தனது படுக்கையறையில் இருந்த சாளரத்தின் வழியே நிலவை வேடிக்கை பார்த்தவாறு ஆழ்ந்த சிந்தனைக்குள் இருந்த மீனாட்சியின் கவனம், அந்தச் சாளர விதானத்தில் (sunshade) இருந்து கேட்ட பறவையின் குரலிலும் அதன் இறக்கையின் படபடப்பிலும் அதன் மீது திரும்பியது.
அவளது வீட்டினைச் சுற்றி எப்பொழுதும் ஆங்காங்கே புறாக்கள் பறந்த வண்ணம் இருந்தாலும், இது வரை அந்த இடத்தில் அவை அமர்ந்து கண்டிராத காரணத்தினால், அந்த இறக்கையின் படபடப்பைக் கொண்டு அதற்கு ஏதேனும் அடிப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.
இந்த எண்ணம் தோன்றிய மறுநொடி அவளின் மனம் அதன் வலியை எண்ணி கவலைக் கொள்ள அவசரமாக எழுந்தவள் தந்தையின் அறை நோக்கி சென்றாள்.
“அப்பா! ப்பாஆஆ! அங்க புறாவுக்கு ஏதோ அடிபட்டுடுச்சு போலப்பா! போய்ப் பாருங்களேன்” எனத் தனது கைபேசியில் யாரிடமோ பேசி கொண்டிருந்த தந்தையை அவளது அறையின் வெளிப்பக்க சுவற்றை நோக்கி நகர்த்திச் சென்றாள்.
“என்னம்மா! என்னாச்சு?” என்றவராய் கைபேசியை வைத்துவிட்டு அவளின் இழுப்புக்குச் சென்று, அவள் கூறிய இடத்தைக் கவனிக்க, அங்கு இரு புறாக்கள் அமர்ந்து இறக்கைகளை அடித்துச் சத்தமிட்டு விளையாடிய வண்ணம் இருந்தன.
அதனைக் கண்டு ஆசுவாச பெருமூச்சு விட்டவளைக் கண்டவர்,
“ம்மா அதுங்களுக்கு ஒன்னும் ஆகலைமா! சும்மா விளையாடிட்டு தான் இருக்குதுங்க! நீ புறாக்கு அடிப்பட்டிருச்சுனு நினைச்சு பயத்துட்டியா?” எனக் கேட்டார் அவளின் தந்தை ருத்ரன்.
கண்களைச் சுருக்கி ஆமென அவள் தலையசைக்க, “சின்னப் புறாவுக்கு இவ்ளோ அக்கப்போரா?” எனக் கூறி சிரித்தாரவர்.
தனது மகளின் இரக்க சுபாவத்தையும் மெல்லிய குணத்தையும் அறிந்தவராய் அவள் தலை கோதி மென்னகை புரிந்தார்.
அவளின் பார்வை அந்தப் புறா ஜோடிகளை ஸ்பரிசித்திருக்க, தனது தந்தையின் புறம் திரும்பியவளாய், “எனக்கு எப்பப்பா கல்யாணம் செஞ்சி வைக்கப் போறீங்க?” எனக் கேட்டாள்.
அவளின் இந்தத் திடீர் கேள்வியில் சற்று அதிர்ந்து பின் வாய் விட்டு சிரித்தவராய், “என்ன! என் பொண்ணுக்கு திடீர்னு கல்யாண ஆசை வந்துருக்கு?” எனக் கேட்டப்படி அந்த வீட்டினைச் சுற்றியிருந்த தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர்.
தந்தையின் சிரிப்பைப் பார்த்து முகத்தைச் சுருங்கியவளாய் அவருடன் நடந்தவள், “என்ன! என்னை கேலி செய்றீங்களா?” என முறைத்தவளாய்,
“அப்பா ஐம் சீரியஸ்” என்றாள்.
அதற்கும் ஹா ஹா ஹா வென வாய்விட்டுச் சிரித்தவரை அவள் மேலும் முறைக்க,
“என்னம்மா நீ பூச்சுக்கு பயந்து பூச்சாண்டிக்கிட்ட சிக்குறேன்னு சொல்றியே” என்றார்.
முந்தைய நாள் மகள் தனது பணியிடப் பிரச்சனையைப் பற்றி விளக்கியிருந்ததால் இவ்வாறு கேலி செய்து சிரித்திருந்தார் அவர்.
தோட்டத்தில் இருந்த சிமெண்ட் மேஜையில் அவர் அமர, அவரருகில் அமர்ந்தவளை நோக்கி திரும்பியவர், “உனக்கு இந்த வேலை பிடிக்கலைனா வேற கம்பெனி மாத்திட்டு போ! இல்ல வேற பிராஜக்ட்டுக்கு போ! கல்யாணம் செய்றது தான் பிடிக்காத வேலைக்கான தீர்வுனு உனக்கு யார் சொன்னா?” எனக் கேட்டார்.
“பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட மாட்டாளானு எதிர்பார்த்து காத்திட்டு இருக்கப் பேரண்ட்ஸ் தான் நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பொண்ணே ஓகே சொல்லியும் கல்யாணத்தைப் பத்தி பேசாம வேலையைப் பத்தி பேசுற அப்பா நீங்களா தான் இருப்பீங்க” எனச் சலித்துக் கொண்டாள்.
ருத்ரனுக்கு மகள் தனது சொந்த காலில் நிற்க வேண்டும். என்றும் எவரின் தயவையும் எதிர்பார்த்து நிற்க கூடாது என்பதில் தீர்க்கமாய் இருப்பவர். ஆனால் இவளுக்கோ வேலைக்குச் செல்வதே பிடித்தமான விஷயமாய் இல்லை.
“எனக்கு வேலைக்குப் போகவே பிடிக்கலைப்பா! அதுவும் ஐடி வேலை சுத்தமா பிடிக்கலைனு சொன்னா எங்க கேட்டீங்க நீங்க? இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம். அதுவும் ஆன் கேம்பஸ்ல கிடைக்கிறது எவ்ளோ பெரிய விஷயம். உனக்கு ஈசியா கிடைச்சிட்டனால அதோட அருமை பெருமை தெரியலையானு திட்டிட்டு, கடவுள் ஒருத்தருக்கு ஒன்னு கொடுக்கிறாருனா அதுக்கான காரணம் இருக்கும்னு வேற அட்வைஸ் மழை பொழிஞ்சி தானே என்னை இந்த வேலைக்குச் சேர வச்சீங்க! நானும் சரி அப்பா சொல்றாங்களேனு சேர்ந்தேன். ஆனா ஒவ்வொரு நாளும் ஸ்டேடஸ் கால், பிராஜ்க்ட் டெலவரி, மீட்டிங், கோடிங்னு கடுப்பாகுதுப்பா! முடியலைனா ஏன் முடியலைனு காது கொடுத்து கேட்குற லீட் அண்ட் மேனேஜர் இருந்தா பரவாயில்லை. இந்த லீட் கூடக் குப்பை கொட்ட முடியலைப்பா! தினமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன் தெரியுமா” என்றாள் முகத்தைப் பாவமாய்ச் சோகமாய் வைத்துக் கொண்டு.
“சரி நீ கல்யாணம் செஞ்சா உன் லீட் உன்னைத் திட்டாம விட்டுடுவாரா என்ன?” எனச் சிரித்தவாறு அவர் கேட்க,
“ம்ப்ச் இல்லப்பா! பிராஜக்ட்ல இருந்து ரிலீஸ் தராம வெறுப்பேத்துறாங்கல! கல்யாண இன்விடேஷன் காண்பிச்சு கல்யாணத்துக்குப் பிறகு வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போறதா சொல்லி ரிலீஸ் வாங்கிடுவேன்”
எப்படி என் ஐடியா என்பது போல் புருவத்தை உயர்த்தி அவரை அவள் பார்க்க,
“சகிக்கலை உன் ஐடியா! இதுக்கு நீ நேரடியாவே அவங்ககிட்ட டிரான்ஸ்பர் வேணும்னு கேட்டிருக்கலாமே” என்றார்.
“அதான் கேட்டதுக்கு வேற கம்பெனி வேணும்னாலும் மாறி போங்க. டிரான்ஸ்ஃபர் தர முடியாதுனு சொல்லிட்டாங்களே!” என்றாள்.
“சரி வேற கம்பெனி இன்டர்வியூ அட்டென்ட் செஞ்சி மாறி போக வேண்டியது தானே” எனக் கேட்டார்.
“ப்பாஆஆ என்னப்பா என்னைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டே இப்படிக் கேட்குறீங்க?” எனச் சிணுங்கினாள்.
“எனக்குத் தான் இன்டர்வியூ ஃபியர்(fear பயம்), ஸ்டேஜ் ஃபியர்னு எல்லா ஃபியரும் இருக்குனு உங்களுக்குத் தெரியும் தானே. எப்படியோ ஆன் கேம்பஸ்ல வேலை கிடைச்சி ஒரு வருஷமா ஒரு பிராஜக்ட்ல குப்பை கொட்டிட்டு இருக்கேன். இப்படியே இருந்திடலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்கலே” எனப் புலம்பியவள்,
“ம்ப்ச் எது எப்படியோ? ஐம் ரெடி ஃபார் மேரேஜ்! மாப்பிள்ளை பாருங்க” இது தான் முடிவு என்பது போல் கூறிவிட்டு அவள் உள்ளே செல்ல,
தனது கைபேசியில் இரண்டு நாட்களுக்கு முன்பு தரகர் அனுப்பியிருந்த வரனின் புகைப்படத்தையும் பயோடேட்டாவையும் நோட்டமிட்டவராய் அடுத்துச் செய்ய வேண்டியனவைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
அன்று அதே இரவு ஒன்பது மணி அளவில்!
“ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கிச்சன் அண்ட் ஹோம் அப்ளையன்ஸஸ் யூ டியூப் சானல்! நான் உங்க சுந்தரேஸ்வரன்!
சாரி ஃபார் த டிலே மக்களே! இன்னிக்கு கேமரால கொஞ்சம் பிராப்ளம் வந்துட்டனால எட்டு மணிக்கே லைவ்ல வர முடியலை.
நிறையப் பேர் என்னோட வீடியோக்காகக் காத்துட்டு இருக்கிறதா மெசேஜ் செஞ்சிருந்தீங்க. உங்களைக் காக்க வைத்ததற்கு மன்னிக்கவும். இனி இப்படி டிலே ஆகாம பார்த்துக்கிறோம்.
தினமும் நைட் என்னோட வீடியோஸ் பார்த்துட்டு தான் தூங்க போவீங்கனு நிறையப் பேர் சொல்லிருந்தீங்க. நிஜமாவே அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு.
தொடர்ந்து எங்களோட பிராடக்ட் பத்தின உங்களோட கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க. மாதாமாதம் நாங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பத்து நபருக்கு அளிக்கும் பரிசுகளை வெல்லுங்க.
இன்னிக்கு யூ டியூப் லைவ்ல நாம பார்க்க போறது பஞ்சலோக பிராடக்ட்ஸ் தான்ங்க.
ஏற்கனவே போட்டிருந்த ஐயன் கடாய், தோசை கல்லுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அத்தனையும் வித்துப் போச்சு. வேணுங்கிறவங்க எங்க சைட்ல அந்தப் பிராடக்ட்க்கு கீழே இருக்கப் பட்டன் மூலமா எங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்புங்க. நாங்க தேவைக்கேற்ப திரும்பத் தயாரிச்சு உங்களுக்கு மெசேஜ் செய்வோம்.
பஞ்சலோக பிராடக்ட்ஸ் எல்லாமே நாங்க பரம்பரையா நாற்பது வருஷமா சொந்தமா தயாரிச்சிட்டு இருக்கோம். இது முழுக்க முழுக்க ஹேண்ட்மேட் பிராடக்ட்ஸ். நீங்க இந்தப் பிராடக்ட்ஸ்லாம் பார்த்தீங்கனாலே தெரியும்.
இந்தப் பஞ்சலோக தோசை கல்லை நீங்க முன் தயாரிப்புலாம் எதுவும் செய்யாம நேரடியாகவே யூஸ் செய்யலாம். இப்ப இங்க நான் வச்சிருக்கிறது கழுவிய புதுத் தோசை கல். இதுல டேரக்ட்டா எண்ணெய் தேய்ச்சுத் தோசை ஊத்தலாம்” எனக் கூறியவாறு அந்தப் புதுத் தோசைக்கல்லில் எண்ணெயை தேய்த்துத் தோசை மாவை அழகாய் வட்டமாய் ஊற்றி முடிக்கவும்,
“சுந்தர் ரொம்ப அழகா தோசை ஊத்துறீங்க”
“சூப்பர் சகோ”
“எனக்குக் கூட இப்படித் தோசை சுட வராது ப்ரோ”
எனப் பலவிதமான கமெண்ட்டுகள் அந்த நேரலை காணொளியின் கருத்துரை பெட்டியில் குறுஞ்செய்திகளாய்க் குவிந்த வண்ணம் இருந்தன.
வட்டமானத் தோசையைத் திருப்பிப் போட்டு எடுத்துத் தட்டில் வைத்து உண்டு காண்பித்தவன்,
“பஞ்சலோக கல்லுக்குனு ஒரு டேஸ்ட் இருக்குங்க. அது நீங்க சாப்பிட்டுப் பார்த்தா தான் தெரியும். இதை நான் சொல்லலைங்க. இந்தப் பிராடக்ட் வாங்கின எல்லாருமே இதை ரிவ்யூல சொல்லிருக்காங்க. அவங்களோட ரிலேடிவ்ஸ், பக்கத்து வீட்டுக்காரங்க, அக்கம் பக்கத்துல தெரிஞ்சவங்கனு எல்லாருக்குமே இந்தப் பிராடக்ட்டை ரெக்கமெண்ட் செய்றாங்க. அதனாலயே எங்க கம்பெனில எப்பவும் பாஸ்ட் மூவிங்ல இருக்கு இந்தப் பஞ்சலோக பிராடக்ட்ஸ்”
சிரித்த முகமாய்ப் பளிச்சென்ற கணீர் குரலில் தனது பேச்சுத் திறமை மூலமும் வியாபார யுக்திகள் மூலமும் பலரையும் கவர்ந்திருந்தான் சுந்தர்.
