அத்தியாயம் 12.
என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் திட்டமிட்ட மதி முதலில் நிர்மலாவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்..
“ அக்கா நான் மதி பேசுறேன்.. உங்க கணவனால் இனி எங்களுக்கும் பிரச்சினை இருக்க கூடாது.. நீங்களும் சந்தோசமா இருக்கணும்.. அதுக்கு தான் இந்த திட்டம்.. தயவு செய்து கொஞ்சம் இதுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுங்க.. இப்ப நேரம் சரி இன்னும் ஒரு அஞ்சு நிமிடத்தில் என் மாமனார் வீட்டுக்கு வந்துருவார்.. வந்ததும் நான் கோயில்ல சொன்ன மாதிரி நீங்க ஆரம்பிச்சா சரி.. நான் லைன்லயே இருக்கேன்.. உங்க பக்கம் எல்லாம் ஓகே தானே எதுவும் சொதப்பிடாதே?.. “
“ நீங்க எதுவும் யோசிக்காதீங்க தம்பி. எல்லாம் சரியா நடக்கும்.. பக்காவா பண்ணுறேன்..” என்றார்..
அவன் பேசி முடித்ததும் எதிர்பக்கத்தில் நிர்மலாவின் இரண்டு குழந்தைகளும் பேசும் சத்தத்தை காதில் கேட்டுக் கொண்டு அமைதியாக அலைபேசி அழைப்பில் ராவணனின் வருகைக்காக காத்து இருந்தான்..
மதி எதிர்பார்த்தது போன்று சரியாக 5 நிமிடத்தில் அவர்கள் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..
நிர்மலா சென்று கதவை திறக்கும் பொழுது ஓரளவு போதையுடன் நிதானம் இல்லாமல் தான் ராவணன் உள்ளே வந்தான்..
“ ஏய் திமிர் புடிச்சவளே..! மனுஷன் வந்து கதவை தட்டினால் திறக்க இவ்ளோ நேரமாடி?.. என்ன பார்வை.. கிளம்பிட்டியா?.. சும்மா இருக்க பயம் விட்டு போச்சு போல.. முதல் புருசனோட கொஞ்சி பேசிகிட்டு இருந்தியோ?.. அவன் கொஞ்சி பேசும் சந்தோசத்துல தான் நான் வந்து கதவை தட்டும் போது அந்த சத்தம் உனக்கு கேட்காமல் மிதப்புல இருந்திருக்க?… எங்கடி உன் போன் எடுத்துட்டு வா.. எனக்கு இப்பவே தெரியணும்.. நீ இன்னைக்கு யாரோட எல்லாம் பேசி இருக்கேன்னு..” போனுக்காக கை நீட்டியபடி போய் சோபாவில் விழுந்தான் ராவணன்..
அவள் அவனை ஏன் என்றும் கவனிக்காமல் நின்ற இடத்தில் நின்றாள்..
நிர்மலாவின் மூத்த மகனை விட்டு ராவணன் போனை எடுத்துக் கேட்கவும் அவன் எடுத்து கையில் கொடுத்தான்..
நமது கில்லாடி ஹீரோ மதிக்கு மாமனாரை பற்றி நன்கு தெரிந்திருந்தபடியால் நிர்மலா வழமையாக பாவிக்கும் ஃபோனை விட அவன் வேறொரு ஃபோனை கையில் கொடுத்து அதில் அழைத்து அங்கு நடப்பதை கேட்டுக் கொண்டிருந்தான்..
“ என்னடி போன்ல எதையும் காணல லாஸ்ட்டா என்கூட பேசினது மட்டும் இருக்கு.. எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டியா என்ன.? “
“ யோவ் ஏன் யா உன் புத்தி இவ்வளவு கேவலமா போகுது… நான் ஏன் யாருக்கும் தெரியாம திருட்டு தனமா பேசணும்?.. நான் கமிஷனர் தங்கச்சி. நீ வேணாம்னு நினைச்சா போடான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்.. உனக்கு தெரியாம யார் கூடயும் ரகசியமா பேசணும் என்கிற அவசியம் எனக்கில்லை.. ” என்று ஒரு நாளும் வாய் திறந்து பேசாதவள் இன்று வாய் திறந்த காரணத்தால் எழ முடியாமல் கஷ்டமாக இருந்தாலும் வீம்பாக எழுந்து வந்து அவளை போட்டு அடித்தான்..
