“என்னடே இப்படி நெகட்டிவா பேசுத? அதெல்லாம் இருப்பாவடே…” என ரஞ்சனது தோளில் கைவைத்த அஜித், “பார்க்க வரலைங்கறதுக்காக நாமளே ஏதாவது ஒண்ணை யோசிக்கக் கூடாது…” எனத் தேற்ற முற்பட்டான்.
ரஞ்சனின் இதழ்கள் கேலியாக வளைவதைக் கண்ணுற்ற அஜித் தொடர்ந்தான். “நம்ம ஊரு பொம்பளைங்க இப்பவரைக்கும் எல்லாத்துக்கும் ஆம்பளைங்ககிட்டே பெர்மிஷன் கேட்டுட்டுதான் இருக்காங்க.. இதுக்கு உன் அம்மாவும் என் அம்மாவும் விதிவிலக்கா என்ன? உங்கப்பாவுக்கு பயந்துக்கிட்டுதான் உன் அம்மா வராம இருக்காவளே தவிர எப்பவும் உன்னை நெனச்சிட்டுதான் இருப்பாவ…” என அவன் முடிப்பதற்குள், “அதுக்காக ஆறு வருஷமாவா பயந்துக்கிட்டு இருக்கணும்? உங்கம்மாவும் எங்கம்மாவும் பயந்துட்டு இருக்காவன்னு சொல்லுதியே! உங்கம்மா உன்னை வந்து பாக்கவே இல்லையோ? உங்கப்பாவுக்குத் தெரியாம வந்தாவதான?” என கிடுக்கிப்பிடி போட்டான் ரஞ்சன்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைடே… எல்லாத்தையும் ஒரே ஸ்கேல்ல அளக்கக்கூடாது…” என அஜித் அதையும் பொதுமைப்படுத்த, “இப்போ என்ன? நான் எங்கம்மாமேல வருத்தப்படக்கூடாது… அப்படித்தான… சரி.. எதுவும் சொல்லலை…” என முடித்துவிட்டான் அவன்.
“நன்னடத்தை அடிப்படையில உன்னையும் என்னையும் சீக்கிரமாவே ரிலீஸ் பண்ண வாய்ப்பிருக்கிறதா புதுசா வந்திருக்க ஜெயிலர் சொன்னாரு…” என அஜித் உற்சாகத்துடன் பேச, “ஆனா எனக்கு வெளியே போகணும்ன்னு ஆசையில்ல…” என்றான் ரஞ்சன் வெறுமையான குரலில்.
“ஏன்டா? இன்னமும் தாழ்வு மனப்பான்மையோடத்தான் இருக்கியா?”
“ப்ச்… இல்லடா.. வெளியே போய் என்ன செய்வேன்? எனக்குன்னு யார் இருக்காங்க? யாரோட இருப்பேன்? எல்லாரையும் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்னு நிறைய கேள்வி வரிசைகட்டி நிக்கிதுடா…”
“டேய்… இந்த உலகம் ரொம்ப பெருசுடா… உன் அம்மா, அப்பா, குடும்பம், ஊரு இவங்களுக்குத்தான்டா நீ குற்றவாளி… எல்லாத்தையும் அழிக்கதுக்கும் புதுசா மாத்தியமைக்கதுக்கும் இந்த ஆறுவருஷ வனவாசம் போதும்டா… புதுசா ஒரு இடத்துக்குப் போ, புது மனுஷங்களைப் பாரு, எல்லாத்தையும் புதுசா தொடங்கு… கரஸ்ல பீஜி வரைக்கும் படிச்சிருக்கதான… கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும்.. வேணும்ன்னா நம்ம ஜெயிலர் யாருக்காவது தெரிஞ்சவங்ககிட்டே உண்மையை எல்லாத்தையும் சொல்லி, புதுசா ஒரு வேலையைத் தேடிக்குவோம்… போக வேண்டிய தூரம் நிறைய இருக்குடா…” என்ற அஜித்தின் கூற்றிற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்தான் ரஞ்சன்.
