பூ – 5
ஊட்டி மலை பாதை மீது ஏற துவங்கியது ஷ்ரவனின் ஜீப். அவ்வப்போது வாசமல்லியை திரும்பி பார்த்துக்கொண்டே தான் ஓட்டினான்.
வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவள் மலை மீது ஏற துவங்கவுமே கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இருக்கையில் ஷ்ரவன் பக்கம் பார்த்து சாய்ந்துகொண்டாள்.
அரைமணி நேரம் பொருத்து பார்த்தவன் அவள் உறங்கவில்லை, வெறுமனே கண்ணை மூடி இருக்கிறாள் என்பதை கண்டுகொண்டான்.
“வாசு, தூக்கம் வருதா?…” என அவளிடம் கேட்க,
“ம்ஹூம் அதெல்லாம் இல்லை அத்தான். சும்மா தான்…” என்று கண்ணை திறவாமல் பதில் தர,
“ப்ச், என்னை பார்த்து பேசு…” என சொல்லியவன் பார்வை கவனமாக பாதையில் தான் இருந்தது.
“அதான் பேசறேனே. நீங்க என்னை பார்க்கலையே. அப்பறம் என்ன?…” என்றவள் குரலும் என்னவோ போல் இருந்தது.
“என்ன பண்ணுது வாசு?…” என்று ஜீப்பை ஒரு இடம் பார்த்து ஓரத்தில் நிறுத்திவிட அரண்டு போனாள்.
“அத்தான், ப்ளீஸ் வண்டியை எடுங்க. எடுங்க…” என்று கூச்சலிட,
“முதல்ல என்னன்னு சொல்லு. என்னை பாரு…” என அவனின் அதட்டலில் நிமிர்ந்து பார்த்தவள்,
“இல்ல, ஒரு மாதிரியா இருக்குது. அதான். சீக்கிரம் போவோம். நிறைய வண்டி வருது பாருங்க…” என அவனை கிளப்ப படாதபாடுபட,
“முதல்ல என்கிட்டே உண்மையை சொல்லு. என்னன்னு கேட்டா ஏதேதோ பேசற? நீ சொன்னா தான் கிளம்புவேன்…” என்றவனின் பிடிவாதத்தில்,
“கோச்சுக்க மாட்டீங்களே?…” என்றாள் மெதுவாக.
“ம்ஹூம். சொல்லு. கோவப்படறதெல்லாம் அப்பறம் பார்த்துப்போம்…” என,
“எனக்கு மலை ஏறும் தலை சுத்தும்…”
“சுத்தம்…” என்றவனின் பேச்சில் லேசாய் சிரித்துக்கொண்டாள்.
“அதான் கண்ணை மூட்டி சாய்ஞ்சிக்கிட்டேன்….”
“இன்னும் வேற என்ன எல்லாம் இருக்குது? அதையும் சொல்லிடு. ஒண்ணொண்ணா கேட்டு கேட்டு எனக்கு தான் தலை சுத்தும் போல…” என்று அவன் சொல்லவும் என்ன அப்தில் சொல்வதென்று தெரியாமல் அவனை பார்க்க,
“சரி சாஞ்சிக்கோ. வேற ஒன்னும் இல்லை தானே? அவ்வளவு தானே?….” என கேட்க,
“சுத்தி சுத்தி ஏறும் போது வயித்தை பிரட்டுது. சாப்பிட்டதெல்லாம்…”
“இதுவேறையா?…”
“இல்ல இல்ல எத்தான். பேசினா தான். அதான் கம்மின்னு கண்ணை மூடிட்டேன். இப்ப வண்டியை எடுங்களேன்…” என்ற கெஞ்சலில் ஜீப்பை கிளப்பிக்கொண்டு வேகமாய் மலை ஏறினான்.
அதுவரை இல்லாத வேகம். மிரண்டு போய் வாசு அவனை பார்க்க அவளின் பார்வையை சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கவனித்தான்.
