“சிவன்பாண்டியன் மகளிர் தையலகம்” என பெயரிடப்பட்டிருந்த அந்தக் கடையின் ஷட்டரைத் தூக்க முற்படுகையில், “கார்த்தி.. யாராவது பொம்பளைங்க ட்ரெஸ் தைக்கிற கடைக்கு சிவன்பாண்டியன்னு வைப்பாங்களா? பெயரை மாத்தேன்… இன்னும் நிறைய பேர் வருவாங்கள்லா…” என அவ்வவ்போது தனது தோழிகள் குறைபட்டுக் கொள்வது நினைவில் வந்துபோனது கார்த்திகாவிற்கு.
புன்னகையுடனே திறந்தவள், “பெயரைப் பார்த்துத்தான் கடைக்கு வரணும்ன்னு இல்ல… நாம நம்மோட வேலையை சரியா செஞ்சா அதுவே ஒருவகையில் விளம்பரம்தான்… பொம்பளைங்களுக்கு ட்ரெஸ் அமைஞ்சாலும் அவ்ளோ ஈஸியா டெய்லர் அமையாது… ஒருத்தர் நல்ல ப்ளவுஸ் போட்டுருந்தா எங்கே தைச்சீங்கன்னு கேட்டுருவாங்க… அந்த வகையில என் கடை பிரபலமானா போதும்… ஸ்டைலான பெயரை வச்சுத்தான் ஃபேமஸாகணும்ன்னு இல்ல.. ஒவ்வொரு தடவையும் கடையோட சேர்த்து என் அப்பா பெயரை எல்லாரும் உச்சரிக்கும் போது அவிய இன்னும் உயிரோடவே இருக்காவ, எனக்குத் துணையா இருக்காவன்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை… என் உணர்வுகள மதிக்கவங்களுக்கு நல்லதா தைச்சு தர்றது என்னளவில் சந்தோசம்தான்…” என அவர்களுக்கு தக்க பதிலுரைத்தது நினைத்து கர்வம் கொண்டாள்.
அறையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பெருக்குமாறை எடுத்தவள் துணிகளை ஒதுக்கிவிட்டு சுத்தம்செய்தாள். “பிள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு வாரேன்னு சொல்லிட்டு இன்னமும் வாராவ… இவிய வாரதுக்கு முன்னாடி யாராவது துணிகேட்டு வந்துரட்டும், இவியளுக்கு இருக்கு…” என ரத்னாவை மனதிற்குள் வசைபாடியவாறே சுத்தம் செய்து முடித்தவள், குப்பையை குப்பைத்தொட்டியில் சேகரித்தாள்.
“ஒரு டஸ்ட்பேன் வாங்கணும், வாரியலும் தேஞ்சிட்டு…” என முணுமுணுத்தவாறே கைகளை சுத்தம் செய்துவிட்டு வந்தவள், அங்கே மாட்டப்பட்டிருந்த தனது தந்தையின் புகைப்படத்தை தனது துப்பட்டாவினால் துடைத்தாள். அவரது புகைப்படத்திற்கு முன்னால் விளக்கேற்றி, கைகளைக் கூப்பியவள் கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.
“அப்பா… எப்பவும் என்கூடவே இருங்கப்பா… நான் செய்யுற ஒவ்வொரு காரியத்திலயும் நீங்கதான் எனக்கு துணையா இருக்கணும்… என்னோட கடமைய சரியா செய்யணும்… தாரேன்னு சொல்லியிருந்த துணியெல்லாம் இன்னைக்கு சரியா குடுத்துரணும்.. சாயந்தரம் வீட்டுக்குப் போவும்போது நம்ம வீட்டுச் செலவுக்கு தேவையான பணத்தை நான் சம்பாதிச்சிருக்கணும்… எனக்கு கஷ்டமே வரக்கூடாதுன்னு கேக்கலைப்பா.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்கிக்கிட்டு, எதிர்த்து போராடுத பக்குவம் எனக்கு வரணும்…”
தனது வேண்டுகோளை சமர்ப்பித்துவிட்டு முந்தைய நாள் தைத்துவிட்டு தையல் இயந்திரத்தின் மேற்புறத்தில் வைத்துவிட்டுச் சென்றிருந்த இரவிக்கையை எடுத்தாள். “அடுத்த நேரம்லாம் இந்த மாதிரி வேலையை மிச்சம்வச்சிட்டு போவக்கூடாது… எப்போடா கடையை திறப்போம், முடிப்போம்ன்னு இருந்துது…” என்றவாறே கொக்கிகளைப் அதினதின் இடத்தில் பொருத்தலானாள்.