“புதுசா ஒரு வேலை, புது வாழ்க்கைன்னு போறப்போ புது காதலி கிடைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல…” என அஜித் கற்பனை எல்லையை விஸ்தரிக்க, “தம்பி… கொஞ்சம் கம்மியா இமாஜின் பண்ணுப்பா… றெக்கை அறுந்து அதலபாதாளத்துக்குப் போய்டப் போற.. தெரிஞ்சவங்க சிபாரிசுல வேலை கிடைக்கதே பெரிய விஷயம்… இதிலே லவ்வர் ஒண்ணுதான் கொறச்சல்…” என அலுத்துக்கொண்டான்.
“நீ சொல்லுத மாதிரி புது வாழ்க்கையில காதல் கிடைச்சாலும் அவங்ககிட்டே எல்லா உண்மையையும் சொல்லிரணும்.. அதுக்கு அப்புறமும் அவங்க நம்மை விரும்புனாங்கன்னா தைரியமா அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகலாம்…” என ரஞ்சன் பேச, “உண்மையை சொல்றதெல்லாம் சரியா வரும்ன்னு எனக்குத் தோணல…” என தடைபோட்டான் அஜித்.
“முதல்ல ரிலீஸ் ஆவோம்.. அதுக்கு அப்புறம் மத்ததை யோசிப்போம்… வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பொறக்கப் போற பிள்ளைக்குப் பெயர் வச்சாச்சு…” எனக் கேலியாக அவனது முதுகில் தட்டினான் ரஞ்சன்.
“ராத்திரி தூங்காம கதை படிச்சேன்னு சொன்னியளே! அண்ணன் எதுவும் சொல்லலியா?” என பழங்கஞ்சியில் துவையலைக் கரைத்துக் கொண்டிருந்த ரத்னாவிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள் கார்த்திகா.
“எபிசோட் எபிசோடா போடும் போது பாதியை படிச்சிட்டு அடுத்த எபிசோட்ல என்னவாகும்ன்னு இவர்கிட்டே கேள்வியா கேட்டு கொன்னுருவேன்… அதுக்குத்தான் முழுக்கதையா படி ஆத்தா, உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்னு சலுகை தந்திருக்கார்…” என பெருமையடித்துக்கொண்ட ரத்னா, “நீ வேணும்ன்னா வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு வா… லேட்டாச்சுன்னா உங்க பாட்டி பாத்திரத்துல சோத்தை வச்சிக்கிட்டு லொக்கு லொக்குன்னு ஓடியாருவாவ…” என்றாள் அக்கறையுடன்.
“வேலை பார்த்தே பழகினவியளுக்கு ஒரு இடத்தில இருக்க முடியல.. சொன்னாலும் கேக்க மாட்டைக்காவ…” என்றவாறே எழுந்துகொண்ட கார்த்திகா, “உங்களுக்கு சூடா சாம்பார் எடுத்துட்டு வரவா? பழைய சோத்துக்கு தொட்டுக்க நல்லாயிருக்கும்…” என விசாரிக்க, “நான் என்னவோ குழம்பு வைக்காம பழைய சோறு கொண்டாந்த மாதிரி பேசிட்டு இருக்க? ரெண்டு நாளா சரியான நீர்க்கடுப்பு.. ராத்திரி எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, உப்பு போட்டு குடிச்சிட்டுப் படுத்தேன்.. ஒரு வாரத்துக்குப் பழைய சோத்துக்கு நீத்தண்ணிவச்சு குடிச்சா உடம்புக்கு குளிர்ச்சியா இருக்கும்ன்னு ராத்திரியே ரெண்டு கைப்பிடி அரிசி சேர்த்துப் போட்டேன்.. காலையில எந்திரிச்சு பார்த்தா என் மாமியார் அதை சாப்பிட்டுட்டு ஜம்முன்னு சுத்திட்டுருக்கு… பெறவு என்னத்த செய்ய? காலையில பொங்குன சோத்துல தண்ணீ ஊத்தி எடுத்துட்டு வந்தேன்…” என மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்தாள் ரத்னா.
