருவரும் சேர்ந்து ஆர்.எக்ஸ்.100 வண்டியில் மொத்த மலையையும் சுற்றி வந்தனர். பொம்மி இரு கைகளையும் நீட்டி, மொத்த உலகையும் கட்டியிழுத்ததாக எண்ணி சந்தோசமடைந்தாள்.
‘இன்னும் கொஞ்சநாள் ஆகும்.. நான் எல்லா உரிமையோட பொம்மியை இங்க இருந்து கூட்டிட்டுப் போகனும்னு நினைக்கிறேம்மா… அப்பத்தான் அவளுக்கும் பிரச்சனை இல்லாம இருக்கும்.’
‘சரி தாயி… நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்.. நீ பொம்மியைக் கூட்டிட்டு வா..’
‘அம்மா… பொம்மிக்கு நான் ஊட்டி விட்டுட்டு அப்புறமா சாப்புடறேன். சாப்பாடு போட்டுத்தாங்கம்மா..’
‘சரி தாயி..’
‘பொம்மி செல்லக்குட்டி.. ஆ.. ஆ.. ஆக்காட்டு…’
இருவருக்கும் இன்றையநாள் மனதிற்குள் ஆழமாகத் தேக்கி வைத்த பாசம், சந்தோசம், தவிப்பு என அனைத்திற்குமான இரையாக இருந்தது.
பிரிவு என்றும் உணர்த்துவது ஒன்றுதான். பிரிந்திருக்கும் போதுதான் உண்மையில் நாம் யாரை நேசிக்கிறோம்.. நம்மை யார் ஆழ்ந்து நேசிக்கிறார்கள் என்பது தெளிவாகும். அஃது காலத்தின் கண்ணாடி. தெரியும் பிம்பம் உண்மையை மட்டுமேக் காட்டும். ரசம் பூசப்படாதக் கண்ணாடி…
தன் செல்லிடைப் பேசியை எடுத்துத் தனது தங்கையை அழைத்தாள்…
‘பிரதி.. நான் முத்தங்கா கிராமத்துக்கே வந்துட்டேன்.. பொம்மி ரொம்ப சந்தோசமா இருக்கா.. அவ முகத்துல இந்த சந்தோசத்தைப் பார்க்கத்தான் இவ்வளோ தூரம் தாண்டி வந்துருக்கேன்..’
‘எனக்கு இல்லாமயா?… எனக்கு விவரிக்க வார்த்தைகளே இல்ல..’
‘ஆனா, இந்த சந்தோசமெல்லாம் கொஞ்ச நேரம்தான்.. சீக்கிரமே அவளோட சந்தோசத்தை உடைக்கப் போறேங்கிறத நினைக்கும்போது தான் எனக்கு மனசெல்லாம் ரணமா இருக்கு… நான் இந்த தடவையும் அவளைக் கூட்டிட்டுப் போக முடியாதுங்கிறதை அவள் எப்படி எடுத்துக்குவா?..’
‘இல்லடி.. அவ புரிஞ்சிப்பா. நீ இந்த போராட்டத்தையே அவளுக்காகத்தானே பண்ணிட்டிருக்க?.. அது அவளுக்கும் புரியுமில்ல?..’
‘ம்.. அப்படித்தான் நினைக்கிறேன் பிரதி… சரி நான் திரும்பக் கூப்பிடறேன்’
செல்லிடைப் பேசியை வைத்தவள் தன் மகளைத் தேடிச் சென்றாள். அருகிருந்த பாறையின் மீது அமர்ந்து அந்த பள்ளத்தாக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பொம்மி.
அருகில் வந்தவள், ‘பொம்மி.. என்ன செல்லம்? இங்க வந்து தனியா உக்காந்துட்ட?..’
‘இந்த தடவையும் என்னை கூட்டிட்டு போக மாட்டிங்க தானே?.. எனக்குத் தெரியும். நீங்க பிரதி சித்திக்கிட்ட பேசுனதை நான் கேட்டேன்.’ என்று விம்மியவளைக் கண்டவள் தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.
‘இங்க பாரு, பொம்மி… இங்க பாரும்மா…’ அருகில் வந்து அவளது தாடையைப் பிடித்து முகத்தைத் தூக்கினாள்.
பொம்மி.. நான் உன் அம்மா. அம்மாவும், குழந்தையும் பிரிஞ்சிருக்கலாம். ஆனா, எப்பவும் பாசமும், பந்தமும், அதோட ஆழமும் குறையவேக் குறையாது.. நாம பிரிஞ்சிருக்கிறது தற்காலிகமானது தான்.
போன தடவை வந்தப்பவே உங்கிட்ட இதப்பத்தி தெளிவா பேசியிருக்கனும். அப்போ முடியாமப் போச்சி. இப்பவும் பேசலைன்னா, இனி எப்பவும் புரியவக்க முடியாம போயிடும்..
நான் ஒரு போராட்டத்தை நடத்திட்டிருக்கேன். அது உனக்கு புரியற மாறி சொல்லனும்னா.. நான் உன்னை நிரந்தரமா என் கூட கூட்டிட்டுப் போக போராடிட்டிருக்கேன்.
