மருத்துவமனையில் அந்த அறையில் அவளின் தோளில் கைகளைப் போட்டிருந்தவன் அவளது தலை முடியில் இருந்த ஈரத்தை உணர, “தலைக்குக் குளிச்சிட்டு துவட்டாம அப்படியே வந்துட்டியா?” எனக் கடிந்தவாறு கேட்டான்.
“குளிச்சிட்டு வந்ததும், கல்யாணி நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதா சொன்னாங்களா, அதான் அப்படியே தலைக்குக் கிளிப் போட்டுட்டு வந்துட்டேன்” என்றவள் கூறிக் கொண்டிருந்த நேரம், அறைக்குள் நுழைந்தார் ருத்ரன்.
அவரைக் கண்டதும் அவனை விட்டு தள்ளி அமர்ந்தவளைப் பார்த்தவாறு அருகே வந்தவரின் கலக்கமான முகத்தைப் பார்த்த ஈஸ்வரன், “ஏன் மாமா இவ்வளோ கவலையா இருக்கீங்க? எனக்கு ஒன்னுமில்லை! நான் நல்லா இருக்கேன்” என அவரைத் தேற்றினான்.
“இல்ல மாப்ள! இப்படி உடம்பை வச்சிக்கிட்டு இன்னிக்கு நிச்சயதார்த்தம் வேண்டாமே! தள்ளி வச்சிடலாமா?” எனக் கேட்டார்.
“இல்ல மாமா! ஐம் ஃபைன். இன்னிக்கே நிச்சயம் வச்சிடலாம். ஆனா கல்யாணத்தை மட்டும்..” என அவன் தயங்கியவாறு நிறுத்த,
இரண்டு முறை தடங்கலாய் நடந்த நிகழ்வுகளில், ருத்ரன் நிச்சயத்தையும் திருமணத்தையும் சில மாதங்களுக்குத் தள்ளி வைக்கச் சொல்லி பேசலாமா என்ற எண்ணத்தில் தான் ஏற்கனவே இருந்தார். இதில் இவன் இவ்வாறு தயங்கி நிறுத்தவும் அவனும் அவ்வாறு நினைப்பதாய் எண்ணி நிம்மதி அடைந்தவராய்,
“சொல்லுங்க மாப்ள! கல்யாணத்தைத் தள்ளி வைக்கலாம்னு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டார்.
“என்னது அடுத்த முகூர்த்தத்திலேயேவா” அவர் அதிர்ந்தவாறு கேட்க,
ஆமெனத் தலையசைத்தவன், “மாமா நம்ம வீட்டுக்கு தான் நான் இப்ப வர போறேன். அம்மாவையும் அங்க வர சொல்றேன். எந்தத் தேதில கல்யாணம் வச்சிக்கலாம்னு எல்லாரையும் வச்சி பேசி முடிவு பண்ணுவோம்” என்றவாறு எழுந்து நின்று நடக்க ஆரம்பித்தான்.
அடிபட்டு கட்டுப் போட்டதைப் போன்று துளியும் காண்பிக்காது திடமாய் இயல்பாய் அவன் நடந்து சென்று கொண்டிருப்பதை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர் ருத்ரனும் மீனாட்சியும்.
அறையை விட்டு வெளியே வந்தவன் கண்களில் கல்யாணி ராஜனுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியே பட, கோபமாய் அவர்களின் அருகில் சென்றவன், அவனின் சட்டையைப் பிடித்தவாறு, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்ட வந்துட்டுயோ” என ஆக்ரோஷமாய்க் கேட்டான்.
தீரன் ராஜனுக்கு உதவியாய் அவனருகில் வந்து நிற்க, கல்யாணியையும் சேர்த்து மூவரையும் முறைத்த ஈஸ்வரன், “அவங்கப்பா என்னைக் கொல்ல பிளான் செய்றது கூட இவனுக்குத் தெரியாதுன்னு என்னை நம்பச் சொல்றியா? அவங்கம்மா அன்னிக்கே நீ எப்படி இந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டு நல்லா வாழ்ந்துடுவனு பார்க்கலாம்னு சொன்னவங்க தானே” எனக் கோபமாய் உரைத்தவன்,
“நீ வா கல்லு! இவங்ககிட்ட உனக்கென்ன பேச்சு” என அவளின் கைப்பற்றி வெளியே அழைத்துச் சென்றான்.
