“வேணும்னா சொல்லு. நர்சரில போய் வாங்கிட்டு வரலாம். பின்னாடி வளர்த்துக்கோ…”
“வளர்க்கலாமா? அப்போ சரி வாங்கி தாங்க. சங்கரண்ணேட்ட தான் கேப்பேன். ஊருக்கு வாரப்பலாம் ரோசாப்பூ கலர் கலரா வாங்கிட்டு வரும். வளக்கத்தான் முடியாது…”
மெல்ல மெல்ல பேச்சு ஷ்ரவன் எதிர்பாராத திசைக்கு தானே நகரலானது. வாசுவும் யோசிக்காமல் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
“ஏன்? அங்க வளர்க்கறதுக்கென்ன?…”
“வளக்கலாம் தான். ஆனா இல்ல. ஒருவாட்டி அண்ணங்கிட்ட கேட்டதுக்கு பெரிம்மா ரொம்ப பேசிடுச்சு. மூலையில கிடக்கறவளுக்கு இதுக்கொன்னுதேன் கொறச்சலுன்னு. அதுல இருந்து எதுவும் கேக்கமாட்டேன்…” என்று சொல்ல ஆச்சர்யமாய் இருந்தது ஷ்ரவனுக்கு.
அவனறிந்து சங்கரின் தாய் இப்படிஎல்லாம பேசுபவறல்லவே. அபர்னிதாவும் அத்தனை பெருமையாய் பேசுவாள் அவளின் மாமனார் மாமியாரை.
“நிஜமாவா? அவங்க ஏன் உன்னை திட்டறாங்க?…”
உண்மைக்கும் ஷ்ரவனுக்கு அந்த குடும்பத்தை பற்றி மட்டுமல்ல எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்ள அவன் விரும்பவும் இல்லை.
முதலானால் அதை அந்த ஊரை தெரிந்து தனக்கென்ன ஆகவிருக்கிறது என்கிற அலட்சியத்தில் தெரிந்துகொள்ளவில்லை. பின்பு வாசமல்லியுடனான திருமண பேச்சின் பின்பு கோபத்தில் தெரிந்துகொள்ள நினைக்கவில்லை.
முன்பும் சங்கர் மட்டும் போதும் என்று இருந்தவன் இப்போது வாசமல்லி மட்டும் போதும் என்று அந்த எல்லையில் நின்றுகொண்டான்.
“பெரிம்மாவுக்கு என்னை மட்டுமில்ல எங்க ஊரையே புடிக்காது. அதுவும் அம்மாப்பாவ சுத்தமா ஆவாது. அவங்க ரொம்ப உசரம் பாப்பாங்க. நாங்கலாம் அவங்களுக்கு தோதில்லன்னு நெனப்பு…” என்று சொல்ல,
“நிஜமாவா?…”
“அட ஆமாங்கறேன். அதுக்குத்தேன் தேவகி மதினிய வேண்டாமின்னுட்டு ஒத்தக்காலுல நின்னு மதினிய அண்ணனுக்கு கெட்டி வச்சாங்க…” என்று விளக்கமாய் சொல்ல ஷ்ரவன் திகைப்புடன் பார்த்தான்.
“யாரு தேவகி?…”
“எனக்கும், சங்கரண்ணேனுக்கும் ஒன்னுவிட்ட அத்தமவ. அதுவும் நல்ல படிச்ச புள்ளதான். அண்ணனுக்கும் அவுங்க மேல ஒரு நெனப்பு. ரொம்ப ஆசையா இருந்தாங்க. நாங்களும் அண்ணே அவங்களத்தேன் கட்டுவாங்கன்னு நம்பிட்டு இருந்தோம்…”
“திடீருன்னு மதினி பத்தி பேசி மாமாவும் அத்தையும் வரவும் பெரிமாவுக்கு காலு தரையில பாவல. ஒத்தக்காலுல நின்னு முடிச்சுவச்சுட்டாங்க. அண்ணே எம்புட்டோ சொல்லுச்சு. அப்பா கூட போயி பெரிம்மாட்ட பேசி பாத்தாங்க. கேக்கலியே. கெட்டினா அபி மதினியத்தேன் கெட்டனும்னுட்டாங்க…”
“இப்ப என்னன்னா ரெண்டுபேத்துக்கும் ஒத்து போவல போல. அதன் மதினி என்கிட்ட பேசி இன்னைக்கு நானு…” என்றவள் அப்படியே பேச்சை கப்பென்று நிறுத்த அவளையே கூர்மையாக பார்த்துக்கொண்டு இருந்தான் ஷ்ரவன்.
“சொல்லு வாசு, ஏன் நிறுத்திட்ட?…” என சாதாரணம் போல கேட்டாலும் உள்ளுக்குள் அவனிடம் பல அதிர்ச்சிகள்.
