“கார்த்தி… ஏப்ள கார்த்தி…” என அழைத்தவாறே வந்து நின்ற சுந்தரி, “சரசக்கா… கார்த்தி இருக்காளா?” என வினவ, “ஆங்… இருக்கா… இப்பதான் எந்திரிச்சு பாத்ரூம் போயிருக்கா…” என ஒன்றுக்குப் பாதியாக பதிலுரைத்தார் பல்துலக்கிக் கொண்டிருந்த கார்த்திகாவின் அன்னை சரஸ்வதி.
“லீவுன்னதும் லேட்டா எந்திரிச்சியளோ?” எனப் பேசியவாறே முற்றத்தில் அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்த அந்தப் பெண் நம் நாயகி கார்த்திகாவின் பக்கத்து தெருவில் குடியிருக்கும் சுந்தரி.
“என்னத்த லீவு… அதுக்கும் சேர்த்துத்தான் தூளு வாங்கிட்டு வந்துட்டனே!” என்றவாறே முகத்தைக் கழுவிவிட்டு அருகில் அமர்ந்த சரஸ்வதி, “எப்படியாவது ஐநூறு தூளு பாஸ்புக்ல வரவு வச்சிரணும்ன்னு ரொம்ப நாளா ஆச கேட்டுக்க… என் மாமியா சொல்லுவாவ உடம்பை போட்டு கெடுத்துட்டு கிடைக்காத, முடிஞ்சத சுத்துன்னு… இந்த வாரம் பெரியவா வர்றேன்னு சொன்னா… சின்னவளும் வருவான்னு நெனைக்கேன்… நாலு பேரும் ஒண்ணா உக்காந்து பீடி சுத்துனா ஐநூறு தூளு கணக்கு போட்டுரலாம்…” என விளக்கிக் கொண்டிருக்கும் போதே கையில் கடுந்தேநீருடன் வந்துவிட்டாள் கார்த்திகா.
“பாருங்கக்கா சொன்னா கேக்காவளா… ஏற்கனவே இளைப்பு, அடிக்கடி இருமல் வேற… கேக்காம வாங்கிட்டு வந்தாச்சு…” என சலித்துக் கொண்டவாறே தனது தாயிடம் தம்ளரை நீட்டியவள், “நீங்களும் டீ குடிக்கியளாக்கா?” என சுந்தரியைப் பார்த்தாள்.
“இல்லம்மா… நமக்கு கடுங்காப்பிலாம் சரிப்பட்டு வராது… வீட்டுலபோய் ஆர்லிக்ஸ் குடிச்சுக்குறேன்… சட்டை தைச்சுட்டியா? வாங்கிட்டுப் போலாம்ன்னுதான் வந்தேன்…” என அவர் எழுந்துகொள்ள, “இந்தா எடுத்துட்டு வாரேன்க்கா…” என்றவாறே உள்ளே சென்றவள், “பெரிய ஆர்லிக்ஸு… ஏதோ வானத்துல இருந்து பொத்துன்னு விழுந்த மாதிரி பில்டப்பு.. இவிய அப்பா வீட்டுல இருக்கும்போது எப்படியிருந்தாவன்னு எங்களுக்கு தெரியாதாக்கும்… எங்களுக்கும் அப்பா இருந்தா இந்நேரம் எங்களை தங்கத்தட்டுல வச்சு தாங்கியிருப்பாவ…” எனப் புலம்பியவாறே சுந்தரி தைப்பதற்காகக் கொடுத்திருந்த இரவிக்கையை எடுத்து வந்தாள்.
“பின்னாடி கயிறு வச்சியா? கையில நாங்குடுத்த பெல்லு தொங்க விட்டியா?” என வினவியவாறே பரிசோதித்தவர், “எவ்ளோ கார்த்தி?” எனக் கேட்க, “இருநூத்தி அம்பதுக்கா…” என்றாள்.