“ யோவ் என் மேலயே நீ கை வச்சிட்ட இல்ல.. இன்னைக்கு உன்னை உண்டு இல்லைன்னு பண்றேன் பாரு.. இதுவரை உன் பழைய வாழ்க்கையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. நீயும் சொன்னதில்ல.. ஆனா சொன்ன வரைக்கும் பொய்யின்னு இன்னைக்கு எனக்கு தெரிஞ்சு போச்சு… அண்ணாவுக்கும் எல்லாம் தெரியும்.. ஆனால் ஏன் எங்க அண்ணா இந்த விஷயத்துல எனக்கு துரோகம் பண்ணினார்னு எனக்கு தெரியாது. பாவம் அந்த சந்திரா அக்கா அவங்களோட பொண்ணு அந்த குடும்பமே உன் கிட்ட சிக்கி சீரழிந்து போயிட்டாங்க.. இதுக்கு எல்லாம் நீ சரியான பதில் சொல்லியே ஆகணும்.. ” என்று கோபமாக பேசினார் நிர்மலா..
சும்மாவே ராவணனை யாரும் எதிர்த்து பேச விட மாட்டான்.. இப்பொழுது தனக்கு அடிமை என நினைக்கும் அவனது இரண்டாம் மனைவி வாய்க்கு வந்தது அனைத்தையும் பேச அது உண்மையாகவே இருந்தாலும் அது அவருக்கு திமிராகத்தான் தெரிந்தது..
ராவணன் மனைவியை தனக்கு கீழ் அடக்கி ஆள நினைக்கும் வர்க்கம்..
இப்போ அவனின் மனைவி சரியாகவே இருந்தாலும் அதைக் கேள்வியாக கேட்டது அவருக்கு பிடிக்கவில்லை.. நேரத்தோடு அடித்தது என்ன அடி தலை முடியை கொத்தாக பிடித்து சுவற்றில் கொண்டு தலையை முட்டிவிட்டார்..
நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது.. குழந்தைகள் இருவரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்…
அப்பொழுதும் அவனின் ஆத்திரம் தீரவில்லை.. அவன் பல கொலைகள் செய்து பலரின் ரத்தத்தை பார்த்த இரக்கமற்ற அரக்க ஜாதி.. அவனுக்கா மனைவியின் ரத்தம் பாதிக்கப் போகிறது?..
அப்படியே இடுப்போடு சேர்த்து எட்டி மிதித்து தள்ளினான்..
“ ஏய் என்னடி வாய் கொழுப்பு ரொம்ப ஓவரா போயிடுச்சு..? கூமுட்டை உன் அண்ணனை கைக்குள்ள போட்டுகிட்டு இந்த பதவிக்கு வந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அந்த ஆள் பதவியை புடுங்கலாம்னு பார்த்தா நீ எனக்கு கீழ இருக்கிற நாய் ஓவரா பேசுற.. நான் செய்வது எனக்கு சரி அதை கேள்வி கேட்க யாருக்கும் தைரியமும் இல்லை.. உரிமையும் இல்லை.. அப்படி யாரும் இன்னும் பிறந்தும் வரல.. நல்லா கேட்டுக்கோ நான் அப்படி தாண்டி உன்னால முடிஞ்சா நீ உங்க அண்ணன வரவழைத்து இங்க நடந்தது தெரியப்படுத்து பார்க்கலாம்.. அடுத்த செகண்ட் உங்க அண்ணனும் சரி. நீயும் சரி உசுரோட இந்த வீட்டிலிருந்து போக மாட்டீங்க.. நான் ராவணன் டி.. நான் ராமன் இல்ல..நேர்மையா ஒழுக்கமா இருக்குறதுக்கு.. நான் அப்படித்தான் இருப்பேன்.. சேர்ந்து வாழு. கூட படுத்து அடுத்த பிள்ளையை பெத்துக்கோ.. வளத்துக்கோ.. வீட்டு வேலைய பாத்துட்டு போடுற சோத்த தின்னுட்டு கிட.. இல்லையா போய்கிட்டே இரு.. நீ இல்லன்னா இன்னொருத்தி வருவா அந்த இடத்துக்கு.. இந்த பூமில பொம்பளைங்களுக்கா பஞ்சம்?.. போவியா போடி.. ” என்று ஆக்ரோஷமாக கத்தினான் ராவணன்..
