“அரைக்கிழவனுக்கு ஆசைல ஒன்னும் குறைச்சல் இல்லை. லைட்டை ஆஃப் பண்ணுங்க. இல்லன்னா அடுத்து கனமா எதாச்சும் பறந்து வரும்…” என்று அவள் சத்தம் போட சத்தமாக சிரித்துக்கொண்டே விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தவன் மகனின் மேல் இருந்த மனைவியின் கையில் கை போட்டான்.
“போயா யோவ்…” என்று மெல்லிய குரலில் அவனை திட்டி கையை தட்டிவிட மீண்டும் மீண்டும் அதையே செய்தவன் அவள் விலக்க விலக்க,
“தேவா ப்ளீஸ்…” என்று அவளின் விரல்களோடு விரல் கோர்த்துக்கொண்டவன் அதை லேசாய் வருடியபடியே உறக்கமின்றி விழித்திருந்தான் தேவகி சொல்லியவற்றை எல்லாம் அசைபோட்டபடி.
‘தன் ஒருவனின் மௌனம் எத்தனை பெரிய வலியை தந்திருக்கிறது? இத்தனை குடும்பங்கள் அவதிப்பட்டிருக்கிறது’ என நினைத்து வெட்கி போனான்.
ஆனால் தேவகி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். அத்தனை நாள் மனதிற்குள் வைத்து குமைந்ததை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்ட நிம்மதியில் நல்ல உறக்கம் அவளை வாரிக்கொண்டது.
அதன் பின்னர் மறுநாளில் இருந்து அவள் சொல்ல சொல்லியது போல கேட்க ஆரம்பித்தான். ஒரு நாள் முழுதாய் முடியும் முன்னரே அத்தனை வெட்கம் பிறக்க,
“சத்தியமா வெக்கமா இருக்கு தேவா. வேற பனிஷ்மென்ட் தா. இது என்னவோ சின்ன பையன் மாதிரி பீல் ஆகுது…”
“ஆகட்டும். எனக்கு இதுக்கிடையில நடந்த எதுவும் ஞாபகம் வேண்டாம். ஆதவ்வை தவிர. அதனால வேற எந்த தண்டனையும் குடுக்கமாட்டேன். சொல்லித்தான் ஆகனும்னு நான் ஒன்னும் கட்டாயப்படுத்தலையே…” என்று சொல்ல மீண்டும் பழையபடி சொல்ல ஆரம்பித்தவனுக்கு இரண்டாம் மூன்றாம் நாள் பழகி போனது.
கொஞ்சமும் இறங்காமல் அவன் சுற்றி வருவதை பார்த்து பார்த்து மனதிற்குள் ரசித்தாள் தேவகி. அத்தனை சந்தோஷமாக இருந்தது அவளுக்கு.
“சுத்த வேண்டிய நேரத்துல இப்படி சுத்தியிருந்தா இந்த நிலைமை தேவையா?…” என்று அவ்வப்போது அவனுக்கு குட்டு வைக்கவும் அவள் மறக்கவில்லை.
மகனின் இந்த மாற்றம் பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அவன் என்ன சொல்லி மருமகளின் பின்னால் சுற்றுகிறான் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆதவ்விடம் கேட்க,
“அம்மா அப்பா கேம் விளையாடறாங்க…” என அவன் சொல்லியது அவர்கள் புரிந்துகொண்ட விதமோ வேறு.
ஒரு சிரிப்புடன் விட்டுவிட்டார்கள். அந்த வார இறுதியில் ஷ்ரவன் அமலா, வாசமல்லியோடு அங்கே வந்து சேர முதல்நாள் கூட அவர்களுக்கு அந்த வித்தியாசம் புரியவில்லை. ஷ்ரவன் கண்டும் காணாமல் இருந்துவிட்டான் என்னவோ நடக்கிறதென்று புன்னகையுடன்.
ஆனால் தெரியாமல் வாசமல்லிக்கு கேட்டுவிட்டது தான் ஷ்ரவனுக்கு திண்டாட்டமாகி போனது.
மாலை சிற்றுண்டி முடிந்து அப்போதுதான் சங்கர் ஆதவ்வை தேடி செல்ல அவன் கிட்சனில் சென்று நின்றுகொண்டிருக்க அங்கே தேவகி, ஆதவ் மட்டும் தான் இருப்பதை கண்டவன்,
“ஆதவ் உன்னை மாமா கூப்பிடறான்…” என சொல்லி அனுப்பிவிட்டு தேவகியை நெருங்கி நின்றான். அவனை திரும்பி பார்த்தவள் அவனுக்கு சூடாக பணியாரம் ஊற்ற,
“இன்னையோட எட்டு நாள்…” என்றான் அவன்.
