சூரியதேவனின் குளிர்தாரகை
ஹீரோ : சூர்யதேவ் சக்கரவர்த்தி
ஹீரோயின் : தேஜஸ்வினி
குளிர் 1
காலை முதல் மாலை வரை வெண்திரைகளுக்கிடையே அரசன் போல் உலா வந்த வெய்யோன்.. தன் பணியை முடித்து ஓய்வெடுக்க சென்றுக்கொண்டிருந்தான்.. அவன் மறைந்த சிலநொடிகளிலே செவ்வானம் யாவும் கலைந்து.. கருப்பு கம்பளம் கொண்ட மேகங்கள் சூழும் வேளை.. வெள்ளிமகள் மெல்ல எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்..
தனலாய் தகிக்கும் கதிரவன் மறைந்த சில கணங்களிலே.. கதிரவனின் தகிப்பை குறைக்கும் விதமாக.. இரவுப்பொழுது முழுமைக்கும் குளுமை தரும் நிலவு தோன்றுவதை வெறுமை சுமந்த விழிகளால் வெறித்துக் கொண்டிருந்தாள்.. தேஜஸ்வினி.
வெய்யோனும் நிலவும் என்றுமே ஒன்றினையாதா.. என்ற எண்ணம் அவளறியாமலே அவள் மனதில் உதித்து.. தேஜஸ்வினியின் இதழில் விரக்தி புன்னகையை தோற்றுவித்து.. மெல்லிய பெருமூச்சை வெளியிட்டது..
அந்த முன்னிரவுப் பொழுதில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரம்.. வர்ணம் தெரியா இருள் வேளையிலும்.. பாலின் வெண்மையில் சிறிது ரோஜாப்பூ இதழை அரைத்த நிறத்தில் பேரழகியாய் மின்னிக் கொண்டிருந்தாள்.. பெண்ணவள்.. அதுவும் அவளின் பொன்மேனியை தூக்கிக்கொடுக்கும் ரத்தச்சிவப்பிலான முழுக்கை மேலாடை கொண்ட சாட்டின் புடவையணிந்து.. விண்ணுலகில் மின்னும் நட்சத்திரமாய் திகழ்ந்தாள்.. தேஜஸ்வினி..
நாழிகை மெல்ல நகர.. பட்சிகளின் ரீங்காரம் அதிகரிக்க தொடங்கியது.. அப்பொழுதும் தன் மோன நிலையை கலைக்காமல்.. ஆற்றில் தெரிந்த நிலவின் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தேஜஸ்வினி.
அப்பொழுது கருப்பு உடையணிந்த அவளின் பாதுகாவலன் ஒருவன் அவளிடம் நெருங்கி.. ” மேம்.. டாகுர் சாப் போன் பண்ணியிருந்தாங்க.. பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சாம்.. உங்கள வர சொன்னாங்க ” என பணிவாக கூறினான்..
அதில் கலைந்த தேஜஸ்வினி.. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு.. காரை நோக்கி சென்றாள்.. இனி அவளிடத்தில் தொடுக்கும் கேலி கிண்டல்கள் பொதிந்த விஷமக்கேள்விகளுக்கும்.. பலபேரின் துவேஷம் கொண்ட பார்வைகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய மனநிலை இப்பொழுது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் அவள் சென்றாள்.. ஆனால் அவளின் மனபலம் மெய்ப்பலமெல்லாம் வெய்யோனை ஒத்த தன்னவனைக் கண்டதும்.. மாயமாய் மறைந்துவிடும் என அவள் நினைத்திருக்க வேண்டுமோ..?
★★★★★★★★★★★★★★★★★★★★★★★
2022 ஆம் ஆண்டிற்க்கான பிலிம்பேர் விருது இம்முறை அசாம் மாநிலத்திலுள்ள குவாகத்தி மாவட்டத்தின் சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இந்தி திரையுலகின் அணைத்து நட்சத்திரங்களும் அங்கு வருகை தந்திருந்தனர்..
பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) என்பது 1954 ஆம் ஆண்டு முதல் பிலிம்பேர் என்ற இதழால் இந்தி மொழி திரைப்படத் துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் ஒரு பிரபலமான விருது விழா ஆகும்.. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பிலிம்பேர் விருதுகள் அமெரிக்காவில் உள்ள அகாதமி விருதுகளுக்கு சமமானவை என்று குறிப்பிடப்படுகின்றன.