“அதான் தலை சுத்தும், வாமிட் வரும்ன்னு சொன்னியே. பேசாம கண்ணை மூடு. என்னை என்ன பார்வை?…” என்று எரிந்து விழ,
“மெதுவா போங்க அத்தான். ஒரு மாதிரி தடதடன்னு இருக்குது…” என்று அவள் சொல்லவும் இன்னும் முகம் ஜிவுஜிவுத்து போனது அவனுக்கு.
இதுநாள் வரை ஊட்டி மலைப்பயணம் அத்தனை இதமாக இருந்துவந்தது அவனுக்கு. அந்த மலைப்பாதையில் ட்ரைவிங் அவனுக்கு அத்தனை பிடித்தம். சில நேரங்களில் இதையும் விட வேகமாக பயணிப்பவன். அது ஒரு த்ரில் அவனுக்கு.
இன்று இன்னொருவருக்கு என்று பார்க்கவேண்டிய தன் சூழ்நிலையை எண்ணி கோபமாய் வந்தது.
ரசனைகள் ஒத்துபோகவில்லை. பழக்கவழக்கங்கள் ஒத்து போகவில்லை. இப்போது பயணங்களும் இப்படித்தான் ஆகிவிடுமோ என்று உள்ளுக்குள் பொங்கினான்.
அதிலும் வாசமல்லியின் அந்த முகம் அவளிடம் கோபத்தை காண்பிக்கவும் விடவில்லை. அவளை அந்த வட்டம் இவனை வாட்டியது.
இதுவரை தன்னை தானே பார்த்துக்கொண்டான். தான் யாரையும் பார்த்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதில்லை. இப்போது இத்தனை பெரிய பொறுப்பை தனது தலையில் ஏற்றி வைத்துவிட்டார்களே என்ற எண்ணம் வலுப்பெற்றது.
வாசமல்லியின் பேச்சுக்கள், செயல்கள் என்று அவனுக்கு புதிதாய், சுவாரசியமாய் இருந்தாலும் இனி காலம் முழுக்க அவளை இப்படி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமோ என்னும் ஆயாசமும் எழாமல் இல்லை.
அவளுக்கு கஷ்டம் குடுக்கவும் விரும்பவில்லை. அதே நேரம் தன்னுடைய பிடித்தங்கள் மாறுவதிலும் இஷ்டமில்லை.
“வேகத்தை குறைங்க அத்தான். இல்லனா இனகியே என்னைய இறக்கி விடுங்க. நான் பஸ் புடிச்சு மேல வரேன்…” என அவள் இப்போது கோபமாக பேசவும்,
“பயத்துல உளறலாம் ஆரம்பிச்சுட்ட வாசு. இங்க எந்த பஸ்ஸை புடிச்சு வருவியாம்? வீடும் தெரியாது. அட்ரெஸ் கூட தெரியாது….” என கேட்க,
“ஏன் முடியாதா? என்னால முடியும். போலீஸ் புருஷன் வீட்டுக்கு போகனும்னு சொல்லுவேன். உங்க பேரை சொல்லுவேன். கொண்டாந்து விடமாட்டாங்களா?…” என அவள் வீம்பாய் கேட்ட வேகத்தில் அத்தனை சஞ்சலங்களும் மறைந்து லேசாய் சிரிப்பு வர,
“ஹ்ம்ம், அப்பறம்?…”
“அப்பறம் நான் வீட்டுக்கு வந்துருவேன்…” என்று அவள் சொன்ன பின்பு தான் கவனித்தாள் மீண்டும் ஜீப் நின்றுவிட்டதை.
“ஐயோ எதுக்கு நிப்பாட்டினீங்க அத்தான்? வண்டியை எடுங்க. வண்டியை எடுங்க…” என்று சொல்லி முகத்தை மூடிக்கொள்ள,
“நீதான நிறுத்த சொன்ன? அதான். இறங்கு. இறங்கி பஸ்ல வா. நானும் எந்த பஸ் உன்னை ஏத்திட்டு போகுதுன்னு பார்க்கறேன்…” என சிரிக்காமல் சொல்ல அவன் நிஜமாகவே சொல்கிறானோ என நினைத்தவள்,
“யூ டெல் நிஜம்…” என கேட்க,
“எஸ், சூர்…” என்றான் மிதப்பாய்.