“ஹ்ம்ம், தெரியும்…”
“அதுக்கப்பறம்?…” என சிரிப்போடு கேட்க திரும்பி நின்றவள் கையில் இருந்த முள்கரண்டியால் அவனை தள்ளி நிறுத்தினாள்.
“அதுக்குள்ளே அடுத்த தண்டனையை யோசிச்சு வைக்கறேன்…” என சொல்லி,
“வந்து வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க? இதை பேசத்தான் வந்தீங்களா?…” என்று சொல்லிவிட்டு தட்டில் எடுத்து வைத்திருந்த கார பணியாரத்தை எடுத்துக்கொண்டு வெளியற அவளின் பின்னால் வந்தவன்,
“ஓகே, எனக்கு வழியில்லை வாழ்க்கை குடு தேவா…” என மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே பின்னால் சென்றான்.
தண்ணீர் எடுக்க வந்த வாசமல்லியோ அவன் சொல்லிக்கொண்டே சென்றதை கேட்டுவிட்டவள் தான் கேட்டது உண்மையோ என்று யோசிக்க தேவகியும், சங்கரும் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
“வாசு என்ன அங்கயே நிக்கற?…” என அவளை அழைக்க அப்போதுதான் தேவகி அவளை பார்த்தாள்.
“என்ன வேணும் மல்லி?…” என கேட்டு கிட்சனுக்கு வர,
“தண்ணி எடுக்க வந்தேன் மதினி…” என வாசு சொல்லவும்,
“என்னை ஒரு சத்தம் குடுத்து கூப்பிட்டிருக்கலாம்ல…” என சொல்ல,
“இனிப்பு பணியாரம் ஊத்தனும் மதினி. அதான் தண்ணி எடுத்துட்டு ஊத்திட்டு போகலாம்னு வந்தேன்..”
“சரி நீ இந்த தண்ணியை என்கிட்டே குடு. அடுப்பை பார்த்துக்கோ. நான் குடுத்துட்டு வரேன்…” என்று அவள் வெளியேற கிட்சன் வாசலுக்கு வந்த சங்கர் மீண்டும் அதையே சொல்ல அதற்குள் ஆதவ் உடையில் சட்னி கொட்டிவிட்டது.
“மல்லி, அதை எடுத்துட்டு வா. நான் ஆதவ்க்கு ட்ரெஸ் மாத்திவிட்டுட்டு வரேன்…” என சத்தம் கொடுத்தவள் சென்றுவிட வாசமல்லி தான் மீண்டும் மீண்டும் யோசித்தபடி பணியாரத்துடன் வெளியே வந்தாள்.
வந்தவள் ஷ்ரவனை தாண்டிக்கொண்டு சொல்ல அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“என்னவாம் கனவு கண்டுட்டே எங்கையோ கிளம்பிட்ட மாதிரி தெரியுது?…” என்று கிண்டலுடன் அவளை அமர சொல்லி தட்டில் இருந்த பணியாரத்தை இரண்டாய் பிரித்து சூடு போக ஊதினான்.
“சாப்பிடாம என்ன யோசிக்கிற?…” என அவளிடம் நீட்ட,
“அத்தான் நான் இப்ப ரெண்டுவாட்டி ஒன்னு கேட்டேன்…”
“என்ன கேட்ட? பணியாரம் தானே? இந்தா…” என சொல்ல சங்கரன் அவள் எதை சொல்கிறாள் என்று பார்த்தான்.
“வழியில்ல வாழ்க்கை குடுன்னு எங்கண்ணே மதினிட்ட ரெண்டுவாட்டி கேட்டாரு…” என்று சொல்லவும் ஷ்ரவன் விருட்டென்று சங்கரை பார்க்க,
“எதே?…” என்ற சத்தத்துடன் எழுந்த சங்கர் மாடிக்கு ஓடியே போனான்.
“அத்தான் பணியாரம்…” என சிரிப்போடு ஷ்ரவன் அழைக்க,
“எனக்கு காது கேட்கலைடா…” என சொல்லிக்கொண்டே ஓடிவிட்டான்.
அடக்கமாட்டாமல் வயிற்றை பிடித்து சிரித்துக்கொண்டே ஷ்ரவன் சோபாவில் குதிக்க,
“அண்ணே இங்கயா இருந்தாங்க?…” என வாசமல்லி கேட்கவும்,
“அறிவு களஞ்சியம்டி. இருந்ததை கூட கவனிக்காம பேசி உங்கண்ணன் இந்நேரம் நாட்டு எல்லையையே தாண்டிருப்பார் ஓடின ஓட்டத்துக்கு…” என்று சிரிக்க சிரிக்க,
“ப்ச், பாவம் எங்கண்ணன். உங்களுக்கு சிரிப்பா வருதா? இந்த மதினி எங்கண்ணன எப்படிலாம் பேச வச்சுட்டாங்க…” என்று பொங்க,
“பார்ரா ரொம்ப கோவமாகிட்ட போல?…” என சொல்ல,
“ப்ச், கிண்டல் பண்ணாதீங்க அத்தான்…” என்றாள் கவலையாக.