முன்னிரவுப்பொழுதை பகலாக்கும் வண்ணம் செயற்கை ஒளி யாவும் செயல் பட்டுக்கொண்டிருக்க.. அதற்கு போட்டியாக புகைப்பட கருவியின் ஒளியும்.. வரும் நட்சத்திரங்களை தங்களின் கேமராவிற்குள் பதிவு செய்துக்கொண்டிருந்தது.. தொகுப்பாளர்கள் தங்களின் வழமையான கேள்வி கேட்கும் படலத்தை ஆரம்பித்திருந்தனர்..
சருசஜாய் ஸ்டேடியதின் முன்பக்கம் நட்சத்திர கூட்டங்களால் நிறைந்து வழிந்தது என்றால்.. மறுபக்கம் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது.. இதுவரை தொலைக்காட்சியிலும் திரையரங்குகளிலும் மட்டும் கண்ட.. நடிகர் நடிகைகளை நேரில் காண மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்..
அப்பொழுது.. பார்ப்பதற்கு ஐம்பது வயது தோற்றத்தில் பட்டுப்புடவையும் நெற்றி முழுவதும் குங்குமமாய் பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் முகலட்சணத்துடன் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியும்.. அவர் தோளில் கரம் போட்டு ஆறடிக்கும் மேலான உயரத்தில் அறுபது வயதிலும் இக்கால இளைஞன் போல் கம்பீரமாய் வந்த பெரியவரையும்.. கண்டவுடன் புகைப்பட ஒளி கவனம் முழுதும் அவர்கள் மேல் திரும்பியது…
அங்கு நின்றிருந்த தொகுப்பாளர்கள் சிலரும் அவர்களை வட்டமடித்து கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தனர்..
” நமஸ்தே.. டகுர்ஜி சாப்.. ரம்யமாலினி மேம் வழக்கம் போல பட்டுபுடவையில அட்டகாசமாய் வந்து.. இங்க உள்ள ஹீரோயின்களுக்கெல்லாம் டஃவ் கொடுக்குறீங்க.. உங்களுக்கு மட்டும் வயது ஏற ஏற அழகு கூடுதே அதன் ரகசியம் என்னவோ.. ” என தொகுப்பாளினி கேட்கவும்..
ரம்யமாலினி சிறு வெட்கப்புன்னகை புரிந்தார்.. அதைக்கண்ட டகுர்ஜியின் விழிகளில் இன்றும் தன் மனையாளுக்கான காதல் ததும்பி வழிந்தது…
” போச்சுடா இதுக்கும் சிரிப்பா.. நீங்க சிரிச்சே எங்கள ஏமாத்துறிங்க.. நீங்க சொல்லுங்க டகுர்ஜி சாப்.. இந்த தடவை உங்களையும் மேமையும் கவுரவிக்கும் விதமா புதுமாதிரியான விருது கொடுக்க போறாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு.. அத பத்தி என்ன நினைக்கிறீங்க.. ”
” ஹ்ம்ம் உண்மையை சொல்லனும்னா.. எங்களுக்கே அது சர்ப்ரைஸ்தான்.. நாங்களும் உங்கள மாதிரி என்னன்னு தெரிஞ்சிக்க ஆர்வமாத்தான் இருக்கோம்.. ” என மெல்லிய சிரிப்புடன் கூறியவர்… தன் மனைவியுடன் அங்கிருந்து நகர்ந்தார்..
அம்ஜத் டகுர்ஜி ரம்யமாலினி இருவரும் பழம்பெரும் நடிகர்கள்.. திரைத்துறையில் எண்ணற்ற படங்களில் ஜோடியாய் நடித்த இவர்கள்.. வாழ்நாள் ஜோடியாகவும் மாறினர்.. இவர்களின் காதலின் அடையாளமாய் மிர்னாலினி பிறந்தாள்.. அவளும் தாய் தந்தையை பின்பற்றி புகழ்பெற்ற நட்சத்திரமாய் திகழ்ந்தாள்.. இசையமைப்பாளரான மனோஜ் கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார்.. இவர்களுக்கு தேஜஸ்வினி என்ற மகளும்.. அம்ரிஷ் என்ற மகனும் உண்டு..