தாய்க்கு அழைத்து மீனாட்சியின் மாமா முருகன் வீட்டிற்கு வருமாறு கூறிவிட்டு, கல்யாணியிடம் மகிழுந்தை அவ்வீட்டை நோக்கி செலுத்துமாறு உரைத்தான் ஈஸ்வரன்.
ராஜன் மற்றும் ஈஸ்வரனின் சண்டையினைப் பார்வையிட்டவாறு தான் அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறினர் ருத்ரனும் மீனாட்சியும். அவர்களின் சம்பாஷணையைக் கேட்கவில்லை இருவரும். ஆக்ரோஷமாய் நின்றிருந்த காட்சியைத் தான் கண்டனர்.
மீனாட்சியிடம் இது வரைக்கும் டீம் லீடாய் மட்டுமே தான் ராஜன் பேசிக் கொண்டிருக்கிறான். மீனாட்சியும் ராஜனிடம் தனிப்பட்ட விதத்தில் எதுவும் பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. ஈஸ்வரனிடம் கூட இவர்களுக்குள் இருக்கும் பகையைப் பற்றிக் கேட்கவில்லை. அவளுக்குக் கேட்க தோன்றவில்லை. அதனால் ஈஸ்வரனுக்கு இன்னுமே ராஜன் இவளின் டீம் லீடர் என்ற விஷயம் தெரியாது.
இப்பொழுது இவர்களின் சண்டையினைப் பார்வையிட்டப் போது கூட, இரு குடும்பத்தினருக்கும் அப்படி என்ன தான் பகை எனக் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் மீனாட்சி. ருத்ரனுக்கு ஏதோ சொத்துப் பிரச்சனை என்ற வகையில் இவர்களுக்குள் இருக்கும் பகை பற்றித் தெரிந்திருந்தது.
ருத்ரன் வீட்டை நோக்கி மகிழுந்தை இயக்க, மீனாட்சி தனது மாமனுக்கு அழைத்து ஈஸ்வரன் தனது தாய் தங்கையுடன் அங்கு வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூறினாள்.
ஈஸ்வரன் விரைவாய்த் திருமணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னதில் ருத்ரனுக்கு விருப்பமில்லாமல் இருக்க, இதை எவ்வாறு ஈஸ்வரனிடம் நயமாய் எடுத்துக் கூறி சம்மதிக்க வைப்பது என்ற எண்ணத்திலேயே மகிழுந்தை இயக்கிக் கொண்டிருந்தவரின் நினைவுகளோ அவரையும் மீறி முந்தைய நாள் ஈஸ்வரனை அவனின் கடையில் சந்திந்த நிகழ்வுக்குப் பயணமானது.
******
நிச்சயத்திற்காக முந்தைய நாளே மதுரைக்கு வந்திருந்த ருத்ரன், ஈஸ்வரனிடம் சில விஷயங்களைப் பேச எண்ணி அவனின் கடைக்குச் சென்றார்.
காலை ஒன்பது மணியளவில் அவர் சென்றிருக்க, ஈஸ்வரனும் அவனது தாய் அகல்யாவும் பாத்திரம் வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் பாத்திரங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன மாப்ள, நீங்க இந்த வேலை செஞ்சிட்டு இருக்கீங்க? அம்மாவை வேற செய்ய வச்சிட்டு இருக்கீங்க! வேலையாள் இல்லையா?” எனக் கேட்டார்.
வாழ்நாள் முழுவதும் மத்திய அரசு பணியில் இருந்து, மூன்று வருடங்களுக்கு முன்பு மகளைக் கவனிப்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் ருத்ரனுக்கு ஈஸ்வரனும் அகல்யாவும் செய்யும் இந்த வேலை பயத்தைக் கொடுத்தது.
தன்னைப் போலவே தன் மகளும் அலுவலகத்தில் பெரிய பதவியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையே அவருக்குள் வியாபித்திருக்க, இதில் இவர்கள் செய்யும் வேலையைப் பார்த்ததும், எங்கே தனது மகளையும் இவ்வாறு விற்பனையாளராய் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம் எழுந்து கவலை கொள்ளச் செய்தது.