வெகுதூரம் நடந்தே பயணித்த சோர்வுடன் உள்ளே நுழைவதைப் போல பாவனை செய்த ரத்னாவை முறைத்தவள், ஏதும் பேசாமல் தனது பணியைத் தொடர, “சரி… முறைக்காதே! இவியதான் வண்டியில கொண்டாந்து விட்டாவ… நேராயிட்டு… என்ன செய்ய? ராத்திரி தூக்கமே வரல… மிஷின்ல உக்கார்ந்தே தைக்கிறது முதுகுவலி பின்னியெடுக்கு…” என்றவாறே தனக்கான இயந்திரத்தில் வந்தமர்ந்தாள் ரத்னா.
“வேணும்ன்னா உங்களுக்கு நடந்துட்டே தைக்கிற மாதிரி மிஷின் செய்ய சொல்லுவோமா?” என கார்த்திகா சற்றே நக்கலாக வினவ, “ச்சே ச்சே.. நான் அவ்ளோலாம் பேராசைப்பட மாட்டேன்… படுத்துட்டே தைக்கிற மாதிரி செய்ய சொல்லிரு..” என சிரித்தவாறே கன்னத்தில் இடித்தாள் அவள்.
“ப்ச்… ஒருதடவகூட உங்கமேல சீரியஸா கோவப்பட விடமாட்டிக்கியக்கா…” என போலியாக முறைத்தவள், “சரி.. நைட்டு ஒரு பச்சைக்கலர் ப்ளவுஸ் அளந்து வெட்டிவச்சேன்லா.. அதை தையுங்க… மத்தியானம் வாங்க வாரேன்னு மல்லிகாக்கா ஃபோன் பண்ணுனாவ…” என்றவள் காரியத்தில் கண்ணாக இருக்க, இயந்திரத்தை இயக்கத் தொடங்கினாள் ரத்னா.
“நைட்டு ஏன் லேட்டா தூங்குனேன்னு கேளேன்…” என அவள் ஆர்வமாக கார்த்திகாவைப் பார்க்க, “அதான் முதுகுவலின்னு சொன்னியளே…” என்றாள் இவள்.
“அது சும்மா உன்னை நார்மலாக்குததுக்கு சொன்னேன்.. நைட்டு கதை படிச்சேன்… இப்போதான் முடிஞ்சது, லிங்கை தூக்கிருவேன்னு போஸ்ட் போட்டுருந்தாவ… இப்போ படிக்கலைன்னா துட்டுகட்டித்தான் படிக்கணுமாம்… அதுக்கெல்லாம் நம்மால முடியாதுன்னு ஒரே ஃப்ளோல உக்கார்ந்து படிச்சு முடிச்சிட்டேன்…” என இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமையடித்துக் கொண்டாள் ரத்னா.
நிமிர்ந்து அவளை முறைத்த கார்த்திகா, “மத்தியானம் சாப்பிட்டுட்டு உக்கார்ந்திருக்கும் போது அதை பேசுவோம், இப்போ வேலையைப் பாருங்க… பேச்சுப் பழக்கத்துல தையல் பிறழ்ந்துற போவுது… பிறகு நம்மமேல இருக்க நம்பிக்கை போயிரும்… கார்த்திகா கடையில குடுத்தா நல்லா தைச்சு தருவான்னு பக்கத்து ஊருல இருந்துலாம் கொண்டாந்து தாராவ…” என கறாராகத் தெரிவிக்க, தனது பணியைத் தொடர்ந்தாள் ரத்னா.
ரத்னா நொடிவிடாது பேசிக்கொண்டிருக்கும் ரகம்; அவளுக்கு எப்போதும் ஏதாவதொன்றைக் குறித்து வளவளத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அவளால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலாது.