தேஜஸ்வினி நம் கதையின் நாயகி.. இருபத்தேழு வயது மெழுகுப்பாவை.. நடிப்பில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி.. இன்று புகழ்பெற்ற முன்னணி நடிகையாய் திகழ்கிறாள்.. மேலும் மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) பட்டம் வேறு பெற்றுள்ளாள்… அம்ரிஷ் தந்தையின் இசை வாரிசாய் திகழ்கிறான்.. ஆகமொத்தம் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சினிமாத்துறையில் பெயர் பெற்றவர்கள்..
டகுர்ஜியும் ரம்யமாலினியும் தங்களுக்கென பதிவுசெய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும்.. மூத்த நடிகர்கள் முதல் இக்கால நடிகர்கள் வரை.. அனைவரும் அவர்களிடம் சில நொடிகள் பேசிச்சென்றார்கள்..
இதனையெல்லாம் வன்மம் சூழ்ந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.. தயாளன் சக்கரவர்த்தி.. சக்கரவர்த்தி குழுமத்தின் நிர்வாகி.. இவருக்கும் ரம்யமாலினிக்கும் என்றுமே ஆகாது.. இருந்தாலும் வெளிப்பார்வையில் அதனை காண்பிக்க மாட்டார்கள்.. ஆனால் சிலவருடம் முன்பு நடந்த சம்பவங்கள் இருவரையும் ஜென்மவிரோதிகளாய் மாற்றிவிட்டது..
இப்பொழுதும் சக்கரவர்த்தி தன்னை முறைப்பதைக் கண்டு.. நக்கலாய் ஒரு பார்வை பார்த்து.. அவரின் பிபியை எகிறச்செய்தார் ரம்யமாலினி.. டகுர்ஜி அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பக்கத்திலிருந்தவர்களிடம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்தார்..
மேடையில் அடுத்து சிறந்த நடிகைக்கான நாமினேஷன் அறிவிக்கவும்.. ரம்யமாலினி ” ஜி.. தேஜு இன்னும் வரலையே.. நீங்க ராபர்ட்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டிங்கதானே.. ”
” பண்ணிட்டேன்.. மாலு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறதா சொன்னான்.. ” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் கூட்டத்தின் மத்தியில் சலசலப்பு எழ.. அனைவரின் கவனமும் அங்கு சென்றது…
கருப்பு உடை பாதுகாவலர்களின் பாதுகாப்பு வளையத்தின் மத்தியில்.. பேரழகு பெட்டகமாய் வந்துக்கொண்டிருந்தாள்.. தேஜஸ்வினி.. அவளைக் கண்டதும் மக்கள் மத்தியில் பெரும் ஆராவாரமும் கூச்சல் சத்தமும் கேட்டது..
அதனையெல்லாம் ஓர் மென்புன்னகையுடன் கண்டவள்.. மக்கள் பக்கம் திரும்பி வணக்கம் வைக்க.. அதைக்கண்டவர்களின் சத்தம் மேலும் அதிகரித்தது..
ரம்யமாலினி அவற்றையெல்லாம் பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தார்.. ” ஹேன் ஜி.. நம்ம தேஜு இன்னைக்கு ரொம்ப அழகா இருக்காள்ல.. ” என தேஜுவை பார்த்தவாறு கூற.. டகுர்ஜியும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.. தேஜஸ்வினி அவர்களின் அருகே வந்தவுடன்.. அவளை தன்னருகில் அமர்த்தினார்.. ரம்யமாலினி.
சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் தேஜஸ்வினியின் பெயரும்.. இன்னும் சில நடிகைகளின் பெயரும் வாசிக்கப்பட்டது.. அந்த நடிகைகள் யாவரையும் அங்கிருந்த பெரியத்திரையில் லைவ்வாக காண்பித்தனர்..
இப்போ சிறந்த நடிகைக்கான விருத தரப்போறது.. ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பெர்சன்.. வெரி ஹேண்ட்ஸம்.. பிசினஸ் டைஹூன்.. பைனான்ஷியர், ப்ரோடியூசர், சிங்கர் அண்ட் இப்போ புதுசா பாடலாசிரியரா அவதாரம் எடுத்திருக்கிறார்.. இப்படி பல பரிமாணங்கள் கொண்டவர்.. தி ஒன்னன்ட் ஒன்லி மிஸ்டர் சூர்யதேவ் சக்கரவர்த்தி.. என தொகுப்பாளினி கூறியவுடன்.. மேடையின் ஒருபுறத்திலிருந்து அடர் ஊதா வண்ண கோட்சூட்டில்.. முகம் மறைத்த பிரெஞ்ச் பியர்ட் தாடியுடன்.. ஆண்மையின் மொத்த உருவமாய் வந்துநின்றான்.. சூர்யதேவ் சக்கரவர்த்தி.. நம் கதையின் நாயகன்..