“ஏ ஆத்தே! இருநூத்தி அம்பதா? லைனிங் கிளாத் எடுத்து குடுத்தேன்லா…” என சுந்தரி வாயில் விரல்வைக்க, “அக்கா… ஆர்டினரி ப்ளவுஸ்க்கே தையக்கூலி நூத்தியிருபது ரூபா வாங்குதாங்க… இதிலே டிஸைன்லாம் வேற வச்சிருக்கேன்…” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
அவர் சென்ற பிற்பாடு தனது தாயை முறைத்தவள், “இதுக்குத்தான் இந்த மாதிரி ஆளுங்கட்ட இருந்து ப்ளவுஸ் வாங்காதீங்கன்னு சொல்லுதேன்…” எனக் கூற, “காப்பி யாரு போட்டா? இனிப்பா இருக்கு…” என்றார் சரஸ்வதி
“பாட்டிதான் போட்டாவ… நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன சொல்லுதிய? உங்க பேச்சுப்பழக்கத்துக்கு சும்மா எல்லாரோட துணியையும் வாங்கிட்டு வந்து தராதிய! எனக்கு யார்கூட செட்டாகுமோ அவியளுக்குதான் தைச்சுக் கொடுப்பேன்… இது என் தொழில்தான், ஆனாலும் கொஞ்சங்கூட நம்மோட உழைப்பையும் போடுற எஃபோர்டையும் மதிக்காத ஆளுங்களுக்குல்லாம் தைச்சு தரமுடியாது… அதுவுமில்லாம அவரவர் தனக்கான எல்லைக்குள்ள நிக்கணும்… சும்மா நம்மை பெருசா காட்டிக்கிறதுக்காக அடுத்தவங்களை மட்டம்தட்டக் கூடாது… இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கோம்ன்னுட்டு எந்த நிலைமையில இருந்து வந்தோம்ன்னு மறந்துரக்கூடாது…” என கறாராகப் பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் கார்த்திகா.
தனது தாயிடம் கண்டிப்புடனும் வந்திருந்தவரிடம் தன்மையுடனும் பேசிவிட்டுச் சென்ற கார்த்திகா, இக்கதையின் நாயகி. மூத்தவளும் ஆசிரியருமான அன்பரசிக்கும் கடைக்குட்டியும் வருங்கால பொறியாளருமான பவித்ராவுக்கும் இடையில் ஜென்மித்தவள்.
முன்பிறந்தவளும் பின்அவதரித்தவளும் கல்வியிலும் வாழ்விலும் வளமாக வலம் வர, இவளோ பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டாள். தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பை வலுக்கட்டாயமாகத் தனது தோளில் ஏற்றுக்கொண்டவள், இதுகாறும் தன்னால் இயன்றமட்டும் பொருளாதார ரீதியாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
“கார்த்தி… படியேன்.. அட்லீஸ்ட் டுடோரியல் காலேஜ்லயாவது சேர்ந்து ப்ளஸ்டூ எழுதேன்… நாங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிருக்கோம், நீ மட்டும் படிக்காம இருந்தா நல்லாவா இருக்கு? எங்களுக்காகத்தான் நீ படிக்காம இருக்கியோன்னு எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு…” என உடன்பிறந்தோர் எவ்வளவு எடுத்துக் கூறியும் படிப்பைத் தொடர மறுத்துவிட்டாள்.
அன்பரசியின் திருமணத்திற்கு வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பானோ அத்தனை பணிகளையும் ஒற்றை ஆளாக செய்தாள் கார்த்திகா. திருமண அழைப்பிதழ் வழங்குவதிலிருந்து விருந்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வது வரை பம்பரமாகச் சுழன்றாள்.
