மோகனசுந்தரமும் வேங்கடசுந்தரமும் தங்களது உழைப்பினால் மதுரையில் புகழ் பெற்றக் கடையாய் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திரக் கடையை உருவாக்கி இருந்தனர்.
இவர்களின் தந்தை சுந்தரமூர்த்தி இக்கடையை அவரின் காலத்திலேயே தொடங்கி இருந்தாலும், இதனைப் பெரிய அளவில் நடத்திப் பெரும் லாபகரமான வியாபாரமாக மாற்றியது இவரின் மகன்கள் இருவரும் தான். மோகன் அமைதியானவர்! அதிர்ந்து கூடப் பேச மாட்டார். வேங்கடம் அதிரடியானவர்! முரட்டுத்தனமாய் இருப்பவர்.
அண்ணன் தம்பி இருவரும் பதின் பருவத்திலேயே வியாபாரத்தில் இறங்க, அவர்கள் குடும்பத்திற்கெனப் பெரிய வீடு கட்டிய பிறகே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பாசத்துடனேயே வாழ்ந்து வந்தனர்.
வீடு கட்டிய ஒரு வருடத்திலேயே இவர்களின் தாய் தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராய் இறந்து விட, அடுத்த இரண்டு வருடங்களில் அண்ணனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார் தம்பியான வேங்கட சுந்தரம்.
அமைதியான அண்ணனுக்கு அதற்கேற்ற அண்ணி வேண்டுமெனத் தேடி பிடித்து அகல்யாவை மணமுடித்து வைத்தார்.
அண்ணி கைமணம் தனது அன்னைக்குக் கூட இருந்ததில்லை எனப் புகழ்ந்தவாறு தான் தினமுமே உண்ணுவார் வேங்கடம். அகல்யாவின் அமைதியும் நற்குணங்களும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பாங்கும் அண்ணன் தம்பி இருவருக்கும் தாய் தந்தை இல்லாத குறையை நிவர்த்திச் செய்ய வந்தவராய் தான் தோன்ற வைத்தது.
அடுத்த ஒரு வருடத்தில் வேங்கட சுந்தரம் செல்வாம்பிகையைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அகல்யாவின் குடும்பம் ஏழ்மையான படிப்பறிவற்ற குடும்பம். செல்வாம்பிகை உயர்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் பயின்றவரும் கூட!
இந்த ஏற்றத்தாழ்வுகள் செல்வாம்பிகை அகல்யாவை ஏளனமாய்ப் பார்க்க வைத்தது. அகல்யாவுடன் இணைந்து வீட்டு வேலை செய்தாலும் அவருக்கு வெளியே பணியில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அதைக் கணவரிடம் தெரிவிக்க, வேங்கடம் தனது அண்ணனிடம் பேசிவிட்டு செல்வாம்பிகையைக் கடையின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதில் ஈடுபடுத்திக் கொண்டார்.
செல்வாம்பிகை வெளி வேலை செய்வதினால் வீட்டு வேலை அனைத்தையும் அகல்யா மட்டுமே செய்வது போன்று ஆனது. அகல்யாவும் பெரியதாய் நினைக்காமல் அவ்வீட்டின் அடிமை போல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அகல்யாவிற்கு ஒரு வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருக்க, தங்களுக்குத் தான் இக்குடும்பத்தில் முதல் வாரிசு பிறக்க வேண்டுமென எண்ணினார் செல்வாம்பிகை. தனக்கு முதலில் குழந்தை பிறக்க வேண்டுமெனக் கோவில் கோவிலாய் வேண்டுதல் வைக்கத் தொடங்கினார். இவரின் வேண்டுதலை ஏற்பதாய் பாவனைச் செய்து சரியாய் அகல்யாவிற்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினார் கடவுள்.
அகல்யா சுந்தரேஸ்வரனை ஈன்றெடுத்தப் போது இரண்டு மாத கர்ப்பமாய் இருந்தார் செல்வாம்பிகை. ஈஸ்வரன் தாய் தந்தையைத் தவிர வேறு எவரிடமும் ஒட்டாத குழந்தையாய்த் தான் இருந்தான். அதனாலே அவன் மீது எந்த ஒட்டுதலும் செல்வாம்பிகையும் வைத்துக் கொள்ளவில்லை.