“ஒரு கேள்விக்கு எவ்ளோ பெரிய பதிலு? எப்படின்னாலும் பேச்சுக்கு முடிவுரை எழுதும்போது மாமியாருக்கு ஒரு கொட்டு வச்சிரணும்…” என நமட்டுச்சிரிப்புடன் அவளைப் பார்த்த கார்த்திகா, “சரி.. சாப்பிட்டு முடிச்சிட்டு தூக்கம்வர்ற நேரத்துல ஆவாத துணியை சேர்த்துப் போட்டு ரெண்டு டஸ்டர் தைச்சு வையுங்கக்கா… எங்க பக்கத்து வீட்டுப்பையனோட டீச்சர் யாராவது டஸ்டர் தைச்சு கொண்டு வாங்கன்னு சொன்னாவளாம்… இவன் எங்க கார்த்தியக்காகிட்டே தைச்சு வாங்கிட்டு வாரேன்னு சொல்லிருக்கான்…” என்றவாறே காலில் செருப்பை மாட்டிக்கொண்டாள்.
“அவன்பாட்டுக்குப் போடுதான்… உனக்கென்ன? எவ்ளோ சோலி கெடக்கு… அதைப் பாரு… போன வருசம் ஆயிரம் ரூவாய்க்கு புக்கு வாங்கிட்டு வந்த… அதையே படிக்கக் காணோம்…” என சரஸ்வதி முறைக்க, “அதெல்லாம் படிப்பேன்ம்மா… நேரமில்ல…” என இழுத்தாள் கார்த்திகா.
“அதை முதல்ல படிச்சு முடி.. பெறவு வாங்கலாம்…” என அவர் முட்டுக்கட்டைப் போட, “நான் அடுத்த வாரம் கண்டிப்பா போவேன், சொல்லிட்டேன்… இங்கேயே நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சு கிடந்துட்டு, மெஷின்லேயே தைச்சிட்டு இருக்கதுக்கு எனக்கு அது ஒரு மாறுதலா இருக்கும்..” என உறுதியாகத் தெரிவித்துவிட்டு எழுந்து கொண்டாள் அவள்.
“நான் சொல்லுததை என்னைக்குத்தான் கேட்டிருக்க? எல்லாம் உன் இஷ்டம்தான்.. உன் அப்பன் கேட்டிருந்தாத்தான நீ கேட்ப?” எனத் தொடங்கிய சரஸ்வதி, கார்த்திகாவின் முறைப்பில் அமைதியாகிவிட்டார்.
“அப்பாவை அவன், இவன்னு சொல்லாதியன்னு நெறைய தடவை சொல்லிட்டேன்…” என பற்களை நறநறக்க, “பொல்லாத அப்பன்…” என தனக்குள் முணுமுணுத்தவர், “உங்கப்பனை ஒண்ணும் சொல்லல தாயீ… நீ கடைக்குப் போ!” என்றவாறே பாத்திரங்களை எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டார்.
“ச்சே…” என எரிச்சலுடன் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற கார்த்திகா, கடையின் நாற்காலியில் தொம்மென அமர, “என்ன கார்த்தி! உங்கம்மைகிட்டே சண்டை போட்டுட்டு வந்தியோ?” எனக் கேட்டாள் ரத்னா.
“தினமும் நடக்கதுதானக்கா… எங்கப்பாவை எதாவது சொல்லலைன்னா அவியளுக்கு தூக்கம் வராது..” என சலித்துக் கொண்டவள், “நான் டஸ்டர் தைக்கிறேன்… நீங்க வனஜாக்கா மக கொடுத்த சுடிதாரை தையுங்க… இவிய பண்ணுன டென்ஷனுக்கு கொஞ்ச நேரம் ரிலாக்ஸா உக்கார்ந்தாத்தான் வேற வேலையைப் பார்க்க முடியும்…” என சாய்ந்தமர்ந்தாள்.