சங்கருக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணின் மேல் விருப்பம் இருந்திருக்கிறது என்பதும், இப்போது சங்கர், அபர்னிதா இருவருக்கும் ஒத்துபோகவில்லை என்பதும் அவனுக்கு பெரிய அதிர்ச்சி.
அதையும் தாண்டி கடைசியாக வாசு சொல்லவந்து நிறுத்தி பின் திருதிருவென பார்த்து நின்றதும் அவனின் சந்தேகத்தை அதிகமாக்கியது.
“வாசு, கேட்கறேனில்ல?….”
“அதுவாத்தான். எல்லாம் புருஷன், பொண்டாட்டிக்குள்ள நடக்கற சண்டை தான். அப்பப்ப போடற சண்டை எப்பவாச்சும் மதினி சொல்லுவாங்க. அதன் பேசிட்டே சொல்லிட்டு வந்தேன். நாம போவோமா? போயி ராவுக்கு சமைக்கனும்…” என்று அவள் சமாளிக்க ஷ்ரவனும் அமைதியாக நடந்தான் அவளுடன்.
வீட்டினுள் நுழைந்ததும் வேகவேகமாய் சமைக்க செல்ல மதியம் செய்திருந்த குழம்பு மிச்சம் இருக்க,
“வாசு. தோசை மட்டும் ஊத்து. குழம்பு வச்சு சாப்பிட்டுக்கலாம்…” என்று சொல்லியிருந்தான்.
அதன் பின்னர் எதுவும் பேசாமல் வாசமல்லி சமைக்க ஷ்ரவனின் எண்ணிற்கு அழைத்தாள் அபர்னிதா.
“சொல்லு அபி…” என பேசியபடியே வாசலுக்கு வந்துவிட்டான்.
“மல்லி எங்கடா? அவக்கிட்ட போனை குடு…” என கேட்க,
“அவ தூங்கிட்டா. என்னன்னு சொல்லு நான் சொல்லிடறேன்…”
“இப்போவேவா? நான் அவ நம்பருக்கு கால் பண்ணேன். இன்னைக்கு எடுக்கவே இல்லை அவ. இப்போ போட்டா சுவிட்ச் ஆஃப்ன்னு வருது…” என்று சொல்ல,
“ஓஹ் அதுக்கென்ன?…” என்றான் விட்டேற்றியாக.
“நீ அவகிட்ட சொல்லியிருந்தியா என் போன் எடுக்க கூடாதுன்னு…”
“இல்லையே. ஏன் உனக்கு அப்படி தோணுது?…” என்று ஷ்ரவன் கேட்கவும் அபர்னிதா திணற,
“இப்போ என்ன இங்க பேச்சு? அத்தான் வந்திருப்பார் தானே? அவர்கிட்ட பேசு. நானும் தூங்க போறேன். பை…” என்று சொல்லி வைத்துவிட்டவன் வாசமல்லியின் மொபைலை தேட அதை காணவில்லை.
“வாசு உன் மொபைல் எங்க?…” என்று சத்தம் கொடுக்க,
“தோசை ஊத்த ஊத்த சாப்பிடுங்க அத்தான். அப்பத்தான் நல்லா இருக்கும்…” என்று சொல்லவும் அப்படியே மேடையில் ஏறி அமர்ந்துகொண்டவன் அங்கேயே வைத்து சாப்பிட ஆரம்பிக்க இப்போது ஷங்கர் அழைத்துவிட்டான் வீடியோ காலில்.
“உன் அண்ணன் தான்…” என்றபடி எடுத்தவன் சங்கரை பார்த்ததுமே வாசு சொல்லியவை தான் ஞாபகத்தில் வந்தது.
“என்னடா அட்டன் பண்ணிட்டு அப்படி பார்க்கற?…” என சங்கர் கேட்டதும் புன்னகைத்தவன்,
“அதெல்லாம் இல்லை அத்தான். பின்னால யாரோ நிக்கற மாதிரி இருந்துச்சு. அதான்…” என்று சமாளித்துவிட்டு,
“எங்க பையனை காணோம்?…” என்று கேட்டபடி மொபைலை பிடித்துக்கொண்டே தோசையை சாப்பிட,
“இப்போதான் சாப்பிடறீங்களா?…” என்ற சங்கரிடம்,
“ஹ்ம்ம், ஆமா அத்தான். வெளில சும்மா ஒரு வாக் போனோம். போய்ட்டு வந்து தோசை…”
“என் தங்கச்சி எங்க?…” என்றதும் அவள் பக்கம் மொபைலை திருப்ப வாசமல்லியும் கலகலப்பாய் அவனிடம் பேசியபடியே ஷ்ரவனுக்கு தோசை வார்த்துக்கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
“எனக்கு போதும் வாசு. நீ சாப்பிடு…” என்று இறங்கி கையை கழுவியவன் அவளிடம் இருந்த கரண்டியை தான வாங்கிக்கொண்டான்.