ஈஸ்வரன் எட்டு மாதக் குழந்தையாய் இருக்கும் போது சுந்தரராஜனை ஈன்றெடுத்தார் செல்வாம்பிகை. ராஜனையும் ஈஸ்வரனையும் ஒரே போல் பாவித்து உணவு ஊட்டி பேணி காத்து வளர்த்தார் அகல்யா. ஆனால் செல்வாம்பிகை தன் பிள்ளையை மட்டுமே கவனித்துக் கொண்டார்.
ஆனால் இந்தப் பாரபட்சம் எதுவும் அறியாத இளங்கன்றாய், அன்பான துணையான அண்ணன் தம்பிகளாய் தான் வளர்ந்து வந்தனர் ஈஸ்வரனும் ராஜனும்.
“ராஜாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் மீனு! அம்மா அப்பாக்கு பிறகு நான் அன்பு செலுத்தின ஜீவன் அவன் தான். அவனுக்குப் பிறகு தான் கல்யாணி பிறந்தா! சித்தப்பா மேல இருக்கும் அன்புலாம் இவங்களுக்குப் பிறகு தான்” கனிந்த முகத்துடன் அவன் கூறியதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“நானும் அவனும் டிவின்ஸ் போலத் தான் வளர்ந்தோம். எல்லாமே இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் செய்வாங்க அப்பாவும் சித்தப்பாவும். சித்தி மட்டும் தான் தம்பிக்கு மட்டும் தனியா செய்வாங்க! சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்தாலும் அவனுக்கு மட்டும் தான் கொடுப்பாங்க சித்தி. ஆனா அவன் அதை என்கிட்ட பாதிக் கொடுத்துட்டு தான் சாப்பிடுவான். பெரிசா வயசு வித்தியாசம் இல்லாதனால ஒன்னா தான் ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அதனாலேயே அவன் இல்லாம நானும் நானில்லாம அவனும் இருந்ததே இல்லை”
மோகனசுந்தரம் அகல்யா தம்பதியருக்கு ஈஸ்வரன் பிறந்த ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்தாள் கல்யாணி.
“கல்யாணி பிறந்தப்ப அப்படியே குட்டி பன்னீர் ரோஜாப்பூ மாதிரி இருந்தா! இன்னும் அது என் கண்ணுக்குள்ளயே இருக்கு. நானும் ராஜாவும் போட்டிப் போட்டு அவளைத் தூக்குவோம். அவளைப் பார்த்துக்க வேண்டியது பிக் பாய்ஸ்ஸான எங்களுடைய பொறுப்புனு சொல்லித் தான் அவளை எங்க கைல கொடுப்பாங்க அப்பா. ஏதோ எங்க கைல கிடைச்ச பொம்மை மாதிரி அவளுக்கு விளையாட்டு காட்டுவது ஊட்டுறதுனு ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவளைச் சுத்தியே தான் இருப்போம் இரண்டு பேரும்! அவ வளர வளர ராஜா ரொம்பவே அவளை வம்பிழுப்பான். நானும் ராஜாவும் அவளை வெறுப்பேத்துறதுக்காகவே கல்லு ஆணினு செல்லப்பெயர் வச்சி கூப்பிடுவோம். அவங்க இரண்டு பேரும் எப்பவும் அடிச்சிக்கிட்டுச் சண்டை போடுட்டு இருக்கிற மாதிரி தான் தெரியும். ஆனா என்னை விடக் கல்யாணி மேல் அதிகமா பாசம் வச்சிருக்கிறது அவன் தான். அதனால் தான் சண்டைப் போட்டு ஒதுங்கி இருந்தும் நான் கல்யாணியை ராஜா கிட்ட பேச கூடாதுனுலாம் சொன்னதில்லை. அது இரண்டு பேருக்குமே நான் தருகிற நரக வேதனை ஆகிடும்னு எனக்குத் தெரியும்”
அந்த நாள் நினைவுகளில் மூழ்கிப் போனவனாய்க் கூறிக் கொண்டிருந்தான்.