“நான் வேணும்ன்னா நீ உடனே ரிலாக்சாகுற மாதிரி நேத்து வாசிச்ச கதை சொல்லவா?” என ரத்னா தொடங்க, “தலைப்பு சொல்லுங்க.. நானே வாசிக்கேன்.. எனக்கு என்னவோ நாமளே வாசிச்சு அனுபவிக்க சந்தோசம் கதை கேக்கதுல கிடைக்கமாட்டைக்கு…” என்றாள் கார்த்திகா.
“லிங்கை தூக்கிட்டாவப்ள…” என்ற ரத்னாவை முறைத்தவள், “கிண்டில்ல போடுவாவள்லா அப்போ படிக்கேன்… நீங்க தலைப்பும் ரைட்டர் பெயரும் சொல்லுங்க..” என்றாள் கறாராக.
“நான் காதலிக்கும் போதிமரமே! – ரைட்டர் முத்தமிழ்…” என அவள் தெரிவிக்க, “முத்தமிழா? சரி.. சரி…” என கேட்டுக்கொண்டாள் கார்த்திகா.
மறுவாரத்தில் சரஸ்வதி சம்மதிக்கவில்லையாயினும் தனது விருப்பத்தின்பேரில் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டாள் அவள்.
இல்லத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி குறிப்பிட்ட திடலை அடைவது அவளுக்குப் பெரிதாக அயர்ச்சியைத் தோற்றுவிக்கவில்லை. அடுக்கிவைக்கப்பட்ட அத்தனை புத்தகங்களுக்கு மத்தியில் ஒருவித சவுகரியத்தை உணர்வாள் அவள்.
பெரிதாக பிடிப்பின்றி பணத்தையும் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அவளது சோலைவனம் புத்தகங்கள் மட்டுமே. புத்தகத்தை பிரித்து முகர்வதிலிருந்து புத்தகத்தின் மாந்தர்களை நிகழ்காலமாக நுகர்வதுவரை அவளது பிடித்தம் நீளும். சமயங்களில் புத்தகங்களில் வரையறுக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் சஞ்சரிப்பதாகக்கூட கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்; ‘ஜிஷ்ணு, விஷ்வா, அரவிந்த்’ என புனைவு கதாபாத்திரங்களின் பெயர்களை தூக்கத்தில் உச்சரித்து, சரஸ்வதியிடம் வசவுமொழிகளைப் பரிசாகப் பெற்றதெல்லாம் வேறு கதை!
இப்போதும் வெகுஉற்சாகமாக பையை மாட்டிக்கொண்டு அளவான ஒப்பனையுடன் குறிப்பிட்ட திடலை அடைந்து, (புத்தகக்)கூட்டத்திற்குள் தொலையலானாள். ஒவ்வொரு அங்காடியாகக் கடந்தவள் குறிப்பிட்ட பெயரைக் கண்டதும் ஒருகணம் கண்ணிமைக்காமல் நின்று ரசித்துப் பார்த்தாள். தண்புன்னகையுடன் உள்ளே சென்றவள், அந்த எழுத்தாளரின் புத்தகங்களை கைகளில் ஏந்திப் பார்த்தாள்.
“பிழைதாண்டி உனை நேசிக்கவா?” என தலைப்பிடப்பட்ட புத்தகத்தை வெகுநேரமாக கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த விற்பனைப் பிரதிநிதி, “மேம்.. இந்த ஆத்தரோட புக்ஸ் நல்லா இருக்கும்.. ரெண்டு வருஷமா இவங்களோட புக்ஸ் நாங்கதான் பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கிறோம்… வாசிச்சு பாருங்க… மத்த புக்ஸ் டைட்டில்..” என புன்முறுவலுடன் பேச, அவரை நிமிர்ந்து பார்த்தவள் மெலிதாக இதழ்வளைத்தாள்.
“முத்தமிழ்” என குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஆசிரியரின் பெயரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவள், “இவங்களோட கதைகள் தொடர்ந்து வாசிச்சிட்டுதான் இருக்கிறேன்.. எல்லா புத்தகமும் என்கிட்டே இருக்குது…” என சற்றே கர்வத்துடன் உரைத்தாள்.