அவன் கோட்டின் உள்ளே அணிந்திருந்த ஒயிட்கலர் ஷர்ட்டின் பட்டன்கள் யாவும் மேலே போடாததால்.. அதன் வழியாக தெரிந்த அவன் மார்பின் இறுக்கமான தசைகளை கண்டு அங்கிருந்த பெண்மணிகள் எல்லாம் வாய்பிளந்து ஏக்கப்பெருமூச்செறிந்தனர்..
அவர்களின் ஏக்கங்களையெல்லாம் அதிகரிக்கும் பொருட்டு… மேடையில் வசீகரமாய் இதழ் வளைய புன்னகைத்தவன்.. கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவளை தன் கூர்விழிகளால் ஓர் நிமிடம் துளையிட.. அவனவளுக்கு சுவாசம் தடைபெற்றது..
தொகுப்பாளர்களின் ஆரம்ப சொற்களிலே வருவது யாரென அறிந்தவள் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது..
தேஜஸ்வினி தனக்கெதிரே நின்று பேசுபவர்களையும் தூற்றுபவர்களையும் சமாளிப்பாள்.. ஆனால் அவள் மனமே இங்கு அவளுக்கெதிராய் செயல்படும்பொழுது.. அவள் என்செய்வாள்..
சூர்யதேவின் விழிகளும் தேஜுவின் விழிகளும் தங்களுக்குள் சங்கமித்துக்கொண்டிருக்க.. அணைத்து கேமராக்களும் அவர்களையே போகஸ் செய்துகொண்டிருந்தது.. அதைக் கண்ட ரம்யமாலினி தன் பேத்தியின் கரத்தை அழுத்த.. அதில் தன்நிலை அடைந்தவள்.. பார்வையை திருப்பினாள்..
ஆனால் சூர்யதேவோ.. அவளை இன்னும் ஊன்றிப்பார்த்துவிட்டுதான் பார்வையை விலக்கினான்.. இதனையெல்லாம் மற்றவர்கள் சுவாரசியம் மிக்க பார்த்துக்கொண்டிருப்பதை எல்லாம் அவன் சட்டை செய்யவில்லை…
” சார்.. சொல்லுங்க இந்த வருஷத்தோட பெஸ்ட் ஹீரோயின் யாரு.. ”
சூர்யதேவ் தன் கரத்தில் உள்ள கவரினைப்பிரிக்க.. அதில் தேஜுவின் பெயர் கொண்ட கார்ட் இருந்தது.. ” ஹ்ம்ம்.. மிஸ் யாஷிகா நீங்க என்ன அவார்ட் கொடுக்க சொன்னதிலேயே அது யாருன்னு எல்லாரும் கெஸ் பண்ணிருப்பாங்க.. என்றவன்.. தி பெஸ்ட் ஹீரோயின் ஆப் த இயர் இஸ் கோஸ் டூ.. மிஸஸ் தேஜஸ்வினி சூர்யதேவ் சக்கரவர்த்தி ” என தன் ஆண்மை ததும்பும் குரலில் கம்பீரமாக கூற.. கரகோசங்களின் ஒலி விண்ணைப்பிளந்தது..
சூர்யதேவின் சொற்களில் அவனை அனைவரும் ஆச்சரியமாகவும்.. அதிர்ச்சியாகவும் பார்த்தனர்.. அந்த அதிர்ச்சி தேஜுவிற்கு விருது கிடைத்ததனால் இல்லை.. அவளை அவன் தன் மனைவியென அறிமுகப்படுத்தியதினால் ஏற்பட்ட அதிர்ச்சி..