கல்யாணி பிறந்த நான்கு வருடத்தில் விபத்தில் மோகன சுந்தரம் இறந்து போனார்.
“அப்பா இறந்த பிறகு எங்க வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுச்சு மீனு” வலி ரேகைகள் அவனின் முகத்தில்.
அண்ணனின் இறப்பு வேங்கட சுந்தரத்திற்குப் பேரிழப்பாய் இருந்தது. கடையைத் தனியாய் கவனித்துக் கொள்ள முடியாது அவர் தடுமாறிய சமயம் கை கொடுத்தவர் செல்வாம்பிகை தான். கணக்கு வழக்கு மட்டுமல்லாது அந்தக் கடையின் இன்னொரு முதலாளியாகவே வேலை செய்தார் செல்வாம்பிகை. அண்ணன் இருக்கும் போது செல்வாம்பிகையின் தவறான ஓதுதலை தவிர்க்க முடிந்த வேங்கடத்தால், அண்ணன் இறந்த பிறகு கடைப்பிடிக்க முடியவில்லை. முழுக்க முழுக்கச் செல்வாம்பிகை ஆட்டி வைக்கும் பொம்மையாய் மாறிப் போனார்.
“அப்பா இறந்து இரண்டு வருஷம் இருக்கும் போது நான் ஏழாவதோ எட்டாவதோ படிச்சிட்டு இருந்தேன். அப்ப ஒரு நாள் சாயங்காலம் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தப்ப சித்தி அம்மாவைத் திட்டுறதைக் கேட்டேன்.
எங்க உழைப்புல ஓசி சோறு தின்னிட்டு எனக்கே அறிவுரை சொல்ற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சுல! எங்க உழைப்பை உறிஞ்சு உங்க பிள்ளைகளையும் வளர்த்து விட்டுடலாம்னு திட்டம் போட்டுத் தானே புருஷன் இறந்த பிறகும் கூட இப்படி எங்க கூடவே கெடக்கிறீங்கனு சித்தி அம்மாவை திட்டிட்டு இருந்தாங்க.
இதைக் கேட்டுட்டு எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமா போச்சு. ராஜாவுக்கு இதெல்லாம் புரியுற அளவுக்குப் பக்குவம் இல்ல. அவன் எப்பவும் விளையாட்டுப் பிள்ளையாவே தான் இருப்பான். நான் தான் கொஞ்சம் வயசுக்கு மீறின மெச்சூரிட்டியோட இருப்பேன்.
சித்தி சித்தப்பாவைத் தவிர அம்மாவுக்கு வேற உறவுகளும் இல்ல அப்ப! அங்க இருந்தா தான் எங்களை உருவாக்க முடியும்னு சித்தி பேச்சைலாம் கேட்டுட்டு இருக்காங்கனு புரிஞ்சிது.
அப்ப அம்மா என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா மீனு! கைல அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்கிறதில்லைலப்பா! அதே மாதிரி தான் குடும்பத்துக்குள்ள இருக்க உறவுகளும். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு குணநலன்களுடன் இருப்பாங்க. அணுசரிச்சுப் போறது தான் வாழ்க்கைனு சொன்னாங்க.
ஆனாலும் எனக்கு மனசு ஆறவே இல்லை. இனி இப்படிச் சித்தி ஓசி சோறு திங்குறோம்னு பேச கூடாதுனு ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் தினமும் எங்க கடைல வேலை பார்க்க ஆரம்பிச்சேன். ராஜாவுக்கு இந்தக் கடை வேலைலலாம் அவ்ளோ விருப்பம் இல்ல. நான் அவன் கூட இல்லாத நேரம் பக்கத்து வீட்டு தீரன் கூடத் தான் அவன் விளையாடிட்டு இருப்பான்.