“கார்த்தி! கல்யாணமாவது பண்ணிக்கோயேன்! ஏதாவது ஒருவகையில நீ சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாங்க நிம்மதியா இருப்போம்லா…” என சகோதரிகள் இருவரும் வருந்திக் கேட்டுக்கொள்ள, “கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லவேயில்லையே! பொறுமையா பண்ணுதேன்.. எனக்கு இன்னும் நிறைய கடமை இருக்கு… அன்பரசிக்கு கல்யாணமாயிருச்சு… அவ சம்பளத்தை மாமியார் வீட்டுலதான் குடுக்குறா… அப்படின்னா எனக்கு கல்யாணமாயிட்டா நான் உழைக்கிற பணத்தை அங்கேதான குடுக்க சொல்லுவாவ.. நம்ம அம்மா பீடி சுத்துத வருமானம் பவித்ராவுக்கு ஃபீஸ் கட்டவே சரியாயிருக்கு.. அப்படின்னா வயித்துப்பாட்டுக்கு எங்கே போறது? அவ ஒரு வேலைக்குப் போவட்டும், கல்யாணம் பண்ணிக்குறேன்.. எனக்குன்னு ஒருத்தன் இனியா பொறக்கப் போறான்.. ஏற்கனவே பொறந்திருப்பான் தான… பொறுத்ததே பொறுத்துட்டான், இன்னுமொரு ரெண்டு வருஷம் பொறுக்கட்டும்… நான் கொஞ்ச பணம் சேர்த்து அம்மா பேரிலே டெபாஸிட் பண்ணி வச்சிருதேன்… நாளைக்கு என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது, இவியளை நம்பி கொஞ்ச பணம் இருக்கட்டும்…” என்றுவிட்டாள்.
இவள் இவ்வாறு தீர்க்கமாக தெரிவித்த பின்னரும் கேளாமல் அவ்வவ்போது ஏதாவதொரு மாப்பிள்ளை குறித்த தகவல்களுடன் வருகைதருவாள் அன்பரசி. “தேவையில்லாத வேலை பார்க்காத, சொல்லிட்டேன்…” என அவளை முறைத்து அமைதியாக்கிவிடுவாள் கார்த்திகா.
இப்போதும் உள்ளே சென்றவள், குளிப்பதற்காக துணிகளை எடுத்துக் கொண்டிருக்க, “காப்பி குடிக்கலையா?” என அக்கறையுடன் விசாரித்தார் சரஸ்வதி.
“இல்லம்மா… குளிச்சிட்டு வந்து சாப்பிடுதேன்… பாட்டி உப்புமா கிண்டுதேன்னு சொன்னாவ… நைட்டு வச்ச சாம்பார் இருக்குல்லா…” என தெரிவித்துவிட்டு, குளிக்கச் சென்றாள்.
ஒப்பனைகள் ஏதுமின்றி சாதாரண சுடிதாருடன் சமையலறைக்குள் வந்தவள், “பாட்டி… ஒரு கிண்ணத்தை எடுங்க… கொஞ்சம் சீனி தொட்டு சாப்பிடுதேன்… அந்த டம்ளர்ல காப்பி ஊத்துங்க…” என்றவாறே தரையில் சம்மணமிட்டு அமர்ந்தாள்.
உப்புமாவைப் பிசைந்து உண்டுகொண்டிருந்தவளிடம் வந்த அவளது பாட்டி ராஜம்மாள், “கார்த்தி… ஒரு கரன்ட் அடுப்பு வாங்கட்டுமா? பாத்திர வியாபாரிட்ட எல்லாரும் சீட்டுப்போட்டு வாங்குதாளுவ…” எனத் தொடங்க, அவளோ முறைத்தாள்.
“கேஸ் விலை கூடிருச்சுல்லா… கரன்ட் அடுப்பு இருந்தா வெந்நீ, காப்பில்லாம் அதிலேயே போட்டுருவேன்..” என அவர் அவளை சமாதானம் செய்யும்விதமாகப் பேச, “வேணும்ன்னா வேணும்ன்னு சொல்லுங்க பாட்டி…” என்றவள், “நானே பார்த்து நல்ல அடுப்பா ஆர்டர் போடுதேன், இல்லைன்னா வாங்கிட்டு வாரேன்… தேவையில்லாம இவன்கிட்டே காசைக் கொடுத்து அசலுக்குமேல பணம்.. பொருளும் நல்ல பொருளா இருக்காது…” என தெரிவித்தாள்.