ஆனால் தேஜுவிற்கு அந்த அதிர்ச்சியெல்லாம் இல்லை.. தன்னவனின் விழி வைத்தே அவன் மனமொழி படிப்பவள்.. அவன் இரண்டு வருடம் விடுத்து இப்பொழுது வந்ததற்கான காரணம் இதுதான் என அவனைக் கண்டதும் அவள் அறிந்துதான் இருந்தாள்.. அதனால் அதிர்ச்சியின்றி மேடையை நோக்கி அவள் நடைபோடும் பொழுது.. ம்ம்மா என்ற மழலைக்குரல் அவள் செவியைத்தீண்ட.. சத்தம் வந்த திசை பார்த்தவள்… சர்வமும் அடங்கி நின்றாள்.. ஏனெனில் அங்கு அவளின் மூன்று வயது மகன் ஆருஷ் வந்துகொண்டிருந்தான்.. உடனே அவள் பார்வை மேடையை நோக்க அங்கு கேலிப்புன்னகையுடன் திமிராக நின்றுகொண்டிருந்தான்.. சூர்யதேவ்..
மேம்.. ப்ளீஸ் ஸ்டேஜுக்கு வாங்க.. என்ற தொகுப்பாளினியின் குரலில் சிலை போல் மேடையேறிவளின் கரம் பிடித்து.. அவள் மகனும் மேடையேறினான்.. சூர்யதேவின் கரங்களில் விருதைக் கொடுக்க.. அவன் தேஜுவிடம் கொடுத்தான்.. கஷ்டப்பட்டு முகத்தில் மென்னகையை வரவைத்தவள்.. அதனை வாங்க முற்படும் பொழுது.. அவள் மகன் அப்போலிச்சிரிப்பிற்கும் வேட்டுவைக்கும் எண்ணம்.. பப்பா என்று சூர்யதேவின் காலைப்பிடித்து தூக்க சொன்னான்..
உடனே சூர்யதேவ்.. உள்ளம் நெகிழ தன் மகனை வாரித்தழுவிக் கொண்டான்.. இதுவரை நேரில் பார்த்திராத தந்தையின் மேல் மகன் கொண்டுள்ள பாசப்பிணைப்பைக் கண்ட தேஜுவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.. எது நடக்கக்கூடாது என இத்தனை நாள் அவள் மனதை பூட்டி வைத்திருந்தாளோ.. அவையாவும் அவள் அனுமதியின்றியே நடைபெற்றுக்கொண்டிருக்க.. அதைத்தாங்கும் சக்தியற்றவளாய் சோர்ந்து விழப்போனவளை மறுக்கரத்தில் சாய்த்துக் கொண்டான் சூர்யதேவ் சக்கரவர்த்தி..
ஒரு தோளில் மகனையும்.. மறுதோளில் தன்னையும் சாய்த்துக் கொண்டவனை.. ஏக்கம் இயலாமை மகிழ்ச்சி வருத்தம் கோபம் என பல உணர்ச்சிகளின் கலவையாய் பார்த்துக்கொண்டிருந்தாள் தேஜஸ்வினி.. அதற்கு பதில் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செய்தியாளர்கள் அனைவரும் இவர்களின் இந்நிலையினை போட்டோக்களாய் எடுத்து தள்ளினர்.. அவர்களுக்கு நாளைய செய்திக்கு ஹாட்டாபிக் கிடைத்த மகிழ்ச்சி..
ஆனால் இவர்களின் குடும்பத்தார்களோ கோபம் கொப்புளிக்கும் விழிகளுடன் அவ்விருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.. ரம்யமாலினி தன் பேரன் அம்ரிஷை முறைக்க.. அவனோ ” ஐயோ.. தாதி பப்புதான் தீதிய பார்க்கனும்னு அடம்பிடிச்சான்.. அதான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன்.. ” என அப்பாவியாக கூறினான்.. ஆனால் ரம்யமாலினி விழிகள் இரண்டும்.. இதனை என்னை நம்பச்சொல்கிறாயா என கேள்வி கேட்டது… அது புரிந்தும் புரியாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்ட அம்ரிஷ்.. மெல்ல அங்கிருந்து நழுவினான்..
மற்றொரு புறமோ எந்நேரமும் வெடிக்கும் கொதிநிலையில் இருந்தார் தயாளன் சக்கரவர்த்தி.. தன் பேரனின் இத்தகைய செயலை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவர் அப்படியென்றால் அவரருகில் அமர்ந்திருந்த லோஷினி சூர்யதேவின் முதல் மனைவி… தன் மடியில் உள்ள தங்களின் மகளை இறுக்கியணைத்தவாறு அவர்களையே வெறித்துக்கொண்டிருந்தாள்.. இவையனைத்தும் அறியாது தங்களுக்குள் மூழ்கியிருந்தனர்.. சூரியனும் அவனின் குளிர்நிலவும்…