சித்தப்பா எப்பவும் சித்தியை எதிர்த்து பேசினது இல்ல. சித்தியோட பேச்சுனால தான் நான் வேலைக்கு வந்தேன்றதும் கூடச் சித்தப்பாக்கு புரிஞ்சிது. சித்தியைத் தட்டி கேட்க முடியாத தன்னுடைய இயலாமையைச் சரி செய்ய எனக்கு வியாபாரத்தைக் கத்து கொடுத்தாரு. ஆனா இதுல சித்திக்கு சுத்தமா உடன்பாடு இல்ல. என்னை வேலைக்காரன் மாதிரி தான் சித்தி கடைல நடத்துவாங்க. சித்தப்பா இருந்தா என்னை வெளி வேலைக்குச் சரக்கு எடுக்கிறது, வெளிக்கடைல காசு வசூல் செய்றதுனு அனுப்புவாங்க.
அதுக்குப் பிறகு ஒரு நாள் அம்மாவை அவங்க இப்படித் திட்டினப்போ, நீங்க ஒன்னும் எங்களுக்கு ஓசில சோறு போடலை சித்தி. அதுக்காகத் தான் தினமும் வந்து கடைல நான் உழைச்சிட்டு இருக்கேன். நான் செய்ற வேலைக்கு மாச சம்பளம்னு போட்டீங்கனா கூட, நீங்க எங்களுக்குச் செய்ற சாப்பாட்டு செலவுக்கும் படிக்க வைக்கிற செலவுக்கும் சரியா போகும். இனி இப்படிப் பேசாதீங்கனு சொல்லிட்டேன்”
“அப்புறம் என்னாச்சு?” என மீனாட்சி ஆர்வமாய்க் கேட்க,
“என்னாச்சு! சித்தி கூப்பாடு போட்டு சித்தப்பாவை ஏத்தி விட்டு, அவர் என்னைத் திட்டி, இந்த விஷயமெல்லாம் ராஜாவுக்குத் தெரிய வந்து “இனி இப்படிப் பெரியம்மாவை பேசினா வீட்டை விட்டே நான் போய்டுவேன்னு” ராஜா பிளாக்மெயில் செஞ்சி தான் அவங்க அம்மா வாயை மூடினான். இதெல்லாம் நாங்க பத்தாவது படிக்கும் போது நடந்துச்சு. அதுக்குப் பிறகு சித்தி வாயை திறக்கவே இல்லை”
“எனக்கு இஞ்சினியரிங் படிக்க-லாம் விருப்பமில்ல மீனு. கடை வேலையைப் பல வருஷமா செஞ்சிட்டு இருந்தனால பிசினஸ்ல தான் இன்ட்ரஸ்ட் இருந்துச்சு. இந்தக் கடையை இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி எப்படிலாம் டெவலப் செய்யலாம்னு நிறைய ஐடியாஸ் வச்சிருந்தேன் அப்பவே! ராஜாக்காகத் தான் இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்தேன். ஸ்கூல் முழுக்க இரண்டு பேரும் ஒரே கிளாஸ்ல ஒன்னாவே படிச்சிட்டு திடீர்னு தனியா வேற ஊருல உள்ள காலேஜ்க்குப் போறது அவனுக்குப் பிடிக்கலை. அவனுக்குக் கஷ்டமா இருக்குனு சொன்னான். அதனால் தான் அவன் கூடவே நானும் இஞ்சினியரிங் சேர்ந்துட்டேன். இரண்டு பேரும் ஒரே காலேஜ் ஒரே ஹாஸ்ட்டல் ஒரே ஃப்ரண்ட்ஸ் கேங்க்னு அது வசந்த காலமா தான் போச்சு”
“நிஜமாவே நான் காலேஜ் படிக்கும் போது சித்தி மாறிட்டாங்கனு நினைச்சேன். அம்மா போன்ல பேசும் போதெல்லாம் சித்தி முன்னாடி மாதிரி இல்ல இப்ப ரொம்ப அனுசரணையாக இருக்காங்கனு சொல்லும் போது நம்ம குடும்பம் எப்பவுமே இனி கூட்டு குடும்பமாகவே இருக்கலாம்னு நினைச்சி சந்தோஷப்பட்டுக்கிட்டேன்”
“அப்படினா நீங்க காலேஜ் முடிச்சதும் தனியா போய்டனும்னு நினைச்சீங்களா?” என மீனாட்சி கேட்க,
ஆமெனத் தலையசைத்தவன், “சின்ன வயசுல எப்ப சித்தி அம்மாவை திட்டுறதைப் பார்த்தேனோ அப்பவே எடுத்த முடிவு அது மீனு. காலேஜ் முடிச்சதும் எங்களோட சொத்துக்களைப் பிரிச்சி வாங்கிட்டுத் தனியா பிசினஸ் தொடங்கனும்ங்கிறது தான் என்னோட எண்ணமா இருந்துச்சு. பிசினஸ் ஸ்டெடி ஆனதும் அம்மாவையும் தங்கச்சியையும் தனியா எங்களுக்குனு சொந்த வீடு கட்டி அங்க வாழ வைக்கனும்னு நினைச்சேன். ஆனா சித்தியோட அளப்பறைனால எல்லாமே தலை கீழா மாறிப்போச்சு” வேதனை நிறைந்த குரலில் உரைத்தான்.