“நீ சாப்பிடு. நான் ஊத்தறேன்…” என்று சொல்ல,
“இல்ல அத்தான், வேணாம். அண்ணே வேற இருக்காங்க…” என்று தயங்க,
“உங்கண்ணன் இதுக்கெல்லாம் சந்தோஷப்படத்தான் செய்வார்…” என சொல்லிய ஷ்ரவன்,
“என்னத்தான் நான் உங்க தங்கச்சிக்கு தோசை ஊத்தி குடுக்கலாம் தானே?…” என கேட்க,
“ஆமா, அதை நீ தான ஷ்ரவன் செய்யனும்…” என அவனும் சந்தோஷமாய் பேசிக்கொண்டிருக்க அதுவரை பொறுமையாய் சங்கரிடம் இருந்து மொபைலை வாங்கியவள்,
“என்னை மறந்துட்ட மல்லி…” என்றாள் வாசுவிடம்.
“அச்சோ மதினி, அதெல்லாம் இல்ல…” என்று வாசு பதற,
“நான் உனக்கு காலையில இருந்து கால் பண்ணிட்டே இருந்தேன்.நீ எடுக்கவே இல்லையே…” என்று சொல்ல,
“அதுவா, எல்லா பெட்டியையும் பிரிக்கனும்ல. அதான் வேலையா போய்ட்டேன்…”
“சரி இப்போ உன் போன் எங்க?…”
“அய்யயோ வேல பாத்துட்டே போன அந்த பீரோக்குள்ளையே வச்சுட்டேனே? இருங்க எடுத்துட்டு வரேன்…” என்று போனை ஷ்ரவனிடம் குடுத்துவிட்டு அவள் ஓட போக,
“ஹேய் நில்லு. சாப்பிட்டு போ. ஒரு அவசரமும் இல்லை. அப்பறமா எடுத்துக்கலாம்…” என்றவன் அவளின் தட்டை நீட்ட அதை பார்த்தபடி இருந்தாள் அபர்னிதா.
“சொல்லு அபி, என்கிட்டே பேசேன்…” என்றவனின் குரலில் இருந்த பொருளை அபி மட்டுமல்ல சங்கரும் புரிந்துகொண்டானோ என்னவோ அபர்னிதாவை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவன்,
“ஷ்ரவா…” என்றதும் அபர்னிதா தன் கையில் வைத்திருந்த போனை அவனிடத்தில் நீட்டினாள்.
“ரொம்ப சந்தோஷம்டா. ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கீங்க. அதுவும் நீ என் தங்கச்சியை பார்த்துக்கறது ஒரு அண்ணனா எனக்கு ரொம்ப நிறைவா இருக்குது. இது போதும். சரி நீங்க உங்க வேலையை பாருங்க. நாங்க எங்க வேலையை பார்க்கறோம்…” என்றவன் இருவரிடமும் விடைபெற்று அழைப்பை துண்டித்தான்.
பேசி முடித்ததும் எழுந்துகொண்டவன் உறங்க செல்லும் முன் அபர்னிதாவை திரும்பி பார்த்து,
“உன் விளையாட்டை ஷ்ரவன் கல்யாணத்தோட நிருத்திருந்தா நல்லது. என்ன நினைச்சு இதை பண்ணினியோ. பண்ணிட்ட. இப்ப அவங்க நல்லா இருக்காங்க. அதுவரைக்கும் நிம்மதி. இதுக்கு மேல நீ தலையிடாத…” என்று எச்சரிக்கும் குரலில் சொல்ல,
“நான் மல்லி நல்லதுக்கு தான் பேசறேன். அவ தனியா சிரமப்படுவா. அதுவும் இல்லாம ஷ்ரவன் கோவக்காரன். அவளை ஹர்ட் பண்ணிட கூடாதுல. அதான் அவனுக்கு பிடிச்ச மாதிரி உங்க தங்கச்சியை மாத்த ட்ரை பன்றேன்…” என அபர்னிதாவும் சொல்ல,
“உன்னோட முயற்சி போதும்னு சொல்றேன். அவ்வளோ தான். என்னை பேச வைக்காத…” என்று சொல்ல அழுத்தமாய் நின்றவளின் முகமே கேட்கமுடியாது என்பதை போல இருந்தது.
“இதை நீ வார்னிங்காவே எடுத்துக்கோ. எல்லா விஷயத்துலையும் அமைதியா போக மாட்டேன் நான்…” என்று சொல்லிவிட்டு வெறுப்புடன் அங்கிருந்து அகன்றான் சங்கர்.
அபர்னிதாவிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை போல அலட்சியத்துடன் சங்கரின் முதுகை வெறித்தபடி இருந்தவள் மனதில் ஷ்ரவனும் வாசுவும் இணக்கமாய் இருந்தது தான் உலா வந்தது.
“எப்படி?…” என நினைத்து நினைத்து அன்றைய இரவு உறக்கத்தை தொலைத்தாள் அபர்னிதா.