“ரத்னாக்கா… ரிலேஷன்ஷிப்லாம் ரொம்ப சென்சிட்டிவான விஷயம்க்கா… பேசலைன்னா பிரிவால வாடுறது, சோககீதம் பாடிட்டு வெயிட் பண்ணுதது எல்லாம் சினிமாத்தனம்… நெஜத்துல எப்படி தெரியுமா? முதல்ல கொஞ்சநாள் ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்.. அப்புறமா நமக்குன்னு இருக்கிற ஆயிரம் வேலைகளை செய்ய ஆரம்பிச்சு இந்த பிரச்சனை மறந்தே போயிருக்கும்.. நம்மோட போக்குல போக ஆரம்பிச்சிருவோம்… பிரச்சனை மறைஞ்சு போய், நேசம் நீர்த்துப்போன பின்னாடி என்ன பண்ணினாலும் வேஸ்ட்தான்…. அதுக்குத்தான் புருஷன் பொண்டாட்டி பிரச்சனையை அப்பப்போவே பேசி தீர்த்துரணும்ன்னு சொல்லுதாவ.. ஒருத்தர் இல்லாம வாழறதுக்கு இன்னொருத்தர் பழகிட்டாங்கன்னா அந்த ஈர்ப்பு மறைஞ்சு சலிப்பு வந்துரும்…”
“நீ சொல்லுதது புரியுது கார்த்தி! ஆனா இங்கே பிரச்சனைன்னு எதுவுமில்லையே! நீங்க என்ன சண்டை போட்டா பிரிஞ்சீங்க! அப்படின்னாலும் நீ வேணாம்ன்னு சொன்ன இத்தனை வருஷத்தில உன்னைத்தானே நினைச்சு சுத்திட்டு வாரான்… இப்போ இருக்க பயலுவலாம் என்னன்னவோ பண்ணுதானுவ… இவன் ராமன் மாதிரி உன்னைமட்டுமே நினைச்சு சுத்திட்டு இருக்கான்…”
“நான் அவனை அப்படி இருக்க சொல்லவேயில்லைக்கா… அவன் அப்படியிருந்தா நானும் அப்படியிருக்கணும்ன்னு அவசியமா என்ன?”
“சரி… பழசை விட்டுரு… அவனை கல்யாணமாவது பண்ணிக்கிட்டு புதுசா எல்லாத்தையும் தொடங்கலாம்லா…”
“அவன் உன் நல்லதுக்குத்தான சொல்லுதான்… டிகிரி முடிச்சா ஏதோவொரு வேலைக்குப் போய் சொந்தக்காலுல நிக்கலாம்லா..”
“இப்பவே நான் அப்படித்தானக்கா இருக்கேன்… நீங்க என்ன புதுசா சொல்லிட்டு இருக்கிய? கண்டிப்பா படிப்பு முக்கியம், எல்லாரும் படிக்கணும்… ஆனா எனக்கு படிக்க ஆர்வமில்ல… அதுவுமில்லாம அவனுக்கு ஏத்த மாதிரி என்னை வடிவமைக்க நினைக்கிறது எனக்குப் பிடிக்கல… எனக்குத் தேவைன்னா நான் படிச்சுக்குவேன்.. அதை அவன் நிர்பந்திக்கக் கூடாது…”
“ஆர்வமில்லைன்னு பொய் சொல்லுத கார்த்தி… காலாண்டு வரைக்கும் நல்லாத்தான படிச்சிட்டு இருந்த… ஒருவேளை உன் அக்கா, தங்கச்சிய நல்லா பாத்துக்குவேன்னு உங்கப்பாவுக்கு சத்தியம் பண்ணிக் குடுத்துருக்கியோ?”
“சீரியல் பார்த்துட்டு பேசாதிய! காலாண்டு வரை நல்லாத்தான் படிச்சிட்டு இருந்தேன்… அப்பா இறந்தப்போ நிறைய லீவ் போட்டேன்லா.. தினமும் ஆசையா ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்ட அப்பா இல்லைங்கறதை ஏத்துக்க முடியாம சங்கடத்தோடதான் திரும்ப போனேன்… பார்த்தா அங்கே அவ்ளோ இருக்குது… அன்னைக்கு வேலையை அன்னைக்கே செஞ்சிரணும்ன்னு நெனைப்பேன் நான்.. ஒரு கர்ச்சீஃப் துவைக்காம இருந்தாக்கூட காலையில சீக்கிரமா எந்திரிச்சு துவைச்சாத்தான் தூக்கமே வரும்… மொத்தமா ஒரு மாச பாடத்தை தூக்கிவச்சா எப்படியிருக்கும்? இதில வேற காலாண்டு முடிஞ்ச உடனே இரண்டாம் இடைத்தேர்வு வந்துரும்… என்னால பேலன்ஸ் பண்ண முடியல… நின்னுட்டேன்.. அடுத்த வருஷம் படிக்கலாம்ன்னா ஒரு வருஷத்தோட பாடத்தை திரும்ப முதல்ல இருந்து படிக்கணும்… அப்படியே ரொம்ப யோசிச்சு படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போயிட்டேன்… வேலைக்குப் போய் சம்பாதிச்சு சுகம் கண்டவளுக்கு திரும்ப படிக்கத் தோணுமா? ம்ஹூம்… அப்படியே விட்டாச்சு… டுடோரியல்லாம் நான் யோசிக்காம இருந்திருப்பேன்னு நெனைக்கியளா? வேலைக்குப் பழக்கப்பட்ட மூளைக்குள்ள படிப்பு நுழைய மாட்டிக்குது… வராத ஒண்ணை வாவான்னு சொல்லுததுக்கு வாரதை பிடிச்சுக்குவோம்ன்னு இருந்துட்டேன்…”
தீர்க்கமாகப் பேசிவிட்டு பெருமூச்சுவிட்டவள், ரத்னாவைப் பார்க்க அவளோ அமைதியாக இருந்தாள்.