“அப்படி என்ன நடந்துச்சு?” என மீனாட்சி கேட்க, அன்றைய தினம் நடந்த நிகழ்வு அவன் கண் முன் நிழலாடியது.
ராஜனும் ஈஸ்வரனும் கடைசிச் செமஸ்டர் தேர்வுகளை எழுதி முடித்து விட்டு விடுதியை காலி செய்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தனர். ராஜன் அப்பொழுதே பெரிய மென்பொருள் நிறுவனத்தில் சேர்வதற்கான பணிநியமன கடிதத்துடன் தான் வீட்டை நோக்கிப் பயணப்பட்டிருந்தான். ஈஸ்வரனுக்கு வியாபாரம் செய்வதில் ஆர்வமிருந்ததால் இந்த நேர்முகத் தேர்வு எதிலும் பங்கேற்கவில்லை.
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த ரயில் பயணத்தில்,
“ராஜா நான் சொத்துப் பிரிச்சி கேட்க போறேன் டா” என்று ராஜனிடம் கூறியிருந்தான் ஈஸ்வரன்.
“ஏன்ணா என்னாச்சு?” என அதிர்ச்சியாய் வினவினான் ராஜன்.
“இல்லடா புதுசா பிசினஸ் தொடங்க காசு வேணும்ல. அதான் சொத்தை பிரிச்சி வாங்கிட்டா அதை வச்சி தொடங்கலாம்னு” என அவன் கூற,
“என்ன அண்ணே! சொத்தை பிரிக்கிறது குடும்பத்தைப் பிரிக்கிற மாதிரி இருக்கும்ண்ணே! நம்ம கடைலயே நீங்க வேலை பார்க்கலாம்ல! அது உங்களுக்கும் சொந்தக்கடை தானே”
“இல்லடா ராஜா. அது சரி வராது. அது சித்தப்பாக்கும் உனக்கும் சொந்தமான கடை. அப்பா இறந்த பிறகு அந்தக் கடையை முழுக்கச் சித்தப்பாவும் சித்தியும் தான் பார்த்துக்கிட்டாங்க. அந்தக் கடைல நான் உரிமை கேட்குறது நல்லா இருக்காது”
“சரி அப்பாகிட்ட பேசி நான் வேணா உன்னோட பங்கு காசு வாங்கித் தரேன். அதை வச்சி பிசினஸ் ஆரம்பிண்ணே! சொத்தை பிரிக்கிறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லண்ணே! அப்புறம் உன் இஷ்டம்” என முடித்துக் கொண்டான் ராஜன்.
ராஜன் ஆயுளுக்கும் தாங்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் இவ்வாறு உரைத்திருந்தான்.
ஈஸ்வரன் கடை வேலையில் இருக்கும் போதெல்லாம், ராஜன் ஊர் சுற்ற உடன் போவது தீரன் தான். அவர்களின் பக்கத்து வீட்டிலேயே இருந்ததினால் ராஜனின் பால்ய சிநேகிதனாய் இருந்தான் தீரன்.
கல்லூரி முடித்து மதுரைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு ராஜா பணியில் சேர்வதற்காகச் சென்னை சென்று விட்டான்.
அதன் பிறகு ஒரு நாள் சித்தி சித்தப்பாவிடம் தனியாகப் பேச வேண்டுமென வீட்டின் வரவேற்பறைக்கு அழைத்தான் ஈஸ்வரன். அகல்யா கல்யாணியும் கூட இருந்தனர்.