புதிய வெளியீடான அந்தப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தவள், அங்கேயே சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கிவிட்டாள். விற்பனைப் பிரதிநிதியின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தவள், “மேம்… இந்த புக் வேணும்…” என தெரிவிக்க, அதைக் கையில் பெற்று விலையைப் பார்த்துவிட்டு, “250 ரூபாய் மேம்… பத்து பெர்சன்ட் டிஸ்கவுன்ட்… 225 ரூபாய் கொடுங்க…” என்றார்.
“இதோ…” என தனது பையைத் துழாவுகையில் வீட்டிலிருந்து புறப்படும் வேளையில் தனது தாய் அர்ச்சித்த வார்த்தைகள் நினைவுக்கு வந்துபோனது.
“கிளம்பியாச்சா? புக்ஃபேர்ன்னு பேப்பர்ல வந்த விளம்பரத்தை உத்துஉத்து பார்த்துட்டு இருக்கும்போதே நெனச்சேன்… எவ்ளோ துணி தைக்க வேண்டியதிருக்குது… அவளுகள்லாம் நாளைக்கு காலையிலேயே வந்து கேப்பாளுவ… சாயந்தரம் குத்துவிளக்கு பூஜைக்கு கட்டிக்கிட்டு போவணும்ன்னு… ஒழுங்கா உக்காந்து தைக்கிறதை விட்டுட்டு என்ன வேலை பண்ணிட்டு இருக்க? போறதெல்லாம் சரிதான்… புக்கு வாங்குதேன்னு கொண்டுபோற துட்டெல்லாம் செலவு பண்ணிட்டு வந்துநின்னா நடக்கதே வேற, சொல்லிட்டேன்…”
பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் புறப்பட்டு வந்திருந்தவளது செவிக்குள் இந்த வார்த்தைகள் ரீங்காரமிட, உலுக்கிக்கொண்டு மீண்டவள், “புதுசா பப்ளிஷான ரெண்டு புக்கும் வேணும்க்கா…” என அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தாள்.
“ஆன்… ரத்னாக்கா… முத்தமிழோட புது புக்ஸ் வாங்கிட்டேன்… நீங்களும் கேட்டியள்லா… அதான் ரெண்டையும் வாங்கிட்டேன்… ரெண்டு பக்கம் வாசிச்சேன், நல்லாருக்கு…” என இவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, எதிர்முனையில் இவளது அன்னை சரஸ்வதியின் குரல் கேட்டது.
“அதான கேட்டேன்… பஸ்சார்ஜ் தவிர வேற எதுவும் செலவழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டு ரெண்டு புக்கு வாங்கியிருக்கியோ? வீட்டுக்கு வா, உனக்கு இருக்கு… ஒழுங்கு மரியாதையா ரெண்டு புக்கையும் குடுத்துட்டு துட்டை வாங்கிட்டு வா…” என அவர் கறாராகப் பேச, “சரிம்மா…” என அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
“ரத்னாக்கா… உன்னை யாரு எங்கம்மா இருக்கும்போது ஸ்பீக்கர்ல போட சொன்னது…” என மனதிற்குள் திட்டியவள், “இப்போ இந்த புக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனா அம்மா கொலையே பண்ணிடுவாவ… ஒளிச்சு வைக்கலாம்ன்னாலும் சிபிசிஐடி லெவலுக்கு கேள்வி வரும்.. திருப்பிக் கொண்டுபோய் கொடுக்கவும் முடியாது…” என்னும் யோசனையுடன் புத்தகக் கண்காட்சி வாசலுக்கு வர, “சிறைக்கைதிகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கலாம்…” என்னும் பெயர்தாங்கிய பெட்டி இருந்தது.
இதைக் கண்டவளுக்குள் சலனம் தோன்ற, “இதுவும் ஒருவகையில் நல்ல காரியம்தான்…” என்னும் எண்ணம் உந்தித் தள்ளியது. தாமதமின்றி அந்த பெட்டியில் தான் வாங்கிய இரண்டு புத்தகங்களையும் வைத்துவிட்டு தனது வழியில் நடந்தாள் கார்த்திகா.