பூ – 20
கோவமும், எரிச்சலுமாக இங்குமங்கும் ஷ்ரவன் நடக்க வாசமல்லி கையில் வைத்திருந்த ஆப்பிளை நறுக்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
“இப்ப சந்தோஷமா? எந்த நேரம் ஊருக்கு போறேன்னு கிளம்பினியோ? என்ன தோணுச்சுன்னு திரும்ப வரதை பத்தி பார்க்கலாம்ன்னு சொன்னியோ இப்ப இப்படி ஆகிருச்சு…” என்று அவன் குதித்துக்கொண்டு இருந்தான்.
“என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது அத்தான். என்னையும் கூட கூட்டிட்டு போங்க….” என்றாள் அதிகாரமாய்.
“அப்படியே தலையில நங்குன்னு கொட்டினா என்னன்னு வருதுடி எனக்கு….” என அவளின் தலையை பிடித்து வேகமாய் ஆட்ட,
“தல சுத்துது அத்தான். அப்பறம் இதையும் வெளியேத்திருவேன்…” என அவளின் இடுப்பை கட்டிக்கொண்டாள்.
அவளை விட்டுச்செல்ல அவனுக்கு சுத்தமாய் முடியவில்லை. கூட்டிக்கொண்டு செல்ல குடும்பம் மொத்தமும் எதிர்த்து நின்றது. என்ன முடிவெடுக்கவென்றே தெரியாமல் நின்றான் ஷ்ரவன்.
திருவிழாவிற்கென்று வந்துவிட்டு வந்த வேலை சங்கரின் வாழ்க்கைக்கு சுபவேளையாக முடிந்திருக்க திருமணத்தை பற்றிய பேச்சுக்களையும் முடித்துக்கொண்டு கோவை வந்து சேர்ந்திருந்தனர்.
அபி இறந்து ஒரு வருடம் திரும்பாமல் திருமணம் செய்ய முடியாதென்று யோசிக்க அந்த ஊரில் உள்ள பெரியவர் ஒருவர் திருமணம் செய்வதை பற்றி ஒன்றுமில்லை செய்யலாம் என்று சொல்லிவிட அதனை பற்றிய திட்டமிடல்கள் எல்லாம் குடும்பத்தினர் அன்றே பேசி முடிவெடுத்துக்கொண்டனர்.
அடுத்த மூன்று மாதத்தில் முடித்துவிடலாம் என்று நாள் பார்த்து முகூர்த்தநாளும் குறித்துமுடித்து திருப்தியுடன் ஊருக்கு புறப்பட்டனர்.
அன்றே அங்கிருந்தே ஊட்டிக்கு செல்கிறேன் என்றவனிடம் கோவை சென்று மறுநாள் காலையே ஊர்க்கு கிளம்பலாம் என வாசு சொல்லவும் அமலாவும் வா என்று மகனை பார்க்கவும் ஷ்ரவன் சரி என்றுவிட்டான்.
இரவு வீட்டில் வந்து சாப்பிட்டு முடிக்க சாப்பிட்டதில் இருந்து நெஞ்சை பிடித்துக்கொண்டு இங்குமங்குமாக நடந்துகொண்டே இருந்தாள் வாசமல்லி.
“என்ன செய்யுது மல்லி?…” என அமலாவும் அவளோடே வர,
“தொண்டைக்கிட்டையே கட்டையா என்னவோ நிக்குது அத்தே…” என சொல்ல,
“பின்ன நிக்காம? அங்க என்ன தண்ணில என்ன பண்ணானுங்களோ? சுத்தம் ஒன்னும் பாக்காம அத்தனையையும் வயித்துல இடமிருக்குன்னு ரவுண்டு கட்டினா? இப்ப டயஜிஸ்ட் ஆகலைன்னு திணறிட்டு சுத்தறா…” என்று திட்டினான் ஷ்ரவன்.
“ப்ச், சும்மா இருடா. டெய்லியா சாப்பிடறா? நீ வேற…” என நீலகண்டனும் மருமகளுக்கு பரிந்துகொண்டு வர,
“போதும், இதுக்குத்தான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன். இப்படியே சப்போர்ட் பண்ணிட்டே இருங்க. அவ என் பேச்சை கேட்டமாதிரி தான்…” என்று பெற்றோருக்கும் ஒரு காட்டு காட்டியவன் உள்ளே சென்று ஒரு மருந்தை எடுத்து வந்தான்.