“ம்மா… போயிட்டு வர்றேன்ம்மா…” என தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டவள், அடுத்த தெருவில் அமைந்திருக்கும் ரத்னாவின் இல்லத்தின் முன்சென்று ஒலிப்பானை அழுத்தினாள்.
ரத்னாவிற்கு இவளைவிட பத்து வயது அதிகமென்றாலும் இவளை தோழியாகவே பாவித்தாள். ஜவுளிக்கடை ஒன்றில் ஒன்றாகப் பணிபுரிகையில் தோன்றிய நட்பு, அந்தக் கடையிலிருந்து வெளியேறி புதிதாக தையற்கடை ஒன்றை தொடங்கிய கார்த்திகாவிடம் வேலைக்குச் சேர்ந்து எவ்வித விதர்ப்பமும் பாராமல் பழகுவதில் பரிணமித்து நின்றது.
“நீ போயிட்டு இரு கார்த்தி! இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்துருதேன்…” என உள்ளிருந்து ரத்னா குரல்கொடுக்க, “சரிக்கா…” என்றவள், அந்த தெருமுனையில் திரும்புகையில் தனது பேஷன் ப்ரோ வண்டியில் எதிரில் வந்தான் வினித்.
“எப்படி இருக்கிற கார்த்தி?” என அவன் அன்பொழுக விசாரிக்க, “நேத்து சாயந்தரம்தான பார்த்த? நைட் மெசேஜ் பண்ணுன தான… அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு?” என முறைத்தாள்.
“இல்ல.. சும்மா…” என இழுத்தவன், “நேத்து நைட் உங்க வீட்டுப் பக்கத்துல வந்தேன்… உங்க அம்மா பார்த்துட்டாவன்னு நெனைக்கிறேன்…” எனக் கூறிவிட்டு நிறுத்தினான்.
“எங்கம்மாவுக்கு இன்னும் நம்ம விஷயம் தெரியாதுன்னு நம்பிட்டு இருக்கியோ? ஒரு பொண்ணு சாதாரணமா ஒரு பையனை பார்த்தாலே நம்ம ஊருல கதைகட்டி விட்டுருவாங்க… நீ வேற அங்கே இங்கேன்னு நான் போற இடத்துக்கெல்லாம் வர்ற, யாராவது ஒருத்தி சொல்லாமலா இருப்பா?” என கேலியாக உதடுவளைத்தவள், “சரி.. சொல்லு… என்ன விஷயம்?” என வினவினாள்.
“வந்து…” என அவன் தயங்க, “என்ன விஷயம்ன்னு தெரிஞ்சாலும் ‘என்ன விஷயம்?’ன்னு நான் புதுசா கேக்கறதும் நீ ஏதோ இப்போதான் சொல்லப் போற மாதிரி தயங்குறதும் தினமும் நடக்குற கதைதானே!” என அலுத்துக் கொண்டவள், “சீக்கிரமா சொல்லு… போய் கடையைத் திறக்கணும்.. நேத்து தைச்ச ப்ளவுஸ்க்கு இன்னும் கொக்கி வைக்கலை… காலையிலேயே தர்றேன்னு சொல்லியிருந்தேன்…” என அவசரப்படுத்தினாள்.