அவன் பேசியதை கேட்டுவிட்டு கதவை திறந்து உள்ளே வந்தார் கமிஷனர்..
அவருடன் இன்னும் இரண்டு போலீசார் வந்திருந்தார்கள்..
எதிர்க்கட்சித் தலைவர் தான் கமிஷனர் எதிர்த்து பேச முடியாத அளவுக்கு அவருக்கு ஒரு வேலையை கொடுத்து இந்த பக்கம் அனுப்பி வைத்தார்..
வந்த வேலை முடிந்து விட்டது தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டு போகலாம் என்று நினைத்து வந்தார்..
ஆனால் அங்கே ராவணன் சண்டையிடும் நேரம் பார்த்து வீட்டுக்கு வந்துவிட்டார் ..
கமிஷனர் அவருக்கு சந்தேகம் வராமல் வந்த வேலையை முடித்துவிட்டு தங்கை வீட்டுக்கு வரும் நேரமும் ராவணன் மனைவியுடன் சண்டையிட்டு அவரை அடிக்கும் நேரமும் சரியாக இருக்க வேண்டும் என கணித்து திட்டம் போட்டான் அவன் திட்டம் சரியாக அமைந்து விட்டது..
மதிக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டதோ என்னமோ அவன் திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடியாகவே நடந்தது..
இதோ ராவணன் தங்கையை அடித்ததை கமிஷனர் நேராக பார்த்து விட்டார்..
மரியாதை இல்லாமல் பேசியதையும் அவர் பதவிக்கும் அவன் ஆசைப்படுவதையும் கேட்டுவிட்டார்..
அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் அவன் தனக்கு கீழ் இருப்பான்.. தங்கையை நல்லபடியாக பார்த்துக் கொள்வான்.. என நினைத்து தான் கல்யாணம் செய்து வைத்தார்..
அப்படி இருந்தும் தன் தங்கை என தெரிந்தும் அவளை இவ்வளவு கொடுமைப்படுத்தி அவதூறு வார்த்தை பேசி தன்னையும் இவ்வளவு கீழாக நினைத்து இருப்பவனை என்ன செய்யலாம் என பொறுமையாக தான் யோசித்தார்..
நேரத்தோடு டிஎஸ்பியிடம் இருந்து வார்னிங் வந்திருந்தது..
அப்படி இருக்கும் பொழுது ஓர் உயர் பதவியில் இருப்பவன் மீது அவர் கை வைப்பது சரியில்லை..
வேறு வழியில் தான் அவனை சிக்க வைக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டார்..
குடிபோதையில் இருந்ததால் கமிஷனர் வந்திருப்பதை பார்த்தும் மரியாதை கொடுக்காமல் அடாவடியாகத்தான் இராவணன் நடந்து கொண்டான்..
குடி போதை அவன் கண்ணை மறைத்திருந்தது.. கமிஷனர் எதிரில் வைத்தும் அவள் பேசிய வார்த்தைகளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் அடிக்க பாய்ந்து வந்தான்..
வேகமாக வந்து தங்கையை தன் புறம் இழுத்து நிறுத்தி அவனை ஒரு அரை வைத்து சோபாவில் தள்ளிவிட்டார் கமிஷனர்..
அவனும் போதையில் தள்ளாடியபடியே போய்க் கீழே விழுந்து விட்டான்..