“இதை குடி, பெட்டரா இருக்கும்…” என் அவளுக்கு ஊற்றி கொடுக்க,
“நா வேணா இஞ்சி கசாயம் வச்சுக்கட்டா? சூடா குடிச்சா இதமா இருக்கும்…”
“கிட்சன் பக்கம் போன தொலைச்சுடுவேன். குடி…” என்றவனின் மிரட்டலில் அதனை வாங்கி முகத்தை கோணி கொண்டே குடித்து முடித்தவள் அதை பாதி விழுங்கியும் விழுங்காமலும் திருதிருக்க,
“முதல்ல அதை முழுங்கிட்டு இந்த தண்ணியை குடி…” என்று ஷ்ரவன் சொல்லிக்கொண்டு அவள் எங்கும் நகரவிடாமல் சேரை பிடித்துக்கொண்டு நிற்க வாசமல்லி அவனின் இடைவெளிக்குள் புகுந்து ஓடப்பார்த்தாள்.
“என்ன வேலையெல்லாம் பன்ற. நில்லு வாசு…” என்று பிடித்தவனையும் இழுத்துக்கொண்டே பாத்ரூம் சென்றவள் மொத்தமாய் எல்லாவற்றையும் வெளியேற்ற பயந்தே போனான்.
“என்னடி இது இவ்வளவு பன்ற? வாசு என்ன செய்யுது?…” என பதற முகத்தை கழுவிவிட்டு சோர்வுடன் அவனின் மீதே சாய்ந்தவள் மீண்டும் எடுக்க மொத்தமாய் முடிக்கட்டும் என்று அவளுடனே நின்றான்.
“என்ன ஷ்ரவா, வாமிட்டா?…” என நீலகண்டனும், அமலாவும் வர,
“ஹ்ம்ம். ஆமா. மொத்தமா ரெண்டுநாள் திருவிழாவையும் காலி பண்ணிட்டா. இனி ஒன்னும் ஆகாது. லைட்டா சாப்பிடட்டும். இல்லைன்னா சூடா பால் மட்டும் குடுங்கம்மா. சாப்பாடு வேண்டாம்…”
“நீயே ஏன்டா சொல்ற? அவ சொல்லட்டும்…” என்றவர் தான் வந்து நின்றுகொண்டு அவனை அனுப்ப பார்க்க,
“இவ உங்க மேல விழுந்தா நீங்களும் சேர்ந்து விழுவீங்க. ஒரே நேரத்துல யாரை பார்க்கவாம்? போங்கம்மா…” என்று அமலாவை அனுப்பியவன் வாசு வரவும் அவளுடன் வெளியே வந்தான்.
“ட்ரெஸ் மாத்திக்க வாசு. சேரி எல்லாம் நனைஞ்சிருச்சு…” என்று சொல்லவும்,
“என்னால முடியல அத்தான். தூக்கமா வருது. தலை சுத்துது. திரும்ப என்னமோ பண்ணுது. கழுத்துல என்னவோ நிக்குது. கண்ணெல்லாம் சொருகுது…” என்று அவனின் பிபியை ஏற்றினாள்.
“எதாச்சும் ஒன்னு சொல்லுடி. பயந்து வருதுல. எதுவும் ஃபூட் பாய்சன் ஆகிடுச்சா?…” என்று பேசியபடி அவளுக்கு முதலில் குடிக்க வெந்நீர் குடுத்து படுக்க வைத்துவிட்டான்.
இரவு பத்து மணி எழுந்து பசிக்குது என்று சொல்லவும் தோசை ஊற்றி கொண்டுவந்து தர சாப்பிட்டு படுத்தவள் சற்று நேரத்தில் அதையும் வாமிட் செய்ய தண்ணீர் குடித்தாலும் உமட்டியது.
“ம்மா, எனக்கு பயமா இருக்குது. எதுக்கும் போய் டாக்டரை பார்த்துட்டு வரலாம்…” என சொல்ல அமலா சங்கரின் அம்மாவுக்கு அழைத்து அங்கே நல்ல தெரிந்த டாக்டரை பற்றி விசாரிக்க வீட்டின் அருகே ஒரு கிளினிக் இருப்பதாகவும் தெரிந்தவர்கள் தான் என்று சொல்லவும் அந்த நேரமே கிளம்பினார்கள்.
நீலகண்டனுக்கு பார்க்கும் மருத்துவமனையோ வெகுதூரம். இப்போதைக்கு அருகே இருப்பதே நல்லது, அதுவும் இந்த நேரத்தில் என்பதால் சங்கர் வீட்டினருகே உள்ள மருத்துவமனைக்கு செல்வதே உசிதமாகப்பட்டது.