“எல்லா அம்மாவும் பையனோட காதலை அவ்ளோ சீக்கிரமா ஏத்துக்கமாட்டாங்க கார்த்தி… எங்கம்மா என் மனசை புரிஞ்சு அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்கதானே?! அவங்க என்ன மத்தவங்களை மாதிரி நூறு பவுன் நகை வேணும், பத்து லட்ச ரூபாய் சுருள் வேணும்ன்னா கேக்குறாங்க… அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது படிச்ச பொண்ணு மருமகளா வரணும்ன்னு ஆசைப்படுறாங்க.. எம்.எஸ்சி., பி.எட் முடிச்சிட்டு ஸ்கூல்ல பிஜி அசிஸ்டண்டா ஒர்க் பண்றவங்களுக்கு இது நியாயமான கோரிக்கைதானே?! நான் பி.எச்டி படிச்சிருக்கிறேன், பத்தாவது படிச்ச உன்னை கட்டிக்க அம்மாவோட பிரஸ்டீஜ் இடம்கொடுக்காதுல்ல…” என அவன் வழக்கமான கோரிக்கையை கெஞ்சுதலாக முன்வைக்க, அவளோ எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தாள்.
“உங்க அம்மாவுக்கு பிரஸ்டீஜ் இஷ்யூன்னா அப்படியே இருந்துக்கோங்க ரெண்டு பேரும்… என்னை உங்களோட ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி இழுக்க நினைக்காதீங்க! நான் நானாத்தான் இருக்க விரும்புறேன், யாருக்காகவும் பொய்வேஷம் போட்டுக்க விருப்பமில்ல..” என்றாள் தீர்க்கமாக.
“நீ இப்போதான் பொய்வேஷம் போட்டுட்டு இருக்கிற கார்த்தி… பத்தாவது வரைக்கும் நல்லா படிச்சிட்டு இருந்தவளுக்கு எப்படி திடீர்ன்னு படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லாம போகும்? பப்ளிக் எக்ஸாம்ல நானூத்து முப்பத்தி நாலு மார்க் வாங்குனல்ல…”
“பரீட்சைக்கு முந்தினவாரம் படிச்சாகூட அவ்ளோ மார்க் வாங்கிடலாம் வினித்…”
“விதண்டாவாதம் பண்ணாதே கார்த்தி! தியாகம் அது இதுன்னு உன்னை நீயே டம்ப் பண்ணிட்டு இருக்கிற… லெவன்த்ல குவார்ட்டர்லி எக்ஸாம் வரைக்கும் ஸ்கூலுக்குப் போனவ உன் அப்பா இறந்த பின்னாடி படிப்புல இன்ட்ரெஸ்ட் வரலைன்னு ஏன் சொல்லணும்? அப்படின்னா உன் அப்பாவோட இடத்தை ரீப்ளேஸ் பண்றதுக்காக பாதியிலேயே டிராப் அவுட் ஆயிட்டன்னுதானே அர்த்தம்?”
“நீயா புதுசுபுதுசா கற்பனை பண்ணாதேப்பா… எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது… எனக்கு படிப்புல ஆர்வமில்ல… அதனால படிப்பை நிறுத்திட்டு, கோயம்புத்தூர் மில்லுக்கு வேலைக்குப் போனேன்.. ஸ்கூல்ல படிக்கும் போது உன் அம்மாவை டிராப் பண்ண வந்த நீ என்னைப் பார்த்து சிரிச்சது, நானும் பதிலுக்கு சிரிச்சது, நமக்குள்ள இனம்புரியாத ஈர்ப்பும் ஈடுபாடும் உருவானதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. அது நடந்து அஞ்சு வருஷத்துக்கு மேலேயே ஆகிப்போச்சுது… இப்போ உன்னோட வாழ்க்கை வேற, என்னோட பாதை வேற… ரெண்டையும் குழப்பிக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்காதே! உங்கம்மாவுக்கு படிச்ச பொண்ணுதான் மருமகளா வரணும்ன்னா அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ! அதிலே எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல… உண்மையை சொல்லப் போனா எனக்கு உன்மேல காதலுமில்ல….” என தீர்க்கமாக உரைத்தவள் வண்டியை உயிர்ப்பித்து தன் வழியில் செல்ல, அவள் சென்ற பாதையை வெறித்தவாறே நின்றிருந்தான் வினித்.