“நான் இறங்கிருவேன். அப்பறம் எத்தனவாட்டி திரும்ப இந்த சீப்புல ஏறுன்னு சொன்னாலும் ஏறவே மாட்டேன். சரின்னு சொல்லுங்க இப்பவே இறங்கறேன்….” என்று அழுத்தமாய் சொல்லியவள் குரலில் இருந்த பிடிவாதம் ஷ்ரவன் அசந்து போய் பார்த்தான்.
“வாசு…”
“நான் சொன்னா சொன்னதுதான் அத்தான். இப்பவே இறங்கி போடின்னு சொல்லுங்க…” என்றவளின் முகம் பார்க்க அதுவோ ஜன்னல் பக்கம் திரும்பாமல் அவனின் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் இருந்தது.
ஆனால் வியர்த்து போய் உதடு நடுங்கிக்கொண்டு இருக்க அவளின் பயமும் புரிந்தது. அதே நேரம் வீம்புடன் அவள் பேசுவதும் புரிந்தது. ஒரு சலிப்புடன் ஜீப்பை கிளப்பினான்.
“ஏன் வாசு இப்படி பன்ற?…” என முணங்கினாலும் மேலும் பேசமுடியவில்லை அவனால். இன்னும் அவளுக்கு எது எதுவெல்லாம் ஒத்துக்கொள்ளாதோ என யோசிக்க ஆரம்பித்தான்.
இன்னும் சில நிமிடங்கள் கடக்க மலை ஏற ஏற புடவை தலைப்பை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டாள் அவள்.
“வாசு குளிருதா?…” என்று அவன் கேட்டதும் தலையை மட்டும் அசைக்க,
“உனக்கு ஸ்வெட்டர் எதுவும் எடுத்து வச்சுக்கலயா?…”
“மதினி குடுத்தாங்க. வாங்கி பெட்டில வச்சுட்டேன்…”
“வாசு…” என பல்லை கடித்தான்.
“ஊட்டி குளிரும்னு தெரியும் தானே?…”
“தெரியும். சொல்லிருக்காங்க. ஆனா பகல்ல தான போறோம்னு நினைச்சேன்…”
“நல்லா நனைச்ச போ. இப்ப குளிர்ல நடுங்கிட்டு இருக்க. ஒன்னொன்னும் உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா? அதுக்கொரு ஆளா வைக்க முடியும்?…” என எரிச்சல்ப்பட்டவன் மீண்டும் ஓரிடத்தில் நிறுத்தி பின்னால் இறங்கி பின்னால் போக,
“அத்தான்…” என்றவளின் குரலில்,
“இருடி வரேன்…” என்று கடுப்படித்துவிட்டு,
“எந்த பெட்டில வச்சிருக்க?…” என கேட்க,
“கீழே உள்ள கடைசி பெட்டி…” என்று சொல்லவும் அதை எடுக்க முடியாமைக்கு இன்னும் கோபம் வந்தது. அந்த கதவை அறைந்து சாற்றிவிட்டு மீண்டும் வந்தமர்ந்தவன் தான் போட்டிருந்ததை கழற்றி தர,
“உங்களுக்கு…” என்றாள் வாங்காமல்.
“ப்ச், எனக்கு இந்த குளிர் பழக்கம் தான். அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்…” என்று சொல்லி முறைக்க மேலும் பேசினால் இன்னும் கோபப்படுவானோ என்று வாங்கிக்கொண்டாள். அவள் போட்டுக்கொண்டதும்,
“இப்போ ஓகே தானே?…” என கேட்க காலை மடக்கி புடவைக்குள் வைத்தபடி சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள்,
“ஹ்ம்ம் ஓகே ஓகே ஓகே….” என சொல்ல,
“உன்னை பேம்ப்பர் பண்ணிட்டே இருக்க வேண்டியதா இருக்கு வாசு. எதை எதுக்கு குடுக்காங்கன்னு புரிஞ்சு நடந்துக்கோ. அவ்வளவு தான் சொல்லுவேன்…” என்று சொன்னவன் மீண்டும் ஜீப்பை கிளப்பினான்.