“நம்ம கடை வேலையை நாம தானே செய்யனும் மாமா! அம்மாவும் இந்தக் கடைல எல்லா வேலையும் செய்வாங்க. இன்னிக்கு வேலையாள்ல ஒருத்தருக்குக் கல்யாணம். அதான் வேலையாட்கள் எல்லாரும் அங்க போய்ருக்காங்க. ஒரு மணி நேரத்துல அவங்க வந்துடுவாங்க. அது வரைக்கும் நாங்க பார்த்துப்போம்” என்றவன் ருத்ரனை வரவேற்று தனது அறையில் அமர வைத்தான்.
அங்கு அவர் அமர்ந்ததும், எதிரில் தன்னுடைய சுழலும் நாற்காலியில் அமர்ந்தவனின் கம்பீரத்தை ரசித்தவராய், “மாப்ள! நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். மீனாட்சி பத்தி சில விஷயங்கள் உங்ககிட்ட பேசனும்” என்று கூற,
“சொல்லுங்க மாமா” என்றான் அவனும் ஆர்வமாய்.
“அது வந்து மாப்ள, மீனாட்சி தொடர்ந்து ஐடில வேலை செய்யனுங்கிறது என்னோட விருப்பம். மீனுவ வழி நடத்தியது முழுக்க அவ அம்மா தான். மீனு என்ன படிக்கனும்னு முடிவு செஞ்சது அவ அம்மா தான். மீனுக்கு அவங்க அம்மா என்ன முடிவு எடுத்தாலும் சரின்னு ஒத்துக்குவா! அவ நேச்சர் அது! அவ மேல அன்பை கொட்டி கொடுத்துட்டா போதும், அவளுக்குப் பிடிக்காததை நீங்க செய்யச் சொன்னா கூடச் செய்வா! அவளோட ப்ளஸ் அண்ட் மைனஸ் இரண்டுமே அது தான். அவளை அப்படித் தான் ஐடில சேர வச்சேன். ரொம்ப டேலண்ட்டான பொண்ணு. ஆனா யாராவது அவளைப் புஷ் செஞ்சிட்டே இருக்கனும். அவங்க அம்மா இறந்த பிறகு இன்னும் மோசமாகிட்டா! இன்டர்வியூ அட்டெண்ட் செய்யப் பயம், தெரியாத ஆளுங்க கிட்ட பழகப் பயம். ஸ்டேஜ்ல பேச பயம்னு எல்லாம் பயமயம்னு ஆகி போச்சு. அவளுக்குனு எந்த லட்சியம் கனவுனு எதுவும் இல்லை. கல்யாணம் செஞ்சிட்டு குழந்தை பெத்துக்கிட்டு அப்படியே இருந்துடலாம்னு நினைக்கிறா! இதுக்காகவா நான் அவளைப் பிரைன் வாஷ் செஞ்சி கேம்பஸ் இன்டர்வியூ அட்டெண்ட் செய்ய வச்சி இந்த வேலைல சேர வச்சேன். அவ தொடர்ந்து ஐடில வேலை செஞ்சு மேனேஜர் லெவலுக்கு வளரனும். அதுக்கு நீங்க தான் அவளுக்கு உறுதுணையா இருக்கனும்” மகளின் மீதான தனது கனவுகளை அவர் எடுத்துக் கூறினார்.
அவரின் பேச்சினை ஆர்வமாய்க் கேட்டு கொண்டிருந்தவன், “நீங்க சொல்றது புரியுது மாமா! உங்க பொண்ணு கண்டிப்பா வீட்டுலேயே ஹவுஸ் வைஃபா இருக்க நான் விட மாட்டேன்” என அவன் சொன்னதும் இவரின் முகம் ஜொலித்தது.
“ஆனா ஐடி வேலை செய்றதும் செய்யாததும் அவ விருப்பம்! நான் அவளைக் கண்டிப்பா என்னோட இந்தப் பாத்திர பிசினஸ்ல இன்வால்வ் செய்யாம இருக்க மாட்டேன்” என்று முடிக்கவும்,
ஜொலித்த அவரின் முகம் களையிழந்து போனது.