“சித்தப்பா நான் புதுசா ஒரு கடையைத் திறக்கலாம்னு இருக்கேன். அதனால சொத்தைப் பிரிச்சி கொடுத்தீங்கனா, எங்களுக்கு வர சொத்தை வித்துக் கடை வச்சிப்பேன்” என்றான்.
“உனக்குனு சொத்தா? உன்னோட சொத்தை எல்லாம் தான் நீ எங்களுக்கு எழுதி கொடுத்துட்டியே! அப்புறம் எப்படி உனக்குனு சொத்து இருக்கும்” எனக் கேட்டார் செல்வாம்பிகை.
“ஆமாம் ஈஸ்வரா! உன்னையும் உன் தங்கச்சியையும் நாங்க எங்க உழைப்புல செலவு செஞ்சி படிக்க வச்சதுக்கு நன்றிக்கடனா உன் சொத்தை எல்லாம் நீ எங்களுக்கு எழுதி கொடுத்துட்டியே” எனச் சொத்துப் பத்திரத்தை அவன் முன் நீட்டினார் செல்வாம்பிகை.
“என்ன சித்தி இது? நான் இப்படி ஒரு கையெழுத்து போட்டு கொடுக்கவே இல்லையே” பேரதிர்ச்சி அனைவருக்கும்.
“நீ காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும் போது என் பையன் தானே உன்கிட்ட இந்தப் பத்திரத்துலலாம் கையெழுத்து வாங்கினான்!” என்றார் செல்வாம்பிகை.
“அது என் பேருலயும் அவன் பேருலயும் ஏதோ இடம் வாங்குறதா சொல்லி” எனப் பேச்சை நிறுத்தியவனின் மூளை, தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உரக்க உரைத்திருந்தது.
இவன் பெயரில் இடம் வாங்குவதாய் உரைத்து, ராஜனை வைத்து அவ்வப்போது கையெழுத்து வாங்கிய பத்திரங்கள் அனைத்திலும் இடைச்சொருகலாய் இந்தத் தாள்களை இணைத்து இவனின் சொத்துக்கள் அனைத்தையும் தங்களின் பெயருக்கு மாற்றியிருந்தார் செல்வாம்பிகை. வேங்கடத்தையும் பேசி பேசியே கரைத்து இதற்குச் சம்மதிக்க வைத்திருந்தார்.
“சித்தி” என வீடு அதிர கத்தியிருந்தான் ஈஸ்வரன்.
“குடும்பமே இவ்வளோ பெரிய ஃபிராடா இருப்பீங்கனு சுத்தமா எதிர்பார்க்கலை சித்தி! நீங்களுமா சித்தப்பா” என்ற அவனின் பார்வையில் தலை குனிந்து கொண்டார் வேங்கடம்.
இந்நிலையில் தான் உயிலில் இந்தக் குடும்பத்தினரின் சொத்துக்கள் அனைத்தும் பிறக்கும் முதல் வாரிசு மேஜராகும் போது போய்ச் சேரும் என்றும் அவனோ/அவளோ விருப்பப்பட்டால் இந்தச் சொத்தை குடும்பத்தில் மற்றவருக்குப் பகிர்ந்து வழங்கலாம் என்றும் தனது தாத்தா சுந்தரமூர்த்தி எழுதியிருந்தது தெரிய வந்தது ஈஸ்வரனுக்கு.
அந்த வாரிசு மேஜர் ஆகும் வரை இரு மகன்களுக்கும் சொத்தின் மீது சம உரிமை உண்டு. ஆனால் விற்கும் உரிமை இல்லை என எழுதியிருந்தார்.
இதை அறிந்து கொண்ட சித்தியும் சித்தப்பாவும் தன் கையினாலேயே தனது சொத்தை எழுதி வாங்கிக் கொண்டது புரிந்தது ஈஸ்வரனுக்கு.
இது போல் ஏதோ இருக்குமென மீனாட்சி ஏற்கனவே யூகித்திருந்தப் போதும் இந்தத் துரோகம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.