சில நிமிட அமைதிக்குப் பின்னர், “அப்போ அவனை நீ வெறுத்துட்ட! அதனால மறந்துட்ட! இல்லையா?” என ஆர்ப்பாட்டமின்றி ரத்னா வினவ, “மறந்துட்டேன்னு பட்டவர்த்தனமா சொல்லிர முடியாது… நினைக்காம இருக்கேன்னு வேணும்ன்னா சொல்லலாம்…” என்றாள் கார்த்திகா தணிந்த குரலில்.
“இதுக்குமேல எதுவும் கேக்கமாட்டேன் கார்த்தி! சாரி..” என்றவள் தனது காரியத்தில் இறங்க, தானாகவே தொடர்ந்தாள் கார்த்திகா.
“உண்மையா வினித் ரொம்ப நல்லவன்க்கா… எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது… நீங்க சொன்ன மாதிரி இத்தனை வருஷமாகியும் என்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்கிற ஸ்ரீராமன்தான்.. ஆனா எனக்கேத்தவனா அப்படிங்கறதுதான் சந்தேகமே! அவதார புருஷனெல்லாம் வேணாம்க்கா… சராசரியானவன் போதும்… நான் நானா இருக்கதுக்கு அனுமதிச்சா போதும்… எனக்காக அது செய்யணும், இது செய்யணும்ன்னுலாம் சொல்லல… அவன் எப்படியிருக்கானோ அப்படியே நான் ஏத்துப்பேன், நான் எப்படியிருக்கேனோ அப்படியே அவன் ஏத்துக்கணும்.. அவங்க வாழ்க்கையில நாம இருக்கணும்ங்கறதுக்காக மாற நினைச்சா நம்மோட சுயத்தை இழந்துருவோம்ன்னு தோணுது…”
இவள் இவ்வாறு தெரிவிக்க, “நீ சொல்லுததும் சரிதான் கார்த்தி! ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்காம நாமளாவே இருக்கணும்ன்னு நினைச்சா நாம மட்டும்தான் இருப்போம், நம்மைச் சுத்தி யாரும் இருக்க மாட்டாங்க.. உறவுகளை தக்கவச்சிக்கணும்ன்னா கொஞ்சம் சகிப்புத்தன்மை வேணும்..” என்றாள் ரத்னா.
“சகிச்சுக்கிறதுக்கும் மாறுன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுக்கா…” என கார்த்திகா உரைக்க, “இப்போ நான் ஒண்ணு கேக்கறேன்… உனக்கு வரப்போறவன் எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவியா? எப்படியிருந்தாலும்…” என அழுத்தினாள் அவள்.
“ஹான்… எப்படியிருந்தாலும்…”
“எப்படியிருந்தாலும்??”
“ஆமாக்கா… எப்படியிருந்தாலும் ஏத்துக்குவேன்… உண்மையான அன்பும் எனக்கான ஸ்பேஸும் தரணும்…”
“அவன் ஒரு குற்றவாளியா இருந்தாக்கூடவா?”
இதைக்கேட்டு சிரித்துவிட்டாள் கார்த்திகா. “க்கா… ஒருத்தன் அப்படி இப்படின்னு உலகம் சொல்லும், ஆனா நம்மகிட்டே எப்படி நடந்துக்குறானோ அதைவச்சு அவனை தீர்மானிச்சு அதுக்கு ஏத்தமாதிரி அவனை நடத்தணும்… அடுத்தவங்க சொல்லுததைவச்சு நாமளே அவங்களை எடைபோடக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லுவாவ.. அதனால நீங்க சொல்லுத மாதிரி அவன் கொலைகாரனாவே இருந்தாலும் என்னோட விஷயத்திலே அவன் சரியா இருந்தா நான் அவனை ஏத்துக்குவேன்…” என இவள் மிகத் தெளிவாகப் பேச, அங்கே ரஞ்சனுக்குப் புரையேறியது.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சககைதிகளுடன் அமர்ந்து காலை உணவருந்திக் கொண்டிருந்தவனுக்குப் புரையேற, “தண்ணீயைக் குடிடே!” என எடுத்துக் கொடுத்தான் அஜித்.