எதைத் தன் மகள் செய்யக் கூடாது என்று எண்ணியிருந்தாரோ அதே வேலையைத் தானே செய்ய வைப்பதாய் இவன் கூறியதில் கடுப்பானது அவருக்கு. ஆனால் அவனை எதிர்த்து பேசும் தைரியமற்று, “அவளுக்கு ஐடில வேலை செய்ய விருப்பமில்ல மாப்ள! உங்க மூலமா அவளைத் தொடர்ந்து ஐடி வேலை செய்ய வைக்கலாம்னு பார்த்தா இப்படிச் சொல்றீங்களே” எனத் தனது ஆதங்கத்தை நேரடியாகவே அவர் ஈஸ்வரனிடம் கேட்க,
“அதான் மாமா சொல்றேன்! அவளுக்குனு கனவு எதுவுமே இல்லைனா என்னோட கனவை அவ நனவாக்கட்டும்! அதுல தப்பு இல்லையே! அதுக்காக நான் ஒன்னும் அவளை வற்புறுத்த மாட்டேன் மாமா! நீங்க கவலைப்படாதீங்க”
இத்துடன் இந்தப் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல் அவனது இருக்கையில் இருந்து எழுந்தவன், “பக்கத்துல இரண்டு கடை தள்ளி நம்ம குட்டி ஃபேக்டரி இருக்கு! அதைச் சுத்தி பார்க்கலாம் வாங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
அனைத்து பணியாளர்களிடமும் அவன் காட்டும் பணிவும், பணியினைப் பற்றிய பேச்சில் அவன் வெளிப்படுத்தும் ஆளுமையும் என அனைத்தும் அவரைக் கவர்ந்தீர்த்தாலும் மகளின் விஷயத்தில் அவனின் போக்கு இவருக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
‘அன்னிக்கே நான் சொன்னதைக் கேட்காம பேச்சை மாத்தி கூட்டிட்டு போனவரு, இன்னிக்கு மட்டும் கல்யாணத்தை லேட்டா வச்சிக்கச் சொல்லி கேட்டா ஒத்துக்குவாரா என்ன! அவருக்கு எப்பவுமே அவர் நினைக்கிறது தான் நடக்கனும்’
முந்தைய நாள் உரையாடல்களை அசைப்போட்டவாறு மருமகனை மனதினுள் வறுத்தவாறே ருத்ரன் இயக்கிய மகிழுந்து வீட்டை வந்தடைய, பின்னேயே கல்யாணியும் சுந்தரேஸ்வரனும் அவர்களது மகிழுந்தில் வந்து இறங்கினர்.
இதே நேரம் அங்குச் சுந்தரேஸ்வரனின் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் தீரனுடன் சென்றிருந்தான் ராஜன்.
“இங்க எதுக்குடா இப்ப வர சொன்ன?” எனத் தீரன் கேட்க,
“எனக்கு இங்க சிசிடிவி புட்டேஜ் பார்க்கனும் மச்சி! அந்தக் கொரியர்ல பொருளை மாத்தி அனுப்பினவன் தான் இன்னிக்கு இந்த விபத்துக்கும் காரணமா இருப்பான்னு தோணுது” என்றான் ராஜன்.
“டேய் ஊர்ல இருந்து வந்த நண்பனை பிக் அப் செய்ய வந்தவனை ஏரியா ஏரியாவா சுத்த வச்சிட்டு இருக்க நீ! எனக்கும் என் வேலை சோலிலாம் பார்க்க போகனும்டா! உன்கூடவே நாள் முழுக்க இருக்க முடியாது” என்று தீரன் பாவமாய்க் கூறவும்,
“ஆமா இங்கிருந்து பத்துக் கடை தள்ளி இருக்க உன் கடைக்குப் போறதுக்குப் பேச்சை பாரு” என்று முறைத்தவன், “ஒழுங்கா என் கூட வா” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த பணியாளர்களுக்கு ராஜனைத் தெரியும் என்றாலும், ராஜனும் ஈஸ்வரனும் எலியும் பூனையுமாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் ராஜன் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்ற கேள்வியான பாவனையுடனேயே அவனுக்கு வணக்கம் கூறிக் கொண்டிருந்தனர்.
ஈஸ்வரனின் ஆணைக்கிணங்க அவனின் அறிவுரைப்படி காணொளித்தடத்தில் (யூ டியூப்பில்) புதிதாய் அறிமுகப்படுத்தவென வெங்காயம் நறுக்கும் இயந்திரத்தை (மெஷினை) தயார் செய்து வைத்திருந்தனர் அங்கிருந்த பணியாளர்கள்.
இது ஈஸ்வரனின் அடுத்தக் கட்ட முயற்சி என்று சொல்லலாம்.