ஷ்ரவன் வாசு அமலாவுடன் வரும் பொழுது சங்கரும் தன் அம்மாவுடன் நின்றுகொண்டு இருந்தான்.
“என்னடா ஆச்சு?…” என ஷ்ரவனிடம் கேட்டு தன் தங்கையை பார்க்க,
“அங்க ஒரு கடையை விடாம வாங்கி உள்ள போட்டா தானே? அதான் ஒத்துக்கலை போல…”
“அவளுக்கு ஒத்துக்கலையா? அவ அந்த ஊர்லையே பிறந்து வளர்ந்த பொண்ணு. இது அவளுக்கு கேட்டுச்சுன்னா எங்க ஊர் திருவிழா பத்தி என்ன தெரியும்னு ஆரம்பிச்சுடுவா…” என்று சிரித்தான் சங்கர்.
“உங்க தங்கச்சி பேசற மாதிரி இல்ல. ரொம்ப டயர்ட்…” என்று கவலையுடன் மனைவியை பார்த்தான்.
டாக்டர் ரவுண்ட்ஸ் போயிருப்பதாக சொல்லி காத்திருக்க இவர்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“சொன்னா கேட்கறதே இல்லை அத்தான். வாமிட் பண்ணிட்டு டயர்டா இருக்குன்னு படுத்தவ தூங்க வேண்டியதுதான, பசிக்குதுன்னு சொல்லி தோசை, பால், ஜுஸ்ன்னு அடுத்தடுத்து வயித்தை காலிபண்ணிட்டு பண்ணிட்டு திரும்ப சாப்பிடறா. ஒத்துக்கமாட்டிக்குது. என்னவோன்னு இருக்குது…”
“ஒன்னும் செய்யாது, இதுக்கு ஏன் பீல் ஆகற?…”
“ஆதவ்வை விட்டுட்டு நீங்க ஏன் வந்தீங்க அத்தான்?…”
“பன்னெண்டு மணிக்கு கால் பண்ணி ஹாஸ்பிட்டல் பத்தி கேட்டா பதறாதா? ஆதவ்க்கு துணைக்கு அப்பா இருக்கார்…” என்று அவனிடம் பேசிக்கொண்டு இருக்க அமலாவின் மடியில் தலைசாய்ந்து படுத்திருந்தவள் நன்றாக உறங்க ஆரம்பித்திருந்தாள்.
“வாசு டாக்டர் வந்துட்டாங்க, வா…” என ஷ்ரவன் எழுப்பிய பின்னரே அவனுடன் எழுந்தாள்.
“தூக்கம் வருது அத்தான்…” என சொல்லிக்கொண்டே மெதுவாய் நடக்க அவளை பிடித்தபடி ஷ்ரவன் உள்ளே செல்ல பின்னோடு அமலாவும் சென்றார்.
“சொல்லுங்க…” என்ற டாக்டரிடம்,
“தொடர்ந்து நாலு தடவை வாமிட் பண்ணிட்டாங்க என் வொய்ப். ஃபூட் பாய்சனா இருக்குமோ டாக்டர்?…” என்று ஆரம்பித்த ஷ்ரவன் திருவிழாவில் அவள் வாங்கி சாப்பிட்ட அத்தனையையும் பட்டியலிட்டு அவன் சொல்ல சொல்ல மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு.
“இப்ப எது சாப்பிட்டாலும் சேரலை. அதான் இப்பவே கிளம்பி வந்துட்டோம்…” என்று முடித்தான்.
“ஓகே, செக் பண்ணிட்டு வரேன்…” என்றவர் வாசமல்லியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
வாசமல்லிக்கு பரிசோதனை முடிந்து வெளியே வந்த மருத்துவர் முகத்தில் சிரிப்பு இருக்க,
“பயப்படமாதிரி எதுவும் இல்லை. நல்ல விஷயம் தான்…” என்று அவர் சொல்லியதிலேயே கண்டுகொண்டவன் மனமோ மகிழ்ச்சியில் துள்ள அவன் எதிர்பார்த்ததை போல வாழ்த்து சொல்லவும் அத்தனை நேரம் இருந்த படபடப்பு குறைந்து முகம் பூரிப்பில் மின்னியது.
“இதுக்காடா இத்தனை ஆர்ப்பாட்டம்? கை குடுடா…” என்று ஷ்ரவனை அணைத்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தான்.