சுந்தரன் என்ற பெயருக்கேற்ப சுந்தரமான அவனது வதனத்தைக் காணவும் சிலர் தொடர்ந்து அவனது காணொளித்தடத்தின் (யூ டியூப்பில்) நேரலையைப் பார்வையிடுகின்றனர்.
அடுத்து ஒவ்வொரு பொருளைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து அதற்கான விலையையும் கூறி பேசி முடிக்க அரை மணி நேரமானது.
தொடர்ந்து நேரலையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்க, நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி உரைத்து நிறைவு செய்தான்.
நேரலை முடிந்ததும் ஹப்பாடா என ஆசுவாசமாய் நாற்காலியில் அமர்ந்தவன் பொத்தலில் இருந்த நீரை பருகினான்.
அந்தக் காணொளிக்கு ஏற்றபடியான கவர்பிக் தயாரித்து அதனை மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்கான வேலையில் அவனது டிஜிட்டல் டீமிலிருந்த இருவர் ஈடுபட்டுக் கொண்டிருக்க, இவன் அந்த வீடியோ எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த அவனது கடையைப் பார்வையிட்டவனாய் வேலையாட்களை வீட்டுக்குச் செல்லுமாறு உரைத்து விட்டு கடையைத் தினமும் அடைக்கும் நபரிடம் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப எத்தனித்த நேரம், அவனின் காரியதரிசியான முரளி பதட்டத்துடன் வந்து நின்றான்.
“என்ன முரளி இன்னும் கிளம்பலையா நீங்க?” எனக் கேட்டவாறே புன்னகை முகமாய் வாயிலை நோக்கி அவன் நடக்க,
“இல்ல சார்! ஒரு முக்கியமான விஷயம்” எனத் தயக்கமாய் இழுத்தான் முரளி.
சட்டென நடையை நிறுத்தியவனாய், “என்னாச்சு முரளி? என்ன விஷயம்?” எனப் புன்னகை மறைந்து யோசனையில் நெற்றி சுருங்க கேட்டான்.
“டூ டேஸ் முன்னாடி நாம கஸ்டமருக்கு அனுப்பின பிராடக்ஸ்லாம் டேமேஜ்டு பீஸ்ஸா இருக்குனு கஸ்டம்ர்ஸ் ரிட்டர்ன் பண்ணியிருக்காங்க சார். கொரியர் ஆபிஸ்ல இருந்து கால் செஞ்சி, எப்ப பிராடக்ஸ்லாம் ரிட்டர்ன் கொண்டு வந்து தர்றதுனு கேட்டாங்க சார்” என்றவனைத் தீயாய் முறைத்தான் சுந்தர். முகம் கோபக்கனலாய்த் தகித்தது.
“எத்தனை பிராடக்ட் இது வரைக்கும் வந்திருக்கு” அமைதியாக வினவினான்.
“27”
“வாட்? ஹௌ கேர்லெஸ்?” எனத் தலையைக் கோதியவாறே அங்குமிங்கும் நடந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்தித் தன்னைச் சமன்படுத்த முயன்றவனாய்,
“கஸ்டமர் கேர்ல இது சம்பந்தமா எந்தக் கம்ப்ளைண்ட்ஸ்ஸும் வரலையா? இல்ல நம்ம ஆளுங்க கவனிக்காம விட்டுட்டாங்களா? அன்னிக்கு இந்தப் பேக்கேஜ்ஜை சூப்பர்வைஸ் செஞ்சது யாரு?” எனக் கேள்விகளை அடுக்கினான்.
“ரம்யாக்கா தான் அன்னிக்குச் சூப்பர்வைஸ் செஞ்சது” என்று அவன் கூறியதும்,
கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன், “இந்த நேரத்தில் அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். நாளைக்கு இதைப் பத்தி விசாரிப்போம்! நீங்க கிளம்புங்க” என்று கூறியவாறு நடந்தாலும்,
அவனின் மனம் அலையடிக்கும் கடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
‘எப்படி இத்தனை பிராடக்ட் அட் எ டைம்ல டேமேஜ் ஆகும். இது யாரோ செஞ்ச சதியா? இல்ல கொரியர்காரன் செஞ்ச சதியா? இதனால எவ்ளோ நஷ்டமோ ஆண்டவா!’ என யோசித்தவாறே மகிழுந்தை ஓட்டியவன் வீட்டை வந்தடைந்தான்.