நாளை அவன் போதை தெளிந்ததும் அவனுடன் பேசிக்கொள்ளலாம் என நினைத்து வருவது வரட்டும் என்று முடிவெடுத்து தங்கையையும் அவளது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார் கமிஷனர்..
அவரின் குணம் அறிந்து மனைவியும் நாத்தனாரை அன்போடு தான் வரவேற்றார்..
நிர்மலாவும் முடிவெடுத்து தான் அங்கே வந்தார் இனி திருமண வாழ்க்கை அவருக்கு சரி வரப்போவதில்லை என தெரியும்..
அண்ணனுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொண்டு கொஞ்ச நாட்களில் இங்கிருந்து செல்ல வேண்டும் என முடிவெடுத்தார்..
அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அங்கு நடந்தவற்றை மதியிடம் கூறினார் நிர்மலா..
இப்போதைக்கு முதல் அடியே வெற்றிகரமாக முடிந்ததில் மதிக்கும் அப்படி சந்தோசம்..
இன்று தான் சந்தோசமாக இந்த விஷயத்தை மனைவியிடம் கூறி அவளின் விருப்பதின் முதல் படியை நிறைவேற்றி விட்டதை சொல்லி அவளுடன் சிரித்து பேச ஆசையாக வீட்டிற்கு சென்றான்..
வந்தவனை அவளும் வரவேற்று அவனுக்கு காபி கொடுத்துவிட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டாள்..
அவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.. தன்னை நிமிர்ந்து பார்த்து என்ன நடந்தது என கேட்பாள் என காத்திருந்தான்..
ஆனால் அதற்கு அவன் மனைவி இடம் கொடுக்கவில்லை..
ஹாலில் இப்படியே இருந்தால் சரி வராது என நினைத்து அறைக்குள் சென்று அவளை அழைத்தான்..
“ வள்ளிக்கண்ணு.. கொஞ்சம் மேல வா.” என்றான்.. முதல் முதலாக ஆசையாக மனைவியின் பேர் சொல்லி அழைத்தான்
“ இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல இந்த கிழவனுக்கு..” என்று கணவனைச் செல்லமாக சலித்துக் கொண்டாள்..
அவள் சொன்ன வேலையை செய்து முடித்தானோ இல்லையோ ஆனாலும் கணவன் கூப்பிடுகிறான் என்பதற்காகவே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவர்களது அறைக்கு வந்தாள்..
அவள் உள்ளே வந்ததும் கையை பிடித்து இழுத்து அவள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“ என்ன மாமா உங்களுக்கு வேணும்.. நான் சொன்னத செய்யாம என்னை என்னத்துக்கு இப்ப இப்படி பண்றீங்க?..” என்று அவளது குரல் கடும் கோபத்தோடு வந்தது..
“ ஏய் யாருடி சொன்னது நான் எதுவும் பண்ணலன்னு?.. எவ்வளவு பெரிய வேலை செஞ்சுட்டு வந்து இருக்கேன் தெரியுமா?..” என்றான்..
மதி அப்படி கேட்டதும் வள்ளியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது போன்று பிரகாசமாக இருந்தது..
ஆனாலும் அதை கணவனின் முன் காட்டிக் கொள்ளாமல் “ முதல் நீங்க என்ன பண்ணிட்டு வந்தீங்கன்னு சொல்லுங்க..அது பெரிய வேலையா?.. சின்ன வேலையான்னு நான் சொல்றேன்..” என்றாள்..
அவளும் அவள் தாயும் பட்ட கஷ்டத்திற்கு இன்று முதல் படியாக கணவன் ஏதோ செய்து விட்டு வந்திருக்கிறான்.. என நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டு உடனடியாக அவளே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
ஒருவரின் கஷ்டத்தில் சந்தோஷப்படும் ரகம் வள்ளியோ அவளது தாயோ அவர்கள் யாருக்கும் அந்த குணம் இல்லை..
ஆனாலும் இன்று அவள் முகத்தில் இவ்வளவு சிரிப்பு இருப்பதற்கு காரணம் அவர்கள் பட்ட துன்பத்திற்கு அளவுகோலை இல்லாததால் மட்டுமே..