ஐந்து நிமிடத்தில் ஐந்து கிலோ வெங்காயத்தை வெட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த இயந்திரம். பெரிய கேட்டரிங் கம்பெனி, ஹோட்டல் போன்றவற்றிற்கு இது பெரியதாய் உதவக் கூடியது. இதன் மூலம் இவனுக்குக் கிடைக்கும் லாபமும் பெரியதாய் இருக்குமெனக் கணக்கிட்டிருந்தான் ஈஸ்வரன்.
ராஜனும் தீரனும் அந்த இயந்திரத்தைக் கண்டு வியந்து போயினர். மூன்று மெஷின்கள் டெஸ்டட் ஓகே என்ற லேபிள் உடன் வைக்கப்பட்டிருந்தன.
“உன் அண்ணன் மூளைக்காரன் தான்டா” எனப் பாராட்டினான் தீரன்.
அங்கிருந்த சிசிடிவி புட்டேஜை பார்வையிட்டப் பிறகு அங்கிருந்த பணியாளர்களிடம் கணேசனைப் பற்றி விசாரிக்க, இரண்டு நாட்களுக்கு முன்பே அவனை வேலையை விட்டு ஈஸ்வரன் நிறுத்தி விட்டதாய் உரைத்தனர்.
“யாருடா இந்தக் கணேசன்? அவனைப் பத்தி ஏன் விசாரிக்கிற?” எனக் கேட்டான் தீரன்.
“அந்தக் கொரியர் இஷ்யூல ரொம்ப நேக்கா எங்களைக் கோர்த்து விட்டிருக்கான்டா அந்தக் கல்ப்ரிட்! சென்னைல கொரியர் மாறி இருந்துச்சுனு அண்ணா சொன்னான்ல. மாறிப்போன கொரியர் எல்லாத்துலயும் எங்க கடையோட வேல் சிம்பிள் இருக்குடா! எங்களை மாட்டி விட எவனோ செஞ்ச வேலை இதுனு தோணுச்சு! அப்பாகிட்ட நான் சத்தியம் வாங்கின பிறகு அவர் அண்ணன் பக்கமே போறது இல்ல!
யாராவது நேரடியா நான் தான் கல்பிரிட்னு சொல்ற மாதிரி இப்படி லேபிள் ஒட்டி தன்னையே காண்பிச்சிப்பாங்களா? இதைப் புரிஞ்சிக்காம அண்ணன் என்னமோ நாங்க வேணும்னே செஞ்ச மாதிரி நினைச்சி சண்டைக்கு நிக்குது!
அண்ணனுக்கு எதிரினு யாரும் இருக்காங்களானு நான் விசாரிச்ச வரையில் இங்க வேலை செய்ற கணேசன்ற பையன்கிட்ட தகராறு ஆகிருக்கு. பாத்திரம் செய்றதுக்கான ஸ்டீல் ஷீட், மெட்டல் சரக்குலாம் சப்ளை செய்ற ஓனர் கூடச் சண்டை ஆகிருக்கு! ஆனா இரண்டு பேருமே அண்ணனை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசலை. அதனால் அண்ணனுக்கு அவங்க மேல சந்தேகம் வரலை போல!” என்று இவன் கூறியவாறு அந்தத் தொழிற்சாலைக்குள் நடந்து வர,
“எப்படிடா அங்கிருந்துட்டே இங்கே இவ்வளோ டீடெய்ல்ஸ் கலெக்ட் செஞ்ச?” எனத் தீரன் ஆச்சரியமாய்க் கேட்டான்.
“பின்னே உன்னைய நம்பிட்டே இருக்கச் சொல்றியா? ஒரு விஷயத்தை விசாரிக்கச் சொன்னா ஒரு வாரம் ஆக்குற நீ! அதான் உன்னை நம்பினா வேலைக்கு ஆகாதுன்னு வேற ஒரு ஆளை பிடிச்சு வச்சுச் செய்ய வச்சேன்” என்றான் ராஜன்.
“யாருடா அது எனக்குத் தெரியாத உளவாளி” எனக் கேட்டான் தீரன்.
“ஹான் அது சீக்ரெட் மச்சி” என்று கண்ணடித்தான் ராஜன்.
‘யாரா இருக்கும்?’ எனத் தனக்குள்ளேயே பேசியவாறு யோசித்தான் தீரன்.
அந்தக் கணேசனை நேரடியாகவே சென்று விசாரிக்க வேண்டுமென மனதினுள் குறித்துக் கொண்டவனாய் தீரனை அவனது கடையில் இறக்கி விட்ட ராஜன் தனது வீட்டை நோக்கிப் பயணித்தான்.