“இப்ப என்ன செய்ய சொல்ற?
“வாழ வழியில்ல வாழ்க்க குடுன்னு எங்கண்ணே கெஞ்சிட்டு போய்ட்டிருக்காரு மதினி பின்னாடி. பாவம்ல….”
“அதுக்கென்ன? அவர் பொண்டாட்டி, அவர் கெஞ்சறார். இதுல உனக்கும், எனக்கும் என்ன நஷ்டம்? புருஷனை கெஞ்ச விடறது பொண்டாட்டிங்களுக்கு ஒரு சந்தோஷம்…” என சொல்ல அதை எல்லாம் காதில் வாங்காதவள்,
“அதுக்கென்னவா? எம்புருஷன் நீங்க அரும்பாருபட்டு, வம்பாடுபட்டு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க என்னலாம் தகிடுதத்தம் பண்ணி…” என்றவளின் வாயில் லேசாய் அடித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
பெரியவர்கள் அனைவரும் வெளியே நாற்காலியை போட்டு பேசிக்கொண்டு இருந்தனர். அதனால் இவர்களை கவனிக்கவில்லை.
“வாசு நிறுத்து. இப்ப என்னத்துக்கு இத்தனை சொல்லிட்டிருக்க? நீ ஒருத்தியே போதும். என்னை என்னவோ ஒரு ரேஞ்சுக்கு நீ பேசறன்னு தெரியுதாடி? வாய மூடு…”
“நீங்க சும்மாருங்க அத்தான். உங்களுக்கு ஒன்னும் தெரியாது?…”
“யாருக்கு எனக்கு? அப்படியே உனக்கு உலகமே தெரியுதாக்கும்? ஐயோ இவ வாய மூடமாட்டிக்கிறாளே…” என தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
“எம்புட்டு வேல பாத்து இழுத்து புடிச்சு கல்யாணத்த முடிச்சு வச்சா இவங்க எங்கண்ணன இந்த மதினி சுத்த விடுவாங்களா? இந்த நியாயத்தை கேட்க வேண்டாமா?…” என லேசாய் மேடிட்ட வயிற்றை தூக்கிகொண்டு அவள் வேகமாய் செல்ல போக,
“சுத்தம். நீ ஒரு நாயத்தையும் கேட்க வேண்டாம். பொங்கவும் வேண்டாம். போய் கேட்கறேன்னு நீயே ஆளுக்கொருபக்கமா பிச்சுவிட்டுடுவ போல…”
“நானா?…” என நெஞ்சில் கை வைத்து அவள் கேட்க,
“இதை நானா செய்யனும் இவ்வளவு நேரம் நீ பண்ணினதுக்கு. உல்ட்டாவா நீ நெஞ்சுல கையை வைக்கிற…” என்றவன்,
“உங்கண்ணன் அப்படியே அப்பாவி பாரு. ஊம ஊரை கெடுக்கும்னு மாதிரி இருந்தவரு இத்தனை நாள் தேவகி இருந்த பக்கமே திரும்பாம பாக்காம இருந்த மனுஷன் ரெண்டு நாளா பின்னாடியே போய்ட்டிருக்கார்ன்னு நானே சந்தோஷமா இருக்கேன்…”
“எங்கண்ணன் இப்படி பின்னாடி சுத்தறது உங்களுக்கு சந்தோஷமா அத்தான். உங்கள எவ்வளோ நல்லவருன்னு நினச்சேன்?…”
“இப்ப அதுக்கென்ன குறைச்சல் வந்துருச்சு?…”
“கல்யாணம் பண்ணி எங்கண்ணன் எங்க மதினிட்ட வழியில்ல வாழ்க்கை குடுன்னு கேட்கறாரு. கெஞ்சறாரு. இங்க என் புருசனுக்கு அந்த சமத்து இருக்கா? ஆவுனா துப்பாக்கிய நீட்டினா மாதிரி மிரட்டறது. உருட்டுறது தான். நான் வாங்கிவந்த யோகம்…”
“யாரு நான் மிரட்டி நீ பயந்த? ஆனாலும் இது உலகமகா நடிப்புடி…” என்று சொல்ல,
“இப்ப என்ன நடிச்சேனாம்? நீங்க பார்த்தீங்க?…” என்றாள் அவனிடம் மல்லுக்கு.