ஒரு முறை கூட இத்தனைதடவை ஜீப்பை நிறுத்தி நிறுத்தி அவன் சென்றதில்லை. இருமுறை தோழர்கள் வந்த பொழுது சுற்றி காட்டவென அழைத்து வந்து ஆங்காங்கே போட்டோ எடுத்துக்கொள்ள என்று இருக்க அப்போது அந்த அலுப்பே இல்லை.
இயற்கையை ரசிக்கவென இறங்கி ஏறி அதனை புகைப்படத்தில் சிறைபிடித்து என்று அந்த ரசனையே வேறு. இந்த பயணம் முற்றிலும் வேறு. எங்கே இதுவே வாசமல்லியை தள்ளிவைக்குமோ என அஞ்சினான்.
ஒருவழியாய் மாலை ஊட்டி வந்து வீடு வந்து சேர்ந்தனர். அதன் பின்னரே கண்ணை திறந்தாள் அவள்.
கோவையில் இருந்து இரண்டு மணிநேரத்தில் வரவேண்டியது. இழுத்தடித்து வர தாமதமாகிவிட்டது. அதில் பெரும்பங்கு வாசமல்லிக்கே.
“வந்துட்டோமா அத்தான்?…” என சிரிப்புடன் அவள் கேட்டதுமே மனதின் அலுப்புகள் எல்லாம் அகலுவதை போலவே இருந்தது அந்த சிரிப்பு. பளிச்சென்ற மின்னல் சிரிப்பு.
“ஹ்ம்ம், வந்துட்டோம்…” என்றன அவனும் தனது கோபத்தை எல்லாம் தள்ளி வைத்தவனாக.
“இதுவா அத்தான்? ஆனா நிறைய ஒன்னு போல இருக்கே. ஆனா தள்ளி தள்ளி இருக்கு…” என்று பற்கள் குளிரில் தந்தியடிக்க நடுங்கியபடியே அவள் கேட்க,
“ரொம்ப குளிருதா?…” என்று கேட்டபடியே அவன் லக்கேஜ் அனைத்தையும் இறக்க அதற்குள் உதவிக்கு வந்துவிட்டனர் அங்கிருந்தவர்கள்.
“வாங்க தம்பி…” என அவனிடம் பேசிவிட்டு திரும்ப வாசமல்லி வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
“இதுதானா உங்க சம்சாரங்களா?…” என கேட்கவும் சிரிப்புடன் ஆமோதித்தவன்,
“வாசு…” என்று அவளை அழைக்க அவனருகே வந்து நின்றாள்.
“இவர் பேர் அரங்கநாதன். நாதன்னு கூப்பிடுவோம். கான்ஸ்டபிள்…” என்று அறிமுகப்படுத்த அவரிடம் கைகூப்பி வணக்கம் வைத்தாள்.
“இந்தா கீ. டோர் ஓபன் பண்ணு…” என்று தந்துவிட்டு மற்ற அனைத்தையும் இறக்கி வைத்தான்.
அதற்குள் வாசு ஓடி சென்று கதவை திறந்தவள் வேகமாய் உள்ளே சென்று சுற்றி பார்த்துவிட்டே வந்தாள். அதற்குள் வாசலில் பெட்டிகள் எல்லாம் வந்து இருக்க,
“அச்சோ அத்தான்…” என்றவளின் பதட்டத்தில் துணுக்குற்றவன்,
“இப்ப என்ன?…” என,
“அம்மா முதமுத ரெண்டு பேரும் சேர்ந்துதான் வலதுகால வச்சு உள்ள வரனும்னு சொன்னாங்க…” என்று தலையில் கை வைத்து சொல்ல,
“அதுக்கென்னங்கம்மா? இன்னொருவாட்டி சேர்ந்து போங்க. அம்புட்டுத்தான்…” என்ற நாதன் பெட்டிகளை உள்ளே வைக்க போக,