அதன்பின்னர் டாக்டர் பல வழக்கமான அறிவுரைகளையும் மருந்து மாத்திரைகளையும் எழுதி தந்து அவர்களை மாதம் ஒருமுறை செக்கப்பிற்கு வர சொல்லி அனுப்பிவைத்தார்.
“இனி எங்கியாச்சும் பார்த்தத பார்த்த இடத்துல வாங்கி சாப்பிடு வச்சுக்கறேன்…” என்று அவளின் நெற்றியோடு முட்டியவன்,
“ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாசு…” என சொல்ல,
“ஐ டூ சந்தோஷம் அத்தான்…” என்று அவளும் சிரிக்க,
“மத்ததை வீட்டுல போய் பேசுவோம். கிளம்புவோம் இப்ப…” என அமலா சொல்லவும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் வாசு அசதியில் உறங்கி போக ஷ்ரவனுக்கு தான் உறக்கம் தள்ளி போனது. மறுநாள் எழுந்ததும் ஷ்ரவன் கிளம்ப, ஆரம்பித்துவிட்டார் அமலா.
“அவளை அனுப்ப முடியாது ஷ்ரவா, நீ ஸ்டேஷன் கிளம்பி போய்டுவ. அவ தனியா தலைச்சுத்தி கீழே விழுந்துகிடந்தா யார் பார்க்க? அதுவும் இந்த மாதிரி நேரம் அவ நல்லா அரெஸ்ட் எடுக்கனும். முக்கியமா மலை ஏற கூடாது. அலைச்சல் கூடாது. சத்தான ஆகாரமா பார்த்து பார்த்து செய்யனும்…”
இப்படி அவனை டென்ஷன் மேல் டென்ஷன் செய்ய இதை பார்த்தபடி இருந்த வாசுவோ குடித்த பாலை மொத்தமாய் வெளியெடுக்க,
“பார்த்தியா, இதுக்குத்தான் சொல்றேன். அவ இங்க இருக்கட்டும். இந்த வாமிட் எல்லாம் நிக்கட்டும். அப்பறமா பார்க்கலாம்…” என்று ஒரேடியாய் முடிவாய் சொல்ல வாசமல்லியோ அவனுடன் தான் வருவேன் என்று தனியே சண்டையிட்டாள்.
“நான் சொன்னேனே கேட்டியா? உங்க ஊர்ல இருந்த மாதிரியே அங்க இருந்தே கிளம்பியிருந்திருக்கனும். இப்ப பாரு, அனுப்பமாட்டேன்னு சொல்றாங்க. நீ கூட வருவேன்னு நிக்கற. என்னதான்டி செய்ய?…”
ஷ்ரவன் அன்று ஒருநாள் மீண்டும் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து புலம்ப வாசமல்லியின் வீட்டினரும் வந்துவிட சங்கரின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர்.
ஷ்ரவன் சொல்லியது சரி என்று தோன்றினாலும் இப்போதைக்கு வாசமல்லியும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் முக்கியமென்பதால் அமலாவின் பக்கம் தான் நின்றனர்.
“இங்க பாரு இன்னும் ஒரு மாசம் போகட்டும். அப்ப அவ உடம்பு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நானே கூட கொண்டுவந்து விடறேன்…” என்று சொல்லியும் ஷ்ரவன் முகத்தை தூக்கியே வைத்திருக்க,
“குழந்தை பெத்ததும் உன்னோட தானடா வந்து இருக்க போறா? அப்பறம் எதுக்காம் முகத்தை தூக்கி வச்சிருக்க?…” என்று நீலகண்டன் சொல்ல,
“இப்ப என்ன? அவளை அனுப்பமாட்டீங்க அதான?…” என்றவன் மனைவியை பார்த்துக்கொண்டே,
“நான் கிளம்பறேன். எப்ப கொண்டுவந்து விடனுமோ விடுங்க. இல்லைன்னா என் பிள்ளைக்கும் கல்யாணம் முடியவும் அனுப்பிவிடுங்க…” என்று கத்தலுடன் தான் கிளம்பி சென்றான்.
“இவங்களே கட்டி வைப்பாங்களாம். அப்பறம் இவங்களே கூட்டிட்டு போன்னுவாங்கலாம். இவங்களே அனுப்பமாட்டேன்னு பக்குவம் பார்க்கறேன்னு சொல்லுவாங்களாம். எனக்கு பார்க்க தெரியாதா அந்த பக்குவத்தை?…” என்று அமலாவையும், நீலகண்டனையும் தாளித்து எடுத்துவிட்டான்.