இப்போ ஒருவேளை அந்த உரிமை முழுசா கிடைக்காம நான் உன்னை என் கூட கூட்டிட்டுப் போனா, அங்க இருக்க எல்லாராலயும் நீ தினமும் கஷ்டப்படுவ.. அதை என்னால கொஞ்சம் கூட தாங்கிக்கவே முடியாது.
நான் உன்னை இங்க விட்டுட்டு போகலை… உன்னை பிரச்சனைகள் ஏற்படுத்தறவங்கக் கிட்ட இருந்து தள்ளி வச்சிருக்கேன்..
இதெல்லாம் எனக்கு புதுசில்லை. நான் வாழ்க்கையில நிறைய பிரச்சனைகள், விமர்சனங்கள், வலிகள் எல்லாத்தையும் பார்த்துட்டேன். பக்குவப்பட்டுட்டேன்.
ஆனா, நீ என்னோட செல்லக்குட்டி இல்லையா?.. உன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது… சொல்ல விடமாட்டேன். ஏன்னா, நீ என் பொண்ணு. இத யாராலயும் மாத்த முடியாது.
என்னை யாராலயும் தடுக்க முடியாது.. ரொம்ப சீக்கிரமா இந்த பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகுது.
அம்மாவோட, பெரிய வலிமையே நீதான். பொம்மி.. நீயே அழுதா.. நான் ரொம்ப பலகீனமாகிடுவேன். அம்மா பலகீனமாகிட்டா, அழுக ஆரம்பிச்சிடுவேன். அம்மா அழுதா உனக்கு பரவாயில்லையா?..’
‘இல்லம்மா.. நீங்க அழவேனாம்.. நான் உங்க பொண்ணு நானும் அழமாட்டேன்.. நீங்க எல்லாத்தையும் சரிப்பண்ணிட்டு வாங்க.. நான் இங்கயே இருக்கேன். நீங்கதான் ரொம்ப ரொம்ப பலசாலி… சூப்பர் மேன் மாதிரி.. இல்ல, இல்ல சூப்பர் வுமன்..’ அவள் மழலையில் சிரித்துக் கொண்டேக் கூற அவளை அள்ளியவள் ஆரத்தழுவி உச்சிதனை முகர்ந்தாள்.
அன்றைய நாள் முழுமையும் செலவழித்தப் பின், அவள் அங்கிருந்து புறப்படத் தயாரானாள். பொம்மி அவளுக்காக தானே செய்த பனையோலை பொம்மையைக் கொடுத்தாள்.
‘இது ஒரு பதுமை. நானே செஞ்சேன். இது உங்களுக்காக. என் நியாபகம் வரும்போது, இதைப் பாருங்கம்மா… இதுக்கிட்ட பேசுங்க..’ என்றாள் சிரித்துக் கொண்டே.
அதனை பத்திரமாக வைத்துக் கொண்டவள் பொம்மியைத் தூக்கி இடுப்பில் அமர வைத்துக் கொண்டு, சற்று தூரம் நடந்தவள், மலை விளிம்பில் நின்றாள்.
‘பொம்மி, எப்பவும் பாட்டியை தொந்தரவு பண்ணாம சமத்தா இருக்கனும். தனியா எங்கயும் போகக்கூடாது. நல்லா சாப்பிடனும். ரொம்ப முக்கியமா நல்லா படிக்கனும் சரியா?.. நான் அடுத்த முறை வரும்போது உன்னை நிச்சயமா என் கூட கூட்டிட்டுப் போவேன் சரியா?..’
‘சரிங்கம்மா. நீங்க கவலைப்படாதிங்க. டா..டா..’
தனது ஆர்.எக்ஸ். 100 வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அவள். அவளது தலை மறையும் வரை வழியிலேயே தன் விழியைப் பதித்துக் கொண்டிருந்தாள் பொம்மி..
வழிநெடுகிலும் பொம்மியின் முகமும்.. அவளது புன்னகையும், அவள் சிந்தியக் கண்ணீர் துளிகளும் வந்து வந்து படமிட்டுக் காட்டிட, அவளோ, நினைவிலியின் நிரந்தரக் காட்சிப் பிழை நாமோ எனக் கசிந்துருகினாள்.
யார் இந்த பொம்மி… எதற்கிந்தப் போராட்டம்… போராட்டமே வாழ்க்கையா?… இல்லை இந்த வாழ்க்கையேப் போராட்டமா?… யார் இவள்?.. இவளுக்கும் பொம்மிக்குமான இந்த உறவின் நிலை என்ன?… கனவின் வெளியில் இவர்களைக் கோர்த்துச் சென்றது யாரோ?..
காற்றிலாடும் நூலிலா பட்டமெனவேக் காணும் இவர்களின் வாழ்வோ?.. நிலையில்லா நில வாழ்வில், நிலவு மகளைக் கொண்டு நிறைவான வாழ்வின் பயணம் இவளுக்கு அமையுமா?..
காண்போம்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.