“இப்படியே பேசிட்டே இரு. நான் நாலு நாள் தூங்கி எந்திச்சு வந்து பதில் சொல்றேன்…”
“ஏன்?…”
“உன்கிட்ட பேச என் உடம்புல தெம்பில்லை தாயி…” என சொல்ல பணியார தட்டை எடுத்து அவனிடம் நீட்டியவள்,
“இத சாப்புட்டு தண்ணிய குடிச்சுட்டு பதில் சொல்லுங்கத்தான். நான் இங்கயே உக்கார்ந்து இருக்கேன்…” என்று காலை தூக்கி சோபாவில் வைத்தவள் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ள மீண்டும் சிரிப்பு பொங்கியது.
“நான் உன்னை கலாய்ச்சேன் வாசு. உனக்கு தெரியலையா?…” என சிரிப்போடு முகம் கனிந்து கேட்க,
“அப்ப நிசத்துக்கும் தெம்பில்லைன்னு சொல்லலையா?…” என முறைக்க அவளை அணைத்தபடி,
“சும்மா சொன்னேன்டி. உன்கிட்ட பேசத்தான் அத்தான் அந்த ஊட்டி மலையிறங்கி வந்திருக்கேன். அப்படி சொல்லுவேனா?…” என கேட்டு அவளின் கன்னத்தை கிள்ள,
“அத்தை…” என்று ஓடி வந்தான் ஆதவ்.
“அப்பா எங்கடா?…” என்று அவனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டான் ஷ்ரவன்.
“இன்னைக்கு கேமோட பைனலாம். யார் வின்னிங்க்னு அப்பா வந்து சொல்றேன்னு சொல்லிருக்காங்க. என்னை போக சொல்லிட்டாங்க…” என்று சொல்ல,
“என்ன கேம்? எனக்கு சொல்லலை?…” என மீண்டும் வாசு ஆரம்பிக்க,
“இப்போ என்ன? உனக்கு இன்னைக்கு புது கேம் அத்தான் சொல்லி தருவேனாம். இப்ப வெளில வா. எல்லாரும் சேர்ந்தே விளையாடலாம்…” என எழுந்துகொண்ட ஷ்ரவன் வாசமல்லியை மெல்ல எழுப்பி தோளில் கை போட்டப்படி ஆதவ்வையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.
மாடியில் சங்கரின் அணைப்பில் அகப்பட்டுக்கொண்ட தேவகி அவனை வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருக்க,
“என்னவும் பேசிக்கோ, திட்டிக்கோ. இன்னைக்கு தங்கச்சி முன்னாடி சுத்திருக்கேன். இதை இப்பயே சும்மா விட சொல்றியா? எல்லாம் உன்னால தான்…”
“முதல்ல என்னை விடுங்க….” என்று திமிற,
“அதெல்லாம் முடியாது. என்ன பண்ணுவ?…” என்று கேட்க,
“இதை கேட்க இந்த போலீஸ்க்கு இத்தனை நாள் ஆச்சாக்கும்? நான் சொல்லவும் பயந்துட்டு சுத்திட்டு இன்னைக்கு மட்டும் என்னவாம்?…” என்று தேவகி முனங்கவும் அவள் சொல்ல வருவது அப்போதுதான் அவனுக்கு விளங்க,
“இப்பவும் நான் தான் சொதப்பிட்டேனா?…” என்று அசடுவழிந்தான்.
“அய்ய, வழியுது. விடுங்கன்றேன்ல. இல்லைன்னா கத்துவேன்…”
“ஓகே கத்திக்கோ…”
“என்ன மாட்டேன்னு நினைக்கறீங்களா?…” என்றவள்,
“மல்லி இங்க வா…” என்ற சத்தத்தில் பதறி போன சங்கர் அவளின் இதழ்களை மூட அவனின் கையை எடுத்துவிட்ட தேவகி,
“மல்லி…” என்று அறையின் ஜன்னலில் இருந்து கீழே சத்தம் குடுக்க ஓடி சென்று கதவை தாளிட்டு வந்தவன்,
“தேவா ஏன் இப்படி பன்ற?…” என்றான் இடுப்பில் கை வைத்து நின்று.
“கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டு இந்த பயம் பயப்படறீங்க. இதுக்கு தான கட்டி புடிச்சீங்களா?…” என்று மீண்டும் வாதாட இப்போது அவளோடு பதிலுக்கு தன் இதழ்களை கொண்டு வாதம் புரிந்தான் அந்த காவலதிகாரி.
கீழே கேட்ட சத்தத்தில் வாசமல்லி மட்டுமல்ல அவனைவருமே நிமிர்ந்து பார்க்க ஷ்ரவனை கையை பிடித்து இழுத்துக்கொண்டு,
“வாங்கத்தான், அங்க சண்டை. போய் விலக்குவோம்…” என்று சொல்ல,
“என்ன ஷ்ரவா?…” என்றார் அமலா.
“ம்மா சும்மா இருக்கீங்களா? இவ கூட சேர்ந்துட்டு நீங்களும்…” என்றவன்,