அவர்கள் முன்பு துன்ப பட்டாலும் இப்பொழுது தன் மாமனால் சந்தோஷப்படலாம்.. ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு அவள் தாய் உயிரோடு இல்லையே..! அது மட்டுமே வள்ளிக்கு தந்தையை பழிவாங்க வேண்டும் எனும் எண்ணத்தை ஆழமாக விதைத்தது..
அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை மனைவி இப்படி தன்னை இறுக்கி அணைப்பாள் என்று..
அவளே அடி எடுத்து வைத்ததும் அவன் சும்மா இருப்பானா என்ன..
அவன் அவனது திருகுதாள வேலையை காட்ட ஆரம்பித்து விட்டான்..
அணைத்துக் கொண்டே அப்படியே சென்று கதவை தாள் போட்டுவிட்டு மீண்டும் அணைத்து கொண்டு அழைத்து வந்து கட்டிலில் தன் மடியில் அமர்த்தினான்..
முன்பே ஒரு முறை கோவத்தில் மனைவியின் கையை இழுத்து பிடித்து இருந்தான்.. அதை மகள் பார்த்து விட்டாள்..
அப்படி ஒரு சம்பவம் மகளின் முன் மீண்டும் நடைபெற வேண்டாம் என நினைத்து மதி முன்கூட்டியே கதவைத் தாள் போட்டு விட்டான்..
நல்ல வசதியாக மனைவியும் அவனது மடியில் அமர்ந்து கணவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..
கோவிலில் நிர்மலாவை சந்தித்தது முதல் கொண்டு அவருடன் பேசியது மற்றும் ராவணன் வீட்டில் நடந்தவற்றை மிகவும் சுவாரசியமான சம்பவம் போல் அழகாக அனைத்தையும் கூறி முடித்தான்..
முதல் கட்டமாக மீண்டும் ராவணனை தனிமைப்படுத்தி விட்டோம்.. அந்த தனிமையே அவனுக்கு முதல் தண்டனை..
எவ்வளவு திட்டி அடித்து கொடுமைப்படுத்தினாலும் மனைவி தன்னுடன் இருப்பாள் என்று ஒரு கணவனுக்கு எண்ணம் வந்து விட்டால் அவனது ஆட்டமும் திமிரும் அதிகமாகுமே தவிர அவன் தவறை உணர்ந்து கொள்ள வாய்ப்பே அமையாது..
அப்படியே நிர்மலாவை அவன் பிரிந்தாலும் அவன் தவறை உணர்ந்து திருந்துவானா?.. அல்லது தவறுக்காக வருந்துவானா?..என்பது சந்தேகமே…
மன்னிப்பு கேட்பது திருந்துவது நல்ல குணம் கொண்டு மனிதர்களுடன் பழகுவது என்ற பழக்கங்களுக்கு அப்பாற்பட்டவனே ராவணன்..
இதை மதியும் வள்ளியும் உணரும் காலம் வெகு விரைவில்..
மனைவி இத்தனை நாட்களாக தன்னுடன் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தற்கு தண்டனையாக அவளைத் தன் புறம் திருப்பி முதல் முறையாக காதலாக அவளது இதழில் இதழ் பொருத்தி நீண்ட ஒரு இதழ் யுத்தம் நடத்திய பின்பே மனைவியை விடுவித்தான்..
அதுவும் “ அம்மா அம்மா ” என
அவனது தவப்புதல்வி வெளியே தாயை அழைக்கும் சத்தம் கேட்ட பின்பே விடுவித்தான்..
வள்ளியின் முகம் குங்குமம் பூசியது போல் செம்மையாக இருந்தது..
ராவணன் கமிஷனர் மற்றும் அவன் மனைவியின் மீது கொலை வெறியுடன் இருந்தான்..
இதற்கு காரணம் அவனது மகளும் மாப்பிள்ளையும் என தெரிந்தால் அவர்களது நிலை என்னவோ..